யுகன்யா – 4

அத்தியாயம் – 4

“என்னங்க அனன்யா, இரண்டு அண்ணாக்கள் கிட்டயும் நீங்க அவங்களைத் தடி தாண்டவராயன் என்று சொன்னதைச் சொல்லட்டுமா?” என்று கேலியாகக் கேட்டு, அனன்யாவின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான் புவனேந்திரன்.

“ஓ எஸ், தாராளமா சொல்லுங்க புவன். எனக்கு ஒன்னும் பயமில்லை. உங்களையும் சேர்த்து தான் தடி தாண்டவராயன் என்று சொன்னேன். அதையும் கூட நீங்க சொல்லலாம்…” என்றாள் அலட்டிக் கொள்ளாமல்.

“திரும்ப, திரும்ப உங்ககிட்ட கவனமா பேசணும் என்று நிரூபிக்கிறீங்களே…” என்று சொல்லிக் கொண்டே டைனிங் டேபிள் முன் சென்று அமர்ந்தான்.

அவனின் எதிரே கவியுகனின் அருகில் அமர்ந்து கொண்டாள் அனன்யா.

“என்ன அதுக்குள்ள இங்கே பேச ஒரு ஃபிரண்டு பிடிச்சுட்ட போல இருக்கே…” என்று மெல்லிய குரலில் கேட்டான் கவியுகன்.

“வேற என்ன செய்றது? உங்களுக்குத்தான் நான் பேசுவது பிடிக்க மாட்டிங்குதே…” என்றாள் அலுப்புடன்.

அவர்களுக்கு மேகலா பரிமாற, உணவை உண்டு கொண்டே பேச்சை தொடர்ந்தனர்.

“அதெல்லாம் இருக்கட்டும், அம்மாகிட்ட என்ன உளறி வச்ச?” என்று கேட்க, உணவை வாயில் வைத்துக் கொண்டிருந்தவளுக்குச் சட்டென்று புரையேறியது.

வேகமாக இரும ஆரம்பித்தவளின் தலையில் தட்டி, “பார்த்து மெதுவா சாப்பிடுமா…” என்று தண்ணீரை எடுத்துக் கொடுத்தார் மேகலா.

‘அச்சோ! இந்த அத்தை அதுக்குள்ள அவங்க மகன்கிட்ட ஒப்பிச்சுட்டாங்களா? சும்மா வாய் தவறித்தானே மருமகளா வருவேன் என்று சொன்னேன். அதை உடனே மகன்கிட்ட சொல்லணுமா என்ன?’ என்று நினைத்தவள் அவனை ஓரப்பார்வையாகப் பார்த்து திருதிருவென்று முழித்து வைத்தாள்.

“இப்ப நான் என்ன கேட்டுட்டேன் என்று உனக்குப் புரையேறுது? அப்போ அம்மா என்கிட்ட சொல்லியது தவிர, வேற ஏதோ நீ சொல்லியிருக்க. என்ன அது?” என்று கேட்டான்.

‘ஆஹா! அத்தை ஒருவேளை இவர்கிட்ட ஒன்னும் சொல்லலையோ? பயப்புள்ள நம்மகிட்டயே போட்டு வாங்க பார்க்குது. சிக்கிடாதே அனு’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள்,

“அத்தை என்ன சொன்னாங்க?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

“ஹ்ம்ம், நான் உன்னைப் பேச விட மாட்டேங்கிறேன் என்று புகார் சொன்னியாம்…” என்றவன், “ஆனா இப்போ உன் முழியைப் பார்த்தால் வேற என்னமோ சொல்லியிருப்பியோன்னு சந்தேகமா இருக்கு…” என்றான்.

“அட! நம்புங்க பாஸ். அத்தை சொன்னது மட்டும் தான் சொன்னேன்…” என்றாள் வேகமாக.

“ஓஹோ! சரி, நம்பிட்டேன்…” என்று அவன் சொன்ன விதத்திலேயே அவன் நம்பவில்லை என்பது புரிந்தாலும், அதற்கு மேல் வாய் கொடுத்து மாட்டிக் கொள்ள விருப்பம் இல்லாமல் வாயை அடக்கிக்கொண்டாள்.

