யுகன்யா – 25

அத்தியாயம் – 25

“அப்போ… நீ… நீ… இதயாவை?” என்று திணறிய படி கேட்டாள் அனன்யா.

“எஸ், நான் அவளை விரும்பினேன். எனக்குப் பிடிச்சிருந்தது…” என்றான் புவனேந்திரன்.

“என்ன சொல்ற நீ? அவள் உன்னோட அண்ணி…” என்றாள் அதிர்வுடன்.

“அது என் அண்ணனுக்கும், அவளுக்கும் கல்யாணம் நடந்திருந்தால். அது தான் நடக்கலையே? நடக்க நான் விடலையே? அப்புறம் அவள் எப்படி என் அண்ணி ஆவாள்?” என்று அலட்சியமாகக் கேட்டான்.

இவனுக்குள் இப்படி ஒருவனா? எவ்வளவு கலகலப்பாக நல்லவன் போல் வெளியே சுற்றினான். ஆனால் அவனுக்குள் எப்படி இப்படி ஒரு வக்கிர குணம் இருக்கிறது? நினைக்க நினைக்கத் தாளவில்லை அனன்யாவிற்கு.

“இருந்தாலும் உன் அண்ணி ஆக இருந்தவளை போய் விரும்பினேன்னு சொல்றியே… உனக்கு வெட்கமா இல்லையா?” என்று கேட்டாள்.

“திரும்பத் திரும்ப அண்ணி என்று சொல்லாதே! கேட்கவே எரிச்சலா இருக்கு…” என்றான் முகத்தைச் சுளித்து.

“உன் அண்ணனுக்கு இதயா தான் என்று ஏற்கெனவே முடிவானது தானே? அப்படி இருக்கும் போது அவள் மேல் உனக்கு எப்படி நினைப்பு போச்சு?” என்று கேட்டாள்.

“அண்ணனுக்கு இதயாவை பேசிய போது கூட என் மனதில் எந்த எண்ணமும் இல்லை. ஆனால், எனக்கு உதயாவை பேசிய போது தான் அண்ணனுக்கு மட்டும் எவ்வளவு அழகான மனைவி! எனக்கு மட்டும் ஏன் அப்படி இல்லையென்று தோன்றியது. அதுதான் ஆரம்பம்! 

அவன் மட்டும் அழகான பொண்ணைக் கட்டி சந்தோஷமா வாழுவான். நான் மட்டும் அசிங்கமா, கண்ணாடி இல்லைனா கண்ணு சரியா தெரியாத பொண்ணைக் கட்டிக்கிட்டு வாழணுமா என்ன?” என்று கேட்டான்.

“அப்போ உனக்கு உதயாவை பிடிக்காதா? பிடிச்சவன் போல நடந்துக்கிட்ட? அவள் கல்யாணம் நின்னு போகட்டும் என்று சொன்னதுக்குக் கோபப்பட்ட?”

“நல்லவன்னு நான் போட்ட வேஷத்தை மெயின்டெயின் பண்ண வேண்டாமா?” என்று கேட்டான் நக்கலாக.

“நீ இவ்வளவு மோசமானவனா? இதயா என்ன தப்பு செய்தாள் என்று அவளைக் கொன்ன? உனக்கு வேற அழகான பொண்ணு தான் வேணும்னா… உங்க வீட்டில் சொல்லி வேற பொண்ணு பார்த்திருக்க வேண்டியது தானே?” என்று கேட்டாள்.

“என்ன பண்றது? என் கண்ணு இதயா பக்கம் தான் போச்சு. அவளை நானே கட்டிக்கிட்டால் என்னவென்று தோன்றியது. அவள் மனசை என் பக்கம் திருப்பிட்டால் அவள் எனக்குக் கிடைப்பாள் என்று நினைச்சேன்.

ஆனால், என் பக்கம் அவள் பார்வை திரும்பாத அளவுக்கு என் அண்ணன்காரன் அவளை மயக்கி வச்சுருந்தான். இதயாகிட்ட நான் கேட்டப்பவே அவள் சரின்னு சொல்லியிருந்தால் அவள் செத்திருக்கவே மாட்டாள்…” என்றவன் தோளை குலுக்கிக் கொண்டான்.

“இதயா கிட்ட நீ கேட்டியா?”

