🖊️துளி 31👑

ஸ்ராவணியும் மேனகாவும் பேருந்து நிலையத்தை அடைந்த போது அவளுக்கு முன்னரே அங்கே நின்றிருந்தனர் அவளது சக ஊழியர்களும் நண்பர்களுமான சுலைகா, ரகு, வர்தன் மற்றும் அனுராதா. அனைவரும் பேருந்தில் ஏற மேனகாவை அனு மற்றும் சுலைகாவுடன் அனுப்பிய ஸ்ராவணி அவள் இரு நபர்கள் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

பேருந்து எடுக்கும் போது காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டாள் அவள். எப்போதும் போல ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அவளை மறந்தவள் சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள்.

அவள் இவ்வாறு இருக்க அங்கே தோழிகளுடன் அமர்ந்திருந்த மேனகா எட்டி ஸ்ராவணி என்ன செய்கிறாள் என்று பார்க்க அவள் கண்ணை மூடி நித்திரையில் ஆழ்ந்ததைக் கண்டதும் திரும்பி ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

பேருந்து வேகமாகச் சென்னை நகரைத் தாண்டிச் செல்ல அவளின் நினைவுகளும் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அஸ்வினின் வார்த்தைகள் மூளையைக் குழப்ப அவளால் தான் செய்தது தவறா அல்லது சரியா என்று யோசிக்க முடியாநிலை. தான் நினைத்தது போல இந்த விஷயம் அவ்வளவு ஒன்றும் சுலபமாக முடிவுக்கு வராது என்று எண்ணியவள் ஒரு வேளை அபிமன்யூவுக்கு ஸ்ராவணியை நிஜமாகவே பிடிக்க ஆரம்பித்து விட்டதோ என்ற கோணத்திலும் அவளது மனம் சிந்திக்க ஆரம்பித்தது.

ஆனால் ஸ்ராவணியால் அவனைப் போல ஒருவனை என்றைக்குமே கணவனாகவோ காதலனாகவோ ஏற்றுக்கொள்ள முடியாதே என்று அவளின் மூளை அறிவுறுத்த மனதுக்கும் மூளைக்கும் நடந்த போராட்டத்தில் ஒரு கட்டத்தில் சோர்வாகி அவளும் உறங்கிப் போனாள்.

பஸ்ஸில் டிவி ஓடிக்கொண்டிருக்க அதில் கண்பதித்திருந்த அனுராதா திடீரென்று போன் அடிக்க அதை எடுத்து யாரென்று பார்த்தவள் திரையில் அபிமன்யூவின் எண்ணைப் பார்த்ததும் ஒரு கணம் புருவம் சுருக்கி யோசித்துவிட்டு தங்களுக்கு அருகில் உள்ள சீட்டில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் ஸ்ராவணியைப் பார்த்ததும் “ஓ! சார் அதுக்கு தான் கால் பண்ணிருக்கிறாரா?” என்று யோசித்தவாறு அழைப்பை ஏற்று “ஹலோ அபி சார்” என்றாள் தூங்கும் தோழிகளின் காதில் விழாதவாறு.

அவள் போனை எடுத்த உற்சாகத்தில் “ஹலோ அனு எங்கே இருக்கிங்க எல்லாரும்?” என்று கேட்டவனின் அருகில் தோளில் பேக்குடன் நின்றான் அஸ்வின்.

மறுமுனையில் அவள் ஏதோ சொல்ல “ஆமா! அது உனக்குப் புரியுது! ஆனா உன் ஃப்ரெண்டுக்கு புரியலயே! ஓகே. நீ பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னு தான். நாங்க இப்போ ஏர்ப்போர்ட்டுல தான் இருக்கோம். ஒன் ஹவர்ல நாங்க ஊட்டியில இருப்போம். நீங்க வர்றதுக்கு எப்பிடியும் மார்னிங் ஆயிடும். சோ நீ அங்கே போய் சேர்ந்ததும் எனக்கு நீங்க தங்கியிருக்கிற இடத்தோட அட்ரசை வாட்சப் பண்ணு. முக்கியமா ரிப்போர்ட்டர் மேடம்கு நான் வர்றது இப்போதைக்கு தெரியவேண்டாம்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தான் அபிமன்யூ.

“கெளம்பலாமா அச்சு?” என்றபடி நடக்க ஆரம்பிக்க அஸ்வின் அவனுடன் சேர்ந்து நடக்கலானான்.

