யுகன்யா – 11

அத்தியாயம் – 11

“என்ன சொல்றீங்க மிஸ்டர் மதி? ரவி, இதயா இறந்ததை நினைச்சு தினமும் அழுது புலம்புறான். நீங்க என்னவென்றால் அவன் தான் இதயாவை கொன்றதாகச் சொல்றீங்களே?” தன் திகைப்பை மறைத்துக் கொண்டு பேச்சை நீடித்தான் கவியுகன்.

“அது எல்லாம் நடிப்பு சார். ஊர் உலகத்தை நம்ப வைக்க அவன் போடும் வேஷம். நீங்களும் அவன் நடிப்பை நம்பிட்டீங்க போல…” என்றான் மதியரசன்.

“எப்படி அப்படி உறுதியா சொல்றீங்க?”

“அவனைப் பற்றி எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும் சார். அவன் குணம் அப்படி. அவனுக்குச் சொந்தமானதை யாரும் தொட்டால் பிடிக்காது. அந்த இதயா பொண்ணு இறந்து போனதுக்கு முதல் நாள் இதே ஊரில் இருக்கும் நவநீதன் மலை கோவிலுக்குப் போற வழியில் அவள் கையைப் பிடிச்சு இழுத்தானாம். அது ஒன்னு போதாதா? அவனே அவளைக் கிணத்தில் தள்ளி விட்டு கொன்னுட்டு இப்ப ஒன்னும் தெரியாதவன் மாதிரி ஊரை ஏமாத்திட்டு இருக்கான்…” என்றான்.

“நவநீதன் யாரு? அவனைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?” அவனை அறியாதவன் போல் கேட்க,

“ரவிக்குப் பங்காளி முறை தான். இதயாவை கட்டிக்க அந்த நவநீதன் பய ஆசைப்பட்டான். ஆனால் இந்த ரவி விடலையே? என் கை பொருளை யாருக்கும் கொடுக்க மாட்டேன் என்பது போல இதயாவை கட்டிக்க அவன் குறியா இருந்தான். பாவம் நவநீதன்! கேட்டு பார்த்து பொண்ணு கொடுக்கலை என்று சொன்னதும், தினமும் குடிச்சே புலம்புவான். இப்ப அந்தப் பொண்ணு யாருக்கும் இல்லாம போயிருச்சு…” என்றான் அனுதாபத்துடன்.

ரவி சொன்னதையே இவன் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறான் என்று புரிந்தது. அது ரவி மீது அவனுக்கு இருக்கும் துவேஷத்தால் இருக்குமோ? என்று கவியுகனுக்குச் சந்தேகமாக இருந்தது.

“இருந்தாலும் நீங்க சொன்னதை இன்னும் என்னால் நம்ப முடியலைங்க. ரவி இதயா மேல் உயிரையே வச்சுருக்கான். அவனே எப்படிக் கிணற்றில் தள்ளி விட்டுப்பான்?” என்று நயமாகக் கேட்டு வைத்தான் கவியுகன்.

“நீங்க மட்டும் இல்லை, யாருமே நான் இதைச் சொன்னால் நம்ப மாட்டாங்க தான். நான் காரணம் இல்லாம இவ்வளவு உறுதியா சொல்வேனா?”

“என்ன காரணம்? உங்களுக்கு ஏதோ தெரியும் போல இருக்கே?”

“நான் இப்ப சொல்ல போறதை உங்க மனசோட வச்சுக்கோங்க…” என்று குரலை தணித்தான் மதியரசன்.

“கண்டிப்பாங்க. என்னவென்று சொல்லுங்க…” கவியுகனும் குரலை மென்மையாக்கினான்.

“அந்தப் பொண்ணு இறந்த அன்னைக்கு ஒரு ஏழு மணிக்கு மேல இந்த ரவி அவள் வீட்டில் இருந்து வெளியே போனதை பார்த்தேன். அப்புறம் கொஞ்ச நேரத்திலேயே அந்தப் பொண்ணைக் காணோம் என்று அவனும் சேர்ந்து தேடுவது போல ஆக்ட் கொடுத்தான்…” என்றான்.

