🖊️துளி 10👑
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
மேனகா காலையிலேயே ஏர்ப்போர்ட்டில் சென்று ஸ்ராவணியின் பெற்றோரை அழைத்து வர சென்று அங்கே காத்திருந்தாள். வேதாவும், சுப்பிரமணியமும் மேனகாவை கண்டதும் “குட்டிம்மா” என்று புன்னகையுடன் அழைக்க அவள் வேகமாக சென்று அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் அணைத்துக் கொண்டாள்.
“எப்பிடி இருக்கிங்க அத்தை? நீங்க மெலிஞ்சு போயிட்டிங்க. நமக்கு அமெரிக்காலாம் செட் ஆகாதுனு நான் தான் சொன்னேன்ல மாமா. நம்ம சொல்லுறதை கேக்காம போனாங்கல்ல அதுக்கு இது தேவை தான்” என்று வேதாவை கிண்டலடிக்க சுப்பிரமணியம் அவளுக்கு ஹைஃபை கொடுத்தபடி அவளுடன் நடந்துச் சென்றார். வேதா சிரித்துக் கொண்டே இருவரையும் தொடர்ந்தார்.
அரை மணி நேர டாக்சி பயணத்தில் அவர்கள் இருந்த அப்பார்ட்மெண்ட் வர மூவரும் டாக்சியில் இருந்து இறங்கினர். வழக்கம் போல செக்யூரிட்டிக்கு சலாம் போட்ட மேனகா இருவரையும் லிப்டில் போகுமாறு சொல்லிவிட்டு லக்கேஜை தான் கொண்டு வருவதாக கூறிவிட சுப்பிரமணியம் அவளின் செய்கையில் தங்கையின் நினைவு வரவும் கலங்கிய கண்களுடன் லிப்டுக்குள் சென்றார்.
சுப்பிரமணியத்தின் தங்கை நீரஜா மற்றும் ரங்கநாதன் தம்பதியினரின் புத்திரிகள் தான் ரம்யா, வினிதா மற்றும் மேனகா. ரம்யாவுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் விபத்து ஒன்றில் தங்கையும், மைத்துனரும் காலமான செய்தி கேட்டு அதிர்ந்த சுப்பிரமணியம் மனைவி குழந்தைகளுடன் தஞ்சாவூர் சென்று இறுதிசடங்குகளை கனத்த இதயத்துடன் முடித்தார்.
துக்கம் நடந்த வீட்டில் கூட ரம்யாவின் கணவன் ஹரியும், ரம்யாவும் அலட்டலுடன் நடந்து கொள்ள வேதாவுக்கு நாத்தனாரின் இரு திருமணமாகாத பெண்களை அவர்கள் வசம் ஒப்படைக்க விருப்பமே இல்லை. ஹரி தனது மாமனார் மறைந்த பிறகு மனைவியின் தங்கைகளுக்கு வீட்டின் மூத்த மாப்பிள்ளையாக இருந்து பொறுப்பாக செய்ய வேண்டிய கடமைகளை செய்வதாக கூறியதை வேதா நம்பவில்லை.
கணவரிடம் “இவங்க ரெண்டு பேரை நம்பி பொம்பளை புள்ளைங்களை விட்டுட்டு போக முடியாதுங்க. நம்ம கூடவே கூட்டிட்டு போயிடுவோம். நம்ம பசங்க கூடவே இவங்களும் வளரட்டும்” என்று சொல்ல சுப்பிரமணியம் மூத்த மருமகள் ரம்யாவிடம் இது பற்றி கேட்டதற்கு அவள் தாங்களே இருவரையும் பார்த்து கொள்கிறோம் என்று உறுதியாக கூறிவிட்டாள். அதற்கு மேல் வற்புறுத்த முடியாததால் இருவரும் சென்னைக்கு கிளம்பினர்.
ஆனால் அவர்கள் சென்னை சென்ற ஒரு வாரத்திலேயே தஞ்சையிலிருந்து போன் வர அதில் பேசியவள் மேனகா.
