வஞ்சிக்கொடியின் வசீகரனே – 19

Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அத்தியாயம் – 19

“இப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம்? பதில் சொல்லு…!” பேசுவதெல்லாம் பேசிவிட்டு அதென்ன ஒன்றும் அறியாதவள் போல முழிக்கின்றாள் என்ற எரிச்சலுடன் கேட்டான் ராகவ்.

“எ… என்ன…? எதுக்கு இப்போ இவ்வளவு கோபப்படுறீங்க?”

“கோபப்படாம? எதுக்கு இப்போ ட்ரஸ் மாத்துறேன்னு சொன்ன? நான் உன்னைத் தொட்டு கொஞ்சியதால் தானே?”

அப்போது தான் அவனின் கோபத்தின் காரணம் புரிய “ம்ப்ச்… அதில்லை…” என்று வேகமாக மறுத்தாள்.

“பின்ன…?” வேற என்ன காரணம் இருக்க முடியும் என்பது போல் கண்ணைச் சுருக்கி கேட்டான்.

“இந்த டிரஸ் உங்க உணர்வுகளைத் தூண்டி விடுவது போல இருக்கு தானே…?” என்று கலக்கத்துடன் கேட்டாள்.

“நீ என்ன சொல்ல வர்ற?” இறுக்கத்துடனேயே கேட்டான்.

“உணர்வுகளைத் தூண்டி விடுற மாதிரி இருக்குற ட்ரஸை எப்படி வெளியில் போட்டுட்டு போக? வீட்டில் உங்க உணர்வை தூண்டுற மாதிரி இருந்தது கூடத் தப்பில்லை. ஆனா வெளியில் யாரோ ஒருத்தனும் அப்படிப் பார்த்திட்டா…” என்றவள் அதற்கு மேல் சொல்ல முடியாமல் கலக்கத்துடன் நிறுத்தினாள்.

அவனின் தீண்டுதலுக்காக இல்லை. வெளியில் அவ்வுடையில் செல்வதற்குத் தான் கலங்கி இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதும் தான் ராகவ்வின் முகம் இலகுவானது.

“மாடர்ன் ட்ரஸ் போட்டாலே பார்க்குறவங்க உணர்வை எல்லாம் தூண்டி விடும்னு அர்த்தமில்லை சம்மூ…” அவளின் அருகில் சென்று அமர்ந்து இதமாகச் சொன்னான்.

“ஆனா இப்போ நீங்க தானே சொன்னீங்க? என் உடம்போட ஷேப் எல்லாம் சரியா காட்டுதுனு… அது வெளியே பார்க்கிறவங்களுக்குத் தப்பா தானே தெரியும்…?” கட்டுப்கோப்பாக வளர்ந்தவளுக்குக் கலக்கம் மறைய மறுத்தது.

“ஷேப் சரியா தெரியுது தான். ஆனா அது ஒன்னும் அவ்வளவு தப்பா தெரியலை…” என்று அவன் மேலும் ஏதோ சொல்லும் முன்,

“எப்படித் தப்பா தெரியாம போகும்? உங்களைத் தடுமாற வைச்சது தானே…அப்போ மத்தவங்களும்…”

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“என்னைத் தடுமாற வச்சதுனா நான் உன் புருஷன்டி. நான் எனக்கே எனக்கானவளை உரிமையா பார்த்துட்டேன். அந்த உரிமையை என் கண்களுக்கு மட்டும் இல்லாம என் கைகளுக்கும் கொடுத்துட்டேன். ஆனா இதே ட்ரஸ், இல்ல இதை விட மாடர்னா யாராவது டிரஸ் பண்ணிட்டு என் எதிரில் வந்தா நான் இப்படித் தடுமாறி இருப்பேன்னு நீ நினைக்கிறியா?” அவளின் முகத்தைப் பார்த்துக் கூர்மையாகக் கேட்டான்.

“இல்லை…” என்று உடனே வேகமாகச் சொல்லியிருந்தாள் பூர்ணா.