“ஆமாம், என்னைக் கட்டிக்கச் சொல்லி கேட்டேன். ஆனால், அவள் நான் ஏதோ விளையாடுவதாக நினைச்சுட்டாள். நான் விளையாடலை. சீரியஸா தான் கேட்டேன்னு அவள் செத்த அன்னைக்குத் தான் அவளுக்குப் புரிந்து இருந்திருக்கும். நான் இரண்டு, மூன்று முறை கேட்டும் அவள் சும்மா விளையாடாம போ புவன் அத்தான்னு சொல்லிட்டாள்.

எனக்குச் செம கடுப்பாயிருச்சு. அதுவும் அவள் கல்யாணம் வேற நெருங்க, நெருங்க அதற்குள் ஏதாவது செய்யணும்னு அவள்கிட்ட நேரா பேச அன்னைக்கு அவள் வீட்டுக்குப் போனேன். உதயா அப்போ எங்க வீட்டில் இருந்தது எனக்கு வசதியா போயிருச்சு. அன்னைக்கு இதயாகிட்ட நான் அவளை எவ்வளவு விரும்புறேன்னு சொன்னேன். கட்டினால் அவளைத் தான் கட்டுவேன்னு சொன்னேன்.

ஆனால், அவள் உன் அண்ணனுக்குத் துரோகம் செய்ற, உதயாவுக்குத் துரோகம் பண்றன்னு பாட்டு படிச்சாள். எனக்கு ஆத்திரமா வந்தது. அவள் என் வழிக்கு வர மாட்டாள் என்று புரிந்து போயிருச்சு. அதனால் நான் இன்னொரு சுலபமான வழி சொன்னேன். ஆனால் அந்த முட்டாள் அதுக்கும் சம்மதிக்கலை…” என்று பல்லை கடித்தான் புவனேந்திரன்.

“என்ன கேட்ட?” என்று பயத்துடன் கேட்டாள் அனன்யா.

“என் அண்ணனையே கட்டிக்கோ. ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு முறையாவது என் கூடக் குடும்பம் நடத்து. அதை நினைச்சுக்கிட்டே அந்த உதயா கூட வாழ்ந்து முடிச்சிடுவேன்னு சொன்னேன். ஆனால் அவள் பெரிய இவள் மாதிரி குதிச்சாள்…” என்று அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு எரிச்சலுடன் சொல்ல,

“ச்சீ!” என்று அருவருத்துப் போனாள் அனன்யா.

“என்ன? என்ன ச்சீ? நான் கேட்டதில் என்ன தப்பு? நான் என் கூட வாழ்நாள் எல்லாமா வாழ கேட்டேன்? ஒரே ஒரு நாள். அதுக்கு அவளுக்கு வலிச்சிதோ?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.

அப்போது அவன் முகம் இத்தனை நாட்களில் இல்லாதவாறு விகாரமாக மாறியிருந்தது.

அவனின் மன விகாரம் முகத்திலும் பிரதிபலித்தது.

அனன்யா மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.

“கேட்க கூடாததைக் கேட்ட மாதிரி தாம்தூம்னு குதிச்சாள். ஒரே ஒரு முறைன்னு கெஞ்சி அவள் தோளில் கை வச்சால், என் கையைத் தட்டி விட்டுட்டாள். எனக்கு அப்ப வந்த கண்ணு மண்ணு தெரியாத ஆத்திரத்தில் அவள் கழுத்தை ஒரே பிடி பிடிச்சேன். எனக்குக் கிடைக்காத நீ எவனுக்கும் கிடைக்க வேண்டாம்னு சொல்லிக்கிட்டே பிடிச்சேன்.

ரொம்பத் துள்ளினாள். பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து என் கையை அறுக்க முயற்சி செய்தாள். அதில் லேசா என் கையில் வேற வெட்டிருச்சு. அப்படியும் நான் விடலையே? அவள் மூச்சு நின்ன பிறகு தான் அவளை விட்டேன். என் முன்னாடியே உயிரை விட்டாள்.

