யுகன்யா – 5

அத்தியாயம் – 5

புது இடத்தில் உறக்கம் வராததாலும், இரவு கவியுகன் யாரையோ இருட்டில் பார்த்ததாகச் சொன்னதை யோசித்ததுமாக, இரவெல்லாம் சரியாக உறங்காமல் தவித்து ஒரு வழியாக உறக்கத்தைத் தழுவிய அனன்யா, கண்விழிக்கும் போது காலை ஏழு மணி ஆகியிருந்தது.

மணியைப் பார்த்ததும் வேகமாகப் படுக்கையை விட்டு எழுந்தவள் குளியலறைக்குள் புகுந்தாள்.

குளித்துத் தயாராகி அறையை விட்டு வெளியே வந்த போது எட்டு மணி ஆகியிருந்தது.

மாடியில் இருந்த மற்றவர்களின் அறைகள் மூடியிருந்தன.

கவியுகன் அறைக்கு முன் சென்று நின்று கதவை மெதுவாகத் தட்டிப் பார்த்தாள்.

உள்ளே எந்தச் சப்தமும் இல்லாமல் போகக் கீழே இறங்கிச் சென்றாள்.

இரவு வீட்டினர் மட்டும் இருந்த வீட்டில் இப்போது வேலையாட்கள் ஆங்காங்கே நின்று வேலை செய்து கொண்டிருந்தனர்.

அவளைக் கண்டதும் அவர்களின் பார்வை அவளின் மீது படிந்து மீண்டது.

“வாம்மா, காப்பிக் குடிக்கிறயா?” என்று அவளைப் பார்த்ததும் மேகலா கேட்க,

“கொடுங்க ஆன்ட்டி. எங்கே ஆன்ட்டி ரவி, புவன் யாரையும் காணோம்?” என்று கேட்டாள்.

“புவனன் வயலுக்குப் போயிருக்கான்மா. ரவியும், கவின் தம்பியும் வெளியே ஏதோ வேலை என்று போனாங்க. இந்தக் காப்பியைக் குடிமா…” என்று அவளுக்குக் காஃபியை கலந்து கொடுத்தார்.

அவள் காஃபியை அருந்தி கொண்டிருக்கும் போதே கவியுகனும், ரவீந்திரனும் மடித்துக் கட்டிய லுங்கியும், கையில்லா பனியனும் அணிந்து தோளில் துண்டை போர்த்திக் கொண்டு உள்ளே நுழைந்தனர்.

அவர்களை அப்படிக் கண்டதும் விழியுயர்த்திப் பாரத்தவள், “ஆன்ட்டி நீங்க இரண்டு பேரும் ஏதோ முக்கியமான வேலையா வெளியே போயிருப்பதாகச் சொன்னாங்க. நீங்க என்ன இப்படி வர்றீங்க?” என்று கேட்டாள்.

“பம்பு செட்ல குளிக்கப் போனோம் அனன்யா…” என்று கவியுகன் சொல்ல, சோஃபாவை விட்டு துள்ளி எழுந்தவள்,

“என்ன பம்பு செட்ல குளிக்கப் போனீங்களா? என்னையும் அழைச்சுட்டு போயிருக்கலாமே யுகா? நான் அதை டீவியில் தான் பார்த்திருக்கேன்…” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

“அதுக்கு நேரத்தோட எழுந்துக்கணும் அனன்யா. ஆனா, நீங்க இப்போ தான் எழுந்து வந்துருக்கீங்க போலவே. ஆனா எனக்கு ஒரு சந்தேகம். உங்க அழகின் ரகசியம் நீங்க இவ்வளவு நேரம் தூங்குவதால் வந்ததோ?” என்று கேலியாகக் கேட்ட படி அங்கே வந்தான் புவனேந்திரன்.

“என் அழகில் உங்களுக்கு அப்படி என்ன பொறாமை புவன்? ஆனா ஒன்னு நீங்க நம்பியே ஆகணும். நல்ல தூக்கம் நம்மளை புத்துணர்ச்சியா வைத்துக் கொள்ளும். அந்தப் புத்துணர்ச்சி அழகை கூட்டவும் செய்யும்.

