🌞 மதி 22 🌛

பாலுறுப்புக்குழப்பங்களுடன் பிறக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் பெற்றோர்களோடு மருத்துவர்களுக்கும் கூட சரியான புரிதல் இருப்பதில்லை. உத்தேசமாக இந்தியாவில் ஆண்டொன்றுக்கு ஆயிரத்திற்கும் மேல் இத்தகைய குழந்தைகள் பிறந்த சிலமணி நேரங்களுக்குள்செக்ஸ் செலக்டிவ் சர்ஜரிஎனும் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதனால் குழந்தைகளின் மனம் மற்றும் உடல்நலம் அவர்கள் வளரும் போது பாதிக்கப்படும் அபாயமுள்ளது கோபிஷங்கர் (ஸ்ருஷ்டி அமைப்பு)

தாமோதரனும் அவரது மனைவியும் அறுவைச்சிகிச்சை முடிந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணியிருக்க, அதே நேரத்தில் வேணி பேத்தியை அள்ளியெடுத்துக் கொஞ்சிக் கொண்டிருக்க மருத்துவர் அந்த வார்டைக் கடக்கும் போதெல்லாம் இவர்களைக் கண்டு வலியுடன் புன்னகைத்துக் கொண்டார்.

ஏனெனில் அது அறுவைச்சிகிச்சையால் மாற்றப்படக்கூடிய விஷயம் அல்லவென்று அவர் நன்கு அறிவார். அத்தோடு குழந்தை வளர வளர அவளது மனநிலையும் உடலமைப்பும் சேர்ந்து அவளைக் குழப்பப் போகிறது என்பதையும், அவள் மற்றப் பெண் பிள்ளைகளைப் போல வளர முடியாது என்பதையும் அறிந்திருந்தவர் அவரால் முடிந்தமட்டும் கடவுளிடம் குழந்தை இஷானிக்காக வேண்டிக்கொண்டார்.

அந்த மருத்துவரின் வேண்டுதலுக்குச் செவி சாய்க்கும் எண்ணம் இறைவனுக்கு இல்லை போலும். இஷானி வளர வளர அவளுக்குள் ஒரு குழப்பமும் சேர்ந்தே வளர்ந்தது. அதன் காரணமாகவே அவர்கள் இருக்கும் அரசு அலுவலர் குடியிருப்பில் உள்ள தன் வயதையொத்தப் பிள்ளைகளிடம் பழகுவதைத் தவிர்த்தாள். அதே நேரம் அவளது தந்தை தாமோதரன் அவளைப் புழு பூச்சியைப் பார்ப்பது போலக் கடந்து செல்வது கூட அவளுக்குப் பழகிவிட்டது.

பெரும்பாலான நேரத்தை அவளது பாட்டியுடனே கழித்தவள் தந்தை வந்துவிட்டால் அவளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அறையை விட்டு வெளியே வர மாட்டாள். எதற்காக அப்பா தன்னை இவ்வளவு வெறுக்கிறார் என்றும் புரியாமல் தனது உடல்கூறில் உள்ள வித்தியாசத்தையும் அறியாமல் அவள் உள்ளுக்குள் சுருங்கிக் கொண்டாள்.

அவளது தாயார் கூட கணவருக்குப் பயந்து மகளிடம் அவர் இருக்கும் நேரங்களில் முகம் கொடுத்துப் பேசாமல் தவிர்ப்பது தான் அவள் நெஞ்சை இன்னும் ரணமாக்கியது. இவை அனைத்தையும் துடைத்துப் போட்டுவிடும் அவளது பாட்டி வேணியின் அன்பு.

வேணிக்கு இஷானியைப் பார்க்கும் போதெல்லாம் தாமோதரனுக்குப் பின்னர் அவருக்குப் பிறந்த பெண்மகவு ஒன்றின் நினைவே தோன்றும். உடலநலமின்றி பிறந்து மூன்றே மாதங்களில் இறைவனடி சேர்ந்த தனது மகள் தான் மீண்டும் இஷானி ரூபத்தில் வந்துள்ளாள் என அப்பெண்மணி மகனின் வெறுப்பின் சூடு பேத்தியைத் தாக்கிவிடாமல் அவரால் முடிந்தமட்டும் பாதுகாத்து வந்தார்.

