🌞 மதி 27 🌛

தானமும் தர்மமும் வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். எனவே முறையாக ஒரு குடும்பத்தலைவியால் வழிநடத்தப்படும் குடும்பம் என்றுமே அவளது சமூகப்பணிகளுக்குத் தடையாக இருக்காது சாவித்ரி நிகம் (முன்னாள் லோக்சபா மற்றும் ராஜ்ஜியசபா உறுப்பினர்)

அழைப்புமணி அடித்ததும் யாரென்று பார்க்க விரைந்தான் ஜெய். கை எல்லாம் காய்கறி வெட்டி அழுக்காக இருக்க மெதுவாகக் கதவைத் திறந்தவன் வாயிலில் நின்றவளைக் கண்டதும் திகைத்துப் போனான். இவள் இங்கே என்ன செய்கிறாள் என்று ஆச்சரியப்பட்டவாறே “நீங்க இங்க என்ன பண்ணுறிங்க அஸ்மி?” என்று கேட்டது தான் தாமதம் அஸ்மிதாவின் முகத்தில் புன்னகை விடைபெற்று கோபம் வந்து பட்டா போட்டு அமர்ந்தது.

இவனைக் காண வீட்டுக்கு வந்திருப்பவளை உள்ளே அழைத்து உபசரித்தால் அவ மனிதன். அதை விட்டுவிட்டு ஏன் வந்தாய் என்ற ரீதியில் விசாரித்தவனின் செய்கையில் அவளுக்கு ஏன் இங்கே வந்தோம் என்று தன் மீதே வெறுப்பு உண்டாக அதை துளி கூட மறையாது முகத்தில் காட்டியபடி

“சாரி சார்! தெரியாம வந்துட்டேன்… இனிமே வர மாட்டேன்” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்ல முயன்றவளின் கரம் பற்றி நிறுத்தினான் ஜெய்.

“கொஞ்சம் நில்லுங்க… ஏன் எடுத்ததும் கோவப்படுறிங்க அஸ்மி? இங்க என்ன பண்ணுறிங்கனு கேட்டது குத்தமா?”

“ஆமா! குத்தம் தான்…. பின்ன என்னவாம்? உன் வீட்டு வாசல்ல வந்து நிக்கிறவங்க உன்னைப் பார்க்கத் தான் வருவாங்கனு உனக்குத் தெரியாதா? சும்மா ஏன் வந்த, எதுக்கு வந்தனு கேட்டா எரிச்சலா இருக்கு… முதல்ல என் கையை விடு… இல்லனா அவ்ளோ தான்” என்று அவள் மிரட்டவும் பதறிப் போய் கையை விட்டான் ஜெய்.

ஆனால் அடுத்த நிமிடமே “சாரி அஸ்மி! உங்களை பார்த்த ஷாக்ல நான் என்ன பேசணும்னு தெரியாம பேசிட்டேன்… ரியலி சாரி! ப்ளீஸ் உள்ளே வாங்க” என்று சொல்ல அஸ்மிதா வர முடியாது என்று முறுக்கிக் கொண்டவள் திரும்பிச் செல்ல எத்தனிக்க ஜெய் வேகமாக அவளது வழியை மறித்தான்.

“ஐ அம் சாரி அஸ்மி! தெரியாம பேசிட்டேன்… ப்ளீஸ் உள்ளே வாங்க” என்று அவன் மீண்டும் கேட்டுக்கொள்ளும் போதே பக்கத்து ஃப்ளாட்டின் கதவு திறந்து அதிலிருந்து வெளியேறிய முதியவர் ஒருவர் ஜெய்யைக் கேலியாகப் பார்த்துவிட்டு

“என்னடாப்பா கேர்ள் ஃப்ரெண்டுக்கு உன் மேல கோவமா? சும்மா கையைக் கட்டிட்டு நிக்கிறதுக்குப் பதிலா கால்ல விழுந்துடுடா ராஜா… பொதுவா பொண்ணுங்களுக்கு இரக்கச்சுபாவம் ஜாஸ்தி… அதனால உன்னை மன்னிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு” என்று அஸ்மிதாவுக்குப் பாயிண்ட் எடுத்துக் கொடுத்துவிட்டு கைத்தடியுடன் அகன்றார்.