“என்ன கவின் அண்ணா, உங்களுக்குள்ளயே பேசிக்கிறீங்க?” என்று புவன் கேட்க, அவனைப் பார்த்து சிரித்த கவியுகன்,

“ஒன்னுமில்லை புவன், அனன்யா கொஞ்சம் சங்கடப்பட்டாள். அதுதான் நம்ம ஃபிரண்டு வீட்டில் என்ன சங்கடம்னு சொல்லிட்டு இருந்தேன்…” என்றான் சமாளிப்பாக.

“என்னங்க அனன்யா, எதுக்குச் சங்கடம்? உங்க வீடு போலச் சங்கடம் இல்லாம இருங்க…” என்ற புவன்,

“என்ன அண்ணா, உன் ஃபிரண்டை நீ தானே கவனிக்கணும்? இப்படி அமைதியா இருக்க?” என்று தன் அண்ணனிடம் கேட்டான்.

“ஹான், என்ன புவன்?” என்று கனவில் இருந்து விழித்தது போலக் கேட்டு வைத்தான் ரவீந்திரன்.

அவர்களின் பேச்சையும் காதில் வாங்காமல், உணவையும் சரியாக உண்ணாமல், உணவை அலைந்து கொண்டே ஏதோ யோசனையில் இருந்திருந்தான் ரவீந்திரன்.

புவனேந்திரன் அண்ணனை கவலையாகப் பார்த்து வைக்க, கவியுகனும், அனன்யாவும் இரக்கமாகப் பார்த்து வைக்க, மேகலாவோ பொலபொலவென்று கண்ணீர் விட ஆரம்பித்தார்.

“உங்க ஃபிரண்டுக்கு நீங்களாவது சொல்லுங்க பிள்ளைகளா. அவன் சரியா சாப்பிட்டு ஒரு மாதம் கிட்ட ஆகப் போகுது. போறவ போய்ச் சேர்ந்துட்டா. என் புள்ள சரியா சாப்பிடாம அவளையே நினைச்சு ஓடா தேயுறான்.

போன மகராசி கல்யாணத்தில் விருப்பமில்லைனா முன்னாடியே சொல்லி தொலைக்க வேண்டியது தானே? என் மகன் மனசுல ஆசையை வளர விட்டுட்டு இப்படிக் கல்யாண நெருக்கத்தில் கழுத்தை அறுத்துட்டாளே…” என்று அழுது புலம்ப ஆரம்பித்தார்.

“அம்மா….” என்று கையை உதறி ஆத்திரமாக இருக்கையை விட்டு எழுந்த ரவீந்திரன்,

“என் இதயா ஒன்னும் கழுத்தை அறுக்கலை. அவ ரொம்ப நல்லவமா. உங்க தம்பி மகளைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? ஏன்மா இப்படி அவளைக் கரிச்சு கொட்டுறீங்க?” கோபமாக ஆரம்பித்து வேதனையுடன் கேட்டான்.

“எனக்கு மட்டும் அவளைப் பேசணும் என்று ஆசையா தம்பி? அவளை நினைச்சு சாப்பிடாம, சரியா உறங்காம இப்படி நீ சுத்துறயே என்ற வேதனையில் புலம்புறேன்யா. நீ நல்லா இருந்தா நான் ஏன் புலம்பப் போறேன், சொல்லு?” என்று கேட்டார்.

அன்னையின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அங்கிருந்து செல்லப் போனவனின் கையைப் பிடித்து நிறுத்திய புவன், “அண்ணா, என்ன செய்ற? உன் ஃபிரண்ட்ஸ் வந்திருக்காங்க. இப்ப நீ எழுந்து போனால் அவங்க எப்படி நிம்மதியா சாப்பிட முடியும்? அவங்களை நீ தானே பொறுப்பா பார்த்துக்கணும்…” என்றான்.

அப்போது தான் அவர்களின் ஞாபகம் வர, “ஸாரி கவின், ஸாரி அனன்யா. நீங்க சாப்பிடுங்க…” என்றவன் மீண்டும் அமர்ந்தான்.

அதன் பின் உணவு நேரம் அமைதியாகக் கடந்து சென்றது. உணவை முடித்து விட்டு நால்வரும் மாடியேறினர்.