“ஓ, ரவி நைட் இதயா வீட்டில் இருந்து போனதை நீங்க பார்த்தீங்களா?”

“அட! ஆமாங்கிறேன்…”

“அவன் தான் என்று உங்களுக்கு உறுதியா தெரியுமென்றால் போலீஸில் நீங்க இந்தத் தகவலை சொல்லியிருக்கலாமே? போலீஸ் அவனை ஒரு கை பார்த்திருப்பாங்களே?” என்று கவியுகன் கேட்க,

“நானும் போலீஸ் கிட்ட போகலாம் என்று தான் நினைச்சேன். ஆனால் எனக்கு ஒரு சின்னக் குழப்பம். அதான் சொல்லாமல் விட்டுட்டேன்…” என்று மதியரசன் தயக்கமாகச் சொல்ல,

“என்ன குழப்பம்?”

“அவன் இதயா வீட்டில் இருந்து வெளியே வந்த போது கரண்ட் போயிருச்சு. அதனால் என்னால் அவன் முகத்தை சரியா பார்க்க முடியலை. போலீஸ் அவன் முகம் பார்த்தியா என்று கேட்டால் நான் எப்படிச் சொல்ல முடியும்? அவனைப் பார்த்தேன். ஆனா அவன் முகம் பார்க்கலை என்று சொன்னால் போலீஸ் என்னை முட்டிக்கு முட்டி தட்டிடாதா? அதான் அமைதியா இருந்துட்டேன்…”

“நீங்க அவன் முகம் பார்க்கலையா? அப்புறம் எப்படி அது ரவி என்று நீங்க உறுதியா சொல்றீங்க?”

“ஆள் உயரம், உருவம் எல்லாம் பார்த்தேனே… அது அப்படியே ரவி தான்…” என்று அடித்துச் சொன்னான் மதியரசன்.

யோசனையுடன் தாடையைத் தடவிய கவியுகன்.

“என்னங்க இது? உருவம், உயரம் மட்டும் இருட்டில் பார்த்து அது ரவி என்று சொல்ல முடியுமா? அவன் உருவம், உயரத்திலேயே வேற யாரும் இருக்க முடியாதா என்ன?” அவனின் கேள்வி கூர்மையுடன் வந்தது.

“நானும் காரணம் இல்லாமல் சொல்வேனாங்க? ரவி அந்த வீட்டில் இருந்து வெளியே வந்த போது தான் அவன் முகத்தை நான் பார்க்கலையே தவிர, கரண்ட் இருக்கும் போது அவன் அந்தத் தெருவுக்குள் வந்ததை நான் பார்த்தேனே. அதனால் தான் இருட்டில் உருவம், உயரம் வச்சு அவன் தான் வந்திருக்க முடியுமென்று சொல்றேன்…”

“ஓ! கரண்ட் இருக்கும் போது அந்தத் தெருவிற்குள் வந்த ரவி, கரண்ட் போன பிறகு இதயா வீட்டில் இருந்து வெளியே வந்திருக்கான். அப்படித்தானே?”

“அதே தான்ங்க…” என்ற மதியரசனை யோசனையாகப் பார்த்த கவியுகன், “அவன் இதயா வீட்டில் இருந்து முன் பக்கமாக வெளியே வந்தானா? பின் பக்கமாக இருந்து வந்தானா?” என்று கேட்டான்.

“பின் பக்கம் இருந்து சந்து வழியாகத்தான் வந்தான். சரி, அது எதுக்கு நமக்கு? கடவுள் இருக்குறது உண்மைனா அந்தக் கடவுளே அவனுக்குத் தண்டனை தரும். நீங்க எதுக்கும் அவன் கிட்ட கொஞ்சம் கவனமாவே இருங்க. அவன் கூட்டாளி நீங்க. நான் சொன்னதை அவன் கிட்ட கேட்குறேனென்று நீங்க அவனிடம் மாட்டிக்காதீங்க, அப்புறம் அவன் உங்களையும் கொன்ற போறான்…” கண்களை உருட்டிக் கொண்டு சொன்னான் மதியரசன்.

