யுகன்யா – 8

அத்தியாயம் – 8

“வாப்பா ரவி, எப்படி இருக்க?” என்று வரவேற்றார் இதயாவின் அன்னை காஞ்சனா.

“இருக்கேன் அத்தை. நீங்க எப்படி இருக்கீங்க?” பதிலுக்கு விசாரித்தான் ரவீந்திரன்.

“ஏதோ இருக்கணுமே என்று இருக்கேன் பா. இன்னொரு பொம்பளபிள்ளை வச்சுருக்கேனே… அவளுக்காகவாவது என் உசுரை பிடிச்சு வச்சுக்கணுமே…” என்று விரக்தியாகச் சொன்னவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் அமைதியாகி போனான்.

“அம்மா, வீட்டுக்கு வந்தவங்க முன்னாடி என்ன இது? அத்தான் ஃபிரண்ட்ஸ் வந்திருக்காங்க பாருங்க…” உதயா அன்னையின் மனதை மாற்ற மென்மையாகக் கடிந்து கொண்டாள்.

“வாப்பா, வாமா அனன்யா…” என்று ரவீந்திரனுடன் வந்திருந்த கவியுகனையும், அனன்யாவையும் வரவேற்றார்.

“ரவி, இதயாவை பற்றிச் சொன்னான் ஆன்ட்டி. ஸாரி, இப்படி நடந்திருக்க வேண்டாம்…” வருத்தம் தெரிவித்தான் கவியுகன்.

“விதிப்பா. வேற என்ன சொல்றது?” என்ற காஞ்சனா உடனே கலங்கினார்.

“அம்மா…” என்று அன்னையின் தோளை ஆறுதலுடன் அழுத்தினாள் உதயா.

கண்களைத் துடைத்துக் கொண்டவர், “உள்ளே வந்து உட்காருங்க. உங்களுக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்…” என்று அவர்களைச் சோஃபாவில் அமர வைத்து விட்டு உள்ளே சென்றார்.

“மாமா எங்கே உதயா?” ரவீந்திரன் விசாரிக்க,

“அப்பா தஞ்சாவூர் வரை போயிருக்காங்க அத்தான். ஈவ்னிங் தான் வருவாங்க…” என்றாள்.

ரவீந்திரனுக்கே தெரியும் தான். அவனின் மாமா வீட்டில் இருந்தால், இதயா கேஸ் விஷயமாக ஆராய வேண்டும் என்று சொன்ன கவியுகனின் வேலை நடக்காது என்பதால், அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று தெரிந்தே இன்று நண்பனை அழைத்து வந்திருந்தான்.

சிறிது நேர நலவிசாரிப்பும், உபசரிப்புமாக நேரம் சென்றது.

“அத்தை எனக்கு இதயா ரூமை பார்க்கணும் போல இருக்கு. பார்க்கலாமா?” என்று அனுமதி கேட்டான் ரவீந்திரன்.

“அங்கே எதுக்குபா ரவி? எனக்கு இப்ப எல்லாம் அவள் ரூமை பார்த்தால் தாங்க முடியலை…” என்றார்.

“என் இதயா கூடத்தான் வாழ முடியலை. அவள் ரூமிலாவது கொஞ்ச நேரம் இருக்கேனே?” என்று ஏக்கமாகக் கேட்டவனுக்குக் காஞ்சனாவால் மறுப்பு சொல்ல முடியவில்லை.

“சரிப்பா, போய்ப் பார்!” என்றார்.

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு கவின். நான் இப்ப வந்துடுறேன்…”

தன் கூடவே அவனையும் கூட்டி சென்றால் சந்தேகம் வரும் என்று நினைத்தவன் தான் மட்டும் எழுந்து சென்றான்.

ரவீந்திரன் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் ‘தட்’ என்று ஏதோ சப்தம் கேட்டது.

“என்னாச்சு?” என்று வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனைவரும் பதட்டத்துடன் சென்று பார்க்க, இதயாவின் ஒரு புகைப்படத்தை எடுத்து நெஞ்சோடு புதைத்துக் கொண்டு, கட்டிலில் தளர்ந்து அமர்ந்திருந்தான் ரவீந்திரன்.

