🌞 மதி 24 🌛

தொன்று தொட்டே இந்தியப்பெண்கள் சக உயிராக மதிக்கப்படுவதை விட பொருட்களைப் போலவே கையாளப் படுகின்றனர். மேலும் அவர்கள் தனக்கு வரப்போகும் கணவனுக்குப் பிடித்த மாதிரி நடந்துகொள்ள வேண்டும் என்ற கொள்கையுடனே வார்த்தெடுக்கப் படுகின்றனர்சுபத்ரா ஜோஷி

இஷானி அன்றைக்குக் கண் விழிக்கும் முயலும் போதே அலுப்பாக உணர்ந்தாள். மருந்தின் வேகம் சற்று மட்டுப்பட்டிருப்பதைப் போலத் தோண கைகளை உயர்த்திச் சோம்பல் முறித்தாள் அவள். மேலே உயர்ந்த கைகளில் ஏதோ சொரசொரப்பாகத் தட்டுப்பட கண்ணைத் திறந்து பார்த்தவள் அருகே அமர்ந்திருந்த ருத்ராவைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சட்டென அவன் கன்னத்தில் பட்டக் கையை விலக்கிக் கொண்டாள் அவள்.

அவனைத் திடீரென்று கண்டதில் அனிச்சை செயலாக அவளது வாய் “பாட்டி” என்று அழைப்பதற்குத் தயாராகும் போதே ருத்ரா அவனது ஆட்காட்டிவிரலை உதட்டின் மீது வைத்தவன்

“மூச்! சத்தம் போடாத! அது என்ன ஆ ஊனா நீ பாட்டி பாட்டினு ஏலம் விடுற? உன்னை என்ன கொலையா பண்ணப் போறோம்?” என்று அதட்ட இஷானியின் கண்களில் கலவரம். ஆனால் அவன் சொன்ன விதத்தில் அவள் பேசாமல் மௌனவிரதத்துக்குத் தயாரானாள்.

ருத்ராவை அவளது கண்ணில் தெரிந்த கலவரம் அசைத்துப் பார்க்கவே “எதுக்கெடுத்தாலும் பயப்படுறதை முதல்ல நிறுத்து இஷி… இந்த உலகத்துல ஒரு மனுசன் பயப்படுறான்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும்… அவன் ஏதோ திருத்த முடியாதத் தப்பைப் பண்ணிருக்கணும். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நீ அப்பிடி எந்தத் தப்பையும் பண்ணிருக்க மாட்ட” என்று பொறுமையுடன் கூறியவன் அவள் கண் கலங்க ஆரம்பிக்கவும்

“இப்போ எதுக்கு அழுற? நான் சொன்ன எதாச்சும் உன்னை ஹர்ட் பண்ணிடுச்சா இஷி? லுக் அட் மீ” என்று சொல்லி அவளது தாடையைத் ஆட்காட்டிவிரலால் நிமிர்த்தியவன் அவள் கலங்கிய கண்களை ஆழ்ந்து நோக்கினான்.

இஷானி கம்மியக்குரலில் “நானும் தப்பு செஞ்சிருக்கேன் மாமா… இந்த உலகத்துல நான் பிறந்தது தான் நான் செஞ்ச முதலும் கடைசியுமான பெரிய தப்பு… அதுக்கான தண்டனையை பன்னிரண்டு வருசம் அனுபவிச்சதாலயோ என்னவோ கடவுளுக்கு என் மேல இரக்கம் வந்து அம்மா, பாட்டி, அஸ்மி, தாத்தானு என் மேல அன்பை மட்டுமே கொட்டுறதுக்கு இவங்க எல்லாரையும் அனுப்பி வச்சாரு… ஆனா பழைய நியாபகம் எல்லாமே இங்கே ஸ்டோர் ஆகியிருக்கு… என்னால அதை மறக்க மட்டும் தான் முடிஞ்சதே தவிர நிரந்தரமா அழிக்க முடியலை” என்று சொன்னபடி தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டிவிட்டு கண்ணீர் உகுக்க ஆரம்பித்தாள்.

ருத்ராவுக்கு அதைக் கேட்க மனதுக்குக் கஷ்டமாக இருந்தாலும் இவளை இப்படியே விட்டுவிட்டால் இன்னும் பழைய துர்ச்சம்பவங்களை எண்ணி அழுது கொண்டேயிருப்பாள் என்பதால் அவள் மனதை மாற்றியே ஆகவேண்டிய கட்டாயம் அவனுக்கு.

