யுகன்யா – 9

அத்தியாயம் – 9

“அடுத்து நாம என்ன பண்ண போறோம் யுகா? இறந்து போன இதயா போட்டிருந்த ட்ரெஸ் கிழிந்திருக்கு. அதில் ரத்தக்கறை வேற. ஆனால் அவள் இறப்பு தற்கொலை என்று ரிப்போர்ட் சொல்லுது. அன்னைக்கு அவளுக்கு மென்சஸ் டேட்டும் இல்லை. அதோட அவள் உடம்பில் எந்த அடியும் பட்டதற்கான காயம் இல்லை என்பது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்.

அப்படியிருக்க, அந்த ரத்தக்கறை எப்படி? ஒருவேளை அவள் இறந்து போறதுக்குச் சில நாட்கள் முன்னாடி வேற எதுவும் அடிபட்டு அந்தத் துணி அங்கே கிடந்திருக்குமோ?” என்று குழப்பமாகக் கேட்டாள் அனன்யா.

“அப்படி இருந்தால் இறந்து போன அன்னைக்குக் கிழிந்த ட்ரெஸையா போட்டிருப்பாள்?” என்று கவியுகன் கேட்க,

“இருக்காது தான். ஆனால் இப்ப நாம ஒரு முடிவுக்கு வர முடியாம குழப்பமா இருக்கே யுகா?” என்றவளின் நெற்றி குழப்பத்துடன் சுருங்கி விரிந்தது.

இரவு பத்து மணி. கவியுகன், அனன்யா இருவரும் அவரவர் அறையில் இருந்த பால்கனியில் வந்து அமர்ந்திருந்தனர்.

தங்கள் பேச்சு மற்றவர்களுக்குக் கேட்டு விடக்கூடாது என்று குரலை மென்மையாக்கியிருந்தனர்.

“நான் இப்ப சொல்வதை எல்லாம் நோட் செய்துட்டே வா அனன்யா…” என்று கவியுகன் சொன்னதும், தன் கைபேசி நோட்பேட்டில் குறித்துக் கொள்ள ஆயத்தமானாள்.

“இதுவரை நாம இந்தக் கேஸை சூசைடாக மட்டும் தான் பார்த்தோம். இனி மர்டர் கேஸா நினைத்து டீல் பண்ண போறோம். இது தான் நாம எடுத்து வைத்திருக்கிற முதல் ஸ்டெப். ரவி சந்தேக லிஸ்டில் இருப்பது மதியரசனும், நவநீதனும் மட்டும் தான். நவநீதன் இதயாவை கல்யாணம் செய்ய நினைத்திருக்கான். அதோட அவளை டீஸ் செய்திருக்கான். மதியரசன் நில விஷயமா ரவி மேல கோபமா இருந்திருக்கான்…” என்று கவியுகன் சொல்ல,

“நவநீதன் மேல தான் எனக்கு டவுட்டா இருக்கு யுகா. தனக்குக் கிடைக்காத இதயா, வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று அவளைக் கொன்றிருக்கச் சான்ஸ் இருக்கே?” என்று கேட்டாள் அனன்யா.

“அதே சந்தேகம் எனக்கும் இருக்கு. இதயா இறந்த அன்னைக்கு அவன் திருச்சி போயிருந்தான் என்று ரவி சொன்னான். ஆனால் அது உண்மையா?”

“அதை நாம கொஞ்சம் துருவி பார்க்கலாமே யுகா?”

“அந்த வேலையை நான் ஏற்கெனவே ஆரம்பிச்சுட்டேன் அனன்யா…” அமைதியாகச் சொன்னான் கவியுகன்.

“ஆரம்பிச்சுட்டீங்களா? எப்போ? என்கிட்ட எதுவும் நீங்க சொல்லலையே?” என்று அனன்யா கேட்க,

“தியாகுவிற்கு அந்த வேலையைக் கொடுத்திருக்கேன்…” என்றான்.

“தியாகு இங்கே வந்திருக்காரா?”

