யுகன்யா – 22

அத்தியாயம் – 22

“உனக்கு… உனக்கு எ…ப்படி?” வேர்த்து வழிய, திணறலுடன் கேட்டார் அந்த மருத்துவர்.

“தெரியும் என்று கேட்குறீங்களா? பட்சி! பட்சி சொல்லுச்சு…” என்று பற்களைக் காட்டி சிரித்தான் கவியுகன்.

கைக்குட்டையை எடுத்து, முகம் முழுவதும் துளிர்த்திருந்த வேர்வையை ஒற்றிக் கொண்டார் மருத்துவர்.

“நீ சும்மா என்னைப் போட்டு வாங்குற. நான் அப்படி எதுவும் ரிப்போர்ட் கொடுக்கலை…” தன் பயத்தை உதறி தள்ளி சற்றுத் தைரியமாக உரைத்தார்.

“இந்தப் போட்டு வாங்குற வேலை எல்லாம் எனக்கு வராது டாக்டர். ஆனால் அதை விட எனக்கு இன்னொரு கெட்ட பழக்கம் இருக்கு…” என்றான் கண்களைச் சிமிட்டி.

அவனின் பாவனையில் என்ன என்று கேட்க கூட அவருக்கு வாய் வரவில்லை.

“என்னன்னு கேட்க மாட்டீங்களா? சரி, நானே சொல்றேன்…” என்றவன் தன் கைபேசியில் இருந்த வீடியோவை போட்டு அந்த மருத்துவரின் முன் நீட்டினான்.

அதில் அவர் மட்டும் அந்த மருத்துவமனை அறையில் இருக்க, இப்போது அவரின் கைபேசி அழைத்தது. அழைத்தது யார் என்று தொடுதிரையில் பார்த்துவிட்டு, “ஹலோ டாக்டர், சொல்லுங்க… என்ன விஷயம்?” என்று கேட்டார்.

அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ… 

“என்ன சொல்றீங்க டாக்டர்? அந்த இளஞ்சோலை சூசைட் கேஸ் ரிப்போர்ட் பற்றி யாரும் கேட்டு வந்தால் கொடுக்க வேண்டாமா? அதை எதுக்கு நான் கொடுக்கப் போறேன் டாக்டர். சரியாகக் கொடுக்கிற ரிப்போர்ட்டையே நான் சம்பந்தபட்டவங்களைத் தவிர, வேற யார் கண்ணிலும் காட்ட மாட்டேன். அப்படி இருக்கும் போது நீங்க கேட்டுக்கிட்டதுகாக மாற்றி எழுதி கொடுத்த ரிப்போர்ட் பற்றி வெளியே மூச்சு விடுவேனா என்ன? அப்புறம் என் வேலைக்கே இல்லை வேட்டு வந்திடும். நீங்க கவலையே படாதீங்க. ரிப்போர்ட் வெளியே போகாது…” என்றவர்,

“ஆமா, இத்தனை நாளுக்குப் பிறகு அதை ஏன் இப்ப கேட்குறீங்க? அதை யாரு இனி துருவி பார்க்க போறா?” என்று கேட்டார்.

“என்ன, அந்தப் பொண்ணைக் கட்டிக்க இருந்த பையன், ரகசியமா ஏதோ வேலை பார்க்கிறானா? என்ன சொல்றீங்க டாக்டர்? அப்படி மட்டும் நடந்துட்டால் நமக்குத் தானே பிரச்சினை…”

********

“சரி டாக்டர். பார்த்துக்கோங்க. ஏதாவது சொதப்பினால் எனக்கு மட்டும் இல்லை. உங்களுக்கும் பிரச்சினை தான்…” என்று அவர் பேசியது எல்லாம், அந்தக் கைபேசியில் பதிவாகியிருந்தது.

“என்னோட கெட்ட பழக்கமே இதுதான் டாக்டர். ஆதாரம் இல்லாம நான் எதுவும் பேச மாட்டேன். இந்த ஆதாரம் போதுமா?” என்று கவியுகன் நிதானமாகக் கேட்டதும், அந்த மருத்துவருக்கு ஊற்றாகப் பொங்கி வழிந்தது வேர்வை.

