🌊 அலை 10 🌊
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
இருளின் அழகென்பது வெண்மதியும்
விண்மீனும் மட்டுமல்ல
மின்மினிப்பூச்சிகளும் அதில் அடக்கம்..
மயூரா டவர்ஸ்…
கோயம்புத்தூரின் ஆர்.எஸ் புரம் பகுதியில் உள்ள ஒரு நான்கு மாடி கட்டிடம். வங்கிகள், அலுவலகங்களின் கிளைகளைக் கொண்ட ஆபிஸ் கட்டிடம். அதன் தரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு மதுரவாணியுடன் இறங்கினான் மதுசூதனன்.
சற்று முன்னர் பெய்த சாரல் மழையால் கட்டிடத்தின் நீலநிற ஆர்கிடெக்சுரல் கண்ணாடியில் துளிதுளியாய் மழைத்துளி உருண்டோடி கீழே சொட்டிக் கொண்டிருக்க அந்தக் கட்டிடத்தின் முன்னே அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த ஈச்சமரத்தின் கிளைகளில் நீர்த்துளிகள் மின்னிக் கொண்டிருந்தன.
மதுரவாணி இதை ரசித்தபடி நடக்க திடீரென “டேய் மச்சான் இது தான் அந்தப் பொண்ணா?” என்றபடி அவர்களை நோக்கி வந்தான் திலீப். மதுரவாணிக்கு அவனை யாரென்று தெரியாது விழிக்க மதுசூதனன் இவள் தான் என்று சொல்லவும்
“உள்ளே தனு செம டென்சன்ல உக்காந்துட்டிருக்கா மச்சி! எப்பிடி அவளைச் சமாளிக்க போற?” என்று கேட்க அவன் தோளை அசட்டையாகக் குலுக்கிக் கொண்டான்.
“கௌதம் என் காரை கொண்டு போனானே! வந்துட்டானா?”
“மேல தான் இருக்கான் மச்சி! நீ போய் பாருடா… எதுக்கும் கொஞ்சம் கோவப்படாம பொறுமையா பேசுடா” என்று நண்பனுக்கு அறிவுரை சொன்ன திலீபுக்கு அவன் இன்னும் சிறிது நேரத்தில் தனுஜா என்பவளையே தனது வாழ்க்கையிலிருந்து அகற்றவிருக்கிறான் என்பது தெரியாதல்லவா!
மதுசூதனன் அதற்கு பதிலளிக்காது நண்பனிடம் புதிராய் புன்னகைத்தவன் மதுரவாணியை அழைத்துக் கொண்டு மின் தூக்கியில் இரண்டாவது தளத்தை அடைந்தான்.
மதுரவாணி அலைபாயும் மனதுடன் அவனோடு வந்தவள் அவனது வேகமான எட்டுகளுக்கு ஈடு கொடுத்துக் கிட்டத்தட்ட அவன் பின்னே ஓடினாள்.
‘ஹில்டாப் வெட்டிங் அண்ட் ஈவெண்ட் பிளானிங்’ என்ற பெயர்ப்பலகையுடன் நவீன பாணி அலுவலகத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனின் பின்னோடு சென்றவள் மனதிற்குள் “எந்தக் கோட்டையப் பிடிக்க ஐயா இவ்ளோ வேகமா போறாரு? காதலி மேல அவ்ளோ பாசம் போல” என்று நொடித்துக் கொண்டபடி தொடர்ந்தாள்.
அவனது அலுவலக அறைக்குள் அவனோடு நுழைந்தவள் அங்கே இருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த தனுஜாவைக் கண்டதும் விறைப்புற்று நிமிர்ந்தாள்.
அவளோ மதுசூதனனின் அருகில் நின்றவளைக் கண்ணாலேயே எரிக்க ஆரம்பித்தாள். தனது காதலன் இன்னொரு பெண்ணின் அருகில் நிற்பது கூட அவளுக்கு எரிச்சல் தான்.
