யுகன்யா – 3

அத்தியாயம் – 3

இளஞ்சோலை கிராமம்.

மாலை மயங்கி இரவு ஆரம்பித்திருந்த வேளையில் கவியுகனும், அனன்யாவும் காரில் அந்த ஊரின் எல்லைக்குள் நுழைந்தார்கள்.

“வாவ்! இந்த ஊர் ரொம்ப அழகா இருக்கு யுகா. ‘எங்கெங்கும் காணினும் பச்சையடா’ என்று சொல்ற போலப் பசுமையா இருக்கு…” என்று கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து ரசித்துக் கொண்டே வந்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் சாலையின் பக்கம் கவனத்தைத் திருப்பினான் கவியுகன்.

“இந்த மாதிரியான அழகான ஊருக்கு என்னைக் கூப்பிட்டு வர மாட்டேன்னு சொல்லி தட்டிக்கழிக்க இருந்தீங்களே…” என்று சுணக்கத்துடன் சொன்னாலும், அவளின் பார்வை என்னவோ வெளி அழகை ரசிப்பதில் தான் இருந்தது.

அவளின் சுணக்கத்தை எல்லாம் அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவள் அப்படிச் சொல்லிக் காட்டுவாள் என்று எதிர்பார்த்தது தான்.

இரண்டு நாட்களுக்கு முன் ரவீந்திரன் தங்கள் ஊருக்கு வந்து விசாரிக்கச் சொன்ன போது கவியுகனுக்கு வேறு ஒரு வேலை இருந்ததால் அவனிடம் அசிஸ்டென்டாக இருக்கும் தியாகு என்பவனைத் தான் முதலில் இளஞ்சோலைக்கு அனுப்புவதாக இருந்தான்.

ஆனால் ரவீந்திரனோ அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறினான்.

“எனக்கு நீ வந்தால் நல்லா இருக்கும் என்று தோனுது கவின். என்னால் உன்கிட்ட தவிர வேற யார்கிட்டயும் மனம் விட்டு பேச முடியும் என்று தோனலை. அதோட நீ ஒரு டிடெக்டிவ்வாக வராமல் என் ஃபிரண்டா வந்தால் தான் சரியா இருக்கும். நீயே வாயேன் கவின்…” என்று அவன் இறைஞ்சுதலாகக் கேட்ட பிறகு கவியுகனால் மறுக்க முடியவில்லை.

இரண்டு நாட்களில் அவனின் வேலையை விரைந்து முடித்து விட்டு, இன்று கிளம்பிவிட்டான்.

முதலில் அவனுடன் ஜனார்த்தனியைத் தான் அழைத்து வருவதாக இருந்தான். ஆனால் நேற்று அவள் கர்ப்பம் தரித்திருக்கும் செய்தி கிடைக்க, அவளுக்கு வாழ்த்து சொல்லி, சில நாட்களுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பியிருந்தான்.

ஜனார்த்தனி செல்லவில்லை என்றதும், “அவங்களுக்குப் பதில் நான் உங்க கூட வர்றேனே யுகா?” என்று வந்து நின்றாள் அனன்யா.

கவியுகன் அதற்கு யோசிக்க, “தனிக் கேஸ் கொடுங்க என்று கேட்கலையே யுகா? உங்க கூடத் தானே வர்றேன் என்று சொல்றேன். அதோட நீங்க சரியா வேலை பார்க்கிறீங்களா இல்லையான்னு நான் செக் பண்ண வேண்டாமா?” என்று கேலியாகக் கேட்டவளை முறைத்தான்.

“ஹி…ஹி… உங்க வேலையைப் பார்த்து நானும் கொஞ்சம் கத்துக்கிறேன் என்று சொல்ல வந்தேன்…” என்று உடனே பேச்சை மாற்றினாள் அனன்யா.

“இந்த மாதிரி ஏதாவது உளறாமல் இருந்தால் கூட்டிட்டு போறேன்…” என்றான் கண்டிப்புடன்.