அந்தச் சீக்ரெட் எனக்குத் தெரிந்ததால் தான் நான் இவ்வளவு அழகா இருக்கேன். ஆனா நீங்க சரியா தூக்காம காலையில் சீக்கிரம் எழுவதால் தான்…” என்று சொன்னவள் அதோடு நிறுத்தி விட்டு குறும்பாகச் சிரித்தாள்.

“தடி தாண்டவராயன் ஆகிடுறோமாக்கும்?” என்று அவளின் பேச்சை முடித்து வைத்தான் புவனேந்திரன்.

“புரிஞ்சா சரி…” என்றாள்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கவியுகனும், ரவீந்திரனும் மாடியேறி செல்ல,

“என்னை எப்போ பம்பு செட்டுக்கு அழைச்சுட்டு போவீங்க என்று நீங்க சொல்லவே இல்லையே யுகா?” என்று கேட்டு அவனின் நடையை நிறுத்தினாள்.

“இன்னைக்கு உதயாவை வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கேன் அனன்யா. அவள்கிட்ட உங்களைப் பம்பு செட்டுக்கு கூட்டிட்டுப் போகச் சொல்றேன்…” என்று அவளுக்குப் பதில் சொன்னான் ரவீந்திரன்.

“ஓ! சூப்பர் ரவி. தேங்க்யூ…” என்று அனன்யா சொல்ல, அவர்களைக் கேள்வியுடன் பார்த்தான் புவனேந்திரன்.

தன் சந்தேகத்தைக் கேட்கவும் செய்தான்.

“என்ன அண்ணா இது? அனன்யா உன் ஃபிரண்டு தானே? அவங்களை நான் பன்மையில் கூப்பிட்டாலும் ஒரு அர்த்தம் இருக்கு. ஆனா நீயும் ஏன் அப்படிக் கூப்பிடுற?” என்று சந்தேகமாகக் கேட்டான்.

தம்பியின் கேள்வியில் தடுமாறிப் போனான் ரவீந்திரன்.

கவியுகனும் ரவியை எச்சரிக்கை பார்வை பார்க்க,

“அதுக்கும் காரணம் இருக்கு புவன். ரவிக்கும் எனக்கும் ஒரு சின்னச் சண்டை. என்ன சண்டை என்று கேட்காதீங்க. அது எல்லாம் ஃபிரண்ட்ஸ் சண்டை. அதில் இருந்து நாங்க இப்படித்தான் ‘ங்க’ போட்டு பேசிப்போம்.

அதையெல்லாம் கண்டுக்காதீங்க. நீங்க சொல்லுங்க. உங்க உதயா பார்க்க எப்படி இருப்பாங்க?” என்று நிலைமையைக் கையில் எடுத்துக் கொண்டு தானே சமாளித்துப் பேச்சை திசை திருப்பினாள் அனன்யா.

“அதுதான் அண்ணா சொன்னானே அனன்யா… உதயா வீட்டுக்கு வருவாள் என்று. அவள் வரும் போது நேரில் பார்த்தே தெரிந்து கொள்ளுங்க…” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் நகர்ந்தான்.

அவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவன், உதயாவின் பேச்சை எடுத்ததும் கட்டுத்தெறித்தார் போல் பேசி விட்டுச் சென்றது உறுத்தலாகத் தோன்ற, சென்றவனின் முதுகையே பார்த்தாள்.

அவள் பார்வை புரிந்தாலும் ரவீந்திரன் அவளுக்கு எந்த விளக்கமும் சொல்லாமல் அவனும் நகர்ந்து விட,

“உன்கிட்ட கொஞ்சம் பேசணும். ஒரு பத்து நிமிஷம் கழிச்சு மேலே வா அனன்யா…” என்று சொல்லி விட்டுச் சென்றான் கவியுகன்.

ஆண்கள் மேலே சென்றதும் அதுவரை தள்ளி நின்று பொருட்களைத் துடைத்துக் கொண்டிருந்த ஒரு பெண்மணி அவளின் அருகில் வந்தார்.

