யுகன்யா – 12

அத்தியாயம் – 12

“ஹாய் அனன்யா. ஹாய் கவின் அண்ணா…” என்றபடி அன்றைய இரவு உணவுக்குச் சாப்பாடு மேஜைக்கு வந்த புவனேந்திரனுக்குப் பதிலுக்கு இருவரும் ‘ஹாய்’ சொன்னார்கள்.

“எப்போ சென்னையில் இருந்து வந்த புவன்?” கவியுகன் விசாரிக்க,

“ஆறு மணி போல் தான் வந்தேன் அண்ணா…” என்றான்.

“நீங்க சென்னை போன வேலை நல்லபடியா முடிந்ததா?” என்று விசாரித்தாள் அனன்யா.

“அதெல்லாம் சூப்பரா முடிந்ததுங்க. எனக்கும் ஒரு புது அனுபவம்…” என்று மலர்ந்து சிரித்தான் புவனேந்திரன்.

“இதுக்கு முன்னாடி நீங்க இப்படி வேலைக்குப் போனது இல்லையா?”

“இல்லைங்க. மில் சம்பந்தப்பட்ட வேலை முக்கியமானது எல்லாம் அண்ணா தான் பார்ப்பாங்க. அவங்களே பார்த்தால் தான் திருப்தியா இருக்கும் என்று சொல்வாங்க. ஆனால் இந்த முறை தான்…” என்ற புவனன் திரும்பி தன் அருகே அமர்ந்திருந்த அண்ணனை இரக்கமாகப் பார்த்தான்.

தம்பி தன்னைப் பற்றித் தான் பேசுகிறான் என்பதை உணராதவன் போல், எந்தக் கவனமும் இல்லாமல் உணவை அள்ளி பெயருக்கு உண்டு கொண்டிருந்தான் ரவீந்திரன்.

எப்போதும் அவன் அப்படி இருப்பதைப் பார்த்துப் ‘பாவம்! இதயா இழப்பின் துக்கம்!’ என்று பரிதாபத்துடன் பார்க்கும் அனன்யா, இப்போது அவனைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தாள்.

‘அத்தனையும் நடிப்பா கோபால்?’ என அவள் மைண்ட் வாயிஸில் ஓட, அவனையே வெறித்துப் பார்த்தாள்.

சட்டென்று தன் கையில் யாரோ தட்டுவதை உணர்ந்து, திடுக்கிட்டுக் கண்களைத் திருப்பிப் பார்த்தாள்.

அவள் அருகில் இருந்த கவியுகன் தான் அவளைக் கடுமையாக முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன பண்ற?” என்று அவள் புறம் குனிந்து, அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

ஏன் இந்தக் கோபம்? புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.

“ரவியை ஏன் அப்படி வெறிச்சு பார்க்கிற?” என்று கடிந்தவன், ‘அங்கே பார்!’ என்பது போல் புவனேந்திரனை சுட்டிக் காட்டினான்.

அவனோ குறுகுறுப்பாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

விதிர்விதிர்த்துப் போனாள் அவள். தான் ஒரு ஆண்மகனை விடாமல் பார்த்தால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? நான் சந்தேகத்துடன் தான் அவனைப் பார்த்தேன் என்று விளக்கி கொண்டா இருக்க முடியும்?

புவனேந்திரனை அசட்டுப் பார்வை பார்த்து வைத்தாள்.

அவளுக்குக் குறும்புடன் கூடிய புன்சிரிப்பை பதிலாகத் தந்தவன், “அப்புறம், உங்களுக்கு நாளைக்கு என்ன ப்ரோகிராம் அனன்யா?” என்று கேட்டான்.

“வழக்கம் போல் தான் உதயா கூட ஊர் சுற்ற போறேன்…” என்றாள்.

“இன்னுமா நீங்க சுற்றிப் பார்த்து முடிக்கலை?” நெற்றி பொட்டை உயர்த்திக் கேட்டான்.

