யுகன்யா – 13

அத்தியாயம் – 13

நேரம் சென்று கொண்டே இருக்க, கோவிலிருந்து கிளம்பிய கவியுகன் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்ற தவிப்புடன் கேட் அருகிலேயே நின்று வெளியே எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் மணிமாறன்.

அவனுக்குப் பக்கத்திலேயே நின்று ‘இவன் அப்படி என்ன பார்க்கிறான்?’ என்ற ஆவலுடன் தானும் தலையை நீட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது டைசன்.

தெருவில் யாரும் இல்லையென்றதும் அவன் காலை வாலால் அடித்து ‘உள்ளே வா!’ என்பது போல் அவனை அழைத்தது.

“டைசன், உள்ளே போ!” என்று மணிமாறன் அதட்ட, அதுவோ மணிமாறன் கட்டியிருந்த லுங்கியைப் பற்களால் கடித்து இழுத்தது.

‘இது வேற!’ என்ற எரிச்சலுடன் டைசனின் முகத்தைப் பிடித்துத் தள்ளி விட்டான்.

அவனுக்குக் கடுப்பாக இருந்தது.

அப்பொழுதே வீட்டிற்கு வரும் பாதையில் திரும்பிய கவியுகன், இன்னும் ஏன் வீடு வந்து சேரவில்லை என்று குழம்பிப் போயிருந்தான்.

தான் பின்தொடர்ந்து சென்றதை கண்டிருப்பானோ? அதனால்தான் தன்னை ஏமாற்றி விட்டு எங்கோ சென்றிருப்பானோ? அப்படித் தன்னை ஏமாற்றிவிட்டு எங்கே சென்றிருப்பான்? என்று புரியாமல் குழம்பிப் போய் யோசித்துக் கொண்டிருந்தான்.

நவநீதன் வீட்டிலிருந்து கவியுகன் திரும்பி வந்தபோது கண்டது மணிமாறனின் குழப்ப முகத்தைத் தான். அவன் குழப்பத்திற்கு என்ன காரணம் என்று புரிந்த கவியுகனுக்குச் சிரிப்பு வந்தது. அவனின் கண்கள் நகைப்பை வெளிப்படுத்தின.

மணிமாறனை சமீபத்ததும் தன் வெளிப்படையான சிரிப்பை மறைத்துக் கொண்டவன், உள்ளுக்குள் தோன்றிய நமட்டுச் சிரிப்புடன் உள்ளே நுழைந்தான் கவியுகன்.

“என்ன மணி என்னைத் தேடின போல இருக்கு?” ஒன்றும் அறியாதவன் போல் கேட்டு வைத்தான்.

அவன் அப்படிக் கேட்டதும், “சார், அது வந்து… அதெல்லாம் ஒன்னுமில்லை சார்… ” சட்டென்று என்ன சொல்வது என்று புரியாமல் தடுமாறி உளறி வைத்தான் மணிமாறன்.

“அட! என்ன மணி, இல்லைங்கிற? இந்த வீட்டுக்கு வந்த விருந்தாளி நேரம் கெட்ட நேரத்தில் வெளியே போய்ட்டு ரொம்ப நேரம் காணோம் என்றால், அவனுக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோ என்று தேட மாட்டியா?” நாக்கை மடித்துக் கன்ன கதுப்புக்குள் பதுக்கிக் கொண்டு கேட்டான்.

“தேடுவேன் சார். தேடுவேன்…” வேகமாகத் தலையை ஆட்டினான்.

“உன் அக்கறைக்கு ரொம்ப நன்றி மணி!” என்று அவன் நக்கலுடன் சொன்னதை மணிமாறனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவனின் சிந்தனை எல்லாம் கவியுகன் இவ்வளவு நேரம் எங்கே சென்றிருந்திருப்பான்? என்பதில் தான் இருந்தது.

