யுகன்யா – 18

அத்தியாயம் – 18

வயிற்றிலிருந்து குபுகுபுவென்று ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்க, உயிர் வலியில் துடித்துக் கொண்டிருந்தான் ரவீந்திரன்.

“அண்ணா… என்னாச்சு உனக்கு? உன்னை யார் இப்படிச் செய்தது?” அண்ணனை அப்படிப் பார்த்து பதறி துடித்த புவனேந்திரன், அவனின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்.

நிலைமையை யூகித்த அனன்யா ஒரு நொடி அரண்டு போய் நின்று விட்டாலும், அடுத்த நொடி ஒரு உயிரை காப்பாற்றும் பரபரப்பு அவளைத் தொற்றிக் கொள்ள, “புவன், உடனே ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க. டாக்டரை கூப்பிடுங்க…” என்று கத்தியவள், அங்கிருந்த ஒரு துண்டை எடுத்து மேலும் ரத்தம் வெளியேறாத வண்ணம் ரவீந்திரன் வயிற்றைச் சுற்றி இறுக கட்ட ஆரம்பித்தாள்.

வலியில் அலறி, அனத்தி, பின் மெல்ல மெல்ல மயக்கத்திற்குச் செல்ல ஆரம்பித்தான் ரவீந்திரன்.

அனன்யா கத்திய கத்தில் சொரணை வந்து வேகமாகக் கைபேசியை எடுத்து, முதலில் அருகே இருந்த டாக்டர் ரஞ்சனுக்கு அழைத்து விவரத்தை சொல்லி விட்டு, அடுத்ததாக ஆம்புலன்ஸிற்கு அழைத்தான்.

ரவீந்திரன் முழு மயக்கத்திற்குச் சென்றிருந்தான்.

அதற்குள் மேலே என்ன சத்தம் என்று பதறி மேலேறி வந்த மேகலா, பெரிய மகன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து மயங்கி விழுந்தார்.

அவரை வேறு பார்க்க வேண்டியதாக இருக்க, அனன்யா இருவரில் யாரை பார்ப்பது என்று அல்லாடிக் கொண்டிருந்தாள்.

புவனேந்திரனும் அண்ணனை பார்ப்பதா, அன்னையைப் பார்ப்பதா என்று திணறி கலங்கிப் போயிருந்தான்.

புவனேந்திரன் அண்ணனையும், அனன்யா மேகலாவையும் கவனிக்க ஆரம்பித்தனர்.

அதே நேரம் மொட்டை மாடிக்கு ஓடிய கவியுகன் மேலே யாரையும் காணாமல் தேடிப் பார்த்து ஓய்ந்து போய், அன்று போல் பைப் வழியாக இறங்கி சென்று விட்டானா என்று சுற்றிப்பார்த்தான்.

ஆனால், எந்தப் பக்கம் இறங்கி சென்றான் என்றே கண்டறிய முடியவில்லை.

பின் பக்கம் தோட்டத்திலும் சலசலப்பு எதுவும் கேட்கவில்லை என்றதும், தோல்வியுடன் கீழே இறங்கி வந்தான்.

“என்ன ஆச்சு அண்ணா? யார் அவன், என் அண்ணனை இப்படிச் செய்தது?” ஆத்திரத்துடன் கேட்டான் புவனேந்திரன்.

“யாருன்னு தெரியலை புவன். தப்பிச்சு போயிட்டான்…” என்று கவியுகன் சொல்லிக் கொண்டிருந்த போது டாக்டர் ரஞ்சன் வந்து சேர்ந்திருந்தான்.

அதே நேரத்தில் ஆம்புலன்ஸும் வந்திருந்தது.

ரஞ்சனின் முதல் உதவியுடன் ரவீந்திரனை ஆம்புலன்ஸில் ஏற்றினர். புவனேந்திரனும் ஆம்புலன்ஸில் செல்ல, அதற்குள் கண் விழித்து அழுது கொண்டிருந்த மேகலாவையும், அனன்யாவையும் தனது காரில் ஏற சொன்ன கவியுகன், மணிமாறன் எங்கே என்று பார்த்தான்.