கணவனைத் தான் இத்தனை நாட்கள் கவனித்திருக்கின்றாளே… பேச்சு தான் விளையாட்டாக இருக்குமே தவிர, அவனிடமிருந்து தவறாக எதுவும் வெளிப்பட்டது இல்லை. அதிலும் அவனுக்குத் தெரிந்தவர்களிடம் மட்டுமே அவனுடைய உரிமையான விளையாட்டைக் காட்டுவான் என்பதையும் கண்டு கொண்டிருந்தாள்.

கணவனை நெருக்கமாக இருந்து பார்க்க, பார்க்க அவனின் குணம் பிடிப்பட்டதால் தான் அவளின் மனம் அதிகம் இளகி விட்டது என்பதும் அவள் அறிந்த உண்மை.

“அதே தான்! உன்கிட்ட மட்டும் தான் நான் தடுமாறுவேன். என் தடுமாற்றத்தை காட்டவும் செய்வேன். இதே அந்த இடத்தில் வேற ஒருத்தி இருந்தால் இந்த உலகத்தில் இருக்குற கோடிக்கணக்கான பொண்ணுங்களில் எனக்கு அவளும் ஒருத்தி. அவ்வளவுதான்! இதே தான் மத்த ஆண்களுக்கும் பொருந்தும்.

அவங்களுக்குச் சொந்தமானவங்களை மட்டும் உரிமையா பார்த்தால் தான் அது நல்ல பார்வை! அதே ஊரில் இருக்குற எல்லாப் பொண்ணுங்களையும் அப்படிப் பார்த்தால் தப்பு அந்தப் பொண்ணுங்க மேல இல்லை. பார்க்கிறவங்க பார்வை மேல தான் தப்பு!” என்று அவன் விளக்கம் சொல்லும் போதே பூர்ணா ஏதோ சொல்ல வர,

“இரு நான் சொல்லி முடிச்சுடுறேன்…” என்று அவளைத் தடுத்து நிறுத்தியவன்,

“அப்போ மாடர்ன் ட்ரஸ் போட்டதால் தானே அப்படிப் பார்க்கிறாங்கனு கேட்ப… என்ன சரி தானே?” அவள் என்ன கேட்பாள் என்பதை உணர்ந்து தானே அக்கேள்வியைக் கேட்டான்.

‘சரிதான்!’ என்பது போல் தலையசைத்தாள்.

“ஒரு பெண்ணைத் தப்பா தான் பார்க்க தோணுச்சுனா அது எப்படி ட்ரஸ் பண்ணினாலும் தப்பா தான் பார்ப்பாங்க. சேலை கட்டினா கை சைட் ஓரம் எதுவும் தெரியாதா? சுடிதார் போட்டா துப்பட்டா விலகாதானு கண்ணு தேட சொல்லும். அது எல்லாம் கண்ணியமான உடை தானே? அதிலும் விலகலை தேடினா அப்படித் தேடுறவன் தான் தப்பு! நீங்க போடுற உடைல தப்பு இல்லை. இதே தான் எல்லா ட்ரஸுக்கும் பொருந்தும்.

இதே நான் உன்கிட்ட அப்படித் தேடினா அது உரிமை! அதுவும் உனக்குப் பிடிக்காத பட்சத்தில் மனைவியைக் கூட அப்படிப் பார்க்கிறது தப்பு தான்!

என் மனைவி அப்படிப் பிடிக்காதுன்னு சொல்லலைகிற தைரியத்தில் தான் நான் உரிமை எடுத்தேன். அதையும் நீ புரிஞ்சுக்கணும்…” என்று தன் செயலுக்கும் விளக்கம் சொன்னான்.

அவள் ‘புரிந்தது’ என்று தலையசைக்க, “ம்ம்… அடுத்தவங்க தப்பா பார்ப்பாங்கனு நமக்குப் பிடிச்சதை விட முடியாது சம்மூ… அடுத்தவங்களுக்காக நாம வாழவும் முடியாது. நீ ஒன்னும் உடம்பை காட்டுற மாதிரி ட்ரஸ் போடலை. ஃபுல்லா கவர் பண்ணியிருக்கிற ட்ரஸ் தான் போட்டுருக்க. அதுக்கே இப்படிப் பயப்படணும்னு அவசியம் இல்லை. இந்த ட்ரஸ் உன்னை அசிங்கமா காட்டலை. அழகாத்தான் காட்டுது…” என்று நீண்ட விளக்கம் சொல்லி மனைவியைத் தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினான்.

