யுகன்யா – 6

அத்தியாயம் – 6

கவியுகன் வீடு வந்து சேர்ந்த போது மேகலா மட்டுமே வரவேற்பறையில் அமர்ந்திருந்தார்.

“வாப்பா… காப்பிக் குடிக்கிறியா?” என்று மேகலா கேட்க,

“இல்லம்மா, வேண்டாம். ரவி எங்கமா?” என்று விசாரித்தான் கவியுகன்.

“மேல அவன் ரூம்ல தான் இருக்கான்பா. போய்ப் பாரு…” என்றதும், மேலே சென்றான்.

ரவீந்திரனின் அறை கதவை தட்ட, “யார்?” உள்ளிருந்து குரல் வந்தது.

“நான் தான் ரவி…”

“உள்ளே வா கவின்…”

உள்ளே சென்றவன் அறைக்குள் ரவியைத் தேட, அவன் அறையில் இல்லை. பால்கனியில் இருந்தான். அங்கே சென்றான்.

“போன வேலை என்னாச்சு கவின்?”

“வாங்கி, படிச்சும் பார்த்துட்டேன் ரவி. தற்கொலை என்று தான் ரிப்போர்ட் தெளிவா சொல்லுது…”

“அதுதான் எப்படி என்று தெரியலை கவின்…” என்றான் சோகமாக.

“தற்கொலையா இருக்கலாமே ரவி? நீ தான் வீணாக சந்தேகப்படுறீயோ?”

“நிச்சயமா இல்லை கவின். என் மனசு சொல்லுது. இதயா என்கிட்ட பேசிய விதத்துக்குக் கண்டிப்பா அவள் தற்கொலை எல்லாம் செய்திருக்கவே மாட்டாள்…” என்றான் அழுத்தமாக.

நண்பனை அதற்கு மேல் சங்கடப்படுத்த விடாமல் யோசிக்க ஆரம்பித்தான் கவியுகன்.

“சரி விடு ரவி. உன் சந்தேகப்படியே கேஸை கொண்டு போறேன். இப்போ எனக்கு இதயாவோட போன் வேணும். கிடைக்குமா?”

“அத்தை, மாமாகிட்ட தான் இருக்கும் கவின். தருவாங்களான்னு தான் தெரியலை. இப்போ எல்லாம் நான் இதயா சம்பந்தப்பட்டது எது கேட்டாலும் அவங்களுக்கு எங்கே நான் திரும்பப் போலீஸ், கேஸுன்னு போயிடுவேன்னு பயந்து தர மாட்டேங்குறாங்க…”

“சரி ரவி, பார்த்துக்கலாம். நான் வேற வழியில் பார்த்துக்கிறேன்…” என்று அவன் தோளை தட்டிக் கொடுத்தான் கவியுகன்.

“ஸாரி கவின். நீ கேட்டது எதுவுமே என்னால் சுலபமா கொடுக்க முடியலை. நீயே அழைந்து திரிந்து வாங்க வேண்டியதா இருக்கு…” என்று வருத்தப்பட்டான்.

“என்னோட வேலையே அதுதானே ரவி? இதுக்குப் போய்க் கவலைப்பட்டா முடியுமா? அதுசரி, அனன்யா எங்கே?”

“உதயா கூட வெளியே போயிருக்காங்க…”

“காலையில் போனவங்க இன்னுமா வரலை?” வியந்து கேட்டான்.

“தோட்டத்துப் பக்கம் சுற்றிவிட்டு அப்படியே உதயா அவள் வீட்டுக்கு மதியம் சாப்பிட கூப்பிட்டுப் போயிட்டாளாம். உதயா போன் செய்து சொன்னாள். சாப்பிட்டு திரும்பவும் வெளியே போறதாகவும் சொன்னாள்…” விபரம் தெரிவித்தான்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, “நான் உள்ளே வரலாமா?” என்ற குரல் அறை வாசலில் இருந்து கேட்டது.

