யுகன்யா – 20

அத்தியாயம் – 20

“நவநீதனா?” கண்களைச் சுருக்கி கேட்டான் கவியுகன்.

‘ஆமாம்’ என்று தலையை அசைத்தான் மணிமாறன்.

“அவன் ஏன் ரவியைக் கொல்ல சொல்லணும்?” கவியுகன் கேட்க,

“எனக்குத் தெரியாது!” மறுப்பாகத் தலையை அசைத்தான் மணிமாறன்.

“காரணம் தெரியாமயே ஒருத்தனை கொல்ல போனியா? என்ன மணிமாறா இது? இதை என்னை நம்பச் சொல்றியா?” முகம் இறுக கேட்டான் கவியுகன்.

“நவநீதன் செய்யச் சொன்னார் செய்தேன். அது தவிர எனக்கு ஒன்னும் தெரியாது…” சாதித்தான் மணிமாறன்.

“திரும்பவும் பொய்! உனக்குக் காரணம் தெரியும். ஆனால் சொல்ல மறுக்கிற. நீ சாதாரணமா கேட்டால் சொல்ல மாட்ட…” என்ற கவியுகனின் கை மணிமாறனின் வயிற்றுப்பகுதியைப் பதம் பார்த்தது.

வயிற்றையே கலக்கியது போல் இருக்க, “ஆ… அம்மா…” என்று அலறியவனால் கட்டிப் போடப்பட்டிருந்ததால் மடிந்து கூட அமர முடியவில்லை.

சுருண்டு அப்படியே குனிந்தான்.

“என் ஒவ்வொரு அடியும் இப்படித்தான் இருக்கும் மணிமாறா. இது ஒரு சேம்பிள் தான். நீ உண்மையைச் சொல்லலைனா இது போல் பல மடங்கு கிடைக்கும். நான் இப்ப கேட்க போற கேள்விக்கு எல்லாம் ஒவ்வொன்னா பதில் சொல்லிட்டே வரணும். மறுத்தால் என் வாய் பேசாது…” என்றவன் தன் முஷ்டியை மடக்கி காட்டினான்.

வலி தாங்க முடியாமல் மிரட்சியாக அவனைப் பார்த்தான் மணிமாறன்.

“என்ன சொல்றியா?” என்று கவியுகன் கடுமையாகக் கேட்க, மணிமாறனின் தலை சம்மதமாக அவன் சம்மதம் இல்லாமலே ஆடியது.

“நவநீதன் தான் உன்னை ரவி வீட்டில் வேலைக்குச் சேர சொன்னதா?” என்று கேட்க,

“ஆமா…” என்று முனங்கினான்.

“சம்பளத்தை ரவிகிட்ட வாங்கிட்டு, விசுவாசத்தை நவநீதன் கிட்ட காட்டியிருக்க… அப்படித்தானே?” என்று எகத்தாளமாகக் கேட்டவனுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

“சரி, சொல்லு. எதுக்காக உன்னை ரவி வீட்டில் வேலைக்குச் சேர சொன்னான்? நவநீதன் திட்டம் என்ன?” என்று கேட்டான்.

மணிமாறன் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க, கவியுகன் கையை ஓங்கினான்.

“அடிக்காதீங்க சார். சொல்றேன்…” என்று கத்தியவன், “என்ன காரணம் எல்லாம் என்கிட்ட சொல்லலை. நான் வேலை இல்லாம சுத்திட்டு இருந்தேன். அப்போ ஒரு நாள் இந்த மலைகாட்டுக்குள்ள நான் சுத்திட்டு இருக்கும் போது தான் நவநீதன் வந்து நான் சொன்ன வேலை பார்த்தால் உனக்கு இரட்டை சம்பளம் கிடைக்கும் என்று சொன்னார்.

