யுகன்யா – 14

அத்தியாயம் – 14

“உடனே இங்கிருந்து சென்று விடு!” என்று சொல்லிக் கொண்டு வந்த ரவீந்திரனைப் பார்த்து கவியுகன் சிறிதும் ஆச்சரியம் காட்டினான் இல்லை.

ரவீந்திரன் நடவடிக்கையில் மாற்றம் வந்ததை உணர்ந்ததுமே இப்படிச் சொல்வான் என்று அவன் எதிர்பார்க்கவே செய்தான்.

“என்ன சொல்றீங்க மிஸ்டர் ரவி?” அவனின் பின்னாலேயே அறைக்குள் நுழைந்த அனன்யா தான், அவன் சொன்னதை எதிர்பாராமல் படபடத்துப் போனாள்.

“உண்மையைத்தான் சொல்றேன் அனன்யா. நீங்களும், கவினும் உடனே இங்கிருந்து கிளம்புங்க…” என்றான்.

“என்ன விளையாடுறீங்களா? நீங்க எங்களுக்குக் கொடுத்த வேலை இன்னும் முடியலை. அதுக்குள்ள போகச் சொன்னால் எப்படி?”

“நான் உங்களுக்குக் கொடுத்த வேலையை மறந்திடுங்க…” என்று படபடத்தவனைப் பார்த்து அனன்யாவிற்கு டென்சன் ஏறியது.

“என்ன ரவி சார், நீங்களே தான் வந்து இதயா கேஸை எடுத்து விசாரிக்கச் சொன்னீங்க. இப்ப நாங்க இரண்டு பேரும் கேஸில் தீவிரமா இருக்கும் போது பாதியில் நிறுத்தச் சொன்னால் எப்படி?” முகம் சிவக்க கேட்டாள்.

“நானே தான் வர சொன்னேன். இப்ப நானே தான் போகவும் சொல்றேன். ப்ளீஸ் கிளம்புங்க என்று சொன்னால் கிளம்புங்களேன்…” ரவீந்திரனிடம் இப்போது சலிப்பு எட்டிப் பார்த்தது.

“அதெப்படி…” என்று அனன்யா இன்னும் ஏதோ சொல்ல வர,

“அனன்யா!” என்று கண்டிப்புடன் அழைத்தான் கவியுகன்.

வாதாடிக் கொண்டிருந்த வாயிற்குக் கப்பென்று வாய் பூட்டு போட்டாள் அனன்யா.

ஆனாலும் முடியாமல், ‘நீங்களும் கேட்க மாட்டீங்க. நானும் கேட்கக் கூடாது என்றால் எப்படி?’ என்று முணுமுணுத்தாள்.

அவளை முறைத்து அடக்கியவன், “சொல்லு ரவி, திடீரென ஏன் இந்த முடிவு?” என்று ரவீந்திரனிடம் நிதானமாகக் கேட்டான்.

“காரணம் எல்லாம் என்கிட்ட கேட்காதே கவின்…” அவன் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு முனங்கினான்.

“காரணம் கேட்க வேண்டாமா? சரிதான்!” என்றவன், “அனன்யா, நீ போய் உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து வை! கிளம்பலாம்…” என்றான் கவியுகன்.

“என்ன யுகா இது? நீங்களும் இப்படிப் பண்றீங்க? அதெப்படி பாதியில் விட்டுட்டு போக முடியும்? உங்க ஃபிரண்டுக்கு எடுத்து சொல்லுங்க…” என்றாள்.

“இனி எடுத்து சொல்ல என்ன இருக்கு அனன்யா? உண்மை வெளியே வரக் கூடாது என்று மறைப்பவனிடம் பேசி பிரயோஜனம் இல்லை அனன்யா…” என்றான்.

“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க. ஆனால் என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…” மறுப்பாகத் தலையை அசைத்தாள்.

“எனக்கும் கூடத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் என் வேலையை எல்லாம் விட்டுட்டு இங்கே வந்தேன். என் நண்பனாச்சே என்று கிளம்பி வந்தேன். நண்பன் கண்ணீர் விட்டு கதறிய போது, அவன் கண்ணீருக்குக் காரணமானவங்களைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று வந்தேன். ஆனால் நான் நண்பனா நினைத்தவன், என்னை நண்பனா நினைக்கலை…” என்று ரவீந்திரனை தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டே கவியுகன் சொல்ல,

வேதனையில் முகம் கசங்க அவனைப் பார்த்தான் ரவீந்திரன்.

