🌞 மதி 47🌛

அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் 233 தயாரிக்கத் தேவைப்படும் முக்கிய மூலப்பொருள் மோனசைட் தாது மணலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுவதற்கு பதிலாகச் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுகிறது என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது தாதுமணல் கொள்ளை வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட சுகன்தீப்சிங்பேடி மற்றும் சத்யபிரதா சாஹூவின் அறிக்கைகள் – ஜூனியர் விகடன் 02.03.2019.

ஜெயதேவ் தனது வருங்காலத்திட்டங்களை விவரித்துக் கொண்டிருக்க அஸ்மிதா அதை வெளிக்காட்ட இயலாத கோபத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள். தாத்தாவும் பேரனும் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்த நேரம் ரிஷி வரவும் சாந்தினிக்கு ஆச்சரியம்.

“இந்தக் கல்லுளிமங்கனுக்கு இன்னைக்கு இங்க என்ன வேலை? மறுபடியும் தேவ் எதுவும் குட்டிக்கலாட்டா பண்ணுறதுக்கு இவன் ஹெல்ப் பண்ணுறானா?” என்ற கேள்வி மூளைக்குள் உதயமாக அவனைப் பார்க்க, ரிஷி நேரே அஸ்மிதாவிடம் சென்றவன் “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் சிஸ்டர்” என்று சொல்லவும் சாந்தினிக்கு விஷயம் புரிந்துவிட்டது.

தேவ் என்னவென்று ரிஷியை நோக்கியவன் அவன் முகத்தில் இருந்து எந்த விசயத்தையும் புரிந்து கொள்ள இயலாதவனாய் “நீ என்ன பேசப் போற ரிஷி?” என்று கேட்க

“அவரு என் கிட்ட தான் பேசணும்னு சொன்னாரு… அதுக்கு நீ ஏன் கிராஸ் கொஸ்டின் பண்ணுற? நீங்க வாங்க ரிஷி சார்… இவரு பெரிய ஆல் இன் ஆல் அழகுராஜா… இவர் கிட்ட எழுதி வச்சிட்டுத் தான் நம்ம பேசணும் பாருங்க” என்று எகிறிய அஸ்மிதாவைப் பார்த்து கைகூப்பினான் தேவ்.

“நீயும் இவனும் என்னமோ பேசுங்க தாயே! இனிமே இதைப் பத்தி உன் கிட்டவோ இவன் கிட்டவோ நான் கேக்கவே மாட்டேன்”

அஸ்மிதா ஏளனமாக அவனை நோக்கியபடி எழுந்தவள் “கையெடுத்துக் கும்பிட்டா மட்டும் உன்னை விட்டுருவேனா மை டியர் நடிகர் திலகமே! இனிமே தான் இருக்குடா உனக்கு” என்று மனதுக்குள் கறுவியபடி ரிஷியை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்றவள் தோட்டத்தைப் பார்த்துக்கிடக்கும் இருக்கையில் அமர்ந்தாள்.

ரிஷி அவளுக்கு அடுத்து அமர்ந்தவன் சிறிதுநேரம் தோட்டத்தை அமைதியாக வெறித்துவிட்டு மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான்.

“சாருக்கும் உங்களுக்கும் என்ன பிரச்சனை?”

அஸ்மிதாவும் அவனைப் போலத் தோட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவள் அவன் இதைத் தான் கேட்பான் என்பதை ஊகித்திருந்ததாலோ என்னவோ “அது என்னனு உங்களுக்குத் தெரியாதாண்ணா?” என்று கேட்டாள் அடுத்த நொடியே.

அவன் தான் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அறிவானே. பின் ஏன் இந்தக் கேள்வி என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.

“தெரியும்… உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரியாதுல்ல… மானசா பத்தி, அவளோட இறப்பு பத்தி… அது கூட எனக்கு நல்லா தெரியும்… அதை உங்க கிட்ட சொல்லியே ஆகணும்னு தான் நான் இன்னைக்கு வந்திருக்கேன்”

ரிஷி அவ்வாறு சொன்னதும் அஸ்மிதாவுக்கும் மானசா பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வந்துவிட அவனது பேச்சைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

ரிஷி தனது சகோதரியைப் பற்றி கூற ஆரம்பித்தான்.