ஒரு சம்பளம் கூட இல்லாமல் சுத்திட்டு இருப்பவன் நான். என்கிட்ட வந்து இரட்டை சம்பளம் என்று சொல்லவும், அப்படி என்ன வேலையென ஆர்வமா கேட்டேன். அப்போத்தான் உன் மாமாவுக்குப் பதிலா நீ நைட் வேலைக்கு ரவி சார்கிட்ட போகணும் என்று சொன்னார். அதோட அங்கே இருந்துட்டே நான் சொல்லும் வேலை எல்லாம் செய்யணும் என்று சொன்னார். அதுக்கு நவநீதன் பணம் தர்றேன் என்று சொன்னார்.

எனக்குப் பணம் தேவைப்பட்டது. நானும் எத்தனை நாள் தான் வெறும்பயலாவே சுத்திட்டு இருப்பது என்று, அவர் சொல்ற மாதிரி செய்றேன் எனச் சொன்னேன். ரவி சார்கிட்ட வேலைக்குச் சேருவது எனக்குக் கஷ்டமா இல்லை. என்னோட மாமாவுக்கு அப்போ உடம்பு சரியில்லாம போனது எனக்கு வசதியா போனது. அதனால் என் மாமாவே ரவி சார்கிட்ட பேசி வேலை வாங்கிக் கொடுத்தார்…” என்றான்.

“இங்கே வேலைக்குச் சேர்ந்த பிறகு நவநீதனுக்காக என்னென்ன வேலை பார்த்த நீ?”.

“ரவி சார் வீட்டில் உள்ளவங்க நடவடிக்கை என்னவென்று பார்த்து நவநீதனுக்குத் தகவல் சொல்லணும்…”

“அடிக்கடி வீட்டு தோட்டத்துக்குப் பின்னாடி இருந்தியே அது எதுக்காக?”

“என்னைக்காவது நான் மாட்டிக்கிட்டால் தப்பிச்சு போக வழி எப்படி இருக்கும் என்று பார்த்து வைக்க அந்தப் பக்கம் போவேன். அப்பத்தான் நீங்க கூட நைட் ஒரு நாள் என்னைப் பார்த்தீங்க…”

“ஒரு நாள் மொட்டை மாடி வழியா ஏறி வந்தது நீயா?”

“ஆமாம்…”

“ஏன் வந்த?”

“நவநீதன் தான் எப்பவாவது அவர் சொல்லும் வேலையைச் செய்ய வீட்டுக்குள்ள போக வழி பார்த்து வச்சுக்கோ என்று சொன்னார். எனக்குப் பைப் வழியா ஏற நல்லா வரும். அதோட தோட்டத்துப் பக்கம் இறங்கிட்டால் அந்தப் பக்கம் தப்பிக்க எனக்கு வசதியா இருந்தது…”

“அன்னைக்கு நீ தப்பித்துப் போகும் போது உன் சட்டை கிழிந்ததா?”

“ஆமா சார்…”

“அந்தச் சட்டை துணியில் N என்ற எழுத்து இருந்தது. அந்த Nக்கு அர்த்தம் என்ன?”

“அது… அதுக்கு எந்த அர்த்தமும் இல்லை சார். நான் வாங்கிய ஒரு சட்டையில் அப்படி இருந்தது. அவ்வளவுதான்!” என்று மணிமாறன் சொல்ல, யோசனையுடன் தாடையைத் தடவி கொண்டே அவனைப் பார்த்தான் கவியுகன்.

“என்னை எதுக்கு ஃபாலோ செய்த?” என்று கேட்டான்.

“அது… அன்னைக்கு ராத்திரி…” என்று மணிமாறன் ஆரம்பிக்க,

“அன்னைக்கு இல்லை, அதுக்கு முன்னாடி நான் இந்த ஊருக்கு வந்த மறுநாள், நான் தஞ்சாவூர் போய்ட்டு திரும்பி வரும் போது குட்டி யானை வண்டியில் நீ என்னை ஃபாலோ செய்தியே… அது ஏன் என்று கேட்டேன்…” என்று கவியுகன் கேட்டதும், மணிமாறன் கண்களைப் பெரிதாக விரித்து மிரண்டு போய் அவனைப் பார்த்தான்.