அவன் சொன்னபடியே ஏழு மணிக்கு சென்னையிலிருந்து ஃபிளைட்டில் கிளம்பியவர்கள் சரியாக எட்டு மணிக்கு கோவையில் இறங்கினர். அஸ்வின் சென்னையிலிருக்கும் போதோ ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்ததால் இருவரும் ஹோட்டலை அடைந்து பயணக்களைப்பு தீர ஓய்வு எடுக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரம் கழித்து தூங்க ஆரம்பித்தவர்களுக்கு விடியற்காலையில் தான் விழிப்பு வந்தது. அபிமன்யூ முதலில் எழுந்தவன் பிரஷ் செய்துவிட்டு இருவருக்கும் காபி ஆர்டர் செய்துவிட்டு போனை நோண்டிக் கொண்டிருக்க அப்போது தான் அனுராதாவின் போன் வந்தது.

போனை காதில் வைக்கவும் “சார் நாங்க கோயம்புத்தூர் வந்துட்டோம். இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல ஊட்டியில இருப்போம். அட்ரஸ் நான் உங்களுக்கு வாட்சப் பண்ணிட்டேன். நீங்க எப்போ இங்கே வருவிங்க?” என்று கேட்க

அபிமன்யூ “இன்னும் த்ரீ ஹவர்ஸ்ல” என்று சொல்லிவிட்டு போனை வைக்க காபியும் வந்துவிட்டது. கையில் கப்புடன் அஸ்வினை எழுப்ப அவன் “டேய் மிட்நைட்ல எழுப்பாதடா” என்று தூக்கம் கலையாமல் சொல்ல அவனது போனுக்கு கால் செய்தான் அபிமன்யூ.

போன் ரிங்டோன் சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தவன் கையில் கப்புடன் சிரித்துக் கொண்டு நின்றவனைப் பார்த்து பல்லைக் கடித்தவாறு “ஏன்டா இப்பிடி? வீட்டுல தான் வொர்க் அவுட், ஜிம்முனு என் தூக்கத்தைக் கெடுத்தன்னா இங்கேயுமா?” என்றபடி எழுந்தான்.

புலம்பிக்கொண்டே பிரஷ் செய்தவன் மேஜை மீது இருந்த கப்பை எடுத்துக்கொண்டு காபியை மிடறு மிடறாக ரசித்து குடித்தான்.

அபிமன்யூ அவன் காபி குடிக்கும் வரை காத்திருந்தவன் அவர்களின் உடைமைகளை எடுத்து வைக்கத் தொடங்கினான். இருவரும் சிறிது நேரத்தில் ஹோட்டலில் இருந்து வெளியேறியவர்கள் அவர்களுக்காகக் காத்திருந்த காரைக் கண்டதும் டிரைவருக்கு நன்றி சொல்லிவிட்டு அபிமன்யூ காரை எடுக்க அஸ்வின் ஆச்சரியத்துடன் “இது யாரோட கார்டா?” என்று கேட்க

கண்சிமிட்டிய அபிமன்யூ “சென்னை திரும்புற வரைக்கும் நம்ம கார் தான்” என்றபடி காரின் கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்து திருப்தியானான்.

“கம் ஆன் அச்சு. லெட்ஸ் கோ” என்றபடி காரில் அமர்ந்தவனைத் திகைப்புடன் பார்த்தபடி அவன் அருகில் உள்ள சீட்டில் அமர்ந்தான் அஸ்வின்.

“அரசியல்வாதியா இருக்குறதுல கூட ஒரு நல்லது இருக்குடா அச்சு. பார்த்தியா அந்த மாவட்டச் செயலாளர் நாம கேக்காமலே கார்,  அவனோட ரிசார்ட்டை நம்மளை யூஸ் பண்ணிக்கச் சொல்லிட்டாரு” என்று சிலாகித்தபடியே காரை எடுத்தவன் மாவட்டச்செயலாளர் அவனைத் தங்குமாறு வேண்டிக்கொண்ட அந்த ரிசார்ட்டின் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு இறங்கினான்.

இறங்கி சுற்றும் முற்றும் பார்த்தபடி சோம்பல் முறித்தவன் “அச்சு என்னன்னு தெரியலடா பார்க்குறது எல்லாமே கண்ணுக்கு அழகா தெரியுதுடா? இதை தான் காதல்னு சொல்லுவாங்களோ?” என்று என்று ரசனையுடன் சொல்ல

அஸ்வின் அவனைப் பொய்யாக முறைத்தவண்ணம் “டேய்! ஊட்டியில இருந்தா பாக்குறதுலாம் அழகா தான்டா தெரியும். அதுக்கு காரணம் காதல் இல்லை. இந்த இடத்தோட அமைப்பு அப்பிடி” என்று கேலி செய்தபடி லக்கேஜைத் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.