“இந்த ஊரில் ஒவ்வொரு இடமும் அவ்வளவு அழகா இருக்கு. திரும்பத் திரும்பப் பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு. அதான் சுற்றிப் பார்ப்பதை விட மனசில்லை. இன்னைக்கு மலை கோவில் போயிட்டு வந்தோம். நாளைக்கு மலை கோவில் பின்னாடி இருக்கும் இடம் எல்லாம் போகலாம் என்று இருக்கோம்…” என்றாள்.

“எஸ், எங்க ஊர் ரொம்ப அழகு! ஆனால் அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்தும் இருக்கும் அனன்யா. மலையைச் சுற்றி உள்ள காடு எல்லாம் அவ்வளவா பாதுகாப்பு இல்லாத இடம். அதனால் கொஞ்சம் கவனமாகவே இருங்க…” என்றான் அக்கறையுடன்.

“ஓகே புவன். கவனமா இருக்கோம்…” என்றாள்.

“ஏங்க பேசாம நாளைக்கு நம்ம மில்லுக்கு வாங்களேன். உங்களுக்கும் பொழுது போகும். மில்லை எல்லாம் பார்த்தது போல் இருக்கும்…” என்றழைத்தான் புவனேந்திரன்.

“மில்லுக்கா?” என்று யோசனையுடன் பார்த்தவள், அப்படியே கவியுகனை கேள்வியுடன் பார்த்தாள்.

‘என்ன செய்ய? நான் போகவா?’ என்று அவனிடம் அனுமதி கேட்டது அவள் பார்வை.

தோளை லேசாகக் குலுக்கி விட்டு ‘உன் விருப்பம்!’ என்பது போல் முடித்துக் கொண்டான்.

உதயாவை கண்காணிப்பது தானே அவள் வேலை. மில்லுக்குச் சென்றால் அவள் தன்னுடன் வருவாளா, இல்லையா என்று தெரியவில்லையே. இப்போது என்ன செய்வது? என்று சிந்திக்க ஆரம்பித்தவளின் கண்கள் திடீரெனக் குறும்புடன் ஒளிர்ந்தன.

“என்னங்க, மில்லுக்கு வாங்க என்று கூப்பிட்டால் இவ்வளவு யோசிக்கிறீங்க? சரி, பிடிக்கலை என்றால் விடுங்க…” என்றான் புவனன்.

“ச்சே, ச்சே… பிடிக்காமல் இல்லை. கண்டிப்பா வர்றேன்…”

“அப்போ காலையில் நான் கிளம்பும் போது என்னோட வர்றீங்களா?”

“இல்ல… இல்ல… நீங்க முன்னாடி போங்க. நான் ஒரு பதினொரு மணி போல வர்றேன்…” என்றாள்.

“தனியா எப்படிங்க?” அவன் யோசனையுடன் கேட்க,

“உங்க ஊரில் என்ன பயம்? யாரை கேட்டாலும் வழி சொல்லுவாங்க. நான் வந்துடுவேன்…” என்றாள்.

“ஓகே, உங்கள் விருப்பம்!” என்று முடித்துக் கொண்டான்.

புவனேந்திரனும், ரவீந்திரனும் உண்டு முடித்து அவரவர் அறைக்குச் சென்றதும், அனன்யா மாடி பால்கனிக்கு வர, கவியுகனும் அவன் அறையில் இருந்து பால்கனிக்கு வந்தான்.

“ஊரை சுற்றிப் பார்க்கிறேன் என்று நேரத்தை வேஸ்ட் செய்யாதே அனன்யா. நாம வந்ததில் இருந்து நாள் தான் போயிட்டே இருக்கே தவிர, வந்த வேலை இன்னும் முடியாமல் இழுத்துட்டே போகுது…” என்றான் கவியுகன்.

“இப்பவும் நான் உதயா கூடத் தானே போகப் போறேன் யுகா? எங்கே போனாலும் என் வேலை நடக்கும். அது கூட இன்னொரு வேலையும் இருக்கு. அதையும் பார்க்க நாளைய நாளை யூஸ் பண்ணிக்கப் போறேன்…” என்று அதீத மகிழ்வுடன் சொன்னாள்.

