யுகன்யா – 24

அத்தியாயம் – 24

நவநீதனை சாலையில் பார்க்கவும், அவன் அருகில் அமர்ந்து குனிந்து பார்த்தான். குப்பென்று அடித்த வாசனையில் முகத்தை லேசாகப் பின்னால் இழுந்தான் கவியுகன்.

மது வாசனை!

நவநீதன் சுயநினைவில் இருப்பது போல் தெரியவில்லை.

அவன் கன்னத்தைத் தட்டி, “நவநீதா…” என்று அழைத்தான்.

“ம்ம்ம்…” என்று முனங்கினானே தவிர வேறு எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.

“நவநீதா… நவநீதா…” தொடர்ந்து அழைத்து அவன் தோளை பிடித்துக் குலுக்கிப் பார்த்தான்.

ம்கூம்! அவன் அசைந்தே கொடுக்கவில்லை.

சுற்றிலும் பார்த்தான். அந்தச் சாலையில் அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

காரில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து நவநீதனின் முகத்தில் தெளித்தான்.

லேசாக உணர்வுக்கு வந்தவன், “ஏய், போடா. எனக்குப் போதும்! இன்னும் ஊத்தாதே!” என்று குழறினான்.

முகத்தில் தண்ணீர் தெளிப்பதைத் தான் சொல்கிறான் என்று நினைத்து, தண்ணீர் தெளிப்பதை நிறுத்தி, அவன் இரண்டு கன்னத்திலும் பலமாகத் தட்டினான்.

“டேய்! யாருடா நீ? என்னை எதுக்கு அடிக்கிற?” என்று கைகளைத் தூக்கி காற்றினில் துழாவினான்.

“சரி, அடிக்கலை. முதலில் இங்கிருந்து எழுந்திரு. ரோட்டில் படுத்துக் கிடப்பது கூடத் தெரியலை…” என்று அவன் கையைப் பற்றி எழுப்பினான்.

“ம்கூம், நான் வர மாட்டேன். வந்தா நீ எனக்கு இன்னும் சாராயத்தை ஊத்திக் கொடுப்ப. எனக்கு வேண்டாம். வேண்டாம்…” என்று புலம்பி அடம் பிடித்து அங்கிருந்து எழ மாட்டேன் என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு கவியுகனின் நெற்றி யோசனையின் வரிகளைத் தோற்றுவித்தது.

“சாராயத்தை ஊத்தி கொடுத்தாங்களா? யார் அது?” என்று கேட்டான்.

“நீ.. நீ தானே ஊத்தி கொடுத்த முருகேசு… இப்ப என்கிட்டயே யாருன்னு கேட்குற? அதுவும் நான் போதும்னு சொல்ல சொல்ல கேட்காம என் மூக்கை பிடிச்சு ஊத்தி விட்டுட்டு…” என்று உளறினான்.

‘முருகேசு என்பவன் வலுக்கட்டாயமாக இவனுக்குச் சாராயத்தை ஊற்றி விட்டிருக்கிறான். யார் அவன்? எதற்காக அப்படி ஊற்றி விட வேண்டும்?’ என்று குழப்பத்துடன் யோசித்தான்.

நவநீதன் போதையில் என்னென்னவோ சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.

“சரி… சரி… இனி ஊத்தலை. வா, போகலாம்…” என்று அவன் கையைப் பிடித்து எழுப்பி நிற்க வைத்தான்.

அளவுக்கு அதிகமான போதையில் நிற்க முடியாமல் தள்ளாடினான்.

அவனின் கையை எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டு, அவனை விழ விடாமல் பிடித்துக் கொண்டு, தாங்கலாக அழைத்துக் கொண்டு வந்து காரின் பின் சீட்டில் அமர வைத்தான். அவன் அமர முடியாமல் தடுமாறி படுத்து விட, வெளியே நீட்டியிருந்த அவனின் காலை காருக்குள் விட்டு கதவை மூடி காரை எடுத்தான்.

அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய நொடி, சாலையின் பக்கவாட்டிலிருந்து தபதபவென்று மூச்சு வாங்க ஓடி வந்த ஒருவன், ஏமாற்றத்துடன் கால்களைத் தரையில் உதைத்துக் கொண்டான்.

