யுகன்யா – 26(Final)

அத்தியாயம் – 26

“பக்கத்தில் வராதே! வந்தால் உன் மண்டையை உடைச்சுடுவேன்…” என்று கையில் அகப்பட்ட பொருட்களை எல்லாம் புவனேந்திரன் மீது தூக்கி எறிந்தாள் அனன்யா.

“வீண் போராட்டம் அனு. அமைதியா வந்துட்டால் உனக்கு நல்லது. இல்லனா வலுக்கட்டாயமாக உன்னை அடைந்தே தீருவேன்…” என்று அவளை நெருங்க முயற்சி செய்தான்.

“அது உன்னால் முடியாதுடா. இந்த அனன்யாவை அவ்வளவு ஈசின்னு நினைச்சியா? உன்னைப் போலப் பொம்பளை பொறுக்கியை நான் சும்மா விட மாட்டேன்…” என்று ஆத்திரமாகக் கத்தினாள்.

“பொம்பளை பொறுக்கியா? பொம்பளை பொறுக்கினா என்ன அர்த்தம் தெரியுமா? நான் இதுவரை ஒரு பெண்ணைக் கூடத் தொட்டது இல்லை. இதயாவை தொட ஆசைப்பட்டேன். ஆனால் அவள் அடம் பிடித்து அநியாயமா உயிரை விட்டாள்.

இப்போ நீயும் என்கிட்ட ஆட்டம் காட்டுற. என்னைக் கோபப்படுத்துவது உனக்கு நல்லது இல்லை. என் கோபம் வெறியா மாறினால் அப்புறம் நீயும் இதயா போன இடத்துக்கே போக வேண்டியது தான். உயிர் மேல ஆசை இருந்தால் நீயே என் பக்கத்தில் வந்துடு…” என்று தாவி தன்னை விட்டு விலகி இருந்தவளை மீண்டும் கைபற்றியிருந்தான்.

திக்கென்று அதிர்ந்து போனாள் அனன்யா. முதல் தடவை மாட்டிய போதே போராடி தான் அவனிடமிருந்து தப்பியிருந்தாள். இப்பொழுது மீண்டும் மாட்டிக் கொண்டாள். அதிலும் அவன் பிடி வலுவாக இருக்க, இப்போது அவனிடமிருந்து தப்பிக்க முடியாதோ? என்று பயந்து போனாள்.

கவியுகன் எப்படியும் வந்து விடுவான் என்று தெரியும். அதற்குள் தனக்கு எதுவும் ஆகவிடாமல் காத்துக் கொள்ள வேண்டுமே என்று தவிப்பாக இருந்தது.

இவனிடம் தன் பயத்தைக் காட்டினால் எல்லாம் தப்பிக்க முடியாது என்று தோன்றியது.

அவனின் கை அவளைச் சுற்றி வளைத்திருக்க, தலையைக் குனிந்து அந்தக் கையை நறுக்கென்று கடித்தாள்.

“ஏய்…” என்று கத்தியவன் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

அவன் கை வலுவை இழந்த அந்த நொடியைப் பயன்படுத்தி, முழங்கையால் அவனின் அடி வயிற்றில் ஒரு குத்து விட்டாள்.

வயிறு கலங்கியது போல் ஆக, “ஆஆ…” என்று துடித்தவனுக்கு ஆத்திரம் சுர்ரென்று ஏறியது.

அவ்வளவு நேரம் அவளை அடைய வேண்டும் என்ற வெறியில் இருந்தவனுக்கு இப்போது கண்மண் தெரியாத கோபத்தில் ஆவேசம் வர, பளீரென்று ஒரு அறை விட்டான்.

அதில் அனன்யாவிற்குப் பொறி கலங்கிப் போனது போலானது.

“என்னையே அடிகிறயாடி? இனியும் உன்னைச் சும்மா விட மாட்டேன்…” ஆத்திரம் வந்தது போல் அவள் மேல் பாய்ந்தவன் அவள் முடியை கொற்றாக பற்றி அருகில் இருந்த மேஜையில் அவளின் தலையை மோதினான்.

“அம்மா…” என்று அனன்யா அலற, அவளின் நெற்றியிலிருந்து உடனடியாக ரத்தம் வெளியேற ஆரம்பித்தது.

கண்களும் இருட்டிக் கொண்டு வர, ஆவேசம் குறையாமல் அவளை அப்படியே படுக்கையில் தள்ளி விட்டான்.