“என்ன மணி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ ஏதோ யோசனையில் இருக்க? தூக்கம் வருதா என்ன?” என்ற கவியுகன் குரலில் தான், தன் சிந்தனை கலைந்து வெளியே வந்தான்.

“இல்லை சார். தூக்கம் எல்லாம் வரலை…” வேகமாகத் தலையை ஆட்டினான்.

“தூங்கிடாதே மணி. எப்பவும் விழிப்பாகவே இரு!” என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னவன், “ஆமா, எங்கே நீ மட்டும் வேலைக்கு வந்திருக்க? உன் மாமா எங்கே?” என்று விசாரித்தான்.

“இனி மாமாவை நைட் முழித்துக் கஷ்டப்பட வேண்டாம் என்று ரவி சார் சொல்லிட்டார் சார். இனி நான் தான் வருவேன்…” என்றான்.

“அப்போ உன் மாமாவுக்கு வருமானம்?”

“மாமா பகலில் மில்லுக்குப் போயிடுவார்…”

“சரி மணி, பார்த்துக்கோ…” என்ற கவியுகன். அதற்கு மேல் அங்கே நிற்காமல் வீட்டிற்குள் சென்றான்.

அவன் மாடி ஏறிச் சென்ற போது, தன் அறை கதவை திறந்து வெளியே வந்தான் ரவீந்திரன்.

கவியுகனை அந்த நேரம் அங்கே, அதுவும் வெளியே இருந்து வருவதை எதிர்பாராமல் ஒரு கணம் திடுக்கிட்டுப் போனான் ரவீந்திரன்.

அவனின் திடுக்கிடலை கவனித்தாலும் கவனியாதது போல், “என்ன ரவி தூக்கம் வரலையா?” என்று கேட்டுக் கொண்டே அவன் அறியாமல் அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தான் கவியுகன்.

“ஹான், அது வந்து…” என்று சட்டென்று தடுமாறிய ரவி, “என்னைக் கேட்குறியே நீ இந்த நேரம் வெளியே எங்கே போயிட்டு வர்ற கவின்?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“தூக்கம் வரலை ரவி. அதான் வெளியே கொஞ்சம் நேரம் நடந்துட்டு வர்றேன். ஆமா, நீ எங்கே கிளம்பிட்ட?” கூர்மையுடன் கேட்டான்.

“எனக்கும் தூக்கம் வரலை கவின். அதான் கீழே போய்க் கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடந்துட்டு வரலாம் என்று பார்க்கிறேன்…” என்றான்.

“நானும் வரட்டுமா ரவி?” என்று கவியுகன் கேட்தும், “இல்லை, வேண்டாம் கவின்…” என்று வேகமாகச் சொன்ன ரவியை வியந்து பார்த்தான்.

“நீ இப்பத்தானே நடந்துட்டு வந்திருக்க? நீ போய்த் தூங்கு!” அவனின் பார்வையைக் கண்டதும், வேகமாகச் சொல்லி சமாளித்தான் ரவீத்திரன்.

அவன் இயல்பாக இல்லாததைக் கவியுகனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

தான் சந்தேகக் கண்ணுடன் பார்த்தால் சுதாரித்து விடுவான் என்று நினைத்தவன், “சரி ரவி, எனக்கும் தூக்கம் வந்துருச்சு. நான் போய்த் தூங்குறேன். குட் நைட்!” என்றவன் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

ஆனாலும், கதவை விட்டு அகலாமல் வெளியே ரவீந்திரனின் காலடி சத்தத்தைக் கவனித்தான்.

ரவீந்திரன் மாடிப்படியில் இறங்கும் சத்தம் கேட்டது.

அவன் கீழே சென்று விட்டான் என்று உணர்ந்ததும், சத்தம் இல்லாமல் கதவை திறந்து வேகமாக மொட்டை மாடிக்கு ஏறினான் கவியுகன்.

வாசல் பக்கம் வந்து எட்டிப் பார்க்க, ரவீந்திரன், மணிமாறனிடம் ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தான்.