காலத் தாமதம் செய்யாமல் உடனே கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான்.

“சார், ஒரு தப்பு நடந்து போச்சு…” பதட்டமும் பயமுமாக ஆரம்பித்தான்.

“அந்த நவநீதன் தப்பிச்சிட்டான்…” என்றான்.

*********

“நீங்க சொன்ன படி புல்லா தான் ஊத்தி கொடுத்தேன் சார். அவனும் கண்ணு முழிக்க முடியாம தான் கிடந்தான். ஆனா, எனக்கு வயிறு சரியில்லைன்னு கொஞ்சம் ஒதுங்கிய நேரத்தில் எப்படியோ தப்பிச்சிட்டான் சார். நான் அவனைத் தேடி வருவதற்குள்ள அந்தக் கவியுகன் வந்து அவனைப் பார்த்து கூட்டிட்டு போயிட்டான் சார்…” என்றான்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டு, அந்தப் பக்கம் ஏதோ சொல்ல, “சாரி சார்… மன்னிச்சுக்கோங்க சார்…” என்று அவன் தொடர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்த போதே அந்தப் பக்கம் அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

காரின் பின்னால் படுத்திருந்த நவநீதன் ஏதோ அரையும் குறையுமாக முனகி கொண்டே வந்தான்.

சிலது புரிந்தது. பல புரியவில்லை.

அவன் புலம்பியதில் இருந்து, யாரோ அவனை அடைத்து வைத்து மதுவை குடிக்க வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பி வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் கவியுகன்.

ஊரின் எல்லையைத் தொட்டதும், காரை ஓரமாக நிறுத்தினான். ஊர் எல்லையில் ஒரு சிறிய கோவில் இருக்க, அதன் முன் ஒரு அடி குழாய் இருந்தது.

காரைவிட்டு இறங்கி, நவநீதனை வெளியே இழுத்து, அந்தக் குழாய் முன்னால் அமர வைத்தான்.

அவன் அமர முடியாமல் தள்ளாடி கொண்டிருக்கும் போதே, அடி குழாயை அடித்துத் தண்ணீரை சொட்ட வைத்தான். தண்ணீர் பொலபொலவென்று நேராக நவநீதன் தலையில் கொட்ட, “டேய், எவன்டா அது? குளிருதுடா…” என்று கத்திக் கொண்டே தண்ணீருக்கு அடியிலிருந்து புலம்பினான்.

அவன் போதை இறங்கும் வரை, அவனின் கத்தலை பொருட்படுத்தாமல், குழாயை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தான் கவியுகன்.

“ச்சே, ச்சே… நிறுத்து!” என்று நவநீதன் குழாயை விட்டு துள்ளி அமர்ந்த பிறகு, தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டு அவன் அருகில் வந்தான்.

“இப்ப தெளிவா இருப்ப என்று நினைக்கிறேன்?” என்று கேட்டான் கவியுகன்.

கார் ஹெட்லைட் வெளிச்சத்தில் அவன் முகத்தைப் பார்த்து, “நீயா? நீ அந்த ரவி வீட்டுக்கு வந்த விருந்தாளில. இங்கே என்ன செய்ற?” என்று கண்களைச் சுருக்கிக் கேட்டான் நவநீதன்.

“நீ என்னைக் கேள்வி கேட்பது எல்லாம் இருக்கட்டும். முதலில் நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல். உன்னை அடைச்சு வச்சிருந்தது யாரு? எப்படித் தப்பிச்சு வந்த?” என்று கேட்டான்.

கண்களைச் சுருக்கி யோசித்த நவநீதன், “ஆமா, அந்த முருகேசு பய தான் என்கிட்ட ஏதோ பேசணும்னு சொல்லி கூட்டிட்டுப் போனான். அங்கே போனால் நிறையச் சரக்கு வாங்கி வச்சு இரண்டு பேரும் அடிச்சுக்கிட்டே பேசுவோம்னு சொன்னான். ஆனா நேரம் ஆக ஆக எனக்கு மட்டும் ஊத்தி கொடுத்துட்டே இருந்தான். நான் வேணாம்னு சொல்ல சொல்ல வலுக்கட்டாயமா ஊத்த ஆரம்பிச்சுட்டான். அவன் ஏன் அப்படிச் செய்தான்?” என்று யோசனையாகக் கேட்டுக் கொண்டான்.