“இன்னொரு வேலையா?” கவியுகன் கண்களைச் சுருக்கி கேட்க,

“ஒரு லவ் பேர்ட்ஸை சேர்த்து வைக்கும் வேலை…” என்று சொல்லி கண்சிமிட்டினாள்.

“உனக்கு ஏன் இந்தத் தேவையில்லாத வேலை? அடுத்தவங்க விஷயத்தில் நீ ஏன் மூக்கை நுழைக்கிற?” முகத்தைச் சுளித்துக் கொண்டு கேட்டான்.

“போங்க யுகா, வெறும் வேலையை மட்டும் பார்ப்பதில் என்ன சுவாரசியம் இருக்கு? இப்படி ஒரு காதலை சேர்த்து வைப்பது என்று ஒரு கிளுகிளுப்போட இருந்தால் தானே சுவாரசியமா இருக்கும்…” என்றாள் கண்ணில் கனவு மின்ன.

“நீ ஆளே சரியில்லையே… என்ன விஷயம்?” அவளைக் கூர்ந்து பார்த்து கேட்டான்.

“அது… என்ன விஷயம்? ஒன்னுமில்லையே…” என்று மழுப்பலாகச் சொன்னவளை ஒரு மாதிரியாக அவன் பார்க்க, அவன் கண்களை நேர் கொண்டு பார்க்க முடியாமல் எங்கெங்கோ பார்வையைச் சுழல விட்டாள்.

‘பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்குற மாதிரி இருக்கு…’ என்று அவன் முனங்கியது அவள் காதிலும் விழவே செய்தது.

பிடிபட்ட உணர்வில் அவஸ்தையுடன் கீழ் உதட்டை பற்களால் நெரித்தாள்.

அவள் முகத்தைச் சில நொடிகள் கூர்ந்தவன், பின் தோளை குலுக்கி கொண்டு, “உன் காதல் சேவையைப் பார்த்து ஆற்று. காதல் விஷயத்தில் எல்லாம் மூன்றாவது ஒருத்தர் நுழைந்தால் அவங்க மூக்கையே உடைச்சுட்டு போயிடுவாங்க. இல்லனா நம்ம பக்கமே ஏதாவது பூதம் பூதாகரமா திரும்பும். பார்த்து இரு!” என்பதுடன் அந்தப் பேச்சை முடித்துக் கொண்டான்.

“என்னவோ ரொம்ப அனுபவஸ்தர் போல் பேசுறீங்க?” குறுகுறுப்புடன் அவனைப் பார்த்தபடி கேட்டாள்.

“உன்னைப் போலச் சில அரை வேக்காடுகள் மூலம் வந்த அனுபவம் தான்…” என்று அவன் நக்கலாகச் சொல்லிட்டு அங்கிருந்து செல்ல,

முதலில் யாரையோ சொல்கிறான் என்று அசால்டாக இருந்தவள், அப்போது தான் அவளை அரை வேக்காடு என்று சொன்னதே அவள் புத்தியில் ஏறியது.

“ஹேய், யாரை பார்த்து அரை வேக்காட்டு என்று சொல்றீங்க?” என்று அவள் காலை தரையில் உதைத்துக் கொண்டதை கேட்க கவியுகன் அவ்விடத்திலேயே இல்லை.

“இந்த அனன்யாவையா போட்டு தாக்கிட்டு போறீங்க? என்கிட்ட ஒரு நாள் மாட்டாமயா போயிருவீங்க?” என்று கருவி கொண்டு அறைக்குள் சென்று படுக்கையில் விழுந்தாள்.

அதே நேரம் தன் அறைக்குள் சென்ற கவியுகன் படுக்கையில் விழாமல், தன் பையில் எப்போதும் வைத்திருக்கும் ஒரு கொத்து சாவியையும், கைபேசியையும் எடுத்துக் கொண்டு அறையைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தான். ரவீந்திரன், புவனேந்திரன் அறைகள் பூட்டியிருப்பதை உறுதி செய்து கொண்டு, அறைக்கு வெளியே வந்து கதவை சத்தம் எழுப்பாமல் சாற்றிவிட்டு, மாடிபடி பக்கம் வந்து கீழே எட்டிப் பார்த்தான்.

