வெளிச்சப்பூ 2
Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
“நேத்ரா, இதை அவ கழுத்துல கட்டு!” என்று ஈஸ்வரி ஆணையிட, நேத்ரனோ தலையில் இடி இறங்கியது போல, “என்ன?” என்று கத்தினான்.
அந்த கோவிலில் கூட்டம் இல்லை என்றாலும், சன்னதியில் இருந்த நாலைந்து நபர்கள் இவர்களை நோக்கி திரும்பியது மட்டுமல்லாது, ஏதோ கொலை குற்றம் செய்ததை போல பார்த்தனர்.
உடனே, அவனை அங்கிருந்து வெளியே இழுத்துச் சென்றார் ஈஸ்வரி.
அங்கு இத்தனை சம்பவங்கள் நடக்கும்போது, வாசவியோ அதை சற்றும் கண்டுகொள்ளாமல் ஒரு இடத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் வெறுப்பா, கோபமா, வேதனையா என்று பிரித்தறிய இயலாதவாறு உணர்வுகள் குவிந்து கிடந்தன.
இதில் கையறு நிலையில் இருந்தது பூரணி தான். நேத்ரனை திருமணம் செய்து கொள்ளுமாறு ஈஸ்வரி ஆணையிட்டதை அவளும் கேட்டுக் கொண்டு தானே இருந்தாள். அதை வாசவி கவனிக்காததையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
‘இந்த விஷயத்தை மேம் கிட்ட சொல்லலைன்னா, அதுக்கும் கோபப்படுவாங்களே!’ என்று எண்ணியவள், அதை வாசவியிடம் சொல்ல எண்ணி, அவளை அழைக்க, அந்த அழைப்பில் தான் சுயத்திற்கு வந்தாள் வாசவி.
இரண்டொரு நொடிகளில் தன்னை சமன்படுத்திக் கொண்டவள், “எஸ் பூரணி…” என்றாள்.
அவளைப் பார்த்ததும் எப்படி சொல்வதென்று பூரணி தயங்க, வாசவியே, “பாட்டி எங்க பூரணி?” என்று வினவியிருந்தாள்.
‘ஹையோ, இப்போ நான் என்னன்னு சொல்லுவேன்!’ என்று கைகளை பிசைந்தபடி நின்றவளை காப்பாற்ற வந்தவரைப் போல அங்கு பிரசன்னமானார் ஈஸ்வரி.
“என்ன பூரணி மசமசன்னு நின்னுட்டு இருக்க? ஐயர் கிட்ட போய் கல்யாணத்துக்கு ரெடி பண்ண சொல்லு.” என்று பரபரப்பாக பேசியவரை புருவம் சுருங்க பார்த்தாள் வாசவி.
பின்பு நிதானமாக வாசவியிடம் திரும்பிய ஈஸ்வரி, “கல்யாணப் பொண்ணு போலவா இருக்க?” என்று லேசாக வியர்த்திருந்த அவளின் வதனத்தை தன்னைப்போல சரி செய்ய ஆரம்பித்தார்.
வாசவிக்கு வார்த்தைகள் வெளிவர துடித்துக் கொண்டிருந்தாலும் பாட்டிக்கு செய்த சத்தியம் அவளின் வாயை கட்டிப்போட்டது. மேலும், பாட்டிக்காக நடக்கும் திருமணம் தானே என்பது அவளின் எண்ணமாகவும் இருக்கலாம்.
ஆனால், அவளின் மனதை குடையும் கேள்வி என்னவோ, பாட்டி பார்த்திருக்கும் இந்த ‘திடீர்’ மாப்பிள்ளை, தன் சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்ய சம்மதித்தானா என்பது தான்.
அப்படியே என்றாலும் பெரிய விஷயம் இல்லை. அவள் தான் விவாகரத்து வரை திட்டம் தீட்டி வைத்து விட்டாளே!
ஆனால், அவளின் பயத்திற்கு அவசியம் இல்லை என்பது போல எதிரில் தலையை தொங்கப்போட்டு வந்து கொண்டிருந்த நேத்ரன் கண்ணில் பட்டான்.
