🌞 மதி 26 🌛

உலக மக்கள் தொகையில் 1.6 சதவீதம் இடையிலிங்கத்தவர் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது. இப்படி இந்தியாவில் இடையிலிங்கமாகப் பிறக்கும் குழந்தைகளில் சராசரியாக ஆண்டுக்கு 10 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்படுகின்றனர்.

இஷானியின் மனரீதியான பாதிப்புக்கு எப்போதுமே கவுன்சலிங் தீர்வாகாது என்பதை செழியன் உறுதியாகத் தெரிவித்துவிட்டார். அவளது பிரச்சனை யாரும் நினைவுப்படுத்தாத வரைக்கும் அவள் மனதிலேயே உறைந்திருக்கும் என்று புரியவைத்தவர் மற்றபடி அவள் சாதாரணமாகத் தான் இருப்பாள் என்பதை சஞ்சீவினியிடம் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். இருந்தாலும் இம்முறை எழுந்த பிரச்சனையிலிருந்து அவள் வெளிவருவதற்காக மட்டும் கவுன்சலிங் அளித்தார்.

ஒவ்வொரு முறையும் சஞ்சீவினியுடன் செழியனின் கிளினிக்குக்குச் சென்று கொண்டிருந்தவள் கடைசி முறை சென்ற போது ருத்ரா அடம்பிடித்து அவளுடன் வருவதாகச் சொன்னபோது சஞ்சீவினி எந்த மறுப்பும் சொல்லாமல் அனுப்பிவைக்கவே அவனை எதுவும் சொல்ல இயலாதவளாய் மவுனமாய் அவனுடன் சென்றாள்.

ருத்ரா இஷானியை அன்புடன் நடத்துவதையும் அவனது விழிகளில் பொங்கி வழியும் காதலையும் கண்டு கொண்ட செழியன் அவனிடம் “இஷியோட காதலை அடைய நீ ரொம்ப கஷ்டப்படணும் ருத்ரா… ஒரு பொண்ணுக்கு காதலிக்கிறவன் மேல முதல்ல வர வேண்டிய உணர்வு நம்பிக்கை… அன்ஃபார்சுனேட்லி அவளோட வாழ்க்கையில ஒரு ஆணை நம்புறதுக்கான வாய்ப்பு அவளுக்கு கிடைக்கவே இல்ல… அவளோட பயலாஜிக்கல் ஃபாதர் சின்ன விஷயத்துக்கு அவளை வெறுத்து வேண்டானு தூக்கிப் போட்டது அவ மனசுல அழியாத ரணமா இருக்கு.

அதே மாதிரி அவளுக்கு எல்லாமுமா இருக்கிற சஞ்சுவோட வாழ்க்கையில சந்துரு பண்ணி வச்ச வேலை அவளுக்கு இன்னுமே ஆண்கள் மேல ஒரு நம்பிக்கையில்லாத்தன்மையை தான் உண்டாக்கியிருக்குது… நீ முதல்ல அடைய வேண்டியது அவளோட மனசையோ காதலையோ இல்ல… அவளோட நம்பிக்கையை… அதை மட்டும் உன் மனசுல வச்சுக்கோ” என்று இஷானியின் நிலையை விளக்கியபிறகு ருத்ராவுக்கும் தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது புலப்பட்டது.

அன்று கிளினிக்கிலிருந்து வீடு திரும்பும் வழியில் கூட அவளுடன் பேசாது வந்தவனைப் பார்த்து இஷானிக்கே ஆச்சரியம் தான். இவனால் இவ்வளவு நேரம் தன்னைச் சீண்டி கோபப்படவைக்காமல் இருக்க முடியாதே என்ற யோசனையுடன் தொண்டையைச் செருமிக் கொண்டாள்.

