யுகன்யா – 16

அத்தியாயம் – 16

புவனேந்திரன் அப்படிச் செல்வான் என்று அனன்யாவும் எதிர்பார்க்கவில்லை.

“புவன்…” என்று அவனை அழைத்து நிறுத்தினாள் அனன்யா.

“சொல்லுங்க அனன்யா…” புவனேந்திரன் கேட்க,

“உதயா உங்ககிட்ட பேச விரும்புறாள். இருந்து பேசிட்டு வாங்க…” என்றாள்.

“அவள் பேச வேண்டியதை எல்லாம் ஏற்கெனவே பேசிவிட்டாள் அனன்யா. இன்னும் என்ன பேசுவதற்கு இருக்கு?” வேண்டா வெறுப்பாகக் கேட்டான்.

“ஏதோ பேசுவதற்கு இருக்கு என்பதால் தானே பேசணும் என்று சொல்கிறாள்? அதைக் கொஞ்சம் பொறுமையாக இருந்து என்னவென்று கேளுங்களேன்…” கலங்கி போன உதயாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“உங்களுக்கு என் மனநிலையும், வலியும் புரியலை அனன்யா. அதான், உங்க ஃபிரண்டுக்கு ஆதரவா பேசுறீங்க…” என்று புவனேந்திரன் சொல்ல,

“உங்களுக்கு என்ன வலி என்று சொல்லுங்களேன் புவன். நீங்க சொன்னால் தானே எனக்குத் தெரியும்?” என்று நயந்து கேட்டாள் அனன்யா.

“சொல்லி எதுவும் ஆகப் போவது இல்லைங்க…”

“நீங்க சொல்லாமலே இப்படிச் சொன்னால் எப்படிப் புவன்?” என்று கேட்டவளுக்கு அமைதியே பதிலாகத் தந்தான்.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா புவன்? நீங்க உங்க பக்க நியாயத்தைச் சொல்லாமலே, நான் உங்களுக்கு ஆதரவாகத் தான் உதயாகிட்ட பேசினேன். நீங்க சொல்லவில்லை என்றாலும் உங்க பக்க நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது புவன்.

அதே போல் தான் உதயாவின் பக்கத்தையும் நான் புரிந்து கொண்டேன். உங்க அம்மா, எப்படி இதயா இறந்த துக்கத்தில் ராசியினால் தான் இப்படி ஆனது என்று சொன்னாங்களோ, அதே துக்கத்தில் தான் உதயாவும் உங்களுக்குள் கல்யாணம் சரி வராது என்று சொல்லியிருக்காள்.

இதயா இறந்த போது நீங்க எல்லாருமே ரொம்ப மன அழுத்தத்தில் இருந்திருப்பீங்க. அந்த நேரத்தில் வார்த்தைகள் முன்ன பின்ன வந்திருக்கும். அதுக்காக இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக வெட்டிக் கொண்டு போவது நல்லாவா இருக்கு?

உங்க கோபத்தை விட்டுட்டு நிதானமாக யோசிங்க புவன். உதயாகிட்ட மனம் திறந்து பேசிப் பாருங்க. உங்ககிட்ட பேசணும் என்று எவ்வளவு ஆசையாக உதயா வந்தாள் தெரியுமா? இப்ப நீங்களே அவளை அழ வச்சுட்டீங்க பாருங்க…” என்றதும் உதயாவின் முகம் பார்த்தான் புவனேந்திரன்.

கலங்கிய கண்ணீர் இப்போது அவளின் கன்னங்களை ஸ்பரிசித்துக் கொண்டிருந்தது.

சில நொடிகள் அவளின் முகத்தை வெறித்தவனின் கண்கள் பின், அப்படியே கனிந்து போனது.

உதயாவும் மன்னிப்பு வேண்டலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, மற்ற இரு பெண்களின் முன் அவளை நெருங்க யோசித்துப் புவனேந்திரன் தயக்கத்துடன் நின்றான்.

அவன் மனநிலையைப் புரிந்தவள் போல், அதற்கு மேல் தாங்கள் அங்கே அதிகபடி என்று உணர்ந்த அனன்யா, ராதாவை அழைத்துக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அவர்களின் முதுகிற்குப் பின்னால், உதயாவின் “ஸாரி அத்தான்…” என்ற குரல் கேட்டது.