அவள் கண்ணீரைத் துடைத்தவன் “உன் மனசுல பதிஞ்சு போன மோசமான நினைவுகளை உன்னால அழிக்க முடியலைனா அதுக்கு என்ன அர்த்தம் இஷி? இந்த ஒன்பது வருசமா அக்காவும் மத்தவங்களும் காட்டுன அன்பு இன்னும் உன் மனசைத் தொடலைனு தானே அர்த்தம்?” என்று கேட்கவும் திடுக்கிட்டு விழித்தாள் இஷானி.

“என்ன சொல்லுறிங்க மாமா? இவங்க எல்லாரும் தான் என் உயிரா நினைக்கிறேன்… உங்களால எப்பிடி இந்த மாதிரி பேச முடியுது?” என்று அதிர்ந்த குரலில் கேட்க

“அப்போ உன்னோட மனசைப் பாதிக்கிற எல்லா விஷயத்தையும் இந்த நிமிசத்தோட மறந்துடு… பழசை நினைச்சுப் பயப்படுறது, அழுறது, முக்கியமா நான் பிறந்திருக்கவே கூடாதுனு அசட்டுத்தனமா புலம்புறது இதெல்லாம் செய்யவே கூடாது… சரியா?” என்று நிதானமாகப் பேச இஷானிக்கு அவனது பேச்சின் சாராம்சம் புரிந்தது.

சரியென்று தலையாட்டியவளை அப்படியே விட மனமில்லாமல் “நீ சொன்ன மத்த வார்த்தையைக் கூட நான் மறந்துடுவேன்… அது என்ன நான் பிறந்திருக்கவே கூடாதுனு அவ்ளோ அசால்ட்டா சொல்லுற நீ? நீ மட்டும் பிறக்காம போயிருந்தனா நான் காலம் முழுக்க பிரம்மச்சாரியாவே இருந்து வயசானதும் சன்னியாசம் வாங்கிட்டு காசி ராமேஸ்வரம்னு போயிருப்பேன்… என் வாழ்க்கையில அப்பிடி ஒரு இன்சிடெண்ட் நடக்கக் கூடாதுனு தான் கடவுள் உன்னை அனுப்பி வச்சிருக்காரு… இது புரியாம மண்டூகம் மாதிரி பேசாத.. ஓகேவா?” என்று இலகுவானக் குரலில் அவளைச் சீண்டியவனின் வார்த்தைகள் உணர்த்தும் மறைபொருளைப் புரிந்து கொண்ட இஷானி வாயைப் பிளக்கவே, ருத்ரா அவளது சோகம் கப்பிய பாவனை போனதில் திருப்தி.

இஷானி வழக்கம் போல தன்னைச் சீண்டியவனைக் கண்ணைச் சுருக்கிக் கொண்டு பார்த்தபடி ஏதோ சொல்லவர அதற்குள் “வாவ்! நீங்க பிரம்மச்சாரியா போயிருப்பிங்களா? அதுவும் சன்னியாசம் வேற, காசி ராமேஸ்வரம் டூர் வேற… வாவ் மாமா காதுல பூ சுத்துறது ஒரு கலைனா அதுல நீங்க தான் பிகாசோ” என்று கேலி செய்தபடி அறைக்குள் பிரவேசித்தாள் அஸ்மிதா.

அவளும் எவ்வளவு நேரம் தான் இவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று காத்திருப்பாள்!

இஷானி அமர்ந்திருந்த படுக்கையின் அருகே வந்தவள் ருத்ராவைக் காட்டி அவளிடம் “இஷி! நீ யாரை வேணும்னாலும் நம்பு… இந்த மாமாவை நம்பாதேடி… இன்னைக்கு உன் கிட்ட சன்னியாசம் போயிருப்பேனு சொல்லுறதுலாம் வெறும் பீலா… இஷானி இல்லனா ஷிவானினு போயிட்டே இருப்பாரு மனுசன்… அப்பிடி தானே மாமா?” என்று நல்லப்பெண்ணைப் போல அவனிடம் கேட்க இஷானி அதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.