ருத்ரா என்ன என்பதை போல திரும்பிப் பார்க்க அவள் “அங்கிளோட கிளினிக்ல வாய் பேசாம இருக்கிறதுக்காக எதுவும் இன்ஜெக்சன் போட்டாங்களா உங்களுக்கு?” என்று அப்பாவி போல கேட்க அவன் அதற்கு பதிலளிக்காமல் இதழை விரித்துப் புன்னகைக்க முயன்றவாறே சாலையில் கண் பதித்திருந்தான். இருவரும் தற்போது காரில் சஞ்சீவினி பவனத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

“பக்கத்துல ஒரு அழகான தேவதையை வச்சுக்கிட்டு அவளை ரசிக்காம வெட்டியா பேசுறவன் முட்டாள்னு ஒரு ஜென் தத்துவம் இருக்கு இஷி.. அதைத் தான் ஃபாலோ பண்ணுறேன்”

“இதுக்கு நீங்க பேசாமலே இருக்கலாம்”

“இஸிண்ட்? இன்னொரு ஜென் தத்துவமும் இருக்கு… பொதுவா அழகா இருக்கிற பொண்ணுங்களுக்கு அவங்க அழகுங்கிற விஷயத்தை யாராவது சொன்னா வெளிப்பார்வைக்குக் கோவப்பட்டாலும் மனசுக்குள்ள சந்தோசப்படுவாங்களாம்… இது உண்மையா இஷி?”

“இதை தெரிஞ்சுகிட்டு நீங்க என்ன பண்ண போறிங்க?”

“பொது அறிவை வளர்த்துக்கத் தான் இஷி”

“இஸிண்ட்? பொது அறிவுல எப்போ சார் பொண்ணுங்களோட சைக்காலஜியை சேர்த்தாங்க?”

“ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் என்னோட பொது அறிவுல பொண்ணுங்களோட சைக்காலஜினு ஒரு சப்ஜெக்டை ஆட் பண்ணிக்கிட்டேன் மேடம்… அதுல இந்த மாச சிலபஸ்ல இருக்கிற ஃபர்ஸ்ட் லெசன் என்ன தெரியுமா?”

“அதுக்கும் எதாவது ஆன்சர் வச்சிருப்பிங்க… சோ நீங்களே சொல்லிடுங்க சார்”

“ஹவ் டு வின் இஷானிஸ் ஹார்ட்?… எனக்கு இந்த சப்ஜெக்ட்ல டிஸ்டிங்சன் வாங்கணும்னு ஆசை… அதுக்குத் தான் ராத்திரி பகல் பார்க்காம உழைக்கிறேன்”

ருத்ரா பதிலுக்குப் பதில் சளைக்காமல் பேசியதைக் கேட்டு இஷானி தான் இப்போது அயர்ந்து போனாள். அவனிடம் பேசப் போனவள் சாலையோரத்தில் தெரிந்த காட்சியில் விழி விரிய “மாமா காரை நிறுத்துங்க ப்ளீஸ்” என்று அவசரமாகச் சொல்ல அவன் என்னவோ ஏதோ என்று பதறியவனாய் ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு

“எதுக்கு காரை நிறுத்த சொன்ன இஷி?” என்று வினவ அவளோ காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவாறே வெளியே தெரிந்த காட்சியை எட்டிப்பார்த்தபடி தன்னருகே வருமாறு ருத்ராவுக்கு சைகை காட்ட அவனும் என்னவென்று பார்க்க ஆரம்பித்தான். பார்த்தவனின் விழிகளும் இஷானியின் விழிகளைப் போல விரிய இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.

பின்னர் ஒரே குரலில் “ஹவ் இஸ் இட் பாஸிபிள்?” என்று கிட்டத்தட்ட கத்தியே விட்டனர். ஏனெனில் சாலையோரத்தில் இருந்த ஒரு நடுத்தரமான டீக்கடையின் இரும்புமேஜையில் கையூன்றி காபியை அருந்தியபடி தன்னெதிரே நின்றிருந்தவனிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவள் அஸ்மிதா.

இருவராலும் தங்கள் கண்களையே நம்ப முடியவில்லை. அதிலும் ருத்ராவால் இக்காட்சியை நம்பவே முடியவில்லை. ஏனெனில் செழியன் இஷானியின் பிரச்சனையாகச் சொன்ன ஆண்கள் மீதான நம்பிக்கை பற்றிய வரையறை அஸ்மிதாவுக்கும் நூறு சதவிகிதம் பொருந்தும். சந்திரசேகர் செய்த ஒரே ஒரு தவறு ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையும் சந்தேகக்கண்ணுடன் அவரது மகள் நோக்குவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

அவ்வாறு இருக்க அப்படிப்பட்ட அஸ்மிதா யாரோ ஒரு இளைஞனுடன் சகஜமாகச் சிரித்துப் பேசுவது என்றால் அது சாத்தியமற்ற ஒன்றே என இஷானியும் ருத்ராவும் எண்ணினர்.