கீழே மேகலாவின் நடமாட்டம் இல்லையென்றதும், படியில் இறங்கி வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான்.

அடுத்த நிமிடம் எங்கிருந்தோ ஓடி வந்தது டைசன்.

அதன் பின்னால் மணிமாறனும் வந்தான்.

“என்ன சார் தூங்கலையா?” என்று மணிமாறன் கேட்க,

“தூக்கம் வரலை மணி. அதான் கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம் என்று கிளம்பினேன்…” என்றவன், டைசன் முதுகில் லேசாகத் தடவி விட்டான்.

“இந்த நேரம் வெளியேவா? இது டவுன் இல்லை சார். இங்கே ஏழு, எட்டுக்கு எல்லாம் ஆளுங்க கட்டையைச் சாய்ச்சுருவாங்க. ஊரே ரொம்ப அமைதியா இருக்கும்…” மணிமாறன் சொல்ல,

“அந்த அமைதி தான் எனக்கு வேணும் மணி. ஊரில் இரைச்சல் சத்தத்தில் அனுபவிக்க முடியாத அமைதி, இந்த ஊரில் கிடைப்பது எல்லாம் பொக்கிஷம் மணி. உங்க ஊர் பொக்கிஷத்தை நானும் கொஞ்சம் அனுபவிச்சுக்கிறேனே…” என்று சொல்லிக் கொண்டே நிற்காமல் கேட்டை நோக்கி நடந்தான்.

கேட் வரை அவன் பின்னால் ஓடி வந்தது டைசன்.

அதைப் பொருட்படுத்தாமல் சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான் கவியுகன்.

ஊரே அமைதியாக இருந்தது. அந்த ஊர் மக்கள் அந்தப் பத்து மணியளவிலேயே ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.

அவன் நடந்த தெருவில் தெருவிளக்கு மினுக் மினுக்கென்று சிமிட்டிக் கொண்டிருந்தது.

விருட்விருட்டென்று நடந்த கவியுகன் சிறிது தூரம் சென்ற பிறகு தான் அதை உணர்ந்தான்.

அந்தத் தெருவில் அவன் மட்டும் நடக்கவில்லை. அவன் பின்னால் இன்னொருவரும் நடந்து வருவதைக் கிரகித்துக் கொண்டான்.

அதுவும் அவன் நடக்கும் வேகத்தில் இல்லாமல் தயங்கி தயங்கி, பின் தொடரும் நடையை உணர்ந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், நடையைத் தொடர்ந்தான்.

தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் வலது பக்க தெருவில் திரும்பியவன், ஓரப்பார்வையால் தன்னைப் பின் தொடர்பவனை நோட்டம் விட்டான்.

அவன் பார்வையில் பட்டு விடக்கூடாது என்று வேகமாகப் பின்னால் வந்தவன் மறைய முயல, அவன் முயற்சிக்கு முன்பே கவியுகன் கண்களில் பட்டு விட்டான்.

அவன் நினைத்தது சரி தான். மணிமாறன் தான் அவன் பின்னால் வந்து கொண்டிருந்தான்.

உதடுகளில் நமட்டுச் சிரிப்பு நெளிய, அவனைப் பார்த்தது போல் காட்டிக் கொள்ளாமல், சிறிது தூரத்தில் இருந்த அந்த ஊர் கோவிலை நோக்கி நடந்தான்.

கோவில் வெளியே ஒரு தெருவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் ஒளியில் யாரோ ஒரு வயதானவர் கோவில் மண்டபத்தில் படுத்திருப்பதைப் பார்க்க முடிந்தது.

கோவிலை சுற்றி ஒரு முறை நடந்து வந்தவன், சோர்வுடன் அமர்வது போல் அந்தக் கோவில் வெளியே இருந்த ஒரு திண்டில் சென்று அமர்ந்து கொண்டான்.