அவசர அவசரமாகக் கைக்குட்டையால் வேர்வையைத் துடைத்துக் கொண்டார்.

“இது… இது எப்படி?”

“இது எப்படி எடுத்தேன் என்று குழப்பமா இருக்கா? அதான் சொன்னேனே பட்சின்னு…” என்று கண் சிமிட்டி சிரித்தான்.

“உனக்கு என்ன வேணும்? எதுக்காக…” என்று அவர் தொடர முடியாமல் திணற, அவருக்குச் சிரமம் கொடுக்காமல் கையை நீட்டி அவர் பேச்சை நிறுத்தினான் கவியுகன்.

“உங்களை நான் திரும்பப் பொய் ரிப்போர்ட் கொடுங்க என்று கேட்க போவது இல்லை…” என்றான்.

“பின்னே? பணமா? பணத்துக்காக என்னை மிரட்ட வந்துருக்கியா?” என்று கேட்டார்.

“பணமா? நோ!” என்றான்.

“பின்ன எதுக்காக நீ இங்கே வந்திருக்க?”

“எனக்குத் தேவை ஒரு உண்மை டாக்டர்…” என்றான்.

“உண்மையா? என்ன உண்மை?”

“நீங்க போனில் யாரோ டாக்டர் என்று சொல்லி பேசினீங்களே… அந்த டாக்டர் யார்? அவர் பேர் என்ன?” என்று முன்னே இருந்த மேஜையில் கைகளை ஊன்றிய படி கேட்டான்.

“அது… அது எதுக்கு உன்கிட்ட சொல்லணும்? சொல்ல முடியாது…” என்றார்.

“என்ன டாக்டர் விவரம் இல்லாம பேசிட்டு இருக்கீங்க? என் கையில் ஆதாரம் இருக்கு டாக்டர். அதிலும் நீங்க ஒரு வரி சொல்லியிருக்கீங்க பாருங்க, ‘நீங்க சொல்லி நான் மாற்றி எழுதிய ரிப்போர்ட்’ என்று. அது ஒன்னே போதும். உங்க வேலைக்கும் ஆபத்து. அதோட போலீஸ் ஸ்டேஷனும் போகணும். இப்ப எப்படி வசதி? உண்மையைச் சொல்றீங்களா? இல்லை…” என்று இழுத்தான்.

“உண்மையைச் சொன்னால் அந்த டாக்டர் என்னைச் சும்மா விட மாட்டார்…” என்று தயங்கினார் அவர்.

“சொல்லலை என்றால் நான் சும்மா விட மாட்டேன் டாக்டர். அடுத்தச் சில நிமிடங்களில் போலீஸ் இங்கே வந்து நிற்கும். அப்புறம் நீங்க போலீஸ் முன்னாடி உண்மையைச் சொல்ல வேண்டியது இருக்கும்…” என்று கைகளை விரித்தான் கவியுகன்.

பொறியில் மாட்டிக் கொண்ட எலி போல முழித்தார் அந்த மருத்துவர்.

உங்களுக்கு வேற வழி இல்லை டாக்டர். நீங்க சொல்லித்தான் ஆகணும். யார் அந்த டாக்டர்?” என்று கேட்டான்.

“அது… அது…” என்று அவர் தயங்க,

“ம்ம்ம்…” என்று ஊக்கினான்.

“இங்கே ஜெனரல் வார்ட்டில் வேலை பார்க்கும் டாக்டர் ரஞ்சன் தான் அந்தப் பொண்ணு செத்துப் போன கேஸில் என்னை ரிப்போர்ட் மாற்றி எழுத சொன்னார்…” என்றார்.

டாக்டர் ரஞ்சன் பெயரை கேட்டதும் கவியுகன் அதிரவில்லை. இதை ஒரு வகையில் எதிர்பார்க்கவே செய்தான் என்பதால் திகைப்படையாமல் அடுத்தக் கேள்விக்குத் தாவினான்.