“ஹலோ மாமா! மாமா என்னையும் வினியையும் இங்க இருந்து கூட்டிட்டுப் போயிடுங்க மாமா. அக்கா வினிக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறா. வினி அதுக்கு ஒத்துக்க மாட்டேனு சொன்னதுக்கு அவளுக்கு ரெண்டு நாளா சாப்பாடு தண்ணி குடுக்காம ரூம்ல போட்டு அடைச்சிட்டாங்க. எங்களை கூட்டிட்டு போங்க மாமா” என்ற தங்கை மகளின் கதறல் இதயத்தை கிழிக்க மனைவியுடன் தஞ்சாவூர் சென்றார் சுப்பிரமணியம்.
ரம்யாவின் கணவன் தான் இதற்கு மூலகாரணம் என்றும் மாமனாரின் சொத்து வீட்டைத் தாண்டி வெளியே செல்லக்கூடாது என்பதற்காக மைத்துனியை தன் சொந்த தம்பிக்கு திருமணம் செய்து வைத்து மொத்தச் சொத்தையும் தங்களின் கைக்குள் வைத்துக் கொள்ள மனைவி ரம்யாவுடன் சேர்ந்து திட்டம் போட்டிருக்கிறான் என்றும் தெரியவர நேரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவர் அரசு அதிகாரி என்பதால் அவரது புகாரின் வீரியம் உணர்ந்த காவல்துறையினர் எடுத்த நடவடிக்கையால் ரம்யாவும், அவள் கணவனும் ஒரு மணி நேரத்தில் காவல்துறை வசம் இரு பெண்களையும் ஒப்படைக்க அன்று தங்கை மகள்களுடன் தஞ்சாவூரை விட்டு நீங்கியவர் தான்.
அதற்கு பின் தங்கைக்கு மூத்த மகள் என்று ஒருத்தி இருந்தாள் என்ற நினைவையே மறந்து விட்டார் அவர். சொத்துக்காக சொந்த சகோதரியையே கொடுமைப்படுத்தியவளை அவரால் என்றுமே மன்னிக்க முடியாது என்று சொல்லிவிட்டுத் தான் வந்தார்.
அன்றைய தினத்திலிருந்து மேனகாவும், வினிதாவும் ஸ்ராவணி மற்றும் ஷ்ரவனுடன் ஒரே வீட்டில் வாழத் தொடங்கினர். அண்ணன் தங்கை இருவருக்கும் அத்தை மகள்களை மிகவும் பிடித்துவிட நால்வரும் நெருங்கிய நண்பர்களாயினர்.
மேனகாவுக்கும் ஸ்ராவணிக்கும் ஒரே வயது என்பதால் இருவரும் ஒரே வகுப்பில் பயில ஆரம்பித்தனர். அதே நேரம் வினிதா அக்கா வீட்டினரால் இடையில் விட்ட கல்லூரி படிப்பை மீண்டும் தொடர ஆரம்பித்தாள்.
மாமா அத்தையின் அன்பில் அவர்கள் தஞ்சாவூரின் நிகழ்ந்த மோசமான சம்பவங்களை மறந்தே விட்டனர். ஆனால் மேனகாவின் மனதில் அந்த ரணம் ஆறாத வடுவாக மாறிவிட்டது.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
தங்களின் மூத்தச் சகோதரியை இவ்வளவு பேராசைக்காரியாக மாற்றியது அவளுடைய மணவாழ்க்கையே என்ற எண்ணம் அந்த பதினைந்து வயதிலேயே அவளது மனதில் பதிய வாழ்வில் திருமணம் மட்டும் செய்து கொள்ளவே கூடாது என்று சபதம் எடுத்தாள் அவள்.
ஆனால் வினிதாவோ அத்தை மாமாவின் கவனிப்பில் மனம் பூரித்தவள் ஒரு நாள் ஷ்ரவன் அவளை காதலிப்பதாக கூறவும் இந்த உலகிலேயே மகிழ்ச்சியான பெண்ணாக உணர்ந்தாள்.
இனி கால காலத்துக்கும் அவளை அவளது அத்தை மாமாவிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது என்பதும் அதற்கு காரணம். அவளுக்குமே ஷ்ரவனை மிகவும் பிடிக்கும் என்பதால் அவளது கல்லூரிப்படிப்பு முடித்ததும் ஷ்ரவன் பெற்றோர் சம்மதத்துடன் அவளை மணந்து கொண்டான்.