என் கையில் வந்த ரத்தத்தை அவள் சுடிதார் துணியைக் கிழித்து அதிலேயே துடைச்சுட்டு அவளைத் தூக்கி கிணற்றுக்குள் போட்டு, ஒன்னும் தெரியாதவன் போல, வீட்டுக்கு போய் உதயாகிட்ட சிரிச்சு சிரிச்சு பேசினேன். அந்தப் பேக்கும் நான் அவள் கூடப் பிறந்தவளை கொன்னுட்டு வந்தது தெரியாம கொஞ்சி பேசிட்டு இருந்துச்சு…” என்றான் கூலாக.

ஒரு கொலை செய்ததை அவன் சர்வ சாதாரணமாகச் சொல்ல, அனன்யாவின் மேனி நடுங்கியது.

“உனக்கு… உனக்கு ஓ பாசிடிவ் ரத்தமா?” என்று கேட்டாள்.

“இதை எதுக்கு இப்ப கேட்குற?” என்று நெற்றியை சுருக்கிக் கேட்டான்.

“ஓ, இதயாவோட அந்தக் கிழிந்த துணியை டெஸ்ட் பண்ணி, அது ஓ பாஸிட்டிவ்னு வந்துச்சா? அதைப் பார்த்து துப்பறியும் புலிங்க, இதயாவோட ரத்தம்னு நினைச்சிருப்பீங்க? ஹாஹா… ஆமா எனக்கும் அவளுக்கும் ஒரு பிளட் குரூப் தான்…” என்றான் அசால்டாக.

“இப்ப உன் அண்ணனை எதுக்குக் கொல்ல முயற்சி செய்த?” என்று கேட்டாள்.

“அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டது. அதுக்குப் பிறகும் அவனை விட்டு வைக்க முடியுமா என்ன?”

“என்ன ரவிக்குத் தெரியுமா?”

“ஆமா, அந்த இதயா, நான் அவள்கிட்ட என் விருப்பத்தைச் சொன்னதை அண்ணன்கிட்ட சொல்ல முயற்சி செய்திருப்பாள் போல. அதுவும் நேரில் சொல்ல முடியாம அவள் போனில் ரெக்கார்ட் செய்து அனுப்ப நினைச்சிருக்காள். 

ஆனால், ஏனோ அவள் அதை அனுப்பாம, அவள் போனில் ஒரு சீக்ரெட் போல்டர் உருவாக்கி அதில் மறைச்சு வச்சிருந்திருக்காள். அதைக் கொஞ்ச நாள் முன்னாடி கண்டுபிடித்து அவன் கேட்டுட்டான் போல.

உடனே என்கிட்ட வந்து சண்டை போட்டான். போலீஸில் என் மேலே கம்ளைண்ட் பண்ண போறதாக மிரட்டினான். போ… போய்ச் சொல்லு… அப்படியே அம்மாவையும் சேர்த்துக் கொன்னுட்டதா சொல்லுன்னு சொன்னேன். பாசக்கார பைய மிரண்டுட்டான். அம்மாவை எதுவும் பண்ணிடாதேன்னு சொன்னான்.

அப்போ உன் துப்பறியும் ஃபிரண்ட்ஸ்களை ஊருக்குப் போகச் சொல்லு. இனி போலீஸ்க்கு போக மாட்டேன்னு சொல்லி சத்தியம் பண்ணுன்னு கேட்டேன். அம்மாவுக்காகச் சத்தியம் பண்ணி கொடுத்தான். அதோட, உங்களையும் ஊருக்குப் போகச் சொன்னான். நீங்க கேட்கலை. ஆனால், அதுவும் எனக்கு ஒரு விதத்தில் நல்லது தான்…” என்றான் பல்லை இளித்துக் கொண்டு.

“ரவி தான் சத்தியம் செய்து கொடுத்தார் தானே? அப்புறமும் ஏன் அவரைக் கொல்லணும்?” என்று கேட்டாள்.

“அவன் சத்தியத்தைக் காப்பாத்துவான்னு எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னைக் காட்டி கொடுக்க மாட்டான்னு என்ன நிச்சயம்? அதுதான் மணிமாறனை வச்சுச் சத்தம் இல்லாமல் காரியத்தை முடிக்கச் சொன்னேன்.