அவனின் நிலையை வைத்தே, யார் அந்த திடீர் மாப்பிள்ளை என்பதை புரிந்து கொண்டவள், சட்டென்று ஈஸ்வரியை பார்க்க, அவரோ எப்போதும் இல்லாத உற்சாகத்தில் வளைய வந்து கொண்டிருந்தார்.
அவரைக் கண்டு ஒரு பெருமூச்சை விட்டவள், நின்ற இடத்திலேயே அமைதியாக நின்று கொண்டாள். எதையும் மறுத்து எதுவும் சொல்லவில்லை. இவ்வளவு ஏன், நேத்ரனின் சோகமும் பயமும் அப்பிய முகத்தை பார்த்தபோது, அவளிற்கு அதிசயமாக சிரிப்பு கூட வந்தது.
இதோ, கடவுளின் சன்னதியில் நேத்ரன் – வாசவி இருவருக்கும் அவரவர் விருப்பமின்றி, ஈஸ்வரின் விருப்பத்தின் பெயரில் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தது.
நேத்ரனிற்கோ, வாசவியின் கழுத்தில் ஒவ்வொரு முடிச்சு போடும்போதும், வாசவி, அவனின் தந்தை மற்றும் கல்லூரியில் ஒருதலையாக காதலித்த பெண் (அவளிற்கு திருமணம் கூட நடந்திருக்கலாம்!) ஆகியோரின் கோப முகம் தான் முறையே நினைவிற்கு வந்து போனது.
அவன் நினைவை கலைக்கும் வகையில், “பெரியவா காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கோ!” என்று ஐயர் கூற, “இப்போ ஆசிர்வாதம் ஒன்னு தான் கேடு!” என்று இடம் மறந்து, புதிதாக வகித்திருக்கும் ‘பதவி’ மறந்து அவன் முணுமுணுக்க, பட்டென்று வாசவி திரும்பிப் பார்த்தாள்.
அவள் எதேச்சையாக திரும்பி பார்த்தாளோ என்னவோ, நேத்ரனிற்கு தான் வியர்க்க ஆரம்பித்து விட்டது. அவளிடமிருந்து தப்பிப்பது போல, ஈஸ்வரியின் காலில் சாஷ்டாங்கமாக விழ, “அட நேத்ரா, என்ன இப்படி பொசுக்குன்னு விழுந்துட்ட? உன் பொண்டாட்டி கூட சேர்ந்து தான் விழனும்.” என்று நக்கலாக கூறினார் ஈஸ்வரி.
அவர் தான் நேத்ரனின் முணுமுணுப்பையும் அதன் எதிர்வினையாக பேத்தியின் முறைப்பையும் பார்த்து விட்டாரே.
முகத்தை மட்டும் உயர்த்தி ஈஸ்வரியை முறைத்த நேத்ரனோ, தன்னருகே வாசவியும் விழுவதை பார்த்து மீண்டும் தலையை குனிந்து கொண்டான்.
அவனின் தலை குனிவு அவளின் மீதான பயத்தினால் அல்ல. உண்மையில், அவனால் வாசவியை எதிர்கொள்ள இயலவில்லை. அதுவும் அவளை மனைவியின் ஸ்தானத்தில் வைத்து பார்க்கவே முடியவில்லை. ஏனோ, அவளை ஏமாற்றிவிட்ட குற்றவுணர்வு அவன் மனதை நிறைத்திருந்தது.
வாசவிக்கோ அவனின் அந்த தோற்றம் சிறிது எரிச்சலை விளைவித்திருந்தது உண்மையே.
‘என்னை கல்யாணம் பண்ணிக்குறது அத்தனை கஷ்டமா!’ என்ற நினைவு தோன்றாமல் இல்லை.
ஆனால், அவள் தான் வாசவியாகிற்றே! அதை ஒதுக்கி தள்ளிவிட்டு, விடுவிடுவென்று வெளியேறி விட்டாள்.
அவள் சென்றதும் ஒரு பெருமூச்சை விட்டவன், அப்போதே நல்ல கணவனாக மனைவியை பின்பற்றி தானும் வெளியே சென்றான்.
இதையெல்லாம் அர்த்தப்புன்னகையுடன் பார்த்த ஈஸ்வரியோ, தன் நீண்ட நாள் வேண்டுதலை நிறைவேற்றிய கடவுளை மீண்டும் துதித்துவிட்டு அவர்களுடன் ஐக்கியமாகி விட்டார்.
