யுகன்யா – 17

அத்தியாயம் – 17

“என்னாச்சு? எதுக்கு உதயா அழறாங்க?” அங்கே இருந்த சூழ்நிலையை ஆராய்ந்து கொண்டே கேட்டான் கவியுகன்.

“வாங்க கவின் அண்ணா. அவளுக்கு என்ன? அவள் ஒரு லூஸு! லூஸு தனமா ஏதோ சொல்லி அழுதுட்டு இருக்காள். நீங்க வாங்க, உட்காருங்க…” என்று அவன் அமர இருக்கையை எடுத்துப் போட்டான் புவனேந்திரன்.

அவ்வளவு நேரமாக அழுது கொண்டிருந்த உதயா, கவியுகன் முன் அழ சங்கடப்பட்டு, கண்களை நாசுக்காகத் துடைத்துக் கொண்டாள்.

ஆனாலும், சிறு தேம்பல் அவளிடமிருந்து கிளம்பவே செய்தது.

“ஏதோ சீரியஸா அழுதுட்டு இருக்காங்க. நீ என்ன புவன் லூஸுன்னு சொல்லிட்டு இருக்குற?” கவியுகன் கேள்வியுடன் புருவத்தை உயர்த்த,

“காரணம் இல்லாத விஷயத்துக்கு, காரணம் நான்தான் என்று காரணம் கற்பித்துக் கொண்டு, காரணமே இல்லாம அழறவங்களை லூஸுன்னு தானே சொல்ல முடியும் அண்ணா?” என்றான் புவனேந்திரன்.

கண்ணீர் கண்களுடன் அவனை முறைத்துப் பார்த்தாள் உதயா.

“இப்ப மட்டும் முறை. அழாதே என்று சொல்ல சொல்ல, கேட்காமல் அழுத தானே? உன்னை லூஸு என்று தான் சொல்வேன். லூஸு! லூஸு!” என்று மீண்டும் மீண்டும் சொல்லி நாக்கை துருத்தி அவளைச் சீண்டினான் புவனேந்திரன்.

“அத்தான், வேண்டாம்!” என்று உதயா கடுப்பாகச் சொல்ல,

“அப்படித்தான் சொல்வேன். போடி லூஸு!” என்றான் மீண்டும்.

“அத்தான், பேசாம இருங்க. கவின் சார் இருக்கார் என்று பார்க்கிறேன். இல்லைனா…” என்று பற்களைக் கடித்தாள்.

“இல்லைனா என்ன பண்ணுவ? ஊழு ஊழுன்னு அழுவ. அது தவிர உனக்கு வேற என்ன தெரியும்?” என்று அவன் சீண்ட,

மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அவனை முறைத்தவள், “நான் வீட்டுக்குப் போறேன். உங்ககிட்ட மனுஷி பேசுவாளா?” என்று அந்த அறையை விட்டு வெளியே சென்றாள்.

“ஏய், நில்லு! நானும் வர்றேன்…” அவள் பின்னால் ஓடினாள் ராதா.

“என்ன புவன், உதயா கோவிச்சுட்டு போறாள். பார்த்துட்டு பேசாம நிற்கிறீங்க?” என்று அனன்யா கேட்க,

“போகட்டும், விடுங்க அனன்யா. இங்கே இருந்தால் இன்னும் அழுதுட்டு தான் இருப்பாள். வீட்டுக்கு போனாலும், அங்கே அவள் அம்மா பார்த்தால் வருத்தப்படுவாங்க என்று அழாமல் இருப்பாள்…” என்றான்.

“உங்ககிட்ட பேச மாட்டேனென்று சொல்லிட்டு போறாளே… அதைப் பற்றிக் கவலை இல்லையா?”