“என்னாச்சு ரவி?” கவியுகன் நண்பன் அருகில் சென்று விசாரிக்க,

“என்னால முடியலை கவின். ஏன் இதயா என்னை விட்டுப் போனாள்? என் கூட வாழணும் என்று எவ்வளவு ஆசையா என்கிட்ட பேசுவாள் தெரியுமா? ஆனா அப்படிப்பட்டவள் கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் தற்கொலை பண்ணிக்கிட்டாள் என்று சொல்றாங்க. அதை என்னால் தாங்கவே முடியலை…” என்றான்.

“எனக்கும் அது தான் தம்பி புரியலை. ஆனா, இப்ப புலம்பி என்ன ஆகப்போகுது? போன என் பொண்ணு திரும்பியா வரப் போறாள்?” என்ற காஞ்சனா உடைந்து அழ ஆரம்பித்தார்.

அன்னையும், அத்தானும் உடைந்து போனதை பார்த்து உதயாவும் இப்போது கலங்கிப் போனாள்.

அவர்களுக்கு ஆதரவாக அனன்யா நிற்க, அவளைப் பார்த்துச் சமிக்ஞை செய்தான் கவியுகன்.

புரிந்து கொண்டு இமைகளைச் சிமிட்டியவள், “ஆன்ட்டி, கவலைப்படாதீங்க. இப்படி வந்து உட்காருங்க…” என்று ஆறுதல் சொல்லி இருவரையும் அழைத்துக் கொண்டு சோஃபாவில் சென்று அமர வைத்தாள்.

அவர்கள் அங்கே இருந்து செல்லவும், “நான் என் வேலையை ஆரம்பிக்கிறேன் ரவி…” என்ற கவியுகன் நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்து விட்டு அங்கிருந்த மேஜையையும், அலமாரியையும் ஆராய ஆரம்பித்தான்.

எப்போது வேண்டுமானாலும் உதயாவும், காஞ்சனாவும் அங்கே வரும் வாய்ப்பு இருந்ததால் அவனின் தேடுதல் வேகவேகமாக நடைபெற்றது.

மேஜையில் துழாவியவனுக்குச் சொல்லும் படியாக ஒன்றும் கிடைக்கவில்லை.

பின் அலமாரியில் ஆராய்ச்சி செய்தான். துணிமணிகள், இதர பெண்களின் பொருட்கள் தவிர எதுவுமில்லை.

அடுத்து ட்ரெஸிங் டேபிளில் தேடிப் பார்த்தான்.

வழக்கமான அலங்காரப் பொருட்கள் தவிர ஒரு பேப்பர் மடித்து உள்ளே இருந்தது.

அதை எடுத்துப் பார்த்தான். ஏதோ மருத்துச் சீட் அது.

ஒரு மருந்தின் பெயர் எழுதி அதைக் காலையும், இரவும் சாப்பிட சொல்லி எழுதி இருந்தது.

மருத்துவமனை பெயரை பார்த்தான். தஞ்சாவூரிலிருந்த ஒரு தனியார் கிளினிக் பெயர் இருந்தது.

மருத்துவர் பெயர் ரஞ்சன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மருத்துவம் பார்த்த தேதி இதயாவின் இறப்பிற்கு இரண்டு நாட்களுக்கு முன் என்று இருக்கக் கவியுகனின் முகம் யோசனையைப் பிரதிபலித்தது.

அப்போது யாரோ அங்கே வருவது போலிருக்க, மருத்துவச் சீட்டை சட்டை பைக்குள் வைத்து விட்டு, ரவியின் அருகில் வந்து நின்று கொண்டான்.

“அத்தான், சாப்பிட வர்றீங்களா?” என்று அங்கே வந்த உதயா கேட்க,

ரவீந்திரன் நண்பனை கேள்வியாகப் பார்த்தான்.

கவியுகன் போகலாம் என்பது போல் தலையை அசைக்கவும், இருவரும் வெளியே சென்றனர்.

“வாஷ்பேஸனில் கையைக் கழுவிட்டு வாங்கப்பா, சாப்பிடலாம்…” என்றார் காஞ்சனா.

அவர் முகம் அழுததில் வீங்கியது போல் இருந்தது. கண்களில் இன்னும் கலக்கம் இருந்தாலும் வந்திருந்தவர்களுக்காக அதைக் காட்டிக் கொள்ளாமல் அவர்களை உபசரிக்க ஆரம்பித்தார் காஞ்சனா.

