யுகன்யா – 23

அத்தியாயம் – 23

நவநீதன் வீட்டில் எடுத்த இதயாவின் துணி, மணிமாறனின் வாக்குமூலம், டாக்டர் ரஞ்சனின் கூற்று… எல்லாம் நவநீதன் தான் குற்றவாளி என்று உறுதிப்படுத்தியது.

“நவநீதன் தான் இதயாவை கொன்றானா?” என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளக் கவியுகன் கேட்க,

“ஆமாம்!” டாக்டர் ரஞ்சன் உறுதியாகச் சொன்னான்.

“அவன் தான் கொன்றான் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.

“அவன் தான் சொன்னான்…” என்றான்.

“அவனே சொன்னானா?”

“ஆமாம்!”

“எப்படிக் கொன்றானாம்? என்ன காரணம்?”

“இதயா மேல் நவநீதனுக்கு ஆசை. ஆனால், அவன் பொண்ணு கேட்ட போது, வெட்டியா ஊரை சுத்துறான், சூதாடுறான் என்று சொல்லி இதயாவோட அப்பா பொண்ணு கொடுக்க மாட்டேனென்று சொல்லியிருக்கார். அதில் அடிக்கடி குடிச்சிட்டு வந்து தகராறு செய்திருக்கான். 

இந்த நிலையில் இதயாவுக்குக் கல்யாணம் நெருங்கவும், சம்பவம் நடந்த அன்னைக்குக் கடைசியா ஒரு முறை அவளிடம் பேசி பார்ப்போமென்று, அவள் வீட்டில் யாரும் இல்லாத போது போயிருக்கான். இவனைப் பார்த்தவுடனே இங்கே ஏன் வந்த? போ என்று சொல்லி இதயா ஆர்ப்பாட்டம் செய்திருக்காள். 

இவனும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ. உன் மேல் நான் ரொம்ப ஆசை வச்சுருக்கேன்னு சொல்லிப் பார்த்திருக்கான். ஆனால் இதயா இவன் பேச்சை காது கொடுத்தே கேட்கலை. அதில் அவனுக்குக் கோபம் வந்து, எனக்குக் கிடைக்காத நீ, வேற யாருக்கும் கிடைக்கக் கூடாதென்று அவள் கழுத்தை பிடித்து நெரித்திருக்கான். அதில் இதயா இறந்து போயிட்டாள்.

அவன் உடனே தன் மேல் கொலை குற்றம் விழுந்து விடக் கூடாதென்று, கிணற்றில் அவளைத் தள்ளிவிட்டுட்டு இவன் அங்கிருந்து பின் பக்க வழியா போயிட்டான். அடுத்து இதயாவோட உடம்பு கிணற்றில் விழுந்து இருந்ததைப் பார்த்து, யாரோ போலீஸுக்கு தகவல் சொல்லி போலீஸ் வரவும் நவநீதன் பயந்துட்டான்.

போலீஸ் வந்து போஸ்ட்மார்ட்டம் செய்ய இதயா உடம்பை எடுத்துட்டு போகவும், போஸ்ட்மார்ட்டம் செய்தால் இதயா எப்படி இறந்தாள் என்ற உண்மை தெரிய வந்திடுமென்ற பயத்தில் என்ன செய்வது என்று யோசித்திருக்கான்.

அன்னைக்கு நைட் நான் நவநீதன் அப்பாவுக்குப் பிரஷர் அதிகமாகி முடியலை என்று செக் பண்ண அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போ அவன் ஒரு மாதிரி இருந்ததைப் பார்த்துட்டு என்னன்னு கேட்டதும் முதலில் சொல்லலை. அப்புறம் நானும் தஞ்சாவூர் கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் வேலை பார்க்கிறேன் என்பது அவனுக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் நடந்ததை என்கிட்ட சொல்லி உதவி கேட்டான்.

நான் முதலில் மறுத்தேன். ஆனால் நான் எவ்வளவு பணம் வேணும் என்றாலும் தர்றேன். என்னை இந்தக் குற்றத்தில் இருந்து காப்பாத்தி விடு என்று கெஞ்சி கேட்டான். நான் எவ்வளவு பணம் தருவ என்று கேட்டேன். ஐந்து லட்சம் தருவதாகச் சொன்னான். அப்போ எனக்கு ஐந்து லட்சம், போஸ்ட்மார்ட்டம் செய்யப் போற டாக்டருக்கு ஐந்து லட்சம் கொடுத்திடு.