“அதெல்லாம் கேட்க மாட்டேன்ங்க. என் உயிர் எனக்கு முக்கியம்…” என்று நல்ல பிள்ளையாகச் சொன்னான் கவியுகன்.

“நல்லது! பார்த்து சூதானமா இருந்துக்கோங்க. நீங்க இந்த ஊரில் நிலம் வாங்குவது நல்ல விஷயம் தான். ஆனா அந்த ரவி பயலை நம்பிட்டு இருக்காதீங்க. நீங்க வேற நல்ல ஆளா பார்த்து ஏற்பாடு செய்ங்க. அந்த ரவி உங்களை எந்த நல்லதும் செய்ய விட மாட்டான்…” என்றான் மதியரசன்.

“சரிங்க, இனி கவனமா இருக்கேன்…” என்று ஒப்புக்கு சொல்லி வைத்து விட்டு அவனை விட்டு விலகி நடந்தான் கவியுகன்.

“என்ன யுகா இப்படி ஒரு குண்டை தூக்கி போடுறீங்க? ரவியா அப்படி?” என்று கவியுகன் சொன்னதை நம்ப முடியாமல் கேட்டாள் அனன்யா.

கவியுகன் பதில் சொல்லாமல் அமைதியாக அனன்யாவை பார்த்தான்.

இருவரும் கவியுகன் தங்கியிருந்த அறையில் அமர்ந்திருந்தனர். இன்று இருவரும் சென்று விசாரித்து வந்த தகவலை பரிமாறிக் கொண்டனர்.

மதியரசன் சொல்லிய விஷயத்தைக் கவியுகன் மூலமாகத் தெரிந்து கொண்டு, வாயை பிளந்து நம்ப முடியாமல் பெரிது பெரிதாக மூச்சை இழுத்து விட்டாள் அனன்யா.

“நம்மை இதயா கேஸ் விஷயமா இங்கே வர வைத்ததே ரவி தானே யுகா? அப்படி இருக்கும் போது இது எப்படி? அவரே கொன்னுட்டு அவரே நம்மை விசாரிக்க வர சொல்வாரா? என்னால் இதை நம்பவே முடியலை…” என்றாள்.

அவள் பேசிக் கொண்டே இருக்க, கவியுகன் இதுவரை விசாரித்த தகவல்களைத் தன் ஐபேடில் குறிப்பாக எழுதிக் கொண்டிருந்தான்.

“என்ன யுகா, எனக்கு இந்த நியூஸ் எவ்வளவு ஷாக்காக இருக்கு. நீங்க என்னனா இவ்வளவு அமைதியா இருக்கீங்க?” என்று கேட்டாள்.

“இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? அமைதியா இரு…” என்றான் அப்போதும் நிதானமாக.

“அமைதியா இருக்கிறதா? நீங்க எப்படி இவ்வளவு கூலா இருக்கீங்க? என்னால் முடியலையே…” என்று புலம்பினாள்.

“இப்ப டென்ஷன் ஆகி என்ன சாதிக்கப் போற? அந்த மதியரசன் சொன்ன விஷயத்தை எல்லாம் அமைதியா யோசி…” என்றான்.

“இல்லை, என்னால் எதுவும் யோசிக்க முடியலை. அந்தப் பக்கம் என்னனா உதயா ஏதோ மறைகிறாள் என்ற டவுட்டுடன் நான் வந்தால், இந்தப் பக்கம் நீங்க ரவி தான் இதயா இறப்புக்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டு வர்றீங்க…” என்ற அனன்யா தான் கேட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தலையைக் குலுக்கிக் கொண்டாள்.

