💗அத்தியாயம் 8💗

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

துளசி கொண்டு போன டிசைன்களில் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யச் சொன்ன ராகுலின் உறவுக்காரப் பெண்கள் அதை சுகன்யா உடனே லேப்டாப்பில் ஆடையாக வடிவமைத்துக் காட்டியதில் மகிழ்ந்து போயினர்.

அவர்களுடன் வந்த வயதில் மூத்தப் பெண்மணி ஒருவர் வாய் விட்டே புகழ்ந்து தள்ளினார்.

“இந்தச் சின்னவயசுல இவ்ளோ திறமையா? திறமை மட்டுமில்லாம, தொழில்பக்தி, எதையும் அழகா செய்யுற நேர்த்தினு நீங்க ரெண்டு பேரும் எல்லாத்திலயும் பெஸ்ட் தான்மா… நான் கூட ஃபேஷன் டிசைனர்னா ஏதோ காமாசோமானு நல்லா இருக்கிற டிரஸ்ஸை அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் வெட்டிவிட்டு இது தான் நியூ டிரெண்ட்னு சொல்லுவாங்கனு நினைச்சேன்… ஐ அம் ரியலி இம்ப்ரெஸ்ட்” என்று மனதாறப் பாராட்டினார்.

தூரத்தில் மகளுடன் விளையாடிக் கொண்டே அவர்களின் பேச்சில் ஒரு காதைப் பதித்திருந்த கிருஷ்ணாவின் செவியில் துளசியை மற்றவர்கள் பாராட்டுவது காதில் தேனைப் பாய்ச்சுவது போல விழவே மனதுக்குள் அவள் சார்பில் அவனும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கத் தொடங்கினான்.

ஒரு புறம் தொழில்முறைப்பேச்சுகளும், மறுபுறம் அண்ணனும் தங்கையும் சேர்ந்து மித்ராவுடன் அடித்த லூட்டிகளுமாக அந்த ஆர்.கே பவனத்தில் அன்றைய தினத்தில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை.

சிறிதுநேரத்தில் வெளியே சென்று வீடு திரும்பிய ராகவேந்திரனும், விஜயேந்திரனும் வீட்டின் கலகலப்பில் ஈர்க்கப்பட்டவர்கள் ஆர்வத்துடன் வீட்டினுள் நுழைய அவர்களை வரவேற்றது மித்ராவின் “எங்க அம்மு சாதாரண மாம் இல்லை… அவங்க வொண்டர் மாம்” என்று கண்ணை விரித்துச் சொன்ன காட்சி தான்.

கிருஷ்ணாவும் சஹானாவும் அவளைத் தூக்கிக்கொண்டுச் சென்றவர்கள் வாயிலின் அருகே தோட்டத்தைப் பார்த்திருக்கும் பிரெஞ்ச் விண்டோவின் அருகே போடப்பட்டிருக்கும் குஷன் இருக்கையில் அவளை அமர்த்திவிட்டு அவள் பேசும் அழகைப் பார்த்து சிரித்தபடி ரசித்துக் கொண்டிருந்தனர்.

ராகவேந்திரன் பொம்மை போல குண்டுக்கன்னங்களுடன் நேர்த்தியாக அதே சமயம் இலகுவான உடையுடன் அழகான சின்னத் தேவதையாக தங்களது வீட்டில் நிற்கும் இச்சிறுமியைப் பார்த்ததும் ஏனோ சஹானா இளையவயதில் இருப்பதைப் போன்று தோன்றியது.

அதே முகவெட்டு, அதே கிண்கிணிக்குரல்… ஆனால் சஹானாவின் சுருட்டை முடி மட்டும் மிஸ்ஸிங். அதே நேரம் “உனக்கு மட்டும் ஏன் ராகவா இப்பிடி அசட்டுத்தனமா தோணுது? இந்தக் குட்டிப்பொண்ணு எப்பிடி நம்ம சஹானா மாதிரி இருப்பா” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாலும் சஹானா அப்படியே சாவித்திரி மற்றும் சாரதாவின் அச்சடித்தப் பிம்பம் தான்.

