💗அத்தியாயம் 44💗
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
கோயில் திருவிழா ஒருவழியாக நல்லபடி ஆரம்பித்தது. ரங்கநாயகியும் சுபத்ராவும் இவ்வருடம் பேரனுக்கென்று ஒரு குடும்பம் அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் அம்பாளுக்கு தங்கத்தில் கண்மலர் எடுத்துவைப்பதாக வேண்டிக்கொண்டனர். அதே போல சாரதாவும் விஜயேந்திரனும் கூட சஹானாவுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொண்டனர்.
ராதாகிருஷ்ணனின் பேரனும் பேத்தியும் அவரவர் குடும்பத்தினருடன் வந்திருந்ததைப் பங்காளிக்குடும்பத்தினர் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாலும் நகைக்கடை போல அலங்கரித்துக்கொண்டு சுற்றிய துளசியாகட்டும், மகளைத் தரையில் விடாமல் சுமந்து கொண்டு திரிந்த கிருஷ்ணாவாகட்டும் தங்களின் வாழ்க்கையைப் பற்றி யாரும் தோண்டித் துருவாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டனர். இத்தனை வருடம் கலந்து கொள்ளாத ராகவேந்திரன் முன்நின்று பொங்கல் வைப்பதற்கான வழிமுறையை மருமகளுக்கு விளக்கியதை ஒருவித ஆற்றாமையுடன் பார்த்துவிட்டு நகர்ந்தனர் அவரது பங்காளிகள்.
இவ்வாறு எவ்வித குறைபாடுமின்றி பொங்கல் வைத்துவிட்டு அம்மனை கண்ணாறத் தரிசித்துவிட்டு அனைவரும் வீடு திரும்பினர். அன்றைக்கு திருவிழா களைப்பில் அனைவரும் சீக்கிரம் உறங்கிவிட சஹானா மட்டும் உறங்காமல் விழித்திருந்தாள்.
ராகுல் “சஹா! ஏன் ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க? சும்மா பழசை நினைச்சு ஒரி பண்ணிக்காம வந்து தூங்கு” என்று அதட்டி அவளை உறங்க வைத்தான்.
தோழனுக்குத் தோழனாக, அன்பானக் கணவனாகத் தன்னைத் தாங்குபவனின் முகத்தை வருடியவள் “நான் ரொம்ப லக்கி ராகுல்… அதான் நீ எனக்கு புருஷனா கிடைச்சிருக்க… ஐ லவ் யூ” என்று சொல்லி கண்ணீர் உகுத்தாள்.
மனைவியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்ட ராகுல் “நீ கிடைச்சதுக்கு நான் தான் புண்ணியம் பண்ணிருக்கணும் நூடுல்ஸ்… இப்போலாம் நீ அடிக்கடி கண்ணீர் விடுறியே! ஒரு வேளை டாக்டர் சொன்னமாதிரி ஹார்மோனல் சேன்ஜஸ்னு நினைக்கிறேன்… எதுக்கும் நாளைக்கு இன்னொரு தடவை செக்கப் பண்ணிடுவோம்” என்று சொல்ல, தலையாட்டிய சஹானா கணவனின் மார்பில் புதைந்தவாறு உறங்க ஆரம்பித்தாள்.
அவளைத் தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்த ராகுலும் சிறிதுநேரத்தில் உறங்கிவிட்டான். சதாசர்வகாலமும் மனைவியின் நலனை மட்டும் கருத்தில் கொள்ளும் அவனைக் கதறவைக்க விதி சதித்திட்டம் தீட்டிவிட்டது.
*****************
அசம்பாவிதம் நடக்கப் போகிறதற்கான சிறு அறிகுறி கூட இல்லாமல் அழகாக விடிந்தது பொழுது. அன்று லெட்சுமி களைப்பின் காரணமாக உறங்கிவிட, துளசி தானே எழுந்து வாசலைத் தெளித்துத் தனக்குத் தெரிந்த அளவுக்குக் கோலம் ஒன்றைப் போட்டுவிட்டு நிமிர்ந்தாள்.