“என்ன, அது எப்படி எனக்குத் தெரியும் என்று பார்க்கிறாயா? நான் இந்த ஊருக்குள் நுழைந்ததில் இருந்தே என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தேன். தஞ்சாவூர் அரசு ஹாஸ்பிட்டலிலிருந்து நான் வெளியே வந்ததில் இருந்து, நீ என்னை ஃபாலோ பண்ணிட்டு வந்ததைக் கவனிக்கத்தான் செய்தேன்.

உன்னையே ரவி வீட்டில் நைட் வாட்ச்மேனா பார்க்கவும், நீ ஏதோ திட்டத்தோட தான் ரவி வீட்டில் வேலைக்கு இருக்க என்று தெரிந்து கொண்டேன். நீ என்ன பண்ற என்று தெரிந்து கொள்ளத்தான் உன்னைத் தெரிந்த மாதிரி நான் காட்டிக்கலை. நான் இந்த ஊருக்கு வந்ததும், என் முதல் சந்தேக வட்டத்தில் விழுந்தது நீ தான்…” என்று சுட்டு விரலை அவன் நெஞ்சில் வைத்து அழுத்தினான் கவியுகன்.

மணிமாறன் பயத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, “சொல்லு, என்னை ஏன் ஃபாலோ செய்த? என்ன காரணம்?” என்று கேட்டான்.

“ரவி சார் வீட்டுக்கு யார் புதுசா வந்தாலும் அவங்களைப் பற்றித் தகவல் சொல்ல வேண்டியது என் வேலை. நீங்க புதுசா வந்தது மட்டும் இல்லாம, தஞ்சாவூர் போவதும், யாரையோ நோட்டம் விடுவது போல் நீங்க நடந்துகிட்டதும் சந்தேகத்தைக் கொடுத்தது. அதான் உங்களை நோட்டம் விட்டுட்டே இருந்தேன்…” என்றான் மணிமாறன்.

“எல்லாத்தையும் உடனுக்குடனே நவநீதன் கிட்ட சொல்லுவியா?”

“ஆமாம்…”

“அதுக்கு அவன் என்ன சொல்லுவான்?”

“அமைதியா கேட்டுக்குவார். இன்னும் தகவல் சேகரிச்சிட்டு வான்னு சொல்வார்…”

“அதுக்கு அவசியம் என்ன? என்ன மோட்டிவ்ல உன்னை ரவி வீட்டுக்கு வேலைக்குப் போகச் சொன்னான்? அங்கே நடப்பதை தெரிந்து நவநீதன் என்ன செய்யப் போறான்?” என்ற கேள்விக்கு மணிமாறனிடமிருந்து உடனே பதில் வரவில்லை.

“பதில் சொல் மணிமாறா!” என்று கவியுகன் அதட்ட,

“அது எனக்குத் தெரியாது…” என்றான் உறுதியாக.

“காரணம் தெரியாமயே நீ அவனுக்காக இவ்வளவு வேலை பார்த்திருக்கியா?” என்று கேட்க,

“நான் கேட்டேன். அவர் சொல்லலை. நான் சொல்ற வேலையை மட்டும் பார்ப்பது தான் உன் வேலை என்று சொல்லிட்டார்…” என்றான்.

“நம்ப முடியலையே…” என்று யோசனையாக அவனைப் பார்த்தவன், “சரி, இதயா பற்றி உனக்கு என்ன தெரியும்?” என்று கேட்டான்.

“இதயாவா?” குழப்பத்துடன் கேட்டான் மணிமாறன்.

“ஆமாம், ரவி கல்யாணம் பண்ணிக்க இருந்த பொண்ணு இதயா… அவளைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?”

“அந்தப் பொண்ணு கிணத்தில் விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டது மட்டும் தான் எனக்குத் தெரியும். வேற எதுவும் தெரியாது…” என்றான்.

