🌞 மதி 15 🌛

பெண்களின் கருப்பையைத் தேவையான அளவுக்கு வளர்க்கவும், கருப்பையின் உள்ளே இருக்கிற எண்டோமெட்ரியம் திசு வளரவும் உதவும் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென். இந்த எண்டோமெட்ரியம் திசுவில்தான் கருவானது பதிந்து உருவாகும்.

அன்றைக்குக் காலையிலேயே அஸ்மிதாவைப் பைகளுடன் காய்கறி வாங்கி வருமாறு விரட்டினார் அலமேலு. அவள் இஷானியைத் துணைக்கு அழைக்க, இஷானிக்கு அன்றைக்கு மாதாந்திர உபாதை வேறு. அதனால் அன்று தனித்துப் போகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். ஸ்கூட்டியை எடுத்தவள் காய்கறி சந்தையில் பேரம் பேசி அனைத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு திரும்பும் போது அங்கே வியர்க்க விறுவிறுக்க காய்கறிகளை வாங்கிக் கொண்டிருந்த ஜெய் அவள் கண்ணில் பட்டுவிட்டான்.

அவன் நின்று கொண்டிருந்த இடத்துக்குச் சென்றவள் “என்ன மிஸ்டர் டேமேஜர் காய்கறி வாங்குற மாதிரி இருக்கு.. உங்க வீட்டுக்காரம்மா துரத்தி விட்டுட்டாங்களா?” என்று கிண்டலடித்தாள்.

அவன் ஞாயிறு தோறும் துளி நிறுவனத்துக்கு வருகை தருவது வாடிக்கை ஆகிவிட்டதால் இருவரும் முந்தைய மனஸ்தாபங்களை மறந்து விட்டிருந்தனர். அஸ்மிதாவுக்கு குழந்தைகளிடம் இன்முகமாய் பழகும் அவனது குணமும், அவள் விளையாட்டாய் முறைத்தால் கூட வார்த்தைகளில் தந்தியடிக்கும் அவனது அப்பாவித்தனமும் பிடித்துப் போய்விட்டது. எனவே அவனிடம் வம்பிழுப்பது அஸ்மிதாவின் ஞாயிற்றுகிழமை பொழுதுபோக்கில் இன்றியமையாத பாகமாகவே மாறிவிட்டது இப்போதெல்லாம்.

அதே போல தான் இன்றும் அவனைக் கிண்டல் செய்ய ஜெய் அவளது குரல் கேட்டுத் திரும்பியவன் “நீங்களா மேடம்? நான் கூட வேற யாரோனு நினைச்சேன்… இங்கே என்ன பண்ணுறிங்க?” என்று கேட்க

“ஹான் இப்பிடியே நாலு கழுதை போச்சு… அதை எங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்.. என்ன மேன் கேள்வி இது? வெஜிடபிள் எல்லாம் காலியாயிடுச்சுனு என் பாட்டி ஒரே புலம்பல்… சரி வீட்டுல சும்மா இருக்கிற நேரத்துல ஒரு பொதுசேவை செய்வோமேனு காய்கறி வாங்க வந்தேன்… நீங்க இன்னைக்கு ஆபிஸ் போகலையா?” என்று சாதாரணமாகப் பேசியபடி அவனுடன் நடக்கத் தொடங்கினாள்.

“இன்னைக்குக் கொஞ்சம் உடம்புக்கு முடியலை மேடம்… சோ லீவ் போட்டுட்டேன்” என்றவனது முகம் சோர்வுடன் இருப்பதை அப்போது தான் கவனித்தாள் அஸ்மிதா.

இருவரும் பேசிக்கொண்டே காய்கறி சந்தையை விட்டு வெளியேறியவர்கள் அவரவர் பாதையில் பிரியும் போதும் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்ட அஸ்மிதா ஜெய் ஆட்டோக்காரரிடம் பேசுவதைப் பார்த்துவிட்டு அவனருகில் சென்று நிறுத்தினாள்.