அதே சமயம் அவளுக்கு ஐந்து வயது பிறக்கவும் கடவுள் அவளுக்குத் துணையாக ஒரு தம்பியை அனுப்பி வைத்திருப்பதாகப் பாட்டி சொன்னபோது அவள் மிகவும் மகிழ்ந்தாள். சிறுகுழந்தைக்கே உரித்தான குதூகலத்துடன் மருத்துவமனைக்குப் பாட்டியுடன் தம்பியைச் சந்திக்கச்  சென்றாள்.

அன்னையின் அருகில் தொட்டிலில் துயில் கொண்டிருந்த குட்டித்தம்பி உறக்கம் கலைந்து கொட்டாவி விட்ட அழகில் அவள் கிளுக்கிச் சிரிக்க அக்காட்சி பிறந்த குழந்தையைக் காண வந்த தாமோதரனின் கண்ணில் பட்டுவிட்டது. எங்கிருந்து தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. வேகமாக இஷானியிடம் வந்தவர் மனைவி, தாயார், அந்த அறையிலிருந்த செவிலி என யாருடைய பேச்சையும் மதியாது அவளை அந்த அறையை விட்டு வெளியே பிடித்துத் தள்ளினார்.

விழுந்த வேகத்தில் இஷானியின் முன்னந்தலை பக்கவாட்டுச் சுவரில் இடித்துக் கொள்ள முதல் முறையாகத் தந்தையின் வெளிப்படையான வெறுப்பிலும், முன்னந்தலையில் இருந்து சொட்டாக வழிந்த உதிரத்திலும் அவள் பயந்து நினைவையிழந்தாள்.

அதன் பின்னர் மருத்துவச்சிகிச்சையால் தலைக்காயம் ஆறிவிட்டது. ஆனால் இஷானியின் மனதில் அப்பா என்ற உருவத்தின் மீது உண்டான பயம் நிரந்தரமாய் ஒட்டிக்கொண்டது. அவருக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டவள் அவர் இல்லாத நேரங்களில் மட்டுமே வீட்டில் உலாவுவாள். அதுவும் ஞாயிறன்று பள்ளி விடுமுறை என்பதால் அவள் சுதந்திரமாக வீட்டுக்குள் நடக்க கூட இயலாது. ஏனெனில் அன்றைக்கு தாமோதரனுக்கும் விடுமுறை தான்.

இஷானியின் நாட்கள் இவ்வாறே கழிய அவளும் பன்னிரண்டாவது வயதில் அடியெடுத்தி வைத்தாள். எப்போதும் பாட்டியின் பின்னே சுற்றும் அவளை அவளது தம்பி சதீசுக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதுவும் தந்தையே அவளை “சனியன்” என்று விளித்துவைக்க அந்தச் சிறுவனும் தந்தையின் அடிச்சுவடைப் பின்பற்றி இஷானியை அவமதிக்கப் பழகிக்கொண்டான். இஷானியே அவனிடமிருந்து ஒதுங்கிப் போனாலும் வம்பிழுத்துத் தந்தையிடம் அடி வாங்க வைப்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆனந்தம்.

இஷானியின் அன்னைக்கும் பாட்டிக்கும் தாமோதரனிடமிருந்து அவளைக் காப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். இதுவே தொடர்கதையாக மாறிவிட்டது. அச்சமயத்தில் தான் அவர்களின் பக்கத்து ஃப்ளாட்டில் குடியிருப்பவரின் மகள் பூப்பெய்திய விசயம் இஷானியின் அன்னையின் வாயிலாக அவளது தந்தையை அடைந்தது.

இத்தனைக்கும் அந்தப் பெண் இஷானியை விடவும் ஆறு மாதம் இளையவள் என்று மனைவி ஒரு பெருமூச்சுடன் சொல்ல

“அதுக்கு நான் என்ன பண்ணுறது? நீ பிள்ளைங்கிற ரூபத்துல ஒன்னைப் பெத்திருக்கியே, அது பிள்ளை இல்லடி… நான் பண்ணுன பாவத்துக்குப் பிறந்த சதைப்பிண்டம்… இன்னும் கொஞ்சநாள் தான்… அப்புறம் எல்லாரும் நம்மளையும் விசாரிக்க ஆரம்பிப்பாங்க… அவங்களுக்கு என்ன பதில் சொல்லுவேன் நான்? இதால இன்னும் நான் எவ்ளோ அசிங்கப்படணுமோ?” என்று வெறுப்பை உமிழ்ந்துவிட்டு அகன்றார்.