அவர் சொன்னதும் அஸ்மிதாவின் மனதிலும் அப்படி ஒரு எண்ணம் உதிக்கவே, அவளது முகத்தில் வந்த திடீர் பிரகாசத்தில் ஜெர்க் ஆன ஜெய் “நோ அஸ்மி! அப்பிடிலாம் யோசிக்காதிங்க… நான் யாரு கால்லயும் விழ மாட்டேன்” என்று சொல்லும் போதே என்னை காலில் விழச் சொல்லிவிடாதே எனும் பரிதாபத்தொனியில் அவன் குரல் ஒலிக்க அஸ்மிதா சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள்.

“டோண்ட் ஒரி! நான் உன்னைக் கால்ல விழச் சொல்லமாட்டேன்.. பயப்படாத” என்றபடி அவனைத் தள்ளி நிறுத்திவிட்டு அவனது ஃப்ளாட்டுக்குள் நுழைந்தாள்.

ஃப்ளாட்டின் உள் அலங்காரத்தைச் சிலாகித்தவள் “நாட் பேட்! இண்டீரியர் செமயா இருக்கு ஜெய்… பேச்சிலரோட வீடு மாதிரியே இல்ல” என்று வாய் விட்டுப் புகழ ஆரம்பிக்கவும் ஜெய்யின் முகத்தில் பெருமிதம் பொங்கியது.

அந்த வீட்டை அலசி ஆராய்ந்த அஸ்மிதாவின் பார்வை ஒரு புகைப்படத்தில் பதியவும் அதை கேள்வியுடன் நோக்கினாள் அவள். அப்புகைப்படத்தில் கண்ணாடி போட்டு ஒரு ஆணும், அவரருகில் திருத்தமான முகலெட்சணத்துடன் ஒரு பெண்ணும் இருக்கும் புகைப்படம். அப்பெண்மணியின் ஆர்ப்பாட்டமற்ற அழகு அவளை ஈர்த்தது. புருவமத்தியிலுள்ள அரக்குவண்ணப்பொட்டின் கீழே துலங்கிய சந்தனக்கீற்றுடன் லெட்சுமிகடாட்சமான முகம்.

அஸ்மிதா அவர்களின் புகைப்படத்தை ரசித்தவள் “யாரு ஜெய் இவங்க? கியூட் கபிள்ஸ்… பட் போட்டோ ரொம்ப பழசா இருக்கு” என்று கேட்க

“என்னோட அம்மாவும் அப்பாவும்” என்றவனின் குரலில் எப்போதும் இருக்கும் அப்பாவித்தனத்துடன் வருத்தமும் கலந்திருக்க அஸ்மிதாவுக்குத் தான் தவறாக எதுவும் கேட்டுவிட்டோமோ என்ற தவிப்பு. அதோடு தான் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்ததாக அவன் முன்னமே கூறியிருந்தானே என்பது நினைவில் வரவும் உண்மையான வருத்ததுடன்

“சாரி ஜெய்! உனக்கு வருத்தம் வர்ற மாதிரி நான் கேள்வி கேட்டுட்டேனா? ஐ அம் ரியலி சாரி” என்று அவனிடம் மன்னிப்பு வேண்டியவளை ஏறிட்ட ஜெய்

“தப்பா எதுவும் கேக்கல அஸ்மி… அவங்க ரெண்டு பேரையும் நான் ஒரு ஆக்சிடெண்ட்ல இழந்துட்டேன்…. அப்புறம் தான் ஆசிரமத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போனாங்க… வாழ்க்கை அங்கேயே ஓடிருமோனு பயந்த நேரத்துல எனக்கு சில நல்ல மனுசங்க ஸ்பான்சர் பண்ணுனாங்க… அவங்களால தான் நான் இன்னைக்கு இப்பிடி ஒரு நல்ல நிலமையில இருக்கேன் அஸ்மி” என்று சொல்லிவிட்டு இன்னும் வருத்தம் தீராத முகத்துடன் நின்றிருந்தான்.

