🌊 அலை 6 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தோளைத் தீண்டும்
உன் ஸ்பரிசத்தோடு
மனதைத் தீண்டும்
உன் நினைவும் சேர
முகமூடிக்குப் பின்
மறைந்திருப்பவளே
யாரடி நீ தேவதையே!
ப்ளூ பேர்ல் ரெஸ்ட்ராண்ட்…
மதுசூதனன் தனுஜாவைச் சாப்பிடச் சொல்லிவிட்டுத் தான் மட்டும் மலர் அலங்காரம் செய்யும் பெண்களைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்ல அவளோ அவனுக்காக காத்திருப்பதாகச் சொல்லிவிட்டாள்.
அவளைத் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் மவுண்டெய்ன் வியூ பாயிண்ட் உள்ள இடத்துக்குப் போகச் சொல்லிவிட்டுத் தனது போனில் எதையோ நோண்டிக் கொண்டே வந்தான்.
அதே நேரம் ஐஸ் க்ரீமைத் தனித்தனி குளிர்பதன வசதியுள்ள கண்ணாடி அலமாரிகளில் பெரிய பாத்திரங்களில் வைத்திருந்ததைப் பார்த்த மதுரவாணி தனக்கும் குழந்தைகளுக்கும் ஐஸ் க்ரீம் ரோல் வாங்குவதற்காக ராகினியை அழைத்துக் கொண்டு அப்பகுதியை நோக்கிச் சென்றாள்.
இருவரும் மெனு கார்டை கையில் எடுத்துக் கொண்டவர்கள் அதைக் குனிந்து பார்த்தபடியே எதை வாங்கலாம் என்று விவாதித்தபடி நடந்தனர். அவர்கள் நடந்து சென்ற இடம் ரெஸ்ட்ராண்டின் உள்பகுதி. அதன் இருபகுதியிலும் மேஜைகள் போடப்பட்டிருக்க அதன் நடுவில் இருந்த பகுதியில் இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
மதுரவாணி தலையைக் குனிந்துகொண்டே வந்தவள் ஜீன்ஸ் அணிந்த ஜோடி கால்களைப் பார்த்ததும் எதிரில் நிற்பவனுக்கு வழி விட இடதுப்பக்கம் ஒதுங்கினாள். ஆனால் அவள் ஒதுங்கிய புறமே அந்தக் கால்களுக்குச் சொந்தக்காரனும் ஒதுங்க சலித்தவளாய் வலதுப்பக்கம் வர அவனும் வலதுப்பக்கம் வந்து நிற்க எரிச்சலுடன் தலை உயர்த்தியவள்
“ஹலோ கண்ணு என்ன பொடதியிலயா இருக்கு? ஒரு மனுசி எத்தனை தடவை அங்குட்டும் இங்குட்டுமா போறதுயா?” என்று எகிறியபடி அவன் முகம் பார்க்க இவ்வளவு நேரம் தனது ஆப்பிள் ஐபோனில் கண் பதித்திருந்தவன் தன் முன்னே நின்று தன்னை அண்ணாந்து பார்த்து கத்தியவளைக் கண்டதும் முகம் சுளித்தான்.
தன்னை முறைத்து விழித்த அந்த முட்டைக்கண்களையும், எரிச்சலில் கடுகடுத்த வட்ட முகத்தில் பிடிவாதமாய் இறுகியிருந்த செவ்விதழ்களையும் கண்டவன் ஒரு நொடி ஏனோ திகைத்து நின்றான். ஏனோ அந்த முட்டைக்கண்களின் கூரியப்பார்வை விழிகளைக் கடந்து இதயத்தைத் தாக்குவது போல உணர்ந்தான் மதுசூதனன்.
முன் பின் தெரியாத ஒரு பெண்ணின் பார்வை தன்னை ஏன் ஊடுருவுவது போலத் தோன்றுகிறது என யோசித்துத் தலையை உலுக்கித் தன்னைச் சமனப்படுத்திக் கொண்டவன் அவளுக்குச் சற்றும் குறையாத எரிச்சலுடன் உறுத்துவிழித்தான்.
கூடவே “குட்டிச்சாத்தான் மாதிரி இருந்துட்டு இதுக்கு வாய பாரு” என்று முணுமுணுக்க அதை அவள் கேட்டுவிட்டாள்.