“என்ன சார் கார்ல வரலையா நீங்க?” என்று கேட்க

“கார் சர்வீசுக்கு விட்டிருக்கேன் மேடம்… நான் ஆட்டோல போயிடுவேன்” என்று சொல்லவும்

“உங்க வீடு இருக்கிறதா சொன்ன ஏரியாவை கிராஸ் பண்ணி தான் நான் போகணும்… என் கூட வாங்க” என்று அஸ்மிதா அழைக்கவே ஜெய் தயங்கினான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம் மேடம்? நான் வச்சிருக்கிற வெஜிடபிள்ஸ், உங்களோடதுனு வெயிட் ஜாஸ்தியா இருந்தா வண்டி பேலன்ஸ் பண்ணுமா?” என்று மெதுவாக வினவ

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்…. உக்காருங்க” என்றவளுக்கு ஏற்கெனவே உடல்நலமில்லை என்று சொன்னவனை அப்படியே விட்டுச் செல்ல மனமில்லை.

ஜெய்யும் வாதம் செய்ய விரும்பாதவனாய் அவள் பின்னே அமர்ந்தவன் ஸ்கூட்டி ஓட்டியபடியே அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டே வந்தான். திடீரென்று வேகத்தடை வர, வாகனஓட்டிகளுக்கே உரித்தான குணமான வேகத்தடையை மதியாத்தன்மையுடன் அஸ்மிதா அதே வேகத்தில் செல்லவே ஸ்கூட்டி தூக்கிப் போட்டதில் ஜெய் பயந்து போய் அஸ்மிதாவின் இடையைப் பிடித்துவிட அடுத்த நொடி ஸ்கூட்டியின் வேகம் குறைந்தது.

ஜெய் கைகள் நடுங்க அவளது இடையிலிருந்து கையை எடுத்தவன் அஸ்மிதாவின் “கீழே இறங்கு” என்ற அதட்டலில் வேகவேகமாய் ஸ்கூட்டியிலிருந்து கீழே இறங்கி நிற்க அஸ்மிதா அவனை முறைத்தபடி தானும் இறங்கினாள்.

முறைப்புடன் அவனது காய்கறி பையை வாங்க கை நீட்ட, அவன் அவள் அடிக்கத் தான் கை ஓங்குகிறாளோ என்று பதறியவனாய் “நான் வேணும்னே பண்ணலை மேடம்… ஸ்பீட்பிரேக்கர்ல வண்டி தூக்கிப் போட்டதுல பயந்து போய் இடுப்பைப் பிடிச்சிட்டேன்… சாரி மேடம்… சாரி” என்று தயங்கி தயங்கி வார்த்தையை வெளியிட்டவன் அவளைப் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டான்.

“ஹலோ! நான் உங்களோட வெஜிடேபிள் வச்சிருக்கிற பையைக் கேட்டேன்… என்னமோ நான் உங்களை மாப்பிள்ளை பார்க்க வந்த மாதிரி தலை குனிஞ்சு நிக்கிங்க” என்று சொல்ல ஜெய் அவளது பேச்சில் தலை நிமிர்ந்தவன் மறுபேச்சின்றி தனது பையை அவளிடம் ஒப்படைக்க

“குட் பாய்! இப்போ போய் வண்டியை ஸ்டார்ட் பண்ணுங்க… நான் பின்னாடி உக்காந்துக்கிறேன்” என்று அஸ்மிதா சொன்னதும் தான் ஜெய்கு தன்னை அவள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்பது புரிந்தது.

மௌனமாகத் தலையாட்டியவன் விறுவிறுவென்று ஸ்கூட்டியில் அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்ய அஸ்மிதா அவன் பின்னே அமர்ந்து கொண்டாள்.

ஆனால் வண்டி ஓட்டும் போதும் அவன் புலம்ப ஆரம்பிக்கவே அவளது பொறுமை காற்றோடு கலக்கப்போகிறேன் என்று அவளுக்கு அறிவிப்பு கொடுக்க ஆரம்பித்தது.

“சாரி மேடம்.. நான் வேணும்னே பண்ணலை… நீங்க என்னை தப்பா நினைச்சிடாதிங்க… எனக்கு ஸ்கூட்டியில போய் பழக்கம் இல்லை… பயத்துல தான் அப்பிடி…” என்று தன் பக்க நியாயத்தை உரைத்துக் கொண்டே வந்தவன் பக்கவாட்டுக்கண்ணாடியில் அஸ்மிதாவின் முகம் கடுகடுவென்று இருப்பது தெரியவும் கப்சிப்பானான்.