“கவின்…” அவனைச் சமாதானம் செய்ய முனைய,

“எனக்கு உன்னோட இந்தச் சமாதானம் எல்லாம் தேவையில்லை ரவி. எனக்குத் தெரிய வேண்டியது எல்லாம் ஒன்னே ஒன்னுதான். அதுக்கு மட்டும் பதில் சொல்லு. நான் போயிடுறேன்…” என்றான்.

‘என்ன?’ என்பது போல் ரவீந்திரன் பார்க்க,

“ஏன் இந்த அவசர முடிவு?” என்று அழுத்தமாகக் கேட்டான்.

“அது…” என்று அவன் தடுமாற,

“காரணம் சொல்ல முடியாது என்று சொல்லிவிடாதே! எனக்குக் காரணம் தெரிந்தாகணும். உனக்கு எப்படியோ தெரியாது. என்னோட ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு முக்கியம். என் நேரத்தை எல்லாம் வேஸ்ட் செய்துட்டு நான் இங்கே வந்து இருந்ததுகாகவாவது எனக்குக் காரணம் தெரிந்தே ஆகணும்…” என்றான்.

“சாரி கவின். என்னால் தான் உன் டைம் வேஸ்ட் ஆகிவிட்டது. அதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். ஆனால், நான் இப்ப எதுவும் சொல்ல கூடிய நிலையில் இல்லை. என்னை மன்னித்துவிடு…” என்று கையெடுத்து கும்பிட்டான் ரவீந்திரன்.

“உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை ரவி. அதோட நீ போ என்று சொன்னதும் என்னால் போக முடியாது. ஆரம்பித்த வேலையை முடிக்காமல் என்னைக்கும் நான் பாதியில் விட்டது இல்லை. இப்பவும் அதே தான். இந்த வேலையை முடிக்காமல் நான் இந்த ஊரை விட்டு போக மாட்டேன்…” என்றான் உறுதியாக.

“கவின்?” ரவீந்திரன் அதிர்ந்து அழைக்க,

“சூப்பர் யுகா!” என்று துள்ளிக் குதித்தாள் அனன்யா.

“வேண்டாம் கவின், நான் சொல்வதைக் கேள்!” என்று ரவீந்திரன் மன்றாட,

“அதான் கேட்டேனே? என்னை ஏன் கிளம்பச் சொல்ற? என்ன காரணம்?” நீ சொல்லியே ஆக வேண்டும் என்ற அழுத்தம் அவனிடம்!

“கவின்…” ரவீந்திரன் தடுமாற,

“அப்போ என்கிட்ட சொல்ல முடியாது இல்லையா? சரி, அப்போ என் முடிவையும் கேட்டுக் கொள்! நான் இங்கே தான் இருப்பேன். அதுவும் எண்ணி ஐந்து நாள். இந்த ஐந்து நாளில் நான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து விடுவேன். ஏன் அதற்கு முன்பே கூட நான் வந்த வேலை முடியலாம்.

எனக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை முடிச்சிட்டுக் கிளம்பத்தான் ஆசை. குற்றவாளி யார் என்று கண்டு பிடித்து விட்டு தான், இந்த ஊரில் இருந்து நான் போவேன். உன் வீட்டில் நாங்க இருப்பது உனக்குப் பிடிக்கலை என்றால், நாங்க இதே ஊரில் வேற இடத்தில் போய்த் தங்கிக்கிறோம்…” என்றான், இதுதான் என் முடிவு என்பதாக.

அவனை இயலாமையுடன் பார்த்தான் ரவீந்திரன்.

என்னால் இந்த முடிவில் இருந்து மாற முடியாது என்பது போல் அழுத்தமாக நின்றான் கவியுகன்.

“நீங்க இரண்டு பேரும் இங்கேயே இருக்கலாம்…” என்று தளர்வுடன் சொல்லி விட்டு விரைந்து வெளியே சென்றான் ரவீந்திரன்.