“நான் பேசாமல் இருக்கும் போதே, என்கிட்ட பேசாமல் இருக்க முடியாம பேச ட்ரை பண்ணுவாள். இப்ப நான் பேசிய பிறகு என்கிட்ட பேசாமல் இருந்திடுவாளா என்ன? நாளைக்கே ஏதாவது காரணத்தை வைத்து, வீட்டுக்கு வந்து என்கிட்ட பேசுவாள் பாருங்க…” என்றான், நம்பிக்கையாக.

அவர்கள் பேச்சில் தலையிடாமல் அமைதியாக இருந்த கவியுகனின் பக்கம் திரும்பிய புவனேந்திரன், “சொல்லுங்க அண்ணா…” என்றான்.

“நீ தான் சொல்லணும் புவன். இங்கே ஏதோ இடம் இருக்கென்று சொன்னியே?” என்று கேட்டான்.

“எஸ்… எஸ் அண்ணா! உதயா அழுததில் அதை மறந்துட்டேன். வாங்க இப்பவே போகலாம். அதுக்கு முன்னாடி ஆளுங்ககிட்ட சில வேலைகள் சொல்லிட்டு வந்துடுறேன். அதுவரை நீங்க இங்கே உட்கார்ந்திருங்க அண்ணா. அனன்யா நீங்களும் உட்காருங்க, இதோ வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அவன் வெளியே சென்றதை எட்டிப் பார்த்து உறுதி செய்து கொண்ட அனன்யா, “யுகா, நாம நினைத்தது போல் உதயா எந்தத் தவறும் செய்யலை…” என்றாள் வேகமாக.

“ம்ம், தெரியும். நானும் உதயா பேசியதை கேட்டேன்…”

“ஓ! நீங்க அப்பவே வந்துட்டீங்களா?”

“ம்ம்! ஆனால் நீ என்ன முட்டாள்தனம் செய்ய இருந்த?” என்று கூர்மையுடன் கேட்டான்.

“அது…!” என்று தயங்கியவள், அவனைக் கீழ் பார்வையாகப் பார்த்தாள்.

“நான் வந்து தடுக்கலைனா உண்மையைச் சொல்லி விபரீதத்தை இழுத்து வச்சுருப்ப அனன்யா…” என்றான் கண்டிப்புடன்.

“ஸாரி யுகா. உதயா அப்படி அழவும், கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்…” என்றாள்.

“உன் எமோஷனலை கொஞ்ச நாளைக்கு அடக்கி வை!” என்றான்.

“ஸாரி யுகா. இனி இப்படி நடக்காது…” என்று முணுமுணுத்தாள்.

“விடு! இதுக்கு மேல இங்கே பேச வேண்டாம்…” என்றதும், சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “யுகா, இப்ப நாம அந்த இடத்தைப் பார்க்க போய்த்தான் ஆகணுமா? நாம தான் அதுக்கு வரலையே?” என்று கேட்டாள்.

“அது நமக்கு மட்டும் தான் தெரியும். இந்த ஊரில் உள்ள மற்றவர்கள் பார்வைக்கு நாம எதுக்கு வந்திருக்கோம் என்று சொல்லியிருக்கோமோ அந்த வேலையையும் கொஞ்சம் பார்த்து தான் ஆகணும். வேற வழி இல்லை…” என்று தோளை குலுக்கினான்.

“அந்த இடத்தை வாங்க சொல்லி, நிலத்துக்காரன் கம்பெல் செய்தால்?” என்று கேட்டாள்.

“அப்படி நடக்காமல் பார்த்துக்கலாம்…” என்று அவளிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்த போது, “அண்ணா, போகலாமா?” என்று கேட்ட படி வந்தான் புவனேந்திரன்.

“போகலாம் புவன்…” என்று எழுந்து அவனுடன் நடந்தான்.

புவனேந்திரன் ஏற்பாடு செய்ததற்காக அந்த இடத்தைச் சென்று பார்த்து விட்டு வந்தான் கவியுகன்.

அன்று மாலை தஞ்சாவூர் சென்றிருந்த ரவீந்திரன் வீடு வந்து சேர்ந்தான்.

