💗அத்தியாயம் 9💗

மங்கலநாதத்தின் ஓசை தூரத்தில் வரும் போதே காதில் இன்னிசையாய் ஒலிக்க, அந்த மஞ்சள் வண்ண டாடா நானோ ஸ்ரீவிவாகா திருமண மண்டபத்தின் கார் பார்க்கிங்கில் நிற்கும் வாகனக்கடலில் சென்று தானும் ஐக்கியமானது.

அதிலிருந்து இறங்கிய துளசி மகளின் கையைப் பிடித்துக் கொள்ள, சுகன்யா அவளது தாயார் மீனாவுடன் இறங்கினாள். நால்வரும் ‘ராகுல் வெட்ஸ் சஹானா’ என்ற ஜிகினாவில் மின்னிய எழுத்துக்களை மனமகிழ்வுடன் பார்த்தபடி அந்த மண்டபத்தினுள் அடியெடுத்து வைத்தனர்.

சுகன்யா மண்டபத்தின் பிரம்மாண்டத்தை வியந்தபடி “துளசி மண்டபமே ஒரு ஊர் அளவுக்கு இருக்குடி… டெகரேசன்லாம் சூப்பரா இருக்குல்ல..” என்று சொல்லிக்கொண்டு வர அவர்களைத் தூரத்திலேயே பார்த்துவிட்டக் கிருஷ்ணா வேகமாக மணமேடையில் நின்ற தந்தையிடமும் சித்தப்பாவிடமும் சொல்லிவிட்டு அவர்களை அழைக்கக் கீழே சென்றான்.

துளசியும் சுகன்யாவும் கிட்டத்தட்ட ஹாலின் நடுப்பகுதிக்கு வருகையில் கிருஷ்ணா அவர்களை மலர்ந்த முகத்துடன் வரவேற்றான். பெண்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் நின்றாலும் மீனா அவரது வெள்ளந்தியானச் சிரிப்புடன் வணக்கம் கூறவே கிருஷ்ணா “வாங்கம்மா…” என்று வாய் நிறைய அழைத்தான்.

துளசி அரக்குநிறத்தில் அடர்பச்சை பார்டர் வைத்தப் பட்டுப்புடவையில் எளிய அணிகலன்களுடன், எப்போதும் போல கூந்தலை விரித்துவிடாமல் கொண்டையிட்டு மல்லிகையைச் சூடியிருக்க, கிருஷ்ணா தன் மனதில் உறைந்தவளின் இந்த அழகிய தோற்றத்தில் ஒரு கணம் மூச்சுவிட மறந்தவன் பின்னர் சுதாரித்தான்.

அதே நேரம் மித்ரா “அங்கிள்” என்றபடி அவன் கரங்களைப் பிடித்துக்கொள்ள, எப்போதும் போல அன்றும் துளசியால் மித்ராவைத் தடுக்க இயலவில்லை.

கிருஷ்ணா புன்னகையுடன் மித்ராவைத் தூக்கிக் கொண்டவன் துளசியிடம் “நீங்க மூனு பேரும் மணமேடைக்கு வருவிங்களாம்… சஹானாவோட ஆர்டர் இது” என்று சொல்லிவிட்டு முதல்முறையாகப் புடவையில் நிற்கும் துளசியை கண்ணில் படம்பிடித்து அதை மனதில் நிரப்பிக் கொண்டபடி மணமேடையை நோக்கிச் சென்றான்.

புன்னகையுடன் மகளைத் தூக்கிக்கொண்டு மணமேடை நோக்கி வருபவனை மேடையிலிருந்து பார்த்தன இரண்டு ஜோடிக் கண்கள். வேறு யாராக இருக்க முடியும், சஹானாவும் ராகுலும் தான்.

அவன் மேடையேறியதும் துளசி திகைத்து நிற்க, மேடையில் மணக்கோலத்தில் ராகுலுடன் அமர்ந்திருந்த சஹானா இருவரையும் கை காட்டி மேடைக்கு வருமாறு சைகை செய்ய, சுகன்யா “துளசி இவ்ளோ தூரம் சொன்னதுக்கு அப்புறமும் நம்ம போகலைனா நல்லா இருக்காதுடி” என்று துளசியின் காதில் மெதுவாக முணுமுணுக்க, அதற்கு மேல் தாமதிக்க விரும்பாமல் சுகன்யாவுடனும் மீனாவுடனும் மேடையேறினாள் துளசி.