மதுசூதனன் அவள் முகத்திலிருந்த உணர்வுகளைப் படித்தவன் மதுரவாணியை நோக்க அவள் அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தவளாய் தொண்டையைச் செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“அன்னைக்கு ஹோட்டல்ல நடந்ததை வச்சு நீங்க சாரை தப்பா நினைச்சுக்காதிங்க… ஆக்சுவலி நானும் என்னோட ஃப்ரெண்ட்சும் விளையாட்டுத்தனமா பண்ணுனது இவ்ளோ பெரிய பிரச்சனை ஆகும்னு நாங்க நினைக்கல… எனக்கும் மிஸ்டர் மதுசூதனனுக்கும் இதுவரைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… இனியும் இருக்காது… நான் இவரை ஃபர்ஸ்ட் டைம் அந்த ரெஸ்ட்ராண்ட்ல தான் பாத்தேன்… சோ தப்பா எதையும் யோசிச்சு நீங்க இவர் கிட்ட கோவப்பட வேண்டிய அவசியம் இல்ல” என்று அழுத்தம் திருத்தமாய் முடித்தவளை மதுசூதனன் தனுஜாவோடு சேர்ந்து அங்கிருந்த கௌதமும் பார்த்துக் கொண்டிருந்தான்.
தனுஜா கேலியாக உதட்டை வளைத்தவள் “எதை நீ விளையாட்டுனு சொல்லுற? இன்னொரு பொண்ணு காதலிக்கிறவன் கிட்ட வந்து கொஞ்சி பேசுனியே அதையா? நான் தெரியாம தான் கேக்குறேன், அடுத்தவங்களோட பொருள் மேல ஆசைப்படக் கூடாதுனு உனக்கு உன்னோட அப்பா அம்மா சொல்லித் தரலயா?” என்று எகத்தாளமும் கோபமும் கலந்து கேட்க மதுரவாணிக்கு பெற்றோரின் பேச்சை அவள் எடுத்தக் கோபம் உள்ளுக்குள் உதயமாக மரியாதைப்பன்மையை தூர வீசியவள் அவளுக்குச் சற்றும் குறையாத கேலிக்குரலில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தாள்.
“தப்பு உன் மேல தான்… நீ என்ன பண்ணிருக்கணும் தெரியுமா? இவனோட நெத்தியில உன் பேரைப் போட்டு இந்தாளு என்னோட லவ்வர்னு டாட்டூ போட்டுருக்கணும்… அப்பிடி போட்டிருந்தா நானும் இந்தப் பையன் ஸ்மார்ட்டா இருக்கானேனு சைட் அடிக்காம பாத்தும் பாக்காத மாதிரி போயிருப்பேன்… நீ அப்பிடி பண்ணலையே… சோ அது உன் தப்பு தான்”
அவள் சொன்னதைக் கேட்டு பீறிட்ட சிரிப்பை அடக்கிய கௌதமுக்கு மதுரவாணியின் பதிலில் மனபாரம் அனைத்தும் இறங்கிய உணர்வு. மதுசூதனனோ நடப்பதை சினிமா போல வேடிக்கை பார்த்தானே ஒழிய இரு பெண்களின் வார்த்தைப்போரைத் தடுக்க முன்வரவில்லை.
தனுஜா மதுராவின் பதிலில் எரிச்சலுற்றவள் “நான் லவ் பண்ணுறவனை சைட் அடிச்சேனு சொல்லுறியே! இப்பிடி சொல்ல உனக்கு வெக்கமா இல்ல?” என்று பொங்கிவிட
“இதுல என்ன வெக்கம்? ஒரு பையன் பாக்க ஸ்மார்ட்டா ஹாண்ட்சம்மா இருந்தா பொண்ணுங்க பாக்கத் தான் செய்வாங்க… இப்போ நீ சினிமா பாக்க போனேனா அந்த மூவி ஹீரோ ஸ்மார்ட்டா இருந்தா ரசிப்ப தானே! அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, பிள்ளைக்குட்டி இருக்குனு சொல்லி அவர் வர்ற ரொமான்ஸ் சீனைப் பாக்காம ஓடி வந்துடுவியா? மாட்ட தானே! அது மாதிரி தான் இதுவும்” என்ற மதுரவாணிக்கு இவளிடம் இப்படி பேசவேண்டும் என்ற எண்ணமே இல்லை.