“ரவியோட இந்த முடிவுக்குக் காரணம் என்னவாக இருக்கும் யுகா?” அவன் சென்றதும் கேட்டாள் அனன்யா.

“எதிலோ சிக்கியிருக்கான் என்று நினைக்கிறேன். பார்ப்போம்!” என்று தோளை குலுக்கிக் கொண்டான்.

“அப்போ ரவி மேல் நமக்கு இருக்கும் டவுட் யுகா? அவர் தான் ஒருவேளை குற்றவாளியோ? அதனால் தான் நம்மை இங்கிருந்து துரத்த பார்க்கிறாரோ?”

“அனன்யா, இப்படி இருக்குமோ? அப்படி இருக்குமோ? என்று நாம குழப்பிக் கொள்ள நமக்கு நேரமில்லை. ரவி மேலும் எனக்குச் சந்தேகம் இருக்கு தான். ஆனால் அதுக்காக அவன் மேல் நாம குற்றம் சாற்ற நம்மகிட்ட ஒரு ஆதாரமும் இல்லை. ஆதாரம் இல்லாம எதுவுமே உறுதியா சொல்ல முடியாது. நீ இப்ப எந்த ப்ரோகிராமையும் மாற்ற வேண்டாம். நீ இன்னைக்கு எங்கே வெளியே போக முடிவு செய்திருந்தியோ, அங்கே போயிட்டு வா…” என்றான்.

“நீங்க?”

“நான் நைட் நம்ம மீட்டிங்கில் இன்னைக்கு என்ன செய்தேன் என்று சொல்றேன்…” என்று பேச்சை முடித்துக் கொண்டான்.

இருவரும் கீழே சென்ற போது, “நேற்று எல்லாம் நல்லாத் தான் இருந்தாங்க டாக்டர். இன்னைக்குத் தான் படபடப்பா இருக்கு என்று சொல்லி அப்படியே தடுமாறிட்டாங்க…” வரவேற்பறையிலிருந்து புவனேந்திரன் குரல் கேட்டது.

மேகலா சோஃபாவில் தளர்ந்து அமர்ந்திருக்க, அவருக்கு அருகில் புவனேந்திரன் அமர்ந்திருந்தான். மேகலா எதிரே ஒரு இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்து, மேகலாவின் பிரஷரை சோதித்துக் கொண்டிருந்தார் ஒரு மருத்துவர்.

மருத்துவர் இளமையாக இருந்தான். புவனன் வயது இருக்கலாம் என்று கணிக்க முடிந்தது.

“என்ன ஆச்சு ஆன்ட்டி?” மேகலாவின் அருகில் சென்று விசாரித்தாள் அனன்யா.

“கொஞ்சம் தலை சுற்றல் மா…” என்று மேகலா சோர்வுடன் சொல்ல,

“பிரஷர் ஹையில் இருக்கு. அப்புறம் தலை சுற்றல் வராம என்ன செய்யும்?” என்று அந்த மருத்துவன் சொல்ல,

“எதையாவது நினைத்து டென்சன் ஆகிட்டு இருக்காங்க டாக்டர்…” என்றான் புவனேந்திரன்.

“எனக்கு என் பிள்ளைங்களைத் தவிர வேற என்ன டென்சன் இருந்து விடப் போகுது? மூத்தவன் என்னனா அவனைச் சுற்றி என்ன நடக்குது என்றே தெரியாத அளவுக்கு வாழ்ந்துட்டு இருக்கான். இவன் என்னனா, வேலை வேலை என்று ஓடிட்டு இருக்கான். ஒருத்தி போய்ச் சேர்ந்ததில் இப்ப என் வீடே தலைகீழா மாறிப் போயிருச்சு…” என்று புலம்பினார் மேகலா.

“இதயா இப்படிச் செய்வாங்க என்று நாம நினைத்து பார்த்தோமா அம்மா? அவங்க மனதில் என்ன இருந்ததோ? இதயா போன துக்கத்தில் அண்ணா அப்படி இருக்கான். அதுக்காக அவன் இருக்கும் மனநிலையில் நீ வந்து வேலையைப் பாரு என்று நான் அவனையும் இழுத்துட்டு போக முடியுமா என்ன? அதான் அவனுக்கும் சேர்த்து நான் ஓடிட்டு இருக்கேன்…” என்றான் புவனேந்திரன்.