“ஆமாம். திருச்சியில் இருக்கான்…”

“ஓ, இந்தக் கேஸுக்கு நாம மட்டும் போதாதா? தியாகு எதுக்கு?”

“தியாகு ஒரு பர்சனல் வேலையா திருச்சி வரை வந்திருக்கான். அதான் அப்படியே நம்ம வேலையையும் பார்க்க சொல்லியிருக்கேன்…” என்றான்.

“ஓகே, தியாகு நவநீதனை பற்றி விசாரிக்கிறார். நான் அடுத்து என்ன பண்ணனும் யுகா?”

“நீ நான் முதலில் கொடுத்த வேலையைச் செய். நவநீதன், மதியரசனை விசாரிக்கிற மும்முரத்தில் நம்ம பார்வையிலிருந்து உதயாவை விட்டுவிட முடியாது…” என்றான்.

“உதயாவை பார்த்தால் தப்பு செய்யும் ஆள் போலத் தெரியலை யுகா. நான் பழகி பார்த்தவரை அவள் ஸ்வீட் பெர்ஷன்…” என்று அனன்யா சொல்ல,

“தப்பு பண்ற அனன்யா…” என்று கடுமையுடன் கண்டித்தான் கவியுகன்.

“யுகா?” அவள் ஒரு நொடி அதிர்ந்து விட,

“நம்ம சந்தேக லிஸ்ட்டில் இருக்கும் ஆளை நாம ஃபிரண்ட்லி பார்வையில் பார்க்க கூடாது. அப்படிப் பார்க்க ஆரம்பித்தால், அவங்ககிட்ட இருக்கும் நெகட்டிவை நாம அப்செர்வ் பண்ண முடியாது. நாம அவங்ககிட்ட பழகும் முறை ஃபிரண்ட் போலத் தெரியணுமே தவிர, உண்மையான ஃபிரண்டா மாறிட கூடாது…” என்று பாடம் எடுத்தான்.

“ம்ம், புரியுது யுகா…” என்று முனங்கினாள்.

பால்கனி சுற்றுச் சுவரில் சாய்ந்து அவன் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்த அனன்யாவை, இருவருக்கும் நடுவே இருந்த சுவரில் சாய்ந்து நின்று கூர்ந்து பார்த்தான் கவியுகன்.

அவன் பார்வை தன் மேல் உள்ளது என்பதை உணர்ந்தாலும், எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவளின் முகம் சூடானது.

‘என்ன இது, யுகா புதுசா என்னை இப்படிப் பார்க்கிறார்? ஹையோ, வளவளன்னு பேசுற எனக்கு இப்போ பேச்சே வர மாட்டிங்குதே! இப்ப நான் என்ன பண்ணுவேன்? பேசு அனு… பேசு! என்னை ஏன் இப்படிப் பார்க்கிறீங்கன்னு கேளு…’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு அவள் அவன் புறம் திரும்பிய அதே நொடியில்,

அவளைத் தான் விடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று நொடியில் உணர்ந்த கவியுகன் தலையை உலுக்கிக் கொண்டு, பார்வையை இருட்டின் பக்கம் திருப்பிக் கொண்டான்.

அவனின் பாராமுகத்தில் அவனிடம் கேட்க வந்த வார்த்தைகள் அப்படியே அவளின் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டன.

“ம்க்கும்… அப்புறம்…” என்ற திணறலுடன் அனன்யா பேச்சை ஆரம்பித்த போது, வீட்டின் பக்கமிருந்து ஏதோ விழுந்தது போல் சத்தம் கேட்க, “என்ன சத்தம் அது?” என்ற கவியுகன் அறைக்குள் நுழைந்து, கதவை திறந்து கொண்டு செல்ல, அனன்யாவும் வீட்டிற்குள் ஓடினாள்.

“கவின், உனக்கும் சத்தம் கேட்டதா?” என்று கேட்ட படி அவனின் அறை கதவை திறந்து வந்து கொண்டிருந்தான் ரவீந்திரன்.