“சரி… சரி…” என்று வேகமாகத் தலையை ஆட்டினாள்.

“எனக்கு என்னமோ உதயா மேல தான் சந்தேகமா இருக்கு யுகா. ஒருவேளை கூடப் பிறந்தவள் மேல ஏதாவது பொறாமையா இருக்குமோ? இல்லை அக்கா, தங்கைக்குள்ள ஏதாவது சண்டை வந்திருக்கலாம். சண்டை முத்தி அது சாவில் கொண்டு வந்து விட்டுருக்குமோ?” அனன்யாவிடம் வழக்கு விவரம் சொல்லவும் அவள் தன் கருத்தை சொன்னாள்.

“நானும் அதே தான் நினைச்சேன் அனன்யா. ஆனால் அக்கா, தங்கை இரண்டு பேருமே நல்ல பாசக்காரங்க என்று ரவி சொன்னான். உடன்பிறப்புகளுக்குள் வரும் சின்னச் சின்னச் சண்டைகள் வரும். விரோதமாக நினைக்கிற அளவுக்கு அவங்க சண்டை போட மாட்டாங்க என்று சொன்னான். அதோட அன்னைக்கு என்ன நடந்ததுன்னா…” என்ற கவியுகன் தனக்கும், ரவீந்திரனுக்கும் இடையே நடந்த உரையாடலை பகிர்ந்து கொண்டான்.

அன்று உதயாவின் மீது சந்தேகம் எழுவதாகக் கவியுகன் சொல்லவும், அதை உறுதியாக மறுத்தான் ரவீந்திரன்.

“உதயா அப்படிப்பட்டவள் இல்லை கவின். அதோட அன்னைக்கு எங்க வீட்டில் சாப்பாடு வாங்க வந்த உதயா உடனே அவள் வீட்டுக்குத் திரும்பலை. சமையல் ரெடியாகக் கொஞ்சம் லேட் ஆகவும், அம்மா கூடக் கொஞ்ச நேரம் இருந்து வேலையைப் பார்த்தாள்.

அவள் கிளம்பும் போது வெளியில் இருந்து வந்த புவனைப் பார்க்கவும் அவன்கிட்ட கொஞ்சம் நேரம் அரட்டை அடிச்சிட்டு தான் கிளம்பினாள்.

அவள் வீட்டுக்குப் போய்க் கதவை தட்டிய போது இதயா கதவைத் திறக்கலை. பின்பக்க கதவு பக்கமா போய்ப் பார்க்கலாம் என்று போன போது, பின்பக்க கதவு வெறுமனே சாற்றி மட்டும் இருந்தது. அவள் உள்ளே போய் வீடு முழுக்கத் தேடியும் இதயா இல்லை என்ற உடனே அவள் போனுக்கு ட்ரை பண்ண, அது வீட்டு ஹாலில் தான் இருந்திருக்கு.

அக்கம் பக்கம் பார்த்த போது எல்லார் வீடும் பூட்டி இருந்தது. அதோட இருட்டிய பிறகு அப்படி இதயா ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு எல்லாம் போக விரும்ப மாட்டாள். ஒருவேளை என்னைச் சந்திக்க வந்திருப்பாளோ என்று தெரிந்து கொள்ள, உதயா எனக்குப் போன் போட்டாள். நான் வரலை எனச் சொல்லவும் வீட்டில் இதயாவை காணோம் என்று சொன்னாள். உடனே நான் கிளம்பி போனேன்…” என்று சொல்லியிருந்தான் ரவீந்திரன்.

அதை அனன்யாவிடம் சொன்னவன், “அவன் சொன்னது படி பார்த்தால் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்ன நேரப்படி இதயா கிணற்றில் விழுந்த நேரம் உதயா ரவி வீட்டில் தான் இருந்திருக்கிறாள். ஆனாலும் உதயா மேல தப்பு இல்லாதது போலத் தோன்றினாலும் அவளையும் நோட் பண்ணனும் அனன்யா.