தனது பெற்றோரை இழுத்ததும் வந்த கடுப்பில் வேண்டுமென்றே அவளுக்குப் பதிலடி கொடுக்கத் தான் இப்படி ஏட்டிக்குப் போட்டியாகப் பேச ஆரம்பித்தாள்.
தனுஜாவோ செய்வதையும் செய்துவிட்டுத் தன்னிடம் பணிந்து பேசாது திமிராய் நிற்பவளை பார்வையில் எரித்தவள்
“மது நீ இவளை என் கிட்ட மன்னிப்பு கேக்க சொல்ல மாட்டியா? இவளால தான் நான் உன் மேல கோவப்பட்டேன்… உன்னை அவாய்ட் பண்ணுனேன்… இவளால தான் நம்ம இன்னைக்கு எதிரும் புதிருமா நிக்குறோம்… ஆனா இவ எவ்ளோ திமிரா ஆட்டிட்டியூடா என் கிட்ட பேசுறா… இவளை இப்போவே என் கிட்ட மன்னிப்பு கேக்க சொல்லு… ரைட் நவ்” என்று ஆங்காரமாய் உரைக்க மதுசூதனன் மதுரவாணியின் பக்கம் திரும்ப அவளோ மன்னிப்பெல்லாம் என்னிடம் எதிர்பார்க்காதே மகனே என்ற ரீதியில் பார்த்துவைத்தாள்.
கூடவே தனுஜாவிடம் “வெயிட் அ மினிட்! ஹூ ஆர் யூ? நான் ஏன் உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும்? இன் ஃபேக்ட் நான் இங்க வந்தது மன்னிப்பு கேக்குறதுக்கு இல்ல… இதோ இவன் மேல எந்தத் தப்பும் இல்லனு உன் கிட்டச் சொல்லிட்டுப் போகத் தான் வந்தேன்… நீ இவ்ளோ நாள் இவன் கூட சண்டை போட்டதுக்கு நான் காரணம் இல்ல மை டியர்… அதுக்குக் காரணம் உன்னோட நம்பிக்கையின்மை தான்… காதலிச்சவனை நம்பாத உன்னோட இன்செக்யூரிட்டி தான் நீ கஷ்டப்பட்டதுக்குக் காரணம்… உனக்கு இவன் மேல நம்பிக்கை இருந்திருந்துச்சுனா நான் இல்ல உலக அழகியே வந்தாலும் நீ கண்டுக்காம போயிருப்ப… சோ இப்போவும் தப்பு உன் மேல தான்… அதனால மன்னிப்பெல்லாம் கேக்க முடியாது” என்று சொல்லிவிட்டு என் கடமை முடிந்தது என கிளம்பத் தயாரானாள்.
ஆனால் தனுஜாவோ தன் மனதில் உள்ளதைக் கண்டுபிடித்துவிட்டாளே என்ற கோபத்துடன்
“என்னை இன்சல்ட் பண்ணுறதுக்குத் தான் இவளைக் கூட்டிட்டு வந்தியா மது? என்னோட பேரண்ட்சும் சரி, ஃப்ரெண்ட்சும் சரி என்னை ஒரு மகாராணி மாதிரி தான் நடத்துவாங்க… ஆனா இவ என்னை இவ்ளோ இன்சல்ட் பண்ணிப் பேசுறா… நீ எதுவுமே சொல்லாம வேடிக்கை பாக்குற?” என்று அவனிடம் தனது எரிச்சலைக் காட்டவும் அவன் புருவம் உயர்த்தி அவளை நோக்கினான்.
“அவ உண்மைய தானே சொன்னா… அப்புறம் எதுக்கு நான் அவளைத் தடுக்கணும்?”