இனி, தான் அவ்வளவுதான் என்று அனன்யா பதற, அவளின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.

தலையிலிருந்து ரத்தம் வெளியேற, அது அவளை விழிப்புடன் இருக்க விடவில்லை.

அவளை மயக்கம் ஆட்கொள்ள, அந்த ஆண் மிருகமும் அவளை ஆட்கொள்ள மேலே பாய்ந்தது.

அதே நேரம் அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே பாய்ந்தான் கவியுகன்.

“புவன்!” என்று அதட்டி அழைத்துக் கொண்டே அவனின் முடியைப் பிடித்துப் பின்னால் இழுத்தான் கவியுகன்.

அவன் வரவை எதிர்பாராமல் விழித்தாலும், “ச்சு, அதுக்குள்ள வந்துட்டியா நீ?” என்று சாதாரணமாகக் கேட்டான்.

அனன்யாவின் நிலையை நொடியில் கண்களில் வாங்கிய கவியுகன், பளாரென்று புவனேந்திரன் கன்னத்தில் அறைந்தான்.

“நான் கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். ஆதாரம் வேணும் என்று தேடி அலையாம, உன்னை நேத்தே தூக்கி உள்ளே போட்டுருக்கணும்…” என்று தன் மீதே குற்றம் சொல்லிக் கொண்டே அவனை இன்னும் அடித்தவனுக்குக் கோபம் அடங்குவேனா என்றது.

“ஹாஹாஹா… நான் சுத்த விட்ட சுத்தல் சுகமா இருந்ததா அண்ணா?” என்று தான் மாட்டிக் கொண்டோம் என்ற கவலை சிறிதும் இல்லாமல் நக்கல் அடித்தான் புவனேந்திரன்.

கவியுகன் அவனைக் கோபமாக முறைக்க, “இவனை என்கிட்ட விடுங்க சார். அவன் உங்களைச் சும்மாவா சுத்தலில் விட்டான்? எல்லாப் பழியையும் என் மேல தூக்கிப் போட்டு என்னை ஜெயிலில் தள்ள பார்த்தான். இவனை நான் சும்மா விட மாட்டேன்…” என்று நவநீதன் புவனேந்திரன் மீது பாய்ந்தான்.

“நீயும் வந்துட்டியா?” என்று இலகுவாகக் கேட்டவன், நவநீதனை தடுக்க முயன்று கொண்டே, “இப்பவும் நீ தான் குற்றவாளி. கவியுகன் திரட்டிய ஆதாரம் எல்லாம் உனக்கு எதிராகத்தான் இருக்கு. என்னோட ஆளுங்களும் உனக்கு எதிராகத்தான் சாட்சி சொல்லுவாங்க…” என்று புவனேந்திரன் அலட்சியமாகச் சொல்ல,

அவன் சொன்னதைக் கேட்டுக் கோபம் தலைக்கேற, அவனை அடிக்க ஆரம்பித்தான் நவநீதன்.

“நவநீதா, அவனை விடு!” என்று அவனை விலக்கி நிறுத்திய கவியுகன், “தப்பு புவன். நவநீதன் குற்றவாளி இல்லை என்று நீயே உன் வாயால் சொன்ன வாக்குமூலம் இப்ப என்கிட்ட இருக்கு. இனி நீ தப்பிக்க முடியாது…” என்றான்.

புவனேந்திரனின் முகம் மாறியது.

“என்ன? எப்படி என்று பார்க்கிறாயா?” என்று கேட்டவன், அனன்யா அருகில் சென்று அவள் கழுத்தில் இருந்த செயினைக் காட்டினான்.

அதில் இருந்த டாலரை காட்டி, “இதில் ஜிபிஎஸ் மட்டும் இல்லை. கேமிராவும் இருக்கு. அனன்யாகிட்ட நீ சொன்னது எல்லாம் லைவா ரெக்கார்ட் ஆனது மட்டும் இல்லை. அதோட காபி என் போனிலும் வந்து ஸ்டோரேஜ் ஆகிருச்சு…” என்றான்.