ஆனால், அந்த முட்டாப்பயல் சொதப்பிட்டான். அவன் தலையணையை வைத்து ரவி மூச்சை நிறுத்த முயற்சி செய்த போது, ரவி சுதாரிச்சுட்டானாம். அதில் கலவரம் ஆகி குத்திட்டு இதயாவின் செல்போனை எடுத்துட்டு வந்து என்கிட்ட கொடுத்தான்…”

“அப்போ, அவன் மொட்டை மாடி வழியா வர நீ தான் அவனுக்கு உதவி பண்ணியிருக்க…”

“ஆமா, அதில் என்ன சந்தேகம்? தூங்க போறதுக்கு முன்னாடி மொட்டை மாடி கதவை திறந்து வச்சிட்டு நல்ல பிள்ளை போல் போய்ப் படுத்துட்டேன்…” என்றான் அலட்சியமாக.

“எவ்வளவு நடிப்பு? அதுவும் ரவி கண் முழிக்கணும் என்று எப்படி நீ உருகி உருகி பேசின? ச்சே, அதையும் நாங்க உண்மை என்று நம்பிட்டோம்…”

“ஐயா நடிப்பு அப்படி…” என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டான்.

இவன் எல்லாம் என்ன மனிதன்? ஒரு நிலையான மனது இல்லை. உடன் பிறந்தவனைக் கொல்ல துணிந்தோமே என்ற குற்றவுணர்வும் இல்லை.

கவியுகன் சொன்னது அவள் காதில் ஒலித்தது. வெளியே ஒரு வேஷம் உள்ளே ஒரு வேஷம் போடுவாங்க. நாம தான் கவனமாக இருக்கணும் என்று சொன்னானே… எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறான்?

இதோ நேரிலேயே அவள் பார்த்து விட்டாளே. இந்த நேரத்தில் உதயாவின் ஞாபகம் வந்தது. பாவம்! இவனை உண்மையாக விரும்பினாளே. அவளுக்கு இவனைப் பற்றிய உண்மை தெரிந்தால் என்ன ஆவாள்? என்று அவளுக்காக வருத்தப்பட்டாள்.

“நிஜமாகவே உனக்கு உதயாவை பிடிக்காதா? ஆனால், அன்னைக்கு நான் உன் மில்லுக்கு வந்து பேசவும், அவள்கிட்ட அப்படிக் காதலா பேசின?” என்று கேட்டாள்.

“அது உனக்காக. என்னவோ எங்க காதலை சேர்த்து வைக்கப் போறவ மாதிரி ஓவரா சீன் போட்ட. அதான் உனக்காக அவள்கிட்ட ராசியானது போலக் காட்டிக்கிட்டேன்…” என்றான் அலட்சியமாக.

“எனக்காகவா? ஏன்?” பயத்துடன் கேட்டாள்.

“ஏன்னா, உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு…” என்று கண்ணைச் சிமிட்டினான்.

“என்ன சொல்ற நீ?” மிரண்டு போய்ப் பின்னால் நகர்ந்து கொண்டே கேட்டாள்.

“ஆமா, உன்னை முதல் முதலில் எங்க வீட்டில் வைத்துப் பார்த்த போதே ஐயா ப்ளாட் ஆகிட்டேன். என்ன அழகு நீ! அதுவும் நீ நடிக்கிறதுக்காக உன் வயசை கூடச் சொல்லி விளையாண்டது எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. 

உன் பேச்சு, உன்னோட துறுதுறு குணம் எல்லாமே என்னைக் காந்தமா உன் பக்கம் இழுத்துருச்சு. கட்டினால் உன்னைத்தான் கட்டணும்னு முடிவு பண்ணிட்டேன்…” என்று அவன் சிரித்துக் கொண்டே சொல்ல, அவளுக்குக் குளிர் சுரம் வந்தது போல் நடுங்கிப் போனது.

ஆனாலும் துணிந்து கேட்டாள்.

“முதலில் இதயாவை பிடிச்சிருக்கு என்று சொன்ன. உதயாகிட்ட காதலிக்கிற மாதிரி நடந்துக்கிட்ட. இப்ப என்னைப் பிடிச்சிருக்கு என்று சொல்ற. உனக்கு நிலையான மனசே இல்லையா?” என்று கேட்டாள்.

“இதயாவுக்குப் பிறகு எனக்குப் பிடிச்சது நீ மட்டும் தான். உதயா எல்லாம் சும்மா தொட்டுக்க ஊறுகாய் மாதிரி…” என்று இளித்தான்.