“நான் மானசாவோட பெரியம்மா பையன்.. அவளுக்கும் எனக்கும் மாசக்கணக்குல தான் வயசு வித்தியாசம்… என்னோட அப்பாவும் அம்மாவும் ஒரு ஆக்சிடெண்ட்ல தவறிட்டாங்க… அப்போ ஜோதி சித்தியும் ஜீவா சித்தப்பாவும் தான் என்னை அவங்களோட பையனா வளர்க்க ஆரம்பிச்சாங்க… மானசாவுக்கும் எனக்கும் வித்தியாசம் காட்டுனதே இல்ல… சாப்பாடு, டிரஸ், படிப்புனு எல்லாமே எங்க ரெண்டு பேருக்கும் சமமா தான் இருக்கும்… மானசாவுக்கு பத்து வயசு இருக்கிறப்போ ஜோதி சித்தி கேன்சர்ல இறந்து போனாங்க…” என்றவன் நினைவலைகளில் நீந்தி அந்தப் பருவத்துக்கே சென்றுவிட்டான்.

மானசாவின் தந்தை ஜீவானந்தமும் அன்னை ஜோதியும் அவரது கல்லூரி பேராசிரியர் பணியின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆழியூர் (கற்பனை ஊர்) என்ற நகரத்தின் சாயல் படிந்த கிராமத்தில் தங்கியிருந்த காலம் அது.

நாஞ்சில் நாட்டுக்கே உரித்தான பசுமைக்காட்சிகளுக்குச் சிறிதும் பஞ்சமில்லாத ஊர் அது. அதோடு அதன் அழகே அங்குள்ள நீண்ட நெடும் கடற்கரை தான். கடற்கரையை ஒட்டியுள்ள மீனவக்குடியிருப்புகளும் ஆங்காங்கு நிற்கும் படகுகளும் என காணக் காண திகட்டாது மானசாவுக்கு.

சிறுபிள்ளையாக இருந்த சமயத்தில் அவளும் ரிஷியும் அடிக்கடி கடற்கரைப்பக்கம் செல்வதுண்டு. கடற்கரையின் மணற்பரப்பில் ஆங்காங்கு மணல் வெட்டியெடுக்கப்பட்டிருக்கும் காட்சியைக் கண்டு மீனவர்கள் புலம்பியபடி உலாவுவதைக் கண்டு அவர்கள் ஏன் இவ்வாறு பேசிக்கொள்கின்றனர்? கடலன்னை உடுத்தியிருக்கும் மணலாடையில் ஆங்காங்கு பொத்தல்களை ஏற்படுத்துவது யார்? என்றெல்லாம் சிந்திப்பாள் அவள்.

இயல்பிலேயே அவளுக்கு இயற்கை, சுற்றுச்சூழல் மீது ஆர்வம் அதிகம். அப்படிப்பட்டவளுக்கு கடற்கரை மணல் சூறையாடப்படுவது இளம்பருவத்திலேயே மனதில் சிறு வருத்தத்தை உண்டு பண்ணிவிட்டது.

அதே சமயத்தில் அவளது தாயார் ஜோதி புற்றுநோயால் மரணமடைய துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் சொன்ன ஒரே வார்த்தை “அந்த கம்பெனி இன்னும் எத்தனை உயிரை பழி கேக்குமோ?” என்பது தான். அந்த வார்த்தை அவள் பிஞ்சுநெஞ்சில் ஆழப் பதிந்துவிட்டது.

கடற்கரையில் மீனவர் குடியிருப்புகளிலுள்ள பெரிய வீடுகளைத் தாண்டிச் சென்றால் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெரிய சுவர் மட்டும் தெரியும். வெளியே எந்த வித போர்டும் அறிவிப்பும் இருக்காது. மானசா அதன் அருகில் நின்றிருக்க அதைப் பார்த்த மீனவர் ஒருவர் “இங்க என்ன பண்ணுற மக்கா? வாத்தியார் உன்னை தேடுறாரு… வீட்டைப் பார்க்க போ” என்று கூற

“இந்த சுவருக்கு அந்தப் பக்கம் என்ன இருக்குண்ணா?” என்று கேட்டாள் மானசா.

