🌊 அலை 9 🌊
என் வாழ்க்கை எனும் குறிப்பேட்டின்
முதல் தவறு நீ!
திருத்தும் முன்னரே மை
மறைந்து போன மாயமென்ன!
ஹில்டாப் வெட்டிங் அண்ட் ஈவெண்ட் பிளானர்ஸ்…
மதுசூதனனின் அலுவலக அறையில் அவனது இருக்கைக்கு எதிரே உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தனுஜா. அவள் அமர்ந்திருந்த தொனியும் பேச்சும் மதுசூதனனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. அவள் சொன்னதன் பொருள் இது தான்.
அவள் அவனை நம்ப வேண்டுமென்றால் அவனிடம் உரிமை எடுத்துப் பேசிய அந்தப் பெண்ணே தன்னிடம் வந்து சொன்னால் மட்டுமே தான் மதுசூதனனை நம்ப முடியுமென பிடிவாதம் பிடித்தாள் அவள். தன்னை நம்பாதவளைக் கண்டு அவனுக்கு ஏமாற்றமாய் இருந்தது.
காதலனாய் தன்னை நம்பாவிடினும் ஒரு நண்பனாய் தன்னை நம்பலாமே என்று ஆதங்கத்துடன் கேட்டாலும் “நீ என்னை ஒரு ஃப்ரெண்டா நினைக்கலாம் மது… பட் ஐ லவ் யூ அ லாட்…. காதலிக்கிற எந்தப் பொண்ணும் தான் காதலிக்கிறவனை யாரு கிட்டவும் விட்டுக் குடுக்க மாட்டா… அவ உன் கிட்ட உரிமையா பேசுன மாதிரி இது வரைக்கும் நான் கூட உன் கிட்ட பேசுனது இல்ல… எனக்கு அதை இப்போ நினைச்சா கூட எரிச்சலா இருக்கு… அவ வந்து சொன்னா தான் நான் நம்புவேன்” என்றாள் விடாப்பிடியாய்.
மதுசூதனன் மதுரவாணியை இன்று நேரிலேயே கண்டுவிட்டாலும் தனுஜா அவனை நம்ப ஆதாரம் கேட்ட போது இப்படி தன்னை நிரூபிக்க வேண்டுமா என்ற எரிச்சலும் ஆண்களுக்கே உரித்தான ஈகோவும் தோன்றியது என்னவோ உண்மை! இவ்வளவு நேரம் கட்டிக்காத்த பொறுமை தூரச் செல்ல அனைத்துக்கும் இன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு அவனைத் தனுஜா கொண்டுவந்துவிட்டாள்.
இவ்வளவு நாட்கள் அவன் பொறுத்துப் போனான் என்றால் அதற்குக் காரணம் தனுஜாவின் உணர்வுகளை அவன் மதித்தது மட்டும் தான். ஆனால் அவளுக்கு அவனது உணர்வுகளைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலை இல்லை என்பது இப்போது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.
இவளை வாழ்க்கைத்துணையாகத் தேர்ந்தெடுத்தால் வாழ்நாள் முழுமைக்கும் அக்னிபரிட்சை தான் நடக்குமென யோசித்தவன் மதுரவாணியை அழைத்து வரக் கிளம்பினான்.
கிளம்பும் போது அவனிடம் “அவளை எங்க போய் தேடுவ மது?” என்று ஆவலாய் கேட்டவளை ஏறிட்டவன் “அது உனக்குத் தேவையில்லாத விசயம் தனுஜா… உனக்குத் தேவை அந்தப் பொண்ணு உன் கிட்ட வந்து எனக்கும் அவளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லனு சொல்லணும்… அவ்ளோ தானே… அவ சொல்லுவா… வெயிட் பண்ணு” என்று இறுகியக் குரலில் உரைத்தவன் அன்றோடு அவர்களின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைப்பான் என்பதை தனுஜா அப்போது எதிர்பார்க்கவில்லை.
காலம் அவளுக்கு எதிர்பாரா அதிர்ச்சிகளை வரிசையாகக் கொடுக்க காத்துக் கொண்டிருப்பதை அறியாதவளாய் மதுரவாணி அங்கு வரும் சமயத்துக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் அவள்.
அதே நேரம் மதுரவாணி சோகவடிவாய் அமர்ந்திருந்த சங்கவியைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.
