யுகன்யா – 19

அத்தியாயம் – 19

மணிமாறன் தான் ரவீந்திரனை கொல்ல வந்தவன் என்று தெரிந்து விட, அடுத்தக் காரியங்களில் துரிதமாகச் செயல்பட்டான் கவியுகன்.

இரவில் தனக்குத் தோன்றிய சந்தேகத்தை நிவர்த்திச் செய்து கொள்ள ரவீந்திரன் அறைக்குச் சென்றான்.

ரவீந்திரன் அறையில் சின்னக் கலவரமே நடந்தது போல் பொருட்கள் எல்லாம் சிதறிக் கிடைந்தது.

ரவீந்திரன் தன்னைக் காத்துக் கொள்ளப் போராடியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அவனின் ரத்தம் இன்னும் அறையில் அப்படியே உறைந்து போயிருக்க, அதை மிதிக்காமல் தான் தேடி வந்ததைக் கண்களால் துழாவினான்.

சிறிது தேடலுக்குப் பிறகும் அவன் தேடி வந்தது கிடைக்காமல் போக, அதை எடுக்கத்தான் மணிமாறன் வந்தானோ? என்று தோன்றியது.

இனி தேடி பிரயோஜனம் இல்லை என்று புரிந்து விட நேரத்தை விரயம் ஆக்காமல், அங்கிருந்து கிளம்பினான்.

நேராக மணிமாறனின் மாமா வீட்டிற்குச் செல்ல, அங்கே அவரின் வீடு பூட்டிக் கிடந்தது.

“இந்த வீட்டில் இருப்பவர் எங்கேமா?” பக்கத்து வீட்டில் ஒரு பெண் வெளியே அமர்ந்து பாத்திரத்தை துலக்கி கொண்டிருக்க, அவளிடம் விசாரித்தான்.

“அந்தச் சித்தப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு பெரியாஸ்பத்திரியில் சேர்த்துருக்காங்க. சித்தியும் அங்க தான் கூட இருக்காங்க…” என்றாள் அந்தப் பெண்.

பெரியாஸ்பத்திரி என்பது தஞ்சாவூர் அரசு மருத்துவமனை என்று அறிந்தவன், உடனே அங்கே விரைந்தான்.

அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கே மணிமாறனின் மாமா இருக்குமிடம் விசாரித்து, தேடிச் சென்றான்.

ஒரு பெரிய அறையில் வரிசையாக நிறையப் படுக்கை போடப்பட்டிருக்க, அதில் ஒரு படுக்கையில் மணிமாறனின் மாமா படுத்திருக்க, அவர் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார் அவரின் மனைவி.

அவர்கள் அருகில் சென்றவன், “மணிமாறன் எங்கே?” என்று விசாரித்தான்.

படுத்திருந்தவர் கேள்வியுடன் எழுந்து அமர்ந்தவர், “அவன் இங்கே வரலையே சார்…” என்றார்.

“இங்கே வரலை சரி… எங்கே போனான்னு தெரியுமா?”

“தெரியலையே சார். எதுக்கு அவனைத் தேடுறீங்க? தப்பு தண்டா எதுவும் செய்துட்டானா?”

“ஆமாம், தப்பு தான். பெரிய தப்பு செய்துட்டான். இங்கே வரப்போவதாகச் சொல்லித்தான் நேத்து நைட் லீவ் போட்டுருக்கான்…”

“என்ன தப்புங்க சார் செய்தான்? நைட் இங்கே வரலையே? நைட் ரவி ஐயா வீட்டுக்கு வேலைக்குப் போகப் போறதாகத் தான் என்கிட்ட சொன்னான்…”

“நீங்க எப்ப அவனைப் பார்த்தீங்க?”

“நேத்துச் சாயந்தரம் இங்கே என்னைப் பார்க்க வந்தான் சார். அதுக்குப் பிறகு வரலை. என்ன தப்புச் செய்தான் சார்? எதுக்கு அவனைத் தேடி வந்திருக்கீங்க?”