அங்கே குறும்புவழியும் கண்களுடன் நின்று கொண்டிருந்த கிருஷ்ணாவைக் கண்டதும் ஆச்சரியத்துடன் “வாவ்! என்ன சார் இன்னைக்குச் சீக்கிரமா வாக் போயிட்டு வந்துட்டிங்க போல?” என்று கேட்க அவன் மனைவியின் தோளை அணைத்தபடி நடந்தவன்,
“சீக்கிரமா வீட்டுக்குப் போடா மடையா! அங்கே ஒரு தேவதை வாசல்ல கோலம் போட்டுட்டிருக்கானு ஒரு அசரீரி சொல்லுச்சு பேபி… அதான் அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தேன்” என்று சொன்னவனின் காதைத் திருகிய துளசி
“அஹான்! அந்தத் தேவதை இப்போ காபி போட போகணும்டா மடையா… சோ அவளை விடுனு இன்னொரு அசரீரி கேட்டுச்சா இப்போ?” என்று கேட்டுவிட்டு பட்டென்று அவன் கையைத் தட்டிவிட்டுச் சமையலறைக்குள் சென்றாள்.
கிருஷ்ணா காதைத் தடவியபடி அவள் பின்னே செல்ல காலெடுத்து வைத்தவன் “அப்பா!” என்ற மகளின் குரலைக் கேட்டதும் மனைவியை அப்போதைக்கு மறந்தான்.
வீட்டில் காலைச்சமையலை துளசியும் சுகன்யாவும் எளிமையாக முடித்துவிட, பெரியவர்கள் தாமதமாகத் தான் எழுந்தனர். மதியவுணவையும் முடித்துவிட்டு இருவரும் சற்று ஓய்ந்த நேரம் கிருஷ்ணா துளசியை வெளியே செல்லலாம் என்று அழைக்க
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
“கிரிஷ்! என்னால முடியலைடா… ரொம்ப டயர்டா இருக்கு” என்று துளசி சோர்வாய் சொல்ல
சுகன்யா “இங்கே சுத்தி பார்க்க என்ன இருக்கு கிருஷ்ணா? நாங்க இன்னைக்கு ஃபுல்லா ரெஸ்ட் எடுக்கப் போறோம்” என்று சொல்லிவிடவே
கிருஷ்ணா “துளசி ப்ளீஸ்” என்று கெஞ்சவும்
அவள் சுகன்யாவைக் காட்டி “இவ வந்தா நானும் வருவேன்” என்று கண் சிமிட்டினாள். கிருஷ்ணா இப்போது சுகன்யாவைப் பரிதாபமாகப் பார்க்க சுகன்யாவும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டாள்.
மூவரும் காரில் ஏறப்போன நேரம் விஷ்வா தானும் அவர்களுடன் வருவதாகச் சொல்லிவிட்டு சுகன்யாவை நோக்கிக் கண்சிமிட்டவே அவள்
“இவன் அங்கே வந்தும் என்னை டேமேஜ் பண்ணப் போறான்… இவன் கிட்ட இருந்து என்னைக் காப்பாத்த யாரும் இல்லையா?” என்று புலம்பியபடி காரில் ஏறினாள்.
கிருஷ்ணா துளசியை முன்னே அமரும்படி சொல்லிவிட, சுகன்யாவும் விஷ்வாவும் வேறு வழியின்றி பின்னே அமர்ந்தனர். சுகன்யாவுக்கு ஏதோ நெருப்பில் மீது இருப்பதைப் போல தோன்ற, விஷ்வா காரில் ஓடிய பாடலை விசிலடித்தபடி சுகன்யாவை ஓரக்கண்ணால் ரசிக்கத் தொடங்கினான்.
இங்கே வந்த தினத்திலிருந்து புடவையைத் தங்கள் முழுநேர உடையாக துளசியும் சுகன்யாவும் ஏற்றுக் கொண்டதால் இப்போதும் புடவையிலேயே இருந்தனர் இருவரும்.