“டாக்டர் ரஞ்சன் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டீங்களா?”

“இல்லை, நான் சம்மதிக்க மாட்டேன்னு தான் சொன்னேன். ஆனால் அவர் ரிப்போர்ட் மாற்றிக் கொடுத்தால் உங்களை நல்லா கவனித்து விடுவேன்னு சொன்னார். எனக்கும் கொஞ்சம் பணத் தேவை இருந்தது. அதனால் ரிப்போர்ட் மாற்றி எழுதி கொடுத்தேன்…” என்றார்.

“உங்களுக்கு ரஞ்சன் எவ்வளவு பணம் கொடுத்தார்?”

“ஐந்து லட்சம்!”

“ஐந்து லட்சம் அவருக்கு ஏது? யார்கிட்ட வாங்கிக் கொடுத்தார்?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்கிட்ட பேசியது டாக்டர் ரஞ்சன் தான். டாக்டர் ரஞ்சன் தான் பணமும் கொண்டு வந்து கொடுத்தார்…”

“சரி, இப்பவாவது உண்மையான ரிப்போர்ட் சொல்லுங்க. அந்தப் பொண்ணு இதயா எப்படி இறந்தாள்?” என்று கேட்டான்.

“யாரோ கழுத்தை நெரித்துக் கொன்று கிணற்றில் தள்ளி விட்டுருக்காங்க…” என்றார்.

“ஆள் யாரென்று உங்களுக்குத் தெரியாதா?”

“தெரியாது! நான் டாக்டர் ரஞ்சன்கிட்ட கேட்டேன். அவர் சொல்லலை…” என்றார்.

“இதயா உடலில் ரத்தக்காயம் எதுவும் இருந்ததா?” 

“இல்லை…” என்றதும் யோசனையுடன் புருவத்தை நெறித்தான் கவியுகன்.

அப்போது அந்த உடையில் இருந்த ரத்தம் யாருடையது? என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், அதை மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டான். 

“ஓகே டாக்டர், உங்களுக்குத் தெரிந்த உண்மையை எல்லாம் சொன்னதுக்கு ரொம்பத் தேங்க்ஸ்! நான் வர்றேன்…” என்று இருக்கையிலிருந்து எழுந்தான் கவியுகன்.

“என்ன நீ பாட்டுக்கு எழுந்து போற? உன் போனில் இருக்குற வீடியோவை டெலிட் பண்ணு…” என்றார் பதட்டமாக.

“உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்…” என்றவன், அவர் கண் முன்பே அந்த வீடியோவை டெலிட் செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தவன், உதட்டில் உறைந்து போன புன்னகையுடன் தனது கைபேசியை எடுத்துப் பார்த்தான்.

அதில் அந்த மருத்துவர் அலைபேசியில் பேசிய வீடியோ மட்டும் இல்லாமல், சற்று முன் டாக்டர் ரஞ்சன் பற்றி அவர் சொன்னதும், இதயா எப்படிக் கொலை செய்யப்பட்டாள் என்று சொன்ன வீடியோவும் சுடசுட அவனின் கைபேசியில் அழகாக இடம் பிடித்திருந்தது.

இதயா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அறிந்து கொண்டதுமே போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் மாற்றப்பட்ட விவகாரத்தைத் தோண்ட முடிவெடுத்து அதற்கு முதல் காரியமாய், மருத்துவமனையில் வேலை பார்த்த செல்வா என்பவனைப் பிடித்து, போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவரை கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்தான்.

அவனும் அவர் போனில் பேசியதை ரெக்கார்ட் செய்து விட்டு தகவலை தெரிவிக்க, மருத்துவரை நேரில் சந்தித்துச் சுடசுட வாக்குமூலமே வாங்கி விட்டான்.

இனி டாக்டர் ரஞ்சனை மடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் காரை எடுத்து ரவீந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வண்டியை விட்டான்.