மேடையேறியவளைக் கிருஷ்ணாவின் அருகில் நிற்கச் சொன்னார் ராகுலின் தாயார் உமா. அவனது சித்தி மகேஷ்வரி அவளைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு ஐயர் எதுவோ கேட்கவும் கீழே இறங்கிச் சென்றார்.

துளசி மேடையேறி கிருஷ்ணாவுக்கு அடுத்து நின்று கொள்ளவும் அதைக் கீழே உள்ள நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் ஒருவன் தாங்க இயலாத கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அகிலேஷ் சக்கரவர்த்தி. அவனுக்கு அடுத்து அமர்ந்திருந்த அவனது தந்தை விமலாதித்த சக்கரவர்த்தி சாதாரண முகத்துடன் திருமண நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருக்க, அவரது மைந்தன் மட்டும் மனக்குமுறலுடன் மேடையில் முகமெல்லாம் விகசிக்க நின்ற கிருஷ்ணாவைக் கண்டு வெம்பிக் கொண்டிருந்தான்.

அதே நேரம் மணமேடையில் நின்று மகளின் திருமணச்சடங்குகளை கண்ணாறப் பார்த்துக் கொண்டிருந்த ராகவேந்திரன் முன்வரிசையில் அமர்ந்திருந்த முக்கியமான நபர்களிடம் கிருஷ்ணா, துளசி மற்றும் மித்ராவைக் காட்டி ஏதோ சொல்ல, அவர்கள் மனம் சந்தோசத்தில் நிறைந்ததற்கு அறிகுறியாய் அவர்கள் கண்களில் இலேசான கண்ணீர்த்துளிகள் எட்டிப்பார்த்தது.

அந்த முக்கியமானவர்கள் வேறு யாருமில்லை… ராகவேந்திரன் மற்றும் விஜயேந்திரனின் தாயார் ரங்கநாயகியும், அத்தை சுபத்ராவும் தான். பொள்ளாச்சியிலிருந்து பேத்தியின் திருமணத்துக்காக வந்தவர்களின் செவியில் ராகவேந்திரன் கூறிய மற்றொரு இனியச் செய்தி கூடுதல் சந்தோசத்தைக் கொடுக்க, ஜம்மென்று பேத்தியின் திருமணவைபத்திற்காக வெண்பட்டில் தயாராயினர் அம்மூதாட்டிகள் இருவரும்.

பேத்தி தங்கச்சிலையென மணமேடைக்கு வந்து அமரும் போது அடைந்த அதே சந்தோசம் தற்போது கிருஷ்ணாவின் கையில் மித்ராவைப் பார்க்கும் போதும் எழுந்தது. எளிமையான அதே சமயம் கம்பீரமான தோற்றத்துடன் அவன் அருகில் நின்ற துளசியும் அவர்கள் மனநிறைவுக்கு முக்கியக் காரணி.

ராகவேந்திரன் கண்ணீரை நாசூக்காகத் துடைத்துக் கொள்ள, அவரருகில் நின்ற ராகுலில் தந்தை சந்திரசேகர் “ராகவா எல்லாம் நல்லபடியா முடியணும்டா… அப்போ தான் நம்ம முழுசா சந்தோசப்பட முடியும்” என்று கூறவும் அவரது தம்பியும் விஷ்வாவின் தந்தையுமான தியாகராஜனும் அதையே கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.

இவ்வாறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையுடன் இருக்க, நல்லதொரு சுபமுகூர்த்த வேளையில் நாதஸ்வரம் முழங்க ராகுல் சஹானாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

அவன் கட்டியத் திருமாங்கல்யத்தைக் கழுத்தில் தாங்கிய அந்நொடி, சஹானாவுக்கு உள்ளுக்குள் புல்லரித்தது. இந்த நாளெல்லாம் என் வாழ்வில் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று எண்ணியிருந்தவளுக்கு அது சாத்தியமே என்று உணர்த்தியது அவள் கழுத்தில் மின்னிய மாங்கல்யம்.