இதைப் புவனேந்திரன் எதிர்பார்க்கவில்லை. அனன்யாவிடம் அனைத்தையும் சொன்னாலும், போலீஸில் மாட்ட வைக்கும் போது மாற்றிப் பேசி போலீஸை குழப்பி விட்டுவிடலாம் என்பது தான் அவனின் எண்ணமாக இருந்தது. மணிமாறனும், டாக்டர் ரஞ்சனும் கூடத் தனக்கு ஆதரவாகத் தான் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியும். அதனால் கொஞ்சம் அலட்சியமாகத் தான் இருந்தான்.

ஆனால், இப்படித் தன் வாயிலிருந்தே வாக்கு மூலம் வாங்கித் தன்னை மாட்டி விடுவார்கள் என்று எதிர்பாராமல் கோபம் தலைக்கேற, கவியுகனை தாக்க போனான்.

அவனின் அடி தன் மீது விழாமல் விலகி, கராத்தே அடி மூலம் அவனை முடக்கியவன், “இனி நீ தப்பிக்க முடியாது புவன். அங்கே பார்…” அவனின் கையைக் கிடுக்குப் பிடி போட்டு, மடக்கிக் கொண்டே அப்போது உள்ளே நுழைந்த காவல்துறையினரை காட்டினான்.

அவர்கள் வந்து புவனேந்திரனை கைது செய்தனர்.

சில போலீஸ் பார்மாலிட்டிஸ் முடிந்ததும், அனன்யாவின் அருகில் வந்தான் கவியுகன். அவள் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்திருக்க, அவள் இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள்.

தனது கைக்குட்டையை வைத்து அவள் ரத்தத்தைத் துடைத்தவன், “அனு, போதும் உன் நடிப்பு. எழுந்திரு!” என்றான் மென்மையாக.

அதுவரை கண்களை இறுக மூடியிருந்த அனன்யா, ஒற்றைக் கண்ணை மட்டும் திறந்து அவனைப் பார்த்தாள்.

“ஹேய், என்னை அனு என்று கூப்பிட்டீங்க…” என்று சந்தோஷத்துடன் கூவினாள்.

கவியுகன் உதட்டில் உறைந்து போன சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.

“ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் யுகா. என் நடிப்பை கூடக் கண்டுபிடிச்சால் எப்படி?” என்று சிணுங்கினாள்.

“தலையில் ரத்தம் வந்தாலும் சின்னக் காயம் தான். எதிலாவது உன் தலை மோதியிருக்கணும். மோதிய வேகத்திற்குக் கண்டிப்பா கிறுகிறுப்பு வந்திருக்கும். ஆனால், ஆழ்ந்த மயக்கம் வந்திருக்காது…” என்று பிட்டு பிட்டு வைத்தான்.

அவனை வியந்து பார்த்தவள், “உண்மை தான் யுகா. மயக்கம் வருவது போல் இருந்தது. ஆனால் புவன் கையில் மாட்டிக்கிட்டு இருக்கும் போது மயங்கினால் அதோ கதி தான் என்று, மயங்காமல் இருக்க முயற்சி செய்தேன். அந்த நேரத்தில் சரியா நீங்க வந்துட்டீங்க…” என்றாள்.

“அது சரி, எதுக்காக இந்த நடிப்பு?” என்று புருவத்தை உயர்த்தி உதட்டை வளைத்து கேட்டான்.

“நான் ரத்தம் வழிய மயக்கமா இருப்பதைப் பார்த்து, அப்படியே பாய்ந்து வந்து, என்னைத் தூக்கி, அனு… அனு உனக்கு என்னாச்சு? ஐ லவ் யூ அனு. என்னை விட்டு போயிடாதே அனு… அப்படின்னு கதறுவீங்க எனப் பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் இல்லாம பொசுக்குன்னு நடிப்பு என்று சொல்லிட்டீங்களே?” என்று சோக கீதம் பாடினாள்.

கவியுகனின் புன்னகை பெரிதானது.

“ரொம்பச் சினிமா பார்த்து கெட்டுப் போயிட்ட. எழுந்திரு! ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்று அவளை அழைத்தான்.

“இவ்வளவு தானா உங்க ரியாக்சன்?” பியூஸ் போன பல்ப்பாக அவளின் முகம் சுருங்கிப் போனது.

“வேற என்ன எதிர்பார்க்கிற நீ?” என்று கேட்டான்.