சுகன்யா புடவையில் பாந்தமான அழகுடன் மிளிர அதை ரசித்தவாறே தன் கண்ணை அவள் மீது பதித்திருந்தான் விஷ்வா.
கிருஷ்ணா தென்னந்தோப்புக்குக் காரைக் கொண்டு சென்று நிறுத்தியவன் மூவரையும் இறங்கச் சொன்னான். நெடிதுயர்ந்த தென்னைமரங்களை அண்ணாந்து பார்த்தபடி காரிலிருந்து இறங்கினர் துளசியும் சுகன்யாவும்.
அவர்களுக்குத் தோப்பை சுற்றிக் காட்டினர் கிருஷ்ணாவும் விஷ்வாவும். சிறிதுநேரத்தில் இளநீர் வர கிருஷ்ணா அதை லாவகமாகக் குடிக்கும் பாங்கைப் பார்த்தத் துளசிக்கு அவனைப் போலக் குடிக்கத் தெரியவில்லை.
கிருஷ்ணா “கொஞ்சம் பொறு தாயே! நீ குடிக்கிற அழகுல இளநீர் ஃபுல்லா உன் ஷேரியில தான் கொட்டப்போகுது… அதை இப்பிடி பிடி” என்று அவளுக்குக் குடிக்கும் விதத்தை விளக்கவே அதைக் கவனித்த சுகன்யாவும் இளநீரைச் சிந்தாமல் குடித்துவிட்டுத் துளசியிடம் ஹைஃபை கொடுத்துக் கொண்டாள்.
விஷ்வா “ரெண்டு பேரும் ஒலிம்பிக்ல ஓடி கோல்ட் மெடல் வாங்குன மாதிரி ஹைஃபை குடுத்துக்கிறிங்க… இளநீரைச் சிந்தாம குடிக்கிறதுக்கு பத்து நிமிச கிளாஸ், அதுக்கு இவன் டீச்சர் வேற… கடவுளே இதுங்க கிட்ட என்னைத் தனியாளா மாட்டிவிட்டுட்டியே” என்று அவர்கள் மூவரையும் தயவு தாட்சணியமின்றி கேலி செய்தான்.
அவனது கேலி வயலுக்குச் சென்றபிறகு இன்னும் அதிகரித்தது. அவனுடன் கிருஷ்ணாவும் சேர்ந்து கொண்டான்.
துளசியும் சுகன்யாவும் வழக்கமாக காலணியின்றி வெளியே செல்லும் பழக்கமில்லாதவர்கள் என்பதால் வயலிலும் காலணியுடன் இறங்கச் செல்ல கிருஷ்ணாவும் விஷ்வாவும் பதறிப்போய் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
“என்னம்மா நமக்குச் சாப்பாடு போடுற வயல் இது… இங்கே செருப்போட இறங்கலாமா? முதல்ல செருப்பைக் கொண்டு போய் கார்ல வைங்க ரெண்டு பேரும்” என்று சொல்லவே இருவரும் அவர்களின் பேச்சு வாஸ்தவம் தான் என்று உணர்ந்தவர்களாய் காலணிகளைக் காரில் வைத்துவிட்டு வந்தனர்.
சுகன்யா பொறுமையின்றி முன்னே இறங்கி வரப்பு மீது நடக்கத் தொடங்க கிருஷ்ணா துளசியும் அவள் பின்னே செல்லும் முன்னர் தடுத்து நிறுத்தினான்.
“இப்போ என்னடா?”