பார்ப்பதற்கு நெடுநெடுவென வளர்ந்திருந்தால் இவன் இஷ்டத்துக்கு அவளது உயரத்தைக் கேலி செய்வானா? இவன் மட்டும் பெரிய அழகனா?
கோழி கிளறிய புல்தரை போல அங்கும் இங்கும் சிலிர்த்து நிற்கும் தலைமுடி, பூச்சாண்டி போல வளர்ந்திருந்த தாடியுமாய் இவனைப் பார்க்கவே சகிக்கவில்லை என எண்ணமிடும் போதே அவளது மனசாட்சி “பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுடி மதுரவாணி” என்று எச்சரிக்க
அவளோ “இட்ஸ் ஓகே! ஐஸ் க்ரீம் ரோல் போஜனத்துல சேராது… அது தின்பண்டம் தானே” என்று மனசாட்சிக்குப் பதிலடி கொடுத்துவிட்டுத் தனது உயரத்தைக் கேலி செய்தவனை சீற்றத்துடன் முறைத்தாள்.
“யாரு குட்டிச்சாத்தான்? நானா?” என்று சண்டைக்கோழியாய் சிலிர்த்தவளின் காதில் அருகிலிருந்த ராகினி “அக்கா பிரச்சனை வேண்டாம்… நமக்காக கவி அண்ணியும் யாழிக்காவும் வெயிட் பண்ணுறாங்க… லேட்டா போனா ரஞ்சி நம்மள வச்சி செய்வாக்கா… அதோட இந்த ஆள் வேற பார்க்குறதுக்கு கொஞ்சம் டெரர் பீஸ் மாதிரி இருக்கான்” என்று முணுமுணுக்க அப்போதைக்கு அமைதிவழிக்குத் திரும்பினாள்.
ஆள் பார்ப்பதற்கு கொஞ்சமே கொஞ்சம் விறைப்பாய் இருக்கவும் மதுரவாணிக்கே இவனுடன் சண்டையிட்டு சங்கவிக்குப் புது பிரச்சனையை உண்டாக்க வேண்டாமென அப்போதைக்கு அவனிடம் மோதும் எண்ணத்துக்கு விடுமுறை அளித்தாள். ஆனாலும் அவனை முழுவதும் மன்னிக்க மனமின்றி
“சரி சரி தள்ளிப் போ! உன்னைப் பாத்தாலே நீ சரியான தயிர்ச்சாதம்னு தெரியுது… நான் பாட்டுக்கு உன்னைத் திட்டி நீ மனசொடஞ்சு தப்பான முடிவுக்குப் போயிட்டேனா என்ன பண்ணுறது? உன் குட்லக் சூசைட் பாயிண்ட் வேற பக்கத்துல இருக்கு… சோ நான் ஒரு இளைஞன் உயிரோட விளையாட விரும்பாததால நீ தப்பிச்ச… இப்போ கொஞ்சம் நகருறியா?” என்று சொல்லிவிட்டு அவனது கையைப் பிடித்து நகர்த்திவிட்டு ராகினியுடன் சென்றாள் அவள்.
அவனைக் கடக்கும் போதே அவன் பற்களைக் கடிக்கும் சத்தம் காதில் விழ “ஆத்தாடி! பாக்க தயிர்சாதம் மாதிரி இருந்தானேனு கொஞ்சம் ஓவரா தான் பேசிட்ட மது… இனிமே கொஞ்சம் வாயடக்கம் பழகிக்கோடி” என்று தன்னைத் தானே எச்சரித்தபடி நகர்ந்திருந்தாள் மதுரவாணி.
அவள் கடந்து சென்றதும் கடுப்புடன் திரும்பியவன் மழை அடித்து ஓய்ந்தது போல இருக்கவே போனைப் பாக்கெட்டில் போட்டபடி அங்கிருந்து உள்ளே சென்றான். சிறுதுநேரத்தில் அவர்கள் முன்னரே பேசியிருந்த மேஜையில் அந்த மலர் அலங்காரம் செய்யும் ஆர்டர் எடுத்திருந்த பெண்மணிகள் அமர்ந்திருக்க அங்கே சென்றவன் “ஹலோ மேம்” என்று புன்னகையுடன் அவர்களுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர அவனை நோக்கி மரியாதை கலந்த இளநகை ஒன்றை வீசினர் சங்கவியும் யாழினியும்.