நான் உதவி செய்றேன்னு சொன்னேன். அவனும் சம்மதித்து நான் கேட்ட பணத்தைக் கொடுத்தான். உடனே போஸ்ட்மார்ட்டம் செய்யப் போற டாக்டர்கிட்ட பேசி ரிப்போர்ட் மாத்தி எழுத சொன்னேன். இதுதான் நடந்தது…” என்று டாக்டர் ரஞ்சன் சொல்ல,

“நீங்க இப்ப சொன்னதில் எதுவும் பொய் இல்லையே?” என்று கேட்டான் கவியுகன்.

“நடந்த உண்மையை அப்படியே சொல்லிட்டேன்…” என்றான்.

அவன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக் கொண்டாலும், ஒரு விஷயம் மனதில் இடறியது. ஆனால், அந்த இடறலை தனக்குள் மட்டும் வைத்துக்கொண்டு “சரி, இப்ப நவநீதன் எங்கே?” என்று கேட்டான்.

“அது எனக்குத் தெரியாது…” என்றான்.

“நீங்க கடைசியா எப்போ நவநீதனை பார்த்தீங்க?”

“மூன்று நாள் முன்னாடி பார்த்தேன். அதுக்குப் பிறகு பார்க்கலை…”

“ஒரு குற்றவாளி பற்றிய உண்மையை மறைப்பது சரியில்லை டாக்டர். உங்களுக்கு அவன் இருக்கும் இடம் தெரிந்தால் மறைக்காமல் சொல்லி விடுங்க…” என்று கவியுகன் மீண்டும் கேட்க,

“நிஜமா எனக்குத் தெரியாது!” என்றான் உறுதியாக.

இனி அவனிடம் பேசி பிரயோஜனமில்லை என்று தெரிந்து விட, அங்கிருந்து கிளம்பினான் கவியுகன்.

அவன் அந்தப் பக்கம் கிளம்பியதும், வேகமாகத் தன் கைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்துப் பேச ஆரம்பித்தான் டாக்டர் ரஞ்சன்.

“அந்தக் கவியுகன் வந்து என்கிட்ட எல்லா உண்மையையும் கறந்துட்டு போயிட்டான்…” என்று படபடப்பாகப் பேசினான்.

********

“எனக்கு வேற வழி தெரியலை. அவன் இப்படிக் கழுத்தை பிடிக்கிற மாதிரி ஆதாரத்தைக் கொண்டு வருவானென்று நான் எதிர்பார்க்கலை…” என்று இவன் சொல்ல, அந்தப் பக்கம் இருந்த நபர் நிதானமாக ஏதோ சொன்னார்.

அதை எல்லாம் கேட்டுக் கொண்டவன், “சரி… சரி… எத்தனை முறை கேட்டாலும் சொன்ன உண்மையைத்தான் சொல்லுவேன். மாத்தி சொல்ல மாட்டேன்…” என்று சொல்லி விட்டு அழைப்பை துண்டித்தான் டாக்டர் ரஞ்சன்.

காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய கவியுகனுக்குக் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருந்தது. இதயா கொலையில் இதுவரை கிடைத்த ஆதாரத்தை விட, நவநீதனும், அவன் கொடுக்கும் வாக்குமூலம் தான் முக்கியம். ஆனால், அவன் எங்கே சென்றான் என்றே தெரியாமல் அடுத்து என்ன செய்வது என்று சில நிமிடங்கள் ஒன்றுமே புரியாமல் குழப்பமாக இருந்தது.

டாக்டர் ரஞ்சனின் கிளீனிக்கிலிருந்து வெளியேறியதும், அடுத்து எங்கே செல்லலாம் என்று புரியாமல் சிறிது நேரம் காரை மனம் போன போக்கில் செலுத்தினான்.

மனம் முழுவதும் யோசனை மண்டி கிடந்தது. நேரமும் கடந்து கொண்டே இருந்தது. ரவியை அனுமதித்திருக்கும் மருத்துவமனைக்கும் செல்ல தோன்றவில்லை.