“நீங்க தான் சென்னைல இருந்து இங்க வந்து எங்க ஊருல விவசாயம் பண்ண போறவங்களா?” என்று ரகசியம் போல் கேட்டார்.

அவரின் கேள்வியில் உள்ளுக்குள் ஏற்பட்ட வியப்பை காட்டிக் கொள்ளாமல் “ஆமா. உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள்.

அவர்கள் இரவு தான் இந்த ஊருக்கு வந்தார்கள். அதற்குள் தாங்கள் இந்த ஊருக்கு வந்ததற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்துவிட்டதா என்ன?

“அதெல்லாம் தெரியும் மா. இந்த ஊருக்கு யார் புதுசா வந்திருந்தாலும் யார், எதுக்கு வந்திருக்காங்கன்னு அம்புட்டு விவரமும் ஊரு முழுவதும் பரவிடும்…” என்றார்.

“ஓ! அப்படியா? அப்புறம் எங்களைப் பத்தி வேற என்ன தெரியும்?” என்று சுவாரஸ்யமாகக் கேட்டாள்.

“இப்போதைக்கு அவ்வளவுதான் தெரியும் மா…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “வேலையைப் பார்க்காம என்ன வாயடிச்சுட்டு இருக்கத் தங்கம்?” என்று மேகலா அதட்டல் போட, அவர் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

“கொஞ்சம் விட்டா ஊர் கதை, உலகக் கதைன்னு பேச ஆரம்பிச்சுடுவாள் மா. இட்லி ரெடி ஆகிடுச்சு சாப்பிட வர்றீயா மா?” என்று அனன்யாவை அழைத்தார்.

“ரவியும், யுகாவும் வரட்டும் ஆன்ட்டி. அவங்க கூடச் சேர்ந்து சாப்பிடுறேன். நான் போய் அவங்களைக் கூப்பிட்டு வர்றேன் ஆன்ட்டி…” என்றவள் மாடியேறி சென்றாள்.

நேராகக் கவியுகன் இருந்த அறைக்குச் சென்று அவள் கதவை தட்ட, கிரே நிற கால்சட்டையும், வெள்ளை நிறத்தில் சட்டையும் அணிந்து டிப்டாப்பாகத் தயாராகி நின்றிருந்தான் அவன்.

“உள்ளே வா அனன்யா. இப்படி உட்கார்…” என்று அவளுக்கு நாற்காலியை எடுத்துப் போட்டு தானும் எதிரே அமர்ந்தான்.

“இதோ இதைப் பார்…” என்று அவனின் கைபேசியை அவளிடம் நீட்ட, வாங்கிப் பார்த்தாள்.

கைபேசியில் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து புல்லட்டில் அமர்ந்திருந்த ஒரு ஆடவனின் புகைப்படம் இருந்தது.

“இந்தப் போட்டோவில் இருப்பவன் தான் நவநீதன். இதயாவை பொண்ணு கேட்டவன்…”

“இவன் இதயா தனக்குக் கிடைக்காத கோபத்தில் அவளை எதுவும் செய்துருப்பான் என்று நினைக்கிறீங்களா யுகா?” என்று நவநீதனின் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“இந்தக் கேஸ்ல நமக்கு இதுவரை ஒரு அவுட்லைன் கூடக் கிடைக்கலை அனன்யா. முதலில் இதயா இறந்தது தற்கொலையா? கொலையா? அதுவே பெரிய டவுட் தான். ரவி மட்டும் தான் இதயா சாவில் சந்தேகப்படுறான். மத்தவங்க எல்லாம் அவள் தற்கொலை பண்ணிக்கிட்டதாகத்தான் நினைக்கிறாங்க.

இதயா இறந்தது தற்கொலையா? கொலையா? இதை நாம முதலில் ஒருபக்கமா விசாரிக்க ஆரம்பிக்கப் போறோம். முதலில் ரவியின் சந்தேகப்படியே கேஸை கொண்டு போகப் போறோம். அதுக்கு ரவி யாரை எல்லாம் சந்தேகப்படுறானோ அவங்க எல்லாம் நம்ம சந்தேக லிஸ்டில் இருக்காங்க…”

“அப்போ உதயா? அவளை ரவி சந்தேகப்படலையே?” என்று கேட்டாள்.

