வஞ்சிக்கொடியின் வசீகரனே – 9

அத்தியாயம் – 9

பரபரப்பாக ஏதோ தேடிக் கொண்டிருந்த சம்பூர்ணா “என்ன தேடுற?” என்ற கணவனின் கேள்வியில் விதிர்த்து தான் போனாள்.

பின்பு மெல்ல திரும்பி கணவனைப் பார்த்தாள்.

நேரம் சென்று உறங்கியதால் கண்களையே திறக்க முடியாமல் எரிச்சல் உண்டாக, அவள் தேடும் போது ஏற்பட்ட சப்தத்தில் விழிப்பு வந்தவன் அரைக்கண்ணை மட்டும் திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“சோ… சோப் வேணும்… குளிக்கப் போறேன்…” என்று வாய்க்கு வந்ததைச் சொன்னாள்.

“குளிக்கவா…?” என்று கேட்டவன் மணியைப் பார்த்தான் ஐந்து மணி பத்து நிமிடம் ஆகியிருந்தது.

“இந்த நேரத்திலா குளிக்கப் போற? ஐஞ்சு மணி தான் ஆகுது. நடுச்சாமம் போய்க் குளிக்கப் போறேன்னு சொல்ற? பேசாம படுத்துத் தூங்கு…” என்றான்.

“நடுச்சாமமா? இந்த நேரத்தில் எங்க வீட்டில் குளிச்சு முடிச்சு பூஜை ரூம்ல இருக்கணும். எனக்கு இந்நேரம் குளிச்சு பழகிருச்சு. சோப் வேணும்…” தான் தேடியதை மறைக்க, பொய்யுடன் உண்மையையும் கலந்து விட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு பாதிக்கு மேல் உறக்கம் கலைய மனைவியை விழி விரித்துப் பார்த்தான்.

அவனுக்கு எட்டு மணிக்கு தான் விடியும். அப்படியிருக்க மனைவி ஐந்து மணிக்கே எழுந்தது மட்டும் இல்லாமல் குளிக்கப் போவதாக வேறு சொல்லவும் அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தான்.

‘இந்த அராத்துக்குள்ள இவ்வளவு பெரிய நல்ல விஷயம் ஒளிந்திருக்கிறதா?’ என்று நினைத்தவனுக்குப் படுக்கையை விட்டு அசைய கூட முடியவில்லை. கல்யாண அலுப்பும், இரவு சரியாக உறங்காததும் அவனைப் பிடித்து அமிழ்த்தது.

அதனால் மீண்டும் கண்களை மூடிக் கொண்டே “பாத்ரூம்லேயே ஒரு சின்னக் கபோர்ட் இருக்கும். அதில் சோப் இருக்கும் பார்…” என்று தூக்க கலக்கத்துடன் சொல்லிக் கொண்டே மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தான்.

‘இதுங்க இரண்டும் புதுசா கல்யாணம் ஆனதுங்க மாதிரியா இருக்கு? இவ சோப்ங்குறா… அவன் அங்க பாருங்கிறான்… மங்காத்தா சபதம் போட்டு மல்லு கட்டுங்கனு பார்த்தா, இதுங்க பிரம்மச்சரிய சபதம் போட்டுக்கிட்டுச் சுத்துங்க…’ என்று மனசாட்சி தலையிலேயே அடித்துக் கொண்டது.

கணவன் சிறு சப்தத்திற்குக் கூட எழுந்து கொள்கிறான் என்று அறிந்ததும் தன் தேடலை கை விட்டவள் அவனிடம் சொன்னதை உண்மையாக்க குளிக்கச் சென்றாள்.

ராகவ் எழுந்து கிளம்பி கீழே வந்த போது காலை ஒன்பது மணி ஆகியிருந்தது.

முழிப்பு வந்ததுமே மனைவியைத் தான் தேடினான்.

அவள் அறையில் இல்லாமல் போக, அவளைப் பார்க்கும் ஆவலில் விரைவில் குளித்து விட்டு கீழே வந்தான்.