அதோட எனக்கு வேற ஏதோ ஒரு நெருடல் தோனுது. அந்த நெருடலுக்கு விடை அந்த ஊரில் தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன்…” என்றான்.

இப்போது காரில் செல்லும் போதே வழக்கு விஷயமாக யோசித்துக் கொண்டே வந்த கவியுகன், “இந்த ஊரில் ரவீந்திரனை தவிர்த்து, மற்ற எல்லோரையும் பொறுத்தவரை நாம அவன் வீட்டுக்கு ஃபிரண்டா போறோம் அனன்யா.

அங்கே நம்ம வேலையைப் பத்தி ரவி தவிர யாருக்கும் தெரியாது. அதனால் நம்ம விசாரணையில் கவனமாத்தான் இருக்கணும். என்ன புரியுதா?” என்று வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தவளிடம் கேட்டான்.

“ஓகே பாஸ்…” என்று அவன் பக்கமே திரும்பிப் பார்க்காமல் சொன்னவள், “வாவ்! சூப்பர்! இந்த ஊரில் ஒரு குட்டி மலை இருக்கு யுகா. எனக்கு மலைனா ரொம்பப் பிடிக்கும். ஒருநாள் அந்த மலை மேலே ஏறணும்…” என்று குதூகலமாகச் சொன்னாள்.

“நாம இந்த ஊருக்கு பிக்னிக் வரலைங்க மேடம்…” என்று அவன் நக்கலாக உரைக்க,

“வேலையோட வேலையா ஊரையும் சுத்திப் பார்த்தால் குறைந்தா போய் விடுவோம்?” என்று அவனின் பக்கம் லேசாகத் திரும்பி ஓரப்பார்வையாகப் பார்த்துக் கேட்டாள்.

“உன்னையெல்லாம் என் கூடக் கூட்டிட்டு வந்தேன் பாரு…” என்று சலிப்பாகத் தலையில் தட்டிக் கொண்டான்.

“ஹலோ பாஸ், என்ன இது இப்படிச் சலிச்சுக்கிறீங்க? நீங்க இப்படிச் சொன்னதுக்காகவே என்னைக் கூட்டிட்டு வந்தது எவ்வளவு நல்லதா போய்விட்டது என்று உங்களைச் சொல்ல வைக்கிறேனா இல்லையான்னு பாருங்க…” என்றாள் சவாலாக.

“ம்ம், பார்ப்போம். எனக்கு உதவியா இருக்கப் போறீயா? இல்லை, உபத்திரவமா இருக்கப் போறீயான்னு…” என்றான்.

அந்த ஊரிலேயே ரவீந்திரனின் வீடு தான் பெரிய வீடு என்று சொன்னதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் அவனின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான் கவியுகன்.

அடுத்த நொடி வேகமாக அங்கே வந்தான் ரவீந்திரன்.

“வா, வா கவின். வாங்க…” என்று இருவரையும் வரவேற்றான்.

“ஹலோ ரவி, நான் அனன்யா. இன்னைக்கு இருந்து நானும் உங்க ஃபிரண்ட் தான். சோ, நீங்க இந்த வாங்க போங்க எல்லாம் விட்டுட்டு அனு என்றே கூப்பிடலாம்…” என்று தாராளமாக அறிக்கை விடுத்தாள் அனன்யா.

“என்ன சரிதானே பாஸ்?” என்று கவியுகனிடம் பெருமையாகக் கேட்டுக் கொண்டாள்.

“அது ஒன்னுமில்லை ரவி, இங்கே இருக்குற வரை நாம ரவி ஃபிரண்டா மட்டும் தான் இருக்கணும்னு சொன்னேன். அதை மேடம் ஆர்வக்கோளாரில் அறிக்கை விடுறாங்க…” அவளின் படபடப் பேச்சில் ஒரு நொடி மலைத்து நின்ற நண்பனிடம் சொன்னவன்,

“அவனை ரவி என்று கூப்பிட்டு, என்னை எதுக்கு இப்போ பாஸ் என்று கூப்பிடுற?” எனக் கேட்டான்.