கண்கள் பனிக்க தன்னருகில் புன்னகை முகமாய் இருப்பவனைக் கண்டவள், அவன் என்னவென்று வினவவும் ஒன்றுமில்லை என்று தலையாட்டி மறுத்தாள். ராகுல் தன் மனையாளின் காதில்

“நூடுல்ஸ்! இப்போ நியாயப்படி என்னோட கண்ணு தான் கலங்கணும்.. நானே தைரியமா இருக்கேன்…” என்று கூறவும் சஹானா அவன் கூறிய வார்த்தையில் திகைத்தவள் அவன் கையில் நறுக்கென்று கிள்ளி வைக்க ராகுலால் வாய் விட்டுக் கத்த முடியாத நிலை.

அதைக் கண்டு சஹானா நமட்டுச்சிரிப்புடன் குனிந்து கொள்ள ராகுல் அவள் காதில் “ராட்சசி முதல் வேலையா உன்னோட நகத்தை வெட்டணும்” என்று அவள் காதில் பொய்க்கோபத்துடன் முணுமுணுத்தான், மனதுக்குள் அவள் இவ்வளவு சாதாரணமாக இருப்பதே தனக்குப் போதும் என்று எண்ணி மகிழ்ந்தவனாய்.

இந்தக் காட்சியைக் கண்டு மனம் நிறைந்து போய் நின்றனர் சாரதாவும் விஜயேந்திரனும். மகள் அனுபவித்த வேதனையை எல்லாம் பார்த்துவிட்டு கடவுள் அவளுக்காக அனுப்பிவைத்த ரட்சகன் தான் ராகுல் என்று எண்ணியவர்கள் இருவரும் ஒரு குறையுமின்றி வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டனர்.

அதே சமயம் ராகவேந்திரனும் இவ்வளவு நாட்கள் சஹானாவின் எதிர்காலத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவர் இப்போது அளவற்ற ஆனந்தத்துடன் அருகில் நின்ற கிருஷ்ணாவை தோளோடு அணைத்துக் கொள்ள, இத்தனை நாட்கள் விலகியிருந்த தந்தையின் தோளணைப்பில் கிருஷ்ணா சொல்லவொண்ணா ஆனந்தத்தில் திளைத்தான்.

ஏற்கெனவே துளசியும் மித்ராவும் உடனிருக்கும் மகிழ்ச்சியில் பூரித்திருந்தவன் இப்போது தங்கையின் வாழ்வு சரியாகி, தந்தையும் அவனை மனதாற ஏற்றுக்கொள்ளவே மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டான்.

துளசி எப்போதுமே சஹானாவின் ஆளுமைத்திறனைக் கண்டு வியப்பவள் இன்றைக்கு அவள் வெட்கத்தில் முகம் சிவக்கும் அழகைச் சுகன்யாவிடம் சுட்டிக்காட்டிவிட்டு தங்களை நோக்கித் திரும்பிய சஹானாவுக்கு கட்டைவிரலை உயர்த்திக் காட்ட, சஹானா இருவருக்கும் ஒரு பறக்கும் முத்தத்தை அளித்து ராகுலுக்குப் பொறாமையை ஏற்படுத்தினாள்.

பெரியவர்கள் தூவிய அட்சதையோடு அவர்கள் வாழ்த்தையும் ஏற்றுக்கொண்ட மணமக்கள் அக்னியை வலம் வர எழுந்தனர். அதன் பின் மற்றச் சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற கிருஷ்ணா மித்ராவைத் தனது பாட்டிகளிடம் தூக்கிச் சென்றான்.

துளசி சாரதாவிடம் பேசிக்கொண்டிருந்தவள் அவரது பேச்சில் ஏதோ வித்தியாசம் தொனிக்கவே அதைக் கண்டுகொள்ளாமல் அவரிடம் பேச்சைத் தொடர்ந்தாள். சுகன்யா அடர்நீலத்தில் அரக்குநிற பார்டரில் மின்னிய பட்டுப்புடவையில் தனது நீண்டப்பின்னலில் மல்லிகை சூடி அதை முன்னே தூக்கிப் போட்டபடி தாயாருடன் சேர்ந்து அந்த மண்டபத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

கிருஷ்ணா மகளைப் பாட்டிகளிடம் அறிமுகப்படுத்தி வைத்தவன் சித்தியிடம் சிரித்தமுகத்துடன் பேசிக்கொண்டிருக்கும் துளசியை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருக்க அவன் தோளில் பதிந்தது ஒரு கை.