ஆனால் சஹானாவுக்கு சாவித்திரி மற்றும் சாரதாவுடன் இரத்தச்சம்பந்தம் உள்ளது. இக்குழந்தைக்கு அப்படி எந்தச் சம்பந்தமும் இல்லாத போது தன் தம்பி மகளின் சாயல் எப்படி இவளின் முகத்தில்? என்று சிந்தித்தவாறே வீட்டுக்குள் விஜயேந்திரனுடன் அடியெடுத்து வைத்தார் அவர்.

அவர்களைக் கண்டதும் மிரட்சியுடன் பார்த்த மித்ராவை “ஏய் வாயாடி! இவ்ளோ நேரம் நான்-ஸ்டாப்பா பேசிட்டிருந்த.. இப்போ என்னாச்சு?” என்று சஹானா கேலி செய்யவே

கிருஷ்ணா மித்ராவைத் தன் புறம் இழுத்து அணைத்தபடி “மித்திக்கு புது ஆளுங்களைப் பார்த்து பயம் வந்துடுச்சு… அப்பிடி தானே பிரின்சஸ்?” என்று கேட்க

மித்ரா அவன் உதட்டில் கைவைத்து “மூச்! சத்தமா சொல்லாதிங்க அங்கிள்… அப்புறம் அந்தத் தாத்தா என்னைப் பயந்தாங்கொள்ளி கேர்ள்னு நினைச்சுடுவாங்க” என்று அவன் காதில் இரகசியம் பேசவே, கிருஷ்ணா தனது ஆட்காட்டிவிரலை உதட்டில் வைத்துக்கொண்டு இனி பேசவில்லை என்று சைகையால் தெரிவிக்க அவனது மகள் அவனைக் கண்டு கண் சிமிட்டினாள்.

சஹானா இந்த நாடகத்தைச் சிரித்தமுகமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தவள் ராகவேந்திரனிடம் “பெரியப்பா! இவ மித்ரா! நம்ம டிசைனர் மேமோட பொண்ணு” என்று அவளை அறிமுகப்படுத்தி வைக்க ராகவேந்திரனும், விஜயேந்திரனும் மலர்ந்த முகத்துடன் சிரிக்க மித்ரா முன்பு போல மிரளாமல் அவர்கள் இருவருக்கும் புன்சிரிப்பைப் பரிசாக அளித்தாள்.

விஜயேந்திரனுக்கும் அவளது சிரிப்பு சஹானாவின் இளம்பிராயத் தோற்றத்தை நினைவுறுத்த அவரது நெற்றியிலும் சிந்தனைக்கோடுகள். இருவரும் யோசனையுடன் ஹாலுக்குச் செல்ல அவரைக் கண்டதும் துளசியும், சுகன்யாவும் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்க விஜயேந்திரன் “அட என்னம்மா நீங்க எங்களைப் பார்க்கிறப்போலாம் இப்பிடி எழுந்திருச்சு நின்னா எங்களுக்கு வயசான ஃபீல் வராதா?” என்று கேலியாகப் பேச இரு பெண்களும் சிரித்தபடி அமர்ந்தனர்.

சாரதாவும் அந்தப் பெண்களுடன் சேர்ந்து துளசியும், சுகன்யாவும் வைத்திருந்த டிசைன்கள் அடங்கிய கோப்புகளை ரசனையுடன் புரட்டிக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணா ராகுலுக்குப் போன் செய்தவன் தனது மகள் இப்போது தன்னுடன் இருக்கும் செய்தியைப் பகிர்ந்து கொண்டு, அவனையும் விஷ்வாவையும் வீட்டுக்கு வருமாறு கூறினான். ஏன் என்று கேட்டவர்களிடம் வீட்டுக்கு வந்ததும் கூறுகிறேன் என்று சொல்லிவிட அவர்கள் இன்னும் அரைமணிநேரத்தில் அங்கிருப்போம் என்ற செய்தியுடன் போனை வைத்தனர்.

அரைமணி நேரத்தில் கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தியவர்கள் படிக்கட்டுகள் வழியே மேலேறும் அதே சமயத்தில் துளசிக்குப் பொட்டிக்கிலிருந்து போன் வரவே அவள் சுகன்யாவைப் பேசுமாறு அனுப்பிவைத்தாள்.