அனைத்திற்கும் தலையைத் தலையை ஆட்டியவள், “இதுக்கு மேல நான் ஓவர் கோட் போட்டுகிட்டுமா…?” என்ற கேள்வியில் வந்து நின்றாள்.

அனைத்தையும் கேட்டுவிட்டு முதலில் இருந்து ஆரம்பிக்கிறாளே? என்பது போலப் பார்த்தாலும், அவளின் கேள்வியில் சிரிப்பு வர லேசாகச் சிரித்து வைத்தான்.

முதல் முறை என்பதால் அவளுக்கு அப்படியெல்லாம் தோன்றுகிறது என்பதைப் புரிந்து கொண்டவன், “போட்டுக்கோ…” என்றான்.

உடனே எழுந்தவள் அவன் வாங்கித் தந்திருந்த கோட்டை அணிந்து கொண்டாள். அணிந்து விட்டு கையை உயர்த்திப் பார்த்தாள். இப்போது கோட் இடுப்பை மறைத்துக் கொண்டிருந்ததால் எதுவும் தெரியவில்லை என்றதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டாள்.

இந்த முறை மனைவியின் அருகில் கூடச் செல்லாமல் அவளின் செய்கையை அமைதியாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“ஒரே ஒரு ட்ரஸை போட்டுட்டு இவ பண்ற சேட்டை… ஹப்பா சாமி முடியலைடா… ஒரு ட்ரஸுக்கே இத்தனை பேச வேண்டியது இருக்கே. அப்போ வாங்கி வச்சு இருக்கிறது எல்லாத்தையும் போட்டா…? அடேய் ராகவா! உன் பொண்டாட்டிக்கு விளக்கம் சொல்ல எக்ஸ்ட்ரா நீ இன்னும் இரண்டு வேளை சாப்பிடணும்டா…” என்று தனக்குத் தானே கிண்டலாகச் சொல்லிக் கொண்டான்.

“பொண்டாட்டிக்கு விளக்கம் சொல்றதை விட அப்படி என்ன முக்கியமான வேலை பார்க்க போறீங்க?” அவனின் கிண்டலை கேட்டு முறைத்துக் கொண்டே கேட்டாள்.

“அப்போ பொண்டாட்டிக்கு விளக்கம் சொல்றது தான் முக்கியமான வேலையா?”

“பின்ன? அது தான் பர்ஸ்ட்! அதுவரைக்கும் மத்ததுக்கெல்லாம் ரெஸ்ட்…!”

“ரைமிங்கு? உனக்கு நக்கல் தான்டி…!” என்றவன் அவளின் அருகில் சென்று கன்னத்தில் செல்லமாகக் கடித்து வைத்தான்.

“ஆவ்…!” என்று அலறி துள்ளி குதித்து விலகியவள் அவனை முறைத்து “இப்போ எதுக்குக் கடிச்சீங்க?” எனக் கேட்டாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஓட்டை விழுற கன்னத்தைக் கடிக்கணும்னு ஆசை…” என்று சொல்லி கண்ணைச் சிமிட்டினான்.

அவன் ஓட்டை என்றதும் கண்ணை உருட்டி பார்த்தாள்.

“என்னை அப்புறம் முறைக்கலாம். இப்போ கிளம்பலாம் சம்மூ நேரமாச்சு…” என்று மனைவியின் முறைப்பில் இருந்து தப்பிக்கப் பேச்சை மாற்றினான்.

அதைப் புரிந்து கொண்ட பூர்ணா இன்னும் அவனை முறைக்க, அவளின் கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டி விட்டு, “பொண்டாட்டி கூட டேட்டிங் போகலாம்னு பார்த்தால் மீட்டிங் வாடானு கூப்பிடுறான்களே…” என்று புலம்பி கொண்டே அலுவலகம் கிளம்பும் வேலையைப் பார்த்தான்.