“ச்சே.. என்ன கீழ்தரமான புத்தி உனக்கு? ஒழுங்கா என்னை விட்டுடு…” என்றதும், அவன் முகம் பயங்கரமாக மாறியது.

“விடுவதற்கா உன்னை இங்கே கொண்டு வந்திருக்கேன்?” என்று கேட்டவன் அவளை நெருங்கினான்.

“பக்கத்தில் வராதே!” என்று பின்னால் நகர்ந்தாள் அனன்யா.

“பக்கத்தில் வராம இருக்கவா உன்கிட்ட எல்லா உண்மையையும் ஒப்பிச்சிட்டு இருந்தேன்? நான் மாட்ட கூடாது என்று தான் மணிமாறனை உண்மையை மாத்தி சொல்லி, நவநீதன் பேரை சொல்ல சொன்னேன். டாக்டர் ரஞ்சனும் என்கிட்ட வாங்கிய காசுக்கு உண்மையா நவநீதன் பேரை சொல்லி கவியுகனை திசை திருப்பிவிட்டார். 

எல்லாத்துக்கும் மேலே நவநீதனை குடிக்க வைத்தே தீர்த்துக் கட்டி போதையில் செத்துப் போனதாகக் கதை கட்டி, அப்படியே நீங்க கண்டுபிடித்த உண்மையை எல்லாம் புதைக்க நினைச்சேன்.

நவநீதன் தப்பிச்சு போய் சரியா கவியுகன்கிட்டயே மாட்டிக்கிட்டான். அது தெரிந்த அடுத்த நிமிஷம் உன்னைத் தூக்கிட்டேன். இனி நான் மறைத்தது எல்லாம் வெளியே வந்துரும்னு தெரியும். என் அண்ணன்காரனை ரத்தம் கிடைக்க விடாம சாகடிச்சுடலாம்னு நினைச்சேன். ஆனால், நீயும், கவியுகனும் முதல் ஆளா ரத்தம் கொடுத்து அவனைக் காப்பாத்திட்டீங்க. ஹாஸ்பிட்டலில் வச்சே நைட்டோட நைட்டா அவனை எப்படியாவது போட்டுலாம்னு நினைச்சேன்.

ஆனால், அந்த ஹாஸ்பிட்டலில் என்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்குப் பாதுகாப்பு இருந்தது. அவனும் இனி பிழைத்து வந்து என்னைக் காட்டி கொடுத்துடுவான். நான் எப்படியும் போலீஸ் கிட்ட மாட்ட போறேன். 

அதுக்கு முன்னாடி ஒரே ஒரு முறை உன்னை அனுபவச்சிக்கிறேனே? உன்னை அனுபவித்த சந்தோஷத்தோடு ஜெயிலில் காலத்தைத் தள்ளிடுவேன்…” என்று அவளின் கையைப் பிடித்துத் தன்னிடம் இழுத்துக் கொண்டான் புவனேந்திரன்.

“என்னை விட்டுடு!” என்று அவனிடம் போராடி, முடியாமல் அவனிடமிருந்து தப்பிக்க முடியாமல் வசமாக மாட்டிக் கொண்டாள் அனன்யா.

அங்கே நவநீதனிடம் கவியுகன் பேசிக் கொண்டிருந்த போது, அவனின் கைபேசி அழைத்தது.

அழைப்பை உடனே ஏற்றான்.

“கவின் சார், அனன்யா உங்க கூடவா இருக்காங்க?” எடுத்ததும் பதட்டமாகக் கேட்டாள் உதயா.

அவளின் பதட்டத்தில் கவியுகனுக்கும் பதட்டம் வந்தது. அதுவும் அனன்யாவை கேட்க, அவன் இதயம் அதிவேகமாகத் துடித்தது.

இருந்தாலும் தான் இப்போது நிதானமாக இருக்க வேண்டிய நேரம் என்று நினைத்தவன், மூச்சை இழுத்து விட்டுத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டு பேச்சை ஆரம்பித்தான்.

“அனன்யா உன் கூடத் தானே இருந்தாள்மா?” என்று கேட்டான்.