“அக்கா ப்ளீஸ்கா! நான் விக்கி கிட்ட ஜாப் அரேஞ்ச் பண்ண சொல்லிருக்கேன்… அவனுக்குக் கால் போகலக்கா… அவன் எல்லாமே அரேஞ்ச் பண்ணிட்டு என்னைக் கூப்பிடுவான்… அது வரைக்கும் வீட்டுல யார் கிட்டவும் சொல்லிடாதக்கா… நீ எனக்காக கார்த்தி அண்ணா கிட்ட பொய் சொன்னது ஒன்னும் தப்பில்ல தானேக்கா?”
“நான் இது வரைக்கும் கார்த்தி கிட்ட பொய் சொன்னது இல்லனு உனக்கு நல்லாவே தெரியும்ல… தம்பியா தங்கச்சியானு பாக்குறப்போ எனக்கு அவன் தான் முக்கியம்னு எத்தனை தடவை சொல்லிருப்பேன்? ஆனா இன்னைக்கு அவன் கிட்டயே பொய் சொல்லிட்டேனே”
உண்மை தான்! சங்கவிக்குக் கார்த்திக்கேயன் மீது தனிப்பிரியம். அவனும் அவளிடம் இது வரை எதையும் மறைத்தது இல்லை. பெரியப்பா மகள் என்ற எண்ணமின்றி உடன்பிறப்பாக அவளை நடத்துபவனிடம் தான் இன்று எப்பேர்ப்பட்ட பொய்யைச் சொல்லிவிட்டோம் என்று புலம்பித் தீர்த்தாள் அவள்.
மதுரவாணி தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என அழகாய் பொய் சொல்லிச் சமாளித்தவள் அதே பதற்றத்துடன் போனை வைத்துவிட்டு காசோலை அளிக்க வந்திருந்த மதுசூதனனிடம் பேசி அவனையும் வழியனுப்பி வைத்தாள்.
அவன் சென்ற பிறகு புலம்பியவளைக் கண்டு மதுரவாணிக்குக் குற்றவுணர்ச்சி மிகுந்தது. முதல் முறையாகத் தன்னால் மற்றவர்களுக்குத் தொந்தரவோ என்று யோசித்தவளை ஸ்ரீரஞ்சனி தேற்ற ஆரம்பிக்க யாழினியும் ராகினியும் சங்கவிக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தனர். கூடவே மதுரவாணியின் மீது தவறு சொல்ல ஏதுமில்லை என்பதையும் கூறினர்.
“அவளுக்கு இஷ்டமில்லனு தெளிவா சொன்னதுக்கு அப்புறமும் அவங்க கல்யாண ஏற்பாட்டைப் பண்ணுனது ரொம்ப பெரிய தப்பு கவி… இன்னைக்குக் காலம் மாறிடுச்சு… அப்பா அம்மா சொன்னாங்கனு எந்தப் பொண்ணும் மனசுக்குப் பிடிக்காதவனுக்குக் கடனேனு கழுத்தை நீட்ட தயாரா இல்ல… இன்னும் அந்தக் காலம் மாதிரியே நடந்துகிட்டா என்னடி அர்த்தம்? கார்த்தி மட்டும் மனசுக்குப் பிடிச்சவளோட வாழணும்… அவன் தங்கச்சி மட்டும் இவங்க சொன்னாங்களேனு பிடிக்காத மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டணும்னு அவன் எப்பிடி எதிர்பாக்கலாம்? அவனுக்கு ஒரு நியாயம், அவன் தங்கச்சிக்கு ஒரு நியாயமா?”
யாழினி கேட்டவை அனைத்துமே சங்கவியின் மூளைக்குள் பதிய ஆரம்பித்தப் பின்னர் தான் அவள் இயல்புக்குத் திரும்பினாள் எனலாம்.