“வாங்க அனன்யா…” என்றான் ரவீந்திரன்.

அவள் உள்ளே வரும் முன் ஆண்கள் இருவரும் பால்கனியிலிருந்து அறைக்குள் வந்திருந்தனர்.

“போன காரியம் என்னாச்சு யுகா?” அனன்யா அவனிடம் விசாரிக்க, விவரம் சொன்னான்.

“நீ இன்னைக்கு என்ன பண்ணின அனன்யா? ஊர் சுற்றப் போனதாகக் கேள்விப்பட்டேன். ஊர் மட்டும் தான் சுற்றினாயா?” என்று கேட்டவனை முறைப்பாகப் பார்த்தாள்.

“எப்பவும் நான் சரியா வேலை பார்க்க மாட்டேன்னு உங்களுக்கு நினைப்பு… அப்ப போங்க. நான் கொண்டு வந்ததை உங்களுக்குக் காட்ட மாட்டேன்…” என்று அலட்சியமாகச் சொன்னவள், தன் கையில் இருந்த செல்போனை தலைக்கு மேல் தூக்கி ஆட்டிய படியே அறைக்கு வெளியே செல்ல ஆரம்பித்தாள்.

“அது இதயா போன்…” இதயாவையே பார்த்தது போல் பரவசமாகச் சொன்னான் ரவீந்திரன்.

அவளின் அலட்சியத்தை அசால்டாகப் பார்த்துக் கொண்டிருந்த கவியுகன், நண்பனை கேள்வியுடன் பார்த்தான்.

அவன் ‘ஆமாம்’ என்று தலையை அசைக்கும் போதே அவனின் கண்களில் நீர் கோர்த்துவிட்டது.

“அனன்யா, போனை கொடு!” என்றழைத்தான் கவியுகன்.

அவனை அலட்சியப்படுத்தி விட்டு செல்ல ஆசை தான் என்றாலும், ரவி முன் அப்படிச் செய்ய மனதில்லாமல் மீண்டும் உள்ளே வந்து கவியுகனிடம் போனை நீட்டினாள்.

ஆனால் அவனுக்கு முன் வேகமாக அந்தப் போனை வாங்கினான் ரவீந்திரன்.

இதயாவையே மீண்டும் கைப்பற்றிக் கொண்ட பரவசம் அவனிடம்!

அந்தக் கைபேசியைப் பரிவுடன் தடவிக் கொடுத்தவனை இரக்கத்துடன் பார்த்தாள் அனன்யா.

“உங்க ஃபிரண்ட் பாவம் யுகா…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தாள்.

“ம்ம்…” என்றவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.

காதல் ஒரு மனிதனை எப்படி மாற்றிவிட்டது?

அவனாகக் கைபேசியைத் தரும்வரை அமைதியாக நின்றான் கவியுகன்.

“இவதான் கவின் என் இதயா…” என்று கைபேசியில் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்த இதயாவை காட்டினான்.

சாந்தமும், அமைதியும் நிறைந்தவள் போல் அம்சமாக இருந்தாள் இதயா. உதயாவை விட நல்ல நிறமாக, கண்ணாடி அணியாமல் இருந்தாள்.

இரட்டை பிறப்பாக இருந்தாலும் இதயாவும், உதயாவும் நன்றாக உருவத்தில் வேற்றுமையாக இருந்தனர்.

“பார், இவள் முகத்தைப் பார்க்கும் போதே எவ்வளவு அமைதியானவள்னு தெரியும். அவள் பேசும் போதும் அப்படித்தான், அவ்வளவு மென்மையாக இருக்கும். அவள் குரலை கேட்டுட்டே இருக்கணும் போல.

சீக்கிரம் கல்யாணம் முடிந்து அவளை என் பக்கத்துலயே வச்சுக்கணும் என்று எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? என் ஆசை எல்லாம் நிராசையாகிடுச்சு. இப்போ மொத்தமா என்னை விட்டு போயிட்டாள்…” என்று வலியுடன் புலம்பினான் ரவீந்திரன்.