“இப்பிடியே சேலையால வரப்பைச் சுத்தம் பண்ணிட்டே போகணுமா? தூக்கிச் செருகிக்கோ துளசி”
ஒரு பெருமூச்சுடன் புடவையைத் தூக்கிச் செருகிக் கொண்டவள் “டேய் நீயும் உன் ஃப்ரெண்டும் எங்களுக்கு இதெல்லாம் தெரியாதுனு நினைச்சுட்டு ஹெல்ப் பண்ணுறேங்கிற பேருல எங்களை வைச்சு நல்லா காமெடி பண்ணுறிங்கடா” என்று முறைத்துவிட்டு முன்னே சென்று கொண்டிருந்த சுகன்யாவையும் தன்னைப் போல புடவையை இழுத்துச் செருகிக் கொள்ளுமாறு கூறினாள்.
கிருஷ்ணா விஷ்வாவிடம் “என்னடா இதுங்களுக்கு எதுவுமே தெரியாது போலயே?” என்று கேலி பேச
முன்னே சென்று கொண்டிருந்த துளசி “சரிங்க சார்! நீங்க எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் தான்… நாங்க மக்கு மண்ணாந்தையாவே இருந்துட்டுப் போறோம்” என்று சொல்லி நொடித்துக் கொண்டு வயலை ரசித்தபடி நடக்கத் தொடங்கினாள்.
சிறிது நேரம் வயலின் அழகை ரசித்தவர்கள் களைத்துப் போய் வயலின் மற்றொரு ஓரத்தில் ஆரம்பித்த மாந்தோப்பில் சென்று அமர்ந்தவர்கள் நேரத்தைப் போக்குவதற்காக ஏதேதோ பேச ஆரம்பித்தனர். பேச்சு இறுதியாகக் காத்திருப்பு என்ற தலைப்பில் வந்து நின்றது.
துளசி மூவரையும் ஆர்வத்துடன் பார்த்தவள் “நான் என்னோட அடுத்தப் பிறந்தநாள் எப்போ வரும்னு வெயிட் பண்ணுறேன்… ஏன்னா இருபத்தஞ்சு வயசு கம்ப்ளீட் ஆனா தான் மித்ராவை என்னோட பொண்ணா நான் சட்டப்படி தத்தெடுக்க முடியும்” என்று முடிக்கும் போதே அந்நாள் எப்படி இருக்குமென்று அவள் கனவு காண ஆரம்பித்துவிட்டாள்.
Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!
அடுத்து கிருஷ்ணாவின் முறை. கிருஷ்ணா தோளை இலகுவாகக் குலுக்கிவிட்டு “என்னோட ஆறு வருசக் காத்திருப்புக்கான அர்த்தம் எனக்கு எப்போவோ கிடைச்சுடுச்சு… சோ இப்போதைக்கு எதுவும் இல்லை” என்று முடித்துவிட்டு சுகன்யாவை நோக்கினான். ஆனால் அவள் பேசுவதற்கு முன்னர் முந்திக் கொண்ட கிருஷ்ணா
“நீ என்ன சொல்ல வர்றனு எனக்குத் தெரியும் ஜிஞ்சர்பிரெட்… நீ உன்னோட துறவறம் போற நாளுக்காகக் காத்திருக்க” என்று சொல்லி மற்ற மூவரையும் அதிர வைத்தான்.
சுகன்யா “என்னது? துறவறமா?” என்று அதிர்ச்சியுடன் வாயைப் பிளக்க, அதை ஆமோதித்தவன்,
“யெஸ்! நீ ஆல்ரெடி ஒரு பற்றில்லாத மனநிலையோட தானே இருக்க… மீனாம்மா தான் உன் மனசைப் புரிஞ்சிக்காம உனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க… ஆனா நீ ஒரு காரைக்கால் அம்மையார், ஒரு ஔவையார் மாதிரி உலகவாழ்க்கையை வெறுத்துட்டேனு அவங்களுக்குப் புரியலை” என்று சொல்லி முடித்தது தான் தாமதம் சுகன்யா கடுப்புடன் எழுந்தவன் கிருஷ்ணாவின் முதுகில் பட்பட்டென்று அடிக்கத் தொடங்கினாள்.
