🌞 மதி 42🌛

கனிம வளங்கள் நிறைந்த மண்ணை அதிக ஆழம் வரை கடற்கரையிலிருந்து தோண்டுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படுவதோடு கடலரிப்பும் ஏற்படுகிறது. தோண்டியெடுத்த மணலிலிருந்து கனிமவளங்களைப் பிரித்த பின்னர் கிடைக்கும் வெறும் மணலை மீண்டும் கடற்கரையில் கொட்டிவிடவேண்டும் என்ற அரசின் உத்தரவை எந்த தனியார் நிறுவனமும் பின்பற்றுவதில்லை.

சேகர் வில்லா..

முந்தைய தினம் நடந்த சம்பவங்கள் அளித்த அதிர்ச்சி பூரணமாக விலகாததால் எப்போதும் வீட்டைச் சுற்றி நடைபயிற்சி செய்ய அதிகாலையிலேயே எழுந்துவிடும் வினாயகமூர்த்தியும் சந்திரசேகரும் தாமதமாகவே துயில் கலைந்தனர். நித்ராதேவியின் புறக்கணிப்பு காரணமாக தூக்கமற்ற துக்கமான இரவை நெட்டித் தள்ளியவர்கள் வெள்ளி முளைக்கும் நேரத்தில் தான் உறங்க முயன்றனர். அதன் விளைவு தான் இந்தத் தாமதம்.

பணியாள் இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுக்க அதை அருந்தியபடி மௌனமாக இருந்தவர்களுக்குள் ஓடிய எண்ணம் ஒன்று தான். இருவருக்கும் தேவ்வை இனி எவ்வாறு சமாளிப்பது என்பது தான் இப்போதைய கவலை. சந்திரசேகர் முன்பு போல தேவ்விடம் விரோதம் பாராட்டுவது என்பது தன்னால் இயலாத காரியம் என்பதில் மட்டும் தெளிவாயிருந்தார். என்ன செய்வது? மருமகனாக வேறு போய் விட்டானே!

இப்போது நினைத்தாலும் அவருக்கு மனம் ஆறவில்லை. அவர் உடன் இருந்து அஸ்மிதாவை வளர்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு மகள் என்றால் கொள்ளைப்பிரியம். ஒன்பது வரை அஸ்மிதாவும் அப்பா பைத்தியமாகத் தானே இருந்தாள். அதன் பின்னர் என்னென்னவோ நடந்து, மனைவியோடு சேர்த்து மகளின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டார் தான். ஆனால் மகள் மீதான பாசத்தை என்றைக்குமே அவர் மறைத்ததோ குறைத்ததோ இல்லை.

சஞ்சீவினி மகளைத் தைரியமானப் பெண்ணாக வளர்த்திருந்ததில் சந்திரசேகருக்கு என்றுமே பெருமை தான். ஆனால் அவரது தைரியமான பெண் காதல் என்ற மூன்றெழுத்தில் தகுதியற்ற ஒருவனிடம் தடுமாறி விட்டாளே என்ற ஆதங்கம் தான் நேற்றைக்கு அவளைத் திருமதி ஜெயதேவாகப் பார்த்ததிலிருந்து அவர் மனதைப் புண்ணாக்கிய விசயம். அவரது மகள் போயும் போயும் அவர் வெறுக்கும் ஒருவனின் மனைவி. அதுவும் இரண்டாவது மனைவி. நினைக்கும் போதே நெஞ்சுக்குள் சுருக்கென்ற வலி நேற்றிலிருந்து அவ்வபோது எழுந்து கொண்டேயிருந்தது.

அவருக்கு எதிரே அமர்ந்திருந்த வினாயகமூர்த்தியோ சந்திரசேகரைப் போல அஸ்மிதாவை எண்ணி வருந்தவில்லை. அப்படி ஒருத்தி இருந்தாலும் இல்லாமலே போனாலும் அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால் இனி யானை காதுக்குள் புகுந்த கட்டெறும்பு போல ஆர்.எஸ்.கெமிக்கலினுள் நுழைந்த ஜெயதேவ் தன்னை பாடாய் படுத்துவானே என்ற கலக்கம் தான் அவருக்கு.