இருவரும் ஒரே ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்க ஆன்சைட் வாய்ப்பு கிடைத்ததும் ஷ்ரவன் மனைவியுடன் அமெரிக்கா பறந்தனர்.
அப்போது ஸ்ராவணியும், மேனகாவும் ஜர்னலிசம் முடித்து இண்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தனர். இவை நடந்து ஒரு வருடம் கழித்து அவனிடமிருந்து வினிதா கருவுற்றிருக்கும் தகவல் வர வேதாவும் சுப்பிரமணியமும் விஷ்ணு பூர்வியிடம் ஸ்ராவணி மற்றும் மேனகாவை பார்த்து கொள்ளுமாறு சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் பயணமாயினர்.
பழைய நினைவுகளிலிருந்து மீண்டவர் வீட்டின் அழைப்புமணியை அழுத்த ஸ்ராவணி கதவை திறந்தாள்.
நீண்டநாள் கழித்து பெற்றோரை பார்த்த சந்தோசம் மின்ன அவர்களை உள்ளே அழைத்து சென்று அண்ணன் மற்றும் அண்ணியை பற்றி நலம் விசாரித்தாள்.
சுப்பிரமணியம் பொறுமையாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு “சம்பந்தியம்மா போன் பண்ணுனதும் தான் நாங்க இந்தியா கிளம்ப ரெடியானோம். விக்கி எல்லா ஏற்பாட்டையும் பண்ணிட்டான்னு அவங்க தான் சொன்னாங்க. உனக்கு இதுல எந்த கஷ்டமும் இல்லையேமா?” என்று மகளை கேட்கவும் தயங்கவில்லை.
அவளோ “முன்னாடியே முடிவு பண்ணுன விஷயம் தானேப்பா! எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல” என்று சொல்லவும் பொறுப்பான பெற்றோராக வருங்கால மருமகனுக்கு போன் செய்து நிச்சயதார்த்த ஏற்பாடுகளை பற்றி கேட்கவும் தவறவில்லை.
மாப்பிள்ளையே நிச்சயதார்த்த ஏற்பாடுகளை இழுத்துப் போட்டுச் செய்வது அவருக்குக் கொஞ்சம் வினோதமாகத் தான் இருந்தது. அதற்குள் மேனகாவும் உடமைகளுடன் வந்து விட இருவரும் பேசிக்கொண்டே அதை பெற்றோரின் அறையில் வைத்தனர்.
ஷ்ரவன் வினிதாவை அங்கே விட்டுவிட்டு வர வேண்டாமென்று ஸ்ராவணியே கூறிவிட்டாள்.
வினிதா தயங்க “ஆஃப்டர் ஆல் என்கேஜ்மெண்ட் தானே! ஒன்னும் பிரச்சனை இல்ல வினி. நீங்க வரலன்னா என்ன? உங்க மனசு ஃபுல்லா இந்தியாவை தான் சுத்தி வரும்னு எனக்கு நல்லா தெரியும். நீ ஒழுங்கா அங்கே இருந்து அம்மா அப்பா வர்ற வரைக்கும் என் மருமகனை பாத்துக்கோ. அப்புறம் அவன் வெளியே வந்து ‘அத்தை உன் கல்யாணத்தால நான் மம்மி வயித்துக்குள்ள இருக்கிறப்போ அவங்க என்னை கவனிக்கவே இல்லன்னு’ என் கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணப் போறான்” என்று கேலி போல் பேசி அவளின் வருத்தத்தை மாற்றினாள்.
நிச்சயம் முடிந்த இரு வாரத்தில் திருமணத்துக்கு விக்ரமின் தாயார் ஜோசியரிடம் நாள் குறித்து வாங்கியிருந்ததால் ஸ்ராவணிக்கு எப்போது இந்த கல்யாண கலவரம் முடியும் என்று இருந்தது.