“இப்பவாவது உங்க மனதில் என்ன இருக்கு என்று சொல்வீங்க என்று எதிர்பார்த்தேன். அட்லீஸ்ட் அந்தப் புவனையாவது உள்ளே நுழைந்ததும் புரட்டி எடுப்பீங்க என்று பார்த்தேன். ஆனால் இரண்டு அறையோட விட்டுட்டீங்க…” என்றாள் ஏமாற்றமாக.

“பிராட்டிகலா யோசி அனு. நாம ஏற்கெனவே போலீஸுக்கு தகவல் சொல்லாமல் நிறைய வேலை பார்த்திருக்கோம். இந்த நிலையில் நேத்து நைட்டே, சென்னை அசிஸ்டெண்ட் கமிஷனர் ஷர்வஜித்கிட்ட பேசி இங்கே உள்ள இன்ஸ்பெக்டர் கிட்ட தகவல் சொல்லி, எனக்கு ஒரு நாள் நைட் இந்தக் கேஸுகாக டைம் வாங்கித் தான் நவநீதனை தேடி போனேன்.

ஷர்வஜித் என்னோட ஃபிரண்ட் என்பதால் இது சாத்தியம் ஆச்சு. அப்படியும் புவன்கிட்ட இருந்து வாக்குமூலம் வாங்க முடியலை என்றால் என்ன செய்வது என்ற பயம் இருந்தது. இந்த நிலையில் நீ அவன்கிட்ட மாட்டிகிட்டது எல்லாம் பெரிய பதட்டத்தைக் கொடுத்துருச்சு.

உனக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் என்னையே என்னால் மன்னித்திருக்க முடியாது. போலீஸை நைட்டே கேஸை டீல் பண்ண விட்டுருக்கணும் என்று பதட்டத்தோடத்தான் உன்னைத் தேடி வந்தேன்.

என்கிட்ட இருந்த கள்ளச்சாவியால் கதவை திறந்து உள்ளே வந்து உன் நிலையைப் பார்த்ததும் எனக்குப் பதட்டம் தான். அதான் அவனை அறைந்தேன். ஆனால், அதுக்கு மேல அடித்தால் போலீஸுக்குப் பதில் சொல்லி மாளாது. ஏற்கெனவே அந்த இன்ஸ்பெக்டர் முன்னாடியே ஏன் கம்ளைண்ட் செய்ய வராம நீங்களா கேஸை டீல் செய்தீங்க என்று கோபப்பட்டார்.

ஷர்வஜித்தால் தான் ரொம்ப ஹார்ஷா என்கிட்ட பிகேவ் பண்ணலை. இதுக்கு மேல அவருக்கும் எனக்கும் உரசல் வேண்டாம் என்றுதான் கொஞ்சம் அடக்கி வாசித்தேன். போலீஸ்காரங்க ஆதரவு நமக்கு எப்பவும் வேணும்.

புவனேந்திரனை இனி போலீஸ் கவனித்துக் கொள்ளும். அதோட இந்த நேரம் மணிமாறனையும், லஞ்சம் வாங்கிய இரண்டு டாக்டர்ஸையும் அரெஸ்ட் செய்திருப்பாங்க. அதனால் இனி அதைப் பற்றிக் கவலைப்படாமல் கிளம்பு!” என்றான்.

‘அட! பிராட்டிக்கலுக்குப் பிறந்தவனே!’ என்பது போல் அவனைப் பார்த்து வைத்தாள் அனன்யா.

அவ்வளவு பேசியவன் அப்போதும் அவன் மனதை சொல்லவில்லை என்று சுணங்கிப் போனாள்.

அவனிடம் ரொம்ப எதிர்பார்த்து தான் ஏமாந்து போகிறோம் என்று புரிந்தது.

அவள் எதிர்பார்த்தது போல் ‘அனு’ என்று அழைக்கிறான் என்று ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருந்தது.

அவளை மேலும் யோசிக்க விடாமல் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பினான்.

அவனுடன் நவநீதனும் வந்தான்.

“ரொம்ப நன்றி சார். நீங்க மட்டும் இல்லனா, இப்போ போலீஸில் நான் மாட்டியிருப்பேன். இல்லனா அந்தப் புவன் என் உயிரை எடுத்திருப்பான்…” என்று நன்றி நவிழ்தான் நவநீதன்.

“என்னோட கடமையைச் செய்தேன் நவநீதா…” என்று முடித்துக் கொண்டான் கவியுகன்.