நேரம் கரைந்து கொண்டிருக்க, நள்ளிரவு பன்னிரெண்டு மணி ஆனது. ஊருக்கே சென்று பார்த்தால் என்ன? என்று தோன்ற காரை இளஞ்சோலை செல்லும் பாதையில் திருப்பினான்.

அதே நேரம் மருத்துவமனையில் இருந்த அனன்யா தூக்கம் வராமல் கீழே விரித்திருந்த போர்வையில் புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

ஐசியூவிற்கு வெளியே இரவு யாரையும் காத்திருக்க மருத்துவர்கள் அனுமதிக்காததால், அதே மருத்துவமனையில் ஒரு அறையை எடுத்து தங்கியிருந்தனர்.

ஒய்வு எடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்த மேகலாவை அவரின் பிரஷர் மாத்திரையைப் போட வைத்து அந்த அறையின் கட்டிலில் படுக்க வைத்திருந்தனர்.

அவரும் இவ்வளவு நேரம் தூங்காமல் புலம்பி அழுது கொண்டே இருந்து விட்டு சற்று முன்னர்த் தான் தூங்கியிருந்தார்.

வேறு கட்டில் இல்லாததால் கீழே ஒரு போர்வையை விரித்து அதில் அனன்யாவும், உதயாவும் படுத்திருந்தனர்.

அது சின்ன அறை தான் என்பதால், அதற்கு மேல் அதில் ஆட்கள் தங்க முடியாது என்பதால், தனசேகரும், காஞ்சனாவும் மருத்துவமனைக்கு அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தனர்.

புவனேந்திரன் மருத்துவமனை ரிசப்ஷன் பகுதியில் இருந்த இருக்கையில் அமர்ந்திருக்கப் போவதாகச் சொல்லி அங்கே சென்றிருந்தான்.

அனன்யா போலவே, உதயாவும் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள்.

கூடவே அவள் வாயிலிருந்து தொடர்ந்து ஏதோ முணுமுணுப்பு வந்து கொண்டே இருந்தது.

ஏதோ ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது. அவளைத் தொந்தரவு செய்யாமல், அமைதியாகப் படுத்திருந்தாள் அனன்யா.

அவள் மனதில் சற்று நேரத்திற்கு முன் கவியுகன் பேசியதே ஓடிக் கொண்டிருந்தது.

டாக்டர் ரஞ்சன் தெரிவித்த தகவல்களை அவளிடம் போனில் தொடர்பு கொண்டு தெரிவித்திருந்தான்.

ரஞ்சனும், நவநீதனை தான் குற்றவாளி என்று சொல்வதாகவும், தான் இப்போது நவநீதனை தேடி புறப்பட்டு விட்டதாகவும் சொல்லியிருந்தான். கூடவே மருத்துவமனையில் கவனமாக இருக்கும் படி அவளுக்குப் பணிந்திருந்தான்.

அவன் அப்படிச் சொன்னதும், “இங்கே எதுவும் நடக்குமென்று சந்தேகப்படுறீங்களா யுகா?” என்று அனன்யா கேட்டதும்,

“நவநீதன் இப்போ எங்கே இருக்கான் என்று தெரியலை. நான் அந்தப் பக்கம் அவனைத் தேடி போயிருக்கும் போது, அவன் இந்தப் பக்கம் வந்து ரவியின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர வைத்தால் என்ன செய்வது? அதனால் தான் கவனமாக இரு என்று சொல்கிறேன்…” என்றான்.

“ரவியை ஏன் அவன் எதுவும் செய்யணும் யுகா?” என்று கேட்டாள்.

ஒரு நொடி அமைதியாக இருந்த கவியுகன், “இப்ப நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா அனன்யா?” என்று கேட்டான்.

“என்ன உண்மை யுகா? இன்னும் என்கிட்ட சொல்லாமல் ரகசியம் எதுவும் வச்சுருக்கீங்களா…” என்று கேட்டாள்.

“வாழ்க்கையே ரகசியம் நிறைந்தது தான் அனன்யா. எதுவுமே பட்டவர்த்தனமாக வெளியே தெரிவது இல்லை…” என்று கவியுகன் சொல்ல,

காதில் வைத்திருந்த கைபேசியை எடுத்து முகத்திற்கு நேராக நீட்டி, ‘வியாக்கியானம் பேச ஆரம்பிச்சிட்டாருடா சாமி…’ என்று முனங்கி கொண்டாள்.