“உங்க முதலாளியை கொல்ல முயற்சி செய்திருக்கான். இப்ப ரவி சீரியஸான கட்டத்தில் ஹாஸ்பிட்டலில் இருக்கான்…” கவியுகன் சொல்ல, மணிமாறனின் மாமா பதறிப் போனார்.

“ஐயோ! சார், என்ன சொல்றீங்க?”

“நடந்ததைத் தான் சொல்றேன். ரவியைக் கொல்லும் அளவுக்கு அவனுக்கு என்ன ரவி மேல் வன்மம்? எதுக்காக அவனைக் கொல்ல துணிந்தான்?” கவியுகன் விசாரிக்க,

“ஐயோ! சார், எனக்கு எதுவும் தெரியாது. அவன் ஏன் இப்படி நடந்து கொண்டான்னு தெரியலையே. எனக்கு உடம்பு சரியில்லை, நைட் எல்லாம் முழிச்சிருக்க முடியலை என்று நான் தான் ரவி ஐயாகிட்ட சொல்லி அவனை வேலையில் சேர்த்து விட்டேன். அவரையே கொல்ற அளவுக்கு ஏன் அந்தப் பாவி பையன் துணிந்தான்னு தெரியலையே…” என்று புலம்பினார் அவர்.

“வேலையில் அவனை நீங்களா சேர்த்து விட்டீங்களா? இல்லை, மணிமாறன் வேலை வேணும் என்று உங்ககிட்ட வந்து சொன்னானா?” கவியுகன் கேட்க,

“நானா முதலில் சேர்த்து விடலை சார். அவன் தான் நான் வேலை இல்லாம சும்மா இருக்கேன். என்னைப் பெரிய வீட்டில் வேலைக்குச் சேர்த்து விடு என்று வந்து கேட்டான்.அக்கா பிள்ளையாச்சே… எனக்கும் முடியலையே… அவன் ஒத்தாசையா இருப்பான்னு தான் ரவி ஐயாகிட்ட வேலைக்குக் கேட்டேன்…” என்றார்.

திட்டம் போட்டே வேலையில் சேர்ந்திருக்கிறான் என்பது புரிந்தது. ஆனால், அவனின் நோக்கம் என்ன என்பது தான் புரியவில்லை என்று நினைத்துக் கொண்டான் கவியுகன்.

“கொலை முயற்சி சாதாரணத் தப்பு இல்லை. போலீஸில் மாட்டிக்கிட்டா ஜெயிலில் களி திங்க வேண்டியது தான். அவனை வேலைக்குச் சேர்த்து விட்டது நீங்க. உங்களையும் போலீஸ் சும்மா விடாது. உண்மையைச் சொல்லிருங்க. அவன் எங்கே இருக்கான்?” என்று மிரட்டலாகக் கேட்டான் கவியுகன்.

“சார்… சார்… நான் எந்தத் தப்பும் செய்யலை. அந்தப் பாவிப்பயலும் இப்படி ஒரு காரியத்தைச் செய்வான்னு எதிர்பார்க்கலை. தெரிஞ்சிருந்தால் அவனை வேலையில் நான் சேர்த்தே விட்டிருக்க மாட்டேன்…” என்று அரண்டு போய்ச் சொன்னார் அவர்.

“சரி, அவன் எங்கே இருப்பான் என்றாவது தெரியுமா?”

“எனக்குத் தெரியாது சார்…” தலையை வேகமாகக் குலுக்கினார்.

“அவன் வீடு எங்கே இருக்கு?”

“நம்ம ஊருக்கு பக்கத்து ஊரு தான் சார். மாரியம்மன் கோவில் தெருவில் வீடு…” என்றார்.

“அது தவிர அவன் எங்கே போவான் என்று தெரியுமா?”

“நம்மூரு மலைக்காட்டுப் பக்கம் தான் சுத்திட்டு இருப்பான் சார்…” என்றார்.