முகம் கழுவி விட்டு வந்தவள் மதுரவாணியிடம் “நீ சொல்லுறதும் சரி தான்… நான் இனிமே நதியூர்ல இருந்து யார் கால் பண்ணுனாலும் நீ இங்க வரலைனு சொல்லிடுறேன் மது… நீ ஒரி பண்ணிக்காத” என்று சொல்ல அவள் அக்காவிடம்
“நானும் உங்க கூட பொக்கே ஷாப்புக்கு வரவா? நீங்க மூனு பேரும் அங்க போயிடுவிங்க… ராகி காலேஜுக்குப் போயிடுவா… நான் மட்டும் தனியா இருந்து என்ன பண்ணப் போறேன்? ப்ளீஸ்கா! நானும் உங்க கூட வர்றேன்… ரஞ்சி சொல்லுடி” என்று ஸ்ரீரஞ்சனியிடம் சிபாரிசு செய்ய சொல்ல
“நீங்க இன்னைக்கு ஃப்ளவர் டீலரைப் பாக்க போகணும்ல அண்ணி! மது என் கூட வரட்டும்… இன்னைக்கு நாங்க ஷாப்பை பாத்துக்கிறோம்” என்று சொன்னபடி அவளுடன் கிளம்பினாள்.
சங்கவிக்கும் யாழினிக்கும் கூட இந்த ஏற்பாடு சரியாகப் பட அடுத்தச் சில நிமிடங்களில் நால்வரையும் ஏற்றிக் கொண்டு அவர்களின் கார் டெய்சி ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் நுழைவுவாயிலைத் தாண்டி விரைந்தது.
ஸ்ரீரஞ்சனி, மதுரவாணியோடு ராகினியும் ‘பிளாசம் பொக்கே அண்ட் ஃப்ளவர் டெகரேசன்’ முன்னே இறங்கிக் கொண்டாள். இன்று அவளுக்குக் கல்லூரியில் கல்சுரல்ஸ் ப்ரோகிராம் தான். எனவே காலதாமதமாகப் போனாலும் யாரும் கேட்கப்போவதில்லை. அதனால் இவர்களுடன் சிறிது நேரம் அரட்டையடித்துவிட்டு உதகமண்டலத்துக்குச் செல்லலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தவள் அவர்களுடன் பொக்கே ஷாப்புக்குள் நுழைந்தாள்.
அங்கே பணி புரியும் பெண்களும் வந்துவிட கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவர்கள் விளக்கைப் போட்டுவிட்டு வேலையை ஆரம்பித்தனர். மதுரவாணி அந்தக் கடை அமைந்திருந்த சுற்றுபுறத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
எழில் கொஞ்சும் மலைச்சிகரங்களின் பின்னணியில் கண்ணாடிக்கதவுகளுடன் கூடிய அந்தக் கடையின் முன்னே மரத்தினாலான அழகான சாய்வு படிகட்டுகளில் மலர்க்கொத்துக்கள் அடுக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
கூடவே கண்ணாடிக்கு உள்ளேயும் சில விலையுயர்ந்த மலர்க்கொத்துக்கள் அணி வகுக்கத் தயாராகிக் கொண்டிருந்தன. இதை ரசித்தபடியே நின்று கொண்டிருந்தவள் ராகினி அழைக்கவும் உள்ளே சென்றாள்.
ஸ்ரீரஞ்சனி கணினியைக் காட்டி “எனக்கு வேலை இங்க தான்… நீ வர்ற கஸ்டமர்ஸ் கிட்ட சாமர்த்தியமா பேசி சேல் பண்ணுற வேலைய பாருடி… உனக்கு பேச்சுத்திறமை அதிகம்… சோ அது தான் உனக்கு சூட்டபிளான வேலை” என்று சொல்லிவிட்டாள்.
உள்ளே மலர்க்கொத்துக்களைத் தயார் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. மதுரவாணி அதை வேடிக்கை பார்த்தவள் அந்தப் பெண்மணிகளிடம் சிரித்த முகமாய் பேச ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட இரண்டுமணி நேரங்கள் இப்படியே கடக்க ராகினி கல்லூரிக்குச் செல்லும் நேரமும் வந்துவிட்டது.
“நான் கிளம்புறேன் ரஞ்சிக்கா, மதுக்கா டாட்டா” என்றபடி ஷோல்டர் பேகை மாட்டிக் கொண்டவள் கதவைத் தாண்டி வெளியே வர அவர்களின் பொக்கே ஷாப்புக்கு எதிரே ஸ்கோடாவை நிறுத்திவிட்டு இறங்கினான் மதுசூதனன்.
இவனது ரெனால்ட் க்விட்டுக்கு என்னவாயிற்று என்ற யோசனையுடன் நின்ற ராகினி இவனுக்குக் கடை முகவரி எப்படி தெரிந்திருக்கும் என்று அதிர்ந்தாள். அதன் பின்னர் ஒருவேளை இவன் மதுரவாணியைத் தேடி வந்திருப்பானோ என்று எண்ணியவள் வேகமாய் கடைக்குள் ஓடினாள்.