“நீங்க ரொம்ப நாள் பிறகு பார்க்கிறீங்க. ஃபிரண்ட்ஸ்க்குள்ள பேச ஏதாவது இருக்கும். நீங்க பேசுங்க. காலையில் பார்க்கலாம். குட்நைட்…” என்ற புவனேந்திரன் தன் அறைக்குள் சென்றான்.

அவன் சென்றதும் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ரவி. எங்கே வச்சு பேசலாம்?” என்று கேட்டான் கவியுகன்.

“என் ரூம்லயே பேசுவோம் கவின்…” என்றான்.

“அனன்யா, நீயும் வா…” என்று அழைத்தவன் ரவீந்திரனின் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

“உட்காருங்க…” என்று இருவருக்கும் நாற்காலியை எடுத்துப் போட்ட ரவீந்திரன், அவர்கள் எதிரே கட்டிலில் சென்று அமர்ந்தான்.

“இதயா கேஸ் விஷயத்தில் எனக்கு இன்னும் சில டீடைல்ஸ் எல்லாம் வேணும் ரவி. நல்லா யோசிச்சுப் பதில் சொல்லு…” என்றான்.

“கேளு கவின், சொல்றேன்…”

“உனக்கோ, உன் மாமாவுக்கோ எனிமிஸ் யாராவது இருக்காங்களா?” என்று கேட்டான்.

“எனிமியா?” என்று யோசித்தவன், “நான் யார்கிட்டயும் அவ்வளவா பிரச்சினை வச்சுக்கிறது இல்லை கவின். ஆனால் என்னை எனிமியா நினைச்சு ஒருத்தன் அடிக்கடி எனக்கு ஏதாவது தொந்தரவு கொடுப்பான்…” என்றான்.

“யாரவன்?”

“அவன் பேரு மதியரசன். இதே ஊர் தான். அடுத்தத் தெருவில் தான் அவன் வீடு இருக்கு. ஒரு நிலம் வாங்குற விஷயமா எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் தகராறு வந்தது. நான் அந்த நிலத்துக்கு ஏற்கெனவே அட்வான்ஸ் கொடுத்திருந்தேன்.

ஆனா அதுக்கு முன்னாடியே அவன் அந்த நிலத்துக்காரர்கிட்ட நிலத்தை வாங்குற ஐடியாவில் இருக்கேன், பணத்தை ரெடி பண்ணிட்டு வர்றேன்னு சொன்னவன் வரவே இல்லையாம். இந்த விஷயம் தெரியாம அந்த இடம் பிடிச்சு நான் உடனே அட்வான்ஸ் கொடுக்கவும் நிலத்துக்காரர் மதியரசனை பற்றி என்கிட்ட சொல்லாம அட்வான்ஸ் வாங்கிட்டார்.

இந்த விஷயம் தெரிந்து, நான் முடிவு செய்த நிலத்துக்கு நீ எப்படி அட்வான்ஸ் கொடுக்கலாம்னு சண்டைக்கு வந்துட்டான். நிலத்துக்காரர்கிட்ட என்ன இப்படிப் பண்ணிட்டீங்க எனக் கேட்டால் நீங்க என்றால் பணம் சீக்கிரம் செட்டில் பண்ணிடுவீங்க. மதியரசன் இழுத்தடிக்கிற கேஸா இருக்கான். அதான் உங்ககிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டேன்னு சொல்றார்.

நிலத்துக்காரர் செய்த குழறுபடிக்கு அவன் நான் தான் அவர் மனசை மாத்தி அந்த இடத்தை வாங்கிட்டதாகச் சொல்லி சண்டை போட்டான். அந்தப் பிரச்சினைக்குப் பிறகு எங்கே பார்த்தாலும் முறைத்துக் கொண்டு இருப்பான். என்னை மட்டம் தட்டி பார்க்க எப்ப நேரம் கிடைக்கும் என்று பார்த்துக் கொண்டு இருப்பான்…” என்றான் ரவீந்திரன்.