அவர்கள் மருத்துவமனைக்குச் சென்ற போது அதிர்ந்து போன முகத்துடன் ரவீந்திரன் குடும்பத்தினர் அவர்களை எதிர்கொண்டனர்.

“அதுக்குள்ள விஷயம் இவங்களுக்குத் தெரிந்துவிட்டதா யுகா?” அவனை நெருங்கி மெதுவான குரலில் கேட்டாள்.

“தெரியலை. வா, என்ன என்று கேட்போம். ஒருவேளை ரவி…?” என்ற கேள்வியுடன் அவர்களை விரைந்து நெருங்கினான்.

அனன்யாவை பார்த்ததும், அதுவரை ஓரமாக நின்று அழுது கொண்டிருந்த உதயா, ஓடி வந்து அவளின் தோளில் சாய்ந்து, “அனன்யா… இந்தப் புவன் அத்தான்… அத்தான்…” என்று சொல்லி விக்கி விக்கி அழுதாள்.

“என்னாச்சு உதயா? புவனுக்கு என்ன?” ரவியைப் பற்றி இல்லாமல் புவனைச் சொல்லி அழவும், ஒருவேளை போலீஸ் அரெஸ்ட் செய்தது தெரிந்துவிட்டதோ என்று நினைத்தாள்.

“அவர் தான் ரவி அத்தானை கொல்ல ஆள் அனுப்பியிருக்கார்…” என்று சொல்லி அழுதாள்.

“உனக்கு யார் சொன்னது?” என்று அமைதியாகக் கேட்டாள்.

“ரவி அத்தானுக்கு நினைவு வந்திருச்சு. அவர் தான் சொன்னார். அதோட இதயாவையும்…” என்று சொல்லி அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் கதறி அழ ஆரம்பித்தாள்.

அவள் அழுகையைக் கண்டு வருத்தமாக இருந்தது.

ரவீந்திரனின் அன்னை ஒரு பக்கம் கதற, தனசேகர் இடிந்து போய் அமர்ந்திருந்தார். காஞ்சனா தன் மகளை நினைத்து அவர் ஒரு பக்கம் அழுதார்.

அவர்களிடம் மெதுவாகப் புவனேந்திரன் செய்ததையும், இப்போது காவல் நிலையத்தில் இருப்பதையும் கவியுகனும், அனன்யாவும் தெரிவித்தனர்.

அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உடைந்து போனார்கள்.

அடுத்து ரவீந்திரனை சென்று இருவரும் சந்தித்தனர்.

ரவீந்திரன் உடல்நிலையில் முன்னேற்றம் வந்திருக்க, அவர்களைக் கண்விழித்துப் பார்த்தான்.

“நாங்க வந்த வேலையை முடிச்சு கொடுத்துட்டோம் ரவி…” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்ததைச் சொன்னான் கவியுகன்.

வருத்த முறுவலுடன் அவனைப் பார்த்தான் ரவீந்திரன்.

“எ… எனக்கு வருத்தப்படுவதா… சந்தோஷப்படுவதா என்றே தெரியலை கவின். என் தம்பியே இப்படி இருப்பான்னு நான் எதிர்பார்க்கலை. எனக்கு உண்மை தெரிய வந்த போது உடைந்து போனேன். அவனை எதுவும் செய்ய முடியாம என் அம்மாவை காட்டி என் கையைக் கட்டிப் போட்டுட்டான். ஸாரி கவின், அவனுக்குப் பயந்து தான் உன்னை வீட்டை விட்டுப் போகச் சொன்னேன்…” என்றான் வருத்தமாக.

“எனக்குப் புரியுது ரவி…” என்று அவன் கையை அழுத்திக் கொடுத்தான்.

“உடம்பு தேறி வாங்க ரவி…” என்று ஆறுதலாகச் சொன்னாள் அனன்யா.

“ம்ம், சாரிங்க… உங்களையும் அவன் கஷ்டப்படுத்திட்டான்…” என்று மன்னிப்பு கேட்டான்.

அவனுக்கு இருவருவமே ஆறுதல் சொல்லி, முடிந்த வரை தேற்ற முயன்றனர்.

அவனுக்கு முன்பே உண்மை தெரியும் என்பதால் சற்று தேறியும் கொண்டான்.

“சரி ரவி. நாங்க இன்னைக்கே ஊருக்கு கிளம்புறோம்…” என்றான் கவியுகன்.

“ரொம்ப நன்றி கவின்…” என்றான் ரவீந்திரன்.