“சரி, நான் பார்த்துக்கிறேன். அதுக்கு முன்னாடி உங்களைத் தேடி வந்தாலோ, உங்களுக்குப் போன் செய்தாலோ எனக்குத் தகவல் கொடுங்க…” என்று தனது அலைபேசி எண்ணை அவரிடம் தந்தான்.

“கண்டிப்பா தகவல் சொல்றேன் சார். ஆனா, நான் எந்தத் தப்பும் செய்யலை சார். போலீஸில் என் பேரை சொல்லாதீங்க…” என்று இறைஞ்சுதலாகக் கேட்டார்.

“இதில் நான் எதுவும் செய்ய முடியாது. போலீஸ் விசாரணைக்கு வந்தால் உங்களுக்கு என்ன தெரியுமோ அதை அப்படியே சொல்லுங்க…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

“அக்கா மவன்னு தலையில் தூக்கி வச்சு ஆடினியே… இப்ப உனக்கே ஆப்பு வச்சுட்டான் பாரு. இனி அக்கா, அக்கா மவன்னு பேசிப் பாரு உன் வாயை கிழிக்கிறேன்…” என்று அவரின் மனைவி திட்டுவது கவியுகன் முதுகிற்குப் பின் ஒலித்தது.

அடுத்து நேராக மணிமாறனின் ஊருக்கு சென்று மாரியம்மன் கோவில் தெருவில் அவன் வீடு எங்கே என்று விசாரித்தான்.

ஒரு ஆள் வீட்டை அடையாளம் காட்ட, ஒரு சிறிய ஓட்டு வீடு தெரிய, அதை நோக்கி சென்றான்.

அதே நேரம் அந்த வீட்டிலிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தார்.

கூலி வேலைக்குச் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தார் போலும். ஒரு கையில் உணவு அடங்கிய தூக்குவாளியும், இன்னொரு கையில் நைந்து போன ஒரு துண்டும், ஒரு தொரட்டியும் இருந்தது.

தன் வீட்டு வாசலில் வந்து நின்ற கவியுகனை கேள்வியாக நிமிர்ந்து பார்த்தார்.

“தம்பி யாருங்க?” என்று கேட்டார் அப்பெண்மணி.

“மணிமாறன் உங்க பையன் தானே?” கவியுகன் கேட்க,

“ஆமாங்க. அவனைத் தேடியா வந்திருக்கீங்க? அவன் வீட்டில் இல்லைங்களே…”

“எங்கே போயிருக்கான்?”

“எங்கேயாவது ஊர் சுத்திட்டு இருப்பான்…”

“நைட் வீட்டுக்கு வந்தானா?”

“இல்லையே… நைட் பக்கத்தூர் பெரிய வீட்டுல காவல் வேலையில் இருக்கான். அதுக்குப் போயிட்டான். நீங்க யாருங்க?”

“அந்த வீட்டுக்குத் தான் விருந்தாளியா வந்திருக்கேன். உங்க பையன் நைட் வேலைக்கு வரலையே?”

“என்னங்க சொல்றீங்க? வேலைக்கு வரலையா? வேலைக்குப் போறேன்னு தானே என்கிட்ட சொல்லிட்டுப் போனான்…” அதிர்வாகக் கேட்டார்.

“காலையில் வீட்டுக்கு வந்தானா?”

“இல்லங்க, இன்னும் வீட்டுக்கு வரலை. நேத்துச் சாயந்தரம் போனவன் தான்…”

“எப்பவும் இப்படிக் காலையில் வர மாட்டானா? இல்லை, இன்னைக்கு மட்டும் தான் வரலையா?”

“சில நாளு காலையில் வர மாட்டான். நான் வேலைக்குப் போன பிறகு வந்து நான் செய்து வச்சுட்டு போற சாப்பாட்டைச் சாப்பிட்டு படுத்துத் தூங்குவான். இன்னைக்கும் அப்படித்தான் வருவான்னு நினைச்சேன். ஆனா அவன் வேலைக்கே வரலைன்னு சொல்றீங்க? அவனுக்கு என்னாச்சுன்னு தெரியலையே? நீங்க எதுக்கு அவனைத் தேடி வந்திருக்கீங்க?” என்று பயந்து போய்க் கேட்டார்.