“நாங்க பின்கட்டில் போய்க் கழுவிட்டு வர்றோம் அத்தை…” என்ற ரவி, கவியுகனையும் அழைத்துக் கொண்டு வீட்டின் பின் பக்கம் சென்றான்.

அந்த இடத்தை எல்லாம் அணு அணுவாக ஆராய்ந்து கொண்டே உடன் நடந்தான் கவியுகன்.

வீட்டின் பின் பக்கம் இருந்த கிணறு வந்ததும், “இங்கே தான் என் இதயா இறந்து கிடந்தாள் கவின்…” கலங்கிய படி சுட்டிக் காட்டினான் ரவீந்திரன்.

அந்தக் கிணற்றை எட்டிப்பார்த்தான் கவியுகன்.

படி எதுவும் இல்லாமல் இருந்த கிணறு அது. தண்ணீர் இரைக்க, வாளி கயிற்றில் கட்டி இருந்தது.

விழுந்தால் மீண்டு வருவது என்பது இயலாத கிணறு. அதைச் சுற்றி சுற்றி வந்து பார்த்தான்.

இதயா இறந்து மூன்று வாரங்களுக்கு மேல் கடந்து விட்டதால் தடயம் எதுவும் கிடைக்காது என்று புரிந்தாலும் ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாஷையில் அவனின் பார்வை கூர்மையுடன் சுழன்று வந்தது.

அப்போது கிணற்றை ஒட்டி தரையில் மண்ணில் புதைந்து ஏதோ துணி போல் தெரிய அதைக் குனிந்து பார்த்தான்.

வெள்ளை துணி மண்ணில் புதைந்து இருந்ததால் அழுக்கேறி போய் இருந்தது.

“என்ன பார்க்கிற கவின்?” ரவீந்திரன் விசாரிக்க,

“இந்தத் துணி என்னன்னு பார்க்கிறேன்…” என்று சுட்டிக்காட்டினான்.

“ஏதாவது பழைய துணியா இருக்கும் கவின்…” என்றான்.

“இது ஏதோ சுடிதார் துணி போல இருக்கு. இதயா இறந்த அன்னைக்கு என்ன கலர் ட்ரெஸ் போட்டுருந்தாங்க ரவி?”

“ம்ம்…” என்று ஒரு நொடி யோசித்தவன், “ஒயிட் கலர் சுடிதார் கவின்…” என்றவன், “அப்போ இது இதயா போட்டிருந்த துணியா?” என்று அதிர்ந்து கேட்டான்.

“இருக்கலாம்…” என்ற கவின் ஒரு குச்சியால் கிளறி அந்தத் துணியை எடுத்தவன் கண்கள் கூர்மை பெற்றன.

மண்ணில் புதைந்திருந்த துணியின் ஒரு ஓரத்தில் சிவப்பு நிறம் இருந்தது.

“ரத்தமா இது?” என்று ஆராய்ச்சியுடன் பார்த்தான்.

“இது என்ன கவின், ரத்தமா?” அதிர்ந்து கேட்டான் ரவீந்திரன்.

“அப்படித்தான் தெரியுது. நாம இங்கே வச்சு எதுவும் பேச வேண்டாம் ரவி. எனக்கு இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் தெரியணும். இங்கே வீட்டில் யாருக்காவது சமீபத்தில் அடிபட்டதா என்று உங்க அத்தைக்கிட்ட கேளு.

இதயா இறந்து போறதுக்கு இரண்டு நாளுக்கு முன்னாடி அவங்களுக்கு எதுவும் உடம்பு சரியில்லாமல் இருந்ததா? இதை விசாரிச்சு சொல்லு…” என்ற கவியுகன் அந்தத் துணியைப் பத்திரமாகப் பையில் வைத்துக் கொண்டு, கையைக் கழுவிவிட்டு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்.

“உன் இரண்டாவது கேள்விக்கு எனக்குப் பதில் தெரியும் கவின். வீட்டில் போய்ச் சொல்றேன்…” என்று மெதுவான குரலில் சொல்லிக் கொண்டே அவனுடன் நடந்தான்.

“என்னப்பா இவ்வளவு நேரம்?” காஞ்சனா விசாரிக்க,

“கவினுக்கு ஒரு போன் வந்தது அத்தை. அவன் பேசிட்டு வர்ற வரை கூட இருந்தேன்…” என்று சமாளித்தான்.