கவியுகன் அங்கே சென்ற போது குடும்பத்தினர் மட்டும் சோகமாக அமர்ந்திருந்தனர்.

அனன்யா அங்கே இல்லை என்றதும், கண்களைச் சுழல விட்டான்.

அனன்யா கேன்டின் பக்கமிருந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவன், அவளை அங்கேயே நிற்க சொல்லி கண்ணைக் காட்டிவிட்டு, தானே அங்கே சென்றான்.

அனன்யாவின் கையில் ஒரு குளிர்பான பாட்டில் இருந்தது.

“யாருக்கு வாங்கிட்டு போற அனன்யா?” அவள் கையிலிருந்த பாட்டிலை பார்த்துக் கேட்டான்.

“அவங்க யாருமே சாப்பிட போக மாட்டேங்கிறாங்க. அதுதான் வாங்கி வச்சுக்கிட்டால் கொஞ்ச கொஞ்சமா குடிக்க வைக்கலாமே என்று வாங்கிட்டு போறேன்…” என்றாள்.

“நீ சாப்பிட்டியா?” என்றவன் குரலில் அக்கறை தொனித்ததோ? அவன் முகத்தை ஊடுருவி பார்த்தாள்.

அந்தோ பரிதாபம்! அவனின் முகத்தில் எந்த உணர்வுகளும் கொந்தளிக்கவில்லை. எப்போதும் போல் இயல்பாக இருந்தான்.

‘நான் தான் ரொம்பக் கற்பனை செய்துகிறேன் போல?’ என்று மானசீகமாகத் தலையில் கொட்டிக் கொண்டாள்.

“சாப்பிட்டியா என்று கேட்டால் நீ என்ன என் முகத்தையே பார்க்கிற?” கேலியில் சிரித்த கண்களுடன் கேட்டான்.

“யாருமே சாப்பிடாதப்ப நான் மட்டும் எப்படிப் போய்ச் சாப்பிட? அது இருக்கட்டும். நீங்க சாப்பிடீங்களா?” என்று பதிலுக்குக் கேட்க, தோளை குலுக்கினான்.

காலையில் இருந்து வெளியே அலைந்ததில் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, கடையில் காபி, வடை என்று தான் வாங்கி உண்டிருந்தான். பொறுமையாக உண்ண கூட நேரம் இல்லாமல் தான் அலைந்து கொண்டிருந்தான்.

“காலையில் இருந்து வெளியே சுத்திட்டு இருக்கீங்க யுகா. மயக்கம் வந்திட போகுது. வாங்க சாப்பிட போகலாம்…” என்றழைத்தாள் அனன்யா.

அவள் கையில் வைத்திருந்த குளிர்பானத்தை வாங்கி அருந்தியவன், “அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை. நான் உடனே போயாகணும்…” என்றான்.

“எங்கே யுகா?”

“டாக்டர் ரஞ்சனை மீட் பண்ண…” என்றான்.

“அப்போ உங்க சந்தேகம் உறுதியாகிருச்சா யுகா?” என்று வேகமாகக் கேட்டாள்.

‘ஆமாம்’ என்று அவன் தலையை அசைக்க, “ஈவ்னிங் நீங்க டாக்டர் ரஞ்சன் மேல சந்தேகமா இருக்கு. அவர் இங்கே வரும் போது கொஞ்சம் கவனமா வாட்ச் பண்ணு என்று நீங்க சொன்ன போது கூட என்னால் நம்பவே முடியலை யுகா. ஆனால் இப்ப உறுதியாகிருச்சு என்று சொல்றீங்க? அப்போ குற்றவாளி யார் யுகா?” என்று கேட்டாள்.

“உன்னோட கேள்விக்குப் பதில் டாக்டர் ரஞ்சன் தான் சொல்லணும். ஏன் டாக்டரே கூடக் குற்றவாளியாக இருக்கலாம். காரணம் என்னவென்று சரியா தெரியவில்லை என்றாலும், இதயா இறந்து போறதுக்கு இரண்டு நாட்கள் முன்னாடி, டாக்டர் ரஞ்சன் கிட்ட போய்த் தலைவலிக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துருக்காள். அதோட டாக்டர் ரஞ்சன் ரவி குடும்பத்துக்கு மட்டும் இல்லை, நவநீதன் குடும்பத்துக்கும் நெருக்கமான நபரா இருந்திருக்கார்…” என்றான்.