“இதயா இறந்த பிறகு அவன் பிகேவியர் எப்படி இருக்கு?” என்று கவியுகன் கேட்க,

“என் வேதனையைப் பார்த்து அவனுக்குச் சந்தோஷம் தான் போல. வழியில் எங்கே பார்த்தாலும் நான் ஆடின ஆட்டத்துக்கு நல்லா வேணும் என்று ஜாடை பேசிட்டு இருப்பான்…” என்றான் வருத்தமாக.

“சோ, உன் துக்கத்தில் அவனுக்குச் சந்தோஷம் இருக்கு. அவனை நம்ம கண்பார்வைக்குக் கொண்டு வரணும். அடுத்து யாரு மேலயாவது உனக்குச் சந்தேகம் இருக்கா?”

“நவநீதன்… எனக்கு அவன் மேல தான் ரொம்பச் சந்தேகம்…” என்றான்.

“அவன் யார்? அவன் என்ன செய்தான்?”

“ஒரு வகையில் எங்க சொந்தம் தான் கவின். பங்காளி முறை வருது. அவனுக்கு இதயா மேல சின்னதா விருப்பம் இருக்கும் போல இருக்கு. ஆளுங்களை விட்டு மாமாகிட்ட பொண்ணு கேட்டு பார்த்துருக்கான். ஆனா மாமாவுக்கு எங்க வீட்டில் பொண்ணைக் கொடுக்கத்தான் விருப்பம் என்று சொல்லிட்டாராம்.

அதுக்கு ரவீந்திரனை விட நான் வசதியில் கொஞ்சம் குறைஞ்சவன் என்று தானே எனக்குப் பொண்ணு கொடுக்க மாட்டீங்கிறீங்க என்று மாமாகிட்ட சண்டைக்குப் போயிருப்பான் போல. அதுக்கு மாமா அவனை ஏதோ சொல்லி சரிக்கட்டி அனுப்பி வச்சுருக்கார்…”

“அதுக்குப் பிறகு அவன் எந்தப் பிரச்சினையும் பண்ணலையா?”

“அப்படிச் சொல்லிவிட முடியாது கவின். அப்போ அமைதியா போயிருந்தாலும் அப்பப்போ குடிச்சுட்டு வந்து ஏதாவது பேசுவான் போல…” என்றான்.

“அவன் வீடு எங்கே இருக்கு?”

“இதயா வீட்டுப்பக்கம் தான் கவின்…”

“ஓ! அப்போ அவனைத்தான் முதலில் கண்காணிக்கணும் என்று நினைக்கிறேன். அது தவிர உதயாவையும் விசாரிக்கணும் ரவி…” என்றான்.

“உதயாவை சந்தேகப்படுவதை நீ இன்னும் விடலையா கவின்? அவள் எங்க வீட்டு மருமகளா வரப் போகிறவள் கவின். அதனால் அவளை ரொம்ப இதில் இன்வால்வ் பண்ணாம விசாரிச்சா நல்லா இருக்கும்…” என்றான்.

“என்ன சொல்ற ரவி? மருமகளா?” என்று கவியுகன் வியப்பாகக் கேட்க,

“ம்ம், ஆமா கவின். எனக்கு இதயாவை பேசியது போல, புவனுக்கு உதயாவை பேசி முடிச்சுருக்கோம். எங்க கல்யாணம் அப்போத்தான் உதயாவுக்கும், புவனுக்கும் நிச்சயம் பண்றதாக இருந்தது. ஆனா இதயா இறந்ததால் இப்போ அந்த நிச்சயமும் நடக்கலை…” என்றான்.
“ஓ!” என்று சில நொடிகள் யோசனையில் இருந்த கவியுகன், அனன்யாவின் புறம் திரும்பினான்.

“உதயாவை வாட்ச் பண்ண வேண்டிய பொறுப்பு உன்னோடது அனன்யா. அவங்களுக்குச் சந்தேகம் வராதபடி பார்த்துக்கோ. அதுமட்டும் இல்லாம இங்கே இதயா ஃபிரண்ட்ஸ் யார் என்ன, உதயா ஃபிரண்ட்ஸ் யாரோ அவங்களையும் விசாரிக்கணும்.