“அனன்யா, லைனில் இருக்கியா இல்லையா?” என்று அதற்குள் இரண்டு முறை அழைத்திருந்தான் கவியுகன்.

“இருக்கேன், சொல்லுங்க…” என்று மீண்டும் காதில் கைபேசியை வைத்தபடி கேட்டாள்.

“காதில் இருந்து போனை எடுத்துட்டு மனசுக்குள் என்ன திட்டினியா என்ன?” என்று நமட்டு சிரிப்புடன் கேட்டான்.

“மனசுல கூட எதுவும் நினைக்க விட மாட்டீங்களா யுகா?” என்று சிணுங்கினாள்.

“நான் கண்டுபிடிக்கிற மாதிரி உன் நினைப்பு இருக்கு…” என்றான் அதே சிரிப்புடன்.

“அப்போ என் மனசும் உங்களுக்கு முன்னாடியே தெரியும் இல்லையா? தெரிந்தே தெரியாத மாதிரி இருந்திருக்கீங்க…” என்று ஒரு வேகத்தில் கேட்டுவிட்டாள்.

ஆனால், அந்தப் பக்கம் கவியுகனிடமிருந்து பதில் வரவில்லை.

அவனின் அமைதி அவளுக்கு வலியைத் தந்தது.

தான்தான் ஒவ்வொரு முறையும் வழிய சென்று பேசுகிறோம். ஆனால் அவன் மௌனம் இருந்தே சாதிக்கிறான்.

‘இனி இது பற்றி அவனிடம் பேசவே கூடாது…’ என்று மனதிற்குள் உறுதிமொழியே எடுத்துக் கொண்டாள்.

“ஏதோ உண்மையைச் சொல்ல போறதாகச் சொன்னீங்களே, சொல்லுங்க யுகா…” என்று உடனே பேச்சை மாற்றினாள்.

ஆனாலும், அவளின் குரலில் தன் மனதை அடக்கிக் கொண்டதால் பீறிட்டு வந்த வலி தெரியவே செய்தது.

அதை அவனும் உணரவே செய்தான். அப்போது அவள் செய்ததை இப்போது அவன் செய்தான்.

காதிலிருந்து கைபேசியை எடுத்துத் தொடுதிரையில் ஒளிர்ந்த அனன்யா என்ற பெயரை பார்த்தான். கூடவே இன்னொரு கையால் தொடுதிரையில் இருந்த அவளின் பெயரை ஒற்றை விரலால் வருடினான்.

“யுகா…?” என்று அனன்யா சற்றுச் சத்தமாக அழைக்க, தன் தலையை உலுக்கிக் கொண்டவன், கைபேசியைக் காதில் வைத்தான்.

“சொல்வதைக் கவனமாகக் கேள் அனன்யா. மணிமாறன் சொன்னது அனைத்துமே உண்மை இல்லை. அவன் ஏதோ ஒரு உண்மையை நம்மகிட்ட இருந்து மறைக்கிறான். இதயாவின் போனை மட்டும் எடுக்க வந்ததாக அவன் சொன்னதை என்னால் நம்ப முடியலை. ரவி தான் அவன் எய்மா இருந்திருக்கும்…” என்றான்.

“என்ன சொல்றீங்க யுகா? அப்போ இனியும் ரவி உயிருக்கு ஆபத்து இருக்குமா? அவனை ஏன் மணிமாறன் கொல்ல நினைக்கணும்? அதனால் யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்டாள்.

“அது நவநீதன் நம்ம கைக்குக் கிடைத்த பிறகு தான் தெரியும் அனன்யா. அதனால் தான் கவனமா இரு என்று திரும்பத் திரும்பச் சொல்றேன்…” என்றான்.

“ம்ம், சரி யுகா. ஆனால் இங்கே நைட் ஐசியூ பக்கம் யாரும் இருக்கக் கூடாதென்று நர்ஸ் சொல்லிட்டு இருக்காங்க. இப்ப நான் என்ன செய்வது?” என்று கேட்டாள்.

“நைட் தூங்கிடாதே! அப்பப்போ ஐசியூ பக்கம் போய் ஒரு பார்வை பார்த்துக்கோ. அது போதும்!” என்றான்.