அபிமன்யூ போனை நோண்டியபடி அவனை தொடர்ந்தவன் அவனுக்கான அறைக்குள் சென்று லக்கேஜை வைத்துவிட்டு அனுராதா வாட்சப்பில் அனுப்பியிருந்த முகவரியை கூகுள் மேப்பில் பார்த்துவிட்டு “அச்சு! சீக்கிரம் குளிச்சு ரெடியாகுடா. நாம ஒரு முக்கியமான ஆளை மீட் பண்ணப் போறோம்” என்று அவனுக்கு ஆணையிட்டபடி குளிக்கச் சென்றான்.

அடுத்த அரைமணிநேரத்தில் இருவரும் காரோடு ஒரு பெரிய பங்களாவின் முன் காத்திருந்தனர் ஸ்ராவணியின் வருகைக்காக.

**********************************************************************************

அனுராதா போனில் அபிமன்யூவுக்கு விவரத்தைச் சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தாள். மனதிற்குள் “இனிமே வனிக்கும் அபி சாருக்கும் இடையில இருக்கிற பிரச்சனை எல்லாமே தீர்ந்து போயிடும்” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டாள்.

அடுத்த மூன்று மணிநேரத்தில் ஊட்டியில் இறங்கியவர்கள் கால்டாக்சியை அழைக்கப் போக அதற்குள் விஷ்ணுவிடம் இருந்து ரகுவுக்கு கால் வந்தது. அவன் பேசிவிட்டு வந்தவன் பெண்களிடம் “சீஃபோட தம்பி இப்போ காரோட வந்துடுவாராம். கொஞ்சம் வெயிட் பண்ணுவோம்” என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே கார் ஒன்று அவர்களை நோக்கி வர ரகு அந்த காரை நோக்கி கையை ஆட்டி நிறுத்துமாறு சைகை காட்டினான்.

கார் அவர்கள் அருகில் நிற்க அதிலிருந்து இறங்கினான் ஒரு நெடிய ஆடவன். உலகத்தில் உள்ள மொத்த குறும்புத்தனத்தையும் குத்தகைக்கு எடுத்தவன் போல கண்ணில் புன்னகை மின்ன நின்றவன் “ஹலோ பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்! எப்பிடி இருக்கிங்க? ஐயாம் சிபு. விச்சுவோட பிரதர்” என்றபடி அவர்கள் அருகில் வர அனுராதா மேனகாவின் காதில் “சீஃப்கு இப்பிடி ஒரு தம்பியா? சோ ஹேண்ட்சம்டி” என்று சொல்ல மேனகா அவளை முறைத்து வைத்தாள்.

ரகு மற்றும் வர்தனுக்கு கை கொடுத்தவன் ஸ்ராவணியைப் பார்த்ததும் “என்னம்மா ஸ்டார் ரிப்போர்ட்டர் ஹவ் ஆர் யூ?” என்றபடி கையை நீட்ட அவள் புன்னகையுடன் பதிலுக்கு கை கொடுத்தபடி “ஐயாம் ஃபைன் சார்” என்று கூறினாள்.

அவன் அவளைச் சோகமாகப் பார்த்து “சாரா? விட்டா நீங்க என்னை கிழவனாக்கிடுவாங்க போல. இங்க பாருங்க கய்ஸ் ஐயாம் ஜஸ்ட் 31. சோ இந்த சார், மோர், தயிரை எல்லாம் உங்க ஆபிஸோட வச்சுக்கோங்க. கால் மீ சிபு” என்று சொன்னபடி மேனகாவைப் பார்த்தான்.

“இங்கேயும் ஒரு சோடாபுட்டியா? நாட் பேட்! இருந்தாலும் என்னோட சோடாபுட்டி மாதிரி வராது” என்றபடி அவளுக்குக் கை கொடுக்க அவள் வாய் ஓயாமல் அவன் பேசுவதைக் கண்டு திகைத்தவளாய் கை குலுக்கினாள். சுலைகாவும் அவளைப் பின்பற்றவே அனுராதா மட்டும் அவனையே விழியால் விழுங்கியபடி நின்று கொண்டிருந்தாள்.