“ஏன்டா என்னைப் பார்த்தா உனக்கு எப்பிடி தெரியுது? நான் சொன்னேனா உன் கிட்ட நான் வாழ்க்கையை வெறுத்துட்டேனு? எங்கம்மாக்கு நான் ஒரே ஒரு பொண்ணு… நானும் துறவறம் போயிட்டேனா எங்க வம்சத்துக்கு வாரிசே இல்லாம போயிடும்டா” என்று கடுகடுத்தவளைச் சுவாரசியத்துடன் கவனித்துக் கொண்டிருந்த விஷ்வாவை நோக்கிக் கண் சிமிட்டிய கிருஷ்ணா “சொல்லிடுடா” என்று சைகை காட்ட, துளசி அதைக் கவனித்துவிட்டாள்.
இந்த இரண்டு திருடன்களும் சேர்ந்து ஏதோ பெரிய சதியைத் திட்டமிட்டுள்ளனர் என்று ஊகித்தவள் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதைக் காண ஆவலுடன் காத்திருந்தாள்.
கிருஷ்ணா சுகன்யாவின் அடிகளைக் கொசு கடித்தது போல உதறித் தள்ளியவன் “ஆமா! இந்தம்மா பெரிய சோழவம்சம்… அந்த வம்சத்துக்கு வாரிசு ஒன்னு தான் குறைச்சல்? இவ்ளோ பேசுறியே! அப்போ ஏன் மீனாம்மா சொல்லுற வரனையெல்லாம் தட்டிக் கழிக்கிறியாம்?” என்று அவளைச் சீண்டிவிட
சுகன்யா “எல்லாருமே எவ்ளோ பவுன் போடுவிங்க, எவ்ளோ ரொக்கம் குடுப்பிங்கனு கல்யாணத்தை வியாபாரம் மாதிரி பேசுறாங்க கிருஷ்ணா… என்னை எனக்காக மட்டும் ஏத்துக்கிற ஒருத்தனுக்காகத் தான் நான் வெயிட் பண்ணுறேன்… அவன் வருவானா இல்லையானு கூடத் தெரியலை… ஆனா அதுக்காக காசு குடுத்து ஒரு புருசனை வாங்குற அளவுக்கு நான் கேவலமா போயிடலை” என்று சூடாகப் பதிலளித்தாள்.
அவளது பேச்சில் இருந்த நியாயம் மூவருக்கும் புரிய, கிருஷ்ணா “வெல் செட்… சப்போஸ் அப்பிடி ஒருத்தன் இப்போ வந்து உன் முன்னாடி நின்னா அவனை நீ மேரேஜ் பண்ணிப்பியா?” என்று விஷ்வாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி வினவவும் துளசிக்கு விஷயம் புரிந்து விட்டது.
எனவே சுகன்யாவை முந்திக் கொண்டு “என் சுகி சொன்னா சொன்ன வார்த்தையைக் காப்பாத்துவா… அப்பிடி ஒருத்தனை இப்போ வரச் சொல்லு கிரிஷ்… அடுத்த முகூர்த்தத்துல சுகி அவனைக் கல்யாணம் பண்ணிப்பா… இல்லையா சுகி?” என்று தோழியிடம் கேட்க, சுகன்யாவும் பேச்சு சுவாரசியத்தில் ஆமென்று தலையை ஆட்டிவைத்தாள்.
இந்த வார்த்தைக்காகக் காத்திருந்தவனிடம் கிருஷ்ணா “இதற்கு தானே ஆசைப்பட்டாய் விஷ்வாமித்திரா! பிரபோஸ் பண்ணுடா… ஜிஞ்சர்பிரெட் உன்னை அடுத்த முகூர்த்தத்துலேயே கல்யாணம் பண்ணிப்பாடா” என்று தூண்டிவிட இப்போது அதிர்வது சுகன்யாவின் முறையாயிற்று.