சுகன்யாவும் என்ன விஷயமென்று விசாரிக்க போனில் பேசிய பிருந்தா அவர்களின் முக்கியமான கிளையண்ட் ஒருவர் அவருக்கு வடிவமைத்த உடை பற்றி சில சந்தேகங்களைக் கேட்பதாகக் கூறியவள், அது குறித்த விவரங்கள் எல்லாமே துளசியிடமுள்ள லேப்டாப்பில் தான் உள்ளது என்று கூறவே சுகன்யா விறுவிறுவென்று உள்ளே சென்று துளசியை அவள் லேப்டாப்போடு வெளியே தோட்டத்துக்கு அழைத்து வந்தாள்.

துளசி லேப்டாப்பைப் பார்த்து அந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்க சுகன்யா அதைப் போனில் பிருந்தாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்நேரம் பார்த்து மித்ரா “அம்மு” என்று அழைக்கவே துளசி லேப்டாப்பை அங்கே உள்ள திண்டில் வைத்துவிட்டு என்னவோ ஏதோவென்று உள்ளே செல்ல அதே நேரத்தில் ராகுலும், விஷ்வாவும் வீட்டினுள் செல்ல ஆரம்பித்தனர்.

யாரோ ஒரு பெண் லேப்டாப்பைத் திண்டில் வைத்துவிட்டு வீட்டினுள் சென்றதைக் கவனித்தவர்கள், அவளுடன் நின்ற மற்றொருத்தி அவள் சென்றதை அறியாது போனில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தபடி வீட்டினுள் நுழைந்தனர்.

சுகன்யா போனில் பேசிக்கொண்டிருந்தவள் துளசியிடம் பதிலில்லாது போன பதற்றத்திலும், கிளையண்ட் கையை விட்டுப்போய்விடக் கூடாதே என்ற டென்சனிலும் “அந்த லேப்டாப்பைக் குடுடி” என்று கத்த அது ராகுலைத் தொடர்ந்து வீட்டினுள் செல்ல முயன்ற விஷ்வானின் காதில் விழுந்தது.

“இந்த மகாராணிக்கு அவ உள்ளே போன விஷயமே தெரியாது போல” என்ற கேலியாக எண்ணியபடி அங்கே திரும்பி நின்று பேசிக்கொண்டிருந்தவளிடம் துளசி உள்ளே போய்விட்டாள் என்பதைச் சொல்ல வர அதற்குள் சுகன்யா “லேப்டாப்ல நான் சொல்லுறதை டைப் பண்ணுடி” என்று அவசரமாகக் கூற

விஷ்வாவுக்கு அவளின் பக்கவாட்டுத் தோற்றம் மட்டும் தெரிய அதையும் பாதி அவளது விரித்தக் கூந்தல் அலங்காரம் மறைத்துவிட அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவனை உந்த அவள் சொன்னபடி லேப்டாப்பில் டைப் செய்ய ஆரம்பித்தான்.

கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் அவள் சொன்னதை வரிசை பிசகாமல் டைப் செய்துவிடவும், சுகன்யா போன் பேசிவிட்டு வைத்தாள். வைத்தவள் “துளசி நான் சொன்னதை…..” என்றபடி திரும்பியவள்

அங்கே தனது தோழிக்குப் பதிலாக ஏதோ முன் பின் அறியாத வாலிபன் ஒருவன் நிற்கவே “யாரு மேன் நீ? எங்க லேப்டாப்பை எதுக்கு கையில வச்சிருக்க? முதல்ல லேப்டாப்பைக் குடு” என்று முகத்தைச் சுருக்கியபடி லேப்டாப்பைப் பிடுங்க முயல

விஷ்வா இவ்வளவு நேரம் தான் அவள் சொன்னபடி டைப் செய்ததற்கு நன்றி கூறாமல் இப்படி எடுத்த உடனே ஏகவசனத்தில் பேசவும் எரிச்சலுற்றான்.

“ஹலோ! நீ ஏன்மா பேச மாட்ட? எதோ இந்தப் பொண்ணு எமர்ஜென்சிங்கிற லெவலுக்குக் கத்துறாளே, ஹெல்ப் பண்ணுவோமேனு நீ சொன்னதை டைப் பண்ணுனா, நீ இதுவும் பேசுவ, இதுக்கும் மேலேயும் பேசுவ.. உன்னையெல்லாம்…” என்று பல்லைக் கடித்தவன் தனது கையிலிருந்த லேப்டாப்பில் தான் டைப் செய்துவைத்திருந்த அனைத்தையும் அழித்துவிட சுகன்யா ஐயோ போச்சே என்றபடி தலையில் கைவைத்துக் கொண்டாள்.