மணிமாறனும் தலையை அசைத்து அசைத்து ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

ரவீந்திரன் உடல் மொழியில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.

பின் மணிமாறன் இரும்பு கேட்டை விரிய திறந்து வைக்க, அங்கிருந்து நகர்ந்த ரவீந்திரன் அவனின் காரை எடுத்துக்கொண்டு வலது பக்கமாய் வெளியேறினான்.

‘இந்த நேரம் ரவி எங்கே காரை எடுத்துக் கொண்டு போகிறான்?’ என்று புருவம் சுருக்கி யோசித்தவன், அவனைப் பின் தொடரலாமா? என்று நினைத்தான்.

ஆனால் கேட் அருகிலேயே நின்றிருந்த மணிமாறனுக்குத் தெரியாமல் போவது சாத்தியம் இல்லை.

காரில் செல்பவனைப் பின் தொடர அவனும் தன் காரை எடுக்க வேண்டும். அப்படி எடுத்து சென்றாலும், இனி ரவியைப் பின் தொடர முடியுமா? என்ற சந்தேகம் தோன்ற, அங்கேயே காத்திருக்க முடிவு செய்தான்.

நிமிடங்கள் மெல்ல கரைந்தன.

மொட்டை மாடியைச் சுற்றி வலம் வந்தான்.

நவநீதன் வீட்டில் இருந்து கிடைத்த சுடிதார் துணியை வைத்து அவன் தான் குற்றவாளியோ என்று அவன் சந்தேகத்தில் இருந்த நேரத்தில், ரவீந்திரனின் இந்த மர்ம செயல் மனதில் புயலை கிளம்பியது.

ரவீந்திரனின் பதட்டத்திற்கும், நடவடிக்கைக்கும் என்ன அர்த்தம்? கேள்வி குடைச்சலாய் மூளையைத் தாக்கியது.

ஒரு மணி நேரம் கடந்த நிலையில் தான் மீண்டும் ரவீந்திரனின் கார் திரும்ப வந்தது.

காரை விட்டு இறங்கி, மணிமாறனிடம் ஏதோ பேசி விட்டு, வீட்டிற்குள் செல்ல திரும்பியவனைக் கண்டதும், மாடியிலிருந்து இறங்கி வேகமாகத் தன் அறைக்குள் அடைந்து கொண்டான் கவியுகன்.

ரவீந்திரன் மேலே ஏறி வரும் சத்தமும், அவனின் அறை கதவு திறந்து மூடும் சத்தமும் கேட்டது.

இனி தான் இந்தக் கேஸை எப்படி அணுகுவது என்ற சிந்தனையில் ஆழ்ந்த படி படுக்கையில் விழுந்தான் கவியுகன்.

உருவமில்லா சிக்கல் ஒன்று அவனின் மூளை பிரதேசம் முழுவதும் வியாபித்து நித்திரையைத் தழுவ விடாமல் சதி செய்தது.

காலையில் விடிந்ததும் அனன்யாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

“குட்மார்னிங் யுகா…”

“குட்மார்னிங் அனன்யா. என்ன காலையில் எழுந்ததும் போன்?” இரவெல்லாம் சரியாக உறங்காததால் எரிந்த கண்களைச் சிமிட்டி சரி செய்ய முயன்ற படி கேட்டான்.

“இன்னைக்கு உங்க ப்ரோகிராம் என்ன யுகா?”

“ஏன் கேட்குற?”

“நைட் எனக்கு ஒரு யோசனை வந்தது. இன்னைக்கு அதைச் செயல்படுத்தலாம் என்று பார்த்தேன்…”

“யோசனையா? என்ன யோசனை?”