இந்தக் கிருஷ்ணா என்ன சொல்ல வருகிறான்? விஷ்வா… இந்த விஷ்வா தன்னிடம் காதலைச் சொல்லப் போகிறானா என்று விதிர்விதிர்த்துப் போனவளின் கரத்தை ஆதரவாகப் பற்றிய விஷ்வா அவளைக் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்து
“உன்னை உனக்காகவே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்… எப்போ முகூர்த்தம் வச்சா உனக்கு ஓகே சுகா?” என்று கேட்க அதிகபட்ச அதிர்ச்சியா அல்லது அதிகபட்ச சந்தோசமா என்று புரியவில்லை, ஆனால் அந்த அதிகபட்சமான ஏதோ ஒரு உணர்வின் காரணமாக சுகன்யாவின் உதடுகள் ஒரு வார்த்தையைக் கூட உச்சரிக்கவில்லை.
ஆனால் உதடுகள் மறந்த அந்த வேலையை சுகன்யாவின் நயனங்கள் அருமையாகச் செய்து முடித்தன. ஆம்! சுகன்யாவாலும் விஷ்வாவின் காதலை மறுக்கமுடியவில்லை என்ற தகவலை அவளது நயனமொழியில் புரிந்து கொண்டான் விஷ்வா.
துளசி மகிழ்ச்சியுடன் கிருஷ்ணாவை நோக்கியவள் “இதுக்குத் தான் எங்களை இவ்ளோ தூரம் கிட்னாப் பண்ணிட்டு வந்திங்களா திருட்டுப்பசங்களா?” என்று கேட்க
கிருஷ்ணா “நான் என்ன பண்ணுறதுடி? இதுங்க ரெண்டையும் சஹானா கல்யாணத்துல இருந்தே நான் வாட்ச் பண்ணுறேன்.. சரி இன்னைக்குச் சொல்லுவாங்க, நாளைக்குச் சொல்லுவாங்கனு காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது தான் மிச்சம்… இதுங்களோட மௌன யுத்தம் முடியுற மாதிரி இல்லை.., ரெண்டு நாளா விஷ்வாமித்திர மகாமுனியோட பார்வை ஜிஞ்சர்பிரெட்டை சீக்ரெட்டா கபளீகரம் பண்ணுனதை நோட் பண்ணிட்டு பையன் கிட்ட விஷயத்தைக் கேட்டேன்… அதான் இப்பிடி ஒரு பிளான்” என்று சொல்லிமுடிக்க
துளசி “ஐயோ என் பிரின்ஸ் எவ்ளோ திறமையா பிளான் பண்ணிருக்கான்!” என்று சொல்லி அவனது முகத்தை வழித்து நெட்டி முறித்து திருஷ்டி கழித்தாள்.
கிருஷ்ணா காலரைத் தூக்கிவிட்டுப் பெருமைப்பட்டுக் கொண்டவன் இந்த உலகை விட்டு வேறு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சுகன்யாவையும் விஷ்வாவையும் அங்கிருந்து பிடித்து இழுத்து வந்து காரில் அமருமாறு கட்டளையிட்டான்.
“வந்த வேலை தான் முடிஞ்சாச்சே… மிச்சக்கனவை வீட்டுல போய் கண்டுக்கோங்க” என்ற கிண்டல் வேறு. இவ்வாறான நிம்மதியான மனநிலையுடன் வீட்டுக்குச் சென்றவர்களுக்கு ஒரு துக்கச்செய்தி காத்திருந்தது.
நால்வரும் காரை நிறுத்திவிட்டு பண்ணைவீட்டுக்குள் அடியெடுத்து வைக்க அங்கே ஆளரவம் எதுவுமில்லாமல் அமைதியாக இருந்தது. உள்ளே ஹாலில் மித்ரா லெட்சுமியின் மடியில் உறங்கிக் கொண்டிருக்க அவரது கன்னத்தில் கண்ணீர்க்கோடுகள்.
பதறிப்போய் அவரிடம் விசாரித்தவர்களுக்குக் கிடைத்தச் செய்தி சஹானா மாடிப்படியில் இறங்கும் போது விழுந்து வயிற்றில் அடிபட்டு விட்டது என்பது தான். அதைக் கேட்டதும் நால்வருக்கும் நெஞ்சம் பதற மருத்துவமனையை நோக்கி ஓடினர்.