“அந்த முருகேசு யாரு?”

“இந்த ஊருக்கார பைய தான். ரவியோட சக்கரை ஆலைல சூப்பர்வைசரா வேலை பார்க்கிறான்…” என்றான்.

“அவன் எதுக்கு உன்னை அப்படிக் குடிக்க வச்சான் என்று தெரியுமா?”

“அதுதான் ஏன்னு தெரியலை. ஆமா இதெல்லாம் நீ எதுக்குக் கேட்குற?” என்று கேட்டான் நவநீதன்.

“எல்லாம் காரணமாகத்தான். என்ன காரணம் என்று இப்ப நான் கேட்க போற கேள்விக்கு நீ சொல்ல போற பதிலில் தான் தெரியும்…” என்றான் கவியுகன்.

நவநீதன் அவனைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, கவியுகன் தன் கேள்வியை ஆரம்பித்தான்.

“இதயாவை ஏன் கொன்ன?” என்று தடாலடியாகக் கேட்டான் கவியுகன்.

“என்ன கொலையா? அதுவும் இதயாவையா?” என்று அதிர்ந்து துள்ளிக் குதித்து எழுந்தான் நவநீதன்.

அரைக் குறையாக இருந்த போதையும் அவனை விட்டு போய் விட்டிருந்தது.

“என்ன இவ்வளவு அதிர்ச்சி ஆகுற? நீ தானே அவளைக் கொன்னது?” நிதானமாகக் கேட்டான் கவியுகன்.

“யோவ்! நீ என்ன லூசா? என்ன பேசுறன்னு தெரிந்து தான் பேசுறியா? இதயா தற்கொலை பண்ணிட்டு தானே செத்துப் போனாள்…” என்று ஆத்திரமாகக் கத்தினான்.

“நீ இப்படிச் சொல்ற. ஆனா டாக்டர் ரஞ்சன் நீ தான் இதயாவை கொன்றதாகவும், அதை மறைக்கப் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை மாத்தி எழுத சொல்லி, அதுக்கு நீ அந்த டாக்டருக்கு ஐந்து லட்சமும், போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டருக்கு ஐந்து லட்சமும் கொடுத்ததாக இல்ல சொன்னார். அப்போ அவர் சொன்னது பொய்யா? இப்ப நீ சொன்னது பொய்யா?” என்று கேட்டான் கவியுகன்.

“என்ன… என்ன சொன்ன? கொலையை மறைக்க லஞ்சமா? நான் கொடுத்தேனா? இது அநியாயம்! நானே நான் ஆசைப்பட்ட பொண்ணு எனக்கும் இல்லாம, கட்டிக்க இருந்தவனுக்கும் இல்லாமல் இப்படி அல்பாயிஸில் போயிட்டாளேன்னு வருத்தத்தில் இருக்கேன். அப்படியிருக்கும் போது அந்த டாக்டர் ஏன் அப்படிச் சொன்னான்?” என்று கோபத்துடன் கேட்டான்.

“அப்போ உறுதியா நீ இதயாவை கொல்லலை?”

“இல்லை… இல்லை…” என்றான் உறுதியாக.

“அப்புறம் எப்படி இதயா இறந்து போன அன்னைக்கு உடுத்தியிருந்த துணியில் இருந்த சின்னப் பிட்டு உன் ரூம் பீரோவில் இருந்தது?” என்று கேட்டான்.

“என்ன என் பீரோவில் இருந்த துணியை நீ எப்படிப் பார்த்த? டேய்! யாருடா நீ? என் வீட்டுக்குள் நீ எப்படி வந்த?” கோபத்துடன் கவியுகனின் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டான் நவநீதன்.