அப்போது வெளியே கிளம்பிக் கொண்டிருந்த கவியுகன் எதிரே ரவீந்திரன் வர, அவனைத் தீர்க்கமான பார்வையுடன் எதிர் கொண்டான்.

அவன் கண்களைச் சந்திக்காமல் ரவீந்திரன் எங்கோ பார்க்க, “நீ ரொம்பப் பிஸி போலிருக்கு ரவி? இப்ப எல்லாம் உன்னை வீட்டில் பார்க்கவே முடிவதில்லை…” என்றான் கவியுகன்.

“கொஞ்சம் வேலை இருந்தது கவின்…” என்று முனங்கினான்.

“என்ன வேலை என்று நானும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமா?” என்றவன் கேள்விக்கு அவனின் உதடுகள் அழுத்தமாக இறுகின.

இதை எதிர்பார்த்தேன் என்பது போல் தோளை குலுக்கிக் கொண்ட கவியுகன், அவனிடம் மேலும் எதுவும் கேட்காமல் அவனை விட்டு விலகி நடந்தான்.

சென்றவன் முதுகை வெறித்தான் ரவீந்திரன்.

கவியுகன் வெளியே சென்ற சிறிது நேரத்தில் அங்கே வந்தார் அவனின் மாமா தனசேகர்.

“வாங்க அண்ணா…” மேகலா வரவேற்க,

“வர்றேன்மா. ரவி மாப்பிள்ளை வீட்டில் இருக்காரா?” என்று கேட்டார்.

“அவன் ரூமில் இருக்கான் அண்ணா. இருங்க வரச் சொல்றேன். நீங்க என்ன குடிக்கிறீங்க அண்ணா? அண்ணி வரலையா?”

“எனக்கு எதுவும் வேண்டாம்மா. உன் அண்ணி இப்பத்தான் காபி கொடுத்தாள். அவளை நான் தான் கூட்டிட்டு வரலை. நான் பேச வந்த விஷயம் நல்லபடியாக முடிந்தால் அவளையும் கூட்டிட்டு வர்றேன்…” என்றார்.

“என்ன விஷயம் அண்ணா?” மேகலா புரியாமல் கேட்க,

“மாப்பிள்ளை வரட்டும், சொல்றேன்…” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இறங்கி வந்தான் ரவீந்திரன்.

“வாங்க மாமா…”

“தஞ்சாவூர் போயிட்டீங்க போலிருக்கு?”

“ஆமாம் மாமா. ஒரு வேலை இருந்தது. அதான் காலையிலேயே உங்களை வந்து பார்க்க முடியலை…”

“சின்ன மாப்பிள்ளை இன்னும் வரலையா?”

ரவீந்திரன் அன்னையைப் பார்த்தான்.

“புவன் இன்னும் வீட்டுக்கு வரலை அண்ணா…”

“சரி, நான் பேச வந்ததைப் பெரிய மாப்பிள்ளைகிட்ட பேசிடுறேன்…”

“சொல்லுங்க மாமா, என்ன விஷயம்?”

“நடக்கக் கூடாது எல்லாம் நடந்திருச்சு மாப்பிள்ளை. என் பொண்ணும் போய்ச் சேர்ந்துட்டாள்…” என்று கலங்கிய குரலில் ஆரம்பித்தார்.

ரவீந்திரனின் முகமும் வேதனையுடன் கசங்கிப் போனது.

மேகலாவின் கண்கள் கண்ணீரை பொழிய ஆரம்பித்துவிட்டன.

தொண்டையை லேசாகச் செருமி கொண்டார் தனசேகர்.