அங்கே போனாலோ மருத்துவர் “அவங்களுக்கு மிஸ்கேரேஜ் ஆயிடுச்சு… ஃபுல்லா கிளீன் பண்ணிட்டோம்… சோ பிஸிக்கலி அண்ட் மென்ட்டலி அவங்க வீக்கா இருக்காங்க… கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கோங்க” என்று குடும்பத்தினருக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்டதும் நால்வருக்கும் இதயத்தில் சுருக்கென்று வலிக்க பெரியவர்கள் கண்ணீர் விட ஆரம்பித்தனர். இருகுடும்பத்தினரும் வாரிசின் வருகைக்குக் காத்திருக்கும் இனியத்தருணத்தை இந்த விபத்து இடி விழுந்தது போல நாசமாக்கிவிட்டது.
யாருமே எதிர்பாராத இவ்விபத்தால் அனைவருமே உடைந்து போய்விட ராகுல் மட்டும் தான் தைரியமாக இருந்தான். அனைவரையும் அமைதிப்படுத்தியவன் சஹானாவையும் தேற்றத் தொடங்கினான். சஹானாவும் அவனது தேறுதலின் விளைவாக தெம்புற்று சில தினங்களில் வீடு திரும்பினாள்.
வீட்டினுள் நுழைந்தவளை மித்ரா வந்து கட்டிக்கொண்டு “அத்தை உங்களுக்கு உடம்பு சரியாயிடுச்சா?” என்று கேட்க அந்த அக்கறையில் கரைந்தவள் இவ்வளவு நாட்கள் தன்னை வருத்திய துக்கத்தையும், குழந்தையைப் பறிகொடுத்தச் சோகத்தையும் மறந்து அண்ணன் மகளிடம் கண்ணீருடன் தனக்குச் சரியாகிவிட்டது என்று பேச ஆரம்பித்தாள்.
மித்ராவுடன் நேரத்தைக் கழித்தவள் ஏனோ அவள் அருகாமையில் எந்தச் சோகமும் தன்னை அண்டுவதில்லை என்று நிம்மதியுற்று குழந்தையை இழந்த துக்கத்தை மறக்க முயன்றாள்.
ஆனால் இரவு உறங்கும் போது பழைய பொல்லாத நினைவுகள் அனைத்தும் கனவுகளாய் வந்து மிரட்டியதில் பயந்து எழுந்தவள் “நான் கொலைகாரி! என் குழந்தையைக் கொன்னுட்டேன்… நான் கொன்னுட்டேன்” என்று கதறியபடி அழத் துவங்க ராகுல் அவளைச் சமாதானம் செய்யத் தொடங்கினான்.
“ஒன்னுமில்லை சஹா! அழக்கூடாதுடா… இங்கே பாரு! குழந்தை தானா செத்துப் போச்சுமா… அது ஒரு விபத்து”
“இல்லை ராகுல்… நான் தான் கொன்னுட்டேன்”
அவளது கதறல் ஒலியில் அனைவரும் விழித்துக்கொண்டு ராகுலின் அறையை நோக்கி விரைந்தனர். அங்கே சஹானா கனவு கண்டதில் மிரண்டு கதறிக்கொண்டிருக்க ராகுலுடன் சேர்ந்து அனைவருமே அவளுக்குப் புரியவைக்க முயற்சித்தனர்.
சாரதா மகளிடம் “சஹாம்மா நடந்தது ஆக்சிடெண்ட்… அதை மறந்துடு… அதுல உன்னோட தப்பு எதுவுமில்லைடா” என்று சொல்ல
சஹானா அழுகையுடன் “இப்போ நடந்தது விபத்து தான்மா… ஆனா ஆறு வருசத்துக்கு முன்னாடி நான் என் குழந்தையைக் கொன்னுட்டேனே… அந்தப் பாவம் தான் என் வயித்துல குழந்தை தங்காம போயிடுச்சு” என்று தாயின் மார்பில் சாய்ந்து கதறத் தொடங்கினாள்.
அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைய துளசியும் சுகன்யாவும் இது எதையுமே அறியாததால் அவர்களுக்கு சஹானா சொன்ன விஷயம் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர அளித்தது.
துளசி கதறியழும் சஹானாவையும் அவளைச் சமாதானப்படுத்த முயலும் சாரதாவையும் கண்டு கலங்கியவள் கிருஷ்ணாவைப் பார்க்க அவனுமே அதிர்ந்து போய் தான் இருந்தான்.
ராகுல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு “அப்போவும் நீ எந்த தப்பும் பண்ணலையே சஹா? டெலிவரியில குழந்தை இறந்ததுக்கு நீ என்ன பண்ணுவ?” என்று ஆதுரத்துடன் சஹானாவைக் கேட்க அவனது தாயாரும் சித்தியும் கூட இதை ஆமோதித்தனர்.
ராகவேந்திரன் “அந்தக் குழந்தைக்கு ஆயுள் கம்மிடா… அதான் உலகத்துக்கு வந்ததும் கண்ணை மூடிடுச்சு… அதுக்கு நீ ஏன் கொலைகாரி பட்டத்தைச் சுமக்கணும்?” என்று வேதனையுடன் கூற சஹானா இன்னும் அதிகமாகக் கண்ணீர் விட ஆரம்பித்தாள்.
துளசிக்கும் சுகன்யாவுக்கும் இது இரண்டாவது அதிர்ச்சி. அவர்கள் கருகலைப்பினால் தான் சஹானா இப்படி நடந்து கொள்கிறாள் என்று எண்ணியிருக்க அவளோ ஆறு வருடத்துக்கு முன்னர் தன் குழந்தையைக் கொன்று விட்டதாகக் கூறினாள்.
ஆனால் மற்றவர்களோ பிரசவத்தில் அக்குழந்தை இறந்தது அவளது தவறில்லை என்று சஹானாவைச் சமாதானம் செய்ய முயல இவ்வளவு பிரச்சனைகளை நெஞ்சில் சுமந்து கொண்டு தான் இந்தப் பெண் தங்கள் முன் சாதாரணமாக நடமாடினாளா என்று வருந்தினர் துளசியும் சுகன்யாவும்.
சஹானாவோ “என் குழந்தை பிரசவத்துல செத்துப் போகலை… நான் தான் வேண்டானு அவளைத் தூக்கிப் போட்டுட்டேன்… அந்தப் பள்ளத்தாக்குல, பள்ளத்தாக்குல….பள்ளத்தாக்க்க்….” என்று சொல்லிக் கொண்டே மயக்கமுற இம்முறை அனைவருமே அதிர்ந்து போயினர்.
கிருஷ்ணா “எல்லாரும் வெளியே போவோம்… ராகுல் அவனோட ஒயிபை பார்த்துப்பான்” என்று அழுத்தமாக உரைத்து அனைவரையும் வெளியே வரச் செய்தான். விஷ்வாவும் கிருஷ்ணாவும் அனைவரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினர்.
ராகுலின் குடும்பத்தினருக்குச் சஹானாவின் ஆறு வருடத்துக்கு முந்தைய நிலை தெரிந்தாலும் சஹானாவின் “வேண்டானு தூக்கிப் போட்டுட்டேன்” என்ற வார்த்தையில் அவர்களும் கதிகலங்கிப் போயிருந்தனர். கிருஷ்ணாவும் ராகவேந்திரனும் இவ்வளவு ஏன் விஜயேந்திரன் கூட இவ்விஷயத்தில் அதிர்ந்து தான் போய்விட்டனர்.
சாரதா மட்டும் வேதனை தாழாமல் வாயைப் பொத்திக் கொண்டு கண்ணீர்விடவே அனைவரின் கவனமும் அவரிடமே நிலைத்தது.