“நைட் ஏன் வேலைக்கு வரலை என்று கேட்டுட்டுப் போகத்தான் வந்தேன். வேற ஒன்னுமில்லை…” அந்தத் தாயை பயமுறுத்த வேண்டாம் என்று நினைத்தவன், வேறு எதுவும் சொல்லவில்லை.

“இந்தப் பைய எங்கே போனான்னு தெரியலையே? என்கிட்ட பொய் சொல்லிட்டு எங்கே போய்த் தொலைஞ்சானோ…” என்று அந்த அன்னை வருத்தப்பட்டுப் புலம்ப, இனி அங்கே நின்று பிரயோஜனம் இல்லையென்று அங்கேயிருந்து கிளம்பிவிட்டான் கவியுகன்.

வேலைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு, ரவியைக் கொல்ல முயற்சி செய்து விட்டு தலைமறைவாகி விட்டான் என்று புரிந்தது.

எங்கே ஒளிந்து கொண்டிருப்பான் என்பதும் சட்டென்று பிடிபடவில்லை.

மணிமாறனின் மாமா சொன்னது போல் மலைகாட்டுப் பக்கம் இருக்கலாமோ என்ற எண்ணத்தில் அங்கே சென்றான்.

மலையைச் சுற்றிலும் அமைந்துள்ள பெரிய காட்டுப் பகுதி அது.

அதில் ஒருவர் வேண்டுமென்றே ஒளிந்திருந்தால் கண்டுபிடிப்பது சிரமமே! அதுவும் கவியுகன் ஒற்றை ஆளாகத் தனியாகத் தேடி கண்டுபிடிப்பது கடலுக்குள் போட்ட பொருளை தேடுவது போல் தான்.

அந்த அகண்ட காட்டுப் பரப்பை கண்டு மலைத்துத் தான் போனான் கவியுகன்.

ஆனாலும் செய்தே ஆகவேண்டிய கட்டாயம் அவனை இழுக்க, வழக்கமாக ஆட்கள் நடமாடும் பகுதியில் இல்லாமல் வேறு பகுதியில் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தான்.

பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து, சுள்ளென்ற வெயிலையும் உள்ளே நுழைய விடாமல், குளுமையையும், லேசான இருட்டையும் தந்து கொண்டிருந்தது அந்தச் சிறிய கானகம்.

உள்ளே செல்லும் பாதையும், வெளியே வரும் பாதையும் கூடச் சற்று குழப்பவே செய்தது.

காலையில் ஆரம்பித்த அவனின் தேடுதலில், மதியம் ஆரம்பித்த பிறகும் எந்தப் பலனையும் தராமல் போகச் சோர்ந்து போனான் கவியுகன்.

அவ்வளவு பெரிய இடத்தில் தான் ஒருவன் தனியாகத் தேடுவது முட்டாள்தனமாகப் பட்டது.

போலீஸ் வந்து தான் தேடி கண்டுபிடிக்க உதவ முடியும். இனியும் தள்ளிப் போடுவதில் அர்த்தம் இல்லை போலீஸில் போய்த் தகவல் சொல்லி விட வேண்டியது தான் என்று நினைத்தவன், திரும்பி சென்று விடலாம் என்று அவன் எண்ணிக் கொண்டே காட்டை விட்டு வெளியே வந்தான்.

காட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறுவதற்கு முன் மீண்டும் ஒரு முறை காட்டுப் பகுதியைத் திரும்பி பார்த்தவன் கண்கள் சட்டென்று கூர்மை பெற்றது.