காஞ்சனா வந்தவர்களுக்கு உணவு பரிமாற, “மாமா இருந்திருந்தால் கவினை அறிமுகப்படுத்தலாம்னு நினைச்சேன் அத்தை. முடியாமல் போயிடுச்சு…” என்றான்.

“அவர் இருக்கும் போது இன்னொரு நாள் வாங்க. இரண்டு பேரும் இங்கே விவசாயம் நிலம் வாங்க போறீங்களாமே? அனன்யா நேத்து சொன்னாள். நல்ல விஷயம். நிலம் வாங்க எதுவும் உதவி வேணும்னா அவர்கிட்ட கேளுங்க தம்பி…” என்றார் கவியுகனிடம்.

“கண்டிப்பா ஆன்ட்டி…” என்றான்.

“அப்புறம் அத்தை, சமீபத்தில் நம்ம வீட்டில் யாருக்காவது ரத்தக்காயம் பட்டதா?” பேச்சோடு பேச்சாக விசாரித்தான் ரவீந்திரன்.

“ரத்தக்காயமா? என்னப்பா கேட்குற?” காஞ்சனா புரியாமல் கேட்க,

“நேத்து ஒரு கெட்ட கனவு அத்தை. நம்ம வீட்டில் யாருக்கோ அடிபட்டிருப்பது போல. அதிலிருந்து மனசே சரியில்லை. வீட்டில் அம்மா, புவனனுக்குப் பிரச்சினை இல்லை. அதான் இங்கே யாருக்காவது எதுவுமோ என்று பயந்துட்டேன்…” என்றான்.

“இல்லப்பா. இங்கே யாருக்கும் அடி எதுவும் படலை. நடந்தது தான் கெட்டது என்று பார்த்தால் கனவு கூடக் கெட்டதாகத்தான் வருது. நைட் அம்மாவை திருஷ்டி சுத்தி போட்ட சொல்லுப்பா ரவி…” என்றார் காஞ்சனா.

“சரி அத்தை…” என்ற ரவி, கவியுகனை குறிப்பாகப் பார்த்து வைத்தான்.

அவர்களின் பேச்சை கவனித்தாலும் எதிலும் தலையிடாமல் அனைத்தையும் கிரகித்துக் கொண்டாள் அனன்யா.

அமைதியாக உண்டு முடித்தனர்.

வீட்டிற்குக் கிளம்பும் முன், “அத்தை நீங்க தவறா எடுத்துக்கலை என்றால் இதயா போனை நான் எடுத்துக்கட்டுமா?” அப்போது தான் அவள் அறையில் எடுத்தது போல் காட்டிக் கேட்டான் ரவீந்திரன்.

“அது எதுக்குப்பா உனக்கு?” காஞ்சனா கேட்க,

“என்னோட இதயா ஞாபகமா என்கிட்ட இருக்கட்டும் அத்தை, ப்ளீஸ்!” என்றான் கெஞ்சுதலாக.

அவனைத் தயக்கமாகப் பார்த்தவர், “உங்க மாமா என்ன சொல்வாரோ?” என்றார்.

“என் இதயா தான் என்கிட்ட இல்லை. அவள் உபயோகித்த போனாவது இருக்கட்டுமே அத்தை? நீங்க மாமாகிட்ட சொல்லுங்களேன்…” என்று அவன் சோகமாகக் கேட்க, அவரால் மறுக்க முடியவில்லை.

“சரிப்பா, நான் உன் மாமாகிட்ட சொல்லிக்கிறேன். எடுத்துட்டுப் போ…” என்றார்.

“தேங்க்ஸ் அத்தை…” என்று மனமார சொல்லிவிட்டு நண்பர்களுடன் கிளம்பினான்.

“நல்லவேளை எனக்குத் திருட்டுப் பட்டம் எதுவும் வராம பார்த்துக்கிட்டீங்க ரவி. தேங்க்ஸ்…” அந்த வீட்டை விட்டு வெளியே வந்ததும் சொன்னாள் அனன்யா.

“இதயா அவள் போனில் நான் அவள் கூடப் பேசியதை எல்லாம் ரெகார்ட் செய்து வச்சுருக்காள். அவளோட குரலை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சுருக்கு. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு நீங்க தான் காரணம். அதுக்கு நான் தாங்க உங்களுக்குத் தேங்க்ஸ் சொல்லணும்…” என்றான்.