“ம்ப்ச்!” என்று மேகலா சலித்துக் கொள்ள,

“விடுங்க ஆன்ட்டி. இப்படி எல்லாத்துக்கும் டென்சன் ஆகிட்டு இருந்தால் உங்க உடம்புக்கு நல்லது இல்லை. இப்ப பிரஷர் குறைய, நான் ஒரு ஊசி போடுறேன். நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, சரியாகிடும்…” என்ற மருத்துவன், தான் கொண்டு வந்திருந்த மருத்துவப் பெட்டியிலிருந்து ஒரு ஊசி மருந்தை எடுத்து அவருக்குச் செலுத்தினான்.

“நீங்க போய்ப் படுங்க அம்மா…” என்று அன்னையை அவரின் அறைக்கு அனுப்பிய புவனேந்திரன், “ஸாரி கவின் அண்ணா, அனன்யா. நீங்க வந்ததுமே உங்ககிட்ட பேச முடியலை…” என்றான்.

“இட்ஸ் ஓகே புவன். இவர் தான் டாக்டர் ரஞ்சனா?” என்று கேட்டான் கவியுகன்.

“அட! இந்த ஊருக்கு வந்த புது விருந்தாளிக்கு என் பெயர் எல்லாம் தெரிந்திருக்கே?” புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டான் டாக்டர் ரஞ்சன்.

“சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஒரே ஒரு டாக்டர் நீங்க தான். உங்களைத் தெரியாமல் இருக்குமா? ஐயம் கவியுகன்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

அவன் கையைப் பிடித்துக் குலுக்கிய டாக்டர் ரஞ்சன், “எஸ், நீங்க கவியுகன் அன்ட் அவங்க அனன்யா. இந்த ஊரில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசைப்பட்டு வந்துருக்கீங்க. ஐயம் கரெக்ட்?” என்றான்.

“சென்ட்ப்ரசென்ட் கரெக்ட். நான் உங்களைத் தெரிந்து வைத்திருப்பதில் கூட ஆச்சரியம் இல்லை. நீங்க எங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறீங்களே?” வியப்பாய் கேட்டான் கவியுகன்.

“ரவீந்திரன் இந்த ஊரிலேயே பெரிய ஆள். அவரோட ஃபிரண்ட்ஸ் இப்படிச் சென்னையில் இருந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது என்ன சாதாரண விஷயமா? இப்ப எல்லாம் விவசாயத்தை விட்டுட்டு வேற தொழிலுக்குப் போக ஆசைப்படுபவர்கள் தான் நிறையப் பேர். 

அப்படியிருக்கும் போது வெளியூரில் இருந்து இங்கே வந்து விவசாயம் செய்ய நினைப்பது எல்லாம் பெரிய காரியம். என்னை மட்டும் இல்லை. இப்ப உங்களைக் கூட இந்தச் சுத்துப்பட்டு ஊரில் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது…” என்றான்.

“அப்போ நாம கூட இந்த ஊரில் பேமஸ் ஆகியிருக்கோம் யுகா…” என்றாள் அனன்யா.

“அதுவும் நீங்க ஆகாம இருக்க முடியுமா அனன்யா?” என்று கேலியாகக் கேட்டான் புவனேந்திரன்.

“அதென்ன அதுவும்? ஏதோ ‘க்’கன்னா வைக்கிற போல இருக்கு…” என்று சிலிர்த்துக் கொண்டு கேட்டாள் அனன்யா.

“ஹாஹா, ஏன் டாக்டர்… அனன்யாவை பார்த்தால் என்னோட அண்ணா வயது என்று உங்களால் சொல்ல முடியுதா என்ன?” என்று அவளை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே நமட்டு சிரிப்புடன் கேட்டான்.

“இல்லையே… ஏன் அப்படிக் கேட்குற புவன்? மேடம் ரொம்ப யங்கா இருக்காங்க…” என்றான் டாக்டர் ரஞ்சன்.

“எனக்கு என்னவோ அனன்யா பிறந்ததுமே ஸ்கூலில் கொண்டு போய் விட்டுருப்பாங்க என்று தோன்றுகிறது…” என்றான் புவனேந்திரன் கிண்டலாக.