மதுரவாணியை எச்சரிக்க அவள் ஓடிவந்ததைக் கண்டு ஸ்ரீரஞ்சனி இவளுக்குப் பைத்தியம் விட்டதா என்று சந்தேகிக்க மதுரவாணியோ உள்ளே உள்ள மலர்க்கூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்லாப்பை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள்.
“அக்கா அந்த வளர்ந்தவன் வர்றான்… போய் ஒளிஞ்சுக்கோங்க” என்ற ராகினியின் எச்சரிக்கைக்குரலில் தலை நிமிர்த்தியவள் கண்ணாடி கதவுகளினூடே தெரிந்த வெளிப்புறத்தை உற்று நோக்கினாள். அங்கே தெரிந்த காட்சியில் கண்ணை விரித்துப் பார்த்தவள் சட்டென்று ஓடிப்போய் மலர்க்கூடைகளை அடுக்கி வைத்திருந்த ஸ்லாப்பிற்கு பின்னே ஒளிந்து கொண்டாள். இவர்கள் இருவரையும் பார்த்து கடுப்புடன் முறைத்த ஸ்ரீரஞ்சனி கடையை நோக்கி வந்தவனைப் பார்த்ததும் தலையில் அடித்துக் கொண்டாள்.
மதுரவாணியோ வீட்டில் சகோதரிகள் இருக்கும் போதே மன்னிப்பு கேட்குமாறு திமிராய் முணுமுணுத்தவன் இப்போது எதற்கு வருகிறான் என்ற கேள்வியுடன் கடைக்குள் வந்து கொண்டிருந்தவனை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ஆத்தாடி! இன்னைக்கு சனியன் ஸ்கோடால வந்திருக்குடி மது… இவன் மட்டும் உன்னைப் பாத்தான் இருக்கிற கோவத்துல ப்ரேக்பாஸ்டுக்கு உன்னையே கடிச்சு முழுங்கிருவான் போலயே… பெருமாளே நீ தான் என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்தணும்” என இஷ்டதெய்வத்திடம் வேண்டுதல் வேறு வைத்தாள்.
வந்தவன் நேரே ராகினியிடம் நின்று “எங்க போனா அந்த குட்டிபிசாசு? இங்க தான் ஒளிஞ்சிருக்கணும்னு நினைக்கிறேன்… ஒழுங்கா அவளை வெளிய வரச்சொல்லு… இல்லனா விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்” என்று எச்சரிக்க ராகினியின் வாய் தந்தியடித்தது.
“அது…. வந்து…. அக்கா” என்றவளை கேலியாய் நோக்கிவிட்டு “என் பேரு ஒன்னும் அது வந்து அக்கா இல்ல… ஐ அம் மதுசூதனன்… அண்டர்ஸ்டாண்ட்? அந்த குட்டிபிசாசைப் பாக்காம நான் இங்கே இருந்து போறதா இல்ல” என்று பிடிவாதமாய் உரைத்தவனுக்குத் தனுஜாவிடம் இருந்து போன் வரவும் போனைக் காதுக்கு கொடுத்தான்.
“தனு பேபி! உன்னோட மது மேல உனக்கு நம்பிக்கை இல்லயா? அந்தப் பொண்ணே உன் கிட்ட வந்து சொல்லுவா… என்னை நம்புடா ப்ளீஸ்” என்றவனின் குரலில் அவ்வளவு உருக்கமும் காதலும் வழிந்ததை மதுரவாணி அந்த ஸ்லாப்புக்கும் சுவருக்கும் இடையேயுள்ள இடைவெளி மூலம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் பேசுகிறவனோ இது தனுஜாவிடம் பேசும் கடைசிப்பேச்சு என்பதில் மிகத் தெளிவாக இருந்தான். போனை வைத்தவன் ஸ்ரீரஞ்சனியிடம்
“சிஸ்டர் உங்களோட ஃப்ரெண்ட் என் வாழ்க்கைல பண்ணி வச்ச குழப்பத்துக்கு இப்போ அவ பதில் சொல்லியே ஆகணும்… அவளைக் கூப்பிடுங்க” என்று கேட்க அவள் என்ன செய்வது என்று புரியாது விழிக்க மதுசூதனனின் விழிகள் மதுரவாணியைக் கடைக்குள் தேட ஆரம்பித்தது.