இருவரும் இக்காட்சியைக் கண்டபின்னர் யோசனையில் ஆழ ருத்ரா கார்க்கதவைத் திறந்தவன் அவர்களை நோக்கிச் செல்ல முற்பட இஷானி அவசர அவசரமாக அவனுக்கு முன்னரே இறங்கி அவன் முன்னே சென்று வழி மறிப்பதைப் போல நின்று கொண்டாள்.

“இப்போ என்ன பண்ண போறிங்க மாமா?”

“வழியை விடு இஷி… அவன் யாருனு நான் பார்க்கணும்”

“பார்த்து என்ன பண்ணுவிங்க? அவன் அஸ்மியோட ஃப்ரெண்டா இருக்கலாம்… இல்லனா நம்ம ஆபிஸ் சம்பந்தப்பட்ட வேலையா கூட அஸ்மி அவன் கூட பேசலாம் தானே… நம்மளே எதாவது கற்பனை பண்ணிக்க வேண்டாம்”

“இஸிண்ட்? அவ மேல எனக்கு அக்கறை இருக்கு… அவளுக்கு நல்லது கெட்டது சொல்லுறதுக்கு எனக்கு முழு உரிமையும் இருக்கு… ப்ளீஸ் மூவ் அ லிட்டில்”

இதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்பதை புரிந்து கொண்ட இஷானி அவனுடன் சேர்ந்து தானும் செல்ல எண்ணியவளாய் ருத்ராவுடன் அந்த டீக்கடையை நோக்கி நடைபோட்டாள்.

இருவரும் அஸ்மிதாவின் கண்ணுக்குத் தட்டுப்படாத இடமாய் பார்த்து நின்று கொண்டபடி அவளுடன் இருக்கும் வாலிபன் யாரென்று பார்க்க முயன்றனர். அதே நேரம் அஸ்மிதா காபியைக் குடித்து முடித்தவள் இருவரது பேப்பர் கப்களையும் கசக்கிக் குப்பைத்தொட்டியில் வீசுவதற்காக விலக அவளுடன் பேசிக்கொண்டிருந்த ஜெய் இருவரின் கண்ணிலும் பட்டுவிட்டான்.

அவனைக் கண்டதும் இஷானிக்கு இருமடங்கு ஆச்சரியம். துளி நிறுவனத்துக்கு வாரா வாரம் வந்தாலும் ஜெய் யாரிடமும் தேவையின்றி பேசுவது இல்லை. சஞ்சீவினியையோ இஷானியையோ கண்டால் சிறு புன்னகை மட்டும் சிந்துபவன் வாய் விட்டுப் பேசுவது அங்குள்ள குழந்தைகளிடம் மட்டுமே. அஸ்மிதாவைக் கண்டால் அவன் கண்ணில் ஒட்டிக்கொள்ளும் பதற்றம் காரணமாக அவளுடன் அவன் சகஜமாக உரையாடினாலும் பார்ப்பவர் கண்ணுக்கு அவன் பயந்து பயந்து பேசுவது போல தான் தோற்றமளிக்கும்.

அதே போல அஸ்மிதாவும் ருத்ரா, ராஜகோபாலனைத் தவிர மற்ற ஆண்கள் அனைவரையும் ஒருவித சந்தேகத்துடனே நோட்டமிட்டுப் பழகியவள் ஜெய்யிடம் இப்போதெல்லாம் சந்தேகம் அகல சகஜமாகப் பேசுவது ருத்ராவுக்குத் தெரியும் என்றாலும் அவையனைத்தும் துளி நிறுவன வளாகத்துடன் முடிந்து போய்விடும் என்று எண்ணியிருந்தான் ருத்ரா.

ஆனால் வெளியிடத்தில் சந்தித்துப் பேசுமளவுக்கு அவர்களது பழக்கம் வளர்ந்திருப்பது அவனது ஆச்சரியத்தைக் கொடுத்தது. அதே போல தான் இஷானிக்கும். இன்றைக்குக் காலையில் இவள் என்ன சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றெல்லாம் யோசித்தவளுக்கு அஸ்மிதாவின் நடவடிக்கை புரியாத புதிராகத் தெரிந்தது.