அவன் அடுத்து தன்னை நோக்கி வருவதைக் கண்ட அனுராதா ஆசையுடன் கை நீட்ட அவள் கையை குலுக்கியவன் “நீங்க மேரிட்டா?” என்று கேட்க அவள் அவசரமாக தலையாட்டி மறுக்க அவன் சிரித்தபடி “ஆனா நான் மேரிட். ஒரே ஒரு தடவை ஒரு சோடாபுட்டி மேல காதல்ல விழுந்து அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆயுள்தண்டனைக் கைதி மாதிரி ஆயிட்டேன். சோ இனிமே நோ மோர் சைட் அடிச்சிங். ஓகேவா?” என்று சொல்லிவிட்டுக் காரை காண்பிக்க அனைவரும் காரை நோக்கிச் சென்றனர்.

அடுத்த சில மணித்துளிகளில் அவர்கள் வீட்டிற்குள் கார் நுழைய காரிலிருந்து இறங்கினர் அனைவரும். அதே நேரம் வீட்டுவாயிலில் நின்று கொண்டிருந்த காரிலிருந்து இறங்கிய அபிமன்யூவும் அஸ்வினும் அந்த வீட்டிற்குள் நுழைந்த காரிலிருந்து இறங்கிய ஸ்ராவணியைக் கண்டதும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவள் வீட்டுக்குள் நுழையும் முன் “ரிப்போர்ட்டர் மேடம்” என்ற சத்தம் அவள் காதில் விழ அவளது கால்கள் பிரேக் போட்டதைப் போல் நின்றது. ஆனால் ஸ்ராவணியின் மூளை “வனி அவன் எப்பிடி இங்கே வருவான்? நீ சும்மா சும்மா இப்பிடி சிலையாட்டம் நிக்காதே” என்று அறிவுறுத்த மீண்டும் வீட்டை நோக்கி முன்னேற அதற்குள் வேகமாக வந்தவன் அவள் கையைப் பற்றி நிறுத்த மற்ற அனைவரும் இதை ஏதோ சினிமா போல வேடிக்கை பார்க்க ஸ்ராவணி ஆத்திரத்துடன் கையை உதறினாள்.

“ஹவ் டேர் யூ டு டச் மீ?” என்று அவள் சீற அவன் சாதாரணமாக “பத்து நிமிசம், பத்தே நிமிசம் எனக்கு டைம் குடு. நான் எல்லா விஷயத்தையும் உனக்குப் புரிய வைக்குறேன்” என்று சொல்லி அவளது கையைப் பற்றி அழைத்துச் சென்றான்.

ஸ்ராவணி மீண்டும் அவன் கையை உதறியவள் “லிசன்! டோன்ட் கிரியேட் எனி சீன். இப்போ எதுக்கு இங்கே வந்திருக்க? முதல்ல நான் இங்கே இருக்கேனு உனக்கு யார் சொன்னாங்க? ..அனு..அனு தானே சொன்னா” என்று அனுராதாவை நோக்கிச் செல்ல முயல அவளைத் தடுத்து நிறுத்தினான் அபிமன்யூ.

“ஒரு பத்து நிமிசம் எனக்காக ஒதுக்க மாட்டியா நீ?”

“ஏய் யாருடா நீ? உனக்காக பத்து நிமிசம் இல்ல பத்து செகண்ட் கூட நான் டைம் ஒதுக்க தயாரா இல்ல. இன்னொரு தடவை என் மூஞ்சில முழிக்காதே” என்று சொல்லிவிட்டு அவளின் நண்பர்களுடன் வீட்டினுள் செல்ல சிபு இவ்வளவு நேரம் இவையனைத்தையும் வேடிக்கை பார்த்துவிட்டு மெதுவாக அபிமன்யூவின் அருகில் வந்தான்.

அவனை யாரென்று பார்த்த அபிமன்யூ எதுவும் பேசாமல் வாடிப்போன முகத்துடன் அந்த வீட்டையே பார்த்துக் கொண்டு நிற்க சிபு “என்னாச்சு ப்ரோ? லவ்வா?” என்று கிண்டலாக கேட்க அவன் தலையை மட்டும் மேலும் கீழுமாக ஆட்ட ஒரு நிமிடம் அவன் முகத்தை உற்றுப்பார்த்தான்.