“என்ன சொல்றீங்க யுகா, நவநீதனுக்கும், டாக்டருக்கும் நெருக்கமா?”

“ஆமாம், நவநீதனோட அப்பா பிரஷர், சுகர் பேஷண்ட். அவரை மன்த்லி ஒரு முறை செக்கப் செய்ய டாக்டர் நவநீதன் வீட்டுக்கு வந்து போவாராம். அப்போ நவநீதனுக்கும், டாக்டருக்கும் நல்ல பழக்கம் இருந்திருக்கு…” என்றான்.

“அப்போ நவநீதன் செய்த குற்றத்தை டாக்டர் மறைக்க உதவி செய்திருக்கார் என்று சொல்றீங்களா? டாக்டர் மேல உங்களுக்கு எப்படிச் சந்தேகம் வந்தது யுகா?”

“ஒரு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை மாற்றுவது சுலபம் இல்லை. அதுக்கு நவநீதனுக்கு யாராவது உதவி செய்திருக்கணும் என்ற சந்தேகம் வந்ததுமே… இன்னும் கொஞ்சம் தூண்டி துருவி விசாரித்ததில், டாக்டருக்கும், நவநீதனுக்கும் இருக்கும் பழக்கம் தெரியவந்தது.

நான் சந்தேகப்பட்ட மாதிரி போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டரை வாட்ச் பண்ணியது மூலமா ஒரு தகவல் கிடைக்கவும், அவரைப் போய்ப் பார்த்தேன். மனுஷனை கொஞ்சம் மிரட்டியதும் உண்மையைக் கக்கிட்டார். டாக்டர் ரஞ்சன் தான் பேசி ரிப்போர்ட்டை மாத்த வச்சுருக்கார் என்று வாக்குமூலம் கொடுத்துட்டார்…” என்றான்.

“அவரும் நவநீதன் பெயரை சொன்னாரா யுகா?”

“இல்லை, முன்னாடி நின்னு வேலை செய்தது எல்லாமே டாக்டர் ரஞ்சன் தான். ரிப்போர்ட் மாற்றி எழுத ஐந்து லட்சம் லஞ்சம் கை மாறி இருக்கு…”

“எவ்வளவு பெரிய பிராட்தனம்! மனுஷங்க எப்படி எல்லாம் இருக்காங்க…” என்று கோபம் துளிர்க்க சொன்னாள்.

“டாக்டர் ரஞ்சன் இங்கிருந்து எப்போ கிளம்பி போனார்?” என்று கேட்டான்.

“ஈவ்னிங் அவரோட கிளீனிக் திறக்க போகணும் என்று சொல்லிட்டு கிளம்பி போனார். நைட் பத்து மணிக்கு மேலே இங்கே திரும்பி வர்றேனென்று சொல்லியிருந்தார்…” என்றாள்.

கைகடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான் கவியுகன். இரவு ஒன்பது மணி ஆகியிருந்தது.

“ஓகே, நான் இப்ப கிளம்பினால் சரியாக இருக்கும். டாக்டர் இங்கே வருவதற்கு முன் அவரை மடக்கி பிடிக்கணும். டாக்டரையும் பேச வச்சுட்டால் நவநீதன் மேல குற்றம் உறுதியாகிடும். அடுத்து அவனைக் கண்டுபிடிப்பது மட்டும் தான் வேலை…” என்றான்.

“நவநீதன் எங்கே இருக்கான் என்றே தெரியலையே யுகா. அவனை எப்படிக் கண்டுபிடிக்கப் போறோம்?” என்று கேட்டாள்.