மணிமாறனை அங்கே காணவில்லை. டைசனும் கூடக் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

மணிமாறன் எங்கே சென்றான்? என்ற கேள்வியுடன் அவன் பார்வையைச் சுழல விட, “தம்பி, சீக்கிரம் காரை எடுப்பா. என் பிள்ளைக்கு என்னாச்சோ?” என்று மேகலா கதற, அதற்கு மேல் தாமதிக்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

தஞ்சாவூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் ரவீந்திரன் அனுமதிக்கப்பட்டான்.

போலீஸ் கேஸ் என்று அவர்கள் தயங்க, டாக்டர் ரஞ்சன் பேசி சமாளித்து அங்கே அட்மிட் செய்து ரவீந்திரனை அவசர சிகிச்சை பிரிவிற்கு அழைத்துச் சென்றனர்.

டாக்டர் ரஞ்சன் மட்டும் உள்ளே சென்றிருக்க, மற்றவர்கள் வெளியே நின்றிருந்தனர்.

“என்ன நடந்ததுடா தம்பி? யார் உன் அண்ணனை இப்படிச் செய்தது?” என்று சின்ன மகனிடம் கதறலாகக் கேட்டார் மேகலா.

“எனக்குத் தெரியலையே மா. ஏதோ சத்தம் கேட்டது என்று வெளியே வந்தேன். அப்போ தான் கவின் அண்ணா ரவிக்கு என்னாச்சு பாருன்னு கத்தினார். உள்ளே போய்ப் பார்த்தால் அண்ணா… அண்ணா ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்…” என்றான் கலங்கிய கண்களுடன்.

“என் பிள்ளை யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லையே… இருக்குற இடம் தெரியாமல் இருப்பானே. அவனைப் போய் எந்தப் பாவி பயலோ இப்படிப் பண்ணிப் போட்டானே…” என்று அழுது தீர்த்தார்.

அனன்யா அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“புவன், இப்படி வா…” என்று அவனைச் சற்று தனியே அழைத்துச் சென்றான் கவியுகன்.

“என்ன அண்ணா?” கம்மிய குரலில் கேட்டான் புவனேந்திரன்.

“உனக்கு யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா?” என்று கேட்டான்.

“சந்தேகமா? அப்படி யார் மேலையும் இல்லையே அண்ணா…”

“நல்லா யோசித்துப் பார் புவன். உங்க குடும்பத்துக்கு வேண்டாதவங்க. உன் அண்ணனுக்கு வேண்டாதவங்க… இப்படி யார் மீதாவது சந்தேகம் இருந்தால் சொல்லு…” என்றான்.

சில நொடிகள் அமைதியாக யோசித்தான் புவனேந்திரன்.

“குடும்பத்துக்கு வேண்டாதவங்க என்று யாரும் இருக்குற மாதிரி தெரியலை அண்ணா. எனக்கே தெரியாம ஒருவேளை யாருக்காவது எங்க குடும்பத்து மேலே பொறாமை இருக்கலாம். ஆனால் அதுக்காக அண்ணனை கொல்லும் அளவுக்குப் போவது எல்லாம்… இல்லை அண்ணா அப்படியெல்லாம் இருக்காது…” மறுப்பாகத் தலையை அசைத்தான்.

“ரவி மேல யாருக்காவது தனிப்பட்ட விரோதம்?”

“போன வருஷம் வரை அப்பா கூடச் சேர்ந்து அண்ணா மட்டும் தான் தொழிலை பார்த்துக்கிட்டார். அப்பா இறந்த பிறகு தான் நானும் இங்கே இருந்து தொழில் பார்க்க ஆரம்பிச்சேன். அதனால் அதுக்கு முன்னாடி இருந்த பகை பற்றி எல்லாம் எனக்குத் தெரியலை. ஆனால், நான் வந்த பிறகு, மதியரசன் என்ற ஒருத்தன் தான் நில விஷயமா அண்ணா கூட மோதிட்டு இருந்தான்.

ஆனால், அதில் கூட அண்ணா பக்கம் எந்தத் தப்பும் இல்லை. அந்த நிலத்துக்கு உரிமையாளர் தான் இரண்டு பக்கமும் கேம் ஆடிட்டார். அதுக்குப் பிறகு மதியரசன், அண்ணனை எங்கே பார்த்தாலும் சீண்டுவது போல் பேசுவான். அதுக்கு மேல அவன் போயிருப்பான் என்று நினைக்க முடியலை அண்ணா…” என்றான்.