இதில் அவர் இத்தனை வருடம் கட்டிக்காத்த தொழில் சாம்ராஜ்ஜியம் சரிந்துவிடுமோ என்ற அச்சம் அவரைப் பீடித்துக் கொண்டது. இங்கே தொழில் சாம்ராஜ்ஜியம் என்பது சத்தியமாக ஆர்.எஸ்.கெமிக்கல் இல்லை. அவர் அவருக்கென்று உருவாக்கியிருக்கும் தொழில் சாம்ராஜ்ஜியம் சென்னையிலிருந்து பல மைல்கள் தொலைவில் முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கு அருகில் இருந்தது.

ஆர்.எஸ். கெமிக்கலுக்குத் தேவையான கச்சாப்பொருளான ரூட்டைல், இல்மனைட்டோடு சேர்ந்து இன்னும் சில அரிய கனிமங்களை அள்ள அள்ளக் குறையாது கொடுக்கும் பெருமணல் பரப்புடன் கூடிய ஆழியூரில் (கற்பனை ஊர்) தான் அவரது கட்டுப்பாட்டிலுள்ள ஆர்.எஸ்.மினரல்ஸ் செயல்பட்டு வருகிறது.

ஆர்.எஸ்.மினரல்ஸ் முழுவதுமே வினாயகமூர்த்தியின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில். அந்த தொழிற்சாலை மட்டுமன்றி அந்தப் பகுதியிலும் அவருக்குச் செல்வாக்கு அதிகம். எல்லாம் இந்த கனிமத்தாது மணலால் கிடைத்ததே ஆகும். ஆனால் எப்போது ஜெயதேவ் ஆர்.எஸ்.கெமிக்கல்ஸின் பங்குகளை வாங்கி விட்டதாகக் கூறினானோ அப்போதிலிருந்தே ஆழியூர் யூனிட்டை உஷார் படுத்திவிட்டார் அவர்.

இருந்தும் அமைதியின்றி தவித்தது அவரது உள்ளம். எல்லாம் இந்த மனிதர் பெற்ற செல்வமகளால் வந்தது என்று சந்திரசேகரையும் வறுத்தெடுக்கத் தவறவில்லை. இப்போதும் கூட ஆழியூரிலிருந்து வரும் அழைப்புக்காகத் தான் காத்திருக்கிறார் அவர்.

அப்போது மந்தாகினி வரவும் சந்திரசேகரின் கவனம் கலைந்தது. அவரிடம் ருத்ராவைப் பற்றி வினவினார். வினாயகமூர்த்தி அவனது பெயரைக் கேட்டதும் ஆவேசமானார்.

“அவனுக்கென்ன? நம்ம உசுரை வாங்குறதுக்குனே பிறந்திருக்கான் போல… அவனால எவ்ளோ பெரிய பிரச்சனை நடந்திருக்கு? நீங்க இன்னும் அவனைப் பத்தி விசாரிக்கிறிங்களா சேகர்? அவன் பண்ணுன நம்பிக்கை துரோகத்துக்கு அவனை மன்னிக்கவே கூடாது”

சந்திரசேகர் நம்பிக்கை துரோகம் என்ற வார்த்தையில் முகம் சுருக்கியவர் “அப்பிடி பார்த்தா நான் கூட சிலருக்கு மன்னிக்க முடியாத நம்பிக்கை துரோகத்தைப் பண்ணிருக்கேன்… அந்தப் பாவம் தான் என் பொண்ணோட வாழ்க்கை இப்பிடி ஆயிடுச்சு போல” என்று நைந்த குரலில் கூற மந்தாகினி அவரது கரத்தைப் பற்றியபடி அமர்ந்தவர் ஆறுதலாக

“ஏன் இப்பிடிலாம் பேசுறிங்க சேகர்? நம்பிக்கை துரோகம் பண்ணுனது நீங்க இல்ல… நான் தான்! என்னால தான் உங்களுக்குத் தர்மசங்கடம்… நான் மட்டும் உங்க வாழ்க்கையில வராம இருந்திருந்தா இப்பிடிலாம் நடந்திருக்காது சேகர்” என்று கூற இந்த இருவரின் தர்மச்சங்கடத்துக்கும் சூத்திரதாரியான வினாயகமூர்த்தி மனதிற்குள் குமுறிக் கொண்டார்.