இஷானியின் தாயால் கண்ணீரை மட்டுமே சிந்த முடிந்தது. ஆனால் மாமியாரின் உதவியோடு அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர் அவளது உடல்கூறைப் பற்றியும் அவளுக்கு நடந்த அறுவைச்சிகிச்சை பற்றியும் சொல்லி “இதால அவளோட வாழ்க்கைக்கு எதுவும் பாதிப்பு வருமா டாக்டர்? இவ பெரியமனுசி ஆகுறது தள்ளிப் போறது வேற எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று வெகுளித்தனமாகக் கேட்டார்.

மருத்துவர் “இங்க பாருங்கம்மா! இந்தப் பொண்ணோட உடல்கூறுப்படி அவளுக்கு ஹார்மோன் தெரபி குடுத்தா தான் பெண்களோட உடல்ல இயல்பா சுரக்கிற ஹார்மோனை பேலன்ஸ் பண்ண முடியும்… அது குடுத்தாலும் அவ பியூபர்டி அட்டெண்ட் பண்ணுவானு உறுதியா சொல்ல முடியாது” என்று சொல்லிவிடவே அவர் கணவரிடம் விசயத்தைத் தெரிவித்தார். அதைக் கேட்டதும் தாமோதரனுக்கு வந்த ஆத்திரத்துக்கு அளவே இல்லை.

“நான் தான் சொன்னேன்ல இதுக்கு டிரீட்மெண்ட் பண்ணுறது வேஸ்ட்னு… இது வாழ்நாள் முழுக்க இப்படி தான் இருக்கப் போகுது… இவளைப் பெத்ததுக்கு காலம் முழுக்க நமக்கு அசிங்கம் தான்” என்று கத்திவிட்டுச் சென்றார்.

இஷானிக்கு இவையனைத்தும் காதில் விழுந்தாலும் அவளுக்கு ஏன் இப்படி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. அதே நேரம் தாமோதரனின் ஆவேசப்பேச்சுக்கள் கோபம் எதுவும் இஷானியைத் தாக்காமல் காத்தார் வேணி.

இவ்வாறிருக்க இஷானியின் உடல்கூறு பற்றிய விஷயம் அவளது அன்னையின் வாயிலாக பக்கத்துவீட்டுப்பெண்மணியின் காதுக்குப் போனது. இஷானியின் தாயார் சந்திரா தன்னைப் போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று நம்பி தனது மனபாரத்தை நீண்டநாள் பழகியவர் என்ற முறையில் அப்பெண்மணியிடம் பகிர்ந்து கொள்ள அவரோ இந்தச் செய்தியை குடியிருப்பு முழுவதும் தண்டோரா போடாதக் குறையாகச் சொல்லிவிட்டார்.

விஷயம் அனைவருக்கும் தெரியவரவும் தாமோதரனின் காது படவே சிலர் அவரைக் கேலி செய்ய வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மனிதர் அவருக்கு இருந்த ஆவேசத்தில் கண்ணில் பட்ட இஷானியை பெல்டால் விளாசித் தள்ள அவரை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வேணியும் சந்திராவும் கெஞ்சி கேட்டும் கதறியும் கூட அவர் அடிப்பதை நிறுத்தவில்லை.

இஷானி வலி பொறுக்காமல் “ப்பா… வலிக்குதுப்பா” என்று கதற அவரோ அதைச் சட்டை செய்யாமல் “அப்போ செத்துப் போ சனியனே” என்று இன்னும் அதிகக் கோபத்துடன் அவளை அடித்துவிட்டு பெல்டை தூர எறிந்தார்.

ஒருவித வெறுப்புடன் அடிவாங்கி வலியில் துடித்துக் கொண்டிருக்கும் மகளை வெறித்தவர் “இன்னும் ரெண்டே நாள் தான்… இந்தச் சனியனை எங்கேயாச்சும் தலை முழுகிட்டு வர்றேன்… இல்லனா போற வர்றவன்லாம் கேக்குற கேள்விக்கு நம்ம குடும்பத்தோட விஷம் குடிச்சு செத்துடலாம்” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பிவிட்டு அகன்றார்.