அவனின் புலம்பலை கேட்டுப் பூர்ணாவிற்குச் சிரிப்பு வர, சிரித்துக் கொண்டே கணவனின் பின் சென்றாள்.

கோட் போட்டதால் திருப்தியாக உணர்ந்த பூர்ணா அடுத்து அவளும் கிளம்பும் வேலையில் கவனத்தை வைத்தாள்.

உடை விஷயத்தில் இது மட்டும் இல்ல. இன்னும் அவர்களுக்கு இம்சை தரும் விஷயம் இருக்கிறது என்பதை அறியாமல் வேலைக்குக் கிளம்பி சென்றனர்.

மதிய உணவிற்குக் கடந்த வாரம் முழுவதும் இருவரும் சேர்ந்தே தான் சென்று கொண்டிருந்தனர்.

அன்று மதியமும் கணவன் அழைக்கவும் அலுவலக உணவகத்திற்குச் சென்ற பூர்ணா அங்கிருந்தவர்களைப் பார்த்து முகத்தைச் சுருக்கினாள்.

இன்று கணவனுடன் அவனின் நண்பர்கள் நால்வரும் அமர்ந்திருந்தனர்.

சிறிது சிறிதாக நண்பர்கள் மீது மனைவிக்கு இருக்கும் கோபத்தை அறிந்து கொள்ள, ராகவ் தான் இன்று நண்பர்களையும் உணவிற்கு உடன் அழைத்து வந்திருந்தான்.

மனைவியின் முகச்சுருக்கத்தைக் கவனித்தாலும் கவனியாதவன் போல் “வா சம்மூ… இந்தா கேண்டின்ல உனக்குப் பிடிச்ச சிப்ஸ் வாங்கினேன். நம்ம லன்ச்சோட சேர்த்து சாப்பிடலாம்…” என்று தான் வாங்கியதை கொடுத்தான்.

அவனின் நண்பர்களுக்குச் சம்பிரதாயமாக ஒரு புன்னகையைக் காட்டி விட்டு அமைதியாகப் பூர்ணா உண்ண ஆரம்பிக்க, ராகவ் நண்பர்களுடன் பேச்சுக் கொடுத்தான்.

“அப்புறம் போன வாரம் வீக் எண்ட் எப்படிப் போச்சு…?” மனைவியின் பக்கம் சிறிது கண்ணை வைத்துக் கொண்டே கேட்டான்.

“நீ இல்லாதது தான்டா குறை. மத்தபடி எப்பவும் போலப் போச்சு. இந்த வாரம் நம்ம வீக் எண்ட் புரோகிராம்ல புதுசா வந்த இரண்டு பசங்க வேற சேர்ந்து இருக்காங்க. அந்தப் பசங்க உன்னை விட வாலுங்களா இருக்காங்கடா. எங்களால் அவனுங்களைக் கண்ரோலே பண்ண முடியலை…” என்று அலுத்துக் கொண்டே விவரம் சொன்னான் நரேன்.

“ஆமாடா ஒரு வழி ஆக்கிட்டானுங்க… நீயும் வந்திருந்தா நல்லா இருந்திருக்கும்…” என்றான் மகேஷ் என்பவன்.

“டேய்! அவன் புது மாப்பிள்ளைடா மகேஷ். நீ இப்போ வர வேண்டாம் ராகவ். இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்தா போதும்…” என்றான் யுவன் என்பவன்.

“இல்லைடா யுவா இந்த வீக் வரலாம்னு இருக்கேன். புது மாப்பிள்ளையா இருந்தா என்னடா? ஏற்கனவே இரண்டு, மூணு வாரம் வராம எனக்கு உடம்பெல்லம் மசமசன்னு இருக்கு. நானும் உங்க கூட வந்து ஒரு ஆட்டம் போட்டா தான் அடுத்த வாரத்துக்கான எனர்ஜியே கிடைக்கும்…” என்றவன் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஸ்பூனை வைத்து விட்டு கையைப் பரபரவெனத் தேய்த்து விட்டுக் கொண்டான்.