“என்ன சாப்பிடுறிங்க மேம்?” என்று அவன் சினேகமாய் கேட்க இருவரும் இடவலமாய் தலையசைத்து மறுத்துவிட்டு
“எங்க பசங்க வந்திருக்காங்க சார்! அவங்களோட சாப்பிட்டுக்குறோம்… நீங்க?” என்று கேட்க
“நான் என் ஃப்ரெண்ட் கூட வந்திருக்கிறேன் மேம்…. நம்ம பேசவேண்டியத பேசி முடிச்சதும் அவங்களோட சாப்பிட்டுக்கிறேன்” என்றவன் சொல்ல வேண்டிய விவரங்களைத் தெளிவாகச் சொல்லி முடித்தான்.
அப்போது சங்கவிக்கு மதுரவாணியிடம் இருந்து போனில் அழைப்பு வரவும் அதை ஏற்றவள் “சொல்லு மது” என்று சொல்ல அவள் எதிரே அமர்ந்திருந்த மதுசூதனன் அவளிடம் “யெஸ் மேம்?” என்று யாழினியிடம் இருந்து சங்கவியிடம் கவனத்தைத் திருப்ப
“இது என்னோட சிஸ்டர் சார்… அவ நேமும் மது தான்” என்று சங்கவி பதிலளிக்க அவன் நமட்டுச்சிரிப்புடன் மீண்டும் யாழினியிடம் விவரங்களைப் விளக்க ஆரம்பித்தான். சங்கவி பேசி முடிக்கவும் அவனது தொழில்முறை பேச்சு முடியவும் சரியாக இருந்தது.
அவன் பேசிமுடித்துவிட்டுக் கிளம்பி மௌண்டன் வியூ பாயிண்ட் உள்ள இடத்தில் அவனுக்காகக் காத்திருந்த தனுஜாவை நோக்கிச் சென்றான்.
அவள் முகம் அவனைக் கண்டதும் விகசிக்க “என்ன சாப்பிடலாம் தனு?” என்று கேட்டவனிடம் “வெஜ் ரைஸ் பவுள்” என்று அவள் ஆர்வமாய் சொல்ல இருவருக்கும் அதையே ஆர்டர் செய்துவிட்டு உணவு வருவதற்காக காத்திருந்த இடைவெளியில் தனுஜா தனது லேப்டாப்பில் அவனுக்குச் சில அலங்கார டிசைன்களைக் காட்ட அதைப் பார்த்தபடியே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு இரண்டு மேஜைகள் தள்ளித் தான் மதுரவாணி தனது தோழியர்களுடன் அரட்டையடித்தபடி அமர்ந்திருந்தாள். சங்கவியும் யாழினியும் குழந்தைகளை அங்கே உள்ள பூங்காவிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அவளருகில் அமர்ந்திருந்த ராகினி மதுசூதனனையும் தனுஜாவையும் அவளிடம் சுட்டிக்காட்டிவிட்டு
“மதுக்கா ஹீ இஸ் சோ ஸ்மார்ட்ல.. அவன் கூட உக்காந்துருக்கிற அந்தப் பொண்ணு யாரா இருக்கும்?” என்று கேட்க அதை மதுரவாணியின் மற்றொரு புறம் அமர்ந்திருந்த ஸ்ரீரஞ்சனி கேட்டுவிட்டாள்.
“ஏய் யாரடி சொல்லுறிங்க ரெண்டு பேரும்?” என்று கேட்டவளிடம் மதுரவாணி சற்று தொலைவில் அமர்ந்திருந்த மதுசூதனனைக் காட்டினாள்.
“அவனைத் தான் ரஞ்சி… ஆளு பாக்க கொஞ்சம் நல்லா தான் இருக்கான்… ஆனா அவன் ஹேர்ஸ்டைல தான் கோழி கிண்டுன புல்தரை மாதிரி இருக்கு…” என்று சொல்லி உதட்டைச் சுழிக்கவும் ராகினியும் ஸ்ரீரஞ்சனியும் களுக்கென்று நகைத்தனர்.
“ஏய் அதுக்கு பேரு ஸ்பைக்டி”
“என்ன மண்ணாங்கட்டியோ? நல்லா இருக்குற முடிய கொத்திக் குதறி வச்சிருக்கான்… பட் ஆள் ஸ்மார்ட் தான்… ரொம்ப பாசக்காரன் போல… தங்கச்சிக்குச் சாப்பாடு ஊட்டி விடுறான் பாரு” என்று மதுரவாணி சொன்ன போது மதுசூதனன் தனுஜாவுக்கு கரண்டியால் ஊட்டிவிட்டுக் கொண்டிருக்க அவளோ லேப்டாப்பில் அவனிடம் எதையோ காட்டிக் கொண்டிருந்தாள்.