ருத்ரா வழக்கம் போல பொய்க்கோபத்துடன் அஸ்மிதாவை முறைத்தவன் அவளது காதைப் பிடிப்பதற்குள் அவள் உஷாராக விலகி “ஏதோ மாமாவா போயிட்டிங்களேனு கம்மியா கலாய்க்கிறேன்… இல்லனா அவ்ளோ தான்” என்று மிரட்ட

ருத்ரா சலித்துப் போனக்குரலில் “என்னை காமெடி பீசாக்கி வேடிக்கை பார்க்கவே எங்க அக்கா உன்னைப் பெத்திருக்கா” என்று சொன்னபடி எழுந்தவன்

“ஓகே! அழுகாச்சி சீன் முடிஞ்சு இஷி ஃபேஸ் பிரைட்டா ஆயிடுச்சு… எனக்கும் டைம் ஆகுது… நைட்டே வீட்டுக்குப் போகலைனு மந்தாகினி இந்நேரம் மகிசாசுரமர்த்தினி அவதாரம் எடுத்திருப்பா… போய் அவளைச் சமாதானப்படுத்திட்டு ஆபிஸ் கிளம்பணும்… அப்போ நான் கிளம்புறேன்… சண்டே பார்க்கலாம்” என்று படபடத்துவிட்டு கிளம்பியவனுக்கு இருவரும் டாட்டா காட்டவே ருத்ரா புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறியவன் வாயிலுக்குச் சென்றதும் திரும்பி இஷானியைப் பார்த்தவன்

“இஷி! இப்போவும் நான் பிரம்மச்சாரியா தான் இருக்கேன்… சீக்கிரமே குடும்பஸ்தன் ஆகணும்னு ஆசைப்படுறேன்… கொஞ்சம் மனசு வை ப்ளீஸ்” என்று சொல்லிவிட்டு அவனுக்கே உரித்தான கண்சிமிட்டலுடன் கூடிய புன்னகையை அள்ளிவீசி விட்டுச் செல்ல இஷானி அவனது பேச்சில் மீண்டும் அதிர்ந்தாள்.

அஸ்மிதா கலகலவென நகைக்க இஷானி அவள் தோளில் அடித்தவள் “சிரிக்காதடி!” என்று சொல்லிவிட்டுக் குளியலறையை நோக்கி சென்றாள்.

அவள் காலைக்கடன்களை முடித்து குளித்துவிட்டு ஆடையை மாற்றிவிட்டு கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் போதே பழைய படி இஷானி சஞ்சீவினியாகத் தன்னை உணர்ந்தாள். இரவில் இருந்த அச்சமும் கலக்கமும் விரவிய மனநிலை மாறி மனதுக்குள் புதிய உற்சாகம் ஒன்று ஊற்றெடுத்தது போன்ற உணர்வு.

அதற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடுமென்று சிந்தித்தவளுக்கு அவளது மனக்கண்ணில் முதலில் தோன்றிய உருவம் ருத்ராவுடையது தான். அதட்டலான அறிவுரையில் தொடங்கிச் செல்லமான சீண்டலுடன் முடிந்த அவனது பேச்சு அவளுக்குள் இருந்த பழைய நினைவுகளுடன் சுவடைச் சற்று அழிக்க முயல்வது அவளுக்கே புரிந்தது.

இறுதியில் பிரம்மச்சரியம், சன்னியாசம் என்று முடித்தவனின் வார்த்தைகள் அவளுக்குச் சிரிப்பை மூட்ட அதே சிரிப்புடன் தங்கள் அறையை விட்டுக் கீழே சென்றாள்.

சொன்னபடி ருத்ரா அர்ஜூனை அழைத்துக் கொண்டு கிளம்பியிருக்க வழக்கம் போல வீட்டில் உற்சாகம் திரும்பியிருந்தது. ருத்ரா கிளம்பும் போதே யாரும் அழுது வடிய வேண்டாம் என்று அறிவுறுத்தியதை இஷானி அறிந்திருக்கவில்லை. மெதுவாக அடியெடுத்து வைத்தவள் ராஜகோபாலனின் பார்வை வட்டத்துக்குள் விழவும் அவர் அவளை அழைத்துத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.

எப்போதும் போல அவளிடம் அன்றைய செய்திகளை வாசித்துக் காட்டி கேலியாகப் பேசிக்கொண்டிருந்தவர் சஞ்சீவினி அலுவலகத்துக்குக் கிளம்புவதை அறிந்ததும் இஷானியின் முகத்தில் தோன்றிய பரபரப்பைக் கண்டதும் அமைதியானார்.