நண்பனின் தோளை ஆறுதலுடன் தட்டிக் கொடுத்தான் கவியுகன்.

“மனசை தேத்திக்கோ ரவி…” என்றான்.

“ம்ம்…” என்றாலும் ரவியின் மனது தேறாது என்பதை அவனின் முனங்கலே வெளிப்படுத்தியது.

“இந்தா கவின்…” என்று இதயாவின் போனை கொடுத்தான்.

அதை வாங்கியவன் முதலில் கால்ஹிஸ்ட்ரியை திறந்து பார்த்தான்.

இதயா இறந்த நாளில் என்னென்ன அழைப்புகள் சென்றுள்ளது, வந்துள்ளது என்று ஆராய்ந்தான்.

நிறைய அழைப்புகள் ரவியிடம் இருந்து தான் வந்திருந்தது. நடுவில் அன்று வெளியூர் சென்ற அன்னை, தந்தையிடம் பேசியிருந்தாள். ஒரு முறை உதயாவிற்கு அழைத்திருந்தாள்.

வேறு குறிப்பிடும் படி எதுவும் இல்லை. அதற்கு முந்தைய சில நாட்கள் வந்த அழைப்புகளை ஆராய்ந்தும் எந்தப் பலனும் இல்லை.

ரவியின் அனுமதியுடன் புகைப்படத் தொகுப்புகளை, வேறு பைல்களை எல்லாம் ஆராய்ந்தான். எந்தத் துப்பும் இல்லை.

நீட் அன்ட் கிளின் என்பது போல் கைபேசியைப் பயன்படுத்தியிருந்தாள் இதயா.

“ஏதாவது யூஸ்புல்லா கிடைச்சதா கவின்?”

“இல்ல ரவி. சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை…” என்று கைபேசியை அனன்யாவிடம் கொடுத்தான்.

“திரும்ப இதை நீ எடுத்த இடத்துலேயே வச்சுடு அனன்யா. நாம இனி வேற ஏதாவது துப்பு கிடைக்குதான்னு தான் பார்க்கணும்…” என்றான்.

“சரி யுகா, என் ஹேண்ட்பேக்கை மறந்து வச்சுட்டு வந்தது போல உதயா வீட்டில் வச்சிட்டு வந்துருக்கேன். இந்தப் போனை வச்சிட்டு என் பேக்கை எடுத்துட்டு வர்றேன்…” என்று அனன்யா கிளம்ப,

“அனன்யா ப்ளீஸ், என் இதயா போனை என்கிட்ட கொடுத்துடுங்களேன்?” என்று பரிதாபமாகக் கேட்டான் ரவீந்திரன்.

“இது அங்கிருந்து தெரியாம சுட்டுட்டு வந்தேன் ரவி. எப்படித் திருப்பி வைக்காம இருக்க முடியும்?”

“பரவாயில்லை அனன்யா, நான் தான் எடுத்துட்டு வந்தேன் என்று சொல்லி சமாளிச்சிக்கிறேன். என் இதயா நினைவா இதுவாவது என்கிட்ட இருக்கட்டுமே?” என்று இறைஞ்சுதலாகக் கேட்க, அவள் கவியுகனை கேள்வியாகப் பார்த்தாள்.

‘கொடு!’ என்று அவன் தலையை அசைத்ததும் ரவியிடம் கொடுத்தாள்.

பொக்கிஷத்தை கையில் ஏந்தியது போல் கைபேசியை வாங்கித் தன் நெஞ்சோடு அணைத்துக் கண்களை மூடிக்கொண்டான் ரவீந்திரன்.

அவன் மோனநிலையில் இருக்க, அதைக் கலைக்க விரும்பாமல், இருவரும் அமைதியாக அவ்வறையை விட்டு வெளியேறினர்.