“உண்மையைச் சொல்லு, வேற எதுவும் தெரியாது?”

“நிஜமா தெரியாதுங்க சார்…” என்று உறுதியாகச் சொன்னான் மணிமாறன்.

அவனை நம்பாமல் பார்த்தான் கவியுகன்.

“நீங்க போலீஸா சார். நீங்க எதுக்கு இதெல்லாம் கேட்குறீங்க?” என்று மணிமாறன் கேட்க,

“அதைத் தெரிந்து நீ என்ன பண்ண போற? நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்வது மட்டும் தான் உன் வேலை…” என்று அவனை அதட்டியவன்,

“நேத்து நைட் எதுக்கு ரவியைக் கொல்ல வந்த?” என்று கேட்டான்.

“சார், நான் கொல்ல வரலை…” என்று வேகமாக மறுத்தான்.

“வேற எதுக்கு வந்த? நீ பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு இல்லாம போயிட்டு இருக்கு மணிமாறா. இது உனக்கு நல்லதில்லை…” என்றான் கடுமையாக.

“நான் சொல்வது சத்தியம் சார்… ஒரு பொருளை எடுக்கத்தான் ரவி சார் ரூமுக்கு வந்தேன். ஆனால் அவர் சட்டென்று முழித்து நான் யார் என்று கேட்கவும் பயந்துட்டேன். அவர் என்னை மடக்கிப் பிடிக்கப் பார்த்தார். அவர்கிட்ட இருந்து தப்பிக்கத்தான் என் இடுப்பில் சொருகி வச்சுருந்த ஒரு கம்பியை வச்சு அவரைக் குத்திட்டேன்…” என்றான்.

“என்ன பொருளை எடுக்க வந்த?”

“அது… அது… ஒரு போன் சார். நவநீதன் தான் எடுத்துட்டு வர சொன்னார்…”

“அந்தப் போனில் என்ன இருக்கு? போன் இப்ப எங்கே இருக்கு?”

“அதில் என்ன இருக்கு என்று எல்லாம் எனக்குத் தெரியாது. நான் பார்க்கவும் இல்லை. அந்தப் போனை எடுத்துட்டுப் போய், நவநீதன்கிட்ட கொடுத்துட்டு, இப்படி ரவி சாரை குத்திட்டேன் என்று சொன்னேன். அவர் தான் கொஞ்ச நாளைக்குத் தலைமறைவா இரு. போலீஸ் கையில் மாட்டிக்காதே என்று சொன்னார். அதான் இங்கே வந்து இருந்தேன்…” என்றான்.

“நவநீதன் இப்ப எங்கே?”

“அதுவும் எனக்குத் தெரியாது சார்…” என்றான்.

“என்னடா, என்ன கேட்டாலும் தெரியாது… தெரியாதென்றே சொல்லிட்டு இருக்க…” என்று பளார் என்று ஒரு அறை விட்டான் கவியுகன்.

“சார், நான் உண்மையைத்தான் சொல்றேன். நான் போன் எடுத்துட்டுப் போய் இந்த ஊர் எல்லையில் நின்னுட்டு இருந்த நவநீதன்கிட்ட கொடுத்துட்டு உடனே இந்த மலை காட்டுக்கு வந்துட்டேன். நவநீதன் எங்கே போனார். இப்ப எங்கே இருக்கார் எதுவும் எனக்குத் தெரியாது…” என்றான்.

இனி அவனிடமிருந்து எதுவும் பெயராது என்று கவியுகனுக்குப் புரிந்து போனது.

இன்னும் சில கேள்விகளை அவனிடம் கேட்டுப் பார்க்க, அனைத்திற்கும் தெரியாது தெரியாது என்ற பதிலை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தான் மணிமாறன்.