“இப்ப அதைப்பற்றிப் பேசி ஒன்னும் ஆகப் போறது இல்லை. போன என் பொண்ணு திரும்பியும் வரப் போறதில்லை. ஆனால் அவளைப் பற்றிப் பேச்சு மட்டும் இன்னும் ஊருக்குள்ள ஓயலை. அவள் தற்கொலை பண்ணிட்டாள் என்று சொல்லி அதற்குக் காரணமென்று ஆளாளுக்கு ஒன்னு சொல்லிட்டு இருக்காங்க. அந்தப் பேச்சை நிறுத்த வைக்கணும் மாப்பிள்ளை. அது உங்களால் தான் முடியும்…”

“அந்த வருத்தம் எனக்கும் இருக்கு மாமா. அதனால் தான் இதயா இறப்பில் நடந்த உண்மையைக் கண்டுபிடிக்கப் போலீஸில் கம்பளைண்ட் கொடுப்போமென்று சொன்னேன். நீங்க தான் ஒரே பிடியா வேண்டாம் என்று பிடிவாதம் பிடிச்சீங்க…”

“இப்பவும் அதே தான் சொல்றேன் மாப்பிள்ளை. போலீஸை உள்ளே விட்டால் இன்னும் விஷயம் பரவும். என் பொண்ணு பேரு தேவையில்லாம எல்லோர் வாயிலும் அவலாகும். அப்படி ஆவதில் எனக்கு விருப்பமில்லை. இப்பவே அவள் பெயருக்கு இருக்கும் களங்கத்தைத் துடைக்க வழி கிடைக்காதா என்று தான் உங்ககிட்ட வந்துருக்கேன்…”

“சொல்லுங்க மாமா, நான் என்ன செய்யணும்? என் இதயாவுக்காக நான் எதுவும் செய்வேன்…”

“என்னோட ஒரு பொண்ணு பற்றிய பேச்சை நிறுத்த வைக்க, இன்னொரு பொண்ணோட கல்யாண காரியத்தைக் கையில் எடுக்கலாம் என்று இருக்கேன்…” என்றதும், அன்னையும், மகனும் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

“என்ன அண்ணா சொல்றீங்க?” மேகலா கேட்க,

“புவன் மாப்பிள்ளைக்கும், உதயாவுக்கும் நாம பேசி வைத்தபடி நிச்சயத்தை நடத்தலாமென்று நினைக்கிறேன்மா…” என்றார்.

“அது எப்படி அண்ணா முடியும்? இப்பத்தான் வீட்டில் ஒரு துக்கம் நடந்துருக்கு. அதுக்குள்ள எப்படி? அதோட பெரியவன் தனியா இருக்கும் போது, சின்னவனுக்கு எப்படிக் கல்யாணம் பேச முடியும்?” ஆட்சேபித்தார் மேகலா.

“அது தான் பெரிய மாப்பிள்ளைகிட்ட அபிப்ராயம் கேட்டு வந்துருக்கேன் மேகலா. அண்ணனுக்குக் கல்யாணம் முடிக்காமல் தம்பிக்கு முடிப்போம்னு நானும் சொல்லலை. சின்ன மாப்பிள்ளைக்கும், உதயாவுக்கும் இப்ப நிச்சயம் மட்டுமாவது வைப்போம். அப்புறம் பெரிய மாப்பிள்ளைக்குக் கல்யாணம் முடிந்த பிறகு இவங்க கல்யாணத்தை வச்சுக்கலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க மாப்பிள்ளை?” என்று கேட்டார்.

“புவனுக்கும், உதயாவுக்கும் நிச்சயம் மட்டுமில்ல. கல்யாணமே வைத்தால் கூட எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை மாமா. நீங்க ஏற்பாடு செய்ங்க…” என்றான் ரவீந்திரன்.

“ரவி, நீ என்ன சொல்ற? உனக்குக் கல்யாணம் முடிக்காம உன் தம்பிக்கு எப்படி முடிக்க முடியும்?” மேகலா கோபமாகக் கேட்டார்.