அவன் பின்னால் வந்த மணிமாறன், கோவிலை தாண்டி ஒரு வீட்டின் சந்திற்குள் ஒளிந்து நின்று கவியுகனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

‘மணிமாறனை இப்போதே மடக்கி பிடித்து விசாரிக்கலாமா?’ சில நொடிகள் கண்களை மூடி அந்தச் சிந்தனையில் இருந்தான் கவியுகன்.

‘மணிமாறன் வேலைக்கு வைத்தது ரவீந்திரன். இப்போது ரவீந்திரன் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அவன் தான் உண்மையான குற்றவாளி என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியிருக்க, மணிமாறனை மடக்கிப் பிடித்தால் ரவீந்திரன் உஷார் ஆகிவிட மாட்டானா?’ என்று மனதிற்குள் சில கணக்கீடுகளைப் போட்டுப் பார்த்தான்.

‘எந்த ஆதாரமும் இல்லாமல் ரவீந்திரனை குற்றம் சாட்ட முடியாது. ஏதாவது ஆதாரம் வேண்டும். அந்த ஆதாரத்தைக் கைப்பற்றாமல் அவன் மீது இருக்கும் சந்தேகத்தை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடாது’ என்று நினைத்த கவியுகன், மணிமாறனை மடக்கி பிடிக்கும் யோசனையைக் கைவிட்டான்.

சிறிது நேரம் பொறுத்து அவ்விடத்தை விட்டு எழுந்த கவியுகன், வீட்டிற்குச் செல்லும் வழியில் திரும்பினான். அவன் வீட்டிற்குத் தான் செல்கிறான் என்பது உறுதியானதும், அவனுக்கு முன் தான் வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைத்த மணிமாறன் இன்னொரு குறுக்குப் பாதை வழியாக வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தான்.

வீட்டிற்குச் செல்வது போல் போக்கு காட்டிய கவியுகன், மணிமாறன் தன்னைப் பின் தொடரவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு வேறு பாதையில் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

ரவீந்திரன் மீது விழுந்த சந்தேக விதை மனதிற்குள் பிராண்டி கொண்டிருந்தாலும், நவநீதன் பற்றியும் தூண்டி துருவ வேண்டும் என்று நினைத்த கவியுகன் அவன் வீட்டை நோக்கி நடந்தான்.

மாலையிலேயே நவநீதன் தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் ஏறியதை பார்த்திருந்தான். நவநீதனுக்குத் தந்தை மட்டுமே. தாய் இல்லை. அவனுடன் அவனின் தந்தையும் தான் சென்றிருந்தார்.

இப்போது வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்ற உறுதியுடன் தான் அவன் வீட்டை ஆராயக் கிளம்பியிருந்தான்.

நவநீதன் வீட்டு தெருவும் வெகு அமைதியாக ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

அதுவே அவனுக்குக் கை கொடுக்க, சத்தமில்லாமல் தன்னிடம் இருந்த சாவிகளை எடுத்து வீட்டை திறக்க முயற்சி செய்தான்.

முழுதாக மூன்று நிமிடங்களை விழுங்கி விட்டு அவ்வீட்டுக் கதவு சொர்க்க வாசலாகத் திறந்து கொண்டது.

வீட்டின் உள்ளே நுழைந்த அடுத்த நிமிடம் கதவை தாழ் போட்டுக் கொண்டவன், தன் கைபேசி ஒளியை உயிர்ப்பித்தான்.

மாடி அறை எதுவும் இல்லை என்றாலும், அவ்வீடு பெரிதாகவே இருந்தது.

சமையலறை போக நான்கு அறைகள் இருக்கலாம் என்று அனுமானிக்க முடிந்தது.

முதலில் ஒரு அறைக்குள் நுழைந்தான். அந்த அறையில் பொருட்கள் ஒழுங்கில்லாமல் ஏதோ தேவை இல்லாத பொருட்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

வீட்டு விளக்கை போட்டால், திடீரென யாராவது பார்த்தால் சந்தேகம் வரும் என்ற எண்ணத்தில் கைபேசி ஒளியிலேயே அந்த வீடடை சுற்றி வந்தான்.