அடுத்து அவனிடம் பேசி நேரத்தை விரயம் ஆக்காமல் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தவன், அதைச் செயல்படுத்த, மரத்துடன் கட்டிப் போட்டிருந்த மணிமாறனின் கட்டை அவிழ்த்து விட்டு, அவனை இழுத்துக் கொண்டு மலை காட்டை விட்டு வெளியே வந்து, அவனைத் தனது காரில் தள்ளி காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“சார், என்னை எங்கே கூட்டிட்டு போறீங்க சார்? என்னை விடுங்க சார்…” மணிமாறன் துள்ள,

“வாயை மூடு மணிமாறா. நீ அமைதியா வந்தால் உனக்கு நல்லது. இல்லனா நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குத் தான் வண்டியை விடுவேன்…” என்று கவியுகன் மிரட்ட, கப்பென்று வாயை மூடிக் கொண்டான் மணிமாறன்.

நேராக வண்டியை தஞ்சாவூருக்கு விட்டவன், ஏற்கெனவே தேவைப்படும் என்று அவன் எடுத்து வைத்திருந்த ஒரு ஒதுக்குப் புறமான வாடகை வீட்டிற்கு அவனை அழைத்துச் சென்றான்.

அந்த வீட்டிற்குள் மணிமாறனை அழைத்துச் சென்று ஒரு நாற்காலியில் அமர வைத்து கயிறால் கட்டிப் போட்டு, வாயையும் பிளாஸ்டர் போட்டு அடைத்தவன், “நீ இன்னும் சில மணி நேரம் இப்படித்தான் இருந்தாகணும் மணிமாறா. உன் பாஸ் நவநீதனை பிடிச்சிட்டு வந்து, உனக்கு வச்சுக்கிறேன் கச்சேரியை…” என்று கவியுகன் சொல்ல, அவனை மிரட்சியுடன் பார்த்தான் மணிமாறன்.

அவன் பார்வையை அலட்சியப்படுத்திவிட்டு, அந்த வீட்டின் கதவை பூட்டி விட்டு வெளியேறினான்.

அவன் காரை எடுத்ததும், அனன்யாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றவன், “சொல்லு அனன்யா…” என்றான்.

“எங்கே இருக்கீங்க யுகா? காலையில் போனீங்க. இப்ப ஈவ்னிங் ஆகிருச்சு. உங்களைப் பற்றி ஒரு தகவலும் இல்லை என்று பயந்து போய்ட்டேன்…” என்றாள்.

அவளின் குரலில் உண்மையான பதட்டத்தை உணர்ந்தவன், காதை விட்டு கைபேசியை எடுத்துத் தொடுதிரையில் ஒளிர்ந்த அவளின் பெயரைப் பார்த்தான்.

அவனின் உதடுகளில் கீற்றாகப் புன்னகை அரும்பியது.

மீண்டும் கைபேசியைக் காதுக்குக் கொடுத்தவன், “அங்கே தான் வந்துட்டு இருக்கேன். ரவி எப்படி இருக்கான்?” என்று கேட்டான்.

“இன்னும் ஒரு முன்னேற்றமும் இல்லை. எல்லாரும் ரொம்பக் கவலையா இருக்காங்க…” என்றாள்.

“ம்ம், குணமாகிடுவான்னு நம்புவோம்…” என்றான்.

“யுகா, ரவியோட இந்த நிலைமைக்குக் காரணம் யாரென்று கண்டு பிடிச்சுட்டீங்களா?” என்று கேட்டாள்.

“யாருன்னு கண்டுபிடித்து ஆளையும் மடக்கியாச்சு…” என்றான்.

“அது யார் யுகா? எப்படிக் கண்டுபிடிச்சீங்க? இப்ப அவன் எங்கே இருக்கான்?” என்று ஆர்வத்துடன் அனன்யா கேள்விகளை அடுக்க,

“ரிலாக்ஸ்! அதைப் போனில் பேச வேண்டாம். நேரில் வந்து சொல்றேன். இதைப் பற்றி அங்கே உள்ளவங்ககிட்ட மூச்சு விடாதே!” என்றான் கறாராக.