“நமக்கு இந்தக் கேஸில் இன்னொரு கோணம் கிடைத்திருக்கு‌. அதை யோசித்துப் பார்…” என்று அவளை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் ஐபேடில் டைப் செய்து கொண்டே கவியுகன் சொல்ல,

“அப்படி என்ன கோணம் கிடைச்சிருக்கு? எனக்கு ஒன்னும் புரியலையே. ஒருவேளை நீங்க ரவி மேல சந்தேகப்படுறீங்களா?” என்று கேட்டவளை விழியுயர்த்திப் பார்த்தான்.

முழுதாகக் குழம்பி போய் அமர்ந்திருந்தாள் அனன்யா.

தன் ஐபேடை லாக் செய்து ஓரமாகத் தூக்கி வைத்தவன், “நம்ம வேலையோட தாரக மந்திரம் என்ன தெரியுமா அனன்யா?” என்று கூர்மையுடன் கேட்டான்.

“என்ன?” புருவத்தை நெரித்துக் கேட்டாள்.

“கண்ணால் காண்பதும் பொய்! காதால் கேட்பதும் பொய்! தீர விசாரிப்பதே மெய்!” ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாகச் சொன்னான்.

அவன் சொல்ல வருவது புரிந்தது. ஆனாலும் தன் குழப்பம் தெளியாமல் அவனைப் பார்த்தாள்.

“நம்ம வேலையில் குழப்பம் தேவை தான். ஆனால் நாமே குழம்பிக் கொள்ளக் கூடாது அனன்யா…” என்றான் கண்டிப்புடன்.

அவனின் கண்டிப்பு வேலை செய்ய, நெற்றியை அழுந்த தேய்த்து விட்டுக் கொண்டு, தன்னை அமைதியாக்கி கொள்ள முயன்றாள்.

அவளுக்குச் சில நொடிகள் கொடுத்தவன், நிதானமாகத் தன் பேச்சை ஆரம்பித்தான்.

“மதியரசன் சொன்னது போல் ரவி தான் குற்றவாளி என்று நாம முத்திரை குத்த முடியாது. அதே நேரத்தில் அவன் குற்றவாளி இல்லை என்று ஒதுக்கி விடவும் முடியாது…” என்று கவியுகன் சொல்ல, இன்னும் தான் குழம்பிப் போனாள் பெண்ணவள்.

“என்னைக் குழம்பிப் போகக் கூடாது என்று சொல்லிவிட்டு இப்போ இன்னும் நல்லா குழப்பி விடுறீங்க யுகா…” என்றாள் பரிதாபமாக.

அவள் முதல்முறையாக இதுபோல் பார்க்கும் கேஸ் என்பதால் தெளிவில்லாமல் இருக்கிறாள் என்று அவனுக்குப் புரிந்தது.

அதனால் தான் இவ்வளவு பொறுமையாக அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறான். இதுவே தியாகுவோ, ஜனார்த்தனியோ இந்த இடத்தில் இருந்திருந்தால், அவன் விளக்கம் சொல்லாமலே அவர்கள் புரிந்து கொண்டிருந்திருப்பார்கள்.

‘ஒன்றும் தெரியாமல் என் கூட ஏன் வர பிடிவாதம் பிடித்தாய்?’ என்று கேட்காமல், நிதானமாக அவளிடம் பேச ஆரம்பித்தான் கவியுகன்.

“பொறுமையா கவனி! இதயா கேஸில் இதுவரை நமக்கு ஒரு தெளிவான க்ளூ எதுவும் கிடைக்கலை. ஒருபக்கம் நவநீதன் மேல நமக்கு டவுட் இருந்தது. அதே போல் உதயாவும் ஏதோ மறைக்கிறாள் என்று உன் மூலமா இப்போ ஒரு தகவல் கிடைச்சிருக்கு. இதை எல்லாம் விடப் பெரிய க்ளூ தான் மதியரசன் சொன்னது.