மேனகா தன்னுடைய மாமா அவர்களின் ஃப்ளாட்டின் சுவர்களை ஆசையுடன் வருடிக்கொடுப்பதை பார்த்தவள் “மாமாக்கு இந்த வீட்டு மேல எவ்ளோ லவ் இல்ல வனி?” என்று கேட்க
ஸ்ராவணி “இருக்காதா பின்ன? இந்த வீட்டுல நிறைய ஸ்வீட் மொமண்ட்ஸ் இருக்குல்ல. இதை அவரோட ரிடையர்மெண்ட் ஃபண்ட் ஃபுல்லா போட்டு வாங்குன அன்னைக்கு அவரோட முகத்துல தெரிஞ்ச சந்தோசத்துக்கு அளவே இல்ல! அந்த நாள் உனக்கும் நியாபகம் இருக்குல்ல மேகி?” என்று சொல்லிவிட்டு வாஞ்சையுடன் வீட்டை பார்த்துக்கொண்டிருந்த தந்தையை நோக்கினாள்.
சுப்பிரமணியத்துக்கு அந்த வீடு அவரது கனவு இல்லம். ஆசை ஆசையாகப் பார்த்து பார்த்து பொருட்களை வாங்கி வைத்து அழகு பார்த்த இல்லம் அது. எப்போதடா மருமகளின் பிரசவம் முடிந்து தனது கனவு இல்லத்துக்குத் திரும்புவோம் என்ற எதிர்பார்ப்புடனே அமெரிக்க நாட்களைக் கழித்து வந்தார் மனிதர்.
அதற்குள் ஹாலில் வேதா யாரிடமோ பேசும் சத்தம் கேட்கவே இருவரும் வந்து பார்க்க அங்கே விக்ரம் அவனது குடும்பத்தினருடன் வந்திருந்தான்.
இருவரும் அவர்களுக்கு வணக்கம் சொல்ல சந்திரா பொய்யான புன்னகையோடு பேச ஆரம்பித்ததை ஸ்ராவணி கண்டுகொண்டாள். விக்ரம் அமெரிக்காவிலிருந்த இத்தனை நாட்களில் இந்த பெண்மணி வருங்கால மருமகள் என்று ஒருத்தியைக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இப்போது மகன் முன் இவ்வாறு நடந்து கொள்வதை நினைத்தால் அவளுக்குச் சிரிப்பு தான் வந்தது.
ஆனால் சேகரன் எப்போதும் போல மருமகளை பார்த்து சினேகத்துடன் புன்னகைக்க ஸ்ராவணி அவரிடம் மட்டும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சோபாவில் அமர்ந்தாள்.
அதற்குள் விக்ரம் எழுந்து வந்து ஸ்ராவணியின் அருகில் அமர்ந்தவன் அவள் தோளில் கை போடவே ஸ்ராவணிக்கு ஏனோ அந்த தொடுகை பிடிக்காததால் சட்டென்று எழுந்தவள் கொஞ்சம் நகர்ந்து அமர்ந்தாள். அவன் மறுபடியும் பக்கத்தில் வர அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டாள். மேனகா இதைப் பார்த்துக் கொண்டிருந்தவள் என்ன செய்யவென்று தெரியாமல் விழிக்க விக்ரம் ஸ்ராவணியை தொடர்ந்து சென்றான்.
பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளிடம் சென்றவன் “என்னாச்சு வனி? ஏன் நீ இப்பிடி பிஹேவ் பண்ணுற?” என்று கேட்க
அவள் ஆச்சரியத்துடன் திரும்பி “இது நான் கேக்க வேண்டிய கொஸ்டின் விக்கி. நீ எதுக்கு இப்பிடி பிஹேவ் பண்ணுற? நான் தான் விலகி போனேன்ல, அப்போவே புரிஞ்சிட்டிருந்தா உன்னை நான் பாராட்டிருப்பேன்” என்று கடுப்புடன் பதிலுறுத்தாள்.