“என் கூட, என் பக்கத்தில் தான் படுத்திருந்தாங்க சார். ஆனால், நான் கொஞ்சம் கண் அசந்துட்டேன். திரும்பக் கண் முழித்துப் பார்த்த போது அவங்க படுத்திருந்த இடம் வெறுமையா இருந்தது. நான் கூடப் பாத்ரூம் போயிருப்பாங்க என்று நினைத்தேன். ஆனால், பாத்ரூமில் இல்லை. அப்புறம் வெளியே போய்ப் பார்த்தேன். அங்கேயும் இல்லை…” என்றாள்.

“ஐசியூ பக்கம் பார்த்தியாமா? ரவி எப்படி இருக்கான் என்று பார்க்க போயிருப்பாள்…” என்றான்.

“அங்கேயும் போய்ப் பார்த்துட்டு வந்துட்டேன் சார். அங்கேயும் இல்லை…” என்றாள் படபடப்புடன்.

“புவன் அங்கே இருக்கானா?”

“அனன்யாவை காணோம் என்றதும், புவன் அத்தான்கிட்ட சொல்லத்தான் போனேன். ஆனால் அத்தான் அங்கே இல்லை. அவங்களும் எங்கே போனாங்க என்று தெரியலை. அத்தானுக்குப் போன் போட்டால் அவர் போன் போக மாட்டிங்குது. எனக்குப் பயமா இருக்கு சார். இரண்டு பேரையும் காணோம்…” என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

“அழாதே உதயா. பயப்படாம இரு. அங்கே தான் இருப்பாங்க. நான் இப்ப வந்து என்னன்னு பார்க்கிறேன். நீ எதைப் பத்தியும் நினைச்சு அழாமல் போனை வைமா…” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.

“என்னாச்சு சார்? என்ன விஷயம்?” என்று கேட்டான் நவநீதன்.

“அந்தப் புவன், அனன்யாவை தூக்கிட்டான். அவனுக்கு நீ தப்பிச்சது தெரிந்திருக்கும். அவன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சுட்டான்…” என்றான்.

“அவனைச் சும்மா விடக்கூடாது சார். நானும் உங்க கூட வர்றேன். வாங்க, போய்த் தேடி பார்ப்போம்…” என்று நவநீதனும் கிளம்ப, அவனை அழைத்துக் கொண்டு கிளம்பினான் கவியுகன்.

காரில் ஏறியதும் கவியுகன் காரை உடனே எடுக்காமல் போனை பார்த்துக் கொண்டிருக்க, “என்ன சார் உங்க கூட வந்த பொண்ணைத் தேடி போகாம போனை பார்த்துட்டு இருக்கீங்க?” என்று கேட்டான்.

“அவள் இருக்கும் இடத்தைத் தான் தேடிட்டு இருக்கேன்…” என்றான்.

“அது போனில் பார்த்தால் தெரியுமா?”

“தெரியும்…” என்று கவியுகன் சொல்ல, அவனை வியப்பாகப் பார்த்தான்.

“அனன்யா கழுத்தில் போட்டிருக்கும் டாலரில் ஜிபிஎஸ் ட்ராக் இருக்கு. அவள் எங்கே இருக்காள் என்று அது காட்டிக் கொடுத்திடும்…” என்று அவனை நிமிர்ந்து பார்க்காமல் சொல்லிக் கொண்டே தன் கைபேசியில் பார்த்து அவள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டான் கவியுகன்.

தஞ்சாவூரில் ரவி குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு வீடு இருந்தது. அந்த முகவரியைத் தான் காட்டிக் கொண்டிருந்தது ஜிபிஎஸ்.

அது கவியுகனுக்கும் தெரியும். புவனேந்திரன் மிரட்டிய பிறகு, வீட்டில் இருக்கப் பிடிக்காமல், தஞ்சாவூரில் இருந்த அந்த வீட்டிற்குத் தான் ரவி சென்று இருந்து வந்தான் என்று அறிந்து கொண்டிருந்தான். அந்த இடம் என்று தெரியவும், உடனே காரை அங்கே செலுத்த ஆரம்பித்தான்.

காரை விரைந்து செலுத்திக் கொண்டிருக்கும் போதே, கவியுகனுக்குச் சில மணி நேரத்திற்கு முன் அனன்யா சொன்னது நினைவில் ஓடிக் கொண்டிருந்தது.