காட்டின் நடுபகுதியில் இருந்து ஓர் இடத்தில் புகை கிளம்பி மேல் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அதைக் கண்டதும் பரபரப்படைந்தவன், மீண்டும் உள்நோக்கி ஓடினான்.

புகை வரும் பகுதியைக் கணக்கிட்டு அவனின் கால்கள் விரைந்தன.

புகை வரும் பகுதியை நெருங்கியதும், சட்டென்று நின்று ஒரு பெரிய மரத்தின் மறைவில் இருந்து நோட்டம் விட்டான்.

தீயை மூட்டி அதில் எதையோ போட்டு சுட்டுக் கொண்டிருந்தான் மணிமாறன்.

சுற்றிலும் ஒரு முறை பார்க்க, மணிமாறனை தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

கவியுகன் நின்ற இடத்தில் இருந்து பார்த்த போது, மணிமாறனின் பக்கவாட்டுத் தோற்றம் தெரிய, அவன் தன்னைப் பார்த்து விடாதவாறு பூனை போல் நடந்து வேறு மர மறைவிற்குத் தாவியவன், பின் மெல்ல, மணிமாறன் பின் புறமாக அடி மேல் அடியெடுத்து வைத்து அவனை நெருங்கி, அமர்ந்திருந்தவனைப் பின்னால் இருந்து சுற்றி வளைத்துப் பிடித்தான் கவியுகன்.

தான் மட்டும் இருக்கிறோம் என்ற மிதப்பில் ஏதோ பாடலை முணுமுணுத்துக் கொண்டே தீயில் ஏதோ இறைச்சியை வாட்டிக் கொண்டிருந்த மணிமாறன் தன்னை ஒருவர் சுற்றி வளைக்கவும், “ஏய், யாருடா?” என்று தள்ளி விலக முயன்றான்.

“நான் தான்டா!” என்ற கவியுகன் வலுவாக அவனைச் சுற்றி வளைத்துப் பிடித்திருக்க, மணிமாறனால் சிறிதும் விடுபட முடியவில்லை.

“சார், நீங்களா? என்னை எதுக்கு சார் பிடிக்கிறீங்க? விடுங்க சார்…” என்று திமிறினான்.

அவனின் காலில் பின்பக்கமாக ஒரு உதை விட்டு அவனை மடங்கி அமர வைத்தவன், அவனின் பின் மண்டையில் ஒரு அடியைப் போட்டான். அதில் மணிமாறன் சுருண்டு விழ, தான் ஏற்கெனவே பார்த்து வைத்திருந்த ஒரு மர வேரை எடுத்து வந்து மணிமாறனை மரத்தில் அருகில் இழுத்து சென்று அந்த வேரை வைத்து அவனை மரத்துடன் சேர்த்து கட்டிப் போட்டான்.

கவியுகன் போட்ட அடியில் மணிமாறனால் சிறிதும் அசைய முடியாமல் போக, அவனின் இழுப்பிற்குத் தான் அவனால் செல்ல முடிந்தது.

மரத்துடன் கட்டப்பட்ட நிலையில், எதிரே நிற்பவன் தெரியாத அளவிற்குக் கண்கள் மசமசப்பாகத் தெரிய, கண்களைச் சிமிட்டி சிமிட்டி கவியுகனை பார்க்க முயன்றான் மணிமாறன்.

“என்ன கண்ணு எல்லாம் கலங்குதா? கொஞ்ச நேரத்துக்கு அப்படித்தான் இருக்கும்…” என்று நக்கலாகச் சொன்ன கவியுகன், அவனின் எதிரே இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு மணிமாறனை உறுத்து விழித்தான்.

“எதுக்கு… எதுக்கு சார் என்னை அடிச்சீங்க?” திணறிக் கொண்டு கேட்டான் மணிமாறன்.

“நான் எதுக்கு அடிச்சேன்னு உனக்குத் தெரியாது? நம்புற மாதிரி இல்லையே…” ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு இன்னொரு கையால் தாடையைச் சொரிந்து கொண்டே கேட்டான் கவியுகன்.