யாரென்று திரும்பிப் பார்க்கையில் அங்கே நின்று கொண்டிருந்தார் ராகவேந்திரன்.

கிருஷ்ணா “டாட்…. நீங்களா?” என்று தடுமாற

அவர் பொறுமையாக “எப்போ எல்லார் முன்னாடியும் துளசியையும் மித்ராவையும் அறிமுகப்படுத்தப் போற கிருஷ்ணா? இன்னும் எவ்ளோ நேரத்துக்கு என் மருமகளும், பேத்தியும் யாரோ மாதிரி இந்த கல்யாண மண்டபத்துல இருக்கணும்?” என்று கேட்கவே அவரது பேச்சு அந்த பெரிய பெண்மணிகள் இருவரது காதிலும் விழுந்தது.

கிருஷ்ணா அழுத்தமானக் குரலில் “ஈவினிங் ரிசப்சன்ல துளசியையும் மித்ராவையும் அறிமுகப்படுத்திடுவேன் டாட்” என்று கூற மகனது தோளில் தட்டிவிட்டு நகர்ந்தார் அவர்.

அவர் நகரவும் கிருஷ்ணாவின் அருகே வந்த விஷ்வா “நானும் கவனிச்சிட்டே தான் இருக்கேன்… அங்கிள்ஸ், பாட்டிஸ், ஆன்ட்டி எல்லாரோட நடத்தையும் புதிரா இருக்கு… இவ்வளவு ஏன் நம்ம நூடுல்ஸ் கூட வித்தியாசமா நடந்துக்கிறா… என்னடா நடக்குது இங்கே?” என்று விளங்காமல் கேட்க கிருஷ்ணா மித்ராவுக்கு தங்கச்செயினைக் கொடுத்த நிகழ்விலிருந்து விளக்க ஆரம்பித்தான்.

**************

அன்று துளசி தோழியுடனும் மகளுடனும் கிளம்பும் தருவாயில் கிருஷ்ணா மித்ராவுக்குச் செயினைப் போட்டுவிட்டு வழியனுப்பிவிட்டுத் திரும்ப, அவன் செயின் போட்டது, துளசியிடம் சங்கேதமாகப் பேசியது அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்துவிட்டார் ராகவேந்திரன்.

அதைப் பார்த்தவருக்குத் துளசியையும் மித்ராவையும் குறித்து தான் போட்டக் கணக்கு தப்பாகவில்லை என்பது புரிந்தது. மகனிடம் இது குறித்து உடனடியாகப் பேசவேண்டும் என்று எண்ணியவர் நேரே அவனது அறைக்கே சென்றுவிட்டார்.

கிருஷ்ணா மகளுடன் நேரம் செலவளித்தச் சந்தோசத்தில் ஏதோ சினிமா பாடலை விசிலடித்துக் கொண்டிருக்க “சார் ரொம்ப சந்தோசமா இருக்கிங்க போல” என்றபடி அவன் அறைக்குள் நுழைந்தார் ராகவேந்திரன்.

அவரைக் கண்டதும் சோபாவில் சாய்ந்திருந்தவன் எழுந்து நிற்கவும், அவனை அமருமாறு சைகை காட்டிவிட்டு அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தார் ராகவேந்திரன்.

மெதுவாகத் தொண்டையைச் செருமிக் கொண்ட கிருஷ்ணா “டாட் எனி திங் இம்ப்பார்டென்ட்? நீங்களே என்னைத் தேடி வந்திருக்கிங்களே?” என்று கேட்க அவர் பொருள்விளங்காப் பார்வையுடன் கிருஷ்ணாவைப் பார்த்துவிட்டுச் சுற்றி வளைக்காமல் தான் வந்த விஷயத்தை நேரடியாக ஆரம்பித்தார்.