“மதுக்கா! அது அவனோட தங்கச்சினு எப்பிடி சொல்லுற?”
“அவன் முகத்துல ஒரு அக்கறை தெரியுது பாரு… அதை வச்சுத் தான் சொல்லுறேன்” என்ற மதுரவாணி ஸ்பூனால் ஐஸ்க்ரீமை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.
“யாரு கண்டாங்க? ஒருவேளை அந்தப் பொண்ணு அவனோட லவ்வரா கூட இருக்கலாம்” என்று சொல்லிவிட்டுத் தோளைக் குலுக்கினாள் ராகினி.
ஸ்ரீரஞ்சனி மறுப்பாய் தலையசைத்துவிட்டு “ஒரு பையனும் பொண்ணும் சேர்ந்து இருந்தா உடனே லவ்வர்ஸ்னு சொல்லுவியா ராகி? காதலிக்கிறவங்கள ஈசியா கண்டுபிடிச்சிடலாம்… அவங்களோட சிரிப்பு, ஒவ்வொரு சின்னச் செய்கை, இவ்ளோ ஏன் பார்வைல கூட காதல் தனிச்சுத் தெரியும்… நீங்க சொல்லுற ஆளோட முகத்துல கொஞ்சம் கூட லவ் ஃபீல் இல்ல… சோ அவங்க லவ்வர்ஸ் கிடையாது” என்றாள் தீர்மானமாக.
மதுரவாணி அசுவாரசியமாய் இருவரையும் நோக்கிவிட்டு “அடியே! ஊரான் வீட்டுப் பஞ்சாயத்தைப் பேசாம ஐஸ் க்ரீம் உருகுறதுக்குள்ள சாப்பிடுங்கடி” என்று அதட்ட
“உனக்கு அந்தாளைப் பாத்து பயம்… அவன் பல்லைக் கடிச்சிட்டு முறைச்சதும் நீ ஜெர்க் ஆனதை நான் பாத்துட்டேன் மதுக்கா” என்றாள் ராகினி அவளைச் சீண்டும் குரலில்.
மதுரவாணி கடுப்புடன் அவளை முறைத்துவிட்டு “ஏய் எனக்கு எவனைப் பாத்தும் பயமில்ல… அதுலயும் அந்த வைக்கோல்போர் மண்டைய பாத்து சுத்தமா பயம் இல்லடி… நான் மதுரவாணி… எனக்குப் பயத்துக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது ராகி” என்று கர்வத்துடன் முடித்தாள்.
“அஹான்! நீ அவ்ளோ பெரிய தைரியசாலியா?” என்று மீண்டும் ராகினி சீண்ட ஸ்ரீரஞ்சனி இருவரது பேச்சும் போகும் பாதை சரியில்லை என அறிந்து பேச்சைத் திசைமாற்ற முயல அதற்கு எவ்வித பயனுமில்லாது போனது.
ராகினியின் சீண்டலில் சிலிர்த்த மதுராவணி ரோசமுற்றவளாய் “ஏய் இப்போ என்ன செஞ்சா அவனைப் பாத்து நான் பயப்படலனு நீ நம்புவ ராகி எருமை?” என்று கோபமாய் வினவ ராகினி சொன்னதைக் கேட்டு ஸ்ரீரஞ்சனி வாயைப் பிளக்க மதுரவாணிக்கே இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி மனதில் தோன்றியது. ஆனால் ராகினியின் சீண்டல் பார்வையைப் பொறுத்துக்கொள்ள இயலாதாவளாய்
“சரி! இப்போ என்ன? நான் அவன் கிட்ட போய் ‘ஹாய் டார்லிங்! எப்பிடி இருக்க? ஏன் என்னை மீட் பண்ண வரல’னு கேக்கணும்… அவ்ளோ தானே! கேக்குறேன்… அவன் தங்கச்சி முன்னாடி கேக்க தான் கொஞ்சம் சங்கடமா யோசிச்சேன்… ஆனா நான் கேட்டதுக்குப் பதில் சொல்ல முடியாம அவன் முழிக்கிறத மனசுக்குள்ள இமேஜின் பண்ணிப் பாத்தா கொஞ்சம் நல்லா தான் இருக்கு… எப்பிடியும் அவனோட சிஸ்டர் வீட்டுல போய் அவங்க பேரண்ட்ஸ் கிட்ட மாட்டிவிடுவா… என்னை முறைச்சான்ல! அவன் இன்னைக்கு அவங்க பேரண்ட்ஸ் கிட்ட திட்டு வாங்கட்டும்” என்று கண்கள் ஜொலிக்கச் சொல்லிக் கொண்டாள்.