இதயா இறந்த அன்று இரவு என்ன நடந்தது என்று தெரியாம நாம குழப்பத்தில் இருந்தோம். ஆனா இப்போ இதயா இறந்த அன்று, அவள் இறந்த அதே நேரத்தில், ஒருத்தன் அவள் வீட்டில் இருந்து வெளியே போயிருக்கான்…”

“அது ரவி தான் என்று மதியரசன் சொல்லியிருக்கானே? ரவினே சொல்லுங்க. ஏன் ஒருத்தன் என்று சொல்றீங்க?” என்று குறுக்கிட்டு கேட்டவளை கடுமையாக முறைத்தான்.

அவன் முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் அனன்யா.

“இப்படி எல்லாம் அவசரக்குடுக்கையா இருந்தால் நீ ஒரு நல்ல டிடெக்டிவா ஆக முடியாது அனன்யா. நிதானம், பொறுமை, கிரகிக்கும் தன்மை எல்லாம் வேணும். உனக்கு ஒரு டிடெக்டிவா ஆக ஆசை இருக்கா இல்லையா? இருந்தால் மட்டும் சொல்லு, தொடர்ந்து வேலை பார்க்கலாம். இல்லைனா நீ ஊருக்கு கிளம்பி போயிட்டே இரு. டிடெக்டிவா ஆகணும் என்று ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதுக்கு ஏற்ப நடந்து கொள்ளவும் செய்யணும்…” என்று சற்று கண்டிப்புடனே எடுத்துரைத்தான்.

“என்ன யுகா இப்படிச் சொல்லிட்டீங்க? எனக்கு டிடெக்டிவ் ஆகணும். நான் ஊருக்கு எல்லாம் போக மாட்டேன்…” என்று சிலிர்த்துக் கொண்டாள்.

“இதுக்கு மட்டும் துள்ளிக்கிட்டு வா. அதுக்கு முன்னாடி டிடெக்டிவ் ஆகணும் என்றால் எப்படி நடந்துக்கணும் என்று சொன்னேனே… அது உன் மண்டையில் ஏறியதா இல்லையா?” என்று கடுப்புடன் கேட்டான்.

“ஏறுச்சு… ஏறுச்சு…” என்று முனங்கினாள்.

“எங்க ஏறியிருந்தால் நான் ஊருக்குப் போகச் சொன்னதை மட்டும் பேசியிருக்க மாட்டாய்…” என்றான் முறைப்புடன்.

“நான் நிதானமா இருக்கேன். நீங்க மேலே சொல்லுங்க…” என்று அவனைச் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினாள்.

போனால் போகிறது என்பது போல் அவனும் விஷயத்திற்கு வந்தான்.

“ரவி அந்தத் தெருவில் கரண்ட் இருக்கும் போது வந்ததை மதியரசன் பார்த்திருக்கான். ஆனால் இதயா வீட்டுக்குள் போனதை அவன் பார்க்கலை. ஆனால் திரும்பி ஒருவன் வருவதைப் பார்த்திருக்கான். ஆனால் அது ரவியாகத் தான் இருக்குமென்று உறுதியா தெரியாது. கரண்ட் இல்லாததால் அவன் முகம் பார்க்க முடியலை. ஆனால் உயரம், உடல் அமைப்பு வைத்து அது ரவியாக இருக்கலாம் என்பது மதியரசன் யூகம்.

ஆனால், இங்கே நோட் பண்ண வேண்டிய இன்னொரு விஷயம், நம்ம சந்தேக லிஸ்டில் இருக்கும் நவநீதனுக்கும் ரவியைப் போல் அதே உயரம், உடலமைப்பு தான். அது ஏன் நவநீதனா இருக்கக் கூடாது?” என்று கேட்டான்.