“சொல்ல மாட்டேன் யுகா. நீங்க சீக்கிரம் வாங்க…” என்றாள்.

“ம்ம், நீ போனை வை. இன்னும் பத்து நிமிஷத்தில் நான் அங்கே இருப்பேன்…” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு, மருத்துவமனைக்கு விரைந்தான்.

கவியுகன் மருத்துவமனை கார் பார்க்கிங்கில் காரை நிறுத்தி விட்டு இறங்கி லாக் செய்து விட்டு திரும்ப, அவன் அருகில் வந்து நின்றிருந்தாள் அனன்யா.

வெகு அருகில் அவள் நின்றிருந்ததைக் கண்டு அவன் தான் ஒரு அடி பின்னால் நகர வேண்டியதாயிற்று.

“என்ன? எதுக்கு இவ்வளவு பக்கத்தில் வந்து நிக்கிற?” என்று புருவம் உயர்த்திக் கேட்டவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து வைத்தாள் அனன்யா.

அவளின் பார்வையைக் கண்டு கவியுகனின் மீசை லேசாகத் துடிக்க, மீசை மறைத்திருந்த மேல் உதடு லேசாக நெளிந்தது.

“உங்களைப் பார்த்து எவ்வளவு நேரம் ஆச்சு யுகா. ஏன் இவ்வளவு நேரம்?” என்று கனிவுடன் கேட்டாள்.

“என்னவோ என்னைப் பார்த்து மாமாங்கம் ஆன மாதிரி ரியாக்சன் கொடுக்கற? காலையில் தானே பார்த்தோம்?” நமட்டு சிரிப்புடன் கேட்டான்.

“கா…லையில் பார்த்தோம் யுகா. அதுவும் சூரியன் உதிக்கும் முன்னாடி. இப்ப சூரியன் மறையவே போறான்…” என்றாள் சின்னப் பெருமூச்சோடு.

“முத்திப் போயிருச்சு…” என்று முனங்கிக் கொண்டான் கவியுகன்.

“அப்படித்தான் நானும் நினைக்கிறேன்…” பதிலுக்கு முனங்கிக் கொண்டாள் அனன்யா.

“இன்னும் முத்திப் போறதுக்கு முன்னாடி நல்ல ஹாஸ்பிட்டலா பார்த்து அட்மிட் பண்ணனும். இல்லனா, நைய்… நைய்ன்னு பைத்தியமா திரிய வேண்டியது தான்…” என்று நக்கலாகச் சொன்னவனை, முறைத்துப் பார்த்தாள் அனன்யா.

“முறைப்பில் காரம் பத்தலை…” கவியுகன் சொல்ல,

தன் பெரிய கண்களை இன்னும் பெரிதாக விரித்துப் பார்த்தாள்.

“போதும்! போதும்! கண்ணு முழி வெளியே வந்து குதிச்சிட போகுது. அப்புறம் ஊருக்குப் போனதும் என்னோட அம்மா, எங்கேடா என் மருமகள் கண்ணைக் காணோம்னு என்கிட்ட தான் சண்டைக்கு வருவாங்க…” என்றான்.

“ஹேய், இப்ப என்ன சொன்னீங்க? மருமகள்னா? அப்படினா… அப்படினா…?” பரபரப்புடன் கேட்டாள் அனன்யா.

“எதுக்கு இவ்வளவு எக்ஸைட் ஆகுற? நீ என்னோட அம்மாவை அத்தை என்று தானே கூப்பிடுவ? அப்போ அவங்களுக்கு நீ மருமகள் முறை தானே? அதைச் சொன்னால், என்னவோ இப்படிக் குதிக்கிற?” என்று உள்ளுக்குள் பொங்கிய நக்கலை தொண்டைக்குள் மறைத்துக் கொண்டு சர்வ சாதாரணமாகக் கேட்டு வைத்தான்.