கூடவே ஸ்ரீரஞ்சனி தடுக்கத் தடுக்கக் கேளாது மதுசூதனன் அமர்ந்திருந்த மேஜைக்கும் சென்றுவிட்டாள் அவள். ராகினி ஆர்வமாய் அடுத்து நடக்கவிருப்பதை வேடிக்கை பார்க்க ஆவலாய் இருக்க ஸ்ரீரஞ்சனி தங்கையின் தலையில் குட்டியவள்
“அவ தான் சேலஞ்ச் பண்ணுனா அதுல ஜெயிக்கணும்னு எதை பத்தியும் யோசிக்க மாட்டானு தெரியும்ல… எதுக்குடி அவளைச் சீண்டி விடுற? இது மட்டும் பிரச்சனையாகட்டும்! நீ செத்த ராகினி” என்று மிரட்ட
“அக்கா! லீவ் இட்! மதுக்காவ பத்தி உனக்குத் தெரியாது… அவ ரொம்ப தைரியமானவ.. கண்டிப்பா அவ இதுல ஜெயிச்சு அந்த வளந்த மனுசனை அவன் வீட்டுல திட்டு வாங்க வைப்பா… நீ வேணும்னா பாரு” என்று தலையைத் தேய்த்துவிட்டுச் சாதாரணமாய் சொல்ல ஸ்ரீரஞ்சனிக்குள் பயம் பரவத் தொடங்கியது.
அதே நேரம் மதுசூதனன் தனது மேஜைக்கு அருகில் வந்து நின்ற மதுரவாணியை ஏறிட்டவன் தனுஜாவுக்கு ஊட்டிக் கொண்டிருந்த கரண்டியை கீழே வைத்துவிட தனுஜா யார் இவள் என்று ஆராய்ச்சிப்பார்வையுடன் இருவரையும் மாறி மாறி அளவிட ஆரம்பித்தாள்.
மதுரவாணி திரும்பி ராகினியையும் ஸ்ரீரஞ்சனியையும் பார்த்துக் கண் சிமிட்டியவள், சட்டென்று மதுசூதனன் அருகிலுள்ள நாற்காலியில் அமர்ந்துவிட்டு அவனது கரத்தைத் தனது கரங்களால் வளைத்துக்கொண்டு “ஹாய் டார்லிங்” என்று குறும்பாய் கேட்டு அழகாய் புன்னகைக்க அவளது கரங்களோடு சேர்ந்து தோளும் அவன் புஜத்தில் உராய்ந்ததில் மதுசூதனனின் நினைவு இரயில்நிலைய தாவணிப்பெண்ணிடம் சென்று நின்றது.
இவளது ஸ்பரிசம் அவளை நினைவுறுத்துவது ஏன் என்று யோசித்தவனுக்கு அவளது நீண்டகூந்தல் நினைவு வர தனது கரத்தை வளைத்திருப்பவளின் கழுத்தளவு கூந்தல் இவளும் அவளும் ஒன்றல்ல என்பதைப் புரியவைத்தது.
அவன் நினைத்திருந்தால் அவளிடமிருந்து கையை உருவியிருக்கலாம். ஏனோ அவ்வாறு செய்யத் தோணவில்லை. மதுரவாணிக்கும் அவனது அமைதி மனதை உறுத்தியது. உடனே அவனது கரத்தில் கைக்கடிகாரம் கட்டி சூரியவெளிச்சம் படாததால் வெண்மையாக இருந்த தடத்தைக் காட்டி “உன் வாட்ச் எங்க? நீ அதைக் கழட்டவே மாட்டியே” என்று குருட்டாம்போக்கில் அடித்துவிட தனுஜாவுக்கு அவளது செய்கை ஒவ்வொன்றும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியைக் கொடுத்தது.