“சரி யுகா…” என்றவள், ஒரு நொடி தயங்கினாள்.

ஏதோ சொல்ல முயன்று சொல்ல முடியாத தவிப்பு!

“என்ன அனன்யா, என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” கவியுகனே கேட்டு விட்டான்.

“அது… அது… ஆமா…” என்றாள் தயக்கத்துடன்.

“என்ன சொல்லணுமோ சீக்கிரம் சொல்லு!” என்றான்.

“அது… நான் நினைக்கிறது சரியா என்று தெரியலை. சில நாளா எனக்கு இந்த டவுட் இருந்தது. ஆனால் இன்னைக்கு ரொம்ப அதிகமா இருக்கு. ஒருவேளை நான் தான் அப்படி நினைத்துக் கொள்கிறேனோ என்று நினைத்தேன். ஆனால் அப்படி நினைப்பதையும் சாதாரணமாக ஒதுக்கி தள்ள முடியலை…” என்றாள்.

“என்ன நினைக்கிற அனன்யா? தயங்காமல் சொல்லு!” என்றதும், சில நொடிகள் செலவழித்துத் தனக்கு உறுத்தலாகத் தோன்றியதை தெரிவித்தாள் அனன்யா.

அவள் சொன்னதைக் கவனமாகக் கேட்டவன், ஒரு நொடி மௌனத்திற்குப் பிறகு, “அனன்யா…” என்று மென்மையாக அழைத்தான்.

“ம்ம்…”

“நான் கவனமாக இரு! கவனமாக இரு என்று திரும்பத் திரும்பச் சொல்வதின் காரணம் இப்ப புரியுதா?” என்று கேட்டான்.

“யுகா?” என்று அதிர்ந்து அழைத்தாள்.

“அப்போ நான் சந்தேகப்பட்டது சரியா?” என்று நம்ப முடியாமல் கேட்டாள்.

அதற்குக் கவியுகன் ஆமாம் என்றும் சொல்லவில்லை. இல்லையென்றும் சொல்லவில்லை.

“நீ இந்தக் கேஸில் கொஞ்சம் அசால்டாக இருக்கியோ என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்று நிரூபித்திருக்க அனன்யா…” என்றான் பாராட்டுதலாக.

இந்த வேலையில் இறங்கிய பிறகு அவன் முதல் முதலாகப் பாராட்டும் பாராட்டு! ஆனால் அவன் பாராட்டைத் தான் அவளால் இலகுவாக ஏற்க முடியவில்லை.

உண்மை அவளை உறைந்து போகச் செய்திருந்தது.

“அனன்யா…” அவள் நிலை புரிந்தது போல் மென்மையாக அழைத்தான்.

“ம்ம்ம்…” முணுமுணுத்தாள்.

“உண்மை கசக்கத்தான் செய்யும் அனன்யா. அதை நினைத்து மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் இரு. இப்போ உனக்குத் தெளிவான மனநிலை தான் வேணும். நீ அங்கே இருக்க என்ற தைரியத்தில் தான் நான் இப்படி வெளியே சுத்திட்டு இருக்கேன்…” என்றான்.

முகத்தைக் கையால் துடைத்துக் கொண்டவள், “ஐயம் ஆல் ரைட் யுகா…” என்றாள்.

“குட்! நான் வைக்கிறேன்…” என்று அழைப்பை துண்டித்திருந்தான்.

அதை இப்போது நினைத்துக் கொண்டே புரண்டு படுத்தாள் அனன்யா.

அப்போது தான் அருகில் படுத்திருந்த உதயா அவளிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தவள், அவளின் பேச்சில் கவனம் வைத்தாள்.

“இப்பத்தான் இதயாவை பறிகொடுத்துட்டு, அதில் இருந்து மீள முடியாமல் நாங்க தவித்துப் போய் இருக்கோம். இந்த நிலையில் இப்ப ரவி அத்தானுக்கு இந்த நிலைமை. நாங்க யாருக்கு என்ன பாவம் செய்தோம்? ஏன் எங்களுக்கு இப்படி எல்லாம் நடக்குது அனன்யா?” என்று உதயா அழுகையுடன் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“கவலைப்படாதே உதயா. உன் அத்தானுக்கு ஒன்னும் ஆகாது!” என்றாள்.