“அதென்னவோ தெரியலை பாஸ். நீங்க ஃபிரண்டா இருக்கணும் என்று சொன்னதும் தான், உங்களை யுகா என்று கூப்பிட தோணாம, பாஸ் என்று தான் கூப்பிட தோனுது…” என்றாள்.

“தோனும்…. தோனும்… ஏதாவது உளறாம பேசாம வா…” என்று அவளை அடக்கினான்.

“உள்ளே வாங்க…” என்று இருவரையும் உள்ளே அழைத்த ரவி, கவியுகனை மட்டும் சற்று முன்னால் அழைத்துச் சென்று,

“உன் கூட வந்திருக்கிறவங்க எதுவும் சொதப்பிட மாட்டாங்களே?” என்று நண்பனிடம் ரகசியமாகக் கேட்டான்.

“ச்சே ச்சே… அவள் அப்படி எல்லாம் எதுவும் சொதப்ப மாட்டாள் ரவி. கொஞ்சம் படபடப் பட்டாசு, அவ்வளவு தான்…” என்றான்.

“ஹலோ ரவி சார், வேலையென்று வந்துட்டால் அதெல்லாம் நான் பக்காவா இருப்பேன். உங்க முகம் கொஞ்சம் சோர்வா தெரிந்தது என்று கொஞ்சம் டைவர்ட் பண்ண அப்படிப் பேசினேன். நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க…” என்று அவர்களுக்குப் பின்னால் வந்த அனன்யா ஒட்டுக் கேட்டுப் பதில் சொல்ல,

ரவீந்திரன் சங்கடத்துடன் அவளைப் பார்த்தான்.

“அனன்யா, போதும்!” என்ற கவியுகன் அதட்டியதில் கப்சிப்பென்று ஆகிப் போனாள்.

மூவரும் உள்ளே செல்ல, “வாங்க, வாங்க…” என்று இருவரையும் வரவேற்றார் ரவீந்திரனின் அன்னை மேகலா.

“பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது? நீங்க வருவதாக ரவி சொன்னான். உட்காருங்க. காபி குடிக்கிறீங்களா? இல்லை, இன்னும் கொஞ்ச நேரத்தில் சாப்பாடே சாப்பிடுறீங்களா?” என்று உபசரித்தார்.

“பிரயாணம் எல்லாம் சவுகரியம் தான் மா. நீங்க எப்படி இருக்கீங்க? ரவி அப்பா பற்றி இப்ப தான் கேள்விப்பட்டேன். ஸாரி மா…” என்றான் கவியுகன்.

“ஹ்ம்ம், ஏதேதோ நடந்து போயிருச்சுபா. கலகலவென இருந்த வீடு. இப்போ களை இழந்து போயிருச்சு. இதோ இவன் வாழ்க்கையே பட்டுப்போச்சு. இந்நேரம் புது மாப்பிள்ளையா ஜம்முன்னு சுத்தி வர வேண்டிய என் புள்ள இப்போ தாடியும், விரக்தியுமா திரியுறான்…” என்று கண்கலங்களுடன் மகனை நினைத்துப் புலம்பினார் மேகலா.

“வருத்தம் தான் மா. மனசை தேத்திக்கோங்க…” என்று ஆறுதல் கூறினான் கவியுகன்.

“சரிபா, முதலில் உட்காருங்க. நான் பாரு, வந்த பிள்ளைகளுக்குத் தண்ணி கூடக் கொடுக்காம பேசிட்டு இருக்கேன். நான் போய்க் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்…” தன்னைத் தேற்றிக் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டு அவர்களை உபசரிக்க ஆரம்பித்தார்.

“எங்கே புவனேந்திரனை காணோம் ரவி?” கவியுகன் கேட்க,

“இதயா போனதிலிருந்து நான் மில்லுக்கு, வயலுக்கு எதுக்கும் சரியா போகலை கவின். புவன் தான் இப்போ அதை எல்லாம் பார்த்துக்கிறான். இப்போ மில்லில் இருப்பான். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவான்…” என்றான்.