“கொஞ்சம் பொறுமையா இரு நவநீதனா. நான் யாரு, உன் வீட்டுக்கு எதுக்கு வந்தேன்… எல்லாமே சொல்றேன்…” என்று தன் சட்டையில் இருந்த அவனின் கையைப் பிரித்து விட்ட கவியுகன், பொறுமையாகத் தான் யார், இந்த ஊருக்கு வந்த காரணம் என்ன, இதுவரை தான் அறிந்த தகவல்கள் என்ன என்று அனைத்தையும் சொன்னான்.

தளர்ந்து கோவில் முன் இருந்த திண்டில் அமர்ந்தான் நவநீதன்.

அவனின் எதிரே வந்து நின்றான் கவியுகன்.

“நீ சொன்னது எல்லாம் உண்மையா?” என்று தலையை நிமிர்ந்தி கவியுகன் முகம் பார்த்து தளர்வுடன் கேட்டான்.

“நான் சொன்னது அத்தனையும் உண்மை. இனி நீ தான் சொல்லணும். அந்தத் துணி எப்படி உன் வீட்டுக்கு வந்தது?” என்று கேட்டான் கவியுகன்.

“இதயா இறந்து போறதுக்கு இரண்டு நாள் முன்னாடி அவள் மலை கோவிலுக்கு வந்தாள். அவள் என்னை விட்டுட்டு ரவியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறதை என்னால் தாங்க முடியலை. அதனால் அவள்கிட்ட பேசி பார்க்கலாம்னு மலை கோவிலுக்கு அவள் வந்த போது வழி மறைச்சு என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கேட்டேன். ஆனால் அவள் முடியாதுன்னு சொல்லிட்டாள்.

எனக்குக் கோபம் வந்து அவள் கையைப் பிடிச்சு தகராறு செய்தேன். அவள் அழுதாள். அவள் அழுவதைத் தாங்க முடியாம விட்டுட்டேன். ஆனா மனசு கேட்கலை. அவள் எனக்கு வேணும்னு மனசு துடியா துடிச்சது. அதனால் இதயா இறந்து போன அன்னைக்கு அவள் வீட்டுக்கே போய்ப் பேசுவோம்னு போனேன்…” என்று நவநீதன் சொல்ல,

“வெயிட்! இதயா இறந்த அன்னைக்கு நீ திருச்சிக்குப் போயிருந்ததாகக் கேள்விப்பட்டேனே?” யோசனையுடன் கேட்டான் கவியுகன்.

“திருச்சிக்கு போனேன். ஆனால், அன்னைக்கு என்னோட அப்பாவுக்கு உடம்பு முடியலை என்று போன் போட்டு சொன்னார். அதனால் அன்னைக்குத் திருச்சியில் போக இருந்த கல்யாணத்துக்குக் கூடப் போகாமல், திரும்பி ஊருக்கே வந்துட்டேன். அப்போ அவள் பெத்தவங்க ஊரில் இல்லாததைக் கேள்விப்பட்டேன்.

அந்தத் தைரியத்தில் போய் முன் பக்க கதவை தட்டினப்ப அவள் கதவை திறக்கலை. அதனால் பின் பக்கமா போகலாம்னு போனேன். அப்போ கிணத்துக்கிட்ட ஒரு சின்னத் துணி கிழிந்து கிடந்தது. அது இதயா அன்னைக்குப் போட்டிருந்த ட்ரெஸ் துணின்னு தெரியும்.

அது எப்படி அங்கே கிழிந்து கிடைந்ததுன்னு நான் எடுத்துப் பார்த்துட்டு இருந்த போது, வாசல் பக்கம் யாரோ நடந்து போற சத்தம் கேட்டது. இனி இந்த நேரத்தில் இதயாகிட்ட பேச முயற்சி செய்து அவள் சத்தம் போட்டால் வீணா பிரச்சினை வரும்னு அங்கிருந்து போயிட்டேன். 

அதுக்குப் பிறகு அவள் செத்த சேதி தான் கிடைச்சது. அந்தத் துணி அவள் கிணத்தில் விழுவதற்கு முன் கிழிந்து அங்கே விழுந்திருக்கலாம்னு நினைச்சு அதை அவள் ஞாபகமா என் அலமாரியில் பத்திரப்படுத்தி வைத்தேன்…” என்றான்.