“ஹப்பா! என்ன ஒரு காதல்! ரவியோட இந்தக் காதலை அனுபவிக்க இதயாவுக்குக் கொடுத்து வைக்கலையே? பாவம்!” அறையை விட்டு வெளியே வந்ததும் வியந்து, பரிதாபப்பட்டாள் அனன்யா.

“நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா காதல் கல்யாணம் தான் பண்ணிக்கணும்…” என்று தொடர்ந்து ஆசையுடன் சொன்னவளை யோசனையுடன் பார்த்தான் கவியுகன்.

அவன் பார்வை தன் மேல் படிந்ததை உணர்ந்து திரும்பி பார்க்க, அதற்குள் தன் பார்வையைத் திருப்பியிருந்தான்.

“உதயா பத்தி என்ன நினைக்கிற அனன்யா? அவள் உன்கிட்ட எப்படிப் பேசினாள்?” என்று விசாரித்தான்.

“என்கிட்ட பழகும் விதத்தில் எந்தக் குறையும் இல்லை யுகா. நல்லா ஃபிரண்ட்லியா பழகினாள். நான் பேசின வரை அவள் மேல் எந்தத் தப்பும் இருக்குற மாதிரி எனக்குத் தெரியலை…” என்றாள்.

“ஒரே நாளில் எந்த முடிவுக்கும் வரமுடியாது அனன்யா. இன்னும் வாட்ச் பண்ணு. வெளிபடையாக ஒரு மனுஷன் காட்டும் முகம் வேறு. உள்ளுக்குள் எத்தனையோ புதைந்து கிடக்கும். புதைந்து கிடக்கும் ரகசியங்களைத் தோண்டி எடுப்பது தான் நம் வேலை…” என்றான்.

“ம்ம், புரியுது யுகா. நான் பார்த்துக்கிறேன்…” என்றாள்.

“அடுத்து உங்க மூவ் என்ன யுகா?”

“நவநீதனையும், மதியரசனையும் ஆராயணும். அடுத்த வேலை அதுதான்…”

“ஓகே யுகா, ஆல் தி பெஸ்ட்! நான் உதயா வீட்டுக்கு போய் என் ஹேன்ட் பேக் எடுத்துட்டு வர்றேன்…” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள்.

அவனுக்கும் கூட உதயா வீட்டிற்குச் செல்ல வேண்டியது இருந்தது. ஆனால் இப்போது வேண்டாம் என்று அந்த முடிவை தள்ளி போட்டவன், அவனும் வெளியே சென்றான்.

முதலில் நவநீதனை பற்றி அறிய அவன் வீட்டுப்பக்கம் சென்றான். ரவி சொன்னதை வைத்து சில விவரங்களைச் சேகரித்திருந்தான்.

நவநீதன் குடும்பமும் அந்த ஊரில் பேர் சொல்லும் குடும்பமாகத் தான் இருந்தது. நில புலன்கள் இருக்க, அதைத்தான் நவநீதன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆனால் லாபம் வரும் அனைத்தையும் ஊதாரித்தனமாகத் தான் செலவழித்துக் கொண்டிருந்தான்.

குடி, சிகரெட் மட்டுமில்லாமல் அனாவசிய செலவுகள் செய்வதில் வல்லவன்.

சூதாட்டம் அவனின் மிகப்பெரிய பலவீனம். அவன் சூதாடாத நாட்களே இல்லை என்றும் சொல்லலாம்.

ஊருக்கு வெளியே இருக்கும் மலையடிவாரத்தில் காடுகள் நிறைந்த பகுதிகள் இருந்தன.

அக்காடு தான் அவன் சூதாட செல்லும் இடம். அவ்வூர் ஆட்கள் மட்டுமில்லாமல் பக்கத்து கிராமத்திலிருந்தும் வந்து அங்கே சீட்டு கட்டு விளையாடி சூதாடுவர்.

கவியுகன் அந்த தெருவில் நடந்து செல்லும் போது சிலரின் பார்வை குறுகுறுவென்று அவன் மேல் பதிந்தது.