“விட்டால் நான் பிறந்ததே ஸ்கூலில் தான் என்று சொன்னாலும் சொல்லுவீங்க. இதெல்லாம் என்னோட இளமையின் ரகசியம்! அதைப் பற்றிப் பேசக் கூடாது. ஆமா!” என்று அலட்சியமாகத் தோளை குலுக்கி விட்டு கொண்டாள்.

“ஓகே பேசலை, விடுங்க. இன்னைக்கு மில்லுக்கு வர்றீங்களா?” என்று புவனேந்திரன் கேட்க,

“ஓ, எஸ்! நீங்க முன்னாடி போங்க. நான் ஒரு பதினொரு மணி போல வர்றேன்…” என்றாள்.

“ஓகே, அப்போ நான் கிளம்புறேன்…” என்று அனைவரிடமும் பொதுவாக விடைபெற்றான் டாக்டர் ரஞ்சன்.

“நான் டாக்டரை அனுப்பி வைத்து விட்டு வர்றேன்…” என்று உடன் எழுந்து சென்றான் புவனேந்திரன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தவன், “வாங்க அண்ணா, அனன்யா சாப்பிடலாம்…” என்று அழைத்தான்.

“ரவி எங்கே புவன்?” கவியுகன் கேட்க,

“உங்க கிட்ட அண்ணா சொல்லலையா அண்ணா? தஞ்சாவூரில் யாரையோ பார்க்கணும் என்று போயிருக்கான். வர ஈவ்னிங் ஆகலாம்…” என்றான்.

“ஓ, ஓகே புவன்…”

“உங்க ஃபிரண்ட் இல்லாமல் இங்கே உங்களுக்கு எப்படிப் பொழுது போகும் அண்ணா? நீங்களும் மில்லுக்கு வாங்களேன்…”

“எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு புவன். மதியம் போல் வர முடிந்தால் வர்றேன்…” என்றான்.

“கண்டிப்பா வாங்க அண்ணா. அந்தப் பக்கம் ஒரு நிலம் விலைக்கு வருது. நீங்க வந்தீங்கனா அந்த இடத்தைப் போய்ப் பார்க்கலாம்…”

“யாரோட நிலம் புவன்? என்ன ரேட் சொல்லுவாங்க?” என்று பொதுவாகப் பேசிக் கொண்டே காலை உணவை உண்ண ஆரம்பித்தனர்.

காலை பத்து மணி.

அனன்யா இதயா வீட்டிற்குப் போன போது எங்கோ வெளியே கிளம்பிக் கொண்டிருந்த உதயாவின் தந்தை தனசேகர், அவளை எதிரே பார்க்கவும், “வாமா… உதயாவை பார்க்க வந்தியா?” என்று கேட்டார்.

அனன்யா அடிக்கடி இங்கே வருவதால் இருவருமே ஏற்கெனவே அறிமுகம் ஆகியிருந்தனர்.

தன் தங்கை வீட்டிற்கு வந்திருக்கும் பெண் என்பதால், அவள் யார் என்ன என்று ஏற்கெனவே விசாரித்திருந்தார் தனசேகர்.

அனைவரிடமும் சொன்னது போல், நிலம் விஷயம் என்று சொன்னதும், அவள் தன் மகள் இறப்பை பற்றித் துப்பறிய வந்தவள் என்ற எந்தச் சந்தேகமும் அவருக்கு வரவில்லை.

“உதயா உள்ளே தான் இருக்காள் மா. போய்ப் பார்…” என்றவர், அவளைத் தாண்டி முன்னால் இரண்டு அடிகள் எடுத்து வைத்து விட்டு, பின் மீண்டும் அவள் பக்கம் திரும்பி, “ஒரு நிமிஷம் நில்லுமா…” என்றார்.

“என்ன அங்கிள்?” அனன்யா கேட்க,

“ரவியை இன்னைக்கு வீட்டிற்கு வந்து போகச் சொன்னேன். ஆனால் அவன் வரவே இல்லை. அவன் வீட்டில் இருக்கானாமா?” என்று கேட்டார்.

“வீட்டில் இல்லை அங்கிள். ஏதோ வேலையா தஞ்சாவூர் போயிருக்கார் என்று புவன் சொன்னார்…” என்றாள்.