அந்த மீனவர் அவள் உயரத்துக்குக் குனிந்து முழந்தாளிட்டபடி “அந்தச் சுவரைத் தாண்டி கருப்பு பிசாசு இருக்கு… உன்னை மாதிரி சின்னக்குழந்தைங்க வந்தா பிடிச்சிட்டு போயிடும்” என்று கூறிவிட்டுக் கையோடு அவளை ஜீவானந்தத்தின் வீட்டில் கொண்டு போய் விட்டார்.

அன்று இரவு மானசா ரிஷியிடம் “ஜோசப் அண்ணா சொன்னாரு அந்த பெரிய சுவரு கட்டுன காம்பவுண்டுக்குள்ள கருப்பு பிசாசு இருக்குதாம்.. ஆனா அன்னைக்கு நம்ம வீட்டுக்கு வந்தவங்க அது ஒரு கம்பெனினு சொன்னாங்கல்ல… அதால தான் அம்மா இறந்து போயிட்டாங்கனு கூட சொன்னாங்க தானே! அப்போ அம்மா நம்மளை விட்டுட்டு கடவுள் கிட்ட போனதுக்கு அந்தப் பிசாசு தான் காரணமா ரிஷி?” என்று கேட்டுவைக்க அவனுக்கு எதுவுமே புரியவில்லை.

ஆனால் அவளின் அம்மாவின் உயிர் மட்டுமல்ல, அந்தக் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளிலுள்ள மக்களுக்கும் புற்றுநோயையும் இன்னும் சில நோய்களையும் கொடுத்துவிட்டு அவர்களின் வாழ்நாட்களுக்குக் காலக்கெடு விதித்தது அந்தக் காம்பவுண்டுக்குள் அடைந்து கிடக்கும் கருப்பு பிசாசு.

வளர வளரத் தான் அங்கே அடைந்து கிடப்பது சர்வதேச அளவிலான சந்தையைக் கொண்ட கனிமங்கள் அடங்கிய தாது மணல் என்றும் இயற்கை கடலன்னைக்குக் கொடுத்த அந்த அழகிய ஆடையை தங்கள் சுயலாபத்துக்காக சட்டவிரோதமாக அரசு நிர்ணயித்த அளவைத் தாண்டியும் சில தனியார் நிறுமங்கள் சூறையாடிக் கொண்டிருக்கின்றன என்பது அவளுக்குப் புரிந்தது.

அந்த மணலைத் தோண்டியெடுக்கும் போதும் முறையற்று தொழிற்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் போதும் வெளியேறும் கதிர்வீச்சு தான் அந்தப் பகுதி மக்களுக்குப் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவள் புரிந்துகொண்டபோது அவள் பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்திருந்தாள்.

மானசாவுடன் சேர்ந்து ரிஷிக்கும் சுற்றுச்சூழல் மீதான ஆர்வம் அதிகரிக்க அவர்களுடன் இன்னும் சில தோழர்களும் தோழிகளும் சேர்ந்து கல்லூரி முடிந்த பிறகு ஆரம்பித்தது தான் “சேவ் குமரி” (Save Kumari) என்ற அமைப்பு. கன்னியாகுமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது, மேற்குத் தொடர்ச்சிமலையின் ஒரு பகுதி சூறையாடப்படுவது, கேரள மாநிலத்திலிருந்து கழிவுகள் கொட்டப்படுவது போன்றவற்றையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கும் அமைப்பாக அதை உருவாக்கினர் மானசா, ரிஷி மற்றும் அவர்களின் தோழர்கள்.