சஞ்சீவினி இஷானியின் முகத்தில் சோகம் மறைந்து புன்னகை திரும்பியிருப்பதை உணர்ந்தவர் அவளது பரபரப்புக்கான ஊகித்தவராய் “நீ ஒன்னும் கவலைப்படாதடா இஷி! நான் அந்தக் குழந்தையைப் பத்தி நேத்து நைட்டே எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆபிசர் மேடம்கு மெசேஜ் பண்ணிட்டேன்… இன்னைக்கு அவங்க என்கொயரி பண்ணி ஆக்சன் எடுத்துடுவாங்க… நீ அதை நினைச்சு மனசைப் போட்டுக் குழப்பிக்காத… அஸ்மி கார்டன்ல அம்மா கூட சேர்ந்து எதோ குட்டிக்கலாட்டா பண்ணுறா… அது சீரியஸா மாறுறதுக்கு முன்னாடி ரெண்டு பேரையும் சரிகட்டு போ” என்று சொல்லவும் அவள் தோட்டத்தை நோக்கி ஓடினாள்.

இஷானியின் உற்சாகத்தோற்றம் அளித்த நிம்மதியில் பெருமூச்சு விட்ட சஞ்சீவினி தந்தையிடம் “எப்பிடியோ இஷியோட வருத்தம் மாறுனதே எனக்கு நிம்மதியா இருக்குப்பா” என்று சொல்ல

“அது தானா மாறல… உன் தம்பிக்காரனோட திருவிளையாடலால தான் மாறுச்சு… சந்தேகம் இருந்தா அலமேலு கிட்ட கேளு” என்று பூடகமாக உரைக்கவே சஞ்சீவினிக்கு இரவில் ருத்ரா பேசியது நினைவுக்கு வந்தது.

“கண்டிப்பா அவளுக்கு என்னைப் பிடிக்கும்கா… பிகாஸ் உன் வீட்டுப்பூனைக்குட்டி என் கிட்ட மட்டும் தான் அளவுக்கதிகமா சீறுது… அதை வச்சு சொல்லுறேன்” என்று உரைத்தவனின் சொற்கள் இப்போதும் அவரது இதழில் சிரிப்பை நெளியவிட

“எல்லாத்தையும் அந்த ஈசன் கணக்கு போட்டு வச்சுட்டு நடத்துறான் சஞ்சும்மா… அவன் கணக்கு என்னைக்குமே தப்பாகாது” என்று ராஜகோபாலன் உரைக்கவே சஞ்சீவினிக்கும் அப்படி தானோ என்று தோணியது.

எங்கோ இருந்து சொந்தத் தகப்பனிடத்தில் வெறுப்பையும் கோபத்தையும் சம்பாதித்தவள் இன்று தனது வீட்டு இளவரசியாய் இருப்பது கூட அந்த ஈசனின் கணக்கு தானோ என்று எண்ணியவர் அதன் ஒரு புள்ளி இஷானி என்றால் மற்றொரு புள்ளி ருத்ராவாகத் தான் இருக்க வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டார்.

அதே நேரத்தில் சேகர் வில்லாவில் மந்தாகினி ஆயிரம் டிகிரி செல்சியஸில் கொதித்துக் கொண்டிருந்தார். ஞாயிறன்று வழக்கமாக மகனுடன் செல்லும் சகோதரன் மாலைக்குள் வீடு திரும்புவதையே அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனும் போது அன்றைக்கு வீடு திரும்பாமல் போனையும் சுவிட்ச் ஆப் செய்துவைத்ததால் தான் அவருக்கு இவ்வளவு கோபம்.

இருவரும் வீடு திரும்பியதும் அவர் விளாசித் தீர்க்க சந்திரசேகர் “விடு மந்தா! இனிமே இப்பிடி செய்ய மாட்டாங்க” என்று மந்தாகினியைச் சமாதானம் செய்ய முயல

ருத்ராவோ “நான் என்ன சின்னப்பையனா? எனக்கும் இருபத்தியேழு வயசு ஆகுது… நான் எங்கே தங்கணும், என்ன பண்ணனும்னு நீயோ இவரோ எனக்கு ஆர்டர் போடக்கூடாது… என்னமோ வீட்டுலயே இருந்தா மட்டும்  நீங்க ரெண்டு பேரும் அன்பைப் பொழிஞ்சு தள்ளிருவிங்க பாருங்க… சண்டே கூட விடாம இவரு வீடியோ கான்பரன்ஸ்ல மீட்டிங் வைப்பாரு… நீயும் கூட சேர்ந்து லேப்டாப்பைத் தட்டிட்டு இருப்ப… இது ஒரு வாழ்க்கையாக்கா? ஏதோ அன்னைக்கு ஒரு நாள் நானும் அஜ்ஜூவும் நிம்மதியா இருக்கிறது கூட உங்களுக்குப் பிடிக்கலையா? இது தான் கடைசி தடவை…. இனிமே நீ இப்பிடி என்னை என்கொயரி பண்ணுனேனா அஜ்ஜூவைக் கூட்டிட்டு நான் வெங்கட்டோட ஃப்ளாட்டுக்குப் போயிருவேன்” என்று மிரட்டாதக் குறையாகச் சொல்லிவிட்டு மருமகனுடன் அவர்களின் அறைக்குச் சென்றான் ருத்ரா.