அவளது கையைத் தலையிலிருந்து எடுத்து லேப்டாப்பை இரு கரங்களிலும் திணித்தவன் “ஓவரா வாய் பேசுனல்ல, இப்போ அனுபவி” என்று சொல்லிவிட்டு நகர, சுகன்யா எரிச்சலுடன் அந்த லேப்டாப்பை அவன் தலையில் போடச் சென்றவள் திடீரென்று தங்களின் டிசைன்கள் அனைத்துமே அதில் தான் உள்ளது என்ற நினைவு வரவே அதை மார்போடு அணைத்தபடி வீட்டுக்குள் நுழைந்தாள்.

அங்கே சஹானா, கிருஷ்ணாவுடன் பேசிக்கொண்டிருக்கும் விஷ்வாவை முறைத்தபடி துளசியிடம் வந்தவள் அவனைக் காட்டி ஏதோ சொல்ல துளசி விஷ்வாவைக் கவனித்துவிட்டாள். அவனைக் கண்டு முகம் மாறாமல் காத்த துளசி சுகன்யாவின் போனில் கால் ரெக்கார்டிங் இருப்பதால் அதைப் போட்டுக் கேட்டுக்கொள்ளலாம் என்று சொன்னபிறகு தான் சுகன்யாவுக்கு நிம்மதி.

அவர்களின் தொழில்முறைப்பேச்சுகள் ஒருவழியாக முடிவடைந்து, ராகுலின் உறவுக்காரப்பெண்கள் துளசியிடம் ஆர்டரைக் கொடுத்துவிட்டு அதற்கான முன்பணத்தையும் கொடுத்துவிட துளசியும் சுகன்யாவும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அதே சந்தோசத்துடன் அனைவரையும் மதியஉணவுக்கு அழைத்து வந்தார் சாரதா. உணவு உண்ணும் வேளையில் ராகுலை துளசிக்கு அறிமுகப்படுத்தினாள் சஹானா. துளசி சிறுபுன்னகையுடன் அவனிடம் அறிமுகமாகிக் கொண்டாள்.

விஷ்வாவையும் அவள் அறிமுகப்படுத்திவைக்க இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. அதே சமயம் கிருஷ்ணா என்பவன் மகள் தன்னுடன் இருப்பதில் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்க, துளசி ஆற்றாமையுடன் மகள் கிருஷ்ணாவுடன் கலகலப்பாகப் பழகுவதைப் பார்த்தபடியே உணவை விழுங்கினாள்.

இருவரது முகபாவத்தையும் ஒருசேரக் கவனித்தவர் ராகவேந்திரன் மட்டுமே. ஏற்கெனவே மித்ரா சஹானாவின் சாயலில் இருப்பதை யோசித்தவர், துளசியைக் கண்டபோதெல்லாம் மகனின் முகத்தில் எழும் குற்றவுணர்ச்சியையும் காணத் தவறவில்லை. ஒருவேளை ஆறு வருடத்துக்கு முன்னர் கிருஷ்ணா சொன்னப் பெண் துளசியாக இருப்பாளோ என்ற சந்தேகம் அவருள் இப்போது முளைத்துவிட்டது.

மகன் வாய் விட்டு எதையும் சொல்ல மாட்டான் என்பதால் தானே இதைக் கண்டறிய வேண்டியது தான் என்று எண்ணியவர் சாதாரணமானக் குரலில் சாரதாவிடம் “ஏன் சாரு, மித்ரா பார்க்கிறதுக்கு நம்ம சஹா சின்னக்குழந்தையில இருந்த மாதிரியே தெரியுறா தானே?” என்று போட்டு வாங்க

சாரதாவும் “நானும் யோசிச்சேன் மாமா! சஹானா அப்பிடியே எங்களை மாதிரினா மித்ரா அப்பிடியே சஹானாவை உரிச்சு வச்ச மாதிரியே இருக்கா” என்று அதற்கு பதிலளித்தபடி சாப்பிட்டார். அதைக் கேட்டு கிருஷ்ணாவின் மடியில் அமர்ந்திருந்த மித்ராவுக்கு மகிழ்ச்சியுடன் ஹைஃபை கொடுத்தாள் சஹானா.