அவளோ “அட நிப்பாட்டுயா… சொன்னதையே சொல்லிப் புலம்பாதே… இப்போ நான் என்ன உன்னைக் கொலையா பண்ணப் போறேன்? நீ இன்டென்சனா பண்ணலைனு எனக்கும் தெரியும்… அதனால தெய்வமே தயவு பண்ணி ரோட்டை பார்த்து வண்டியை ஓட்டு” என்று கடுப்பாய் வார்த்தைகளை வெளியிட

ஜெய் “அதில்ல மேடம்… இப்போவும் நீங்க என்ன சொன்னாலும் என் மனசு ஆறலை” என்று சொன்னபடி பின்னே திரும்பி அவளிடம் ஏதோ சொல்ல வர அதற்குள் எதிரில் ஒரு லாரி வரவும்

“ஐயோ லாரி வருது… வண்டியை திருப்பு ஜெய்” என்று அஸ்மிதா கத்தவும் ஜெய் சுதாரித்து வண்டியைச் சட்டென்று திருப்ப, சுமை தாங்காமல் தள்ளாடிய ஸ்கூட்டியை சமன் செய்ய இயலாதவனாய் சரியவிட்டான்.

வண்டி சாலையோரமாய் சரியவும் காய்கறிப்பைகள் கீழே விழ அதோடு சேர்ந்து இருவரும் விழுந்துவைத்தனர். அவர்கள் விழுவதைக் கண்டு ஆங்காங்கே நின்று கொண்டிருந்தவர்கள் அவர்களை நோக்கி ஓடிவந்தனர்.

வண்டியைத் தூக்கிவிட்டதும் அஸ்மிதாவுக்குக் கை கொடுத்து எழுப்பினார் பெண்மணி ஒருவர். ஜெய் இன்னும் எழுந்திருக்காமல் விழுந்தபடியே கிடக்கவும் அஸ்மிதா முறைத்துவிட்டு அவனுக்குக் கை கொடுக்க அவளது கையைப் பற்றிக்கொண்டவன் மெதுவாக எழுந்தான்.

இருவருக்கும் அடி பலமில்லை என்றாலும் கை கால்களில் சிராய்ப்புகள் இருக்க கூட்டத்தில் இருந்த ஒருவர் ஜெய்யிடம்

“ஏன்பா ஒய்பைக் கூட்டிட்டு வர்றப்போ கவனமா வரக்கூடாதா? யாரு செஞ்ச புண்ணியமோ வண்டி ரோட்ல கவிழாம ஓரமா சரிஞ்சு விழுந்துச்சு” என்று கடிந்து கொள்ள அஸ்மிதா ‘என்னது ஒய்பா?’ என்ற அதிர்ச்சியுடன் அவனை நோக்க அவனோ கையில் சிராய்த்ததில் உண்டான காயத்தை ஊதிக் கொண்டபடி இனி கவனமாகச் செல்வதாக அந்த நபருக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தான்.

இதற்கு மேல் காட்சிப்பொருளாக நிற்க விரும்பாத அஸ்மிதா அவனிடம் “கிளம்பலாமா?” என்று கேட்க அவன் தலையாட்டிவிட்டு ஸ்கூட்டியை மீண்டும் நோக்கிச் சென்று ஸ்டார்ட் செய்ய விழைய

“ஏய் கீழே போட்டு எனக்கு அடிபட வச்சது பத்தாதா? இன்னும் என்ன பண்ணுற ஐடியால இருக்க? ஒழுங்கா பின்னாடி உக்காரு” என்று இடையைப் பிடித்ததால் சற்று முன்னர் எழுந்த கோபத்துடன் விழுந்து அடிபட்டதால் உண்டான வேதனையும் சேர கடுகடுத்துவிட்டு வண்டியைத் தானே ஓட்ட முடிவு செய்தாள்

ஜெய் இன்னும் உட்காராமல் சிதறிக் கிடந்த காய்கறிகளைச் சோகமாகப் பார்த்துக் கொண்டு நிற்க அஸ்மிதா விரல்களைச் சொடுக்கியதும் அவளைப் பார்த்தவன்

“காய்கறி எல்லாமே வேஸ்டா போச்சு மேடம்” என்று சோகமாய் கூறிவிட்டு ஸ்கூட்டியில் அமர்ந்தான்.

அவனது சோகமுகத்தைப் பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்து உச்சுக்கொட்டிய அஸ்மிதா நேரே வண்டியை சஞ்சீவினி பவனத்தை நோக்கிச் செலுத்தினாள். ஜெய் அதைக் கவனித்தாலும் அஸ்மிதாவிடம் பேச தைரியமின்றி வாய் மூடி அமர்ந்திருந்தான்.