இன்னொரு அறையில் வெறும் ஒரு கட்டிலும், ஒரு மர பீரோ மட்டுமே இருக்க, வேறு எந்தப் பொருட்களும் இல்லை என்றதும், அடுத்த அறைக்குள் நுழைந்தான். அது நவநீதனின் தந்தையின் அறை போலும். சிறிது நேர தேடலுக்குப் பின் அங்கே எதுவும் கிடைக்காமல், நான்காவது அறைக்குள் நுழைந்தான்.

கட்டிலின் தலையணைக்கு நேரே தன் பைக் முன் ஸ்டைலாக நின்று போஸ் கொடுத்திருந்த புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தான் நவநீதன்.

அறை ஒழுங்கற்றுத் துணிகள் ஆங்காங்கே கிடக்க, படுக்கையில் இருந்த போர்வை மடிக்கப்படாமல் குவிந்து கிடந்தது. அறையில் லேசான மதுபானம் நாற்றம் வர, சுற்றிலும் பார்த்தான். கட்டிலுக்கு அடியில் மதுபான பாட்டில்கள் உருண்டு கொண்டிருந்தன.

ஒரு பாட்டில் வாய் திறந்து அதில் சிறிது இருந்த மதுபானம் சொட்டு சொட்டாக வடிந்து தரைக்குப் போதையூட்டிக் கொண்டிருந்தது.

அதைப் பொருட்படுத்தாமல் அங்கிருந்த மர அலமாரியை நோக்கி சென்றான்.

பூட்ட படாமல் வெறுமனே மூடியிருந்த கதவை திறந்தவன், கைபேசி வெளிச்சத்தை அலமாரிக்குள் பாய்ச்சினான்.

மடித்து வைத்திருந்த துணிகள் கூட லேசாகக் கலைந்தே இருந்தது.

ஒவ்வொரு அலமாரி வரிசையிலும் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தான். சொல்லிக் கொள்ளும் படி எதுவும் இல்லாமல் போக, நவநீதனின் சில சட்டைகளை எடுத்து ஆராய்ந்தான்.

அன்று மொட்டை மாடியில் கிடைத்த துணியில் பார்த்த N என்ற எழுத்து வேறு சட்டையில் பதியப்பட்டுள்ளதா என்று தேட, அப்படி எந்த அடையாளமும் காணப்படவில்லை.

சலிப்புடன் எடுத்ததை எல்லாம் மீண்டும் அதே இடத்தில் வைத்தவன் கண்ணில் மேல் அலமாரி வரிசையில் ஏதோ வித்தியாசமாகப் பட, அதைக் கூர்ந்து பார்த்தான்.

ஒரு கருப்பு கலர் கால்சட்டைக்குக் கீழ் லேசாகப் படபடத்துக் கொண்டிருந்தது ஒரு வெள்ளை துணி.

அதைக் கையில் எடுத்து பார்க்க, ஏறுமாறாகக் கிழித்து எடுத்தது போல் இருந்த அந்தச் சிறிய வெள்ளை துணியைச் சட்டென்று அடையாளம் கண்டு கொண்டான் கவியுகன்.

இதயா இறந்த அன்று, உடுத்தியிருந்த அதே சுடிதார் துணியின் சிறு பகுதி தான் அது.

கிணற்றடியில் கிடைத்த துணியில் ஒரு பக்கம் ரத்த தீற்றல் இருந்தது என்றால், இன்னொரு மூலையில் பச்சை நிறத்தில் இலை வடிவ எம்பிராய்டரி பாதி இருந்தது. அதன் மீதி இலையின் வடிவம் இப்போது கவியுகன் கையில் இருந்த துணியில் இருந்தது.

அதை எடுத்து தன்னுடன் பத்திரப்படுத்தி விட்டு, ‘அடுத்த ஆதாரம் கிடைத்து விட்டது நவநீதன்’ என்று மெல்லிய குரலில் முனங்கிக் கொண்டே யாரும் அறியாமல் அந்த வீட்டிலிருந்து வெளியேறினான் கவியுகன்.