“சூப்பர்ங்க அனன்யா. எவ்வளவு அழகா பேசி அவங்களைச் சேர்த்து வச்சுட்டீங்க. ரொம்பத் தேங்க்ஸ்ங்க. இதயா இறந்த துக்கம் ஒரு புறம் என்றால், புவன் அண்ணா உதயாகிட்ட பேசாமல் இருந்தது வேறு அவளுக்கு ரொம்ப வேதனையைத் தந்தது. என்கிட்ட அவசரப்பட்டுப் பேசிட்டேன். அத்தான் என் மேல் ரொம்பக் கோவமா இருக்காங்க என்று புலம்பி அழுதுருக்காள்.

நானும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆறுதல் மட்டும் சொல்லுவேன். இவங்க எப்ப சரியாகப் போகிறார்களோ என்று கவலைப்பட்டேன். ஆனால் இன்னைக்கு உங்களால் அது நடந்துருச்சு. என் கவலையும் என்னை விட்டு போயிருச்சு…” என்றாள் ராதா.

“பொறுமை! பொறுமை ராதா! அவங்க இரண்டு பேரும் ராசியாகிட்டாங்களா என்று இன்னும் உறுதியா தெரியலை. உள்ளே அவங்க சண்டை போடுறாங்களா, சமாதானம் ஆகுறாங்களா என்று தெரியலை. அதுக்குள்ள பாராட்டுப் பத்திரம் கொடுத்தால் எப்படி?” அனன்யா அவளின் பேச்சை நிறுத்த,

“நீங்க அண்ணா கண்ணைப் பார்க்கலையா அனன்யா? அதில் அவ்வளவு காதல்! அவள் மேல் அவருக்கு எவ்வளவு காதல் இருந்திருந்தால் உதயா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னதில் அவருக்கு அவ்வளவு கோபம் வந்திருக்கும்?” என்று ராதா சொல்ல, ஆமோதிப்பாகத் தலையை அசைத்தாள் அனன்யா.

“நானும் முதலில் இவங்க இரண்டு பேரையும் மீட் பண்ணும் போது என்ன இப்படி விறைச்சுக்கிட்டு இருக்காங்க என்று நினைச்சேன். அப்புறம் அவங்க இரண்டு பேரையும் பற்றித் தெரிந்து கொண்டதும் எனக்கே மனசுக்குக் கஷ்டமா போயிருச்சு. அப்ப இருந்தே இவங்க சண்டை எல்லாம் விட்டு சேர்ந்தால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. அது தான் இப்ப சந்தர்ப்பம் வாய்த்ததும் அவங்க இரண்டு பேர்கிட்டயும் பேசினேன்…” என்றாள் அனன்யா.

இருவருமாகப் பேசிக்கொண்டே மில்லை சுற்றிக் கொண்டிருந்த போது மலர்ந்த முகத்துடன் உதயாவும், உதட்டில் நிலைத்துப் போன புன்சிரிப்புடன் புவனேந்திரனும் அங்கே வந்தார்கள்.

“ஹப்பா! இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்கு…” என்று ஆர்ப்பரித்தாள் அனன்யா.

“எதுக்கு? நாங்க இரண்டு பேரும் பழம் விட்டுக்கிட்டதுக்கா?” சிரித்த படி கேட்டான் புவனேந்திரன்.

“அதே தான்! இல்லனா நான் மூச்சுப் பிடிக்கப் பேசியதற்கு எல்லாம் அர்த்தம் இல்லாமல் இல்ல போகும்?” சலித்துக் கொண்டாள்.

“அப்போ நாங்க சேர்ந்ததுக்குச் சந்தோஷப்படுவதை விட, இனி நீங்க மூச்சுப் பிடிக்கப் பேச தேவையில்லை என்பதற்குத் தான் சந்தோஷப்பட்டுருக்கீங்க என்று சொல்லுங்க…” கேலியாகக் கேட்டான்.

“அப்படியும் சொல்லலாம்…” கண்சிமிட்டி சிரித்தாள் அனன்யா.