“அப்படியென்று அசால்டா விட்டுவிட முடியாது புவன். சின்ன வன்மம் கூடச் சுயரூபம் எடுக்கச் சான்ஸ் இருக்கு…” என்றான் கவியுகன்.

“அப்போ அந்த மதியரசனை பிடித்து விசாரிப்போமா அண்ணா?” என்று புவனேந்திரன் யோசனையுடன் கேட்க,

“கண்டிப்பா அவனைப் பிடித்து விசாரிக்கணும். அவன் தவிர வேற யார் மேலேயாவது டவுட் இருக்கா?”

“அப்படி யாரும் இருக்குற போல எனக்குத் தெரியலையே அண்ணா…”

“நல்லா யோசி புவன். சின்ன ஹின்ட் கூடக் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும்…” கவியுகன் சொல்ல, சிந்தனையில் ஆழ்ந்தான் புவனேந்திரன்.

“நவநீதன்னு ஒருத்தனை பற்றி ஒரு நாள் ரவி பேச்சு வாக்கில் சொன்னான். அது யாரு புவன்? உனக்கு எதுவும் தெரியுமா?” என்று தானே மெதுவாக எடுத்துக் கொடுத்தான் கவியுகன்.

“நவநீதனா? அவன் இதயாவை கட்டிக்க ஆசைப்பட்டான். அதில் தான் அண்ணாகிட்ட கூட முறைச்சிட்டு திரிவான். ஆனால் இப்போ இதயாவே இல்லாதப்ப, அவன் அண்ணன் மேலே கோபப்பட்டு என்ன ஆகப்போகுது அண்ணா?” புரியாமல் கேட்டான்.

புவனேந்திரனுக்கு நவநீதன், மதியரசன் இருவரின் மீதும் பெரிதாகச் சந்தேகம் இருப்பதாகத் தெரியவில்லை. அவனுக்கும் பெரிதாக விவரம் எதுவும் தெரியாத போது, தனக்குத் தெரிந்ததையும் சொல்ல முடியாமல் போனான் கவியுகன்.

மணிமாறன்? அவன் எங்கே சென்றான்? என்ற கேள்வி தோன்ற,

“இன்னைக்கு ஏன் வீட்டு வாட்ச்மேன் வேலைக்கு வரலை புவன்?”

“அவன் மாமாவுக்கு உடம்பு சரியில்லை. அவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கு. கூட இருந்து பார்த்துக்க நான் போகணும் என்று நைட் வந்து லீவ் கேட்டான். நான் தான் கொடுத்து அனுப்பிவிட்டேன். ஏன் அண்ணா?”

“வாட்ச்மேன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதே என்று தான் கேட்டேன் புவன். அதோட, டைசனையும் கழற்றி விடலை. ஏன்?”

“டைசனை எப்பவும் வாட்ச்மேன் கழற்றி விடுவான் அண்ணா. இன்னைக்கும் லீவ் கேட்டு வந்தவன் கிட்ட நீ போகும் போது கழற்றிவிட்டு போ என்று தான் சொல்லியிருந்தேன். ஆனால் அவன் கழற்றிவிடாமல் போயிட்டான் போலிருக்கு. நானும் கவனிக்கலை. சாரி அண்ணா. இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவும் இல்லை. தெரிந்திருந்தால் நான் கொஞ்சம் கவனமா இருந்திருப்பேன்…” என்றான் கலக்கத்துடன்.

அவன் தோளில் ஆறுதலுடன் தட்டிக் கொடுத்தான்.

“போலீஸுக்கு இன்பார்ம் பண்ணலையா புவன்? குற்றவாளி யாரென்று கண்டுபிடிக்கணுமே?” என்று கேட்டான்.

“கட்டாயம் போலீஸுக்குப் போகத்தான் போறேன் அண்ணா. என் அண்ணனை இப்படிச் செய்தவனைச் சும்மா விட மாட்டேன். ஆனால் இப்ப அண்ணாவுக்கு எப்படி இருக்கு என்று எனக்குத் தெரியணும். அவரை இந்த நிலையில் விட்டுட்டு நான் போலீஸ் ஸ்டேஷன் அலைந்து கொண்டு இருக்க முடியாதுண்ணா. இன்னும் ரவி அண்ணா ரத்த வெள்ளத்தில் துடித்தது என் கண்ணுக்குள்ளயே நிக்குது…” என்றவன், உடைந்து அழ ஆரம்பித்தான்.