அவனது ஒற்றைக்கேள்வியில் திகைத்த தனுஜா மேற்கொண்டு பேச வர நிறுத்துமாறு கையுயர்த்தித் தடுத்தவன்
“உன்னை மாதிரி மகாராணிக்கு ஏத்த மகாராஜா அந்த அஜய் தான் தனு… நான் சாதாரண மனுசன்… எனக்கு என்னை மாதிரி ஒரு சாதாரணப் பொண்ணு லைப் பார்ட்னரா வந்தா போதும்… இட்ஸ் ஓவர்… இனிமே நீ எனக்கு ஃப்ரெண்ட் இல்ல… உனக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல… யூ மே கோ நவ்” என்று ஒரே மூச்சாய் சொல்லி முடித்தான்.
அவன் சொன்னதைக் கேட்ட இரு பெண்களுக்கும் அதிர்ச்சி. மதுரவாணிக்கு இவனது காதலில் தன்னால் எந்தப் பிரச்சனையும் வரக் கூடாது என தான் இங்கே வந்தால் இவனோ இவ்வளவு சுலபமாக காதலை முறித்துக் கொண்டானே என்ற அதிர்ச்சி.
தனுஜாவுக்கோ இவ்வளவு நாள் தன்னைக் காதலிக்கவில்லை என்றாலும் தானே அவனது வாழ்க்கைத்துணை என்று தீர்மானமாய் இருந்தவன் இன்று தான் அவனுக்குத் தோழி கூட இல்லை என்று சொல்லித் தன்னை முற்றிலுமாய் அவனது வாழ்க்கையை விட்டுத் துரத்திவிட்டானே என்ற அதிர்ச்சி.
இது எல்லாவற்றிற்கும் மேலாய் கௌதமுக்கு நண்பனின் வாழ்க்கை தனுஜாவிடம் இருந்து தப்பித்தது என்பதில் பரம ஆனந்தம். அது அவனது முகத்தில் பொங்கி வழிய நண்பனைக் கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தமிட வேண்டும் என்று தோன்றியது அவனுக்கு.
தனுஜா அந்த அறையிலிருந்த மூவரையும் பார்த்தவள் மதுசூதனனிடம் “இவ்ளோ ஈசியா என் லவ்வை வேண்டாம்னு சொல்லிட்டல்ல! என் காதலோட ஆழம் உனக்குப் புரியவே இல்ல மது… என்னை மாதிரி உன்னை யாராலயும் காதலிக்கவே முடியாது… என் காதலை இழந்ததுக்கு நீ ஒரு நாள் வருத்தப்படுவ மது! இது நடக்கும்” என்று சாபமிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
அவள் சென்ற பின்னரும் மதுசூதனன் கலக்கமற்று சாதாரணமாய் நின்றிருந்த தோரணை மதுரவாணிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது.
“இவ்ளோ ஈசியா பிரேக்கப் பண்ணிட்டியே? உனக்கு மனசுக்குக் கஷ்டமா இல்லயா? என்னால தானே உனக்குப் பிரேக்கப் ஆச்சு?” என்று கவலையாய் கேட்க
“ஆமா! உன்னால தான் எனக்குப் பிரேக்கப் ஆச்சு… அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்?” என்று பதிலுக்குக் கேட்டான் அவன்.
மதுரவாணி தெரியவில்லை என்பதைப் போல தோளைக் குலுக்க கௌதம் வேகமாய் அவளிடம் வந்தவன்
“அம்மா தாயே! நீ யாரோ எவரோ! எனக்குத் தெரியாது… ஆனா நீ என் நண்பனை எவ்ளோ பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்திருக்க தெரியுமா? உன்னை என் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன் தாயே!” என்று உணர்ச்சிப்பூர்வமாய் பேச அவன் பேசிய விதத்தில் அவளுக்கு இவ்வளவு நேரம் இருந்த கவலை மறைந்து அவளது முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
மதுசூதனன் நண்பனின் கேலியில் சிரித்தவன் மதுரவாணியிடம் “நீ வந்த வேலை முடிஞ்சிருச்சு… நம்ம கிளம்பலாமா?” என்று கேட்க அவனிடம் சரியென தலையாட்டியவள் அவனுடன் கிளம்ப எத்தனிக்கையில் கௌதம் “மது” என்று அழைக்கவும் இருவரும் ஒரே குரலில் “என்ன?” என்று கேட்டுவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள கௌதம் புரியாத பார்வை பார்த்து வைத்தான்.