“நான் நினைப்பது சரியா என்று தெரியலை யுகா. புவன் பார்வை சரியில்லை. என்னைப் பார்க்கும் அவன் பார்வையில் கல்மிஷம் தெரியுது. நான் கூட அதை முதலில் தவறாகப் புரிந்து கொண்டேனோ என்று நினைச்சேன். உதயாவை பிரிந்திருப்பதால் அந்தப் பீலிங்கில் அப்படிப் பார்க்கிறாரோ என்று நினைச்சேன்.

அதனால் தான் உதயா கூட அவரைச் சேர்த்து வைக்க முனைப்பு காட்டி, சேர்த்தும் வச்சேன். ஆனால், அன்னைக்கு உதயா கூடக் காதலாகப் பேசிக்கிட்டே என்னையும் வித்தியாசமா பார்த்தார் யுகா…” என்றாள்.

“அன்னைக்கு உன்னை அவன் பார்த்த பார்வையை நானும் பார்த்தேன் அனன்யா. அதனால் தான் கவனமா இரு என்று சொல்லிட்டே இருக்கேன்…” என்றான்.

“அப்போ அவன்கிட்ட தான் தப்பு இருக்கா யுகா?” அதிர்ந்து கேட்டாள் அனன்யா.

“இருக்கு என்று தான் நினைக்கிறேன். நம்மை ஊருக்குப் போகச் சொன்ன பிறகு ரவி இயல்பாகவே இல்லை, அதுவும் புவனேந்திரன் முன்னாடி ஒரு மாதிரி கோபமும், பயமும் கலந்தே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அதோட நேத்து நைட் வீடியோவில் புவன் மொட்டை மாடி கதவை திறந்து வைத்து விட்டு, சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து விட்டு அவன் ரூமுக்குப் போய்க் கதவை மூடிக் கொண்டது பதிவாகியிருக்கு…”

“அப்போ புவனேந்திரன் தான் இதயாவையும் ஏதாவது செய்திருக்கணும் யுகா. பேசாம அவனைக் கையும் களவுமா பிடித்தால் என்ன?” என்று கேட்டாள்.

“பிடிக்கலாம். ஆனால் அவன் தான் குற்றவாளி என்று நிரூபிக்க நம்மகிட்ட என்ன ஆதாரம் இருக்கு? அந்தக் கேமிரா பதிவு மட்டும் பத்தாது. மதியரசன் அன்னைக்கு இதயா வீட்டில் இருந்து வந்தது ரவி என்று தான் சொன்னான். ரவி மாதிரியே உருவம் இருந்த புவன் தான் வந்தது என்று நாம சும்மா மட்டும் சொல்லிட முடியாது. வலுவான ஆதாரம் வேணும்.

இதில் நமக்குப் பெரிய பின்னடைவு என்ன தெரியுமா? நம்மகிட்ட மாட்டின மணிமாறன், டாக்டர் ரஞ்சன் எல்லாம் நவநீதன் பெயரை தான் சொல்றாங்க. இப்ப நமக்கு நவநீதன் கிடைத்தால் தான் அவன் குற்றவாளி இல்லை. புவனேந்திரன் தான் குற்றவாளி என்று நம்மால் நிரூபிக்க முடியும். அதனால் தான் நான் நவநீதனை தேடி போறேன் என்று சொன்னேன்…” என்றான்.

“சீக்கிரம் நவநீதனை கண்டுபிடிச்சுட்டு வந்துடுங்க யுகா. இங்கே என்ன நடக்குமோ என்று பயமா இருக்கு…” என்று அப்போது அனன்யா பயந்தது இப்போதும் கவியுகனை தாக்கியது.

அவனிடம் மாட்டுவதற்கு முன்பே, அவ்வளவு பயந்தாள். இப்போது அவன் கையில் அவள். எவ்வளவு பயந்திருக்கிறாளோ? என்று நினைத்து கவியுகனின் இதயம் நிலையில்லாமல் துடித்தது.

அவன் துடிப்பிற்கு ஏற்ப, அங்கே புவனேந்திரன் கைகளிலிருந்து தப்பிக்க வன்மையாகப் போராடிக் கொண்டிருந்தாள் அனன்யா.

ஒரு வேண்டுகோள் நண்பர்களே! புவனேந்திரன் பெயரை உங்கள் கமெண்ட்களில் குறிப்பிட வேண்டாம்.