“ஆகாது! ஆகக் கூடாது! ஆனால் நாங்க தாங்க மாட்டோம் அனன்யா…” என்று உடைந்து அழுதாள்.

“ச்சு, பாஸிட்டிவாக நினை உதயா!” அவளை அதட்டினாள் அனன்யா.

உதயா அழுவதும், அனன்யா சமாதானம் செய்வதுமாகச் சிறிது நேரம் ஓடியது.

அழுது அழுதே சோர்ந்து போன உதயா, தன்னை அறியாமல் தூங்க ஆரம்பித்தாள். அவள் தூங்கியதை உணர்ந்ததும், படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்த அனன்யா, கட்டிலில் படுத்திருந்த மேகலாவை பார்த்தாள்.

மாத்திரை உபயத்தால் தூங்கிக் கொண்டிருந்தார்.

இருவரும் உறங்குவதை உறுதி செய்து கொண்டு, அறையின் கதவை சத்தமில்லாமல் திறந்து வெளியே சென்றாள்.

வெளியே வராந்தா மங்கலான வெளிச்சதில் அமைதியாக இருந்தது. அதைக் கடந்து ஐசியூ அறை பக்கம் சென்றாள்.

அங்கேயும் வெளியே யாரும் இல்லை. ரவீந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்த ஐசியூ அறைக்கு வெளியே வந்து நின்றவள், கதவில் இருந்த சின்னக் கண்ணாடி வழியாக உள்ளே பார்த்தாள்.

ரவீந்திரன் மருத்துவ உபகரணங்கள் நடுவே படுத்திருக்க, ஒரு செவிலி தூங்காமல் விழிப்புடன் உள்ளே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அவர் விழிப்புடன் இருந்ததைக் கண்டு ‘இனி பயமில்லை!’ என்ற எண்ணத்துடன் மீண்டும் அறைக்குச் செல்ல திரும்பி நடந்தாள்.

ஐசியூவிலிருந்து அறைக்குச் செல்லும் வழியில் ஒரு இடத்தில் வெளிச்சம் இல்லாமல் இருட்டாக இருக்க, அதைக் கடந்து அவள் சென்று கொண்டிருக்கும் போது, அவளின் பின்னாலிருந்து ஒரு கை நீண்டு அவள் மூக்கை மூடியது.

அந்தக் கைக்குள் மயக்க மருந்து துணி இருந்திருக்க, அந்த நெடி அவள் மூக்கை நிரடி, அவளுக்குள் சென்று, அவளைத் தாக்கிய அடுத்த நொடி, கண்கள் சொருகி மயக்கத்திற்குச் சென்றாள் அனன்யா.

அவளை மயக்கத்தில் ஆழ்த்திய உருவம், வெற்றி களிப்புடன் மெல்ல அவளை அங்கிருந்து நகர்த்திச் சென்றது.

இங்கே அனன்யா கடத்தப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன், அங்கே இளஞ்சோலையை நோக்கி சென்று கொண்டிருந்த கவியுகன், ஒரு யூகத்தில் காரை ஒரு இடத்தில் கொஞ்சம் நிதானமாகவே செலுத்தினான்.

அங்கிருந்த ஒரு பெரிய கட்டடத்தைக் கண்டு கொண்டே யோசனையுடன் கவியுகன் காரை செலுத்திக் கொண்டிருந்த போது, திடீரென ஒரு உருவம் பக்கவாட்டில் இருந்து தள்ளாடி தள்ளாடி அவன் காரின் முன்னே வந்து விழுந்தது.

நிதானமாகவே காரை செலுத்தியதால், சட்டென்று காரை பிரேக் போட்டு நிறுத்தி, முன்னால் எட்டிப் பார்த்தான். ஒரு ஆடவன் சாலையில் குப்புற விழுந்து கிடந்தான்.

விழுந்தவன் எழாமல் அப்படியே கிடக்க, என்னானதோ? என்று பதறி வேகமாகக் காரை விட்டு இறங்கி, அருகில் சென்று அந்த ஆடவனைப் புரட்டி பார்த்தவன் அதிர்ந்தான்.

“நவநீதன்!” என்று கவியுகனின் உதடுகள் அவசரத்துடன் முணுமுணுத்துக் கொண்டன.