அங்கு நடப்பது எதுவும் புரியாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் நின்ற ஒரே ஆள் பூரணி தான். அவளின் அலைபேசி ஒலிக்க, அதில் தெரிந்த பெயரைப் பார்த்து அவசரமாக அழைப்பை ஏற்றாள் பூரணி.
“பூரணி, நீங்க நேரா ஆஃபிஸ் போய் இன்னைக்கு வந்த மெயில்ஸ், போன் கால்ஸ் எல்லாம் சம்மரைஸ் பண்ணி வைங்க. ஐ… வி வில் ஜாயின் யூ இன் அன் ஹார்.” என்றதுடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.
‘இன் அன் ஹாரா? என்னடா இது!’ என்று பேந்த பேந்த நின்று கொண்டிருந்தாள் பூரணி.
*****
அந்த கருநிற ஜாகுவார் அலுங்காமல் குலுங்காமல் அந்த பிரம்மாண்ட பங்களாவிற்கு முன்னே நின்றது.
அதிலிருந்து தனக்கே உரிய மிடுக்குடன் இறங்கினாள் வாசவி. அதன் முன்பக்க கதவின் வழியாக ‘யாருக்கு வந்த விருந்தோ’ என்று இறங்கினான் நேத்ரன்.
இந்த பங்களாவிற்கு வருவது, சமீபத்தில் அவனிற்கு பிடிக்காத விஷயங்களில் முதன்மை இடம் வகிப்பது. அதற்கு காரணம் அங்கு வசிப்பவர்கள் என்றால் மிகையாகாது.
அவர்களுள் ஈஸ்வரியும், வாசவியும் மட்டும் விதிவிலக்கு. அவனை மனிதனாக மதிப்பவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே. மற்றவர்களுக்கு அவன் மட்டுமல்ல, அங்கு வேலை செய்யும் அனைவருமே ‘அஃறிணை’யில் சேர்ந்தவர்கள் என்ற எண்ணம் போலும்!
அவன் சிந்தை செல்லும் வழியை உணர்ந்து அதிலிருந்து வெளியே வர, அப்போது ஈஸ்வரி அங்கிருந்த பணிப்பெண்ணை கத்திக் கொண்டிருந்தார்.
“உன்னை யாரு இதெல்லாம் எடுக்கச் சொன்னா? உள்ள இருக்க மகாராணிக்கு வெளிய வந்து ஆரத்தி எடுக்க கூட கசக்குதோ?” என்று ஈஸ்வரி திட்ட, பாவம் அந்த பெண்மணி, மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பது போல தவிப்புடன் நின்று கொண்டிருந்தார்.
மீண்டும் ஏதோ சொல்லப் போனவரை தடுத்த வாசவி, “இவங்களை எதுக்கு திட்டிட்டு இருக்கீங்க பாட்டி? மரியாதை எல்லாம் கேட்டு வாங்க கூடாது பாட்டி. அது தானா கிடைக்கணும். அதுவும் இல்லாம, அப்படின்னா என்னன்னு தெரியாதவங்க கிட்ட அதை எதிர்பார்க்குறது நம்ம தப்பு தான்.” என்றாள்.
சரியாக அதே சமயம் உள்ளே இருந்து வந்த பெண்மணியோ, “ஆமாடி யம்மா, எங்களுக்கு தான் மரியதைக்கான அர்த்தம் தெரியாது. நீ வந்து சொல்லிக் கொடு.” என்று கூறியவர், “எல்லாம் இந்த கிழவியை சொல்லணும்! அதுவே இங்க வந்து ஒட்டிட்டு இருக்கு. இதுல இந்த சிறுக்கி வேற எக்ஸ்ட்ரா லக்கேஜா தொத்திட்டு வந்துருக்கு.” என்று முணுமுணுத்தார்.
அதைக் கேட்ட ஈஸ்வரியோ, “அடியேய், யாரைப் பார்த்து ஒட்டிட்டு இருக்கேன்னு சொன்ன? இது என் புருஷன் கட்டுன வீடு. நியாயப்படி நான் தான் உன்னை அப்படி சொல்லணும். ஒட்டிட்டு வந்தேனாம்ல!” என்றார்.