“அவ்வளவு தானா?” ப்யூஸ் போன பல்ப்பாகக் கேட்டாள்.

“நீ வேற என்ன நினைச்ச?” நாக்கை மடித்துக் கன்னத்துக்குள் அடக்கிக் கொண்டே கேட்டான்.

சில நொடிகள் அவன் முகத்தைப் பார்ப்பதும், பின் அவன் தலைக்குப் பின்னால் இருந்த மரத்தை பார்ப்பதுமாகக் கண்ணாமூச்சி ஆடிய அனன்யா, பின் நீண்ட பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டாள்.

அவளின் தவிப்பை அமைதியாகப் பார்த்தான் கவியுகன்.

“ஆமாம், உன் அத்தைகிட்ட இப்ப எல்லாம் நீ சரியா பேசுறது இல்லையாமே ஏன்? நீ போனே போட மாட்டிங்கிற ஏன் என்று என்கிட்ட கேட்டாங்க…” என்றான்.

அவனுக்குப் பதிலை சொல்லவில்லை அனன்யா.

அன்று போனில் நான் உங்கள் மருமகளாக வந்து விடுவேன் என்று அவள் உளறியதற்குப் பிறகு, அவளால் மாதுரியிடம் இயல்பாகப் பேச முடியவில்லை. அதனாலேயே அவருக்கு அழைக்காமல் இருந்தாள்.

ஆனால் இப்போது அவள் சொன்னது உண்மையாகிவிடும் என்று அவளுக்குத் தோன்றியிருந்தது.

ஆம்! கவியுகன் பக்கம் அவளின் மனது சாய்ந்து கொண்டிருந்தது. அதை அவனிடம் சொல்ல முடியாமல் தான் தவித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன அமைதியாகிட்ட? பதில் சொல்லு! ஏன் பேச மாட்டிங்கிற?” என்று மீண்டும் கேட்டான் கவியுகன்.

அவன் காரணம் தெரிந்தே கேட்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

தெரிந்தே தன்னைச் சீண்டுகிறான் என்று தோன்ற, அவள் மனது சிணுங்கிற்று. இன்னும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு தேவை தானா? என்று அந்த நொடி தோன்றி அவளை அலைகழிக்க ஆரம்பித்தது.

சில நொடிகள் தன் மனதை அடக்கிப் பார்த்து தோற்றுப் போனாள் அனன்யா.

தன் தோல்வியைத் தானே ஒப்புக் கொண்டு, தன் உதடுகளை மெல்ல அசைத்து, தன் மனதில் தேங்கி இருந்தவற்றைக் கொட்ட ஆரம்பித்தாள்.

“எதை எதையோ கண்டுபிடிக்கிற நீங்க, என் மனதில் என்ன இருக்கிறது என்பதையும் கண்டுபிடிச்சிருப்பீங்க என்று எனக்குத் தெரியும் யுகா. ஆனால், தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறீங்க. என் தவிப்பு உங்களுக்குக் கொண்டாட்டமா இருக்கு போல. பரவாயில்லை இருந்துட்டு போகட்டும். எப்ப எந்த நிமிஷம் என்று தெரியலை. என் மனதில் உங்களுக்கு என்று ஒரு இடத்தைக் கொடுத்திட்டேன்.

இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நீங்க என்னைக் கேலி செய்தாலும் பரவாயில்லை. எனக்குள்ளேயே வைத்து நான் புழுங்கி கொண்டது எல்லாம் போதும் என்ற முடிவுக்கு வந்துட்டேன். எஸ், ஐ லவ் யூ யுகா!” என்று அவன் கண்களை ஊடுருவி பார்த்துக் கொண்டே சொன்னாள் அனன்யா.

தன் கண்ணுக்குள் புகுந்து நெஞ்சத்திற்குள் நுழைந்த அவளின் உணர்வுகளை உள்வாங்கித் தன் உணர்வுகளைத் தொலைத்துச் சிலையாக நின்று போனான் கவியுகன்.