இஷானிக்கு ஏற்கெனவே தந்தை என்றால் பயம். அதிலும் அவர் அடித்த அடியில் கை கால் முகமெல்லாம் வரி வரியாய் சிவந்து போயிருக்க அன்றைக்கு அவளுக்குக் காய்ச்சலோடு உடல் நடுக்கமும் ஏற்பட இரவெல்லாம் “ப்பா… வலிக்குது” என்று முணகியபடியே இருந்தாள்.

அவளது அறையில் அவளுடன் அமர்ந்திருந்த வேணிக்கு இதையெல்லாம் காணும் போது நெஞ்சையடைத்தது போன்ற உணர்வு.

“கடவுளே! என் பேத்திக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட மாட்டியா? இதைப் பார்க்கிறதுக்கு ஏன் இன்னும் என்னை உயிரோட வச்சிருக்க?” என்று மனதிற்குள் வெதும்பியவரின் இரண்டாவது வேண்டுதலைக் கடவுள் கேட்டுவிட்டார். ஆம்! காலையில் உடல்வலியுடன் கண்ணைச் சிரமப்பட்டு விழித்த இஷானி தன்னருகில் கண் மூடியிருந்த வேணியைத் தொட்டு “பாட்டி!” என்று அழைத்தவள் பாட்டி அவளின் அழைப்புக்குக் கண் விழிக்காமல் இருப்பதைக் கண்டதும் அவரை உலுக்க ஆரம்பித்தாள்.

ஆனால் வேணியின் உயிர் அவரது உடலை விட்டு நீங்கி வெகுநேரமாயிருக்க இஷானியின் “பாட்டி” என்ற கதறலில் அன்றைக்குக் கண்விழித்தது அவளது குடும்பம்.

அதன் பின்னர் எல்லாம் கடகடவென்று முடிந்தது. வேணியின் தகனம் முடிந்த கையோடு தாமோதரன் சொந்த ஊருக்கே பணியிடமாற்றம் வாங்கிவிட குடும்பத்தோடு அங்கேயே சென்று விடலாம் என்று மூட்டைமுடிச்சுகளைக் கட்டச் சொல்லிவிட்டார்.

அவரது கண்கள் இலக்கின்றி வெறித்தவண்ணம் “பாட்டி” என்று விடாது முணுமுணுத்துக் கொண்டிருந்த பன்னிரண்டு வயது சிறுமியை இரக்கமின்றி நோக்கியது.

அன்றைக்குக் காலையில் குடியிருப்பில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர் தாமோதரனின் குடும்பத்தார். தாமோதரன் தானே காரை ஓட்டியவர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு இஷானியை இறங்குமாறு பணிக்க அவள் உணர்வின்றி காரை விட்டு இறங்கினாள். சந்திரா என்னவோ ஏதோ என்று பதற, தாமோதரன் வெளியே இறங்கியவர் நிதானமானக் குரலில்,

“இன்னையோட உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… நீ ஒருத்தி பிறந்ததையே நானும் என் குடும்பமும் மறந்துட்டோம்… உனக்குனு ஒரு கூட்டம் இருக்கும்… அது கூட சேர்ந்து பிழைச்சுக்கோ போ” என்று பெற்ற மகள் என்றும் பாராமல் அமிலம் தோய்ந்த வார்த்தைகளைக் கொட்டினார்.

இஷானிக்கு அவர் பேசிய அனைத்தும் செவியில் விழுந்து மனதில் உறையத் தொடங்கியது. அவரையும் அவரருகில் கண்ணீருடன் நிற்கும் அன்னையையும் கண்டவள் காரினுள் இருந்து எட்டிப் பார்க்கும் சதீசை நோக்கிவிட்டு மீண்டும் இலக்கின்றி வெறிக்க ஆரம்பித்தவளின் விழியில் இருந்து வந்த கண்ணீரும் வாயிலிருந்து வந்த “பாட்டி” என்ற வார்த்தையும் நிற்கவே இல்லை.