மதுசூதனன் பெருவிரலால் மதுரவாணியைச் சுட்டிக்காட்டி “இவ நேமும் மது தான்… மதுரவாணி” என்று உச்சரித்தவன் ‘வாணி’யை அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு நிற்க
“அப்பிடியா? அதான் ரெண்டு பேரும் ஒரே டைம்ல திரும்புனிங்களா? இட்ஸ் ஓகேம்மா! மச்சி! உன் கார் இன்னும் ஃபுல்லா சரியாகலடா… நீ ஸ்கோடாவ கொண்டு போ” என்று சொல்ல அவர்கள் இருவரும் ஸ்கோடாவில் உதகமண்டலத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தனர்.
சிலமணிநேரங்களுக்குப் பின்னர் இருவரும் உதகமண்டலத்தை அடைந்தனர். எங்கே இருந்து அவளை அழைத்துச் சென்றானோ அங்கேயே இறக்கியும் விட்டான்.
மதுரவாணி காரிலிருந்து இறங்கியவள் பொக்கே ஷாப்புக்குள் செல்வதற்கு முன்னர் மதுசூதனனை நோக்கியவள்
“நான் அவ கிட்ட தான் சாரி கேக்க மாட்டேனு சொன்னேன்… ஆனா உன் கிட்ட நான் கண்டிப்பா மன்னிப்பு கேக்கணும்… இது உன்னோட லவ் பிரேக்கப்ல முடிஞ்சதுக்கு இல்ல… ஒரு மனுசனோட கேரக்டரை சந்தேகப்படுறதுக்கு நான் காரணமாயிட்டேன்… அதுக்குத் தான்… ஐ அம் ரியலி சாரி” என்று கேட்டவள் அவனைத் திரும்பியும் பாராது விறுவிறுவென நடந்து சென்றுவிட்டாள்.
அவள் மன்னிப்பு கேட்ட அழகே இதற்கு முன்னர் அவள் யாரிடமும் இப்படி மன்னிப்பு கேட்டதில்லை என்பதை பட்டவர்த்தனமாய் காட்டியது.
மதுசூதனன் தனது அலுவலகத்தில் இவ்வளவு நேரம் தனுஜாவை வறுத்தெடுத்தவள் இப்போது தன்னிடம் பணிவாக மன்னிப்பு கேட்டதைப் பார்த்துவிட்டுக் குழப்பத்துடன் அங்கிருந்து காரை எடுத்தவன் கோவையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.
அதே நேரம் தனுஜா அவளது வீட்டை இரண்டாக்கிக் கொண்டிருந்தாள். செல்வநாயகி மகள் பொருட்களைத் தூக்கி வீசுவதையும் கத்துவதையும் பார்த்துவிட்டு அவளைச் சமாதானம் செய்ய இயலாது கணவருக்கு அழைத்தார்.
சங்கரநாராயணன் வீட்டுக்கு வந்த போது வீடே போர்க்களம் போலக் காட்சியளித்தது. மகளைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தவர் அவள் சொன்ன விசயத்தைக் கேட்டதும் உள்ளுக்குள் மகிழ்ந்தார்.
ஒருவழியாக மதுசூதனனின் இடையூறின்றி இனி தனது செல்வாக்குக்கு ஏற்றவிதத்தில் நண்பரின் மகனுடன் தனுஜாவின் திருமணம் நடப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற நிம்மதி உள்ளுக்குள் இதமாய் பரவ வெளிப்பார்வைக்கு வருத்தப்படுபவரைப் போல நடித்து மகளின் மனதைக் கரைக்க ஆரம்பித்தார்.