விஸ்வநாதனைத் திட்டம் போட்டு ஆர்.எஸ்.கெமிக்கலில் இருந்து வெளியேற்றி அதற்கு சந்திரசேகர் தான் காரணமென அவரைப் பற்றி சஞ்சீவினியிடம் கூறி இருவருக்கும் சண்டை மூட்டிவிட்டது, சந்திரசேகர் மீது மந்தாகினிக்கு இருந்த மரியாதையை தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு சஞ்சீவினி பொறுப்பின்றி சமூகச்சேவை என சுற்றி சந்திரசேகரை மதிக்காமல் இருப்பது போன்ற பிரம்மையை உண்டாக்கியது மூலமாக மந்தாகினியின் மனதில் அந்த மரியாதையைக் காதலாக உருமாற்றியது, சஞ்சீவினி இல்லாத சமயத்தில் குடிபோதையிலிருந்த சந்திரசேகரின் நிலமை புரியாது மந்தாகினி தன்னை இழந்ததும் சந்திரசேகரையும் சஞ்சீவினியிடமும் வயிற்றுப்பிள்ளையோடு இருந்த மந்தாகினியைக் கொன்று விடுவதாக நாடகம் ஆடியது, அதன் பின்னர் சஞ்சீவினி இப்படிப்பட்ட கணவர் தனக்கு தேவையில்லை என்று மகளுடன் வெளியேறி மணமுறிவு பெற்றதும் மந்தாகினியைத் திருமதி சந்திரசேகராக மாற்றியதோடு அவள் மனதில் சஞ்சீவினி என்று இருந்தாலும் அவளது இடத்தை விட்டுக்கொடுக்கமாட்டார் என்ற பயத்தை உருவாக்கியது என எல்லாவற்றையும் எவ்வளவு கச்சிதமாகச் செய்துள்ளார் அவர்.

ஆனால் இவர்கள் இருவரும் நடந்ததை எண்ணி ஒப்பாரி வைப்பதா என்று கடுப்பானவர் வேறு வழியின்றி இருவருக்கும் ஆறுதல் சொல்கிறேன் என்று இரு வார்த்தைகள் பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

சந்திரசேகர் கண்ணைத் துடைத்துக் கொண்டு “விடு மந்தா! எல்லாம் முடிஞ்சு போச்சு.. முடிஞ்ச விசயத்தைப் பேசி என்னாக போகுது? நம்ம இனிமே ருத்ராவோட வாழ்க்கையைப் பத்தி யோசிப்போம்… நீ இன்னைக்கு சஞ்சீவினியோட வீட்டுக்குப் போய் இஷானியை முறைப்படி நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துடு மந்தா… நம்ம பிரச்சனையைப் பார்த்தா அவங்க வாழ்க்கை அந்தரத்துல நின்னுடும்”

மந்தாகினி சரியென்று தலையாட்டிவைத்தவர் தம்பியின் அறைக்கு அவன் என்ன செய்கிறான் என பார்க்கச் சென்றவர் அவன் அங்கே இல்லையென்றதும் அர்ஜூனின் அறைக்குத் தான் சென்றார். அவரது இத்தனை வருட சேகர் வில்லா வாசத்தில் ருத்ரா ஒன்று அவனது அறையில் இருப்பான், இல்லையென்றால் அர்ஜூனின் அறையில் இருப்பான் என்பதை அறிந்திருந்தார்.

இந்நேரம் அர்ஜூனைப் பள்ளிக்குத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தவனை எட்டிப் பார்த்தபடி உள்ளே நுழைந்தார் மந்தாகினி. தொண்டையைச் செறுமி தனது வருகையை அவனுக்கு அறிவித்தவர்

“இன்னைக்கு அர்ஜூனை அவங்கப்பாவே ஸ்கூல்ல ட்ராப் பண்ணட்டும் ருத்ரா… நீயும் நானும் சஞ்சுக்கா வீட்டுக்குப் போகணும்” என்று கூற ருத்ராவும், பள்ளிச்சீருடைக்கு டை மாட்டிக்கொண்டிருந்த அர்ஜூனும் ஒரே நேரத்தில் திரும்பி பார்த்தனர். இருவரிடமும் ஒரே குரலில்