ஆனால் சமீபகாலங்களில் ஜெய்யைக் காணும் போதெல்லாம் அவள் கண்ணில் தெரியும் அதிகபட்ச ஆர்வமும், அவனுடன் சிரித்துப் பேசும் போதும், அவனைக் கேலி செய்யும் போதும் அஸ்மிதாவை ரசனையுடன் நோக்கும் ஜெய்யின் கண்களும் இஷானியின் பார்வைக்குத் தப்பவில்லை. அந்த நான்கு விழிகளும் பேசும் மொழியைப் புரிந்து கொள்ள முடியாதளவுக்கு இஷானி ஒன்றும் தத்தி அல்லவே! எனவே அவர்களின் பேச்சில் குறுக்கிட விரும்பாமல்

“நம்ம கிளம்பலாம் மாமா” என்று கேட்ட இஷானியை ஏறிட்டவன்

“கிளம்பலாம்னு சொல்லுற? அஸ்மியை அந்த ஜெய் கூடத் தனியா விட்டுட்டுக் கிளம்பலாம்னு சொல்ல உனக்கு எப்பிடி மனசு வருது இஷி?” என்று படபடத்தான்.

இஷானி இடுப்பில் கையூன்றி அவனை முறைத்தவள் “அவ தனியா இருக்காளா? சுத்தி முத்தி பாருங்க மாமா… எவ்ளோ பேரு இருக்காங்க! அதோட ஜெய் ஒன்னும் பூச்சாண்டி இல்ல, அஸ்மியைப் பிடிச்சுட்டுப் போறதுக்கு” என்று சொன்னவள்

“பை த வே ஒரு வேளை உங்களோட அஸ்மிகுட்டியும் அவளோட இந்த மாச சிலபஸ்ல டிஸ்டிங்சன் வாங்க டிரை பண்ணுறாளோ என்னவோ?” என்று கேலியாய்க் கேட்டுவிட்டு ருத்ராவைப் பார்க்க அவனோ இவள் என்ன உளறுகிறாள் என்ற ரீதியில் இஷானியை ஏறிட்டான்.

“இன்னுமா புரியல மாமா? அஸ்மியோட இந்த மாச சிலபஸ்ஸோட லெசன் ஹவ் டு வின் ஜெய்’ஸ் ஹார்ட்…. இப்பிடி இருக்க வாய்ப்பு அதிகம்” என்று சாதாரணமாகச் சொன்னவள் விட்டால் இவன் அங்கே சென்று குட்டையைக் குழப்புவான் என்று எண்ணியவளாய் அவனை இழுத்துக் கொண்டு காருக்கே சென்றுவிட்டாள்.

அதே நேரம் ஜெய்யுடன் பேசிக்கொண்டிருந்த அஸ்மிதா அவனது வெகுளித்தனமான பேச்சில் தன்னைத் தொலைத்தவளாய் சிலமணி நேரங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வை அசைப்போட்டவளாய் அவனுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினாள்.

அன்றைக்கு ஞாயிறு என்பதால் வழக்கம் போல ஜெய்யின் வருகைக்கு ஓவியப்பயிற்சி பெறும் குழந்தைகள் காத்திருக்க அஸ்மிதா அந்தப் பக்கமாக வந்தவள் ஜெய் இருக்கிறானா என்று எட்டிப்பார்த்துவிட்டு அவன் இல்லையென்றதும் அலுவலகத்தில் சென்று மேரியிடம் வினவினாள்.

“ஜெய் சார் இன்னைக்கு லீவ் அஸ்மி… ஏதோ பெர்சனல் ஒர்க் இருக்குனு ஃபைவ் மினிட்ஸ்கு முன்னாடி தான் கால் பண்ணி சொன்னாரு”

மேரி சொல்லிவிட்டு நகர, அஸ்மிதா வேகவேகமாக மேரியின் கம்ப்யூட்டரை ஆராய்ந்தவள் அதிலிருந்த விவரத்திலிருந்து ஜெய்யின் முகவரியைக் குறித்துக் கொண்டாள். வாரா வாரம் இந்நாளில் அவனைச் சந்தித்து உரையாடிப் பழகிப் போனவளுக்கு அவனது இன்றைய விடுப்பு வித்தியாசமானமான முறையில் மனதுக்குச் சோர்வைக் கொடுத்தது. அவன் முகவரியில் சென்று அவனைப் பார்த்துவிட்டு வந்தாலென்ன என்ற எண்ணம் உதிக்கவும் அதைச் செயல்படுத்த எண்ணியே அவன் முகவரியைக் குறித்துக் கொண்டாள்.