சாப்பாட்டு மேஜையின் முன் அவனின் மனைவியும், அன்னையும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

வெகுநாட்கள் பழகியவர்கள் போல வெகு இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக் கொண்டே வந்தவன் தள்ளி இருந்த இன்னொரு இருக்கையை இழுத்து மனைவி அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் ஒட்டி போட்டு அவளை இடித்துக் கொண்டு அமர்ந்தான்.

சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த பூர்ணா அவனின் செயலை விழி விரித்துப் பார்த்தாள்.

‘என்ன செய்கின்றான் இவன்? அத்தை முன்னாடி இப்படியா இடித்துக் கொண்டு உட்காருவது?’ என்று நினைத்தவள் தன்னைச் சுருக்கி கொண்டு நளினாவை சங்கடமாகப் பார்த்தாள்.

அவரோ அதைக் கண்டு கொள்ளாமல் “என்னடா இன்னைக்கும் இவ்வளவு லேட்டாவா எழுந்து வருவ? கொஞ்சம் சீக்கிரம் எழுந்து வந்திருக்கக் கூடாது? என் மருமகளைப் பாரு… ஆறுமணிக்கு எல்லாம் கீழே வந்துட்டா…” என்று பெருமையாகச் சொன்னார்.

‘என் பொண்டாட்டியை நான் தூங்க விடாமல் செய்திருந்தால் அவளும் என் கூடத் தான் எழுந்துருப்பாள். நைட் எல்லாம் கும்பகர்ணி போலத் தூங்கினா இப்படித்தான் சீக்கிரம் முழிப்பு வரும்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், “உங்க மருமக கிரேட் தான் மாம். சரி அதை விடுங்க. எங்க சொந்தக்காரங்க யாரையும் காணோம்? அப்பாவையும் காணோம்… நீங்க எல்லாரும் சாப்டீங்களா?” என்று கேட்டான்.

“நம்ம சொந்தக்காரங்க எல்லாம் காலையிலேயே கிளம்பிட்டாங்க. பூர்ணாவோட மாமாவும், அத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு போவோம்னு இருந்தாங்க. நீ எழுந்து வர லேட் ஆகவும் எங்க கிட்ட மட்டும் சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. அப்பா மதிய சாப்பாட்டுக்கு தேவையானதை வாங்க போயிருக்கார். அப்பாவும், நானும் சாப்பிட்டாச்சு. பூர்ணா தான் இன்னும் சாப்பிடலை. உன்கூடச் சேர்ந்து சாப்புடுறேன்னு சொல்லி வெயிட் பண்றா. இரு! இரண்டு பேருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…” என்று எழுந்து போனார்.

அவர் எழுந்து போனதும் மனைவியின் புறம் திரும்பியவன், அவள் இருவருக்குமிடையே விட்டிருந்த சிறு இடைவெளியையும் நிரப்பிக் கொண்டு அவளின் முகத்தை ஆசையாகப் பார்த்தான்.

“இப்போ எதுக்கு இப்படி இடிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க? அத்தை என்ன நினைப்பாங்க?” அவனின் ஆசை பார்வையைக் கண்டு கொள்ளாமல் சிடுசிடுத்தாள்.

“அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. மகனும், மருமகளும் ஒற்றுமையா… குறிப்பா நைட் சந்தோஷமா இருந்தாங்கனு நினைப்பாங்க…” என்று குறும்பாகச் சொல்லிவிட்டுக் கண்ணைச் சிமிட்டினான்.

அவன் சொன்ன விதத்தில் பூர்ணாவிற்கு வெட்கம் வரப் பார்த்தது. ஆனால் அதை உடனே அடக்கியவள், “சரி, கொஞ்சம் தள்ளியே உட்காருங்க. எனக்கு எப்படியோ சங்கடமா இருக்கு…” என்று விலக முயன்றாள்.

“உன் சங்கடத்தைப் போக்க என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு சம்மூ…” என்று கண்கள் பளப்பளக்க கூறினான்.

அவனின் கண்கள் மின்னியதை கண்டு கொண்டவள், ஏதோ செய்யப் போகின்றான் என்று உணர்ந்து அவள் விலகும் முன் அழுத்தமாக மனைவியின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்திருந்தான்.