அவனின் மனநிலை புரிந்து ஆறுதலாக அணைத்துப் பிடித்துக் கொண்டான்.

கவியுகனுக்கும் சிறிது அவகாசம் தேவைப்பட்டது. காவல்துறையின் ஆதிக்கம் ஆரம்பிக்கும் முன் குற்றவாளி யார் என்று தான் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

அதே நேரத்தில் விஷயம் அறிந்து தனசேகர் குடும்பத்துடன் வந்து சேர்ந்து, எப்படி நடந்தது, யார் செய்தது என்று விசாரித்து, அழுது, மருத்துவர் சொல்ல போகும் சேதிக்காகக் காத்திருக்க ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் மருத்துவர் வெளியே வர, அனைவரும் பரபரப்புடன் எழுந்தனர்.

“டாக்டர் என் பிள்ளைக்கு எப்படி இருக்கு?” மேகலா கதறலுடன் கேட்க,

“வயிற்றில் ஆழமா ஷார்ப்பான பொருள் இறங்கியதில் ரத்தம் நிறையப் போயிருக்கு. காயத்துக்குத் தையல் போட்டு ரத்தம் ஏத்தியிருக்கோம். ஆனால், இன்னும் ரத்தம் தேவைப்படுது. அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…” என்றார் மருத்துவர்.

“டாக்டர், உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லையே?” தனசேகர் விசாரிக்க,

“இப்போதைக்கு எதுவும் உறுதியா சொல்ல முடியாதுங்க. கொஞ்சம் கிரிட்டிகல் கண்டிஷன் தான். முதலில் ரத்தம் ஏற்றணும். அதுக்குப் பிறகு தான் எதுவும் சொல்ல முடியும்…”

“நான் உடனே ரத்தத்துக்கு ஏற்பாடு செய்றேன் டாக்டர்…” என்றான் புவனேந்திரன்.

“ரவிக்கு என்ன க்ரூப் ரத்தம் டாக்டர்?” என்று கவியுகன் கேட்க,

“ஏபி பாசிட்டிவ்…” என்றார்.

“எனக்கும் அனன்யாவுக்கும் அதே க்ரூப் பிளட் தான் டாக்டர். நான் டொனேட் பண்றேன்…” என்றவன், அனன்யாவை கேள்வியாகப் பார்த்தான்.

“நானும் ரத்தம் கொடுக்குறேன் டாக்டர்…” என்றாள் அனன்யா.

“நல்லதா போயிருச்சு. உள்ளே வாங்க…” இருவரையும் மருத்துவர் ரத்தம் எடுக்க அழைத்துச் சென்றார்.

மருத்துவர் பின்னால் சென்ற அனன்யா, “யுகா…” என்று அருகில் சென்றவனின் கையைப் பிடித்தாள்.

“என்ன அனன்யா?” என்றவன், அவள் கையில் இருந்த அழுத்தத்தை உணர்ந்தான்.

கேள்வியாக அவனின் புருவம் உயர்ந்தது.

“எனக்கு ரத்தம் கொடுக்கிறது என்றாலே பயம் யுகா…” என்று லேசாக உதடுகள் நடுங்க சொன்னாள்.

“அப்புறம் ஏன் ரத்தம் கொடுக்க முன் வந்த?” என்று கேட்டான்.

“ரவி பாவம் இல்லையா? ஒரு உயிர் இப்படித் துடிச்சுட்டு இருக்கும் போது என்னால் எப்படி ரத்தம் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியும்? அதோட நீங்க எல்லார் முன்னாடியும் என் பேரை சொல்லிட்டீங்க. அப்படியிருக்கும் போது நான் கொடுக்க மாட்டேனென்று சொன்னால் அவங்க என்ன நினைப்பாங்க?” என்றாள்.

அவள் பயம் என்றதும் இளக்கமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கவியுகன் கண்களில் உஷ்ணம் ஏறியது.

தன் கையைப் பிடித்திருந்த அவளின் கையை உதறினான்.