“உனக்கு துளசியையும் மித்ராவையும் எத்தனை நாளா தெரியும்?”

கிருஷ்ணா திடீரென்று அவர் அவ்வாறு கேட்பார் என்று எதிர்பார்க்காததால் திகைத்துப் போய் நிற்க ராகவேந்திரன் பேச்சைத் தொடர்ந்தார்.

“உனக்கும் துளசிக்கும் என்ன சம்பந்தம்? ஏன் மித்ராவை உனக்கு அவ்ளோ பிடிக்குது? என் கேள்வி அத்தனைக்கும் ஒளிவு மறைவில்லாம பதில் சொல்லு கிரிஷ்….நீயே மறைச்சாலும் நான் கண்டுபிடிச்சுடுவேன், ஆறு வருசத்துக்கு முன்னாடி கண்டுபிடிச்ச மாதிரி” என்று கோடிட்டுக் காட்டவே கிருஷ்ணா மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தான்.

“டாட்! துளசி நான் ஆறு வருசத்துக்கு முன்னாடி காதலிச்சப் பொண்ணு… எனக்கும் அவளுக்கும் நடந்த ஒரு பிரச்சனையில நாங்க பிரிஞ்சிட்டோம். அவளும் நானும் போட்டுக்கிட்ட சவால் படி, நானோ அவளோ ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க டிரை பண்ணலை… ஆனா மித்ராவோட ப்ரோகிராமுக்காகத் துளசி கோயம்புத்தூர் வந்து, நம்ம ஸ்கூல்ல என் கண்ணுல பட்டுட்டா… நான் சவால்ல ஜெயிச்சுட்டேன் டாட்…. அந்த நிமிசமே எங்களோட சவால், போட்டி எல்லாமே முடிவுக்கு வந்துடுச்சு. ஆனா துளசி என் கூட வாழ மாட்டேனு பிடிவாதமா இருக்கா”

இவ்வாறு சொல்லிவிட்டு நிற்பவனை ஏமாற்றத்துடன் பார்த்தார் ராகவேந்திரன்.

கிருஷ்ணா தந்தையின் அந்தப் பார்வை கொடுத்த வலியைப் பொறுக்க இயலாதவனாய் “ப்ளீஸ் டாட்! அப்பிடி பார்க்காதிங்க… எனக்கும் துளசிக்கும் நடந்த பிரச்சனையால மித்ரா பிறந்த விஷயம் கூட எனக்குத் தெரியாது டாட்… நான் மித்ராவைப் பார்த்ததே நம்ம ஸ்கூல்ல தான்” என்று குற்றவுணர்ச்சியுடன் கூறி முடித்தான்.

ராகவேந்திரன் தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட அவர் அருகில் சென்று அமர்ந்த கிருஷ்ணா அவரது கரங்களைப் பற்றிக் கொண்டான்.

“பிளீவ் மீ டாட்! நான் துளசியையும் மித்ராவையும் இந்த வீட்டுக்குச் சகல உரிமையோடவும் அழைச்சுட்டு வருவேன்… என்னை நம்புங்க டாட்” என்று கூற

ராகவேந்திரன் முகத்தில் எவ்வித உணர்ச்சியையும் காட்டாது மகனின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு

“உன்னோட அம்மாவும் நானும் உன்னை எப்பிடி எப்பிடியோ வளர்க்கணும்னு ஆசைப்பட்டோம்டா… ஆசையெல்லாமே அந்தரத்துல நிக்கிற நேரம் உங்க அம்மா என்னைத் தனியா விட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டா…. தாய்ப்பாசத்துக்கு நீ ஏங்கிடக்கூடாதேனு தான் சாரும்மா கூட உன்னை யூ.எஸ் அனுப்பி வைச்சேன்…. ஆனா என் கிருஷ்ணா இப்பிடி ஆளே மாறிப்போவானு தெரிஞ்சிருந்தா நான் உன்னை அனுப்பியிருக்கவே மாட்டேன்டா” என்றவரின் ஆதங்கத்துக்கு என்ன பதில் அளிப்பான் அவர் பெற்ற திருமகன்?