“இது எல்லாம் டூ மச்-ங்க…” அவன் ஆள் காட்டி விரலை நீட்டி கேலியாக மிரட்ட,

“எல்லாம் நீங்க டூ விட்டுக்கிட்டதால் வந்தது…” அதற்கும் அவனையே குற்றம் சொன்னாள்.

“அடிக்கடி உங்ககிட்ட பார்த்து பேசணும் என்று ப்ரூப் பண்றீங்க. இந்த விளையாட்டுக்கு நான் வரலை. நீ வா செல்லம், நாம அந்தப் பக்கம் போகலாம்…” என்று உதயாவின் கையைப் பிடித்து வேறுபக்கம் அழைத்துச் செல்ல முயன்றான்.

“ஹலோ, யாரோ எனக்கு மில்லை சுற்றி காட்ட போவதாகச் சொன்னாங்க. அவங்க யாருங்க?” என்று குரல் கொடுத்தாள் அனன்யா.

“அவர் இப்ப லவ்வர் பாயா மாறி தன் தேவதை கூட ரொம்பப் பிஸி. நீங்களே சுற்றிப் பார்த்துக்கோங்க…” என்றான் திரும்பியும் பார்க்காமல் நமட்டு சிரிப்புடன் சொன்னான்.

“இதோடா! இந்த அனன்யாவுக்கே அல்வாவா?” என்றவள், வேகமாக உதயாவின் அருகில் சென்று அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, “நீங்க தனியா போய்ச் சுத்துங்க. உதயா என் கூடத்தான் வருவாள்…” என்று அவளைத் தன் பக்கம் இழுத்தாள்.

“நோ, உதி நீ என் கூடத் தான் வரணும்…” புவனும் அவளை அவன் பக்கம் இழுத்தான்.

இரண்டு பேரும் இரண்டு பக்கமும் பிடித்து இழுக்க, “ஹைய்யோ! என்னை இரண்டாகப் பிச்சுடாதீங்க. விடுங்க!” என்று உதயா கத்தியது எல்லாம் இருவரின் காதிலும் விழவே இல்லை.

அங்கே வேலை செய்தவர்கள் எல்லாம் சிரிக்க, “வா, நாம இவங்க இரண்டு பேருகிட்ட இருந்தும் தப்பித்துப் போயிடுவோம்…” என்று ராதா வேறு உதயாவை தன் பக்கம் இழுத்தாள்.

“நான் என்ன பொம்மையா? ஆளாளுக்கு என்னைப் பிச்சு எடுத்துட்டு இருக்கீங்க?” என்று மூவரையும் ஒரு சேர உதறியவள், “நான் யார் கூடவும் வரலை, விடுங்க!” என்று மூவரையும் விட்டு துள்ளிக் குதித்துத் தனியாகச் சென்று நின்று கொண்டாள்.

அவள் குதித்த வேகத்திற்கு அவளின் கண்ணாடி தெறித்துக் கீழே விழுந்தது.

“அச்சோ! என் கண்ணாடி…” என்று அவள் குனிந்து எடுத்துக் பார்க்க, அது ஒரு பக்கம் கீறல் விட்டிருந்தது.

“என் கண்ணாடி போச்சு…” என்று உதட்டை பிதுக்கி, மூவரையும் முறைத்துப் பார்த்தாள்.

“நான் இல்லைப்பா!” மூவரும் கையைத் தூக்கி சரணாகதி அடைந்தனர்.

“மூனு பேரும் சேர்ந்து என் கண்ணாடியை உடைச்சுட்டு, நான் இல்லைனா சொல்றீங்க?” என்று கடுப்பாகக் கேட்டாள்.

“நான் தான் என் கூடக் கூப்பிட்டேன்ல? நீ என் கூட வராம நின்னதால் தான் இப்படி ஆகிருச்சு…” என்ற புவனேந்திரனை உதயாவும், அனன்யாவும் சேர்ந்தே முறைத்தனர்.

அவர்கள் முறைப்பை எல்லாம் தூசியைத் தட்டிவிடுவது போல் தன் சட்டையைத் தட்டி விட்டுக் கொண்டான்.

“சரி, என்கிட்ட கொடு. என்ன பண்ணலாம் என்று பார்ப்போம்…” என்று அவள் கண்ணாடியை வாங்கிப் பார்த்தான்.