அஸ்மிதா அவனைத் தேற்று வழியறியாது விழித்தவள் திடீரென்று உதித்த யோசனையுடன் “ஓகே மிஸ்டர் ஜெய்! வருத்தப்பட்டு நின்னது போதும்… உன் வீட்டுக்கு ஃபர்ஸ்ட் டைம் நான் வந்திருக்கேன்… எனக்கு காபி, டீ, கூல் டிரிங்ஸ்னு எதுவுமே கிடையாதா? என்னப்பா உனக்கு விருந்தோம்பலே தெரியலையேப்பா” என்று அங்கலாய்க்க அவனும் சோகத்தை ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு அவளுக்காக காபி போடுவதற்கு சென்றான்.

சில நிமிடங்களில் கையில் காபி கப்புடன் திரும்பியவன் அவளிடம் நீட்டிவிட்டு சோபாவில் அமர்ந்தான். அஸ்மிதா அவன் நீட்டிய காபியை ஒரு வாய் குடித்துவிட்டு முகத்தைச் சுழிக்கவும்

“என்னாச்சுங்க? காபி நல்லா இல்லையா?” என்று கேட்டான் ஜெய்.

“இது காபியா? கஷாயமா? சுகர் போட மறந்துட்டியா? ஐயோ கடவுளே! நீ இந்த லெட்சணத்துல காபி போட்டேனா கல்யாணத்துக்கு அப்புறம் உன் ஒய்ப்புக்கு எப்பிடி வாய்க்கு ருசியா சமைச்சு போடுவ?” என்று பதிலுக்குக் கேட்டாள் அஸ்மிதா.

“சுகர் இல்லையா? நாலு ஸ்பூன் போட்டேங்க” என்றவனைப் பார்த்துத் தலையிலடித்துக் கொண்டாள் அஸ்மிதா.

“ஒரு கப்புக்கு நாலு ஸ்பூன் எப்பிடி பத்தும்?”

“ஐயோ! நான் இரண்டு கப்புக்கு நாலு ஸ்பூன் போட்டேனு சொன்னேங்க”

“வாட்? உன்னை என்ன பண்ண ஜெய்? என் வாழ்க்கையில இவ்ளோ கசப்பு காபியைக் குடிச்சதே இல்ல”

கப்பை மேஜை மீது வைத்துவிட்டவள் சட்டென்று எழவும் ஜெய்யும் அவளுடன் சேர்ந்து எழுந்தான்.

அவன் கையிலுள்ள கப்பைப் பிடுங்கியவள் அதை மேஜை மீது வைத்துவிட்டு “நீ என் கூட வா… நல்ல காபி எப்பிடி இருக்கும்னு நான் உனக்கு டெமோ காட்டுறேன்” என்று சொல்ல ஜெய் கூட அஸ்மிதா சமையலறையில் நுழைந்து காபி போடப்போகிறாள் போல என்று நினைத்துக் கொள்ள அவளோ அவனை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றாள்.