அவரது கேள்வி சாட்டையாய் அவனைத் தாக்க கிருஷ்ணாவால் தலையை மட்டுமே குனிந்துகொள்ள முடிந்தது.

ராகவேந்திரன் மூக்குக்கண்ணாடியைக் கழற்றி கண்ணை அழுத்திக் கொண்டவர் தெளிவானக் குரலில் “உன்னைக் குத்தம் சொல்லி ஒரு பலனும் இல்லை கிருஷ்ணா… ஒரு தகப்பனா மகனோட நடவடிக்கையை நான் கண்காணிக்காம விட்டது தான் இப்போ இவ்ளோ பெரிய சங்கடத்துக்குக் காரணம்…” என்று கூறிவிட்டு நிறுத்தியவர்

“இவ்ளோ நாள் நீ உன் இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டுட்ட… இனிமே அது நடக்காது. நீ என்ன செய்வியோ எனக்குத் தெரியாது, என் மருமகளும் பேத்தியும் இங்கே வந்தாகணும்.. என் குடும்ப வாரிசும் இந்த வீட்டு மருமகளும் யாரோ மாதிரி இங்கே வந்துட்டுப் போறதும் இனிமே நடக்கக் கூடாது” என்று அவனுக்குக் கிட்டத்தட்டக் கட்டளையிடும் குரலில் உரைத்துவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார்.

வெளியே சென்றவரைத் தொடர்ந்த கிருஷ்ணா அவர் சென்ற திசைக்கு எதிர் திசையில் திரைச்சீலைக்குப் பின்னே கண்ணில் நீர் வடிய நின்று கொண்டிருந்த சஹானாவைக் கண்டுவிட்டான்.

பதறிப் போய் அவளிடம் சென்றவன் கண்ணீரைத் துடைத்துவிட, சஹானா “இவ்ளோ நடந்திருக்கு… நீ என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே கிரிஷ்!” என்று ஆதங்கப்பட, கிருஷ்ணாவால் அதைக் கேட்டு பெருமூச்சு மட்டுமே விடமுடிந்தது.

சஹானாவின் கண்ணில் மீண்டும் நீர் திரள “எல்லாத்துக்கும் நான் தான் காரணம்… இன்னைக்கு நீ காரணமே இல்லாம பெரியப்பா கிட்டத் திட்டு வாங்குறதுக்கும் நான் தான் காரணம்… ஆறு வருசத்துக்கு முன்னாடி நீயும் துளசியும் பிரிஞ்சதுக்கும் நான் தான் காரணம்… நான் பிறந்திருக்கவே கூடாதுடா” என்றபடி அழத் துவங்க, கிருஷ்ணா தங்கையை அணைத்துக் கொண்டான்.

“ப்ச்… என்ன இது சஹாம்மா? இப்பிடி அழுறது உனக்குக் கொஞ்சம் கூட ஸூட் ஆகலையே! ஆபிஸ்ல எல்லாரையும் ஒரு பார்வையில ஆட்டி வைக்கிற சஹானா விஜயேந்திரனா இது? அழாதேடா… இதுல உன்னோட தப்பு எதுவும் இல்லை…

துளசியும் நானும் பிரிஞ்சதுக்கு எங்களோட தலையெழுத்து தான் காரணம்… நீ தேவையில்லாம கல்யாணநேரத்துல இப்பிடி அசடு மாதிரி கண்ணைக் கசக்காதே… நான் தான் இருக்கேன்ல, நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்…” என்று சொல்லவும் இவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் நம்பிக்கையுடன் தமையனின் முகத்தை நோக்கினாள்.

“அப்போ துளசியையும் மித்ராவையும் நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வாடா கிரிஷ்… அவங்க வந்தா தான், நான் ராகுலோட எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம வாழ முடியும்.. இல்லைனா என்னால ஒரு பொண்ணு தன்னோட வாழ்க்கையை இழந்துட்டாங்கிற நினைப்பே என்னைக் கொன்னுடும் கிரிஷ்… ப்ளீஸ்டா” என்று வேண்டினாள்.