“நேத்து கல்யாணம் தான் அவசர கதியில நடந்துடுச்சு… மத்த சம்பிரதாயமாச்சும் முறைப்படி நடக்கணும்ல.. இன்னைக்கு நீ மறுவீடு போயே ஆகணும் ருத்ரா… நீ ரெடியாகு… ப்ளீஸ்! மாட்டேனு சொல்லி என் கிட்ட ஆர்கியூ பண்ண ட்ரை பண்ணாதே… உன் கல்யாணத்தை தான் நான் இல்லாம செஞ்சுகிட்ட… மத்த சம்பிரதாயமாச்சும் ஒழுங்கா நடக்கணும்னு நான் ஆசைப்படுறேன்” என்று கேட்டுக் கொண்டார் அவர்.

அர்ஜூன் ருத்ராவை என்ன செய்ய என்பது போல நோக்கியவன் அவன் செல் என்று தலையாட்டியதும் தந்தையுடன் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிக்குச் செல்லச் சம்மதித்தான். அதன் பின் ருத்ரா தனது அறைக்குத் திரும்பியவன் இரவு இஷானியின் பிடிவாதப்பேச்சை நினைவு கூர்ந்தவன் இந்நிலையில் தான் மீண்டும் அங்கே சென்று நின்றால் சஞ்சீவினியின் மனநிலை எவ்வாறு இருக்குமோ என்ற தயக்கத்துடனே தயாரானான்.

அதே நேரம் அர்ஜூன் அதிசயத்திலும் அதிசயமாக அவன் தந்தையுடன் பள்ளிக்குச் செல்லத் தயாராக நின்றிருந்தான். சந்திரசேகர் அவனிடம் வழக்கம் போல ஏதோ வினவ கடமையே என்று பதிலளித்தான் அவன். ருத்ரா தயாராகி கீழே வரவும் அவனுடன் உணவுமேஜைக்கு நகர்ந்தவன்

“மாமா! இன்னைக்கு இஷிக்காவைக் கூட்டிட்டு வந்துடுவிங்களா?” என்று ஆவலாய்க் கேட்க அவனது முகம் வாடுவதைக் காண விரும்பாதவனாய் ஆமென்று சொன்னபடி அவனுடன் சேர்ந்து காலையுணவை வயிற்றுக்குத் தாரை வார்க்க ஆரம்பித்தான் ருத்ரா.

கை பாட்டிற்கு உணவை அள்ளி வாயில் திணித்தது. ஆனால் மனமோ அது என்ன உணவு என்பதைக் கூட கவனியாது வேறு சிந்தனையில் இருந்தது. சிந்தனைக்கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தவனைக் கரையில் இழுத்துப் போட்டது வினாயகமூர்த்தியின் ஆணையிடும் குரல்.

“இன்னையோட உன் ஆல்டர்னேட் டைரக்டர் பதவிக்காலம் முடியுது ருத்ரா… அதோட ஃபார்மாலிட்டியை ஆபிஸ்ல வந்து கம்ப்ளீட் பண்ணிட்டுப் போயிடு”

இதோடு உனக்கும் நிறுமத்துக்கும் சம்பந்தமில்லை; தயவு செய்து மீண்டும் நிறுமம் இருக்கும் திசைப்பக்கம் தலை வைத்துக் கூட படுத்துவிடாதே என்று சொல்லாமல் சொன்னது அவரது குரல்.

ருத்ராவும் மனதிற்குள் “நான் தேவ்வுக்கு ஹெல்ப் பண்ணத் தான் இந்த டெசிக்னேசனை ஏத்துக்கிட்டேன்… அவனுக்கு என்னாலான ஹெல்பை பண்ணிட்டேன்… இனி அவனாச்சு, உங்க கம்பெனியாச்சு… முடிஞ்சா அவனைத் தடுக்க ட்ரை பண்ணிப் பாருங்களேன்” என்று எகத்தாளமாக எண்ணிக் கொண்டவன் மனதின் எண்ணத்தை மறையாது முகத்தில் காட்டிவிட்டு சரியென்று தலையாட்டிவைத்தான்.