விக்ரமுக்கு அவள் சொன்னதை கேட்டு திகைப்பு. “வனி! நாளைக்கு நமக்கு என்கேஜ்மெண்ட ஆகப் போகுது. இன்னும் டூ வீக்ஸ்ல மேரேஜ். நான் உன் தோள் மேல கை போடுறதால உனக்கு என்ன பிரச்சனை?” என்று சொல்ல
ஸ்ராவணி எரிச்சல் நிறைந்த குரலில் “வாட் த ஹெல்? இந்த என்கேஜ்மெண்ட், மேரேஜ்லாம் என்னைத் தொடுறதுக்கு உனக்குக் குடுத்த லைசென்ஸா? அமெரிக்காலாம் போயிட்டு வந்துருக்க. இன்னும் உனக்கு கன்செண்ட்னு ஒன்னு இருக்கு, அதை பத்தி தெரியலயே. கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் அவ அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணா அவளை தொடாம இருக்கிறவன் தான் நல்ல ஆம்பிள்ளை. எனக்கு நீ டச் பண்ணது ஒரு மாதிரி அன்கம்பர்டபிளா இருந்துச்சு. அதான் நான் விலகி உக்காந்தேன்” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நின்று கொண்டாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
விக்ரமுக்கு அவளின் இந்த வியாக்கியானம் சற்றும் பிடிக்கவில்லை. அவனும் சராசரி ஆண்மகன் தானே! “எனக்குச் சொந்தமாக போறவளை நான் தொடுறதுக்கு எனக்கு யாரோட பெர்மிஷன் வேணும்” என்ற வழிவழியாக வந்த பழமைவாத சிந்தனைகள் அவன் இரத்தத்திலும் ஊறியிருக்க தானே செய்யும்.
இருந்தாலும் திருமணம் முடியும் வரை அவளை விட்டுப்பிடிப்போம் என்று நினைத்தவன் “வனி நீ வெக்கப்பட்டு தள்ளி உக்காருறனு நெனச்சேன்” என்று சமாளிக்க
ஸ்ராவணி இறுகிய குரலில் “வெக்கத்துக்கும் சங்கடத்துக்கும் இன்னுமா ஆம்பிள்ளைங்க வித்தியாசம் கண்டுபிடிக்க தெரியாம இருக்கிங்க?” என்று சொல்லிவிட்டு ஏமாற்றத்தில் உதட்டைச் சுழித்தாள். அதன் பின் அவன் ஒரு நண்பனாக பேசி அவளைச் சமாதானப்படுத்திவிட்டுப் பெற்றோருடன் கிளம்பினான்.
அவன் சென்றதும் ஸ்ராவணியை தேடி வந்த மேனகாவிடம் “ஃபர்ஸ்ட் டைம் இந்தக் கல்யாணம் தேவை இல்லையோனு தோணுது மேகி. ஆஃப்டர் ஆல் தோள்ல கை போடுற விஷயத்துல கூட என்னோட மனநிலையை புரிஞ்சிக்காத இவனை போய் நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?” என்று கடினக்குரலில் கேட்க
மேனகா “உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு நீ அவனை உனக்கேத்த மாதிரி மாத்திக்கோ வனி” என்று சொல்ல
அவளோ “இல்ல மேகி! இவன் கண்டிப்பா மாற மாட்டான். அது மட்டுமில்லாம இவனுக்கு புத்தி சொல்லி திருத்தவா நான் பிறந்திருக்கேன்? அதை விடு. என் தோள்ல கை போடுறதையே ஏத்துக்க முடியாம ஒரு மாதிரி அன்கம்ஃபர்டபிளா இருக்கு. என்னால மத்த விஷயங்களை யோசிக்க கூட முடியலடி” என்று சொல்லிவிட்டு வெளியே வெறிக்க ஆரம்பித்தாள்.
மேனகாவுக்கு ஸ்ராவணியை பற்றி நன்கு தெரியும். அவளால் சில விஷயனங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென்றால் அதை என்றுமே அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள். அவ்வளவு பிடிவாதக்காரி விக்ரமை திருமணம் செய்ய சம்மதிக்க காரணமே நண்பன் தன்னை புரிந்து கொண்டவனாய் நல்ல வாழ்க்கைத்துணையாய் இருப்பான் என்று நம்பியது தான்.