“அம்மா, இதயா போனதோட என் வாழ்க்கையில் கல்யாணமும் போயிருச்சு…” என்று அவன் அமைதியாகச் சொல்ல,

“டேய், என்னடா பேசுற நீ? காலமெல்லாம் நீ தனியா இருக்கணும்னா உன்னைப் பெத்து வளர்த்து ஆளாக்கி விட்டுருக்கேன்? இதயா போனது வருத்தம் தான். அதுக்காக இல்லாமல் போனவளையே நினைச்சுட்டு நீ தனி மரமா நிற்பியா?” ஆதங்கமாகக் கேட்டார்.

“ஆமா மாப்பிள்ளை. போனவளை நினைத்து, உங்க வாழ்க்கை ஏன் பட்டுப் போகணும்? உங்க மனசு ஆறியதும், ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அதுதான் எங்களுக்கும் நிம்மதி தரும்…” என்றார் தனசேகர்.

“இல்லை மாமா அது சரி வராது. இதயா தவிர என்னால் வேற யாரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்க புவன், உதயா கல்யாண வேலையை மட்டும் பாருங்க…” ரவீந்திரன் உறுதியாகச் சொல்ல, மேகலா அழ ஆரம்பித்தார்.

“என்ன அண்ணா, நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்காம சுதந்திரமா இருக்கலாம் என்று பார்த்தியா?” என்று கோபமாகக் கேட்ட படி வந்தான் புவனேந்திரன்.

“இல்லை புவன்…” ரவீந்திரன் ஏதோ சொல்ல முயல,

“நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்…” என்று அவனை நிறுத்திய புவன், “மாமா, அண்ணன் கல்யாணம் முடியாம நான் என் கல்யாணத்தை நினைத்துக் கூடப் பார்க்க மாட்டேன். அதனால் நீங்க எந்த ஏற்பாடும் செய்யாதீங்க…” என்றான்.

“நிச்சயம் மட்டுமாவது செய்வோம் மாப்பிள்ளை…” தனசேகர் சொல்ல,

“இல்லை மாமா, கண்டிப்பா முடியாது. இதயா இறந்த கொஞ்ச நாளிலேயே நாங்க எப்படிச் சந்தோஷமா நிச்சயம் பண்ணிக்குவோம் மாமா? இதுக்கு உதயாவும் கண்டிப்பா ஒப்புக்க மாட்டாள்…”

“அவளும் அப்படித்தான் சொல்லிட்டு இருக்காள். இப்ப நீங்களும்…” என்றார் சோர்ந்து போய்.

“நீ என்னைப் பற்றி யோசிக்காதே புவன். உன் வாழ்க்கையைப் பார்…” என்று ரவீந்திரன் சொல்ல,

“நீ உன் வாழ்க்கையைப் பார்க்கும் போது, நானும் என் வாழ்க்கையைப் பார்க்க ஆரம்பிக்கிறேன்…” கறாராகச் சொன்னான் தம்பிக்காரன்.

“மாமாவோட மனநிலையும் கொஞ்சம் யோசி புவன். இதயா பற்றி உலவும் புரளியை என்ன செய்தாவது நிறுத்த நினைக்கிறார். அவரும் பாவம் தானே?” ரவீந்திரன் எடுத்துச் சொல்ல,

“நீயே சொல்லிட்ட புரளி என்று. அதுக்கு எதுக்கு நாம அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கணும்?” என்று அண்ணனிடம் கேட்டவன், “மாமா, ஊரு இன்னைக்குப் பேசும் நாளைக்கு வேற ஒரு புது விஷயம் கிடைத்தால் அது பற்றிப் பேசும். ஊரு பேச்சுக்கு எல்லாம் நாம ரியாக்ட் பண்ண கூடாது மாமா. நீங்க எதைப் பற்றியும் நினைக்காம அமைதியா இருங்க…” என்று மாமனை சமாதானம் செய்தான்.

“ஆமா அண்ணா, இப்ப எதுவும் நாம செய்ய வேண்டாம். கொஞ்ச நாள் போனால் ஊரு பேச்சு எல்லாம் தானா நின்னுடும். நீங்க கவலைப்படாமல் இருங்க…” என்றார் மேகலா.