“இந்த முகத்தை நான் எங்கேயோ பார்த்திருக்கேனே!” என்று யோசித்தவன் நினைவு வந்தவனாக “அட! அந்த யெங்கஸ்ட் எம்.எல்.ஏ! அது நீங்க தானே? என்னப்பா இது ஒரு இளம் அரசியல்வாதிக்கு வந்த சோதனை. ஒரு பொண்ணை லவ் பண்ண வைக்க முடியல. நீயெல்லாம் எப்பிடி எம்.எல்.ஏ ஆனயோ?” என்று கேலி செய்ய

அபிமன்யூ சலிப்புடன் “விடுங்க ப்ரோ. இந்த பொண்ணுனு இல்லை, எந்தப் பொண்ணா இருந்தாலும் அவங்க பின்னாடி ஒரு பையன் வர ஆரம்பிச்சதும் அவனைச் சுத்த விடுறதுல அவங்களுக்கு ஒரு ஆனந்தம். ஆனா இந்த ஸ்ராவணி இருக்காளே , இவ குயின் ஆஃப் ஆட்டிட்டியூட். ரொம்ப ஓவரா பண்ணுறா. போனா போறா ப்ரோ. எனக்கு இவளை விட்டா வேற ஆளா இல்ல?” என்று விரக்தியுடன் சொல்லிவிட்டுத் திரும்ப அந்த வீட்டுக்குள் இருந்து மஞ்சள் நிற சுடிதாரில் வெளியே வந்தாள் ஒரு இளம்பெண்.

அவளைக் கண்ட அபிமன்யூவின் விழிகள் விரிய அவன் வாய் தானாக “வாவ்! வாட் அ கேர்ள்!” என்று சிலாகிக்க சிபு யாரைச் சொல்கிறான் இவன் என்ற எண்ணத்துடன் திரும்பிப் பார்க்க அந்த மஞ்சள் சுடிதார் அதற்குள் அவன் அருகில் வந்துவிட்டாள்.

சிபு அபிமன்யூவின் கண் முன்னே கையை ஆட்ட அவன் சுயநினைவுக்கு வந்தான். அபிம்னயூ சிபுவின் அருகில் நின்ற மஞ்சள் சுடிதாரிடம் கையை நீட்ட அவளுக்குப் பதிலாக ஒரு முறைப்புடன் சிபுவே அவனது கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான்.

அபிமன்யூ அவனது செய்கைக்கான அர்த்தம் புரியாமல் கேள்வியாக அவனைப் பார்க்க சிபு கண்ணைச் சுருக்கியபடி அவனைப் பார்த்து “மீட் மை வைஃப் மனு” என்று சொல்ல அந்த மஞ்சள் சுடிதார் அணிந்த பெண் “ஹலோ ப்ரோ” என்றதும் அபிமன்யூ ஒரு அசட்டுச்சிரிப்புடன் சிபுவை பார்த்தான்.

அவள் சிபுவின் புறம் திரும்பி “எல்லாரும் உள்ளே வந்தாச்சு. நீ மட்டும் இங்க என்னடா பண்ணுற ஏலியன்? சார் யாரு உன்னோட ஃப்ரெண்டா?” என்று கேட்க சிபு அவளின் தலையில் தட்டிவிட்டு “கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ சோடாபுட்டி. மூச்சு விடாம பேசி இந்த சின்ன வயசுல என்னை விதவனா மாத்திட்டு போய் சேர்ந்துடாதே” என்றுச் சொல்லி விட்டு கண்சிமிட்ட அவள் கோபத்துடன் அவன் காதில் மிதித்துவிட்டு உள்ளே சென்றாள்.

“ஆவ்! ஏய் சோடாபுட்டி!  நீ செத்தடி” என்று ஒற்றைக்காலை பாதி தூக்கித் தடவிக் கொடுத்தவன் தன் அருகில் நின்ற அபிமன்யூவை ஒரு  பார்வை பார்த்தவாறு “என்ன எம்.எல்.ஏ யோசனை பலமா இருக்கு? இப்போ அந்த பொண்ணு கிட்ட பேசணும், அவ்ளோ தானே” என்று கேட்க அபிமன்யூ உற்சாகத்துடன் தலையாட்டினான்.

சிபு நேராக நிமிர்ந்து நின்றவன் அவனிடம் ஒரு திட்டத்தைச் சொல்ல அவனும் உற்சாகத்துடன் சிபுவை கட்டிப்பிடித்து “வாவ்! ப்ரோ தேங்க்யூ சோ மச். ஐ லவ் யூ ப்ரோ” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவன் “நான் அப்போ ஈவினிங் வர்றேன் ப்ரோ” என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திருக்கும் அஸ்வினை நோக்கிச் சென்றான்.