சில நொடிகள் எதையோ யோசிப்பது போல் மௌனமாக இருந்த அனன்யா, “ஆனால், நம்மகிட்ட எல்லாம் சொன்ன ரவி, ஏன் இதயா வீட்டுப் பக்கம் அந்த நேரம் போனதை அவர் நம்மகிட்ட சொல்லலை…”

“குட்! தெட் இஸ் தி பாயிண்ட்! ஏன் நம்மகிட்ட ரவி அதை மறைச்சான்? இது இப்ப நமக்குச் சந்தேகத்தைக் கிளம்புது. அதே போல இதுவரை கிடைக்காத க்ளூவா, இதயா வீட்டில் இருந்து போனவன், ரவி அல்லது ரவியைப் போலவே ஒரு ஆள் என்று நமக்குத் தெரிய வந்திருக்கு. இதை வச்சு கேஸை அடுத்து எப்படி மூவ் பண்ணனும் என்று நாம யோசிக்கணும்…” என்றான்.

“பேசாம ரவிகிட்ட ஏன் மறைச்சார் என்று கேட்கலாமா?” என்று ஏதோ ஒரு யோசனையில் சொல்லிவிட்டு, அப்போது தான் தான் சொல்வது எவ்வளவு பெரிய மடத்தனம் என்று புரிந்தது என்பது போல் நாக்கை கடித்துக் கொண்டாள்.

“ஸாரி… ஸாரி… ஒரு ப்ளோவில் சொல்லிட்டேன்…” அவன் திட்டுவதற்கு முன் வேகமாக மன்னிப்புக் கேட்டாள்.

“இப்படி உளறுவதை என்னைக்குத் தான் நிறுத்த போறியோ? அவன் மறைகிறான் என்றால் அப்போ ஏதோ விஷயம் இருக்கு என்று தானே அர்த்தம்? ஒருவேளை அவனே கூட இதயாவை கொன்னுட்டு விஷயத்தைத் திசை திருப்ப நம்மை வர வைத்திருக்கலாம் தானே? அதைக் கூட யோசிக்காம, சின்னப் பிள்ளை போல உளறிட்டு இருக்க…” என்றான் கடுப்புடன்.

“அதான் ஸாரி சொல்லிட்டேனே…” என்று முனங்கினாள்.

“எல்லாம் பேசி முடிச்சிட்டு ஸாரி என்று சொன்னால் நீ பேசி முடித்தது மறைந்து போயிடுமா என்ன? பேசும் முன்னாடி யோசித்துப் பேசு அனன்யா…” என்றான்.

அனன்யாவின் முகம் சுருங்கிப் போனது.

இன்று தான் ரொம்பவே உளறுவது புரிந்தது.

ஆனால் புதியதாக ஒரு க்ரைம் வழக்கை அணுகும் பதட்டம் தான் தன்னை ஆக்கிரமித்து உளற வைக்கிறது என்பதையும் அவளின் மூளை அறிவுறுத்தியது.

‘அடங்கு அனு. நீ இப்படியே உளறி வச்சுட்டு இருந்தால் யுகா இப்பவே உன்னை மூட்டை கட்டிக் சென்னைக்கு அனுப்பி வச்சுடுவார்’ என்று தனக்குத் தானே எச்சரிக்கையும் செய்து கொண்டாள்.

சில நொடிகள் கண்களை மூடி, ‘நிதானமாக யோசி!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள், இதுவரை தாங்கள் பேசியதை எல்லாம் ஆராய்ந்தாள்.

அப்போது தான் ஒன்று தோன்ற, “உதயாவை பற்றி இன்னும் நீங்க எதுவும் சொல்லலையே?” என்று விழிகளைத் திறந்து கேட்டாள்.

“உதயா மேல் இருக்கும் டவுட்டையும் நாம அப்படியே விட்டு விடப் போவதில்லை. இன்னைக்கு நீ இவ்வளவு பேச வச்சு உதயாகிட்ட இருந்து நிறைய விஷயம் வாங்கியிருக்க. இதை அப்படியே மெயின்டெயின் செய்! இன்னும் விஷயங்களை வாங்க முயற்சி செய்! நான் இந்தப் பக்கம் சில வேலைகளைப் பார்க்கிறேன்…” என்றான்.

“என்ன வேலை பார்க்க போறீங்க?” ஆவலாகக் கேட்டவளுக்குப் பதில் சொல்லாமல் மர்மமாகச் சிரித்தான் கவியுகன்.