அவளது டாப்பின் நுனி தெரியவும் மெதுவாய் அங்கே சென்றவன் குனிந்து ஸ்லாப்பின் பின்னே மறைந்திருந்தவளின் காதைப் பிடிக்க மதுரவாணி திடுக்கிட்டு விழித்தாள். காது மடல் சுளீரென்று வலிக்க “ஐயோ காது வலிக்குதே!” என்று முகத்தைச் சுருக்கியபடி எழுந்தவள் அவனது கையைத் தட்டிவிட முயல அவனோ காதுமடலைத் திருகியவன்
“வலிக்குதா? நல்லா வலிக்கட்டும்… நேத்து டார்லிங்னு உருகி ட்ராமா பண்ணுறப்போ சந்தோசமா இருந்துச்சுல்ல” என்றவன் அவள் முகம் வலியில் சுருங்குவதைக் கண்டதும் அவளது காது மடலை விடுவித்தான்.
மதுரவாணி தனது காது மடலைத் தேய்த்துக் கொண்டிருக்கும் போதே “என் கூட வா” என்று சொல்லி அவளது கரத்தைப் பற்றி அழைத்துச் செல்ல முற்பட்டான் மதுசூதனன்.
“நான் எதுக்கு உன் கூட வரணும்?” என்று சீறியபடி மதுரவாணி தனது கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள்.
“ஏன்னா உன்னால நேத்து என்னோட உலகமே தலை கீழ மாறிப் போச்சு… ஒழுங்கு மரியாதையா என் கூட வந்து நீ நேத்து பேசுன எல்லாமே ஃப்ராங்னு சொல்லணும்…” என்று சொல்லவும் அவள் அவனை வினோதமாய் நோக்கினாள்.
“நேத்து நான் சொன்னதுல உன் தங்கச்சி கோவப்பட்டு உங்க வீட்டுல போட்டுக் குடுத்துட்டாங்கனு தெரியுது… கோவத்துல உங்க அம்மா நேத்து நைட் சாப்பாடு கட் பண்ணிருப்பாங்க… மார்னிங்கும் திட்டிட்டே சாப்பாடு போட்டிருப்பாங்க… அதுக்கு இவ்ளோ பில்டப்பா? அதனால உலகமே மாறிடிச்சுனு சினிமா டயலாக் பேசாம கிளம்பு”
“ஏய் யாருடி என் தங்கச்சி? அவ என் கேர்ள் ஃப்ரெண்ட்… நீ பேசுன பேச்சால எங்களுக்குப் ப்ரேக் அப் ஆகப்போகுது” என்றான் மதுசூதனன் எரிச்சலாக.
“என்னது கேர்ள் ஃப்ரெண்டா?” என்று மதுரவாணி வாயைப் பிளக்க அவன் அவளை முறைத்தபடி “ஆமா! நேத்து என் கூட ரெஸ்ட்ராண்ட்ல இருந்தவ என்னோட கேர்ள் ஃப்ரெண்ட்… இன்னும் கொஞ்சநாள்ல மேரேஜ் கூட பண்ணிக்கிறதா இருந்தோம்… ஆனா இந்த கவுன் போட்ட சகுனி எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிட்டா… அதை கூட மன்னிச்சிடுவேன்… இவளால தனு என் கேரக்டரையும் தப்பா நினைக்கிறா” என்றான் பல்லைக் கடித்தபடியே.
அவன் ‘கேர்ள் ஃப்ரெண்ட்’ என்று சொன்னதும் மூவரும் அதிர்ந்தனர். அவன் பேசிய அனைத்தையும் கேட்ட பிறகு ஸ்ரீரஞ்சனி கடுஞ்சினத்துடன் ராகினியை முறைக்க மதுரவாணியின் முகமோ வெளிறிப்போய் விட்டது. அவனது சகோதரி என்று எண்ணித் தான் பேசியது அவனது காதல் முறிவுக்குக் காரணமாகிவிட்டதே என்று தன் மீதே கோபம் கொண்டவள்
“சாரி சார்! நான் அவங்கள உங்க சிஸ்டர்னு நினைச்சு தான்… விளையாட்டுக்கு…. நான் வேணும்னா அவங்க கிட்ட பேசவா சார்? நான் இது எல்லாமே சும்மா ஜஸ்ட் ஃபார் ஃபன்னு சொல்லி அவங்கள சமாதானம் பண்ணுறேன்” என்று படபடக்க மதுசூதனன் பெருமூச்சுடன் சிகையைக் கோதிக் கொண்டான்.