“ஆமாம் ரவி. எங்கிருந்து வந்தது அந்தச் சத்தம்?” கவியுகன் கேட்க,

“மொட்டை மாடிக்கு போற வழியில் கேட்ட மாதிரி இருந்தது கவின்…” ரவீந்திரன் சொல்ல, அந்தப் பக்கம் ஓடினான்.

இப்போது மொட்டை மாடியில் யாரோ ஓடுவது போல் சத்தம் கேட்க, கவியுகன் விரைந்து படியில் ஏறினான்.

‘மொட்டை மாடி கதவு காற்றில் ஆடிக் கொண்டிருக்க, அதைத் திறந்து மொட்டை மாடிக்கு சென்று பார்க்க, அவ்விடமே இருள் சூழ்ந்திருந்தது.

அம்மாவாசை இருட்டில் சட்டென்று எதையும் சரியாகப் பார்க்க முடியாமல் கண்களைச் சிமிட்டி இருட்டிற்குக் கண்களைப் பழக்கியவன், சுற்றிலும் பார்க்க, யாரும் அங்கே இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை.

தண்ணீர் டேங்க் மட்டும் மாடியில் இருக்க, அதையும் சுற்றி வந்து பார்த்தான்.

“யாரும் இல்லையே யுகா?” அவன் பின்னால் ஓடி வந்த அனன்யா சொல்ல, “சுவர் பக்கம் எட்டிப் பார்…” என்று சொன்னதோடு நில்லாமல் தானும் பார்க்க ஆரம்பித்தான்.

அவனுக்கு எதிர்பக்கமாக அனன்யா பார்க்க, இன்னொரு பக்கம் ரவீந்திரன் பார்த்தான்.

“கவின், வீட்டு பின்னாடி யாரோ ஓடுவது போல் இருக்கு…” ரவீந்திரன் பதட்டமாகக் குரல் கொடுக்க, அந்தப் பக்கம் வந்து பார்த்த கவியுகன், “எந்தப் பக்கம் போறான்னு பார்த்துட்டே இரு…” என்றவன், அடுத்த நொடி கீழே இறங்கி ஓடினான்.

வீட்டின் பின் பக்கம் சென்று சிறிது நேரம் தேடியவனுக்குக் கண்களுக்கு யாரும் சிக்கவில்லை.

அவன் தேடலை பார்த்து கேட்டின் முன் நின்றிருந்த மணிமாறன் அவன் பின்னால் வந்து, “யாரை தேடுறீங்க சார்?” என்று கேட்டான்.

“நீ இவ்வளவு நேரம் எங்கே இருந்த?” அவன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் கேட்டான்.

“கேட் பக்கத்தில் தான் இருந்தேன் சார். நீங்க ஓடி வந்ததைப் பார்த்து என்ன என்று கேட்க வந்தேன்…” என்றான்.

“டைசன் எங்கே?”

“அதைக் கட்டிப் போட்டுருக்கேன்…”

“இவ்வளவு நேரம் ஆச்சு. இன்னும் ஏன் அதை அவிழ்த்து விடாமல் இருக்க?”

“இப்பதான் அவிழ்த்து விடலாம் என்று இருந்தேன். நீங்க யாரை சார் இந்த இருட்டில் தேடுறீங்க?” அவனிடம் பேசிக் கொண்டிருந்தாலும் இன்னும் வீட்டின் பின் இருந்த தோப்பை கைபேசி ஒளியில் சுற்றிக் கொண்டிருந்தவனைக் கேட்டான்.

தோப்பின் முடிவு வரை யாரும் கிடைக்காமல் போக, இந்த இருட்டில் ஒளிந்து இருந்தாலும் தேடுவது கடினமே என்பதை உணர்ந்து காலை உதைத்துக் கொண்டான் கவியுகன்.

“என்னாச்சு சார்?” மணிமாறன் விடாமல் கேட்க,

“இந்தப் பக்கம்…” என்று ஆரம்பித்த கவியுகனின் அலைபேசி அழைக்க, எடுத்து பார்த்து, அழைத்துக் கொண்டிருந்த ரவீந்திரனிடம் பேச ஆரம்பித்தான்.