“நீ இதயா வீட்டுக்கு பின்னாடி இருந்து வந்ததை யாராவது பார்த்தாங்களா?”

“தெரியலை. நான் ரோட்டுப் பக்கம் வந்து பார்த்த போது ரோட்டில் ஆள் நடமாட்டமே தெரியலை…” என்றான்.

கவியுகனின் சிந்தனையில் சில எண்ணங்கள் ஓடின.

நவநீதன் இதயாவை கொலை செய்யவில்லை. அதே நேரம் அவன் வீட்டின் பின் இருந்து வந்ததையும் யாரும் பார்க்கவில்லை எனில், அன்று மதியரசன் ரவி போல் உருவம் உள்ள ஆளை பார்த்ததாகச் சொன்னது யார்? ரவி தன்னிடம் போனில் தான் இதயாவிடம் பேசியதாகச் சொன்னானே தவிர நேரில் சென்று பார்க்க போனதாகச் சொல்லவில்லை.

அப்படியிருக்க ரவியைப் நான் சந்தேகப்பட வேண்டும் என்று மதியரசன் ரவியை வெளிச்சத்தில் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறான் என்று புரிந்தது.

அதேநேரம் இதயா வீட்டில் இருந்து குற்றவாளி வெளியே வந்தபோது, அவனை மதியரசன் இருட்டில் பார்த்தது மட்டுமே உண்மையாக இருக்கும் என்ற முடிவிற்கு வந்தான்.

கூடவே டாக்டர் ரஞ்சன் வாக்குமூலம் கொடுத்ததில் இருந்த இடறல் ஞாபகம் வர, அதைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.

“இதயா இறந்த அன்னைக்கு டாக்டர் ரஞ்சன் உன் வீட்டுக்கு வந்து உன்னோட அப்பாவுக்கு வைத்தியம் பார்த்தது உண்மையா?”

“உண்மை தான். நான் திருச்சியில் இருந்து வரும் போதே டாக்டருக்கு போன் போட்டு, என் அப்பாவை போய்ப் பார்க்க சொன்னேன். ஆனால் இப்ப ஹாஸ்பிட்டலில் ஒரு முக்கியமான கேஸில் மாட்டிக்கிட்டேன். அதனால் நைட் வந்து பார்க்கிறேன்னு சொன்னார்.

சொன்னது போலவே நைட் வந்து டாக்டர் அப்பாவுக்கு ஊசி போட்டு கிளம்பும் போது தான், இதயாவை தேடிட்டு இருந்தவங்க, அவள் கிணற்றில் விழுந்து கிடந்ததைப் பார்த்து கத்தினாங்க. உடனே நான் அங்கே ஓடினேன். கூடவே டாக்டரும் வந்தார்…” என்றான்.

“டாக்டர் அதுக்குப் பிறகு எவ்வளவு நேரம் அங்கே இருந்தார்?”

“எனக்குத் தெரியாது. இதயாவை பிணமா பார்த்து, எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அதுக்குப் பிறகு நான் யாரையும் கவனிக்கலை…” என்றான்.

“சரி, மணிமாறனும், டாக்டர் ரஞ்சனும் உன் மேல் ஏன் பழியைத் தூக்கி போட்டாங்க? அதுக்கு என்ன காரணம் இருக்குமென்று நீ நினைக்கிற?” என்று கவியுகன் கேட்க,

“அதுதான் எனக்கும் தெரியலை. நான் எந்தத் தப்பும் செய்யாத போது அவனுங்க ஏன் அப்படிச் சொன்னானுங்க?” என்று கோபத்துடன் கேட்ட நவநீதன், “ரவி கூட அன்னைக்கு என்கிட்ட வந்து நீதானே இதயா இறந்து போகக் காரணம்னு சொல்லி சண்டை போட்டான். நான் இதயா வீட்டுப் பக்கம் போனது தெரிந்தால் நான் தான் கொன்றதாக முடிவு பண்ணிடுவான்னு நான் அன்னைக்கு ஊரிலேயே இல்லைன்னு சொல்லி வச்சேன். இப்படி ஆளுக்கு ஆள் ஏன் என் மேலே பழி போடுறாங்க?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.