“டோரை லாக் பண்ணிட்டு வா” என்று சொன்னவளை அவன் கேள்வியாய் நோக்கவே அவளே கதவைப் பூட்டிவிட்டுச் சாவியை அவனிடம் கொடுக்க

“நீங்க நல்ல காபி எப்பிடி இருக்கும்னு டெமோ காட்டுறேனு சொன்னிங்களே… கிச்சன் வீட்டுக்குள்ள இருக்கு அஸ்மி” என்று நினைவுறுத்த அஸ்மிதா இவன் என்ன உளறுகிறான் என்ற ரீதியில் பார்த்தவள்

“நல்ல காபினு தானே சொன்னேன்… நான் போடுற காபினு சொல்லலையே… உனக்கு நல்ல காபி வேணுமா? இல்ல நான் போடுற காபி வேணுமா? உண்மையைச் சொல்லணும்னா என்னோட காபி உன் காபியை விட கேவலமா இருக்கும்… பரவால்லைனா சொல்லு” என்று வீட்டைத் திறக்க முற்பட்டவளைப் பதறிப்போய் தடுத்தான் ஜெய்.

“ஐயோ அப்போ வேண்டாங்க… நம்ம நீங்க சொல்லுற ‘நல்ல’ காபியே குடிப்போம்” என்று அழுத்திச் சொல்ல அஸ்மிதாவுக்குத் தான் ஏன் அவனுடன் வெளியே செல்ல வேண்டும் என்றோ ஜெய்கு தான் ஏன் இவள் போடும் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு இவள் பின்னே செல்ல வேண்டும் என்றோ தோணாதது தான் ஆச்சரியம்.

சொன்னபடி அவனை ஸ்கூட்டியில் ஏறச் சொன்னவள் பின்னே திரும்பி “லாஸ்ட் டைம் மாதிரி எதுவும் நடந்துச்சுனு வையேன்” என்று ஆட்காட்டிவிரலை நீட்டி மிரட்ட

“ஐயோ நான் கீழே விழுந்தாலும் விழுவேனே தவிர உங்களை டச் பண்ணவே மாட்டேங்க” என்று சொல்லி கையை உயர்த்தியவன் சொன்ன பாவனையில் சிரிப்பை அடக்க முயற்சித்தவள் ஸ்கூட்டியைக் கிளப்பினாள்.

சொன்னபடி அவளும் இஷானியும் கல்லூரி நாட்களில் காபி அருந்தும் கடையில் காபியை வாங்கிக் கொடுத்தவள்

“எப்பிடி இருக்கு காபி?” என்று பெருமிதத்துடன் புருவம் உயர்த்தி ஜெய்யிடம் வினவ

அவனோ “ம்ம்.. பாயாசம் மாதிரி இருக்கு” என்றான் கேலியாக.

“இது தான் காபி… அந்த அண்ணா எனக்குத் தெரிஞ்சவர் தான்… வேணும்னா அவர் கிட்ட எப்பிடி காபி போடணும்னு கத்துக்கோ… வருங்காலத்துக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்று சொல்ல ஜெய் அதற்கும் தலையாட்டி வைத்தான்.

“நான் என்ன சொன்னாலும் தலையாட்டுவியா ஜெய்? நான் ஏன் சமைக்கணும்? எனக்கு வரப்போறவ சமைச்சுப் போடட்டும்னு சொல்ல மாட்டியா?” என்று கேலி செய்தபடி காபியை அருந்தினாள் அவள்.

“என் லைப்ல மேரேஜ்லாம் சாத்தியமில்ல அஸ்மி” என்றான் ஜெய் மெதுவாக.

அஸ்மிதா இவன் ஏன் இப்படி சொல்கிறான் என்று யோசித்தவள் ஒருவேளை இவன் யாரையும் காதலித்து அந்தப்பெண்ணைத் திருமணம் செய்ய முடியாத விரக்தியில் பேசுகிறானோ என்று தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். அப்படி எண்ணும் போதே மனம் சோர்வடைய அவனிடமே நேரடியாகக் கேட்டுவிட முனைந்தவளாய்

“ஏன் அப்பிடி சொல்லுற? உனக்கு எதாச்சும் லவ் ஃபெயிலியர்….” என்று இழுத்தவளுக்கு அவனுக்கு ஒரு முன்னாள் காதலி இருப்பாளோ என்ற ஊகமே கசந்தது. அப்படி அவனுக்கு முன்னாள் காதலி இருந்தால் தனக்கு ஏன் அது கஷ்டமாகத் தோண வேண்டும் என்று சிந்திக்கவில்லை அவள்.