“அவன் எந்தப் பக்கம் போனான் என்றே தெரியலை கவின். நீ எதுவும் பார்த்தியா?” ரவீந்திரன் கேட்க,

“இல்லை ரவி. கண்டுபிடிக்க முடியலை. நான் அங்கே வர்றேன்…” என்று அழைப்பைத் துண்டித்தவன், மணிமாறன் புறம் திரும்பினான்.

“என்ன மணி? என்ன கேட்க வந்த?” என்று நிதானமாகக் கேட்டான்.

“நீங்க யாரையோ தேடுவது போல் இருந்தது. அதான் யாரை என்று கேட்டேன் சார்…” என்ற மணிமாறன் வெகு இலகுவாக நின்றிருந்தான்.

“இந்தப் பக்கம் உனக்கு ஏதாவது சத்தம் கேட்டதா மணி?” அவனைக் கூர்ந்து பார்த்துக் கேட்டான்.

“இல்லையே சார்? நான் இங்கே கேட் பக்கம் தானே இருந்தேன். ரொம்ப அமைதியா இருந்தது. யாரும் வரலையே? ஏன் சார்?” என்று இயல்பாகப் பதில் சொன்னவனின் கண்களைக் கூர்ந்தவன்,

“ஒன்னுமில்லை மணி. தென்னை மட்டை எதுவும் விழுந்திருக்கும் போல. பால்கனியில் இருக்கும் போது சத்தம் கேட்டது. நான் தான் என்னவோன்னு பயந்துட்டேன்…” என்று நிதானமாகச் சொல்லிக் கொண்டே கேட் பக்கம் நடந்தான்.

“என்ன சார், உங்களுக்கு மட்டும் இந்தப் பக்கம் ஏதாவது சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கு?” என்று அப்பாவியாக அவன் கேட்பது போல் இருந்தாலும், அதில் இருந்த நக்கலை கவியுகன் உணரவே செய்தான்.

அவன் பேச்சை கண்டு கொள்ளாதது போல், டைசன் அருகில் சென்று அதனை அவிழ்த்து விட்டவன், “நாளையில் இருந்து இனி சீக்கிரம் டைசனை அவிழ்த்து விடு!” என்று சொல்லிக் கொண்டே டைசன் தலையைத் தடவிக் கொடுத்தான்.

அதுவும் அவன் மீது ஆர்வமாகத் தாவி நின்று அவன் முகத்தை நுகர முயன்றது.

“கூல்! சாப்பிட்டியா டைசன்?” என்று கேட்க, அது, ‘வவ் வவ்’ என்றது.

“சரி, சரி… நீ உன் வேலையை சரியா செய்! குட் நைட்!” அதன் தலையைத் தடவி விட்டு வீட்டிற்குள் செல்ல நடந்து சென்றவன், கதவு அருகில் சென்றதும் தற்செயலாகத் திரும்புவது போல், மணிமாறனை திரும்பி பார்த்தான்.

அவனை அதுவரை முறைப்பது போல் பார்த்துக் கொண்டிருந்த மணிமாறன், சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டான்.

அவனை யோசனையுடன் பார்த்து விட்டு உள்ளே சென்றான் கவியுகன்.

“என்னாச்சு யுகா?” கீழே இறங்கி வந்திருந்த அனன்யா கேட்க,

வீட்டை சுற்றி பார்த்தவன், மேகலா எழுந்து வராததை உறுதி செய்து கொண்டு, “ஷ்ஷ்! இங்கே எதுவும் பேச வேண்டாம். மேலே போ…” என்றவன் அவளுடன் மாடியேறினான்.

“வந்தது யாரா இருக்கும் கவின்?” என்று ரவீந்திரன் பதட்டத்துடன் கேட்க,

“கண்டு பிடிப்போம் ரவி. அதுக்கு முன்னாடி இந்த மணிமாறன் யார் என்று சொல் ரவி…” என்றான் கவியுகன்.