கிருஷ்ணா தங்கையின் கூந்தலை வருடிக்கொடுத்தவன் “சஹாம்மா நீ சொல்லுறபடி உன் கல்யாணம் முடிஞ்ச கையோட துளசியும் மித்ராவும் நம்ம வீட்டுக்கு வருவாங்க… நான் அழைச்சுட்டு வருவேன்.. நீ என்னை நம்புறல்ல?” என்று கேட்க அவள் ஆமென்று தலையாட்டினாள்.

அதன் பின் அவளைச் சமாதானம் செய்து அனுப்பியவன் ராகுலிடம் கலந்தாலோசித்துவிட்டு எப்படி தன் மகள் மற்றும் துளசியைத் தங்கள் வீட்டுக்கு அழைப்பது என்ற யோசனையில் ஆழத் துவங்கினான்.

ஆனால் அதற்கு சஹானாவே ஒரு வழியைக் காட்டிவிட அவள் சொன்ன வழி தான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்தவன், அதைச் செயல்படுத்துவதற்காகச் சஹானாவின் வரவேற்பு நிகழ்ச்சியைத் தேர்வு செய்திருந்தான்.

எப்படியும் துளசி மித்ராவை அழைத்துக்கொண்டு திருமணத்துக்கு வருவாள் தான்… அப்படி வருபவளைத் தனது மனைவியாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் சமயத்துக்காகக் காத்திருந்தான் கிருஷ்ணா. திருமணத்தில் அவன் எவ்வித அறிவிப்பும் கொடுக்காவிட்டாலும் மகளைக் கையில் தூக்கிக்கொண்டே அலைந்ததில் மறைமுகமாக அனைவரது மனதிலும் இது குறித்த கேள்வியை எழும்பச் செய்திருந்தான் அவன்.

இவையனைத்தையும் விஷ்வாவிடம் விளக்கிவிட்டு “இன்னைக்கு ரிசப்சன்ல துளசிக்கு ஒரு ஷாக் வச்சிருக்கேன்டா விஷ்வா…” என்று உரைக்க விஷ்வாவோடு சேர்ந்து அவனது பேச்சில் ஒரு காதைப் பதித்திருந்த அவனது பாட்டிகளும் இவன் கொடுக்கப் போகிற அதிர்ச்சி என்னவாக இருக்கும் என்று மாலைப்பொழுதுக்காக அப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்தனர்.

துளசியும் கிருஷ்ணாவின் உறவினர்களின் குறுகுறு பார்வையில் சங்கடப்பட்டவள் பாட்டிகளிடம் மித்ராவைக் கொடுத்துவிட்டு விஷ்வாவையும் துணைக்கு வைத்துக் கொண்டு மகளுடன் சேர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தக் கிருஷ்ணாவிடம் வந்து நின்றாள்.

பாட்டிகளின் ஆர்வமானப் பார்வையைச் சங்கடத்துடன் தவிர்த்தவள் மித்ராவைத் தன்னிடம் தருமாறு பல்லைக் கடித்துக் கொண்டு மெதுவாக அவனது காதில் முணுமுணுக்க அவனோ

“இப்போ என் கிட்ட இருந்து நீ மித்ராவைப் பிரிச்சிடுவ… பட் இனிமே அவ என் கூடத் தான் ட்வென்டி ஃபோர் ஹவர்ஸும் இருக்கப் போறா… அப்போ எப்பிடி பிரிப்ப துளசி?” என்று பூடகமாக உரைத்துக் கண்சிமிட்டிவிட்டுச் சொல்ல

“இவன் கண்ணைப் பிடுங்கிக் காக்காக்குப் போடணும்… ஆ ஊனா கண் அடிக்கிறான் ராஸ்கல்” என்று ஒரு புறம் கடுகடுத்தாலும், அவனது பேச்சின் மறைபொருள் புரியாது குழம்பித் தவித்தபடி நின்றாள் துளசி.

அவள் இப்படியே குழம்பட்டும் என்று கேலியாக எண்ணியபடி, அரட்டையை விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய கிருஷ்ணா, விஷ்வாவைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டு மகளுடனும், பாட்டிகளுடனும் மீண்டும் வளவளக்க ஆரம்பித்தான்.

தொடரும்💗💗💗