ஒரு பக்க கண்ணாடி நீளமாகக் கீறல் விட்டிருந்தது.

“லென்ஸ் வேற தான் மாற்றணும். நான் ஈவ்னிங் தஞ்சாவூர் போய் மாத்திட்டு வர்றேன்…” என்றான் புவனேந்திரன்.

“அதுவரைக்கு நான் எதைப் போடுவது?” உதயா சிணுங்கலுடன் கேட்க,

“இப்போதைக்கு அப்படியே போடு! வேற வழி இல்லை…” என்று தானே அவள் கண்ணில் கண்ணாடியை மாட்டிவிட்டான்.

“கண்ணாடியாகப் போடாமல், இப்போதெல்லாம் கண்ணிலேயே போடுவது போல் லென்ஸ் வந்துருச்சே… அது போல் போட்டுக்கலாமே உதயா?” அனன்யா கேட்க,

“அதுதான் நானும் முன்னாடியே சொன்னேன். இவள் கேட்க மாட்டேங்கிறாள்…” என்றான் புவனேந்திரன்.

“சின்ன வயசில் இருந்து கண்ணாடி போட்டுப் பழக்கம் ஆகிருச்சு அனன்யா. அதை மாற்றிக்கக் கஷ்டமா இருக்கு. உங்ககிட்ட சொல்லியிருக்கேன் இல்ல அத்தான்? கண்ணாடி போடலைனா ஏதோ மிஸ் பண்ற பீல் எனக்கு இருக்கும். அது எனக்குக் கஷ்டமா இருக்கும் என்று? அப்புறம் நீங்க அதே சொன்னால் எப்படி?” என்றாள்.

“மாற்றம் ஒன்று தான் மாறாதது உதி. கொஞ்ச நாள் கஷ்டமாகத் தான் இருக்கும். அப்புறம் உனக்கு லென்ஸ் பழகிடும். நீ தான் புதுசா எதுவும் பழகிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிற…” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும், உதயாவின் முகம் மாறிப் போனது.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த அனன்யா, “என்ன உதயா? என்னாச்சு?” என்று அவள் அருகில் சென்று கேட்டாள்.

சட்டென்று உடைந்து போனது போல் கண்ணீர் விட்ட உதயா, அனன்யாவின் தோளில் சாய்ந்து, “இதயா கடைசியா என்கிட்ட கேட்டது இதுதான். அவளும் என்னை லென்ஸ் வச்சுக்கோன்னு சொன்னாள். எனக்குப் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு என்னைச் சோடாபுட்டி கண்ணாடி என்று சொல்லி கேலி செய்து சீண்டிவிட்டாள். அப்படியாவது நான் லென்ஸ்க்கு மாறுவேன் என்ற எண்ணம் அவளுக்கு.

ஆனால், அவள் கேலி பிடிக்காமல் நான் அவள் கூடச் சண்டை போட்டேன். அதுக்கு அவள் உன்னைக் கொஞ்சம் இந்தக் காலத்துக்கு ஏற்ற மாதிரி மாத்திக்கோன்னு தான் சொல்றேன். அப்போதுதான் மத்தவங்க கண்ணுக்கு நல்லா தெரிவன்னு சொன்னாள். ஆனால் என்னால் தான் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நான் எப்படி இருப்பேனோ அப்படித்தான் இருப்பேன்னு சொன்னேன். அதுக்கு அவள் என்னைத் திட்டினாள். மத்தவங்களை விடு! உன்னால் என்னை இப்படிப் பார்க்க பிடிக்கலையா? அதான் இப்படிச் சொல்றியான்னு சண்டை போட்டேன். அதில் அவள் முகமே மாறிடுச்சு.

என்னை நீ புரிந்து கொண்டது இவ்வளவு தானான்னு உடைந்து போய்க் கேட்டாள். ஆனால் நான் அதைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை. அவள் எப்போதும், என்னோட நிறத்தையும், கண்ணாடியையும் சொல்லி கேலி செய்வாள். அது போல் தான் இப்பவும் சொல்றாள் என்று நினைத்து, நீ அழகா இருக்கன்னு உனக்குத் திமிரு. அது தான் என்னை இப்படி எல்லாம் கேலி செய்ற… அப்படி, இப்படின்னு நிறைய அவளைத் திட்டிவிட்டுட்டேன்.