“காரணம் எப்படியும் சீக்கிரம் தெரியவரும் நவநீதா. அதுக்கு முன்னாடி நான் கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லு. முருகேசு உன்னை எங்கே அடைச்சு வச்சிருந்தான்?” என்று கேட்டான்.

“அவன் ரவியோட சக்கரை ஆலைக்குத் தான் ஏதோ பேசணும்னு சொல்லி கூட்டிட்டுப் போனான். நான் அங்கே வர மாட்டேன்னு சொன்னதுக்கு, அங்கே தான் சரக்கு இருக்கு. சரக்கு அடிச்சுக்கிட்டே பேசுவோம்னு சொன்னான். பிறகு எனக்கு நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல கேட்காம ஊத்தி விட்டு, அங்கிருந்த ஒரு ரூமுக்கு கூட்டிட்டுப் போனான்.

நான் புல் போதையில் இருந்ததாலோ என்னவோ கதவையும் மூடலை. என்னையும் கட்டிப் போடலை. அப்புறம் அவன் எங்கோ எழுந்து போகவும், போதையில் எழுந்து ரோட்டுப் பக்கம் வந்தேன். ஒருவேளை அந்த ரவி தான் எனக்கு அப்படி ஊத்தி விடச் சொல்லியிருப்பானோ?” என்று கேட்டான்.

“சான்ஸ் இல்லை. உன்னைக் குடிக்க வைச்சுச் சுயநினைவு இல்லாமல் ஆக்கியது போல, ரவியைக் கொல்ல முயற்சி நடந்திருக்கு. ரவி இப்ப உயிருக்கு போராடிட்டு ஹாஸ்பிட்டலில் இருக்கான்…” என்றான் கவியுகன்.

“யார் இப்படிச் செய்தது? இந்தப் பழியை எல்லாம் என் மேல தூக்கி போட முயற்சி செய்திருக்காங்க. யாரது?” என்று கேட்டான் நவநீதன்.

“எனக்கு ஒரு ஆள் மேல் தான் சந்தேகம்…” என்றான் கவியுகன்.

“யாரது?” என்று நவநீதன் கேட்க,

அவன் பெயரை கவியுகன் மெல்ல உச்சரிக்க,

“என்ன அவனா?” என்று அதிர்ந்து கேட்டான் நவநீதன்.

கவனமாக இரு! கவனமாக இரு! என்று கவியுகன் அத்தனை முறை சொல்லியும் கவனமற்று போனாளோ? இன்னும் ஆழ் மயக்கத்தில் கிடந்தாள் அனன்யா.

அவளைச் சுற்றி எழுந்த சின்னச் சின்னச் சப்தங்கள் எதுவும் அவள் செவிகளைச் சென்று சேரவில்லை.

ஒரு காலடி சப்தம் அவளை நெருங்கிய உணர்வும் அவளுக்கு இல்லை.

இனியும் அவள் உணர்வுகளை ஊமையாக இருக்கவிட விருப்பம் இல்லாமல், அவள் முகத்தில் சட்டென்று தண்ணீர் தெளிக்கப்பட, அவளின் கண்ணிமைகள் மெல்ல அசைந்து கொடுத்தன.

கூடவே சொர சொரப்பான கரம் அவள் கன்னத்தைத் தட்ட, இமைகளை மெல்ல பிரித்தாள்.

எதிரே இருந்த உருவம் தெளிவில்லாமல் மசமசப்பாகத் தெரிந்தது.

கூடவே அதுவரை மழுங்கியிருந்த அவளின் உணர்வுகள் விழிப்புக்கு வர, விழுக்கென்று எழுந்து அமர்ந்தாள் அனன்யா.

மசமசப்பாக இருந்த கண்களைச் சிமிட்டி தன்னைச் சுற்றிலும் ஒரு முறை பார்த்து விட்டு, தான் இருந்த நிலையை உணர்ந்தவள், சட்டென்று திரும்பி தன் எதிரே இருந்த உருவத்தை உறுத்துப் பார்த்தாள்.