இப்படி இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து குரல் கொடுத்த அவர்களாலேயே அவர்களின் சொந்த ஊரில் செயல்படும் ஆர்.எஸ். மினரல்ஸின் தாது மணல் ஆலையைத் தட்டிக் கேட்க முடியவில்லை. அந்த தொழிற்சாலை நிர்வாகத்தினர் அப்பகுதியில் ஒரு தரப்பினரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியிருந்தனர். அதோடு கன்னியாகுமரி மட்டுமன்றி அவர்களின் மணற்கொள்ளை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் தொடர்ந்தது. அவர்களின் அதிகாரம் காவல்துறையில் ஆரம்பித்து அரசியல்வாதிகள் வரை அனைவரையும் விலைக்கு வாங்கிவிட்டது.

அதோடு அப்பகுதிக்கு அருகில் செயல்பட்ட மற்றொரு ஆலை தான் வி.என்.மினரல்ஸ் என்ற விஸ்வநாதனுக்குச் சொந்தமான தாது மணலைப் பிரித்தெடுக்கும் ஆலை. இந்த இரண்டு ஆலைகளின் தலைமையும் சென்னையில் இருக்க ஆலைகளின் கட்டுப்பாடு முழுவதும் பொதுமேலாளர்களின் வசம் இருந்தது.

அப்படி தான் ஆர்.எஸ் மினரல்ஸின் அனைத்துக் கட்டுப்பாட்டையும் தன் வசம் வைத்திருந்தார் வினாயகமூர்த்தி. மூன்று மாவட்டங்களிலும் தாது மணலைச் சூறையாடுவதை ஊக்குவித்தவர் திரை மறைவாக காவல்துறையினரையும் அரசியல்வாதிகளையும் கவனித்துக்கொள்ள அவரை கேள்வி கேட்பவர் யாருமில்லை என்ற நிலமை. மீறி கேட்டால் அவர்களுக்கு இவ்வுலகில் இருந்து விடுதலை கொடுத்துவிடும் அளவுக்கு ஆட்களையும் தயாராக வைத்திருந்தார் வினாயகமூர்த்தி.

இந்த இரண்டு ஆலைகளின் சமூகப்பொறுப்பற்ற தன்மையை எதிர்த்து அவர்களின் தலைமை அலுவகம் அமைந்திருக்கும் சென்னையில் போராட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தனர் சேவ் குமரி அமைப்பினர். அதற்காக சென்னையிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரையும் ஒன்று திரட்டிவிட்டு மானசா, ரிஷி மற்றும் பிஜூ மூவர் மட்டும் சேவ் குமரி அமைப்பின் சார்பாக சென்னையில் வந்து இறங்கினர். அதே நேரம் இருவரும் கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஜீவானந்தம் சென்னையில் பிரபலக்கல்லூரியில் பேராசிரியராகப் பணியிலமர்ந்திருந்ததால் ரிஷி, மானசா, பிஜூ மூவரும் அங்கேயே தங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர்.

அப்படி இருக்கையில் வி.என். நிறுமத்தின் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் தான் ஜெயதேவ் மானசாதேவியை முதன் முதலாகப் பார்த்தான்.

தலைமை அலுவலகத்தின் மேலாளர் அவளிடம் ஏதோ சொல்லி விளக்க அதை ஏற்றுக்கொள்ள மறுத்தவளாக பிடிவாதத்துடன் தலையாட்டியவளைப் பார்த்து அவனுக்கு முதலில் தோன்றியது எரிச்சல் கலந்த ஆச்சரியம். அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் இளையவளாக இருந்தாலும் அனைவரையும் கட்டுப்படுத்தும் ஆளுமையும் கம்பீரமும் இயல்பாகவே வாய்க்கப்பெற்ற முகம் அவளுடையது. யார் சொன்னது பெண்களுக்கு அழகு மட்டும் தான் அணிகலன் என்று. சில பெண்களுக்கு அவர்களின் ஆளுமையும் தைரியமும் கம்பீரமும் கூட அணிகலன்கள் தான்.

எல்லாம் சரி. ஆனால் தொழிற்சாலைகள் இருப்பதே மக்கள் உயிரைக் குடிப்பதற்கு தான் என்பது போல அவர்கள் போடும் கோஷம் தான் ஜெயதேவின் எரிச்சலுக்குக் காரணம்.