“நைட் படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது தான் எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. இந்த ஊருக்கு வந்ததில் இருந்து நான் உருப்படியா ஒரு வேலையும் பார்க்கலை. அந்த உதயா பின்னாடி சுற்றி நேரம் தான் வேஸ்ட்டா போகுது. அவளும் உருப்படியான தகவல் எதுவும் சொல்ல மாட்டேங்கிறாள். அதான் இனியாவது உங்க கூடச் சேர்ந்து முழு மூச்சா துப்பறியும் வேலையில் இறங்கலாம் என்று இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க?”

“அனன்யா! உன் விளையாட்டுத்தனத்துக்கு அளவே இல்லையா?” என்று பல்லை கடித்தான் கவியுகன்.

“ஏன் திட்டுறீங்க?” குதூகலமாய்ப் பேசிக் கொண்டிருந்தவள் ப்யூஸ் போன பல்ப் போல அப்படியே அடங்கிப் போனாள் அனன்யா.

“உதயாவை நீ கண்காணிக்கும் வேலை செய்வதைப் பற்றி நீ என்ன நினைக்கிற? அவள் கூட உன்னை ஊர் சுற்றி பார்க்க அனுப்புறேன் என்று நினைச்சியா? இதயா கேஸை பொறுத்தவரை நம்ம சந்தேக லிஸ்டில் இருக்கும் ஒவ்வொருவரும் கண்காணிக்கப் பட வேண்டியவர்கள் தான். என் கூடவே இருந்தால் மட்டும் நீ என்ன செய்துடலாம் என்று நினைக்கிற? நானே இங்கே பல குழப்பத்துக்குள் சிக்கியிருக்கேன். இதில் நீ வேற புதுசா ஏதாவது குட்டையைக் குழப்பாதே!” என்று அதட்டினான்.

“உங்களுக்கே குழப்பமா? என்ன யுகா சொல்றீங்க?” உடனே அவன் சொன்ன விஷயத்திற்குத் தாவினாள்.

‘இவளை எல்லாம்!’ என்று வலிக்காமல் தலையில் அடித்துக் கொண்டான்.

‘இவள் எல்லாம் எப்படித்தான் இந்த வேலை பார்க்கணும் என்று வந்தாளோ? எதிலும் ஒரு விளையாட்டுத்தனம். எதிலும் நிதானம் இல்லாத தன்மை. இவளை வச்சுக்கிட்டு நான் வந்த வேலையை முடித்த மாதிரி தான்’ என்று சலித்துக் கொண்டான்.

“என்ன யுகா பதிலே சொல்ல மாட்டிங்கிறீங்க? என்ன குழப்பம் உங்களுக்கு?” என்று அனன்யா கேட்க,

“ஏன் நீ தீர்த்து வைக்கப் போறியா?” நக்கலுடன் கேட்டான்.

“ஏன் நான் தீர்த்து வைக்க மாட்டேனா?” சிலிர்த்துக் கொண்டு கேட்டாள்.

“யாரு? நீ? இன்னும் வேணுமானால் குழப்பம் வர வைப்ப…” என்று நொடித்துக் கொண்டான்.

“இந்த அனன்யாவோட வேல்யூ தெரியாம பேசிட்டு இருக்கீங்க யுகா. என்ன குழப்பம் என்று மட்டும் சொல்லுங்க. நொடியில் நான் தீர்த்து வைக்கிறேன்…” என்றாள் சவாலாக.

“உன்கிட்ட நான் பேசத்தான் வேணும். ஏன்னா இந்தக் கேஸில் உன்னையும் நான் இழுத்து விட்டுருக்கேனே. உனக்கும் விஷயம் தெரியத்தான் வேணும். இன்னும் ஒரு பத்து நிமிஷத்துக்குப் பிறகு பால்கனிக்கு வா…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தான் கவியுகன்.

குளித்துத் தயாராகி அவன் வெளியே பால்கனிக்கு வந்த போது பத்து நிமிடங்கள் கடந்திருந்தன.

அவனுக்கு முன் பால்கனியில் தயாராக இருந்தாள் அனன்யா.