“பார்க்கலாம். டாக்டர் ரஞ்சனுக்கு அவன் எங்கே இருக்கான் என்ற தகவல் தெரிந்திருக்கலாம்…” என்றான்.

“என்ன அண்ணா இங்கே நின்னு பேசிட்டு இருக்கீங்க?” என்ற குரல் கவியுகன் முதுகிற்குப் பின்னால் கேட்க, திரும்பிப் பார்த்தான்.

புவனேந்திரனும், உதயாவும் நின்று கொண்டிருந்தார்கள். இருவர் முகத்திலும் அதீத சோர்வு!

“அனன்யாவை இங்கே பார்க்கவும் அப்படியே நின்னு பேசிட்டு இருந்தேன் புவன். நீங்க எங்கே?” என்று கேட்டான்.

“அம்மாவுக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்காம் அண்ணா. அதான் சாப்பிட ஏதாவது வாங்கலாமென்று வந்தோம்…” என்றான்.

“நீ போய் ஆர்டர் கொடுத்துட்டு இரு உதி. நான் இதோ வர்றேன்…” என்று உதயாவை அனுப்பி வைத்தவன், “அண்ணா, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்…” என்றான்.

“சொல்லு புவன்…” 

“நாளைக்குக் காலையில் போய்ப் போலீஸ் ஸ்டேஷனில் கம்ளைண்ட் கொடுக்கலாமென்று இருக்கேன் அண்ணா. ரவி அண்ணாவோட இந்த நிலைக்குக் காரணமானவனை இதுக்கு மேலேயும் சும்மா விட்டு வைக்கக் கூடாது. அதோட டாக்டர் ரஞ்சன் ரெக்வெஸ்ட் செய்து கேட்டுக்கிட்டதால் தான் இந்த ஹாஸ்பிட்டலில் இதுவரை போலீஸ்கிட்ட விஷயத்தைச் சொல்லாமல் இருக்காங்க. ஆனாலும் நம்மையே சீக்கிரம் விஷயத்தைப் போலீஸ்கிட்ட சொல்ல சொல்லியிருக்காங்க. நம்மால் அவங்களுக்கும் பிரச்சினை வேண்டாமென்று பார்க்கிறேன்…” என்றான்.

“நல்ல முடிவு புவன். செய்! போலீஸ் ஸ்டேஷன் போகும் போது சொல்லு. நானும் கூட வர்றேன்…” என்றான் கவியுகன்.

“கட்டாயம் சொல்றேன் அண்ணா. அதுக்குள்ள ரவி அண்ணா கண் முழிச்சுட்டால் நல்லா இருக்கும். டாக்டர் வேற எதுவும் உறுதியா சொல்லாமல் இருக்க, இருக்க மனசு முழுவதும் பதட்டமாகவே இருக்கு…” என்றான் கவலை தோய்த்த குரலில்.

“நல்லதே நினைப்போம் புவன். கவலைப்படாமல் இரு!” என்று அவனைத் தேற்றினான் கவியுகன்.

உதயா கேண்டீன் பக்கமிருந்து புவனேந்திரணை அழைக்க, “சரி அண்ணா, நான் வர்றேன்…” என்று அங்கிருந்து நகர்ந்தான்.

“அப்போ நான் கிளம்புறேன் அனன்யா. டாக்டர் ரஞ்சனை பார்த்துட்டு வர்றேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான் கவியுகன்.

கவியுகன், டாக்டர் ரஞ்சனின் கிளீனிக் சென்ற போது, இன்னும் இரண்டு ஆட்கள் வைத்தியம் பார்க்க காத்துக் கொண்டிருந்தார்கள்.

வாசல் அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து விட்டு காரிலேயே காத்திருந்தான்.

உள்ளே ஒரு மருத்துவர் அறையும், வெளியே நோயாளிகள் காத்திருக்க வராந்தாவும் உள்ள சிறிய கிளீனிக் தான் அது.

ஒரு செவிலி மட்டும் அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அனைத்தையும் காரில் அமர்ந்த வண்ணமே பார்த்துக் கொண்டிருந்தான் கவியுகன்.