நேரே சஞ்சீவினி பவனத்தை அடைந்தவள் ஸ்கூட்டியை எடுக்கச் செல்லவும் கவுன்சலிங் செல்வதற்காகத் தயாராகி வராண்டாவில் அலமேலுவிடம் உரையாடிக் கொண்டிருந்த இஷானி அவளைக் கண்டுவிட்டாள்.

“அஸ்மி! நீயும் என் கூட செழியன் அங்கிள் கிளினிக்குக்கு வர்றியா?” என்றவளின் கேள்வியில் நின்றவள் வேக வேகமாக இஷானியை நோக்கி வந்தாள்.

விழிகள் படபடக்க “இல்ல இஷி! இன்னைக்கு மாமா உன்னைக் கூட்டிட்டுப் போறதா சொல்லிட்டாரு… அவர் வந்ததும் அவரோட போயிட்டு வா” என்று சொல்லவும்

“அப்போ நீ எங்க போற?” என்று அடுத்தக் கேள்வியை வீசினாள் இஷானி.

அஸ்மிதாவுக்குத் தான் ஜெய்யை அவனது வீட்டில் சந்திக்கப் போவதாகச் சொல்வதற்குச் சங்கடமாக இருந்தது. இஷானியிடம் இது வரை எதையும் மறைத்தோ பொய் சொல்லியோ பழக்கமில்லாதவள் முதல் முறையாக அக்காரியத்தைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தாள்.

“மலருக்குச் சில ஸ்டேசனரி திங்ஸ் வாங்கணுமாம்… அவ லிஸ்ட் போட்டுக் குடுத்தா… அதை வாங்கிட்டு வர தான் போறேன்”

இவ்வாறு சொல்லிவிட்டு இஷானியைத் தவிர மற்ற அனைத்திலும் பார்வையைப் பதித்தவளின் பேச்சில் உள்ள தடுமாற்றம் இஷானிக்குச் சுலபமாகப் பிடிபட்டது. தயக்கமும், தடுமாற்றமும் பொய்யின் இரட்டைப்பிள்ளைகள் என்பதை நன்கு அறிந்தவள் அவள். எனவே அஸ்மிதா சொன்ன காரணம் பொய்யென்று அறிய அவளுக்குச் சில நொடிகளே போதுமானது.

இருந்தாலும் ஓரளவுக்கு மேல் தனி மனிதச்சுதந்திரத்தில் தலையிடுவது நாகரிகமில்லை என்பதால் அஸ்மிதாவிடம் தோண்டித் துருவவில்லை. அஸ்மிதாவும் அவள் இதற்கு மேல் கேள்வி கேட்காததால் தப்பித்தோம் என்று நினைத்தவளாய் ஸ்கூட்டியைக் கிளப்பிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அவள் ஸ்கூட்டி போய் நின்ற இடம் நகரத்தின் பெரிய அப்பார்ட்மெண்ட்கள் நிறைந்த இடம். அதன் நுழைவுவாயில் காவலாளியின் அறிவுறுத்தலின் படி வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஜெய்யின் ஃப்ளாட் எண்ணை மொபைலில் பார்த்துவிட்டு லிப்டை நோக்கிச் சென்றாள்.

ஒரு வழியாக அதில் குறிப்பிட்டிருந்த தளத்தில் லிப்ட் நிற்கவும் வெளியே வந்தவள் வரிசையாக இருந்த கதவுகளில் உள்ள ஆங்கில எழுத்துகளை வைத்து ஜெய்யின் ஃப்ளாட்டைக் கண்டுபிடித்து அதன் அழைப்புமணியை அழுத்திவிட்டு அவனது வருகைக்காகக் காத்திருந்தாள்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