அதைக் கண்டு கொள்ளாமல் நவநீதனின் வீட்டை தாண்டி சென்றான்.

நவநீதனின் இருசக்கர வாகனம் வாசலில் இல்லை. மாலை ஆறுமணிவரை மலை காட்டுக்குள் தான் இருப்பான் என்று கேள்விப்பட்டதால் மலைக்குச் செல்லும் பாதையின் பக்கம் திரும்பினான்.

காலையில் ரவீந்திரன் அப்பாதையைக் காட்டி எப்படிப் போகவேண்டும் என்று வழி சொல்லியிருந்ததால் அவனுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

அது ஒரு ஒற்றையடி பாதை. இருபக்கமும் கருவேலமரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. அச்சாலையில் ஒரு சிலர் வயலில் வேலையை முடித்துத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

“யுகா, இந்தப் பக்கம் எங்கே போறீங்க?” அவன் நடந்து கொண்டிருக்கும் போது அவனின் பின்னால் அனன்யாவின் குரல் கேட்டது.

தோளில் தனது கைப்பை மாட்டிக் கொண்டு விறுவிறுவென்று அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த அனன்யாவை நின்று திரும்பி பார்த்தான்.

அவள் அருகில் வரும் வரை அவளின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை அவன்.

“நீ என்ன இந்தப் பக்கம் அனன்யா? ரவி வீட்டுக்கு போ. நான் வர்றேன்…” என்றான்.

“உதயா வீட்டிலிருந்து வெளியே வரும் போது நீங்க இந்தப் பக்கம் போனதை பார்த்தேன். அதான் வந்தேன். நீங்க எங்கே போறீங்க?” என்று கேட்டாள்.

“மலையடிவாரம் வரை போறேன் அனன்யா…”

“மலையடிவாரமா? அப்போ நானும் வர்றேன். காலையில் மலைக்குக் கூட்டிப் போகச் சொல்லி உதயாகிட்ட கேட்டேன். நாளைக்குக் கூட்டிட்டு போறேன் என்று சொல்லிட்டாள். நான் இப்பவே உங்க கூட வர்றேன்…” என்றாள் ஆர்வமாக.

அவளை யோசனையுடன் பார்த்தவன், “இல்லை அனன்யா. இருட்ட போகுது. இந்த நேரம் நீ வர வேண்டாம். நாளைக்கு உதயா கூடப் போய்க்கோ…” என்றவனை ஏமாற்றத்துடன் பார்த்தாள்.

“ஏன் யுகா. இருட்டினால் என்ன? எனக்கு ஒன்னும் பயமில்லை…” என்றாள்.

“நீ பயப்படுவ என்று சொல்லலை அனன்யா. போற இடம் எப்படி என்று சரியாக தெரியாம இந்த நேரம் வேண்டாம் என்று தான் சொல்றேன்…”

“என்ன யுகா நீங்க? எப்படி இடமா இருந்தால் என்ன? நீங்க கூட இருக்கும் போது எனக்கு என்ன பயம்?” என்றவளை கூர்மையாக அளவிட்டான்.

அவளின் கண்களில் ஆர்வமும், தன்னையும் அழைத்துச் செல்ல வேண்டுமே என்ற எதிர்பார்ப்பும் இருப்பது புரிந்தது.

“இப்ப வீட்டுக்கு போயும் என்ன செய்யப் போறேன் யுகா? உங்க கூட வர்றேனே?” என்றாள் பிடிவாதமாக.

ஒரு நொடி யோசித்தவன், “சரி, வா…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

உற்சாகமாகக் காலில் துள்ளலுடன் அவனுடன் நடந்தாள்.

கவியுகன் சுற்றி உள்ள சூழ்நிலையை ஆராய்ந்து கொண்டே நடந்தான்.