அவனிடம் விடைபெற்று வெளியே வந்து, குடும்பத்தினரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர்.

உதயா தான் மிகவும் உடைந்து போயிருந்தாள். அவளுக்குத் தேறுதல் சொல்லி, விடைபெற்று கவியுகனுடன் நடந்த அனன்யா, “பாவம் உதயா!” என்றாள்.

கவியுகன் அவளைக் கேள்வியாக நிமிர்ந்து பார்க்க, “நேசித்தவன் பொய்த்துப் போனது அவளுக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்திருக்கும்?” என்றாள்.

“ம்ம், கஷ்டம் தான். ஆனால், புவன் போல நிலையில்லாத மனம் உள்ளவன்கிட்ட இருந்து உதயா தப்பிவிட்டாள் என்று நாம சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்…” என்றான்.

“அதென்னவோ சரி தான். உதயா மேல அவனுக்கு விருப்பமே இல்லாம சும்மா நடிச்சிருக்கான். அவன்கிட்ட இருந்து அவள் தப்பிச்சது நல்ல விஷயம் தான்…” என்றவள், “பேசாம ரவி, உதயாவை கல்யாணம் பண்ணிக்கலாம்…” என்றாள்.

“அது அவங்க எடுக்க வேண்டிய முடிவு அனு. காலம் அவங்க இரண்டு பேர் ரணத்தையும் ஆற்றும். அப்போ அவங்க ஜோடி சேரலாம்…” என்றான் கவியுகன்.

“அப்படி மட்டும் நடந்தால் ரொம்பச் சந்தோஷமா இருக்கும்…” என்று அனன்யா சொல்ல,

“எனக்கும் கூட!” என்றான் கவியுகன்.

*********

கவியுகனும், அனன்யாவும் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

கவியுகன் சாலையைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டு காரை செலுத்திக் கொண்டிருக்க, அவன் அருகில் அமர்ந்திருந்த அனன்யா அவன் முகத்தைப் பார்ப்பதும், சாலையைப் பார்ப்பதுமாகக் கண்களால் சடுகுடு ஆடிக் கொண்டிருந்தாள்.

அவள் தன் காதலை சொன்னதற்கு அவன் முடியாது என்று மறுத்திருந்தாலும் இவ்வளவு தவிப்பு இருந்திருக்காது போலும். அவன் அப்புறம் பேசுவோம் என்று தள்ளிப் போட்டது தான் அவளைத் தவிக்க வைத்துக் கொண்டிருந்தது.

அவனாகப் பேசும் வரை அமைதியாக இருப்போம் என்று நினைத்தாலும், அவளால் முடியும் என்று தோன்றவில்லை.

இப்போதே பேசிவிட அவளின் உள்ளம் தவித்து உதடுகளுக்குத் தூது விட்டது.

ஆனால் உதடுகளைப் பற்களால் அழுத்தி அடக்கிக் கொண்டாள்.

ஆனாலும் முடியாமல் போக, சட்டென்று தன் கைபேசியை எடுத்து கவியுகனின் அன்னை மாதுரிக்கு அழைத்தாள்.

“என்ன பிள்ளையைப் பெத்து வச்சுருக்கீங்க அத்தை? ஒரு பேச்சை ஆரம்பிச்சா முடிக்க வேண்டாமா?” என்று எடுத்ததும் பொரிந்தாள்.

அவள் பேச்சுப் புரியாமல் அந்தப் பக்கம் முழித்தார் மாதுரி.

“என்ன கேட்குற அனுமா? ஒன்னும் புரியலையே?” என்று குழப்பத்துடன் கேட்டார்.

“என்னோட அவஸ்தை உங்களுக்கும் புரியாது. உங்க பிள்ளைக்கும் புரியாது…” என்று கடுப்பாகக் கத்திக் கொண்டிருக்கும் போதே, காரை ஓரமாக நிறுத்தி, அவளின் கைபேசியைப் பறித்த கவியுகன்,

“அம்மா, உங்க மருமகளுக்கு எல்லாத்திலேயும் அவசரம் தான். அவள் அப்புறம் உங்ககிட்ட பேசுவாள். இப்ப வைங்க…” என்று பேசி முடித்து அழைப்பை அணைத்து விட்டு அவள் புறம் திரும்பினான்.