“என்ன யுகா, இவ்வளவு நேரம்? அப்படி என்ன குழப்பம்? சீக்கிரம் சொல்லுங்க!” அவனைக் கண்டதும் சுடு தண்ணீரை காலில் ஊற்றிக் கொண்டது போல், அவசரமாகக் கேட்டவளை முறைப்புடன் தான் எதிர்கொண்டான் கவியுகன்.

“என்ன யுகா முறைப்பு?”

“நீ எப்படித்தான் என்கிட்ட வேலைக்குச் சேர வந்த? கொஞ்சம் கூடப் பொறுமையே கிடையாது. எந்த நேரம் பார்த்தாலும் ஒரு அவசரம். ஆமாம், ஒரு உண்மையைச் சொல்லு. நிஜமாவே நீ ஒரு டிடெக்டிவாக ஆசைப்பட்டுத் தான் இந்த வேலையில் சேர்ந்தியா? இல்லை நானும் துப்பறியும் புலி என்று ஜம்பம் காட்ட இந்த வேலையில் சேர்ந்தியா?” கடுப்புடன் கேட்டான்.

“இரண்டும் தான்!” அலட்டிக் கொள்ளாமல் சொன்னாள்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. ஆசை இருந்தால் மட்டும் போதாது. ஜம்பம் காட்ட வேலையில் எப்படி இருக்கணும் என்ற புரிதலும் வேணும். நானும் பலமுறை சொல்லிட்டேன். பொறுமை, நிதானம் தான் இந்த வேலையில் அவசியம். அவசரத்தனம் ஆபத்தில் போய்த் தான் முடியும்…”

“சரி, சரி… விஷயத்துக்கு வாங்க!” என்று இப்போதும் அவசரத்தை காட்டத்தான் செய்தாள்.

“உன்னைத் திருத்த முடியாது. நீ இப்படிச் செய்வதைப் பார்த்தால் கேஸ் விஷயமா உன்கிட்ட ஷேர் பண்ணவே யோசனையா இருக்கு. நீ பாட்டுக்கு ஆர்வ கோளாறில் யார்கிட்டயும் உளறி வச்சுருவியோ என்று பயமா இருக்கு…” என்றான் உண்மையான கவலையுடன்.

“என்ன யுகா, இப்படிச் சொல்லிட்டீங்க? என் அவசரம் ஆரவாரம் எல்லாம் உங்ககிட்ட மட்டும் தான். வெளியே வேற யார்கிட்டயாவது நான் அப்படி நடந்து நீங்க பார்த்தீங்களா என்ன?” என்று முகம் சுருங்க கேட்டாள்.

அதென்னவோ சரி தான். தங்களுக்குள் பேசுவதை அவள் வெளியே சொல்வதும் இல்லை. காட்டிக் கொள்வதும் இல்லை தான். அதனால்தான் துணிந்து தான் அறிந்து வந்த தகவல்களை எல்லாம் அவளிடம் பகிர்ந்து கொள்வான்.

அந்த வரையில் அவளைப் பாராட்டலாம் என்று நினைத்துக் கொண்டவன் விஷயத்தைச் சொன்னான்.

இரவு தான் நவநீதன் வீட்டிற்குச் சென்றதை சொல்லி, அந்தச் சுடிதார் துணியையும் அவளிடம் காட்டினான்.

“இதுக்கு மேலேயும் நாம அமைதியா இருக்கணுமா யுகா?” அந்தத் துணியைக் கையில் வாங்கிப் பார்த்து பரபரப்புடன் கேட்டாள் அனன்யா.

கிணற்றடியில் கிடைத்த துணியையும், அவள் கையில் இருந்த துணியையும் வாங்கி இரண்டையும் சேர்த்துத் தங்கள் இருவருக்கும் இடையே இருந்த திண்டில் விரித்து வைத்து, கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கவியுகன், அனன்யாவின் கேள்விக்கு உடனே பதிலளிக்கவில்லை.