அப்போது மருத்துவர் அறையில் இருந்து வெளிய வந்த செவிலி, அடுத்த நோயாளியை உள்ளே அழைத்தார்.

அவருடன் அருகில் இருந்தவரும் எழுந்து செல்ல, இருவரும் ஒன்றாக வந்தவர்கள் என்று புரிந்தது. அவர்களுக்குப் பிறகு இனி வைத்தியம் பார்க்க யாரும் இல்லை.

காத்திருந்தான். 

மருத்துவர் அறைக்குள் சென்றவர்களும் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வெளியே வந்தனர்.

அவர்களிடம் செவிலி ஏதோ சொல்ல, கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றனர். மேலும் பதினைந்து நிமிடங்கள் செல்ல, அந்தச் செவிலி ஒரு தோள் பையுடன் அங்கிருந்து வெளியேறினார்.

இப்போது அந்தக் கிளீனிக்கில் டாக்டர் ரஞ்சனை தவிர யாருமில்லை என்று உறுதியானதும், காரை விட்டு இறங்கினான் கவியுகன்.

மெல்ல அந்தக் கிளீனிக் உள்ளே செல்ல, மருத்துவர் அறை கதவு வெறுமனே சாற்றி வைக்கப்பட்டிருந்தது.

கதவை லேசாகத் திறந்து பார்த்தான்.

டாக்டர் ரஞ்சனின் இருக்கை வெறுமையாக இருந்தது. பார்வையைச் சற்று எட்டிப் போட, அங்கிருந்த வாஷ்பேஷனில் கைகளைக் கழுவிய படி கதவிற்கு முதுகை காட்டி நின்று கொண்டிருந்தான் ரஞ்சன்.

கதவை சத்தம் செய்யாமல் திறந்து உள்ளே சென்ற கவியுகன், அங்கிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

கையைக் கழுவிவிட்டுத் துவாலையில் கையைத் துடைத்துக் கொண்டே திரும்பிய ரஞ்சன், அங்கே அமர்ந்திருந்த கவியுகனை கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான்.

“ஹலோ, நீங்க எப்ப வந்தீங்க?” என்று சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு கேட்டுக் கொண்டே, தனது இருக்கையில் அமர்ந்தான் டாக்டர் ரஞ்சன்.

“நான் வந்து ரொம்ப நேரமாச்சு டாக்டர். ஆனால் உங்களைப் பார்க்க இப்பத்தான் உள்ளே வர்றேன்…” என்றான் கவியுகன்.

“சத்தம் இல்லாமல் வந்து உட்கார்ந்திருக்கீங்க? என்னைப் பார்க்க வந்தால் நர்ஸ்கிட்ட சொல்லி உள்ளே வந்திருக்கலாமே?” என்று ரஞ்சன் இயல்பாகக் கேட்க,

“நான் பேஷண்டா வந்திருந்தால் நர்ஸ்கிட்ட சொல்லி வந்திருப்பேன். ஆனால் நான் இப்ப பேஷண்டா வரலையே…” என்றான்.

“பின்ன, ரவி விஷயமா பேச வந்தீங்களா? நானே கொஞ்ச நேரத்தில் ரவியைப் பார்க்க அங்கே வரலாம் என்று தான் இருந்தேன்…” என்றான் ரஞ்சன்.

“நீங்க அங்கே வருவதற்கு முன் உங்களைப் பிடிச்சிருவோம் என்று தான் நான் இங்கே வந்தேன் டாக்டர்…”

“புரியலை! என்கிட்ட எதுவும் தனியா பேசணுமா என்ன?” ரஞ்சன் குழப்பத்துடன் கேட்க,

“ ஆமா டாக்டர், தனியா பேசணும்…” என்றான்.

“என்ன விஷயம்?”

“விஷயத்தைச் சொல்வதை விட நீங்களே நேரடியாகக் கேட்டுவிட்டால் எனக்கு வேலை மிச்சம் டாக்டர்…”

“என்ன கேட்கணும்?” என்று அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, தன் கைபேசியை எடுத்து அந்த அரசு மருத்துவர் பேசியதை ஓட விட்டான்.