“இப்ப என்ன வேணும் உனக்கு?” என்று நிதானமாகக் கேட்டான்.

“என்ன வேணும்? ஒன்னும் வேணாம்!” என்று கோபமாக முகத்தைத் திருப்பினாள் அனன்யா.

அவள் கன்னத்தில் கை வைத்து தன் பக்கம் அவளைத் திருப்பியவன், நெற்றியில் இருந்த அவளின் காயத்தில் இருந்த கட்டை ஒற்றை விரலால் மென்மையாக வருடினான்.

அவள் கண்களை விரித்து வியப்பாக அவனைப் பார்க்க, “வலிக்குதா?” என்று மென்மையாகக் கேட்டான்.

‘இல்லை’ என்று அவளின் தலை தன்னால் அசைந்தது.

“அனு…” என்று மயிலிறகால் வருடுவது போல் அழைத்தவன், அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே, “எனக்கும் உன்னைப் பிடிக்கும்!” என்றான்.

“பிடிக்கும்னா?” என்று மெல்ல கேட்டாள்.

“உனக்கு என்னைப் பிடிக்கும் முன்பே எனக்கு உன்னைப் பிடிக்கும்!” என்றான்.

அவன் சொன்னதை நம்ப முடியாமல், வாயை பிளந்து பெரிது பெரிதாக மூச்சு விட்டு அவனைப் பார்த்தாள்.

“என்ன, நம்ப முடியலையா?” என்று கேட்க,

அவளின் தலை ‘ஆமாம்’ என்பதாக அசைந்தது.

“அத்தை… அத்தை என்று நீ என்னோட அம்மாவை சுத்தி வரும் போதெல்லாம் முதலில் பொறாமையா இருக்கும். ஆனால் அதுக்குப் பிறகு உரிமையா என்னோட அம்மாவை அத்தை என்று கூப்பிடுகிறவள், என்னை மட்டும் எந்த உறவும் சொல்லி கூப்பிட மாட்டிங்கிறாளே என்று கோபம் வரும்.

அது உரிமை கோபம்! நீ எனக்கு உரிமையாகவில்லையே என்ற கோபம்! அந்தப் கோபம் தான் உன் மேல் எனக்கு உரிமை வந்துவிட்டது என்பதை உணர்த்தியது…” என்றான் சின்னச் சிரிப்புடன்.

“யுகா!” நம்ப முடியாமல் அழைத்தாள்.

“நீ நம்பித்தான் ஆகணும். இதுதான் உண்மை…” என்றான்.

“அப்புறம் ஏன் நீங்க முன்னாடியே சொல்லலை?” என்று கேட்டாள்.

“ஏன்னா, நான் உன்னைப் போல அவசரக்காரன் இல்லை…” என்றதும் முறைத்தாள்.

“நீயே யோசித்துப் பார்! எப்படிச் சொல்ல முடியும்? நீ இயல்பா சாதாரணமாகத்தான் என்கிட்ட பழகின. என் மீது வேற எந்த உணர்வும் உனக்கு இல்லை. கொஞ்சமாவது உனக்கு என் மேல் உணர்வு வரணும் என்று நினைத்தேன். அது இளஞ்சோலைக்கு வந்த பிறகு தான் வந்திருக்கு. நீ தான் லேட் பண்ணிட்ட…” என்று சொல்லி தோளை குலுக்கினான்.

“அப்போ என்னால் தான் லேட்டா?” என்று சிணுங்கினாள்.

“ஆனாலும், நீங்க முன்னாடியே சொல்லியிருந்தால் நான் அப்பவே மாறியிருப்பேன்…” என்றாள்.

“நான் உன்னை மாற்றணும் என்று நினைக்கலை. தானாக உன் மனதில் மாற்றம் வரணும் நினைத்தேன்…” என்றான்.

“நல்லா நினைச்சீங்க போங்க…” என்று அலுத்துக் கொண்டாள்.

“ஹாஹா! எல்லாத்துக்கும் நேரம் வரணும் மேடம்…” என்றான்.

“எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இந்தச் சந்தோஷத்தில் அப்படியே….” என்று கேட்டு அவள் நிறுத்த,

“அப்படியே? என்னைக் கட்டிக்கணும் போல இருக்கா?” என்று கண்சிமிட்டி கேட்டவன், உடனே செயல்படுத்துபவன் போல, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

கவியுகனின் கைகளில் சந்தோஷமாக அடங்கிக் கொண்டாள் அனன்யா.