அனன்யா அவனுடன் பேச முயல, “ஷ்ஷ்! அமைதியா வரணும் அனன்யா. இந்த இடங்கள் எனக்கே புது இடங்கள். நாம அறியாத இடங்களுக்குப் போறப்ப சுற்றிலும் எப்படி இருக்கு, நமக்கு ஒரு ஆபத்து வந்தா அதிலிருந்து எப்படித் தப்பிக்கலாம். எந்த வழி ஆபத்து இல்லாத வழி என்று கூர்ந்து கவனிக்கணும். இதுவும் நம்ம தொழிலில் ஒரு பாடம்…” என்றான்.

அவளிடம் அதைக் சொல்லிக் கொண்டிருக்கும் போதும் அவனின் பார்வையில் ஓர் கூர்மை இருந்தது. அவ்விடத்தை அளவிடும் அளவீடு இருந்தது.

குருவிடம் பாடம் கற்றுக் கொள்ளும் மாணவியாக அவன் சொன்னதைக் கவனத்துடன் கேட்டு அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தாள் அனன்யா.

இருவரும் மலையடிவாரம் சென்று சேர்ந்தனர். மலைக்குச் செல்ல தனியாக ஒரு பாதை இருந்தது. அந்தப் பாதை தவிர மற்ற இடங்கள் எல்லாம் செடிகளும், மரங்களுமாகச் செழித்து வளர்ந்திருந்தன.

சில நாட்கள் முன் பெய்த மழை அவ்விடத்தைச் செழிப்பாகக் காட்டிக் கொண்டிருந்தது.

அனன்யா மலைக்குச் செல்லும் பாதையில் திரும்ப, “அங்கே இல்லை. இப்படி வா…” என்று மலையைச் சுற்றி நடக்க ஆரம்பித்தான். மலைக்குப் பின் பக்கம் காடு பகுதி இருந்தது.

“இந்தக் காட்டுக்குள்ளயா போறோம் யுகா?” என்று கேட்டாள்.

“ம்ம், அமைதியா வா. இங்கே ஆட்கள் இருக்கலாம்…” என்றவன், காட்டின் விளிம்பில் தெரிந்த ஒரு பாதையில் செல்ல ஆரம்பித்தான்.

சிறிது தூரம் செல்ல, காட்டிற்குள் பேச்சுச் சப்தம் கேட்டது.

“ச்சே, காலையிலிருந்து ஒரு ஆட்டம் கூட ஜெயிக்கலை. எல்லாம் அந்தக் கருவாப்பய காளையனே அடிச்சுட்டான்டா…” யாரோ புலம்பி கொண்டே அவர்கள் பக்கம் நடந்து வரும் சப்தம் கேட்க, கவியுகன் சட்டென்று நின்றான்.

“இப்படி வா…” என்று மெல்லிய குரலில் சொன்னவன், அங்கிருந்த ஒரு மரத்தின் பின் அவளையும் அழைத்துக் கொண்டு மறைந்து நின்றான். அங்கிருந்து பார்த்தால் அவர்கள் நடந்து வருவது நன்றாகத் தெரிந்தது.

சீட்டாட்டம் முடிந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.

“எனக்கு என்னவோ அந்தக் கருவாப்பய மேல டவுட்டா இருக்கு நவநீதா. கள்ளாட்டம் ஆடியிருப்பானோ?” என்று சந்தேகமாக ஒரு குரல் வர, நவநீதன் தான் வந்து கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு கூர்மையுடன் அவர்களின் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தான் கவியுகன்.

“என்னடா ராஜப்பா சொல்ற? கள்ளாட்டம் ஆடியிருப்பான்னா சொல்ற?” கேட்ட நவநீதனின் குரலில் கோபம் இருந்தது.