வாசவி எதுவும் பேசவில்லை, மாறாக அவள் பார்த்த பார்வையே அந்த பெண்மணியை சுட்டிருக்க வேண்டும். அதன்பின்னர் அவர் ‘கப்சிப்’பாகிவிட, அவரின் இடத்தை பிடித்துக்கொள்ள வந்தார் இன்னொரு பெண்.
“ப்ச், ம்மா வாசல்ல வச்சு என்ன சத்தம்? ஒருநாள் பிறந்த வீட்டுக்கு வந்து நிம்மதியா இருக்கலாம்னா முடியுதா?” என்று சலித்தபடி வந்தவர், மாதத்தில் பாதி நாட்களை கழிப்பது இந்த வீட்டில் தான்!
“இவ்ளோ நேரம் உன் அண்ணிக்காரி பேசுனது உனக்கு கேட்கல, நான் பேசுனது தான் உனக்கு கத்துற மாதிரி இருக்காக்கும்?” என்று ஈஸ்வரி நொடித்துக் கொள்ள, “அவங்க பேசுனதுல என்ன தப்பு? நீ உன் பேத்திக்கு ஓவரா சப்போர்ட் பண்ண போய் தான் ஆடிட்டு இருக்கா. பொண்ணா லட்சணமா இருக்க சொன்னா, தேவையில்லாம எல்லா இடத்துலயும் சண்டை போட்டுட்டு இருக்கா. நாளைக்கு ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா, உறவுக்காரங்கன்னு எங்களை தான எல்லாரும் பேசுவாங்க. சும்மாவே ஓடிப்போனவ பொண்ணுன்னு பேசி நம்ம குடும்ப மானமே போச்சு! இதுல இவ பண்ற ஒவ்வொன்னுத்துக்கும் பொறுப்பேத்துட்டு இருக்க முடியுமா?” என்று அண்ணிக்கு வக்காலத்து வாங்கி, அக்கா பெண்ணின் மேலிருந்த துவேஷத்தை வெளிப்படையாகவே காட்டினார்.
அதுவரை அங்கு நடக்கும் நாடகம் தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்டது போல கண்டு வந்த நேத்ரனுக்கே அவரின் பேச்சு கோபத்தை விளைவித்தது.
‘உஃப் இதுக்கு பேரு தான் நாக்குல நரம்பில்லாம பேசுறது போல! இவங்க இப்படி சொகுசான வாழ்க்கை வாழ்றதுக்கு முக்கிய காரணமே மேம் அவங்க பிஸினஸை இழுத்துப் பிடிச்சு கவனிக்கிறதால தான். இந்த வீட்டுல இருக்க மத்த ஆம்பளைங்களுக்கு அதுக்கான திறமையோ பொறுமையோ சுத்தமா இல்ல. அவங்களுக்கு தான் பொண்ணுங்க பின்னாடி போறதுக்கே நேரம் சரியா இருக்கே! அதைக் கண்டிக்க துப்பில்ல. இங்க வந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறாங்க.’ என்று மனதிற்குள் பேசிக் கொண்டான் நேத்ரன்.
எதேச்சையாக அவன் வாசவியைக் காண, அவளின் முகமோ நிர்மலமாக இருந்தது.
‘கேட்குற எனக்கே கோபம் வருது. இவங்க எப்படி இங்க நடக்குற எதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்காங்க?’ என்று எப்போதும் போல இப்போதும் தோன்றியது நேத்ரனிற்கு.
“இந்த கூத்தை எங்கயும் நான் பார்த்தது இல்ல. அண்ணிக்கு சப்போர்ட்டா அம்மாவையே எதிர்த்து பேசுற பொண்ணு. ஹும், எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்!” என்று புலம்ப ஆரம்பித்த ஈஸ்வரியை தடுத்த வாசவி, “பாட்டி, இப்படி புலம்பி என்னவாகப் போகுது? அண்ட் சீரியஸ்லி எனக்கு இந்த சம்பிரதாயத்துக்கெல்லாம் நேரமில்ல.” என்றவள், நேத்ரனை ஓரவிழியில் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “வேணும்னா, உங்க ரெடிமேட் மாப்பிள்ளையை தனியா எல்லாத்தையும் செய்ய சொல்லுங்க.” என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.