ஒவ்வொரு வார்த்தையும் காதில் விழ விழ, டாக்டர் ரஞ்சனின் முகம் மாறி ரத்த பசை இல்லாமல் வெளுத்துப் போனது.

“நீ… நீங்க யாரு? நீங்க எதுக்கு இதெல்லாம் ரெக்கார்ட் செய்து வச்சிருக்கீங்க?” என்று ரஞ்சன் பதட்டத்துடன் கேட்க,

“என்ன டாக்டர் நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? நம்ப முடியலையே?” என்றான் தாடையை நீவிய படி.

“நீங்க ரவி வீட்டுக்கு நிலம் வாங்கும் விஷயமாகத்தானே வந்திருக்கீங்க. நீங்க ஏன் தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் தலையிடுறீங்க?” என்று கேட்டான்.

“எனக்குத் தேவையான விஷயத்தில் தான் தலையிட்டுருக்கேன் டாக்டர்…” நிதானமாகச் சொன்னான் கவியுகன்.

“தேவையான விஷயமா? உங்களுக்கு என்ன தேவை?”

தன் புருவத்தை உயர்த்தி அவனை ஊடுருவி பார்த்தான் கவியுகன்.

“பரவாயில்லை நல்லாவே நடிக்கிறீங்க டாக்டர். நான் யார், எதுக்காக வந்துருக்கேன் எல்லாம் இதுவரைக்கும் உங்களுக்குத் தெரியாது என்று என்னை நம்பச் சொல்றீங்களா?” என்று கேலியுடன் கேட்டான்.

ரஞ்சனின் முகம் மாறியது.

“ஓகே டாக்டர், வளவளவென்று பேச்சை இழுப்பதில் எனக்கு விருப்பமில்லை. நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். எதுக்காக இதயாவை கொன்றீங்க?” என்று கேட்டான் கவியுகன்.

“வாட்! நான் கொன்றேனா?” என்று அதிர்ந்து கத்தினான் ரஞ்சன்.

“பின்ன இல்லையா? நீங்க கொன்றதால் தானே அந்தப் பழி உங்க மேல விழக் கூடாதென்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் கொலையைத் தற்கொலை என்று மாற்றி எழுத சொன்னீங்க?” என்று கேட்டான்.

“இது அபாண்டம்! ரிப்போர்ட் மாற்றி எழுத சொன்னது மட்டும் தான் நான். நான் இதயாவை கொல்லலை…” பதறி மறுத்தான் ரஞ்சன்.

“நீங்க கொல்லவில்லை என்றால், அப்போ யார் கொன்றது? யாருக்கு உதவி செய்ய நீங்க ரிப்போர்ட் மாற்றி எழுத சொன்னீங்க?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

டாக்டர் ரஞ்சன் மௌனமாக இருந்தான்.

“பதில் சொல்லுங்க டாக்டர். நீங்க பதில் சொல்லவில்லை என்றால், நீங்க தான் குற்றவாளி என்று முடிவு செய்து நான் போலீஸ்கிட்ட சொல்லுவேன். என் போனில் இருக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கொடுத்த டாக்டரின் வாக்குமூலம் போதும். நீங்க தான் முன்ன நின்னு எல்லாத்தையும் பார்த்திருக்கீங்க. அப்போ நீங்க தான் கொன்றதாகப் போலீஸும் முடிவு பண்ணும்…” என்றான்.

மிரண்டு விழித்துத் தொண்டைக் குழி ஏற இறங்க கவியுகனை பார்த்தான் ரஞ்சன்.

“நான் இதயாவை கொல்லவில்லை. நவநீதன் தான் இதயாவை கொன்றது. அவன் என்கிட்ட கேட்டுக்கிட்டதுகாக ரிப்போர்ட் மாற்றி எழுத நான் உதவி செய்தேன்…” என்றான் டாக்டர் ரஞ்சன்.