“தெரியலை சார், எதுக்கு சார் என்னை அடிச்சீங்க?” கண்களைச் சிமிட்டி மசமசப்பை விரட்டிக் கொண்டே கேட்டான்.

“இந்த நடிப்பு எல்லாம் என்கிட்ட வேண்டாம் மணிமாறா. செய்றதை எல்லாம் செய்துட்டு அப்பாவி போல் பேசினால் உன்னை விட்டுவிடுவேன் என்று நினைச்சியா?” என்று கடுமையாகக் கேட்டவன், மணிமாறனின் தாடையைப் பிடித்து இறுக்கினான்.

அவன் அழுத்தியதில் தாடை பிய்ந்து போனது போல் வலிக்க, வாயைத் திறந்து கத்த கூட முடியாமல் திணறிப் போனான்.

“ஹ…ம்ம்ம்…!” என்று அவன் முனங்க, அவன் தாடையைச் சட்டென்று விட்டான் கவியுகன்.

“சரி, நீ எதுவும் செய்யலை. ஆனால், எதுவும் செய்யாதவன் ஏன் இப்படி வந்து இந்தக் காட்டுக்குள்ள தலைமறைவா இருக்க?” என்று நிதானமாகக் கேட்டான்.

“நா… நான் வழக்கமா இங்கே வருவேன் சார்…” என்று திக்கினான்.

“ஓஹோ! அப்படியா? வழக்கமா வர்றது சரி. ஆனால் உன்னோட முதலாளி அங்கே உயிருக்கு போராடிட்டு இருக்கும் போது நீ இங்கே வந்து கறியை சுட்டு சாப்பிட்டு என்ஜாய் செய்துட்டு இருக்கியே… இது தான் உன் முதலாளி விசுவாசமா?” என்று எகத்தாளமாகக் கேட்டான்.

“என்ன… என்ன சார் சொல்றீங்க? என்னோட முதலாளி உயிருக்கு போராடிட்டு இருக்காரா? ரவி சாருக்கு என்ன ஆச்சு சார்?” அதீத அதிர்ச்சியுடன் கண்களை விரித்துக் கேட்டு வைத்தான் மணிமாறன்.

“அட! அட! நடிகர் திலகம் தோத்தார் போ. என்னமா நடிக்கிறடா நீ! ஆனால், உன் நடிப்பில் சின்னதா கோட்டை விட்டுட்ட. இன்னும் கொஞ்சம் கச்சிதமாக நடிச்சிருக்கலாம்…” என்று கீழ் தடித்த உதட்டை பிதுக்கி போலி அனுதாபம் காட்டினான்.

“சார்ர்ர்…” என்று அவன் இழுக்க,

“நான் உன் முதலாளி என்று தான் சொன்னேன். ஆனால், நீ அது எப்படி ரவி சாருக்கு என்ன ஆச்சு என்று கேட்ட? உன் முதலாளி ரவி மட்டுமா என்ன?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி நிதானமாகக் கேட்டான்.

“அது… அது…” மாட்டிக் கொண்ட பாவனையில் திருத்திருவென முழித்தான் மணிமாறன்.

“அது தான் எது?” கவியுகன் விடாமல் கேட்க,

“அது… அது… ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க சார்…” சமாளித்து விட்டதாகக் கடகடவென ஒப்பித்தான்.

“இது ரொம்பத் தப்பாச்சே மணிமாறா. உன் முதலாளி உயிருக்கு போராடிட்டு ஹாஸ்பிட்டலில் இருக்காரென்று தெரிந்தே நீ அவரைப் பார்க்க போகாமல் இங்கே ஜாலியா டூர் வந்தது போல், பாட்டு பாடிட்டே, கறியை சுட்டு சாப்பிட்டு என்ஜாய் பண்ணிட்டு இருக்க. இது தான் உன் முதலாளி விசுவாசமா? இப்படி ஒரு விசுவாசத்தை நான் இதுவரை கண்டது இல்லை…” என்றான் நக்கல் தொனிக்க.