“ஹ்ம்ம், உங்களுக்கு பாவம் பார்த்தா, என்னையே மாட்டிவிட்டுட்டு போறீங்க!” என்று அலுத்துக் கொள்ளத்தான் முடிந்தது நேத்ரனால்.
“க்கும், கல்யாணம் தான் பண்றீங்க, மாப்பிள்ளையை நம்ம ஸ்டேட்டஸுக்கு ஏத்த மாதிரி பார்க்க வேண்டியது தான. இப்படி நம்மகிட்ட வேலை செய்றவனை போயா மாப்பிள்ளை ஆக்குவீங்க?’ என்று ஈஸ்வரியின் மருமகள் கேலியாக கூற, “இவ இந்த ஆட்டம் ஆடுனா, எந்த மாப்பிள்ளை கல்யாணத்துக்கு ஒத்துக்குவான்? இவனை மாதிரி யாராவது சிக்குனா தான் உண்டு அண்ணி.” என்று ஈஸ்வரியின் மகள் ஒத்து ஊதினாள்.
அவர்களை ஈஸ்வரி திட்டப்போக, அவரை தடுத்த நேத்ரனோ, “ஹலோ ஆண்ட்டிஸ், நீங்க சொன்னது மாதிரி மேம்மை யாரும் ரிஜக்ட் பண்ணல. மேம் தான் மத்தவங்களை ரிஜக்ட் பண்ணியிருக்காங்க. அப்பறம் என்ன சொன்னீங்க ஸ்டேட்டஸா? ஹும், உங்களுக்கு தெரியாதது ஒன்னுமில்ல… இப்போலாம் எந்த பணக்கார வீட்டு பையன் ஒழுங்கா இருக்கான். தன் வேலையெல்லாம் வீட்டுல இருக்கவங்க தலையில கட்டிட்டு, பொறுப்பேயில்லாம பார்ட்டி, பப், பேப்னு சுத்திட்டு இருக்காணுங்க. இதுல என்ன ஹைலைட்னா, அவங்க அம்மா இருக்காங்களே… அந்த மனிதர்குல மாணிக்கங்கள், அவங்க பெத்த தறுதலைங்களை திட்ட வழியில்லாம, மத்தவங்களை குறை சொல்லிட்டு இருப்பாங்களாம். அதே என்னை மாதிரி பசங்க, குடும்ப பொறுப்பை மட்டுமில்லாம, நாங்க வேலை பார்க்குற கம்பெனி பொறுப்பையும் எங்க தோளுல சுமந்துட்டு இருக்கோம். ஹ்ம்ம், இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுது?” என்று மடமடவென்று பேசினான்.
அதைக் கேட்ட இரு பெண்களும் அவனை திட்ட வாயெடுக்க, “என்ன கோபம் வருதா ரெண்டு பேருக்கும்? நியாயமா பார்த்தா, பார்ட்டி, பப்னு சுத்துற அந்த பணக்கார தறுதலைங்களோட அம்மாக்களுக்கு தான கோபம் வரணும். உங்களுக்கும் வருதா என்ன? அப்போ உங்க பசங்களும்…” என்று அவன் இழுக்க, “அண்ணி, இவன்கிட்ட என்ன பேச்சு? வாங்க போலாம்.” என்று இருவரும் உள்ளே சென்று விட்டனர்.
அத்தனை நேரம் அங்கு நடந்ததை திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த பணிப்பெண்ணிடம் சென்றவன், “ஆரத்தி எனக்கு தான? ம்ம்ம் எடுங்க.” என்று கூற, அப்பெண்ணோ தயங்கினார்.
“நல்ல மனசோட யாரு வேணும்னாலும் ஆரத்தி எடுக்கலாம். நீங்க சுத்துங்க.” என்று நேத்ரன் கூற, ஈஸ்வரியும் அதை ஆமோதிப்பது போல தலையசைக்க, நேத்ரன் தன் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தான், தனியாக!
உள்ளே வந்த நேத்ரனை ஈஸ்வரி சாப்பாட்டு மேஜைக்கு அழைத்துச் செல்ல, அங்கு ஏற்கனவே நின்றிருந்த மகளும் மருமகளும் அவனைக் கண்டதும் அங்கிருந்து நழுவினர்.