தாமோதரன் எல்லாம் முடிந்தது என்பது போல “பொம்பளைப்பிள்ளைய இப்பிடி விட்டுட்டுப் போறது நல்லது இல்லங்க” என்ற சந்திராவின் கதறலைக் காது கொடுத்துக் கேளாமல் அவரை காரில் தள்ளியவர் இன்றோடு தனது பன்னிரண்டு வருட வாழ்க்கையின் அவமானச்சுவடு நீங்கிவிட்டது என்ற நிம்மதியுடன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவருக்குத் தெரியவில்லை அது அவரது குடும்பத்தினரின் இறுதிப்பயணமாக முடியுமென்பது.

அவர் கிளம்பியதும் இஷானியின் அருகில் வந்து நின்றது ஒரு கார். அதிலிருந்து இறங்கிய ஒரு முதியப்பெண்மணியைக் கண்டதும் தானாகவே அவளது உதடுகள் “பாட்டி!” என்ற சொல்லை முணுமுணுக்க அவ்வளவு நேரம் இருந்த வெறித்தப்பார்வை மாறி எழுந்து அவரைக் கட்டிக் கொண்டாள். அவர் அலமேலு. சஞ்சீவினினியின் தாயார்.

குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்று விட்டுத் திரும்பியவர்களின் கார் தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகிவிட அவர்கள் காரை நிறுத்தி சரி செய்து கொண்டிருந்த போது தாமோதரன் பேசிய விஷவார்த்தைகள் அவர்கள் செவியையும் தீண்டியதால் தான் இஷானியிடம் காரை நிறுத்தினர்.

இஷானி அலமேலுவை “பாட்டி.. எனக்குப் பயமா இருக்கு… அப்பா அடிப்பாரு பாட்டி” என்று கதறிக்கொண்டு அணைத்துக் கொள்ள அவர் காரினுள் இருந்தவர்களிடம் “சஞ்சு கொஞ்சம் தண்ணி கொண்டு வா” என்று சொன்னது மட்டும் தான் இஷானியின் காதில் விழுந்தது. அடுத்த நிமிடம் அவள் மயக்கமாகி இருந்தாள்.

அதன் பின் கண் விழித்துப் பார்க்கும் போது அவள் அருகில் அமர்ந்திருந்தள் அவள் வயதை ஒத்த சிறுமி ஒருத்தி. இஷானி அவளைக் கண்டு மிரள அச்சிறுமி புன்னகையுடன் அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

“நீ எதுக்கு என்னைப் பார்த்து பயப்படுற? நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன்” என்று சொல்லவே

இஷானி பதறியவளாய் “பாட்டி…பாட்டி” என்று கதறவும் அச்சிறுமி அதிர்ந்தவளாய் மெத்தையிலிருந்து எழுந்தாள். இஷானியின் கதறலைக் கேட்டு உள்ளே வந்த அலமேலு அவளருகில் சென்று அவளது கூந்தலை வருடிக் கொடுத்தபடி அணைத்துக் கொண்டார்.

பின்னர் அச்சிறுமியிடம் திரும்பியவர் “அஸ்மி! நீ வெளியே போய் விளையாடு” என்று சொல்ல

அவளோ “நீயே சொன்னாலும் நான் இனிமே இங்கே இருக்க மாட்டேன் அல்லு… இந்தப் பொண்ணு ஏன் என்னைப் பார்த்துக் கத்துது? நான் என்ன பேயா?” என்று கோபத்துடன் உரைத்துவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.

இஷானி அவள் சென்றதும் அலமேலுவைப் பார்த்தவள் “பாட்டி! எனக்கு யாரைப் பார்த்தாலும் பயமா இருக்கு” என்று அழ ஆரம்பித்தாள். அன்றையிலிருந்து சில நாட்களுக்குப் பதறுவதும், அழுவதுமாக இருந்தவள் அறைக்குள் அடைபட்டுக் கிடந்தாள். அலமேலுவும் ராஜகோபாலனும் அவளைக் கண்ணாடிப்பாத்திரம் போலக் கவனமாகப் பார்த்துக்கொண்டனர். அதே நேரம் சஞ்சீவினி அவளைத் தனது இன்னொரு மகளாகவே கருதினார். மிரட்சியுடனும் பயத்துடனும் இருக்கும் அவளது விழிகளும் சஞ்சீவினியைக் கண்டதும் அமைதியடைய அவர் தினமும் அவளிடம் பேச்சு கொடுத்து அவளைப் பற்றிய விவரங்களை வாங்கிவிட்டார்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