ஆளுக்கு ஆள் அவரைச் சமாதானம் செய்ய, அரைமனதாகத் தலையை அசைத்து சென்றார் தனசேகர்.

இங்கே நடந்த பேச்சு வார்த்தையை எல்லாம் அனன்யா மேலே இருந்து கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்.

ரவீந்திரன் உருக்கமாகப் பேசியது, இதயாவை நினைத்துக் கல்யாணம் வேண்டாம் என்றது எல்லாம் மனதில் நெருடியது.

இந்த ரவீந்திரன் நடவடிக்கை என்ன மாறி மாறி இருக்கிறது? என்று குழம்பிக் கொண்டாள் அவள்.

இங்கே ரவீந்திரனை நினைத்து அனன்யா குழம்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில், நவநீதனை தேடிச் சென்றிருந்தான் கவியுகன்.

அவன் வீடு பூட்டியிருக்க, மலை கோவில் பக்கம் சென்றான்.

வழக்கம் போல் சூதாட அங்கே சென்றிருக்கலாம் என்று அந்தப் பகுதியில் சென்று பார்த்தான்.

மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டினுள் ஒரு மரத்தின் கீழ் நான்கைந்து பேர் அமர்ந்திருக்க, மறைந்து நின்று நவநீதன் இருக்கிறானா என்று பார்த்தான்.

ஆனால் அவன் அங்கே இருக்கவில்லை.

நவநீதன் இல்லையென்றதும் யோசனையுடன் நெற்றியைச் சுருக்கியவன், தன் கால்சட்டையில் வைத்திருந்த ஒரு ஒற்று தாடியை எடுத்துத் தாடையில் பொருத்திக் கொண்டான்.

தலையில் ஒரு தொப்பியை மாட்டி கண்கள் வரை இழுத்து விட்டுக் கொண்டு, அங்கே சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அருகில் போனான்.

அவன் வருகையைக் கூட உணராமல் மும்முரமாகச் சூதாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் பின்னால் சென்று நின்றவன், லேசாகத் தொண்டையைச் செருமினான்.

இருவர் தலையை உயர்த்திப் பார்த்தனர். அதில் ஒருவன், “யார் நீ?” என்றான்.

“நான் நவநீ ஃபிரண்டு. திருச்சியிலிருந்து வர்றேன். நவநீ, இன்னைக்கு விளையாட வரலையா?” குரலை சற்றுக் கட்டை குரலாக மாற்றிக் கேட்டான்.

“அவன் இரண்டு நாளா இந்தப் பக்கமே வரலை. அவன் வீட்டில் அப்பன் இருப்பான். அங்கே போய்க் கேளு…” என்றவன் விளையாட்டில் கவனமானான்.

“வீடு பூட்டியிருக்கு. நவநீ எங்க போயிருப்பான்னு தெரியுமா?”

“இங்கே வரலைனா, எங்கேயாவது குடிச்சிட்டு விழுந்து கிடப்பான். எங்கே போய்த் தொலைந்தானோ தெரியலை. போன ஆட்டத்தில் அவன் எனக்கு ஐநூறு வேற தரணும்…” என்று அவன் பேசிக் கொண்டே போக, இங்கே ஒன்றும் தேறாது என்று நினைத்த கவியுகன் மெல்ல அவர்களை விட்டு விலகி வந்தான்.

இன்று நவநீதனை மடக்கி பிடித்து உண்மையைக் கக்க வைத்து விட்டால் ஊருக்கு கிளம்பி விடலாம் என்று நினைத்தான்.

ஆனால் இப்போது நவநீதன் எங்கே என்று தெரியாமல், அடுத்து என்ன செய்வது என்ற யோசனையுடன் வீட்டிற்குச் சென்றான்.

அன்று இரவு உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் கவியுகன்.