சொடக்கு போடும் நொடியில் சொக்க வைத்திருந்தான்.

நொடியில் இதழ்களைப் பதித்திருந்தாலும் மிக மிக அழுத்தமாகவே பதித்திருந்தான்.

அவனின் எதிர்பாராத தாக்குதலில் மிரண்டு விழித்தாள் பூர்ணா.

அவளின் கைகள் தன்போக்கில் கன்னத்தைத் தடவியது.

அதிர்வில் இருந்து வெளியே வந்து அவள் ஏதோ சொல்ல நினைத்த போது, சூடாகத் தோசையை வார்த்து எடுத்துக் கொண்டு அங்கே வந்தார் நளினா.

மனைவியின் அதிர்வை புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவன், அன்னை வரவும், அறியாப்பிள்ளை போல லேசாக மட்டும் விலகி அமர்ந்தான்.

ஆனால் இருவரின் தோளும் உரசிய படிதான் இருந்தது.

மருமகளின் திகைப்பான தோற்றத்தையும், மகனின் குறும்பான பார்வையையும் கண்டும் காணாத நளினா, “ஆளுக்கு இரண்டு தோசை ஊத்தியிருக்கேன். இரண்டு பேரும் சாப்பிட்டுட்டு இருங்க. நான் போய் முட்டை தோசை வார்த்து எடுத்துட்டு வர்றேன்…” என்று மகனுக்கும், மருமகளுக்கும் பரிமாறி விட்டு மீண்டும் உள்ளே சென்றார்.

அவர் உள்ளே சென்ற நிமிடத்தில் கணவனை உக்கிரமாகப் பார்க்க ஆரம்பித்திருந்தாள் சம்பூர்ணா.

“வொய்டி பொண்டாட்டி?” அவளின் பார்வையில் பொங்கிய சிரிப்புடன் கேட்டான்.

“நடு ஹாலில் வச்சு என்ன காரியம் செய்துட்டு இருக்கீங்க?” குறையாத கோபத்துடன் கேட்டாள்.

“நடு ஹால் என்பதால் தான் இதோட நிறுத்தினேன். இல்லனா…” என்று இழுத்தவன் அவளின் இதழ்களை ஒரு மார்க்கமாகப் பார்த்து தன் அதரங்களைக் குவித்துக் காட்டினான்.

“ஹான்…!” அவனின் செய்கையில் மிரண்டு விழித்தாள் பூர்ணா.

“நீ ஏன் ஹாலில் உட்கார்ந்து சிரிச்ச? நீ சிரிக்கும் போது உன் கன்னத்தில் விழுந்த ஓட்டையைப் பார்த்து அங்கேயே ஒன்னு கொடுக்கணும்னு தோணுச்சு கொடுத்தேன்…” என்று சொல்லிவிட்டு தோளை குலுக்கினான்.

அவன் சொன்ன விதத்தில் இன்னும் முறைத்தவள், “முதலில் ஓட்டைனு சொல்றதை நிறுத்துங்க. நீங்க அப்படிச் சொல்லும் போதெல்லாம் என் கன்னத்தில் ஓட்டையே விழுந்த மாதிரி இருக்கு…” என்று சொல்லி விட்டு அதைக் கற்பனை செய்து பார்த்து உடல் சிலிர்த்தாள்.

“ஹேய்! சும்மா விளையாட்டுக்கு ஓட்டைனு சொன்னேன்மா. நான் அப்படிச் சொன்ன போது அதிர்ச்சியா ஒரு பார்வையைப் பார்த்தியே அதைப் பார்க்க தான் சீண்டினேன். இதுக்குப் போய் நிஜ ஓட்டை அளவுக்குக் கற்பனை பண்ணிட்டு போயிட்ட? இனி சொல்லலை விடு. அதிகமாகக் கற்பனை பண்ணாதே…!” என்று சொல்லிக் கொண்டே அவள் அதை நினைக்காமல் இருக்க மீண்டும் அழுத்தமாக முத்தம் பதித்தான்.