“இந்த வீட்டு வாட்ச்மேனோட அக்கா மகன். அவனைப் பற்றி ஏன் கேட்குற கவின்?”

“அது தவிர அவனைப் பற்றி உனக்கு ஏதாவது விவரம் தெரியுமா?”

“மணிமாறனை வாட்ச்மேன் தணிகாச்சலம் தான் என் அக்கா மகன் நைட் மட்டும் அவனை வேலைக்குச் சேர்த்துக்கோங்க என்று சொல்லி கூப்பிட்டு வந்தான் கவின். அவன் வீடு பக்கத்து ஊரில் இருப்பதாகவும், படிப்பு வராம, வேலை இல்லாம சுத்திட்டு இருக்கான். அதான் இங்கே கூட்டிட்டு வந்தாகச் சொன்னான். நானும் தணிகாச்சலத்துக்குச் சொந்தம் தானே என்று வேற எதுவும் கேட்காமல் வேலைக்குச் சேர்த்தேன். ஏன் கவின், என்னாச்சு?” என்று ரவீந்திரன் கேட்க,

“நீ இன்னும் அவனைப் பற்றி நல்லா விசாரித்து வேலையில் சேர்த்திருக்கணும் ரவி…” என்ற கவியுகன் யோசனையுடன் தாடையைத் தடவினான்.

“ஏன் கவின், அவன் எதுவும் தப்பு செய்தானா?”

“யாரோ மாடி வழியாக வீட்டுக்குள் வந்து போயிருக்கான். ஆனால் அவன் வந்ததும் தெரியலை. தப்பி ஓடியதும் மணிமாறனுக்குத் தெரியலை. தோட்டம் வழியா ஒருத்தன் ஓடிய சத்தம் கூடவா அவனுக்குக் கேட்காமல் இருக்கும்? வழக்கமா ஒன்பது மணிக்கு டைசனை அவிழ்த்து விடச் சொல்லிருக்க என்று நீ ஒரு முறை சொன்ன. ஆனால் இன்னைக்கு இவ்வளவு நேரம் ஆன பிறகும் அவன் டைசனை அவிழ்த்து விடாமல் இருக்கான். அவன் பார்வையும் ஏதோ அவன் சரியில்லைன்னு சொல்லுது…” என்றான்.

“நான் இப்பவே போய் அவன்கிட்ட என்ன என்று கேட்கிறேன் கவின்…” என்று ரவீந்திரன் கோபமாகக் கீழே இறங்க போக, அவன் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினான் கவியுகன்.

“அவசரப்படாதே! அவனிடம் நேரா எதுவும் கேட்காதே! அவனை நான் பார்த்துக்கிறேன். இப்போ முதலில் வீட்டில் எல்லாப் பொருளும் இருக்கா பார். வந்தது திருடனா? இல்லை வேற யாருமா என்று நமக்கு முதலில் தெரிந்தாகணும்…” என்றான்.

“இதோ பார்க்கிறேன்…” என்று ரவீந்திரன் செல்ல போக,

“ஆமா, புவன் எங்கே? இவ்வளவு சத்தத்திற்கும் அவர் வெளியே வரவில்லையே?” என்று அனன்யா கேட்க,

“அவன் சென்னை போயிருக்கான் அனன்யா…”

“என்ன திடீர்னு? எப்போ போனார்?”

“இது வழக்கமா போறது தான் அனன்யா. மில் விஷயமா மாதம் ஒரு முறை நான் தான் சென்னை போவேன். இந்த முறை அவனை அனுப்பி வச்சுருக்கேன். அவன் ஈவ்னிங் கிளம்பும் போது நீங்க உதயா வீட்டிற்குப் போயிருந்ததால் உங்ககிட்ட சொல்லிட்டு போக முடியலை. நாளை மறுநாள் வந்திருவான்…” என்ற ரவீந்திரன் எதுவும் களவு போனதா என்று பார்க்க சென்றான்.