‘அட, உங்களை இப்படி ஆஃப் பண்ணலாம்னு முன்னாடியே தெரிஞ்சுருந்தா நல்லா இருந்துருக்குமே.’ என்று நினைத்தவனிற்கு, இதற்கு முன்னர் இந்த பங்களாவிற்கு வந்தபோது தன்னை சந்தித்த அவர்களின் ஏளனப்பார்வைகள் எல்லாம் மனக்கண்ணில் வந்து போயின.
அவை அனைத்தும் அவனிற்கு முன் இலையில் வைக்கப்பட்ட பதார்த்தங்கள் முன்னால் மறைந்து போயின!
‘இன்னைக்கு ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்.’ என்ற எண்ணத்தில் இலையில் கைவைக்கும்போது, எதிரே யாரோ அமரும் அரவம் உணர, நிமிர்ந்து பார்த்தான்.
அங்கு அவனை பார்த்தவாறே வந்து அமர்ந்தாள் வாசவி.
‘க்கும், இனி எங்க பிடிக்கிறது? கொறிக்கிறது கூட டவுட் தான்!’ என்று நினைத்தவாறு தலையை குனிந்து கொண்டான்.
அப்போது வாசவியின் அலைபேசி அலற, அதை ஏற்றவளின் பேச்சிலிருந்தே மறுபுறம் இருப்பது பூரணி என்பதை அறிந்து கொண்டான் நேத்ரன்.
“நோ நோ வேற எந்த மீட்டிங்க்ஸும் போஸ்ட்போன் பண்ண வேண்டாம். அந்த ஜி.கே குரூப்ஸோட இருந்த மீட்டிங் கூட ஈவினிங் ஸ்கெட்யூல் பண்ண முடியுமான்னு கேளுங்க.”
“…”
“ஐ வில் பி தேர் இன் ஃபிஃப்டீன் மினிட்ஸ்.”
அத்துடன் அழைப்பை துண்டித்தவள், சாப்பிடாமல் எழ, “சவி, என்னது இது? முதல்ல சாப்பிடு.” என்றார் ஈஸ்வரி.
“அதுக்கெல்லாம் நேரமில்ல பாட்டி. எனக்கு அங்க வேலை வரிசை கட்டி காத்திட்டு இருக்கு.” என்றவள் நேத்ரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீங்க உங்க திடீர் மாப்பிள்ளையை கவனிங்க.” என்று சென்று விட்டாள்.
அவள் அப்படி சொல்லிவிட்டு சென்றதும் நேத்ரனோ பாட்டியை முறைத்தான்.
அதைக் கூட முழுதாக செய்ய விடாதவளாக, மீண்டும் அங்கு வந்த வாசவி நேத்ரனிடம், “இன்னும் அரை மணி நேரத்துல ஆஃபிஸ்ல இருக்கணும்.” என்று கூற, நேத்ரனோ தன் முன்னிருந்த இலையையும் ஈஸ்வரியையும் மாறி மாறிப் பார்த்தான்.
அவனைக் காண ஈஸ்வரிக்கே பாவமாக இருக்க, “சவி…” என்று ஏதோ கூற வந்தவரை தடுத்தவள், “ஒன்லி இஃப் யூ வான்ட் டூ கன்டின்யூ இன் தி ஜாப். இல்லைன்னாலும் ஆஃபிஸ் வந்து செட்டில்மெண்ட் முடிச்சுட்டு கிளம்புங்க.” என்று கறாராக கூறியவள் அங்கிருந்து செல்ல, இப்போது அவளையும் உணவையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, ஒரு பெருமூச்சுடன் வேகமாக அவளைப் பின்தொடர்ந்தான்.
இருவரும் ஒன்றாக செல்வதைக் கண்ட ஈஸ்வரியோ, தன் கணக்கு தவறாது என்று மனதிற்குள் மெச்சிக் கொண்டார்.
வாசவியும் நேத்ரனும் ஒரே வாகனத்தில் புறப்படுவதை ஈஸ்வரி மட்டுமல்ல, மற்ற ஒரு ஜோடி விழிகளும் கண்டன, குரோதத்துடன்!
பூ பூக்கும்…