பேசிக் கொண்டே அவன் முத்தம் வைத்ததில் மீண்டும் அதிர்ந்து விழித்த பூர்ணா கணவனைக் கோபமாக முறைத்துப் பார்த்தாள்.

‘காலையில் தானேடா உனக்குக் கண்ணியம், கட்டுப்பாடு, கத்திரிக்கா இருக்குனு சர்டிபிகேட் கொடுத்தேன். அதுக்குள்ள எல்லாத்தையும் க.க.போனு சொல்ல வச்சுட்ட…’ என்று நினைத்துக் கொண்டே அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன லுக்கு…?” புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

“நீ நல்லவனா, கெட்டவனானு பார்க்குறேன்…”

“உனக்குச் சந்தேகமே வேண்டாம்டா குட்டி. ஐயாம் ஆல்வேஸ் கெட்டவன்… அதுவும் என் பொண்டாட்டிகிட்ட ரொம்ப ரொம்பக் கெட்டவன். இந்தக் கெட்டவன் என்னவெல்லாம் செய்யப் போறான்னு நீயே கூடிய சீக்கிரம் பார்ப்பாய்…” என்று சொல்லி விட்டு வில்லன் போலச் சிரித்தான்.

அவன் முகத்தை ஒரு மாதிரியாகச் சுளித்து, குரலில் கடுமையைக் காட்டி சொல்லிவிட்டு, சிரித்த விதத்தில் உண்மை தானோ என்பது போல் ஒரு நொடி திடுக்கிட்டு பார்த்தாள்.

“என்னடா காமெடி எதுவும் செய்தீயா என்ன? என் மருமக இப்படிப் பயந்து விழிக்கிறாள்…” என்று கேலியாகக் கேட்டுக் கொண்டே வந்தார் நளினா.

“காமெடி இல்லை மாம். வில்லன் சிரிப்புச் சிரிச்சேன். அதில் தான் என் பொண்டாட்டி மிரண்டுட்டாள்…” என்று கிண்டலுடன் சொல்லிவிட்டு மனைவியை ஓரக் கண்ணால் பார்த்தான்.

நளினா வரவும் சாதாரணமாக முகப் பாவனையை மாற்றியவள் கணவனின் பேச்சு காதிலேயே விழவில்லை என்பது போது தோசையைப் பிட்டு வாயிற்குள் தள்ளி கொண்டிருந்தாள்.

கணவன் வில்லத்தனமாகப் பேசினாலும் அவனின் கண்களில் இருந்த குறும்பு அவன் தன்னிடம் விளையாடுகின்றான் என்பதைக் காட்டி கொடுத்து விட, சாப்பிடுவதில் கவனத்தை வைத்தான்.

“வில்லன் மாதிரி சிரிச்சியா? அப்போ கண்டிப்பா மிரள வேண்டியது தான். நீ சாதாரணமா சிரிச்சாலே வில்லன் சிரிப்பு மாதிரி தான் இருக்கும். வில்லன் மாதிரி சிரிச்சா இன்னும் கொடூரமா இருக்குமே…” என்று கேலியாகச் சொல்லி விட்டு சிரித்தார்.

கூடவே பூர்ணாவும் சிரித்தாள். இருவரையும் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“என்ன மாம் மருமகள் வந்ததும் மகனையே ஓட்டுறீங்களா? இது நல்லாயில்லை சொல்லிட்டேன்…” சிறு குழந்தை போல் முகத்தைச் சுருக்கினான்.

“இத்தனை வருஷமா உனக்குத் தானே சப்போர்ட் பண்ணிட்டு இருந்தேன். இனி என் சப்போர்ட் என் மருமகளுக்குத் தான் பண்ணுவேன்…” என்று மகனுக்குப் பழிப்பு காட்டினார்.

“ஹா…ஹா…ஹா…!” அவர் பழிப்பு காட்டியதை பொருட்படுத்தாமல் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

பூர்ணா அவனின் சிரிப்பின் காரணம் புரியாமல் பார்க்க, “என்னடா சிரிப்பு?” என்று கேட்டார் நளினா.