அந்த நிமிஷத்தில் இருந்து இறுகி போனது போல மாறி போன இதயா, என்கிட்ட பேசவே இல்லை. நானும் கோபத்தில் அவள்கிட்ட பேச நினைக்கலை. ஆனால், எனக்கு அப்பத் தெரியலை. அவள் கூட இனி என்னைக்குமே பேச முடியாமல் போகும்னு. தெரிந்திருந்தால் அவள் கூட நான் சண்டையே போட்டுருக்க மாட்டேன்…

“ஒருவேளை… ஒரு வேளை நான் அப்படி அவள்கிட்ட பேசியது தான் காரணமோ? அதில் உடைந்து போய்த் தான் அந்த முடிவை எடுத்துட்டாளோ? அப்போ… அப்போ… நான் தான் அவளைக் கொன்னுட்டேன்…” என்று உடைந்து போய்ச் சொல்லிக் கொண்டே வந்தவள், ஒரு கட்டத்தில் கேவி, கேவி ஆழ ஆரம்பித்தாள்.

“அப்படி எல்லாம் எதுவும் இல்லை உதயா. நீங்க சண்டை போட்டுக் கொள்வது என்ன புதுசா? அப்படியே சண்டை போட்டாலும் நீங்க இரண்டு பேரும் கொஞ்ச நேரத்திலேயே ராசி ஆகிடுவீங்க தானே?” என்றாள் ராதா.

“அழாதே உதயா…” என்று மட்டும் சொல்லிக் கொண்டிருந்தாள் அனன்யா.

“உதிமா, போதும் அழுகை!” என்று அதட்டிக் கொண்டிருந்தான் புவனேந்திரன்.

புவனேந்திரன், அனன்யா, ராதா மூவருமே மாறி மாறி சொல்லிய சமாதான வார்த்தைகள் எல்லாம் அவளுக்குள் ஏறவே இல்லை.

வேலை பார்ப்பவர்கள் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, புவனேந்திரன் கண் ஜாடை காட்டவும், புரிந்து கொண்டு, அனன்யாவும், ராதாவும் அவளை அலுவலக அறைக்குள் அழைத்துச் சென்றனர்.

அறைக்குள் வந்த பிறகும் உதயா விடாமல் அழ, “உதி, இப்ப நான் சொல்வதை நல்லா கேள்! அது உன் தப்பு இல்லைமா. நீ வழக்கம் போல இதயா கூடச் சண்டை போட்டுருக்க. ஆனால் அவங்க வேற எதனாலோ பாதிக்கப்பட்டுத் தப்பான முடிவை எடுத்துட்டாங்க. அழாதே!” என்று அவளைத் தேற்ற முயன்றான் புவனேந்திரன்.

“இல்லை அத்தான். அவளுக்கு வேற எந்தப் பாதிப்பும் எனக்குத் தெரிந்தவரை இல்லை. நான் சண்டை போட்டது தான் அவளை அந்த முடிவு எடுக்க வச்சுருக்கு. அன்னைக்கு எனக்குள் என்ன பேய் பிடித்து ஆட்டியதோ… அவளை நான் ரொம்பத் திட்டிட்டேன் அத்தான். அழகுன்னு திமிர். உன் கண்ணு நல்லா இருக்குன்னு என் கண்ணைப் பார்த்து இளக்காரம்…

ஆரம்பத்தில் இருந்தே நீ என் நிறத்தை பார்த்து கேலி செய்வ தானே? அதான் நான் உனக்கு மட்டமா தெரியுறேன். நீ அழகினா அது உன்னோட. என்னைக் கேலி செய்ய உனக்கு எந்த ரைட்ஸும் இல்லை. இப்படி ஏதேதோ வாய்க்கு வந்த படி எல்லாம் திட்டிட்டேன். நான் திட்டியது அவளை எந்த அளவு பாதித்ததோ?

அதுதான் மனசொடிந்து போய் அந்த முடிவு எடுத்துட்டாள். நான் தான்… நான் தான் அவளைக் கொன்னுட்டேன். எனக்கு இந்த ஜென்மத்தில் மன்னிப்பே கிடையாது. மன்னிப்பே கிடையாது!” என்று சொல்லி சொல்லி அழ ஆரம்பித்தாள்.