இதயாவின் கேஸ் அவனை அதிகம் சோதித்தது.

அவன் சந்தேக லிஸ்டில் இருந்த உதயாவின் மீது இப்போது எந்தத் தவறும் இல்லை என்று புரிந்துவிட்டது.

அடுத்ததாக மதியரசன், ரவீந்திரன் மீது அவனுக்கு இருந்தது பொறாமை தான் என்று தெளிவாகப் புரிந்தது.

அதோடு ரவீந்திரன் உருவத்தில் இதயா வீட்டிலிருந்து வெளியேறியது அவனாக இருக்கும் பட்சத்தில் ரவியின் மீது சந்தேகம் திரும்பினாலும், நவநீதன் வீட்டிலிருந்து எடுத்த இதயாவின் துணி அவன் பக்கம் பார்வையைத் திருப்பியது.

நவநீதனை மடக்கினால் குற்றவாளி யார் என்று தெளிவாகத் தெரிந்து விடும் என்று நினைக்க அவன் கைக்குச் சிக்கவில்லை.

அடுத்து ரவீந்திரனை கொஞ்சம் துருவி பார்க்கலாமா? என்ற யோசனையுடன் படுக்கையிலிருந்து எழுந்தவன், தன் ஐபேடை எடுத்துக் கேஸ் சம்பந்தமாகத் தான் எழுதி வைத்திருந்த குறிப்புக்களை எல்லாம் ஒரு முறை திரும்பப் படித்துப் பார்த்தான்.

ஒரு தெளிவுக்கு வர முடியாமல் குழப்பம் அவனைச் சூழ்ந்து கொண்டது.

நெற்றியை அழுத்தமாகத் தேய்த்து விட்டவன், தான் பார்த்துக் கொண்டிருந்த குறிப்பு இருந்த நோட்பேடை குளோஸ் செய்து லாக் போட்டு வைத்தான். கூடவே யார் கைக்கும் அவனின் ஐபேட் சிக்கினாலும், அந்த முக்கியமான பைலை பார்க்க முடியாதவாறு ஹைட் (Hide) செய்து வைத்தான்.

அதைச் செய்து கொண்டிருக்கும் போதே சட்டென்று மூளையில் அந்த எண்ணம் பளிச்சென்று பல் இளிக்க, ‘இதை எப்படி மறந்து போனேன்?’ என்று தலையில் தட்டிக் கொண்டவன், பரபரப்பாக எழுந்தான்.

அவன் கதவை திறக்க இருந்த நேரத்தில் மாடியில் தடதடவென்று சத்தம் கேட்க, வேகமாகக் கதவை திறந்து வெளியே ஓடினான்.

ரவீந்திரனின் அறையைத் தாண்டி ஓடும் போது தன்னிச்சையாக அவனின் பார்வை அவன் அறை பக்கம் போக, கதவு பாதித் திறந்து ஆடிக் கொண்டிருக்க, அந்த இடைவெளியில் கட்டிலுக்குக் கீழே சுருண்டு கிடந்த ரவீந்திரனை பார்த்து திடுக்கிட்டவன், பார்வையைக் கூர்மையாக்க… ரவீந்திரனின் வயிற்றில் இருந்து ரத்தம் வழிந்து “ஐயோ! அம்மா…” என்ற அவனின் அலறலும் கேட்டுக் கொண்டிருந்தது.

“ரவி…” என்று அவன் கத்திய நொடி அனன்யாவும், புவனேந்திரனும் தங்கள் அறையில் இருந்து ஓடி வந்தனர்.

“என்ன… என்னாச்சு?” என்று பதறி புவனேந்திரன் கேட்க, “யுகா?” என்ற படி வந்தாள் அனன்யா.

“அனன்யா, ரவிக்கு என்னானது என்று பார்!” என்று கத்தியபடி நேரத்தை கடத்தாமல் மொட்டை மாடியை நோக்கி ஓடினான் கவியுகன்.