“ரவிக்குச் சந்தேகம் வரலை என்பதால் உதயாவை சந்தேகப்படாம இருக்க முடியாது. நம்ம சந்தேக லிஸ்டில் முதலில் இருப்பது உதயா தான். அடுத்து இந்த நவநீதன். மூன்றாவது மதியரசன். இந்த மூன்று பேரையுமே நாம வாட்ச் பண்ணனும்…”

“ம்ம், ஓகே யுகா…”

“இன்னைக்கு உதயா வருவாள் என்று ரவி சொன்னான். அவளை நீ ஃபிரண்ட் பிடிச்சுக்கோ…” என்றான்.

“கண்டிப்பா யுகா…” என்றாள் அனன்யா.

“வயல் பக்கம் போற மாதிரி இன்னைக்கு நவநீதனை போட்டோ எடுத்துட்டு வந்துட்டேன். ஆள் பார்க்க கொஞ்சம் கரடுமுரடான ஆசாமி மாதிரி தான் இருக்கான். மதியரசன் இன்னும் கண்ணில் மாட்டலை. அடுத்த முறை வெளியே போகும் போது அவனையும் பார்க்கணும்…” என்றான் கவியுகன்.

“இதயாவோட போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் ரவிக்கிட்ட கேட்டுருந்தீங்களே… வாங்கிக் கொடுத்துட்டாரா யுகா?”

“இன்னுமில்லை. போன் பண்ணி அவன் மாமாகிட்ட கேட்டுருப்பான் போல. அவர் அதை எதுக்குக் கேட்குறீங்கன்னு சந்தேகப்பட்டுக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாராம்…”

“அப்ப என்ன பண்றது யுகா?”

“அதுக்குத்தான் நான் இன்னைக்குத் தஞ்சாவூர் கிளம்புறேன்…”

“அங்க எதுக்கு?”

“தஞ்சாவூர் ஜீ.ஹெச்ல தான் போஸ்மார்ட்டம் நடந்திருக்கு. அங்கே போய் இன்னொரு காபி வாங்கிட்டு வரணும். அதுவரை நீ இங்கே எதுவும் விஷயம் தேறுதுதா என்று பார்…” என்றான்.

“ஓகே யுகா…” என்றாள்.

பேசி முடித்துவிட்டு இருவரும் கீழே சென்றனர்.

சாப்பிட்டு முடித்து வரவேற்பறையில் அவர்கள் அமர்ந்திருந்த போது உள்ளே வந்தாள் ஒரு இளம்பெண்.

“வா உதயா…” என்று வரவேற்றான் ரவீந்தரன்.

‘ஓ, இவள் தான் உதயாவா?’ என்று கவியுகனும், அனன்யாவும் கூர்மையுடன் அவளை அளவிட்டனர்.

உதயா மாநிறமாக இருந்தாள். ஆனால் அவள் முகம் லட்சணமாக இருந்தது. அனன்யாவின் உயரம் தான் அவளும் இருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள்.

உடன் பிறந்தவளை இழந்த சோகம் அவளின் முகத்தில் அப்படியே தெரிந்தது.

தளர்ந்த நடை நடந்து தான் வந்தாள். அதுவும் அவளின் சோகத்தை எடுத்துக் காட்டுவதாக இருந்தது.

“என்ன விஷயமா அத்தான் என்னை வர சொன்னீங்க?” வரவேற்பறையில் புதிதாக இருந்த இருவரையும் கேள்வியாகப் பார்த்து விட்டு ரவியிடம் கேட்டாள் உதயா.

“இவங்க இரண்டு பேரும் என் ஃபிரண்ட்ஸ் உதயா. இவன் பேர் கவியுகன், இவங்க அனன்யா…”

இருவரையும் அவளுக்கு அறிமுகப்படுத்தினான் ரவீந்திரன்.

“ஹலோ…” என்று இருவரையும் பொதுவாகப் பார்த்து லேசாகச் சிரிக்க முயன்றாள்.