துளசியின் முகத்தில் சாரதாவும், ராகவேந்திரனும் கூறியதைக் கேட்டு குழப்பரேகைகள் படிய ஆரம்பிக்க, கிருஷ்ணா சாப்பாட்டைச் சிரமத்துடன் விழுங்கிவைத்தான்.

இருவரையும் கவனித்தபடி இருந்த ராகவேந்திரன் “பொதுவா பெண் குழந்தைங்க அவங்களோட அத்தை சாயல்ல இருப்பாங்கனு நான் கேள்விப்பட்டிருக்கேன்… ஏம்மா துளசி உன்னோட நாத்தனார் சஹானாவோட சாயல்ல இருப்பாங்களா?” என்று கேட்க துளசி அதற்கு ஆமென்றும் கூறாமல் இல்லையென்றும் மறுக்காமல் மத்திமமாய் தலையாட்டி வைத்தாள்.

கிருஷ்ணாவோ தந்தையின் வார்த்தையில் திடுக்கிட்டவன் உணவை விழுங்கியதில் அவனுக்குச் சிரசில் அடிக்கவே அவன் அருகில் அமர்ந்திருந்த விஷ்வா தண்ணீரை அவன் புறம் நகர்த்திவிட்டு நண்பனின் முதுகில் தட்டிக்கொடுத்தபடி

“ஷாக்கைக் குறைடா! உன்னைப் பெத்த தெய்வத்துக்கு உன் மேல டவுட் வந்துடுச்சு… இதுக்கு மேலேயும் நீ டிலே பண்ணுனேனு வை, உங்க அப்பா நீ குழந்தையோட துளசியைக் கைவிட்டுட்டதா தப்பா நினைச்சுட்டு இந்த ஜென்மத்துக்கும் உன் முகத்துல முழிக்காம போயிடுவாரு” என்று மெதுவாக அவன் காதில் முணுமுணுத்தான்.

கிருஷ்ணா தண்ணீரைக் குடித்தவன் ராகுலின் முகத்தைப் பார்க்க அவனோ பொறுமை காக்குமாறு சைகையில் சொல்லிவிட்டுச் சஹானாவிடம் ஏதோ சொல்லவும் அவளது முகம் மலர்ந்தது. ராகுலிடம் சந்தோசமாகத் தலையாட்டிவிட்டு சாப்பாட்டில் கண் பதித்தாள்.

ஒரு வழியாக சில மினி கலவரங்களுடன் சாப்பாட்டுநேரம் முடிவடையவே துளசி, சுகன்யாவுடன் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டவள் தாங்கள் கிளம்புவதாகக் கூறவே சாரதா இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து மாலையில் செல்லலாமே என்று அன்பாக வேண்டினார்.

ஆனால் துளசி மீனா தனியாக இருப்பார் என்று சொல்லவே அவளது நிலையைப் புரிந்து கொண்டனர் கிருஷ்ணாவின் குடும்பத்தினர். துளசியும் சுகன்யாவும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டவர்கள் மறக்காமல் சஹானாவிடம் நன்றி தெரிவித்தனர்.

சஹானா துளசி, சுகன்யாவின் கரத்தை ஒருசேர அழுத்தமாகப் பற்றியவள் “நீங்க ரெண்டு பேரும் என்னோட கல்யாணத்துக்கு வரணும். இது என்னோட ஹம்பிள் ரெக்வெஸ்ட்.. ப்ளீஸ் வரமுடியாதுனு மட்டும் சொல்லிடாதிங்க… வாழ்க்கையில எனக்குனு ஃப்ரெண்ட்ஸ் யாருமே கிடையாது… நீங்க ரெண்டு பேரும், பேபியையும் அம்மாவையும் எங்க கல்யாணத்துக்கு அழைச்சிட்டு வரணும்… வருவிங்கல்ல?” என்று சிறுகுழந்தை போல தலையைச் சரித்துக் கேட்க

சுகன்யா “கல்யாணப்பொண்ணு சொன்னதுக்கு அப்புறம் வராம இருப்போமா? கட்டாயம் வருவோம்… நாங்களும் இந்த புடவை கட்டி, பூ வச்சு ஜோடிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு… அதை மிஸ் பண்ணுவோமா?” என்று கேலியாகச் சொல்வதைப் போல தங்களின் வருகையை உறுதிப்படுத்த, துளசியும் கட்டாயமாக வந்துவிடுகிறோமென்று சொல்லி மகளுடன் விடைபெற்றாள்.