“அட்லீஸ்ட் இப்போவாச்சும் உன்னோட இர்ரெஸ்பான்சிபிள் பிஹேவியரால என் லைப்ல உண்டான ப்ராப்ளம் எவ்ளோ சீரியசானதுனு உனக்குப் புரிஞ்சிருக்கும்… இனியாச்சும் என் கூட கிளம்புறியா?” என்று கேட்டவனைத் தயக்கத்துடன் நோக்கினாள் மதுரவாணி.
“எங்க கிளம்பணும்?” என கேட்டவளிடம்
“கோயம்புத்தூருக்கு” என்று அவன் சாதாரணமாய் சொல்லவும் மதுரவாணி திருதிருவென விழித்தாள். உதகமண்டலம் போல் அல்ல கோயம்புத்தூர். சரவணனும் கார்த்திக்கேயனும் கட்டாயம் காவல்துறை மூலம் தன்னைத்தேட முயற்சித்துக் கொண்டிருப்பர். இந்நிலையில் கோவைக்குச் சென்றால் அங்கே யாராவது காவல்துறை அதிகாரி தன்னைக் கண்டுவிட்டு அவர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டால் தனது நிலை என்னவாகும் என சிந்தித்தாள்.
ஆனால் அடுத்த கணமே தன்னால் ஒருவனின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை விரும்பாதவளாய் அவனுடன் செல்லச் சம்மதித்தவள் ஸ்ரீரஞ்சனியிடமும் ராகினியிடமும் சொல்லிக் கொண்டு மதுசூதனனுடன் காரில் ஏறினாள்.
உள்ளுக்குள் திக்திக்கென்று இருக்க சிலையாய் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவளிடம் சீட்பெல்டை போடுமாறு சொல்லிச் சலித்துப் போனவன் தானே அதை மாட்டிவிடும் போது மீண்டும் அவனது புஜத்தில் அவளது தோள்களின் உரசல் பச்சை நிற தாவணியை நினைவூட்ட நெற்றியைச் சுருக்கி யோசித்தவன் பின்னர் தலையை உலுக்கிக் கொண்டு காரை கோவை நோக்கிச் செலுத்த தொடங்கினான்.
மதுரவாணி இதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. அவனோ ஏன் இந்தப் பெண்ணின் ஸ்பரிசம் அந்த தாவணிப்பெண்ணையே அடிக்கடி நினைவூட்டுகிறது என்ற சிந்தனையில் இருந்தானே தவிர தனக்காக அங்கே தனுஜா என்ற ஒருத்தி காத்திருக்கிறாள், அவளிடம் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை அப்போது மறந்து போனான்.
அவன் வேண்டுமானால் மறக்கலாம்; ஆனால் தனுஜாவோ அவன் சென்ற நிமிடத்திலிருந்து எப்போது அந்த இன்னொருத்தியுடன் திரும்புவான் என வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள். அவள் யாரோ எவளோ; ஆனால் இனி மதுசூதனன் என்ற பெயர் கூட அவளுக்கு நினைவில் தோன்றாதபடி அவளுக்கு இன்று பதிலடி கொடுத்துவிட வேண்டும் என தீர்மானித்தவளின் இதயத்தில் ஒரு ஓரமாய் ஒரு வேளை அந்தப்பெண் சொன்னது போல மதுசூதனனுக்கும் அவளுக்கும் இடையே ஏதேனும் உறவு இருக்குமோ என்ற சந்தேகம் தலை தூக்கிக் கொண்டு தான் இருந்தது.
மூவரின் யோசனையும் வெவ்வேறு விதமாய் இருக்க மதுசூதனனின் வாழ்வில் அன்றைய தினத்துடன் தனுஜா என்பவளின் அத்தியாயம் முடிய இன்னும் சிலமணித் துளிகளே இருக்கும் நிலையில் அடுத்து வரும் அத்தியாயங்களில் அவனுடன் பயணிக்கப் போகும் மதுரவாணியுடன் மழைச்சாரல் வரவேற்க கோயம்புத்தூர் நகரத்துக்குள் காரில் வந்து கொண்டிருந்தான் மதுசூதனன்.
அலை வீசும்🌊🌊🌊