“நான் சொன்னதுக்காக நீ எதுவும் செய்யத் தேவையில்லை. உனக்குப் பிடிக்கலைனா நீ வெளியேவே உன்னால் முடியாதென்று சொல்லியிருக்கணும். அதை விட்டு…” என்று அவன் தொடர்ந்து கடிந்து கொண்டே போக…

“அச்சோ! நிறுத்துங்க யுகா!” என்று சன்னமாக அலறியவள், “நான் எனக்கு இருக்கும் பயத்தில் ஏதோ சொன்னா… உடனே ஒன்றரை முழத்துக்கு அட்வைஸை தூக்கிட்டு வர்றீங்க…” என்று கடுகடுத்தாள்.

அவளின் முகத்தை நிதானமாக ஏறிட்டான் கவியுகன்.

“என்ன? என்ன பார்வை?” அவன் மேல் பாய்வது போல் கேட்டவள், “கொஞ்சம் கூட என் மேல பாசமும் இல்லை, ஆசையும் இல்லை. உங்களைப் போய் நான்…” என்று மெல்ல முனகிக் கொண்டாள்.

அவளின் முனகல் அச்சர சுத்தமாய்க் கவியுகன் காதில் விழத்தான் செய்தது. ஆனால் விழாதது போல் பாவனைக் காட்டியவன், எதிரே வந்த செவிலி சொன்ன படுக்கையில் சென்று படுத்தான்.

அவன் கையில் ஊசியை ஏற்றி, ரத்தத்தை எடுக்க ஆரம்பிக்க, அவனின் கையிலிருந்து சொட்டு சொட்டாய் வெளிறிய ரத்தத்தை மிரண்டு போய்ப் பார்த்தாள்.

அடுத்து அவள் அருகில் செவிலி வர, ஒரு அடி பின்னால் நகர்ந்தாள்.

“அனன்யா!” அழுத்தமாக அழைத்தான் கவியுகன்.

‘ஹம்ம்!’ என்று அவள் மிரட்சியாக அவனை ஏறிட,

“ஒரு உயிரை காப்பாத்த போறோம்னு நினைச்சுக்கோ. பயம் வராது…” அவள் கண்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே சொன்னான்.

அவனின் கண்கள் ஆழமாக அவளை ஊடுருவி அவளின் உள்ளத்தை உரசுவது போல் இருந்தது.

அந்தப் பார்வையின் தாக்கம் அவளுக்குள் சுர்ரென்று இறங்க, ஏதோ மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல் செவிலியுடன் சென்றாள்.

இருவரும் ரத்தம் கொடுத்துவிட்டு வெளியே வந்தனர்.

“ரொம்ப ரொம்ப நன்றி மா…” என்று அவளின் கையைப் பிடித்து மேகலா கதறி விட, அந்தத் தாயின் கண்ணீரை கண்டு அவளுக்குள் இருந்த பயம் எல்லாம் இப்போது அனாவசியம் என்று தோன்றியது.

“தேங்க்ஸ் அண்ணா…” என்று கவியுகனை அணைத்துக் கொண்டான் புவனேந்திரன்.

“மீதி யூனிட் ரத்தத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டியா புவன்?” கவியுகன் கேட்க,

“டாக்டர் ரஞ்சன் ஏற்பாடு செய்றேன் என்று சொல்லியிருக்கார் அண்ணா…” என்றான்.

டாக்டர் ரஞ்சன் ஏற்பாட்டின் படி மீதி ரத்தமும் கிடைத்து விட, ரவீந்திரனுக்குச் செலுத்தப்பட்டது.

ஆனாலும் ரவீந்திரன் உடல்நிலையைப் பற்றி உறுதியாக எதுவும் தெரிவிக்க இருப்பத்திநான்கு மணி நேரம் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து விட, அவன் கண் விழிக்கும் நேரத்திற்காக அனைவரும் காத்திருக்க ஆரம்பித்தனர்.

ஆனால் அதுவரைக்கும் மருத்துவமனையில் காத்திருக்கக் கவியுகனுக்கு நேரமும் இருக்கவில்லை. பொறுமையும் இருக்கவில்லை. குற்றவாளியை உடனே கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

அனன்யாவை தனியே அழைத்தவன், “நான் கிளம்புறேன் அனன்யா. நீ இங்கே இருந்து பார்த்துக்கோ…” என்றான்.