அனைவரும் டாட்டா காட்டிவிட்டு பெருமூச்சுடன் ஹாலுக்குள் திரும்ப, துளசி மகள் மற்றும் தோழியுடன் ஹாலைக் கடந்து தோட்டத்துக்குச் சென்றுவிட்டாள்.

“துளசி வெயிட்” என்ற கிருஷ்ணாவின் குரல் கேட்கவே என்னவென்று திரும்பிப் பார்த்தவளை நோக்கி வேகமாக ஓடிவந்தவனுக்குப் பேச முடியாமல் மூச்சிரைத்தது.

துளசி அவனைக் கேலியாகப் பார்த்தபடி “இன்னும் பதினாறு வயசு பையன்னு நினைப்பு..  அதான் வயசாயிடுச்சுல்ல, ஓடுனா மூச்சு வாங்கும்னு தெரியாதா?” என்று கிண்டல் செய்து தனக்கு வயதாகி விட்டதாக அவன் கூறியதற்கு பழி தீர்த்துக் கொண்டாள்.

சுகன்யா அதைக் கேட்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்க, கிருஷ்ணா இந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் மகளிடம் குனிந்தவன் “ஏஞ்சல்! அங்கிளை மறந்துட மாட்டல்ல” என்று கேட்க மித்ரா புன்னகையுடன் மறக்க மாட்டேன் என்று கூறினாள்.

கிருஷ்ணா மகளின் கன்னத்தில் கண் கலங்க முத்தமிட்டவன் தன் கழுத்தில் கிடந்த தங்கச்செயினைக் கழற்றி அவளுக்கு அணிவித்துவிட்டு “இதை எப்போவுமே கழட்டக் கூடாது.. இது உன் கூட இருந்தா அப்…. அங்கிளே உன் கூட இருக்கிற மாதிரி” என்று கூற

மித்ராவும் அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு “நான் கழட்டவே மாட்டேன் அங்கிள்.. அம்மு சொல்லிருக்காங்க, யாராவது பாசமா நமக்கு கிப்ட் குடுத்தா அதை பத்திரமா வச்சுக்கணும்னு.. நான் இந்தச் செயினை ரொம்ப கேர்ஃபுல்லா பார்த்துப்பேன் அங்கிள்” என்று அவனுக்கு உறுதியளித்தாள்.

மகளின் பேச்சு கண்ணீரை வரவழைக்க, இவள் வளர்ந்த அழகை கண் கொண்டு காண இயலாத தனது துர்ப்பாக்கியத்தை எண்ணி அப்போதும் தன்னை நொந்து கொண்டான் கிருஷ்ணா. கலங்கிய கண்களுடன் துளசியைப் பார்த்தவன்

“அடுத்த தடவை நீ கோயம்புத்தூர் வர்றது நிரந்தரமா இந்த ஆர்.கே பவன்ல தங்குறதுக்காகத் தான் துளசி… என் பொண்ணை விட்டு இனியும் என்னால பிரிஞ்சிருக்க முடியாது… என்னையும் மித்ராவையும் பிரிக்கிறது எதுவா இருந்தாலும், அது உன்னோட பிடிவாதமா இருந்தாலும் ஐ டோன்ட் கேர்… நான் முடிவு பண்ணிட்டேன்… இனிமே மித்ரா இந்தக் கிருஷ்ணாவோட மகளா தான் வளருவா… இதை மனசுல வச்சுக்கிட்டு கிளம்பு” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வீட்டை நோக்கி நடந்தான் அவன்.

நடக்கும் போதே விழியில் துளிர்த்தக் கண்ணீரைச் சுண்டிவிட்டபடி சென்றவனின் நிலையை அங்கே அவனது செய்கையாலும் பேச்சாலும் சிலையாய் சமைந்து நின்ற துளசியால் புரிந்து கொள்ள இயலவில்லை.

தொடரும்💗💗💗