மந்தாகினி மனம் கலங்கியவராய் கணவரைப் பார்க்க அவர் “அவன் என்ன இன்னைக்குப் புதுசாவா பேசுறான் மந்தா? விடு” என்று சொல்ல மந்தாகினியின் கண்கள் கலங்கத் தொடங்கியது.

“எனக்குப் பயமா இருக்கு சேகர்… ஒவ்வொருத்தரா என்னை விட்டுப் போற மாதிரி இருக்கு… நீங்களும் என்னை விட்டுப் போயிடுவிங்களா?” என்று கேட்டவரின் விழியில் கண்ணீரோடு சேர்ந்து எங்கே கணவரை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் அப்பட்டமாகத் தெரிய சந்திரசேகர் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.

“அசடு மாதிரி பேசாத மந்தா! இந்தப் பன்னிரண்டு வருசத்துல நான் உன்னை விட்டுப் போயிடுவேனு என்னைக்காச்சும் உன் கிட்ட சொல்லிருக்கேனா? இந்தப் பயம் உனக்குத் தேவையே இல்லை”

“நான் பயப்பட்டுத் தான் ஆகணும் சேகர்… ஏன்னா நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கான காரணம் என் வாழ்க்கை உங்களால கெட்டுப்போயிடுச்சேங்கிற குற்றவுணர்ச்சி தான்.. இன்னைக்கும் உங்க மனசுல சஞ்சுக்கா தான் ராணியா இருக்கானு எனக்கு நல்லாவே தெரியும்… அது தான் என் பயத்துக்குக் காரணமே”

அப்படி சொன்ன மந்தாகினியை ஏறிட்டார் சந்திரசேகர். தனது மனதைப் படித்தாற்போன்று சொல்பவருக்கு என்ன பதிலளிக்க என்று யோசித்தவர் எப்போதும் சொல்லும் பதிலையே மீண்டும் கூறினார்.

“சஞ்சீவினியோட வாழ்க்கையில எனக்கு எந்த இடமும் இல்ல மந்தா… அவ அவளுக்குனு அழகான குடும்பத்தை உருவாக்கிக்கிட்டா… நான் அவளைப் பொறுத்தவரைக்கும் மூனாவது மனுசன் தான்… நானே போய் சஞ்சீவினியோட வாழுறேனு நின்னாலும் அவளால என்னை ஏத்துக்கவே முடியாது… எங்களோட உறவு பன்னிரண்டு வருசத்துக்கு முன்னாடியே முடிஞ்சு போச்சு… இன்னைக்கு நிலமையில என்னோட மனைவி நீ மட்டும் தான்… அர்ஜூன் நம்மளோட பையன்.. நாங்க யாருமே உன்னைத் தனியா தவிக்க விட்டுட மாட்டோம்மா… நம்பு” என்று சொன்னவரின் கைகளைப் பற்றிக்கொண்டார் மந்தாகினி.

“தேங்ஸ் சேகர்.. தேங்யூ சோ மச்” என்று தழுதழுத்தக் குரலில் உரைத்துவிட்டு கணவரின் அணைப்புக்குள் சரண் புகுந்தார் அவர். அவரது கலக்கத்தைப் போக்கிய நிம்மதியுடன் அவரை அணைத்துக்கொண்டார் சந்திரசேகர்.

வாழ்க்கை மிகவும் வித்தியாசமானது. இன்று நம்மவராய் தோன்றுபவர் கூட நாளையே மற்றொருவரின் உரிமைக்குட்பவராய் மாறும் மாயாஜாலம் வாழ்க்கையோட்டத்தில் அடிக்கடி நடைபெறும். இதை அறியாதவர்களாய் மந்தாகினியும் சந்திரசேகரும் தங்களது கூடு பாதுகாப்பாக உள்ளது என்ற நிம்மதியில் கவலை மறந்து போயினர்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