“எங்கே யுகா?”

“ரவியை இப்படிச் செய்தது யாருன்னு தெரியலை. அதை உடனே கண்டுபிடிச்சாகணும். நான் இங்கே இருந்தால் சரி வராது…”

“நவநீதன் தான் இப்படிச் செய்திருக்கணும் யுகா. எனக்கு அவன் மேலே தான் டவுட்டா இருக்கு…” என்றாள்.

“எனக்கும் அந்த டவுட் இருக்கு. ஆனால் நம்ம கைக்கு அகப்படாமல் அவன் தலைமறைவாகச் சுத்துறான். உடனே அவனைக் கண்டுபிடிச்சாகணும். அதுக்குத் தான் இப்ப நான் கிளம்புறேன்…” என்றான்.

“நானும் வர்றேனே யுகா. நான் இங்கே இருந்து என்ன பண்ண போறேன்?”

“இரண்டு பேரும் போனால் இங்கே இருக்குறவங்க கேட்குற கேள்விக்குப் பதில் சொல்லி சமாளிக்க முடியாது. நீ இங்கேயே இரு!” என்று அவளை மருத்துவமனையில் விட்டுவிட்டு, புவனேந்திரனிடம் தனக்கு ஒரு வேலை இருப்பதாகச் சொல்லி விட்டு அவன் வெளியேறிய போது அதிகாலை ஐந்து மணி ஆகியிருந்தது.

மருத்துவமனையிலிருந்து கிளம்பியவன் ரவீந்திரனின் வீட்டிற்குச் சென்றான்.

நேராக மாடிக்குச் சென்றவன், மாடியில் இருந்த வராந்தாவில் இருந்த ஒரு தூண் மறைவில் தான் மறைத்து வைத்த கேமராவை ஒரு பார்வை பார்த்து விட்டு தான் தங்கியிருந்த அறைக்குச் சென்றான்.

ரவீந்திரன் மீது சந்தேகம் வந்த அன்றே, அனன்யாவிற்குக் கூடத் தெரியப்படுத்தாமல் மாடி வராந்தாவில் ஒரு கேமராவை பொருத்தியிருந்தான் கவியுகன்.

தன் ஐபேட்டை திறந்து, கேமராவில் பதிந்த காட்சிகளை ஓடவிட்டு பார்க்க ஆரம்பித்தான்.

சரியாகப் பத்து மணிக்கு மாடியிலிருந்த அறை கதவுகள் அடைக்கப்பட்டிருக்க, அதன் பிறகு அந்த வராந்தா இருள் சூழ்ந்து அமைதியாக இருந்தது.

மெல்ல நேரத்தை ஓட விட்டவன், நள்ளிரவில் கேமராவில் மசமசப்பாகப் பதிந்திருந்த அந்த உருவத்தைக் கண்களைச் சுருக்கிப் பார்த்தான்.

சற்றுத் தூரத்தில் நிழலாகத் தெரிந்த உருவம், ரவீந்திரனின் அறை அருகில் வந்ததும், கேமராவில் இன்னும் அழுத்தமாகப் பதிந்தது.

ஆனாலும் அவ்வுருவத்தின் முகத்தைக் காண முடியாதவாறு முகத்தைச் சுற்றி துணியால் முக்காடு போட்டு மூடி மறைக்கப்பட்டிருந்தது.

அது யாராக இருக்கும் என்று கவியுகன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ரவீந்திரன் இருந்த அறை கதவை ஏதோ சாவியை வைத்து திறந்து, பூனை போல் உள்ளே சென்றான்.

சில நொடிகள் கடக்க, உள்ளே சென்றவன், பதறியடித்துக் கொண்டு வேகமாக வெளியே வந்து மொட்டை மாடியை நோக்கி ஓடினான்.

அவன் ரவீந்திரன் அறையை விட்டு வெளியே பதட்டத்துடன் வந்த போது அவன் முகத்தில் இருந்த துணி காணாமல் போயிருக்க, அவனின் பக்கவாட்டுத் தோற்றம் கேமராவில் பதிந்து போயிருந்தது.

அந்த உருவத்தை உள்வாங்கிய கவியுகன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

“மணிமாறன்!”