“உங்க இரண்டு பேருக்கும் மாடியில் தான் ரூம் ரெடி பண்ணிருக்கேன். வாங்க, ரூமை காட்டுறேன்…” என்று இருவரையும் மேலே அழைத்துச் சென்றான்.

இருவரின் அறையும் அருகருகே இருக்க, அதே போல் இரண்டு அறைகள் எதிரேயும் இருந்தன.

“அங்கே நானும், புவனும் இருக்கோம்…” என்றவன், “நீங்க ஃபிரஸ் ஆகிட்டு வாங்க. சாப்பிட போகலாம்…” என்றான்.

இருவரும் அவரவர் அறையில் நுழைந்தனர்.

தனக்குக் கொடுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்த அனன்யா “உப்ப்…” என்று பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டாள்.

“இந்த யுகா இப்படி வாய்க்குப் பூட்டு போடுறாரே. பேசலைனா நம்ம நிலைமை கவலைக்கிடமா போயிடுமே. இப்போ என்ன பண்றது?” என்று தனக்குள் புலம்பிக் கொண்டவள், உடனே கவியுகனின் அன்னைக்கு அழைத்தாள்.

“ஹலோ அத்தை, என்ன பிள்ளையைப் பெத்து வச்சுருக்கீங்க?” என்று எடுத்ததும் கடுகாகப் பொரிந்தாள்.

“ஹான், ஆம்பிள புள்ளயை பெத்து வச்சுக்கேன்மா…” என்று மாதுரி அப்பாவியாகப் பதிலுரைக்க,

“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. பிள்ளையை ஸ்ரிக்ட் ஆபிசரா வளர்த்து வச்சுட்டுப் பேச்சை பாரேன்…” நொடித்துக் கொண்டாள்.

“நான் பேசுறனா? இல்லை நீயாமா?” இதையும் அவர் அமைதியாகவே கேட்டு வைக்க,

“என்ன இது அம்மாவும், பிள்ளையும் பேசுறேன் பேசுறேன்னே சொல்றீங்க? மனுஷனுக்கு வாய் எதுக்கு இருக்கு? பேசுறதுக்குத் தானே? ஆனா பேசக் கூடாதுனா எப்படி?” என்று படபடவென்று பொரிந்தாள்.

“உன்னை இப்ப யாரு அனு பேச வேண்டாம் என்று சொன்னது? முதலில் அதைச் சொல்லு…” என்றார்.

“வேற யாரு? எல்லாம் உங்க பிள்ளை தான். ரொம்ப ஓவரா போறார். சொல்லி வைங்க. அப்புறம் நான் உங்களுக்கே மருமகளா வந்து காலம் பூரா பேசியே கொடுமைப்படுத்துவேன்…” பேசும் வேகத்தில் சொல்லிவிட்டவள் பின்பு தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்து, நாக்கை கடித்துப் பேச்சை நிறுத்தினாள்.

அந்தப் பக்கம் மாதுரியும் மௌனமாக இருக்க, தன் பேச்சை எப்படி எடுத்துக் கொண்டாரோ என்று பதறியவள், “ஸாரி அத்தை, சும்மா… விளையாட்டா…” என்று தயக்கத்துடன் இழுத்தாள்.

அதைப் பற்றி ஒன்றும் கேட்காதவர், “சரிமா, எத்தனை மணிக்கு ஊருக்கு போனீங்க? சாப்பிட்டீங்களா?” என்று விசாரிக்க ஆரம்பித்தார்.

அவர், தான் சொன்னதைத் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவள், நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் அத்தை. சாப்பிட போறோம். நீங்க சாப்பிட்டீங்களா? மாமா என்ன செய்றார்?” என்று சிறிது நேரம் பேசி முடித்து விட்டு வைத்தவள் தலையிலேயே லேசாகக் கொட்டிக் கொண்டாள்.

‘இப்படியா பேசி வைப்பேன்? அவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ என்று புலம்பிக் கொண்டவள் குளியலறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்.