நாம எதுக்காக வந்திருக்கோம் என்று யாரும் கண்டுபிடிக்காத அளவுக்குப் பார்த்துக்கோ. நாம இங்கே ஒரு நிலம் வாங்கி விவசாயம் பார்க்க போவதாக நான் சொல்லப் போறேன். அதில் நீயும் ஒரு பார்ட்னர் என்று சொல்லிக்கோ. அப்போத்தான் யாருக்கும் நம்ம மேல சந்தேகம் வராது…” என்றான்.

“சரி யுகா…” என்றாள்.

“நீயும் இதையே சொல்லு ரவி…” என்றான்.

“கண்டிப்பா கவின். எனக்கு என் இதயா எதுக்கு, எப்படி இறந்தாள் என்று தெரியணும். அதுக்கு நான் என்ன வேணும்னாலும் செய்வேன்…” என்றான்.

“கண்டுபிடித்து விடலாம் ரவி. கவலைப்படாதே! இப்போ எனக்கு இதயாவோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வேணும் ரவி…”

“அது மாமாகிட்ட தான் இருக்கு கவின். நாளைக்குக் கேட்டு வாங்கித் தர்றேன்…” என்றான்.

“ஓகே, அப்போ நாளையிலிருந்து வேலையை ஆரம்பிக்கலாம்…” என்றவன் இருக்கையை விட்டு எழுந்தான்.

“உனக்கு வேற எதுவும் சந்தேகம் இருக்கா அனன்யா?”

“இல்லை யுகா. சந்தேகம் வந்தால் கேட்கிறேன்…” என்று அவளும் எழுந்து நிற்க,

“குட்நைட் ரவி…” இருவரும் விடைப்பெற்று வெளியே வந்தனர்.

எதிரே இருந்த தங்கள் அறைக்கு நடந்து கொண்டே, “அப்புறம் என்னோட அம்மாகிட்ட நீ சொன்ன என்று முழுசா சொல்லலையே?” என்று கேட்டான் கவியுகன்.

‘அய்யோ! இன்னும் நீங்க அதை மறக்கலையா?’ என்பது போல் அவனைப் பார்த்து வைக்க,

“மறக்க மாட்டேன்…” என்று அவள் மனம் அறிந்தது போல் சொல்லி வைத்தான்.

“விட்டா மனசுக்குள்ள புகுந்தே கண்டுபிடிப்பீங்க போலயே?” என்றாள்.

“அவசியம் வந்தால் அதையும் கூடச் செய்வேன்…” என்று அலட்டிக் கொள்ளாமல் சொல்லிவிட்டு அவன் தன் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள,

‘ஹான்…’ என்று வாயைப் பிளந்து அதிர்ச்சியுடன் நின்றாள் அனன்யா.

“அப்படியே நிற்காம உன் ரூமுக்கு போ…” என்று உள்ளேயிருந்து கவியுகனின் குரல் வர,

‘கண்ணு கதவுக்குப் பின்னாடியும் இருக்கும் போல இருக்கே…’ என்று புலம்பிக் கொண்டே தன் அறைக்குள் சென்றாள்.

அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் பால்கனியும் இருக்க, அங்கே செல்வோமா? என்று யோசித்தாள். பின் அந்த எண்ணத்தைக் கைவிட்டவள் இரவு உடைக்கு மாறி, படுக்கையில் கால் நீட்டி அமர்ந்து தன் அன்னைக்கு அழைத்தாள்.

அரைமணி நேரம் அன்னையுடன் அரட்டை அடித்துவிட்டு படுத்தாள்.

பயண அலுப்பு இருந்தாலும் புது இடம் என்பதாலோ என்னவோ தூக்கம் அவளின் அருகில் கூட வர மாட்டேன் என்று அடம்பிடித்தது.

அதனால் படுக்கையை விட்டு எழுந்தவள் பால்கனியில் சற்று நேரம் நின்று விட்டு வரலாம் என்று அதன் கதவை திறந்து கொண்டு அங்கே சென்றாள்.

அதே நேரம் பக்கத்து அறை பால்கனியில் நின்று கொண்டிருந்தான் கவியுகன்.

இரண்டு பால்கனியும் அருகருகே இருக்க, நடுவில் இடுப்புயர சுவர் இருந்தது.

அவனைக் கண்டதும் ஏதோ பேசப் போனவள் சட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.