“அது… அப்புறம் பார்க்க போகலாம் என்று இருந்தேன் சார்…” என்றான்.

“போதும் உன் நடிப்பு மணிமாறா! இதுக்கு மேலே உன் நடிப்பையும், ஜல்சாப்பையும் கேட்க சகிக்கலை. சொல்லு, எதுக்கு ரவியைக் கொல்ல முயற்சி செய்த?” என்று கடுமையாகக் கேட்டான்.

அந்தக் கேள்வியை உள்வாங்கியதும், கண்களை விரித்துப் பெரிதாக அதிர்வை காட்டினான் மணிமாறன்.

ஆனால், அடுத்த நொடியே சுதாரித்துக் கொண்டவன், “நான் கொல்ல முயற்சி செய்தேனா? என்ன சார் சொல்றீங்க? என் மேல் அபாண்டமா பழி போடாதீங்க சார்…” என்று அலறினான்.

“அபாண்டமா பழி போடுறேனா? நூறு சதவீத உண்மையைச் சொல்லிட்டு இருக்கேன் மணிமாறா…”

“எது சார் உண்மை? என் முதலாளியை நான் கொல்ல முயற்சி செய்வேனா என்ன? சும்மா சுத்திட்டு இருந்தவனுக்கு வேலை போட்டு கொடுத்த முதலாளி சார் அவர். அவரைப் போய் நான் கொல்ல நினைப்பேனா? இது அபாண்டம் இல்லாம என்ன சார்?” என்றவன் கண்களிலிருந்து சொல்லி வைத்தாற்போல் பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

“நடிப்பு திலகமாகவே இருக்கடா நீ. சினிமாவுக்கு நடிக்கப் போயிருந்தால் இந்நேரம் பெரிய ஹீரோவா ஆகிருப்ப. அதை விட்டு இப்ப கொலைகாரன் என்ற பேர் வாங்கிட்டு இருக்க. இதெல்லாம் உனக்குத் தேவையா சொல்லு?” கவியுகன் கேட்க,

“சார், கொலைகாரன்னு சொல்லாதீங்க சார். நான் யாரையும் கொல்ல முயற்சி செய்யலை…” வீராவேசமாக முழங்கினான்.

“குரலை உயர்த்திப் பேசினால் பொய் உண்மையாகிடாது மணிமாறா. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது போலிருக்கு. ஆதாரம் இல்லாம நான் எதுவும் பேச மாட்டேன்…” கவியுகன் தன் நிதானத்தைச் சிறிதும் கைவிடவில்லை.

“என்ன சார் ஆதாரம்? சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க…” தெனாவட்டாகவே சொன்னான் மணிமாறன்.

“பூச்சாண்டியா? சரிதான்! எனக்கு வேலை வெட்டி இல்லை பார்! உன்கிட்ட வந்து பூச்சாண்டி காட்டிட்டு இருக்கேன்…” என்ற கவியுகனின் முகம் கடுமையாக மாறியது.

“உன் மாமாகிட்டயும், அம்மாகிட்டயும் ரவி வீட்டுக்கு வேலைக்குப் போவதாகச் சொல்லியிருக்க. ஆனால் நீ வேலைக்கு வரலை. புவன் கிட்ட உன் உடம்பு சரியில்லாத மாமாவை பார்த்துக்கப் போகணும் என்று லீவ் கேட்டுப் போயிருக்க. ஆனால் நீ அங்கே நைட் போகவே இல்லை. அதுக்குப் பதில் ராத்திரி ரவி வீட்டு மொட்டை மாடி வழியா ஏறி உள்ளே வந்து ரவியோட ரூம் கதவை கள்ளச்சாவி போட்டு திறந்து உள்ளே போய் அவனைக் கொல்ல முயற்சி செய்திருக்க. ரவி கத்தவும், அவனை ஏதோ ஷார்பான பொருளால் குத்திட்டு அங்கிருந்து தப்பிக்க, திரும்ப மொட்டை மாடி வழியாகவே ஏறி போயிருக்க…” என்று கவியுகன் சொல்ல, சொல்ல மணிமாறனின் முகம் கருமை பூசிக்கொண்டது .