அவன் தனது கேள்விக்கு என்ன பதிலளிக்கப் போகிறானோ என்ற பதற்றத்தில் அவள் விழிகள் படபடக்க இதயம் தாறுமாறாகத் துடிக்க காத்திருக்க ஜெய்யோ சாவகாசமாகக் காபியை ஒரு சொட்டு விடாமல் அருந்தி முடித்தவன் அஸ்மிதாவின் கண்ணில் தெரிந்த பதற்றத்தைக் கண்ணுற்றவனாய் இல்லையென்று மறுப்பாய் தலையசைத்தான்.

அந்த ஒரு தலையசைப்பில் உலகத்தின் மொத்தச் சந்தோசமும் கிடைத்ததாய் மகிழ்ந்த அஸ்மிதாவின் முகத்தில் அவனுக்கு முன்னாள் காதலி என்று யாருமில்லை என்ற செய்தி தெரிந்ததால் உண்டான மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிய அவள் முகம் விகசித்தது.

“நான் ஒரு ஆர்ஃபன்… என்னை கல்யாணம் பண்ணிக்க எந்தப் பொண்ணு ஒத்துப்பா அஸ்மி? எல்லா பேரண்ட்சும் தன்னோட பொண்ணுக்கு அழகானக் குடும்பம் வேணும்னு நினைப்பாங்களே தவிர குடும்பமே இல்லாத என்னை மாதிரி ஒருத்தனை எப்பிடி நம்பி கல்யாணம் பண்ணி குடுப்பாங்க?”

அவனது கேள்வி அஸ்மிதாவுக்கு மிகவும் அபத்தமாகப் பட்டது. ஆனால் வெளிக்காட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை. இப்போதைக்கு ஜெய் யாரையும் இது வரை மனதால் கூட எண்ணியதில்லை என்ற ஒரு விசயமே அவளுக்குப் பெரும் நிம்மதியை அளித்தது. இருவரும் காபி குடித்தப் பேப்பர் கப்களை எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு “கிளம்புவோமா?” என்று கேட்க ஜெய்யும் அதற்குள் காபிக்குப் பணம் கொடுத்துவிட்டு அவளுடன் சேர்ந்து நடந்தான்.

இதில் ருத்ராவும் இஷானியும் தங்களை மறைந்திருந்து பார்த்த விஷயம் எதுவும் இருவருக்கும் தெரியாது. அஸ்மிதா ஜெய்யை பத்திரமாக அவனது வீட்டில் இறக்கிவிட்டவள் சஞ்சீவினி பவனத்தை நோக்கி ஸ்கூட்டியைச் செலுத்தினாள்.

வீட்டின் கேட் திறந்திருக்க வண்டியை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு மனம் நிறைந்த மகிழ்ச்சியில் முகமெல்லாம் பூரிப்புடன் நடைபாதையின் நடுவே நடந்து வந்தவளின் விழியில் விழுந்தனர் வராண்டாவில் அமர்ந்திருந்த ருத்ராவும் இஷானியும். இருவரின் விழிகளும் குறுகுறுவென்று அவளை நோக்கவும் அஸ்மிதா அவசர அவசரமாக முகத்தைச் சீர்படுத்திக் கொண்டாள்.

முகத்தைச் சாதாரணமாக வைத்தபடி அவர்களை நெருங்கியவள் “மாமா கவுன்சலிங் நல்ல படியா முடிஞ்சுதா? இஷி இப்போ எப்பிடி ஃபீல் பண்ணுற நீ?” என்று கேட்க இருவரும் அமைதியாக அவளை ஏறிட்டனரே தவிர வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

அஸ்மிதா இவர்களுக்கு என்னவாயிற்று என்று யோசிக்கும் போதே இஷானி “காபி எப்பிடி இருந்துச்சு அஸ்மி?” என்று கேட்க அவளின் கண்கள் அகல விரிய ருத்ராவும் அதே கேள்வியைக் கேட்டுவிட்டு கையைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.