ஸ்கூட்டி வீட்டினுள் நுழைந்ததும் ஜெய்யை இறங்க சொன்னவள் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அவனை உள்ளே அழைத்துச் சென்றாள். இஷானி அலமேலுவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவள் இருவரையும் கண்டதும் புருவம் சுருக்கினாள். அலமேலு ஜெய்யைக் கண்டதும் அவனை எங்கேயோ பார்த்தது போல் உள்ளதே என்று யோசித்தபடி அமர்ந்திருந்தார்.

அவர்களது தோற்றத்தில் இருந்த மாற்றம் அவள் கண்ணில் படவும் “ஏன் உங்க ரெண்டு பேரோட கைல சிராய்ப்பு இருக்கு? என்னாச்சு அஸ்மி?” என்றவாறு எழுந்தவள் ஜெய்யை நோக்க

“நான் ஸ்கூட்டியை டிரைவ் பண்ணுனப்போ பேலன்ஸ் பண்ணாம தவறவிட்டுட்டேன்” என்று மெதுவாகச் சொன்னான் அவன்.

இஷானி உள்ளே சென்று முதலுதவிப்பெட்டியை எடுத்து வந்தவள் ஜெய்யிடம் மருந்து போட்டுக்கொள்ளுமாறு நீட்ட அவன் வாங்கிக் கொண்டு நின்றபடி அதைக் காயத்தில் போட முயற்சிக்க

“உக்காந்துக்கோப்பா… ஏன் நின்னுட்டே இருக்க?” என்ற அலமேலுவின் குரலில் இருந்த வாஞ்சை அவன் மனதைத் தொடவே அவரை நோக்கி மெல்லியதாகப் புன்னகைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து மருந்து போட்டுக் கொண்டான்.

அஸ்மிதாவோ “இவன் தள்ளிவிட்டதுல எனக்கு கை கால் எல்லாம் காயமா இருக்கு… இவனுக்குச் சிரிப்பு கேக்குதோ?” என்று கடுத்தவள் இஷானி அவளுக்கு மருந்து போட்டுவிட்டு முதலுதவிப்பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றதும் ஜெய்யைத் திட்ட ஆரம்பித்தாள்.

“என்னைப் பழிவாங்கணும்னு எத்தனை நாள் காத்திருந்த? ஃபர்ஸ்ட் டைம் உன்னைத் திட்டுனதுக்கு நீ என்னை நல்லா பழிவாங்கிட்ட ஜெய்… ஐ ஹேட் யூ” என்று வெடிக்க

“தெரியாம கீழே போட்டுட்டேன் மேடம்… சாரி… நான் வேணும்னே பண்ணலை” என்று அவன் பரிதாபமானக்குரலில் இறைஞ்சவும் அலமேலுவுக்கும் இஷானிக்கும் பாவமாக இருந்தது.

“விடு அஸ்மி! அமைதியா இரு.. யாரும் வேணும்னு ஸ்கூட்டியைத் தவறவிட மாட்டாங்க” என்று அவளை அதட்டிவிட்டு அலமேலு ஜெய்கு ஆதரவாகப் பேச

“உனக்கு தெரியாது பாட்டி… நான் இவன் கூட சண்டை போட்டதை மனசுல வச்சிட்டு என்னைக் கீழே தள்ளிவிட்டுட்டான்” என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் அவன் மீது.

ஜெய் “இல்லை மேடம்! நான் லாரி வந்ததைக் கவனிக்கல… வேணும்னே தள்ளிவிடலைங்க” என்று கெஞ்ச ஆரம்பிக்கவும்

“ஏய் நீ வேணும்னே பண்ணலைனு சொல்லி சொல்லியே முதல்ல என் இடுப்பைப் பிடிச்சுட்டு அடுத்து என்னைத் தள்ளிவிட்டுட்டே” என்று சொல்லவும்

“என்னங்க இப்பிடிலாம் சொல்லுறிங்க? நான் ஏன் அப்பிடிலாம் பண்ணப் போறேன்?” என்று அதிர்ந்த குரலில் அலமேலு இஷானியின் பார்வைகளை எப்படி எதிர்கொள்ளுவது என்று புரியாமல் தவித்தவனாய் அவன் பேச

“ஏன் பண்ணுனேனு உனக்குத் தான் தெரியும்டா” என்று சொல்லி பழிப்பு காட்டியவளுக்கு உள்ளுக்குள் சாலையில் விழுந்து அடிவாங்க வைத்தக் கோபம் என்று பெரிதாக எதுவுமில்லை. அடிபட்ட வலியில் அவள் கத்திக் கொண்டிருந்தாள் அவ்வளவே!