“ஆமாப்பா நவநீதா. அவன் பார்வையே சரியில்லை. என்னத்தையோ மறைக்கிற மாதிரி பய திருட்டு முழி முழிச்சான்…” ராஜப்பா சொல்ல,

“இதை முதலிலேயே சொல்றதுக்கு என்ன? இன்னைக்கு அவனைச் சும்மா விடப்போறது இல்ல…” என்று நவநீதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“என்ன செய்வ நவநீதா? ஆமா, நான் கள்ளாட்டம் ஆடித்தான் ஜெயிச்சேன். உன்னால என்ன செய்ய முடியும்?” என்று நக்கலாகக் கேட்டுக் கொண்டே அங்கே வந்தான் காளையன்.

“திருட்டு நாயே… கள்ளாட்டம் ஆடியதும் இல்லாம அதைத் தெனாவட்டா வேற சொல்றியா? உன்னை எல்லாம் சும்மா விட மாட்டேன்டா…” என்று அவனை அடிக்கப் பாய்ந்தான் நவநீதன்.

“நான் திருட்டு நாய்னா, நீ மொள்ளமாரி நாய்…” என்று களையனும் அவனை அடிக்கப் பாய…

இருவரும் ஒருவரை ஒருவரின் சட்டையைப் பிடித்துப் பலமாக மோதி கொள்ள ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கே பெரிய சண்டையே நடக்க ஆரம்பித்தது. இருவரும் வார்த்தைகளை வரைமுறை இல்லாமல் அள்ளி வீசினர்.

காது கொடுத்து கேட்கவே முடியாத வார்த்தைகளும் சர்வசாதாரணமாக அவர்களின் வாயிலிருந்து வர, மரத்தின் பின்னால் கவியுகனை ஒட்டி மறைந்து நின்றிருந்த அனன்யா, சங்கடத்துடன் காதுகளை மூடிக் கொண்டாள்.

“ஷப்பா, சீட்டுக்கட்டுக்கு இவ்வளவு பெரிய சண்டையா?” என்று முணுமுணுத்துக் கொண்டாள் அனன்யா.

‘இதுக்குத்தான் உன்னை வர வேண்டாம்னு சொன்னேன்’ என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தான் கவியுகன்.

அவளென்ன இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் கேட்க போகிறோம் என்று கனவா கண்டாள்?

“மவனே, ஏமாத்தியதும் இல்லாம என் மேலே கை வச்சுட்டியா? திருட்டு நாயே…” என்று காளையனை அடிக்க ஆரம்பித்தான் நவநீதன். அவர்களின் சண்டையை ராஜப்பாவுடன் இன்னும் இரண்டு பேரும் சேர்ந்து விலக்கி விட முயன்று கொண்டிருந்தனர்.

“நீ மட்டும் பெரிய யோக்கியனோ? நீ பெரிய பொம்பள பொறுக்கி நாய். உன்னைப் பத்தி ஒன்னும் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா? எனக்கு உன் வண்டவாளம் எல்லாம் தெரியும்டா…” என்று காளையன் பதிலுக்கு எகிறினான்.

“நாயே, நீ செய்த திருட்டுத்தனத்தை மறைக்க என் மேல பழி போடுறீயா?” என்று அவனைப் பிடித்துத் தள்ளினான் நவநீதன்.

கீழே விழுந்து கோபத்துடன் எழுந்த காளையன், “உண்மையைச் சொன்னா எரியுதோ? நீ அன்னைக்கு இந்த மலை காட்டுக்குள்ள அந்தச் செத்துப் போன இதயா புள்ள மேல கை வைச்சதை நான் பார்க்கலைன்னு நினைச்சியா? நான் பார்த்தேன்டா. 

நீ கை வச்சதால் தான் அந்தப் புள்ள கிணத்துல விழுந்து செத்து போச்சுன்னு இந்த ஊருக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம். எனக்குத் தெரியும்டா. இதை நான் போலீசில் சொன்னா நீ கம்பி எண்ணனும் டா மகனே…” என்று காளையன் நக்கலாகச் சொல்லி சிரிக்க,

அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அனன்யா அதிர, உன்னிப்புடன் அவர்களின் பேச்சை கிரகித்துக் கொண்டிருந்தான் கவியுகன்.