“தஞ்சாவூருக்கா? அங்கே எதுக்குப் போனான்? நான் எவ்வளவு பெரிய முக்கியமான விஷயம் பேசணும் என்று அவன் கிட்ட சொல்லிட்டு இருந்தேன். அதைக் கேட்க வராமல்…” என்று தனக்குள் முனங்கி கொண்டே சென்றார் அவர்.

‘அப்படி என்ன முக்கியமான விஷயமாக இருக்கும்?’ என்று தனக்குள் யோசித்தபடி அவர் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

“என்ன அனன்யா இங்கேயே நிற்கிறீங்க? உள்ளே வாங்க!” அங்கே வந்த உதயா அழைக்க, அவள் புறம் திரும்பியவள், “இதோ வர்றேன்…” என்று அவளுடன் நடந்தவள், “சாப்பிட்டியா உதயா? வெளியே போகலாமா?” என்று கேட்டாள்.

“ஆச்சு அனன்யா. இன்னைக்குப் பக்கத்து வீட்டு ராதாவும் நம்ம கூட வர்றேன்னு சொன்னாள் அனன்யா. இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாள். வந்ததும் அவள் கூடப் போகலாம்…” என்ற உதயாவின் முகத்தில் சோர்வு.

“ம்ம், போகலாம். ஆனா நீ ஏன் உதயா எப்படியோ இருக்க?” என்று கேட்டாள்.

“எப்பவும் போல் தான் இருக்கேன்…” என்று அவள் சுரத்தை இல்லாமல் சொல்ல,

“பார்த்தால் அப்படித் தெரியலையே?” அவளைச் சந்தேகமாகப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“வாமா, அனன்யா… நீ இவளை என்னன்னு கேளு. நீ பேசினாலாவது வழிக்கு வர்றாளா பார்க்கலாம்…” என்றபடி வந்தார் காஞ்சனா.

“என்ன ஆன்ட்டி? என்ன விஷயம் என்று சொல்லுங்க, நான் கேட்குறேன்…” அனன்யா சொல்ல,

“துக்கம் நடந்த வீட்டில் ஒரு நல்லது பண்ணிடலாம் என்று பார்க்கிறோம். ஆனால் இவள் முடியாது என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருக்காள். நீயே சொல்லுமா. அடுத்து அடுத்து கெட்டதா நடந்து போயிருச்சு. இப்ப ஒரு நல்லது செய்யலாம் என்று நினைத்து புவனனுக்கும், இவளுக்கும் கல்யாணத்தை வைக்கலாம் என்று பேசினால், இப்ப கல்யாணம் வேண்டவே வேண்டாம் என்று பிடிவாதம் பிடிக்கிறாள்…” என்று புலம்பினார் காஞ்சனா.

“ஹேய், கல்யாணமா? நல்ல விஷயம் தானே உதயா? கல்யாணம் பண்ணிக்கோ. உங்க இரண்டு வீட்டுக்கும் உங்க கல்யாணம் கொஞ்சம் ஆறுதலை தரலாம்…” என்று மகிழ்ச்சியாகச் சொன்னாள் அனன்யா.

“நீங்களும் புரியாமல் பேசாதீங்க அனன்யா. என்னால் எப்படி இப்ப கல்யாணம் பண்ணிக்க முடியும்? இதயா இறந்து கொஞ்ச நாள் தான் ஆகுது. இப்ப என்னோட கல்யாணம் பற்றிப் பேசுவது நல்லாவா இருக்கு?” என்று உயர்ந்த குரலில் மறுப்பு தெரிவித்த உதயா,

‘நானே இதயாவோட இறப்புக்கு காரணமா இருந்துட்டு, இப்ப அவள் இல்லாமல் போனதும் உடனே என்னால் எப்படிச் சந்தோஷமா கல்யாணம் பண்ணிக்க முடியும்?’ என்று மெல்லிய குரலில் வேதனையுடன் முணுமுணுத்துக் கொண்டாள்.

அவள் முனங்கியது சரியாக அனன்யாவின் காதில் விழ, மின்சாரம் தாக்கியது போல் ஷாக்கடித்துப் போனாள்.