“அவன் உனக்குத் தகுதியானவன் இல்லனு நான் எத்தனை தடவை சொன்னேன்? நீ கேட்டியா? இனியாச்சும் நீ உன்னோட ஸ்டேட்டஸ் என்னங்கிறத புரிஞ்சுக்கோடா… நம்ம கிளாசுக்குக் குறைஞ்ச இடத்துல ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்கவே யோசிக்கிறவன் நான்.. ஆனா என் பொண்ணு நீ இதைப் பத்தி கொஞ்சம் கூட கவலை இல்லாம ஒன்னும் இல்லாத ஜீரோவை லவ் பண்ணுன… ப்ச்.. விடும்மா.. போனதும் போகட்டும்… உன்னைத் தங்கத்தட்டுல வச்சு தாங்க அஜய் ரெடியா இருக்கிறப்போ அந்த வெறும் பையனை நினைச்சு ஏன்டா அழுற? உன்னோட கண்ணீருக்குக் கூட தகுதியில்லாதவன் அவன்”
அவர் அவ்வாறு சொன்னதோடு மகளின் ஆணவத்தையும் ஏற்றிவிட என்னென்ன சொல்ல வேண்டுமோ அனைத்தையும் அவள் மனதில் உருவேற்றினார். அதன் விளைவு கண்ணீரைத் துடைத்துக் கொண்ட தனுஜா இனி தன்னை வேண்டாமென ஒதுக்கியவனை எண்ணி அழுவது தனக்கு கவுரக்குறைச்சல் என்று யோசித்தவள்
“நீ என்னை வேண்டாம்னு சொல்லுற அளவுக்கு நான் ஒன்னும் குறைஞ்சு போயிடல மது… எப்போவுமே நான் மகாராணி தான்” என்று சொல்லிக் கொண்டாள் அவளுக்கே உரித்தான கர்வத்துடன்.
சொன்னது போலவே பின் வந்த நாட்களில் தனுஜாவை அடிக்கடி சந்திக்க வந்த அஜய் அவளைத் தாங்கிய விதத்தில் அவளது இயல்பான ஆணவம் இன்னும் அதிகரித்தது. கூடவே மதுசூதனன் தன்னை இவ்வாறெல்லாம் தாங்கியதே இல்லை என்ற எண்ணமும் உண்டானது.
அவ்வாறிருக்க தன்னைக் காரணமின்றி கட்டுப்படுத்தும் ஒருத்தி இல்லாது மதுசூதனனின் வாழ்வு நிம்மதியாய் கழிந்தது. அதே நேரம் அவள் மூலம் கிடைத்த திருமண கான்ட்ராக்டை மறுத்துவிடுவோமா என்று யோசித்தவன் ஸ்ரீவத்சனது வேண்டுகோளால் அதை ஏற்றுக்கொண்டான். அவன் செய்திருந்த ஏற்பாடுகள் அவரது மகளுக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவனே திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டுமென அன்புக்கட்டளையாய்ச் சொல்லிவிட்டார் அவர்.
இவர்களின் பிரிவுக்குக் காரணமான மதுரவாணி தினந்தோறும் பொக்கேஷாப்புக்குச் செல்வதும் குட்டீசுடன் கலாட்டா செய்வதும், தோழிகளுடன் வம்பளப்பதுமாக தனது சுதந்திர வாழ்க்கையை ஜோராக வாழ ஆரம்பித்துவிட்டாள்.
ஆனால் மதுசூதனன் மற்றும் மதுரவாணியின் வாழ்வை வேறு திசையில் பயணிக்கச் செய்யப் போகும் ஒருவன் அங்கே வரப் போகிறான் என்பதும், வருபவனின் வாழ்வை மாற்றப் போகும் பெண்ணும் தங்களுடன் தான் இருக்கிறாள் என்பதும் அவர்களுக்கு அப்போது தெரியவில்லை.
ஆம்! ஸ்ரீதருக்கு இடமாறுதல் கிடைத்து அவன் கோயம்புத்தூர் கிளம்பத் தயாராகிவிட்டான். அது சம்பந்தமான அரசாணையும் அவன் கைக்குக் கிடைத்துவிட திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் தனக்குத் தெரிந்தவர்களிடம் விடைபெற்றுக்கொள்ளச் சென்றான். அதில் முக்கியமானவர் மதுரவாணியின் தந்தை ரத்தினவேல் பாண்டியன் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அலை வீசும்🌊🌊🌊