அவனின் பரபரப்பை கண்டு ஓரக் கண்ணால் கணவனை முறைத்தாள் பூர்ணா.

தனக்குள்ளேயே ஏதோ முனங்கியவள் பற்களை நறநறவென வெளியே சத்தம் வராமல் கடித்தாள்.

“டேய்… நம்ம புரோகிராம் பத்தி எல்லாம் அப்புறம் பேசலாம்டா… சிஸ்டர் லோன்லியா ஃபீல் பண்ண போறாங்க. நீ அவங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணு ராகவ். நாங்க கிளம்புறோம்…” என்ற ராஜேஷ் தன் உணவை முடித்துக் கொண்டு நண்பர்களையும் அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டான்.

அவர்கள் சென்றதும் தான் மனைவியின் புறம் நன்றாகத் திரும்பி அமர்ந்தான் ராகவ்.

“அப்புறம் சம்மூ நாங்க எதைப் பத்தி பேசினோம்னு புரிஞ்சுதா?” என்று கேட்டான்.

“புரிஞ்சது… புரிஞ்சது… நல்லா புரிஞ்சது…” என்று முனங்கினாள்.

“ஓ! சூப்பர்! அப்போ நான் விளக்க வேண்டிய அவசியம் இல்லை. நானும் இந்த வாரம் பசங்க கூடச் சேர்ந்துக்கப் போறேன் சம்மூ… உனக்கு எதுவும் வீக் எண்ட் புரோகிராம் இருந்தா அதை அதுக்கு அடுத்த வாரத்துக்கு மாத்திக்கோ. அப்படியே நீயும்…” என்று மேலும் அவன் ஏதோ சொல்ல வர,

“லன்ச்சுக்கு அப்புறம் ஒரு ட்ரைனிங் இருக்கு. நான் அதுக்கு உடனே போகணும்…” என்று அவனின் பேச்சை இடைவெட்டி விட்டு வேகமாக டிபன்பாக்ஸை மூடி வைத்து விட்டு எழுந்தாள்.

“அடியே பொண்டாட்டி! நாங்க பேசுனதே அரையும், குறையுமா… அதையும் புரிஞ்சதுனு சொல்லிட்டு போற… உன் முகம் போன போக்கே நாங்க பேசியதை நீ எந்த மீனிங்ல புரிஞ்சுக்கிட்டனு காட்டுதுடி. இதுக்கு நான் உன்னை உட்கார வைச்சு பேசுறதை விட என் அதிரடி தான் உனக்குச் சரியா வரும்…” என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான்.

“எப்படியோ இவ கோபத்துக்கான காரணம் ஓரளவு பிடிப்பட்டுருச்சு…” என்று நினைத்தவன் உற்சாகமாக விசிலடித்துக் கொண்டே வேலையைத் தொடர சென்றான்.

கணவன் தனக்கு அதிர்ச்சி வைத்தியம் தர காத்திருக்கிறான் என்பதை அறியாமல் பூர்ணா தன் வழக்கமான வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவன் அவளுக்கு அதிர்ச்சி தர காத்திருக்க, அதே நேரம் அவனின் மனைவியும் அவனுக்கு ஒரு அதிர்ச்சி வைத்திருக்கிறாள் என்பதை அப்போது அறியாமல் போனான் ராகவ்.

அன்று மாலை வேலை முடிய தாமதம் ஆனதால் மனைவியை முன்னால் கிளம்பி போகச் சொல்லியிருந்தான் ராகவ்.

இரவு வீட்டிற்கு வந்தவன் தனக்குக் கதவை திறந்து விட்டவளை பார்த்து “ஹலோ யார் நீங்க? என் வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க? என் பொண்டாட்டி எங்க?” என்று அதிர்ந்து கேள்விகளாக அடுக்கிக் கொண்டிருந்தான் ராகவ்.