“தப்புக்கு மேல தப்பு பண்ற புவன்…” என்று வார்த்தை முத்துக்களை உதிர்த்தாள் அனன்யா.

“சுவாரசியமான தப்பு தப்பாகாது அனன்யா…” என்று உதட்டை சுளித்துக் கோணலான புன்னகையுடன் அவளைப் பார்த்தான் புவனேந்திரன்.

“எது அண்ணனை கட்டிக்கப் போற பொண்ணைக் கொன்னுட்டு, இப்ப அண்ணன் உயிரையும் எடுக்கத் துணிந்தது சுவாரசியமான தப்பா?” என்று கோபத்துடன் கேட்டாள்.

தோளை அலட்சியமாகக் குலுக்கி, “அப்போ என்னைப் பத்தி எல்லா விஷயமும் உனக்குத் தெரிந்திருக்கு?” என்று கேட்டான்.

“போன நிமிஷம் வரைக்கும் உன் மேல எனக்கும், யுகாவுக்கும் சந்தேகம் தான் இருந்தது. இப்ப என்னைக் கடத்திட்டு வந்து எங்க சந்தேகத்தை நீ உறுதிப்படுத்தியிருக்க…” என்றாள்.

“உங்க இரண்டு பேரையும் சுத்தலில் விட்டும், சரியா என்னை மோப்பம் பிடிச்சிட்டீங்களே? நீங்க இரண்டு பெரும் துப்பறியும் கில்லாடிகள் தான்…” என்று நக்கலுடன் சொல்ல, அனன்யா விழிகளை விரித்தாள்.

“என்ன நீங்க யாரென்று நான் எப்படிக் கண்டுபிடித்தேன்னு அதிசயமா இருக்கா? நீயும் அந்தக் கவியுகனும் இந்த ஊருக்கு வர்றதுக்கு முன்னாடி இல்லை, அதுக்கும் முன்னாடியே நீங்க இரண்டு பேரும் யாருன்னு எனக்குத் தெரியும்…” என்றான் வெகு வெகு இலகுவாக.

அனன்யா அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்.

“என்ன ஆச்சரியமா இருக்கா? ஒரு தப்பு செய்தால் அதைக் கடைசி வரை மறைக்கப் போராடணும். நடுவில் போனால் போகட்டும்னு விட்டுட கூடாது. இதயா இறந்த பிறகு, அவள் சாவில் சந்தேகம் இருக்கு, போலீஸ்கிட்ட போகணும்னு என்னோட அண்ணன் உளறிட்டு இருந்தான். அவனை எப்படி ஆப் செய்வதென்று நான் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னோட மாமாவே அவனை ஆப் செய்துட்டார்.

நல்லதா போச்சுன்னு நிம்மதியா இருந்தால், அவன் உடனே சென்னைக்குப் போறேன்னு யார்கிட்டயும் காரணம் சொல்லாமல் கிளம்பிட்டான். எதுக்குக் கிளம்புறான்னு சந்தேகப்பட்டு என் சென்னை ஃபிரண்ட் ஒருத்தனை அனுப்பிப் பார்க்க சொன்னேன். 

அவன் நேரா யுகா டிடெக்டிவ் ஏஜென்சி வந்ததைத் தெரிந்து கொண்டேன். அப்புறம் என்ன அப்ப இருந்தே உங்களை எப்படிக் குழப்பி விடலாம்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்…” என்று சொல்லி தோளை குலுக்கினான்.

“எதுக்கு இதயாவை கொன்ன?” என்று கேட்டாள்.

“எனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது…” என்று அவன் நிதானமாகச் சொல்ல,

“என்ன சொல்ற நீ?” என்று அதிர்ந்து கேட்டாள் அனன்யா.

ஹாய் பிரண்ட்ஸ்… ஒரு வேண்டுகோள்! புவனேந்திரன் பெயரை உங்கள் கமெண்டில் சொல்லாமல் கமெண்ட் பண்ணுங்க. அப்போதுதான் புதிதாக படிப்பவர்களுக்கு கதை சுவாரசியம் குறையாமல் இருக்கும். நன்றி.