அவள் அங்கே வந்ததைக் கூட உணராது வீட்டை சுற்றிலும் இருந்த தோட்டத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் கவியுகன்.

அவன் பார்வை சென்ற திசையில் அவளும் பார்க்க, அவளின் பார்வையில் இருட்டை தவிர ஒன்றும் புலப்படவில்லை.

“யுகா…” என்று மெதுவாக அழைத்து அவனின் கவனத்தைக் கலைத்தாள்.

“ஷ்ஷ்! கொஞ்ச நேரம் அமைதியா இரு அனன்யா…” அவளின் பக்கமே திரும்பிக் கூடப் பார்க்காமல் குரல் மட்டும் கொடுத்தவன் கண்கள் இருட்டுக்குள் எதையோ துழாவியது.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவளின் புறம் திரும்பியவன், “என்ன அனன்யா தூக்கம் வரலையா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இருக்கட்டும். நீங்க அந்த இருட்டுக்குள் என்ன தேடினீங்க யுகா?” என்று கேட்டாள்.

“அதோ அங்கே ஒரு தென்னை மரம் தெரியுது பார்…” என்று சுட்டிக் காட்டியவன், “அந்த மரத்துக்குப் பின்னாடி யாரோ நிக்கிற மாதிரி இருந்தது. அதான் என்ன என்று பார்த்தேன்…” என்றான்.

“என்ன யுகா சொல்றீங்க?” என்று கேட்டவள் தானும் அந்தத் தென்னை மரத்தை பார்த்தாள்.

நிலா வெளிச்சத்தில் அதன் உயரம் தெரிந்ததே தவிர, மரத்தடியைப் பார்க்க முடியவில்லை. தென்னை மரத்தை சுற்றி வேறு மரங்கள் அடர்த்தியாக இருந்ததால் இருட்டு மட்டுமே கண்களுக்குத் தெரிந்தது.

“ஒன்னும் தெரியலையே யுகா…” என்றாள்.

“நான் பால்கனி கதவை திறந்து வந்தப்ப அந்த மரத்துக்குப் பின்னாடி அசைவு தெரிந்தது. ஆனால் நான் கவனித்துப் பார்க்கவும் அசைவு நின்று விட்டது. நீ இப்போ கதவை திறந்து வந்ததும் மீண்டும் அந்த அசைவு இருந்தது. யாரா இருக்கும் என்று தெரியலை…” என்றான் யோசனையுடன்.

“ஓ! ஒருவேளை இந்த வீட்டில் வேலை செய்றவங்களா இருக்குமோ?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.

“காவலுக்கு நிக்கிற ஆள் வாசல் கிட்ட தான் நிற்கிறான். அதையும் பார்த்தேன். ஆனா ஆள் அசைவு ஆப்போசிட்ல தெரிந்தது…” என்றான்.

“புது ஆள்னா நாய் குலைச்சுருக்குமே யுகா. இந்த வீட்டு நாய் அமைதியா இல்லை இருக்கு…” என்றாள்.

“ம்ம், அதுவும் காவல்காரன் பக்கத்தில் தான் இருக்கு…” என்று யோசனையுடன் சொன்னவன், “சரி, நீ உள்ளே போ. காலையில் என்ன என்று பார்க்கலாம்…” என்றான்.

அவள் அவன் சொன்ன திசையில் பார்த்துக் கொண்டே தயங்கி நிற்க, “இங்கே நிற்காதே அனன்யா. உள்ளே போ. உனக்கு ஏதாவது வித்தியாசமாகப் பட்டால் என்கிட்ட சொல்லு. நீயா எதுவும் செய்யாதே!” என்றான்.

‘சரி’ என்று தலையை ஆட்டியவள் உள்ளே சென்று பால்கனி கதவை மூடிய பிறகும், யோசனையுடன் அங்கயே நின்றிருந்தான் கவியுகன்.

அதன் பிறகு மரத்தின் பக்கம் எந்தச் சலனமும் இல்லாமல் போகத் தானும் அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

அவன் உள்ளே சென்ற மறுகணம் அந்த மரத்தின் பின்னாலிருந்து மெல்ல ஒரு உருவம் அங்கிருந்து நகர்ந்து சென்றது.