உதயா ஏன் தன்னையே குற்றம் சொல்லிக் கொண்டாள் என்று அனன்யாவிற்கு அப்போது தான் புரிந்தது.

தான் திட்டியதால் தான் இதயா தற்கொலை செய்து கொண்டதாக அவள் நினைக்கிறாள். அதுதான் இப்படித் தானே இதயாவை கொன்றதாகச் சொல்கிறாள்.

இதற்குப் போய்த் தான் இவள் மீது சந்தேகம் கொண்டோமே? என்றிருந்தது அனன்யாவிற்கு.

உண்மையில் இதயா தற்கொலை செய்து கொள்ளவில்லையே? யாரோ தானே கொன்று கிணற்றில் தூக்கிப் போட்டிருக்கிறார்கள். இது தெரியாமல் பாவம் இவள் வேறு குற்றவுணர்வில் தவிக்கிறாளே? என்று உதயாவின் மீது இரக்கம் கொண்டாள்.

“என்ன உதயா இது? இதயா இறப்புக்கு நீ காரணம் இல்லை. நீ சண்டை போட்டதுகாக எல்லாம் சாகும் முடிவு எடுக்குற அளவுக்கு அவள் கோழை இல்லை…” என்று ராதா அவளைச் சமாதானம் செய்ய முயல,

“இல்லை ராதா, அன்னைக்கு நான் ரொம்பப் பேசிட்டேன். அதான் அவள் அப்படி…” என்றவள் கேவினாள்.

“முட்டாள்தனமா பேசாதே உதி. இதயா அந்த முடிவுக்கு வந்திருக்கணும் என்றால் வேற ஏதாவது வலுவான காரணம் இருந்திருக்கும். அக்கா, தங்கை சண்டைக்கு எல்லாம் அவங்க சாக நினைத்திருக்க மாட்டாங்க. அதுவும் ஒரு வாரத்தில் கல்யாணத்தை வச்சுக்கிட்டு, உன் கூடச் சண்டை போட்டதை எல்லாம் பெருசா எடுத்திருப்பாங்களா?” என்று புவனேந்திரன் கேட்க,

“அப்போ வேற காரணம் என்னவா இருக்கும் அத்தான்? அப்படி எதுவும் காரணம் இருப்பதாக எனக்குத் தெரியலையே?” என்றவள் அழுகை மட்டும் இன்னும் நிற்பதாக இல்லை.

“அவங்க மனதில் என்ன காரணம் இருந்தது என்று தெரியாமல் தானே நாம எல்லாரும் குழம்பிப் போய் இருக்கோம்…” என்று வருத்தப்பட்டான் புவனேந்திரன்.

“பாருங்க அத்தான். உங்களால் ஒரு காரணம் கூடச் சொல்ல முடியலை. வேற காரணம் இருந்தால் தானே சொல்றதுக்கு? ஏன்னா காரணம் நான் தான். என் பேச்சு தான் காரணம் அத்தான். நீங்க எல்லாம் என்னைச் சும்மா சமாதானம் செய்யச் சொல்றீங்க.

என்னால் தான் அவள் தற்கொலை பண்ணிக்கிட்டாள் என்ற காரணத்தை என்னால் தாங்கவே முடியலை அத்தான். நைட் படுத்தால் என்னால் தூங்க கூட முடியலை. சில நேரம் நானும் அவளை மாதிரியே செத்துப் போய்டலாம்னு கூட நினைத்திருக்கேன்…” என்று உதயா சொல்ல,

“ஏய்! என்னடி பேசுற?” என்று புவனேந்திரன் அதட்ட,

“அறிவு இல்லாமல் பேசாதே உதயா. இதயா இறப்புக்குக் காரணம் கண்டிப்பா நீ இல்லை. ஏன்னா…”

“இங்கே என்ன நடக்குது?” அனன்யா உணர்ச்சிவசப்பட்டு உண்மையைச் சொல்ல முயன்ற அதே நொடி கேட்ட குரலில், கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் அனன்யா.

அவளை மற்றவர்கள் அறியாமல் கண்டன பார்வை பார்த்தபடி அங்கே வந்தான் கவியுகன்.