தன்னை நெருங்க விடவே மறுப்பவன் அவளுடன் தோள் உரச அமர்ந்திருந்த காட்சியும் மதுரவாணி முல்லைப்பூவாய் சிரித்துக் கொண்டிருக்க மதுசூதனன் ஏதோ கனவுலகில் நடமாடுபவனைப் போல இருந்த காட்சியும் அவளைக் கொதிக்கச் செய்ய தனுஜாவின் முகம் கோபத்தில் செந்தணலாய் ஜொலித்தது.
லேப்டாப்பை டொப்பென்று அவள் வைத்த போது மதுரவாணி மனதுக்குள்ளே “ஐ! இவன் தங்கச்சிக்குக் கோவம் வந்துடுச்சு… இன்னைக்கு இவன் வீட்டுல மாட்டுனான்… உன்னால முடியாததுனு எதுவுமே கிடையாதுடி மது” என்று தன்னைப் பாராட்டிக் கொண்டே அவனது கரத்தை விடுவித்துவிட்டு
“எனக்கு டைம் ஆகுது. நம்ம இன்னொரு நாள் ஃப்ரீயா பேசலாம் டார்லிங்… பை” என்று சொல்லவும் அவளது கரத்தின் ஸ்பரிசத்திலிருந்து விடுபட்டவன் இவ்வளவு நேரம் அவள் பேசிய பேச்சின் அர்த்தத்தை அப்போது தான் புரிந்து கொண்டான். கூடவே அவளது பேச்சில் செந்தணலாய் ஜொலித்த தனுஜாவின் முகத்தையும் அப்போது தான் பார்த்தான்.
மதுரவாணி இருவருக்கும் ஒரு நமட்டுச்சிரிப்பை வீசிவிட்டு இடத்தைக் காலி செய்ய, மதுசூதனன் அவள் சொன்ன பொய்யால் தனுஜா கோபமுறுவதைக் கண்டவன் மதுரவாணியைத் திட்ட எத்தனிக்க தனுஜா அவனைத் தடுத்தாள்.
“எங்க போற மது? அவ சொன்ன மாதிரி நீங்க மீட் பண்ணி ரொம்ப நாள் ஆனதால தனியா போய் பாத்துப் பேச போறியா?” என்று கேட்டு அவனை அதிரவைத்தாள்.
அவன் தன்னிலை விளக்கம் அளிக்கும் முன்னரே அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பிச் சென்றுவிட்டாள் அவள். இது வரை தனுஜாவின் சந்தேகங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாய் தோன்றியதால் அவனால் அவளிடம் தைரியமாய் வாதாட முடிந்தது. ஆனால் இன்று ஒரு குட்டிப்பிசாசு போட்ட நாடகத்தால் தான் என்ன சொன்னாலும் தனுஜா தன்னை நம்ப போவதில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டான் அவன்.
இதற்கெல்லாம் காரணமானவளை ஆத்திரத்துடன் தேடியவனுக்கு அவள் தென்படவில்லை. அவள் மீது கோபம் கொண்டு என்ன பிரயோஜனம்? அவள் தனது கரத்தைப் பற்றிய போது ஏதேதோ நினைவுகளில் மிதந்தது தனது தவறு தானே என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டவன் தனுஜாவைச் சமாதானம் செய்யும் வழியறியாது திகைத்தான்.
அதே நேரம் திருநெல்வேலியில் ஸ்ரீதர் தனக்கு பணியிடமாற்றம் என்ற தகவலை ஆணையரிடமிருந்து பெற்றுவிட்டுப் பெருமூச்சுடன் நின்று கொண்டிருந்தான். இன்னும் மூன்று வாரங்களில் அவன் கோயம்புத்தூர் நகர இணை ஆணையராகப் பொறுப்பேற்பதற்கான அரசாணை வந்துவிடுமென ஆணையர் கூறிய தகவலைக் கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
விதி ஸ்ரீதரை மதுரவாணியும் மதுசூதனனும் இருக்குமிடத்துக்கு அனுப்பத் தயாராகிவிட்டது. அவர்களையும் தாண்டி அவனது வாழ்வில் தென்றல் வீச செய்யப்போகிறவளும் அங்கே தானே இருக்கிறாள்! அதற்காக அவன் அங்கே சென்று தானே ஆகவேண்டும்!
அலை வீசும்🌊🌊🌊