“இப்பவும் நீங்க ஏன் அமைதியா இருக்கீங்க என்று எனக்குத் தெரியலை யுகா. இந்த நேரம் நவநீதனை மடக்கி பிடித்து இருந்தால் நம்ம வந்த வேலை முடிந்து இருக்கும்…” என்று பொறுமை இல்லாமல் குதித்தவளை பொறுமையாக எதிர்கொண்டான் கவியுகன்.

“நவநீதனை நாம மடக்கிப் பிடிக்க அவன் வீட்டில் கிடைத்த இந்தத் துணி மட்டும் போதுமா அனன்யா?” என்று நிதானமாகக் கேட்டான்.

“வேற என்ன வேணும் யுகா?”

“இது மட்டும் போதாது அனன்யா…”

“மொட்டை மாடியில் கிடைச்ச அந்தச் சட்டைத் துணி? அதில் இருந்த N என்ற எழுத்து இருக்கே யுகா? அது ஒன்று… இப்போ இதயாவோட இந்தச் சுடிதார் துணி இருக்கே யுகா? அதுவும் நமக்குக் கிணற்றடியில் கிடைத்த இந்தத் துணியோட ஒத்துப் போகுது. இதுவே பெரிய ஆதாரம் தானே யுகா?” என்று கேட்டாள்.

“நீ சொல்வது எல்லாம் சரிதான் அனன்யா. ஆனால் என் மனதில் ஏதோ ஒரு நெருடல்!” என்று யோசனையுடன் தாடையைத் தடவினான் கவியுகன்.

“என்ன நெருடல் யுகா?” புரியாமல் நெற்றி சுருக்கி கேட்டாள்.

“நவநீதன் தான் குற்றவாளி என்றால் இங்கே நடக்கும் சில மர்ம செயலுக்கு என்ன காரணம்? ரவி நம்மகிட்ட ஏதோ மறைக்கிறான். மணிமாறன் எப்போதும் நான் என்ன செய்யுறேன் என்று நோட்டம் விட்டுக் கொண்டே இருக்கான். இது மட்டும் இல்லை. நைட் ரவி பதட்டமா காரை எடுத்துட்டு எங்கோ போயிட்டு வர்றான். இது எல்லாம் ஏன்?”

“என்ன சொல்றீங்க யுகா? ரவி அப்படிப் பதட்டமா எங்கே போனார்?”

“தெரியலை! என்னால் பின்னால் போக முடியலை. இந்த மணிமாறன் கண்கொத்தி பாம்பா என்னைப் பார்த்துட்டு இருக்கும் போது என்னால் துணிந்து எதுவும் செய்ய முடியலை. அப்படிச் செய்தால் ரவி உஷாராகிடுவான்…”

“அப்போ ரவி மேலயும் ஏதோ தப்பு இருக்குத்தானே யுகா?”

“ம்ம், அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது…”

“ரவி மேல சந்தேகமா இருக்கு என்பதற்காக நாம நவநீதனையும் அசால்டா ஒதுக்கி தள்ள முடியாதே யுகா?”

“ஒதுக்கி தள்ள போவது இல்லை. அவன் தப்பிக்க முடியாத அளவு ஒரு லாக் போடணும். அது எப்படி என்று நான் ஒரு கெட்ச் போட்டுட்டு இருக்கேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அவனின் அறை கதவு படபடவென்று தட்டப்பட்டது.

ஒரு கணம் திடுக்கிட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு கதவை திறக்க சென்றனர்.

கவியுகன் கதவை திறந்ததும் புயல் வேகத்தில் உள்ளே வந்த ரவீந்திரன், “கவின், உடனே நீ இங்கிருந்து கிளம்பு. நீ இனி இதயா பற்றி எதுவும் விசாரிக்க வேண்டாம்!” என்றான் தடாலடியாக.