ஆனால் அவனுக்கு இன்னும் ஸ்ராவணியின் நண்பனாக மட்டுமே இருப்பதில் பிடித்தமில்லை போலும். அவனது சில காதல் செய்கைகளுக்கு ஸ்ராவணியிடம் இருந்து வரும் எதிர்மறை பதில்கள் அனைத்தையும் கவனித்த மேனகா நிச்சயதார்த்தம் நல்லபடி நடக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டாள்.
மறுநாள் காலை அந்த வீட்டினருக்கு பரபரப்பான காலையாகவே இருந்தது. நிச்சயதார்த்தம் மாலை நேரத்தில் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் புறமிருந்து மேனகா அவளுடைய அத்தை மாமாவுடன் சேர்ந்து பார்த்து கொள்ள ரகுவும், வர்தனும் கூடவே ஒத்தாசையாக இருந்தனர்.
ஸ்ராவணி இந்த கலவரங்களை பார்த்து சிரித்து விட்டு மேனகா போட்டுவிட்ட ஃபேஸ் பேக்குடன் உலா வர
ரகு “ஆத்தா! கொஞ்சம் தனியா போய் உக்காந்துக்கோ ஆத்தா! உன்னை பாத்து பையன் பயந்துட்டான்” என்று வர்தனை சுட்டிக்காட்டி நக்கலடிக்க ஸ்ராவணி சோபாவிலிருந்த குஷனை எடுத்து அவன் மீது வீசினாள்.
இவ்வாறு நாள் மிக அழகாக நகர மாலை நேரத்தில் அவளுக்கு வீட்டிலிருந்தே அலங்காரத்தை பியூட்டிசியன் கொண்டு முடித்த மேனகா அத்தை மாமாவை முதலில் மண்டபத்துக்கு அனுப்பிவிட்டு ஸ்ராவணியுடன் சிறிது நேரம் கழித்து கிளம்பினாள்.
விஷ்ணுவும் பூர்வியும் பூர்வி படித்த கல்லூரியில் மறுநாள் அலுமினி அசோசியேசன் மீட்டிங்கில் பங்கேற்க ஊட்டி சென்றுவிட்டதால் நிச்சயதார்த்தத்திற்கு வர இயலாது போயிற்று. அவர்களின் சார்பில் விஷ்ணுவின் தங்கை ஸ்ரீநிதி அதில் கலந்து கொள்ள ரகு அவளை வரவேற்று முன்னிருக்கையில் அமரவைத்தான்.
அவர்கள் சென்று இறங்கியதும் மணப்பெண்ணுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார் விக்ரமின் அக்காவான வனஜா. சந்திரா ஏற்பாடுகளை ஏளனமான முகபாவத்துடன் பார்வையிட்டபடி வலம் வந்தார்.
விக்ரம் சும்மாவே ஸ்ராவணி மீது பைத்தியமாக சுற்றுபவன் அன்று பட்டுப்புடவை அணிந்து கூந்தல் நிறைந்த பூக்களுடன் ஜொலித்தவளிடமிருந்து பார்வையை மீட்பது அவனுக்குச் சிரமமாக போய்விட்டது.
சிறிது நேரத்தில் ஐயர் வர மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் அமர நிச்சயதார்த்த பத்திரிக்கை வாசிக்கும் நேரத்தில் தான் அந்தக் குரல் கேட்டது.
“நான் வர்றதுக்குள்ள யாருப்பா நிச்சயத்தை ஆரம்பிச்சது?” என்றபடி அங்கே நின்றவனை கண்டதும் ஸ்ராவணியின் முகம் குழப்பத்தை பூசிக்கொள்ள மேனகாவோ அதிர்ச்சியுடன் அவன் வருகையைப் பார்த்து சிலையானாள். வழக்கம் போல அவனது யூனிஃபார்மான வெண்ணிற ப்ளெய்ட் ஷேர்ட் மற்றும் கருப்பு ஜீன்சில் நின்றவன் அபிமன்யூ தான். அவனது வருகை இருகுடும்பத்து பெரியவர்கள் மற்றும் உறவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த ரகு மற்றும் வர்தன் கையை பிசைந்தபடி நிற்க அஸ்வினுடன் மண்டபத்தினுள் நுழைந்தான் அவன்.