தொழிற்சாலைகளே இல்லையென்றால் இவர்கள் கையிலிருக்கும் எதிர்ப்புவாசகம் அடங்கிய அறிவிப்பு அட்டைகளைக் கூட உற்பத்தி செய்திருக்க முடியாது. எதெற்கெடுத்தாலும் தொழில்மயமாக்கலைக் குறை சொல்லும் முட்டாள்களை என்ன தான் செய்வது என்ற எரிச்சல் தான் அது. கூடவே தனக்குப் பின்னே இத்தனை பெரிய கூட்டத்தைத் திரட்டி தலைமை தாங்குபவளை நினைத்து அவனுக்கு ஆச்சரியமும் கூட.

அவனுக்கும் அந்தச் சமயத்தில் வர்த்தக உலகில் எந்த அனுபவமும் கிடையாது. மேலாண்மை படிப்பை முடித்த நிலையில் தந்தையிடம் அடம்பிடித்து வி.என் கெமிக்கல்ஸின் தலைமைப்பொறுப்பில் அமர்ந்திருந்தவனுக்கு முதல் தலைவலியே மானசா ஜீவானந்தம் ரூபத்தில் தான் வந்திருந்தது. இது அவனது கௌரவப்பிரச்சனை. இந்தப்பெண்ணை சமாளிக்காவிட்டால் தனது தொழில்வாழ்க்கையின் முதல் அடியிலேயே தனக்குப் பலத்தச் சரிவு உண்டாகும் என்பதைப் புரிந்து கொண்டவன் நிதானமாக அவளைக் குறித்து விசாரிக்குமாறு அவனது அப்போதைய உதவியாளரான முரளிதரனிடம் கேட்டிருந்தான் ஜெயதேவ்.

அவர் மூலமாக அவனுக்குக் கிடைத்த தகவல் இது தான். அவள் பெயர் மானசா ஜீவானந்தம். அவளும் அவளது தோழர்களும் சேர்ந்து சேவ் குமரி என்ற அமைப்பைக் கடந்த மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறாள். அவள் சென்னை வந்ததன் முக்கிய நோக்கமே ஆர்.எஸ் குழுமத்தையும் வி.என் குழுமத்தின் தாது மணல் ஆலைகளை எதிர்த்து போராட்டம் நடத்த தான் என்பதை தெரிந்து கொண்டான்.

அதை தெரிந்து கொண்டதும் இவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் தூர விலக இந்தப் பிரச்சனையைத் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ள முடிவு செய்தான் ஜெயதேவ். அவன் மானசாவிடம் இது குறித்து கலந்துரையாட விரும்புவதகாகக் கூற முரளிதரன் அது சரியாக வராது என்று மறுத்தார்.

“அங்கிள்! இதுல நம்ம கம்பெனியோட சேர்த்து ஆர்.எஸ் க்ரூப்போட பேரும் அடிபடுது… அவங்க இந்தப் பிராப்ளமுக்கு சொல்யூசன் கண்டுபிடிக்கிறதுக்குள்ள நம்ம முந்திக்கிட்டோம்னா நமக்கு ஒரு குட்நேம் உண்டாகும்.. அது தான் இப்போதைக்கு நமக்கு தேவை… அந்தப் பொண்ணு கிட்ட பேசி இதுக்கு அவங்க என்ன சஜசன் குடுக்கிறாங்கனு கேப்போம்… அது நமக்கு பாஸிபிள்னா நம்ம ஃபேக்டரியில அதை ஃபாலோ பண்ணுவோம்… இதைப் பத்தி நான் சார் கிட்ட ஒரு தடவை டிஸ்கஸ் பண்ணிடுவேன்” என்று சொல்லவும் முரளிதரனும் மானசாவுக்குத் தகவல் அனுப்பினார்.

அவளும் ஆர்.எஸ் குழுமம் போலல்லாது வி.என் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் பேச்சுவார்த்தைக்காவது சம்மதித்தானே என்ற எண்ணத்தில் அந்தச் சந்திப்புக்குச் சம்மதம் கூறிவிட்டாள்.

அந்த ஒரு சந்திப்பு அவர்களை வாழ்நாள் முழுமைக்கும் பிணைத்துவைக்கும் என்று இருவருமே அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