“இல்ல எனக்கு இருபத்தி ஒன்பது வருஷமா சப்போர்ட் செய்த நீங்க, என் பொண்டாட்டிக்கு மட்டும் ஒரு வருஷம் தான் சப்போர்ட்டுனு சொல்றீங்களே? என் பொண்டாட்டிக்கு அவ்வளவு தானா சப்போர்ட்னு நினைச்சேன்னா அதான் சிரிப்பு வந்துடுச்சு…” என்றான்.

“அது என்னடா ஒரு வருஷ கணக்கு?” புரியாமல் நளினா கேட்க,

தன்னைக் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியின் புறம் திரும்பி அவளைக் கேலியாகப் பார்த்து விட்டு மீண்டும் அன்னையின் புறம் திரும்பி “அடுத்த வருஷம் எங்க மகனோ, மகளோ வந்துருவாங்க. அப்புறம் பேர பிள்ளை பின்னாடி ஓடத்தான் உங்களுக்கு டைம் இருக்கும். என் பொண்டாட்டிக்குச் சப்போர்ட் பண்ண நேரம் எப்படி இருக்கும்னு நினைச்சேன்னா சிரிப்பு வந்துருச்சு…” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரித்துக் கொண்டே திரும்பி மனைவியைப் பார்த்துக் குறும்பாகக் கண் சிமிட்டினான்.

‘அடேய் புருஷா! எதுக்கும், எதுக்கும் முடிச்சுப் போடுற?’ என்பது போல் விழி விரித்து முழித்தாள் பூர்ணா.

‘அப்படித்தான் போடுவேன்…’ என்பது போல் அவன் பதில் பார்வை பார்த்து வைக்க, இருவரும் கண்களாலேயே சண்டையிட்டுக் கொண்டனர்.

இருவரின் பார்வையைப் பார்த்து அங்கிருந்து நழுவினார் நளினா.

சிறிது நேரம் கழித்து அவர் அங்கே வந்த போது இருவரும் அமைதியாக உண்பதை பார்த்து விட்டு எதிர் இருக்கையில் அமர்ந்தார்.

“அப்புறம் மாம், உங்க மருமகள் கிட்ட ஏதோ டிப்ஸ் கேட்கணும்னு சொன்னீங்களே கேட்டீங்களா?”

“கேட்டேன் ராகவ்… ஆனா உருப்படியா ஒரு டிப்ஸும் தான் கிடைக்கலை…” என்று சோகமாக உதட்டை பிதுக்கினார்.

“பூர்ணா எதுவும் ஸ்பெஷலா ஃபாலோ பண்ண மாட்டாளாம். அவள் உடல்வாகே அப்படித்தானாம். என்னவோ போ! நான் எப்போ வெயிட்டை குறைகிறது? நீ எப்போ எனக்கு ஒட்டியாணம் வாங்கிப் போடுறது? எனக்கு வாங்கித் தருவியோ இல்லையோ என் மருமகளுக்கு வாங்கித் தந்துரு…” என்று கட்டளையாகச் சொன்னார்.

“உங்க மருமகளுக்கு மட்டுமில்லை உங்களுக்கும் சேர்த்தே வாங்கித் தர்றேன். கவலையை விடுங்க…” என்று அமைதியாகச் சொல்லிவிட்டு உணவை தொடர்ந்தான்.

“என்னடா அதிசயமா இருக்கு… என்னவோ எனக்கு ஒட்டியாணம் வாங்கணும்னா ஒன்பது வருஷம் உழைக்கணும்னு டைலாக் விட்ட…” ஆச்சரியமாகக் கேட்டார்.

“நீங்களே சொல்லிட்டீங்களே டைலாக்னு… அதெல்லாம் சும்மா விடுவது தான். என் அம்மாவுக்கும், பொண்டாட்டிக்கும் வாங்கித் தருவதை விட எனக்கு என்ன வேலை?”

“உண்மையாத்தான் சொல்றியா?” என்று சந்தோசமாகக் கேட்டார் நளினா.

“உண்மைதான் மாம்…” என்று அழுத்தி சொல்லி தன் பேச்சை உறுதிப்படுத்தினான்.