அவனுக்கு உதவியாகக் கவியுகனும், அனன்யாவும் சென்றனர்.

வீடு முழுவதும் சோதனை செய்தும், ஒன்றும் திருட்டு போகவில்லை என்று தெரிய வர, வந்தவன் எதற்கு வந்திருப்பான் என்று புரியாமல் மூவரும் குழம்பி போயினர்.

இரவு முழுவதும் சரியாக உறங்காமல் அந்த இரவை கடந்து, விடிந்ததும் முதல் வேலையாக மாடிக்கு சென்று பார்த்தான் கவியுகன்.

மாடி முழுவதும் சுற்றி வர, எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இரவு ரவீந்திரன் சுட்டிக் காட்டிய சுவர் பக்கமாகக் குனிந்து பார்க்க, அந்தப் பக்கம் கீழே வரை பைப் லைன் சென்றது.

அதன் வழியாக இறங்கி தப்பிச் சென்றிருப்பான் என்ற முடிவுக்கு வந்து அந்தப் பைப்பை பார்த்துக் கொண்டிருந்த போது தான், பைப் கம்பியில் ஏதோ துணி போல் சடசடத்துக் கொண்டிருந்ததைக் கண்டான்.

நீல நிறத்தில் சின்னத் துணி எதில் இருந்தோ கிழிந்து மாட்டிக் கொண்டிருந்தது.

சற்று குனிந்து கையை நீட்டி அந்தக் கம்பியில் சிக்கியிருந்த துணியை எடுத்தான் கவியுகன்.

அந்தத் துணியை ஆராய்ச்சியாகப் பார்க்க, துணியின் ஒரு பக்கம் வெறுமையாக இருக்க, இன்னொரு பக்கம் N என்ற ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருந்தது.

“N?” என்று வாய் விட்டு சொல்லிப் பார்த்துக் கொண்டவன் அருகில் வந்தாள் அனன்யா.

“என்ன அது யுகா?”

“நேத்து வந்தவன் பைப் வழியாக இறங்கும் போது இந்தத் துணி மாட்டி கிழிந்திருக்கும் போல?” என்று சொல்லி அவள் கையில் அந்தத் துணியைக் கொடுத்தான்.

“N என்று எழுதி இருக்கே? யாரோடதாக இருக்கும் யுகா?”

கவியுகன் தோளை குலுக்கிக் கொண்டான்.

“நவநீதனாக இருக்குமோ யுகா?” யூகித்துக் கேட்டாள் அனன்யா.

“அதே சந்தேகம் எனக்கும் இருக்கு. ஆனால் அவன் எதுக்கு இங்கே வரணும்?” என்று நெற்றி சுருக்கி அவன் கேட்டுக் கொண்டிருந்த போதே, அவனின் அலைபேசி அழைத்தது.

“ஹலோ தியாகு…” அழைப்பை ஏற்றுக் கேட்டான்.

“நீங்க விசாரிக்கச் சொன்னதை விசாரித்தேன் சார். நீங்க சொன்ன நவநீதன் இதயா இறந்த அன்று திருச்சி வரலை…” என்றான் தியாகு.

“அவன் சொன்ன கல்யாணம் நடந்தது உண்மையா?”

“அந்தக் கல்யாணம் உண்மை தான் சார். ஆனால் அந்தக் கல்யாணத்துக்குப் போயிருந்ததாக சொன்ன நவநீதன் மட்டும் அங்கே வரலை…”

“உறுதியான தகவல் தானே?”

“ஹண்ட்ரெட் ப்ரசென்ட் சார்…” என்றான் உறுதியாக.

“ஓகே தியாகு. தேங்க்யூ. நான் அப்புறம் பேசுறேன்…” என்ற கவியுகன், அனன்யா கையில் இருந்த N என்ற எழுத்துப் பொறிக்கப் பட்ட துணியைப் பார்த்துக் கொண்டே, “N ஃபார் நவநீதன்?” என்று வாய் விட்டு சொல்லிப் பார்த்துக் கொண்டான்.