வலியுடன் கூடிய அவனின் கனிந்த குரலை கேட்டுக் கொண்டே அமைதியாக நடந்தாள் அனன்யா.

கவியுகன் அவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் ஏதோ யோசனையுடனே வந்தான்.

அவனைப் பார்த்தவள், “என்ன யுகா அமைதியா வர்றீங்க? இதயா வீட்டில் க்ளூ எதுவும் கிடைத்ததா?” என்று கேட்டாள்.

“ம்ம், கிடைச்சிருக்கு. ஆனால் அது நமக்கு உபயோகமானதா இல்லையா என்று தான் தெரியலை…” என்றான்.

“அப்படி என்ன கிடைச்சிருக்கு யுகா?”

“வீட்டுக்குப் போனதும் சொல்றேன் அனன்யா…” என்றவன் அதன் பிறகு ஒன்றும் பேசவில்லை.

அவர்கள் நடந்தே வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, திடீரெனக் கவியுகனின் கையை அழுத்திப் பிடித்தான் ரவீந்திரன்.

“என்ன ரவி?” என்று அவன் முகம் பார்த்துக் கேட்க,

அவனோ அவனைப் பார்க்காமல் எதிரே யாரையோ பார்த்து வெறித்துக் கொண்டிருந்தான்.

அவன் பார்வையைத் தொடர்ந்து பார்த்தான்.

எதிரே ரவீந்திரனையே உறுத்துப் பார்த்த வண்ணம் வந்து கொண்டிருந்தான் ஒருவன்.

ரவீந்திரன் வயது தான் இருக்கும். ஒல்லியாக, வளர்த்தியாக அரைக்கை சட்டை, கருப்புக் கால்சட்டை அணிந்து ரவீந்திரனை விட்டு பார்வையைத் திருப்பாமல் வந்து கொண்டிருந்தான் அவன்.

அவனை யோசனையுடன் பார்த்த கவியுகன், “மதியரசன்?” என்று ரவீந்திரனிடம் கேட்டான்.

“ம்ம், அவன் தான்…” என்று முணுமுணுத்தான்.

அவர்கள் பேச்சை காதில் வாங்கிய அனன்யா, தன் கைபேசியைப் பார்ப்பது போல், மதியரசனை புகைப்படம் எடுத்துக் கொண்டாள்.

ரவீந்திரனை முறைத்துக் கொண்டே மதியரசன் அவர்களைக் கடந்து சென்று விட, “மதியரசனுக்கு உன் மேல் வேற எதுவும் பகை இருக்கா ரவி?” என்று கேட்டான் கவியுகன்.

“அந்த நிலப்பிரச்சினையைத் தவிர வேற இல்லை கவின்…”

“நம்ப முடியலை…” என்று தோளை குலுக்கினான் கவியுகன்.

“ஏன் அப்படிச் சொல்ற கவின்? எனக்குத் தெரிந்த வரை வேற இந்தப் பிரச்சினையும் இல்லையே?” யோசனையுடன் கேட்டான் ரவீந்திரன்.

“மதியரசன் கண்ணில் சாதாரணப் பகைமை தெரியலை ரவி. அதையும் தாண்டி ஏதோ இருக்கு…” என்றான்.

“அப்படியா?” நம்ப முடியாமல் கேட்டான் ரவீந்திரன்.

“அனன்யா, உன் போனை கொடு!” என்று வாங்கியவன், “இதோ பார் ரவி…” என்று அவள் மதியரசனை எடுத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான்.

அவனின் கண்களை மட்டும் பெரிது செய்து பார்க்க, அவனின் பார்வையில் வித்தியாசம் தெரிந்தது.

“அவன் பார்வையே ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கு…” என்றான் ரவீந்திரன்.

“அதே தான். சும்மா பார்க்கிற இடத்தில் எல்லாம் முறைக்கிறான்னு இவனை அப்படியே டீலில் விட்டுவிட முடியாது. அவன் கிட்ட ஏதோ தப்பு தெரியுது…” என்றான்.

“நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்தது கூட இல்லையே கவின்? அப்புறம் ஏன் அவனுக்கு இப்படி ஒரு வன்மம்? அவனுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?” உடைந்து போய்க் கேட்டவன், தலையில் கைவைத்து தளர்ந்து அமர்ந்தான்.

பேசிக் கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

ரவீந்திரன் அவன் கட்டிலில் தளர்ந்து அமர்ந்ததும், அவன் அருகில் அமர்ந்த கவியுகன் அவனின் தோளை ஆறுதலாகத் தட்டினான்.

“ரிலாக்ஸ் ரவி. உன் மேல் இருக்குற விரோதத்தால் தான் இதயாவை எதுவும் செய்திருக்கலாம் என்று இல்லை. இதயா பக்கமும் நீயே அறியாத விரோதிகள் இருந்திருக்கலாம். உன் மாமா பக்கமும் நாம விசாரிக்கணும். அவருக்கு யாரும் விரோதிகள் இருக்காங்களா? உனக்கு எதுவும் தெரியுமா?”

“இல்லை கவின். எனக்குத் தெரிந்து அப்படி யாரும் இல்லை. அவரும் என்னைப் போலத்தான், எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டார்…”

“ம்ம், ஓகே… பார்ப்போம். இப்ப நாம அடுத்து இந்தப் பிளட் யாரோடது என டெஸ்ட் செய்ய முடியுமா என்று பார்ப்போம்…” என்று கிணற்றடியில் எடுத்த துணியை எடுத்துக் காட்டினான்.

“இது என்ன துணி யுகா?” அனன்யா விசாரிக்க, அவளிடம் விவரம் தெரிவித்தான்.

“ரத்தம் உலர்ந்து போய் இருக்கே கவின். இதயாவோடதாக இருந்தால் இவ்வளவு நாளுக்குப் பிறகு இதை டெஸ்ட் பண்ண முடியுமா?” என்று கேட்டாள்.

“லேப்பில் கொடுத்துப் பார்க்கலாம் அனன்யா. நான் இன்னைக்குத் தஞ்சாவூர் போய் இதைக் கொடுத்துட்டு வர்றேன்…” என்றவன்,

இதயா அறையில் எடுத்த மெடிக்கல் ரசீதை எடுத்து, “இதைப் பற்றி உனக்குத் தெரியும் என்று சொன்ன. இதயாவுக்கு என்ன பிராப்ளம் ரவி? எதுக்கு இந்த டேப்லெட்ஸ் சாப்பிட்டாங்க?” என்று கேட்டான்.

“இதயாவுக்குக் கொஞ்ச நாளா அடிக்கடி தலைவலி வந்தது கவின். அவள் இறந்து போறதுக்கு இரண்டு நாள் முன்னாடி ரொம்பத் தலைவலி என்று டாக்டர் ரஞ்சனை பார்க்க போனாள். அவன் எழுதி கொடுத்த மருந்து சீட் தான் இது…” என்றான்.

“டாக்டர் ரஞ்சனை உனக்குத் தெரியுமா?”

“நல்லாவே தெரியும் கவின். என்னை விடச் சின்ன வயசு தான். பக்கத்து ஊர் தான். டாக்டருக்கு படிச்சுட்டு தஞ்சாவூர் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்கிறான்…”

“இந்த மருந்து சீட்டில் வேற கிளீனிக் பெயர் போட்டுருக்கே?”

“அது அவன் கிளீனிக் தான். கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல் போக மீதி நேரத்தில் இந்தக் கிளீனிக் நடத்துறான். இந்த ஊரில் நிறையப் பேர் அவன் கிளீனிக் தான் போவாங்க…”

“இதயாவுக்கு வந்தது சாதாரணத் தலைவலி தானா?”

“சாதாரணத் தலைவலி தான் கவின். பெருசா எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் டாக்டர் சொன்னாராம்…”

“ஓகே, அப்போ இந்த மருந்து சீட்டுக்கு வேலை இல்லை. இந்த ரத்தக்கறை யாரோடது என்று பார்த்துட்டு வர்றேன்…” என்றவன் தஞ்சாவூர் கிளம்பி சென்றான்.

அடுத்த நாளே பரிசோதனைக்குக் கொடுத்த ரத்தக்கறையின் ரிசல்ட் தெரிய வர, அதில் அந்த ரத்தம் இதயாவுடையது தான் என்று உறுதியானது.