காலையுணவு அமைதியுடன் முடிவடைய ருத்ரா மந்தாகினியுடன் சஞ்சீவினி பவனத்துக்குச் செல்ல காருடன் தயாராக நின்றான். அர்ஜூனுக்கு டாட்டா காட்டியவன் மந்தாகினி அவனது காரில் அமரவும் அங்கிருந்து வெளியேறினான்.

அவர்கள் கார் புறப்பட்டதும் வினாயகமூர்த்தி சந்திரசேகரிடம் தனக்கு வெளியில் கொஞ்சம் வேலை இருப்பதாகச் சொல்லி தனிக்காரில் புறப்பட்டுச் சென்றுவிட அர்ஜூன் சென்று சந்திரசேகரின் காரில் அமர்ந்தான். அவர் வினாயகமூர்த்தியின் கார் கிளம்பியதும் தனது காரில் வந்து அமர்ந்தவர் முன்னிருக்கையில் இருந்தபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனை நோக்கி முறுவலித்தவாறே காரைக் கிளப்பினார்.

அதற்கு மகனிடமிருந்து எவ்வித பிரதிபலிப்புமின்றி போகவே இந்த ஜென்மத்தில் பிள்ளைகளின் பாசம் தனக்கு கிட்டுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை போல மனம் வெதும்பினார். அப்படி எண்ணும் போதே அவருக்கு நெஞ்சில் முணுக்கென்று ஒரு வலி வரவும் வலியில் முகம் சுருக்கியவர் காரின் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். கார் வேகம் குறைந்து சாலையோரம் செல்வதைக் கண்டதும் அர்ஜூன் தந்தையின் புறம் திரும்பியபோது தான் அங்கே வலியில் முகம் சுளித்தபடி நெஞ்சைத் தடவியபடி இருந்த சந்திரசேகரின் நிலையைக் கண்டான்.

இயல்பான பாசம் தலை தூக்க “என்னாச்சுப்பா? உங்களுக்கு உடம்பு சரியில்லையா? என்ன பண்ணுதுப்பா?” என்றபடி அவரது முகத்தைப் பார்த்தவனின் அந்தச் சின்னப் பதற்றத்தில் சந்திரசேகருக்கு வலி இருந்த இடம் தெரியாது மறைந்ததைப் போன்ற உணர்வு.

கண்ணைச் சுருக்கியபடி “ஒன்னுமில்ல அஜ்ஜூ! அப்பாக்கு வயசாகுதுல்ல! அதான் ஒவ்வொரு ஆர்கனா ஸ்ட்ரைக் பண்ணுது… அதுக்குக் குடுக்க வேண்டியதை குடுத்துட்டா சரியாயிடும்” என்று சொல்லவும் அவன் முகம் சமாதானமானது.

சந்திரசேகர் சில நிமிடத்தில் வலி இல்லாது போனதால் காரைக் கிளப்பினார். எங்கே அர்ஜூனுக்குப் பள்ளி ஆரம்பித்துவிடுமோ என்ற பதற்றத்துடன் வேகமாகச் செலுத்தியவர் வழக்கமான நேரத்தில் பள்ளியில் சென்று விட்டார். அர்ஜூன் காரிலிருந்து இறங்கியவன் கண்ணாடிக்கதவுக்கு அருகில் நின்றபடி “உங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகலனு நினைக்கிறேன்.. டாக்டரைப் பாருங்கப்பா” என்று கவலை தோய்ந்த குரலில் கூறவும் கண் கலங்கிய சந்திரசேகர்

“எனக்கு ஒன்னுமில்லடா அஜ்ஜூ! நான் பார்த்துக்கிறேன்… நீ டென்சன் இல்லாம கிளாஸுக்குப் போ” என்று சொல்ல அவன் அப்போதும் அவன் அரைமனதுடன் அங்கிருந்து பள்ளியை நோக்கிச் சென்றான். சந்திரசேகர் மகனது இந்தச் சின்னச் செய்கை கொடுத்த நெகிழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் காரை எடுத்தார்.

அதே நேரம் சஞ்சீவினி பவனத்தினுள் காலடி எடுத்துவைத்த மந்தாகினியும் ருத்ராவும் அங்கே அவர்களுக்கு முன்னரே வந்திருந்த அஸ்மிதாவையும் சாந்தினியையும் கண்டு திகைத்துப் போய் நின்றிருந்தனர்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