உடல் கழுவி தன்னைச் சுத்தம் செய்து கொண்டு தயாராகி அறையை விட்டு வெளியே வந்த போது, “ஹாய், வெல்கம்…” என்று வரவேற்றவனைப் பார்த்து மெல்லிய புன்னகையைச் சிந்தியவள், “புவனேந்திரன்?” என்று கேட்டாள்.

“ஆமாங்க, புவனேந்திரன் தான். நீங்க புவன் என்று கூப்பிடலாம். உங்க பேரு அனன்யா என்று அண்ணா சொன்னார். நல்ல பேருங்க. வாங்க, சாப்பிட போகலாம்…” என்று மென்சிரிப்புடன் அழைத்தான் புவனேந்திரன்.

ரவீந்திரன் போல் புவனேந்திரனும் நல்ல வளர்த்தியாக இருந்தான். அண்ணன் சற்று மாநிறம் என்றால் தம்பியோ சிவந்த நிறத்துடையவனாக இருந்தான்.

ரவீந்திரன் முகத்தில் தாடியும் சோகமுமாக இருக்க, புவனேந்திரன் முகத்தில் லேசான சோகம் இருந்தாலும் மழித்த முகத்துடன் பளபளவென்று இருந்தான்.

அவனுடன் நடந்து கொண்டே கவியுகன் இருந்த அறை பக்கம் சென்றாள்.

“கவின் அண்ணாவும், என் அண்ணாவும் கீழே போயிட்டாங்க. நான் தான் உங்களை அழைச்சுட்டு வர்றேன். நீங்க போங்கன்னு சொன்னேன்…” என்று புவன் சொல்ல,

“ஓ, அப்படியா? ஓகே…” என்றவள் படியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவளுடன் நடந்து கொண்டே, “நிஜமாகவே நீங்க என் அண்ணா கூடப் படிச்சவங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டான் புவனேந்திரன்.

அந்தக் கேள்வியில் அலட்டிக் கொள்ளாமல் அவனின் புறம் திரும்பியவள், “ஏன் புவன் இப்படி ஒரு சந்தேகம்?” என்று கேட்டாள்.

“பார்க்க சின்ன வயசா தெரியுறீங்க. ரவி அண்ணா, கவின் அண்ணா கூட நீங்க படிச்சீங்க என்பதை நம்பவே முடியலை. அதுதான் கேட்டேன்…” என்றான்.

“ஹா…ஹா… அது எல்லாம் என் அழகின் ரகசியம் புவன். பசங்க தான் வயசு கூடக் கூட வாட்டசாட்டமா மாறி தடி தாண்டவராயன் கணக்காக ஆகிடுறாங்க. ஆனா பொண்ணுங்க எந்த வயசுலயும் இளமையா காட்டிக்க முடியும்…” என்று பெருமையுடன் சொன்னாள்.

“இது தான் சாக்குன்னு கவின், ரவி அண்ணாவை மட்டும் இல்லாம என்னையும் தடி தாண்டவராயன்னு சொல்லிட்டீங்களே அனன்யா…” என்று சோகமாகச் சொன்னான்.

“என்னைச் சந்தேகப்பட்டதுக்குப் பட்டம் புவன்…” என்று கேலியாகச் சிரித்தாள்.

“அட! உங்ககிட்ட கொஞ்சம் கவனமாத்தான் இருக்கணும் போல இருக்கே. இந்தப் போடு போடுறீங்க…” என்றான்.

“அதுதான் அனன்யா…” என்று கெத்தாக மொழிந்தாள்.

இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே வருவதைக் கண்ட கவியுகன் லேசாகப் புருவம் உயர்த்திப் பார்த்தான்.

அவனைக் கண்டதும் அவனின் அன்னையிடம் மருமகளாக வந்துவிடுவேன் என்று தான் உளறியது ஞாபகத்தில் வர, அனன்யாவின் புன்னகை அப்படியே உறைந்து போனது.