“ஹலோ…” என்று கவியுகன் சொல்ல,

“ஹாய் உதயா, நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. வாங்க, இப்படி உட்காருங்க…” என்று எடுத்ததும் அவளுக்கு ஐஸ் வைத்து வரவேற்று தன் அருகில் அமர அழைத்தாள் அனன்யா.

அவளின் பாராட்டை ஏற்றுக்கொள்ளும் விதமாக உதயாவின் முகம் மலர்வது போல் இருந்தது.

“ஹாய், ரொம்ப அழகான பொண்ணு வாயில் இருந்து இதைக் கேட்க கொடுத்து வச்சுருக்கணும்…” என்று சொல்லிக் கொண்டே அவளின் அருகில் அமர்ந்தாள் உதயா.

“ம்க்கும், பொண்ணுங்க என்றாலே அழகை தவிர எதையும் யோசிக்க மாட்டாங்க போல…” என்று நக்கலாகச் சொன்னான் அங்கே இருந்த புவனேந்திரன்.

“தடி தாண்டவராயன் போல இருப்பவர்களுக்கு எல்லாம் அழகு என்றால் என்னவென்று தெரியுமா என்ன?” அனன்யா கேலியாகக் கேட்டு வைத்தாள்.

ஆனால் அங்கே புவனேந்திரனும் இருக்கிறான் என்பதைக் கூடக் கண்டு கொள்ளவில்லை உதயா.

அவனும் உதயாவை பொருட்படுத்தியது போல் தெரியவில்லை. புவனனிடம் வாயடித்தாலும் அதையும் மனதிற்குள் குறித்துக் கொண்டாள் அனன்யா.

“இவங்க இரண்டு பேரும் இங்கே விவசாயம் நிலம் வாங்கிப் போட்டுத் தோட்டம் போட ஆசைப்பட்டு வந்திருக்காங்க உதயா. நிலம் பார்க்கிற வேலை போயிட்டு இருக்கு.

அதுக்கு முன்னாடி அனன்யாவுக்கு இந்த ஊரை சுத்திப் பார்க்கணும் என்ற ஆசை. அதான் உன்னை வர சொன்னேன். நீ கொஞ்சம் அனன்யாவை இந்த ஊரை சுற்றிப் பார்க்க கூட்டிட்டு போக முடியுமா?” என்று கேட்டான் ரவீந்தரன்.

“ஓ, நல்ல விஷயமாத்தான் வந்துருக்கீங்க…” என்று அனன்யாவிடம் பாராட்டுதலாகச் சொன்ன உதயா, “சரி அத்தான். நான் பார்த்துக்கிறேன்…” என்றாள் ரவியிடம்.

“ஓகே இனி நானும் உதயாவும் சேர்ந்து இந்த ஊரையே ஒரு கலக்கு கலக்கிடுறோம். நீங்க நிலம் பார்த்துட்டு என்னைக் கூப்பிட்டா போதும் யுகா…” என்றாள் அனன்யா.

‘கவனமாகக் கையாள்!’ என்பது போல் அவளுக்கு ரகசியமாகச் சமிஞ்ஞை செய்தான் கவியுகன்.

பெண்கள் இருவரும் அதன் பிறகு தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர்.

“உங்களுக்கு எந்த மாதிரி நிலம் பார்க்கணும் கவின் அண்ணா? சொல்லுங்க, நானும் உதவி செய்றேன்…” என்றான் புவனேந்திரன்.

“இயற்கை விவசாயம் தான் எங்க எண்ணம் புவனன். காய்கறி தோட்டம் போலப் போட நினைச்சுருக்கோம்…” என்றான் கவியுகன்.

“ஓகே அண்ணா. அதுக்கு ஏத்த மாதிரியே எதுவும் நிலம் அமைகிறதா என்று பார்க்கிறேன். இப்ப எனக்கு மில்லில் வேலை இருக்கு, கிளம்புறேன்…” என்று கிளம்பிவிட்டான்.

அவன் அங்கே இருந்த வரையுமே அவனின் பார்வை உதயாவின் புறம் திரும்பவில்லை. கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற யோசனை அனன்யாவிற்குள் இருந்து குடைந்தது.