இருவரும் அவளது பதிலுக்காகக் காத்திருக்க அஸ்மிதாவோ தவறு செய்துவிட்டு மாட்டிக்கொண்ட குழந்தையைப் போல திருதிருவென்று விழித்தாள். இவ்வாறு நடப்பது அவள் வாழ்வில் இது தான் முதல் முறை. இதுவரை இஷானியிடமோ, சஞ்சீவினியிடமோ, தாத்தா பாட்டியிடமோ அவள் எதற்காகவும் பொய் சொன்னதில்லை. பள்ளிப்பருவத்திலும் கல்லூரிப்பருவத்திலும் தினந்தினம் என்ன நடந்தது என்று ஒன்று விடாமல் வீட்டில் வந்து ஒப்பிப்பவள் அவள். அப்படிப்பட்டவள் இன்று ஜெய் விசயத்தில் பொய் சொல்லிவிட்ட குற்றவுணர்வு நெஞ்சை குறுகுறுக்கச் செய்ய என்ன பதில் சொல்வது என்று புரியாமல் விழித்தாள்.

அவளை இதற்கு மேல் தர்மச்சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத இருவரும் அமைதியாக ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள அஸ்மிதாவின் வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட வெளியே வரவில்லை. இஷானி அவளது இந்தச் செய்கையில் அவளது இயல்புக்கு மாறாக எரிச்சலுற்றவள்
“நீ பதில் சொல்லவேண்டாம் அஸ்மி… இனிமே நான் உன் கிட்ட இதைப் பத்தி பேச மாட்டேன்” என்று இறுக்கமான குரலில் உரைத்துவிட்டு அவளது பதிலை எதிர்பார்க்காமல் விறுவிறுவென்று வீட்டினுள் சென்றாள்.

உண்மையில் அவளுக்கு அஸ்மிதா ஜெய்யைச் சந்தித்ததில் கோபம் இல்லை. அவனைச் சந்திக்கச் செல்பவள் ஏன் பொய் உரைக்கவேண்டும் என்ற கேள்வி தான் அவளது மூளையைக் குடைந்தது. அதோடு சில நாட்களுக்கு முன்னே வந்தவனுக்காக அஸ்மிதா தங்களிடம் பொய் உரைத்திருக்கக் கூடாது என்ற ஆதங்கமும் தான் அவளது இப்போதைய முன்கோபத்துக்குக் காரணம்.

இஷானி திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் சென்றதைப் பார்த்துவிட்டு  ருத்ரா பெருமூச்சுடன் எழுந்தவன் “உன்னை நான் ரொம்ப சின்னப்பொண்ணுனு நினைச்சேன்… ஆனா நீ இவ்ளோ தெளிவா பொய் சொல்லுற அளவுக்குப் பெரிய பொண்ணா வளர்ந்துட்ட அஸ்மி” என்று சொல்லிவிட்டுப் பார்க்கிங்கில் நிற்கும் அவனது காரை நோக்கிச் சென்றான்.

அஸ்மிதா இருவரிடமும் மனதிலுள்ள சந்தோச நினைவுகளைக் கொட்டலாம் என்று எண்ணினாலும் ஏதோ ஒன்று தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொண்டு அவளைப் பேசாதே என்று தடுத்தது. இன்னும் தானே முழுதாக உணராத உணர்வை எப்படி அவர்களிடம் சொல்வது என்ற தயக்கம் தான் அஸ்மிதாவை அமைதியாக்கியது. ஆனால் இப்படி இருவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வார்கள் என்று தெரிந்திருந்தால் அவள் வந்தவுடனே சொல்லியிருப்பாள் என்பதே உண்மை.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