“என்ன நேரில் பார்த்த மாதிரி சொல்றேன் என்று நினைக்கிறியா? நீ எப்படி வந்த? எப்படிப் போன? எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு…” என்று கவியுகன் சொல்ல,

“இ…ல்லை… அ…து… நா…ன்… இல்…லை…” மணிமாறனின் குரல் தப்புத் தாளம் போட்டது.

“அது நீ தான் என்று என்னால் உறுதியா சொல்ல முடியும் மணிமாறா. வீட்டுக்குள் நுழையும் போது முக்காடு போட்டு வந்தவன், போகும் போதும் மறக்காமல் முக்காடை போட்டுருக்க வேண்டாமா மணிமாறா? இதைப் பார்த்த பிறகும், இது நீ இல்லை என்று சொல்லிருவியா என்ன?” என்று கேட்டவன், மணிமாறன் முகம் கேமராவில் பதிந்து போனதை தன் கைபேசியில் ஒரு காபி எடுத்து வைத்திருந்ததை இப்போது அவனின் முகத்திற்கு நேரே நீட்டிக் காட்டினான்.

அப்புகைப்படத்தில் மணிமாறனின் பக்கவாட்டுத் தோற்றம் அப்படியே அச்சுப் பதித்தது போல் தெரிய, அதைக் கண்டவனின் முகம் இருளடைந்து போனது.

“சொல்லு மணிமாறா… இது நீ இல்லைன்னு சொல்லிடுவியா என்ன?” என்று கவியுகன் அழுத்தமாகக் கேட்க,

“அது… அது…” என்று திணறிப் போனான் அவன்.

“இனி எந்தப் பொய் காரணம் சொல்லியும் என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாது மணிமாறா. உண்மையைச் சொல்லி விடுவது உத்தமம்! சொல்லு, எதுக்காக ரவியைக் கொல்ல முயற்சி செய்த? உன்னை அப்படிச் செய்யச் சொன்னது யார்?” என்று கேட்டான்.

சில நொடிகள் மணிமாறன் வாயைத் திறக்கவே இல்லை. இருண்டு போன முகத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

“சொல்லு மணிமாறா. இனி நீ வாயை மூடிட்டு இருப்பதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. எதுக்காக இப்படிச் செய்த? உன்னை யார் இப்படிச் செய்யச் சொன்னது?” என்று கவியுகன் கேட்க, அப்போதும் மணிமாறன் வாயைத் திறக்கவில்லை.

“நான் பொறுமையா கேட்கும் போதே சொல்லி விடுவது உனக்கு நல்லது மணிமாறா. நான் கை வைத்தால் என்ன ஆகுமென்று கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உணர்ந்திருப்ப. திரும்ப அது மாதிரி நீ கலங்கிப் போக ஆசைப்பட்டால் சொல்லு, செம்மயா கவனித்து விடலாம்…” என்றவன் மீண்டும் அவன் தாடையைப் பிடித்து அழுத்தினான்.

அந்த அழுத்தம் பற்களை எல்லாம் ஆட்டம் காண வைப்பது போல் உயிர் வலியைக் கொடுக்க, “ம்ம்ம்… ம்ம்ம்… வே… வேணா… சொ… சொல்…” என்று திணறினான்.

அவன் தாடையை விட்டவன், “ம்ம், சொல்!” கால்களை அகட்டி வைத்துக் கொண்டு, கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாகக் கேட்டான்.

“நவ…நவநீதன் தான் என்னை அப்படிச் செய்யச் சொன்னார்…” வலித்த தாடையை மெல்ல அசைத்து வார்த்தைகளை உதிர்த்தான் மணிமாறன்.