சில நிமிடங்களில் அவர்களைக் கலைத்தது அலைபேசி அழைப்பு.

மாதுரி மகனின் போனுக்கு அழைத்து விட்டார்.

“மருமகளுக்கு ஏற்ற மாமியார் தான். அதுக்குள்ள உன் மாமியாருக்கு பொறுக்க முடியலை பார்!” என்று சிரித்துக் கொண்டே சொல்லியவன், அழைப்பை ஏற்றான்.

“டேய் தம்பி, என்ன நீயும் மருமகள் என்று சொல்ற?” என்று அந்தப் பக்கமிருந்து கூவலாகக் கேட்டார் மாதுரி.

“மருமகளை மருமகள் என்று சொல்லாமல் வேற எப்படிச் சொல்வதாம்?” என்று கேலியாகக் கேட்டான்.

“அப்ப… அப்ப… அப்படியாடா சேதி?” என்று மகிழ்ச்சியுடன் கேட்டார்.

“ஆமாம் மா…” என்றான் புன்னகையுடன்.

“சீக்கிரம் ஊர் வந்து சேருங்க. உங்க இரண்டு பேரையும் எனக்குப் பார்க்கணும் போல இருக்கு…” என்று சந்தோஷத்துடன் அழைப்பைத் துண்டித்தார்.

“நாம ஊர் போய்ச் சேருவதற்குள் உன் மாமியார் அங்கே எல்லாருக்கும் விஷயத்தைச் சொல்லிடுவாங்க…” என்று சிரித்துக் கொண்டே காரை எடுத்தான் கவியுகன்.

“நானும் என் மாமியாரும் எப்பவுமே ஸ்பீட் தானாக்கும்…” என்று பெருமை பீற்றிக் கொண்டாள் அனன்யா.

“ஆமாம்மா… உன் பெருமையை வச்சு எருமை தான் மேய்க்கணும்…” என்று கிண்டல் அடித்தான்.

“யுகா…” என்று சிணுங்கி, அவன் புஜத்தில் குத்தினாள் அனன்யா.

இருவரும் கிண்டலும், கேலியுமாகப் பேச்சை தொடர்ந்து கொண்டிருக்க,

“யுகா, பேசாம நம்ம டிடெக்டிவ் ஏஜென்ஸி பெயரை மாற்றினால் என்ன?” என்று திடீரெனக் கேட்டாள் அனன்யா.

“ஏன் இப்ப இருக்கும் பேருக்கு என்ன குறைச்சல்?” என்று கேட்டான் கவியுகன்.

“யுகா என்று மொட்டையா இருக்கு. நல்லாவே இல்லை. அதுக்குப் பதில் உங்க பெயர் கடைசி எழுத்துக்களையும், என் பெயர் கடைசி எழுத்துக்களையும் சேர்த்து, ‘யுகன்யா டிடெக்டிவ் ஏஜென்ஸி!’ என்று வைத்து விடலாம். எப்படி இருக்கு?” என்று பெருமையுடன் புருவம் உயர்த்திக் கேட்டாள்.

“இப்ப இது ரொம்ப முக்கியமா என்ன?” என்று முறைத்துக் கொண்டே கேட்டான்.

“வேறு எது முக்கியம்?”

“முதலில் உன்னைக் கராத்தே கிளாஸ் அனுப்பணும். முதல் முதலில் அட்டர்ன் செய்த கிரைம் கேஸ்லேயே அடி வாங்கிக் கட்டு போட்டுட்டு வந்துட்ட. அதனால், இனி கராத்தே கத்துக்கிட்டு வந்த பிறகு தான் உனக்கு அடுத்தக் கிரைம் கேஸ் கொடுப்பேன்…” என்றான் கண்டிப்புடன்.

“யுகா, இது அநியாயம்…” என்று கத்தினாள் அனன்யா.

“இதுதான் நியாயம்!” என்று உறுதியாகச் சொன்னான் கவியுகன்.

எதிர்கால வாழ்க்கை திட்டமிடலுடன் கலகலப்பாகத் தொடர்ந்தது கவியுகன், அனன்யாவின் வாழ்க்கை பயணம்!

***சுபம்***

ஒரு வேண்டுகோள் நண்பர்களே! கதையின் சஸ்பென்ஸை உடைத்து விடாமல், உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.