“நீ வாங்கித் தரேன்னு சொன்னதுனாலேயே நான் ஒரு பத்து கிலோ எடையைக் குறைத்து காட்டுறேன் டா மகனே…” என்று சொன்னவர் அப்போதுதான் தங்கள் பேச்சுப் புரியாமல் முழித்துக் கொண்டிருந்த மருமகளைக் கவனித்தார்.

தங்களுக்குள் நடந்த ஒட்டியாணம் பற்றிய பேச்சை மருமகளிடம் பகிர்ந்துகொண்டார்.

“சூப்பர் அத்தை! நான் நெட்டில் தேடி டிப்ஸ் எடுத்துத் தர்றேன். அதையெல்லாம் ஃபாலோ பண்ணி பாருங்க. வெயிட்டை குறைத்து விடலாம்…” என்று மாமியாரை உற்சாகமாக ஊக்கப்படுத்தினாள்.

அவர்கள் பேசிக்கொள்வதைக் கண்டும் காணாதவன் போல் எழுந்து சென்ற கணவனை ஓரப் பார்வையாகப் பார்த்தாள் பூர்ணா.

அவனோ அங்கே ஒருத்தி தன்னைப் பார்க்கிறாள் என்பதையே கண்டு கொள்ளாதவன் போல் கழுவிய கையைத் துடைத்துக் கொண்டே வரவேற்பறை சோஃபாவில் சென்று அமர்ந்தான்.

அவனின் அந்த அலட்சியத்தைப் பார்த்த‌ பூர்ணா ‘ரொம்பத் தான் அலட்டிக்கிறான் போடா…’ என்று மனதிற்குள் சிலுப்பிக் கொண்டாள்.

‘ஆமா! ப்ளீஸ் சொல்லியே அவனைப் பிச்சிக்கிட்டு போக வைக்க வேண்டியது. அப்புறம் அவனையே குறை சொல்ல வேண்டியது?’ மனம் அவளை வசை பாட ஆரம்பித்தது.

‘பின்ன ஹாலில் இருந்துகிட்டு அத்தை முன்னாடி சேட்டை பண்ணினா கஷ்டமா இருக்காதா? ப்ளீஸ் ஹாலில் இப்படிச் செய்யாதீங்க சொன்னா உடனே உர்ருனு மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டான்…’ சோகமாக நினைத்துக் கொண்டாள்.

‘இது என்னடி வம்பா இருக்கு? அவன் ஒட்டிக்கிட்டு வந்தா நீ வெட்டிக்கிட்டு போற… அவன் வெட்டிக்கிட்டு போனா நீ ஒட்டிக்கணும்னு நினைக்கிற. இப்படியே நீயும் அல்லாடி அவனையும் அல்லாட வைத்துக் கொண்டே இரு. ஒருநாள் உன் பேச்சை கேட்காம மொத்தமா உன்னை அள்ளிக்கப் போறான்…’ என்று மனம் பட்டாசாகப் பொரிந்தது.

மனதின் குரலும் அவளுக்குக் கேட்கவில்லை. எதிரே இருந்து பேசிக் கொண்டிருந்த மாமியாரின் குரலும் அவளுக்குக் கேட்க வில்லை.

அவளின் கவனம் எல்லாம் வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து அதன் மீது கவனம் வைத்திருந்தவனின் மீது தான் இருந்தது.

அடுத்து அங்கே இருந்த இரண்டு நாட்களும் புதுமணத் தம்பதிகள் முட்டிக்கொண்டும் மோதி கொண்டும் இருந்தனர்.

அடுத்த மூன்றாவது நாள் காலையில் பூர்ணாவின் வீட்டில் அவளின் படுக்கையறையில் தன்னை எப்போதும் அதிர வைக்கவும் கணவனையே அதிர வைத்துக் கொண்டிருந்தாள் சம்பூர்ணா.

தன் மனைவியின் புது அவதாரத்தைப் பார்த்து எப்போதும் விழி சிமிட்டும் ராகவ்வின் விழிகள் விரித்தது விரித்தபடி இருந்தன.