ஆனால் அப்பாவி ஜெய்யோ இதை வேறு மாதிரி புரிந்து கொண்டான். தான் வேகத்தடையில் அவள் இடையைப் பிடித்ததால் உண்டான கோபத்தைத் தான் அஸ்மிதா கொட்டித் தீர்க்கிறாள் என்று எண்ணும் போதே அவனுக்கு உள்ளுக்குள் வலித்தது.

அவளது மனவோட்டத்தை அறியாதவனாய் “நான் இது வரைக்கும் யாரையும் தப்பானக் கண்ணோட்டத்துல பார்த்தது இல்லை மேடம்… என் மனசுல ஒரு பொண்ணு இருக்காங்க… அவங்க எனக்குத் தெய்வத்துக்குச் சமானம்… மனசுல ஒரு பொண்ணைத் தெய்வமா நினைக்கிறவன் உங்களை ஏன் தேவையில்லாம தீண்டப் போறேனு சொல்லுங்க… அப்புறம் நான் உங்களை வேணும்னே கீழே தள்ளி விடல… வாழ்க்கையில அனாதைங்கிற காரணத்தால நான் நிறைய காயப்பட்டிருக்கேன்… என்னால யாரையும் காயப்படுத்தி ரசிக்கமுடியாது… இதுக்கு மேலயும் என் மேல வருத்தமா இருந்துச்சுனா ரெண்டு அடி கூட அடிச்சுக்கோங்க… ஆனா பழி வாங்கிட்டேனு மட்டும் சொல்லாதிங்க” என்று சொன்னவனின் கண்கள் கலங்கியதைக் கண்டு இஷானிக்கும் அலமேலுவுக்கும் கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது.

அஸ்மிதாவும் அவனைத் தேவையின்றி பேசிவிட்டோமோ என்று வருந்தியவாறு நிற்க அவன் அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் தனது கண்ணீரை யாரிடமும் காட்டிக்கொள்ள வேண்டாம் என்று எண்ணியவனாய்

“போயிட்டு வர்றேன் பாட்டி… வர்றேன் மேடம்” என்று இஷானியிடமும், அலமேலுவிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.

அவனிடம் வண்டி எதுவுமில்லையே என்று யோசித்தவள் அவன் பின்னே செல்ல எத்தனிக்க அலமேலு அவள் கையைப் பிடித்து நிறுத்தினார்.

“எங்க போற? இன்னும் அந்தப் பையனை எதாவது சொல்லித் திட்டணுமா?” என்று கேட்ட அலமேலுவைத் தவிப்புடன் பார்த்தவள்

“நான் வேணும்னே பேசலை பாட்டி… காயம் வலிச்சுது, அந்த எரிச்சல்ல…” என்று தயங்கி தயங்கிப் பேச

“உனக்கு மட்டும் தான் அடிபட்டுச்சா? அந்தப் பையனுக்கும் கையில சிராய்ச்சிருந்துச்சே? அவன் பொறுமையா தானே பேசுனான்… நீ இன்னைக்கு அவனைத் திட்டுனது என்னவோ காயத்தோட வலியில தான்… ஆனா அவன் வேற மாதிரி நினைச்சிட்டான் போல… பேசுறப்போ கவனமா பேசணும்னு அடிக்கடி சஞ்சீவினி ஏன் உனக்கு அட்வைஸ் பண்ணுறானு இப்போ புரியுதா?” என்று சொல்லிவிட்டு அவரது அறையை நோக்கிச் சென்றுவிட இஷானியின் புறம் திரும்ப அவளோ ஜெய்யின் வார்த்தைகள் ஏற்படுத்திய சோகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.

இது வரை தான் தவறாகப் பேசிவிட்டோமோ என்று எந்த சமயத்திலும் அஸ்மிதா யோசித்தது இல்லை. யாரையும் வருத்திவிட்டோமோ என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் முதல் முறை தனது வார்த்தைகள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவனது மனதைக் காயப்படுத்திவிட்டன என்பதை அறிந்ததும் அவளுக்குக் குற்றவுணர்ச்சியில் உள்ளம் குறுகுறுக்க ஆரம்பித்தது. எப்படியாவது அடுத்த முறை சந்திக்கையில் அவனிடம் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நினைத்தபடி கனத்த மனதுடன் சோபாவில் சரிந்தாள் அவள்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