அவன் கிளம்பியதும் கவியுகன் தஞ்சாவூர் கிளம்பினான். உடன் வர வேண்டுமா என்று கேட்ட ரவீந்திரனை வேண்டாம் என்று மறுத்திருந்தான்.

பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டை வாங்குவது சாதாரண விஷயம் அல்ல.

மெனக்கெட வேண்டும் என்று நன்றாகத் தெரிந்ததே!

இதுவே தெரிந்த ஊராக இருந்தால் அவன் கையாளும் விதமே வேறு. காவல்துறையில் அவனுக்கு நண்பர்கள் உண்டு என்பதால் அவர்களை வைத்து சற்று விரைவாகவே காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.

இந்த ஊரில் அவனுக்கு யாரையும் தெரியாததால் சற்று போராடியே எப்படியோ ரிப்போர்டை வாங்கி விட்டான். காலையில் சென்றவன் மாலையில் தான் ரிப்போர்ட்டை வாங்கினான்.

வாங்கியதும் காரில் அமர்ந்து, கார் ஜன்னலை எல்லாம் ஏற்றி விட்டு நிதானமாக ரிப்போர்டை படிக்க ஆரம்பித்தான்.

ஒரு முறைக்கு இருமுறை படித்தும் எதுவும் சந்தேகப்படும் படி அந்த ரிப்போர்ட்டில் இல்லை. இதயாவின் இறப்பு தற்கொலை தான் என்று அழுத்தமாகச் சொன்னது.

ஏமாற்றத்துடன் உதட்டை பிதுக்கிக் கொண்டவன், ரிப்போர்ட்டை காரில் பத்திரப்படுத்திவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

‘போஸ்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் சொல்லாது. தற்கொலை என்று இவ்வளவு தெளிவாக இருக்கும் போது ரவிக்கு ஏன் இதயாவின் சாவில் சந்தேகம் வந்தது? இதயாவின் திடீர் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரவி தேவையில்லாமல் சந்தேகப்படுகிறானோ?’ என்று யோசித்துக் கொண்டே காரை ஓட்டினான் கவியுகன்.

அவனின் சிந்தனை சிறிது நேரம் அதிலேயே சுழன்று வந்தது.

தஞ்சாவூரை தாண்டி இளஞ்சோலை செல்லும் சாலையில் திரும்பிய போது தான் ஒன்றை கவனித்தான்.

அவனை ரொம்ப நேரமாக ஒரு லோடு ஏற்றும் மினி வேன் பின் தொடர்ந்து கொண்டிருந்தது.

அவனின் பார்வை கூர்மை பெற்றது. முன் கண்ணாடி வழியாக மினி வேனின் நம்பரை பார்த்தான். ஆனால் நம்பர் தெளிவாகத் தெரியவில்லை. நம்பரை மறைத்துக் கொண்டு சகதி பூசியிருந்தது.

வேன் முழுவதுமே ஆங்காங்கே சகதியாகத் தான் இருந்ததால் நம்பரை மறைத்து வேண்டுமென்றே பூசியது என்றும் நினைக்க முடியவில்லை.

ஒருவேளை தன்னைப் பாலோ செய்யவில்லையோ என்று நினைத்து காரை ஒரு வளைவில் சட்டென்று திருப்பிக் காரின் வேகத்தையும் குறைத்தான்.

அந்த மினி வேன் வேகத்தைக் குறைக்காமல் அவன் திரும்பிய சாலையில் திரும்பாமல் நேராக வேகமாகச் சென்று விட, தான் தான் தவறாக நினைத்து விட்டோம் என்று நினைத்துக் கொண்டவன் மீண்டும் வண்டியை திருப்பினான்.

ஆனால், “அவனுக்குச் சந்தேகம் வந்துருச்சு போல. நான் ஃபாலோ பண்ணாம நேரா வந்துட்டேன்…” என்று அந்த மினி வேனில் இருந்தவன் யாருக்கோ தகவல் சொல்லியதை அறியாமல் போனான் கவியுகன்.