யுகன்யா – 10

அத்தியாயம் – 10

“ஹாய் உதயா, இன்னைக்கு எங்கே போகலாம்?” என்று கேட்ட அனன்யாவை பார்த்துச் சோபையாகப் புன்னகைத்தாள் உதயா.

“மலை கோவில் போகணும் என்று சொன்னீங்களே… அங்கே போகலாம் அனன்யா…” என்றாள்.

“டபுள் ஓகே!” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள் அனன்யா.

“சாப்பிட்டியா அனன்யா? இல்லைனா இங்கே சாப்பிடேன்…” என்று காஞ்சனா சொல்ல,

“நான் சாப்பிட்டேன் ஆன்ட்டி. மேகலா ஆன்ட்டி குழிப்பணியாரம் செய்திருந்தாங்க. டேஸ்ட் சூப்பரா இருந்தது. ஒரு வெட்டு வெட்டிட்டேன்…” என்றாள்.

“குழிப்பணியாரமா? குழிப்பணியாரம் என்றால் இதயாவுக்கு ரொம்பப் பிடிக்கும்…” என்றவர் சட்டென்று கண் கலங்கினார்.

“ஓ, அது தான் ரவி இன்னைக்கு சரியா சாப்பிடலை போலிருக்கு?” அவர்களுக்கும் கேட்கும் வண்ணம் முணுமுணுத்தாள் அனன்யா.

“குழிப்பணியாரம் பார்த்ததும் ரவிக்கு இதயா ஞாபகம் வந்திருக்கும். ம்ம்ம்… நல்ல பையன். எங்க வீட்டுக்கு மருமகனா வர கொடுத்து வைக்கலை…” என்றார் வேதனையுடன்.

“புவனும் ரொம்ப நல்லவர் தானே ஆன்ட்டி. அவராவது உங்க மருமகனா வரப் போறாரேன்னு சந்தோஷப்பட்டுக்கோங்க…” என்று அனன்யா சொல்ல,

“அதை நினைச்சுத்தான் மனசை தேத்திக்கணும். ம்ம்ம்…” என்று பெருமூச்சு விட்டார் காஞ்சனா.

ஆனால் உதயாவின் முகமோ மாறியது.

வாய் பேசிக் கொண்டிருந்தாலும் அனன்யாவின் கவனம் முழுவதும் உதயாவின் மீதிருக்க, அவளின் முக மாற்றத்தைக் கண்டு யோசனையில் நெற்றியைச் சுருக்கினாள்.

“ஓகே ஆன்ட்டி. நாங்க மலை கோவில் போயிட்டு வந்திடுறோம்…” என்றவள், “உதயா கிளம்பலாமா?” என்று கேட்டாள்.

“போகலாம் அனன்யா…” என்று அவளுடன் கிளம்பினாள் உதயா.

இருவரும் மெல்ல வயல்வெளி வழியாக மலைகோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் பொதுபடையாக அந்த ஊரைப் பற்றி, விவசாயம் பற்றிப் பேசிக் கொண்டே நடந்தனர்.

“விவசாய நிலம் வாங்க எப்படி இந்த ஊரை தேர்ந்தெடுத்தீங்க அனன்யா?” என்று உதயா கேட்க,

“யாராவது தெரிந்தவர் இருக்கும் ஊராக இருந்தால் வசதியா இருக்கும் என்ற எண்ணம் தான் காரணம் உதயா. எங்க கூடப் படிச்ச ரவி கிராமத்தில் தானே இருக்கார். அவர் உதவி செய்வார் என்று இந்த ஊரை தேர்ந்தெடுத்தோம்…” என்றாள் அனன்யா.

“ஆமாம். அத்தானுக்கு விவசாயத்தில் ரொம்ப இன்ட்ரெஸ்ட். மாமா இருந்த போதே அவர் கூடச் சேர்ந்து படிச்ச படிப்புக்குத் தான் வேலைக்குப் போகணும் என்று நினைக்காம விவசாயம் பார்க்க ஆரம்பிச்சுட்டார்…” என்றாள் உதயா.

“புவன் எப்படி உதயா?”

“எப்படினா?”

“எந்த மாதிரி வேலை பார்க்க பிடிக்கும்?”

“அவர் படிப்பை முடிச்சு முதலில் சென்னையில் ஒரு கம்பெனியில் தான் வேலை பார்த்துட்டு இருந்தார். மாமா திடீரென இறந்ததும் இங்கே வந்துட்டார். அதுக்குப் பிறகு ரவி அத்தான் மட்டும் தனியா எல்லாமே பார்க்க வேண்டியது இருக்கே என்று வேலையை விட்டுட்டு மில்லை பார்த்துக்க ஆரம்பிச்சுட்டார். இப்ப இந்த வேலை பிடிச்சிருக்கு என்று சொல்வார்…” என்றாள்.

“உனக்கு அவரைப் பிடிக்குமா உதயா?” சட்டென்று கேட்டு விட்டாள் அனன்யா.

“பிடிக்குமே! ஏன் கேட்குறீங்க?” உதயா புரியாமல் கேட்க,

“இல்லை, நானும் இங்கே வந்ததில் இருந்து பார்த்துட்டு இருக்கேன். நீங்க இரண்டு பேரும் பேசிக்கக் கூட மாட்டிக்கிறீங்க. உங்க கல்யாணத்தைப் பற்றிப் பேசினால் உன் முகத்தில் சந்தோஷமே இல்லை. அது தான் கேட்டேன்…” என்றதும் உதயா அமைதியாக வந்தாள்.

“ஸாரி… ஸாரி… உன்னோட பர்சனலை நான் கேட்டுருக்கக் கூடாது…” அவள் அமைதியைப் பார்த்து அனன்யா பதட்டமாகச் சொல்ல,

“நீங்க கேட்டதில் எந்தத் தப்பும் இல்லை. கல்யாணம் பண்ணிக்கப் போறவங்க இப்படிக் கண்டுக்காதது போல் இருந்தா,ல் உங்களுக்கு இந்தக் கேள்வி தோன்றியது நியாயம் தான்…” என்று அவளைப் பார்த்து சிரித்த உதயா,

“எனக்குப் புவன் அத்தானை பிடிக்கும். அவருக்கும் என்னைப் பிடிக்கும். ரவி அத்தான், இதயா கல்யாணம் அன்னைக்குத் தான் எங்களுக்கு நிச்சயம் செய்யணும் என்று வீட்டில் முடிவு செய்திருந்தாங்க. ஆனால் இதயா இப்படித் திடீரென இறந்ததால் கல்யாணமும் இல்லை, எங்க நிச்சயமும் நடக்கலை.

அதுக்கு முன்னாடி ரவி அத்தானுக்கும், இதயாவிற்கும் நிச்சயம் நடத்தணும் என்று முடிவு செய்திருந்த போது தான் மாமா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார். எங்க நிச்சயம் அப்போ இதயா…” என்றவள் அடுத்து பேச முடியாமல் சில நொடிகள் மௌனமானாள்.

அவள் முகம் வேதனையில் கசங்கி வழிந்தது. அவள் கண்களும் கலங்கியிருக்க, அவளின் உள்ளங்கையை ஆறுதலாக பற்றி அழுத்திக் கொடுத்தாள் அனன்யா.

சற்று நேரத்தில் தன்னைத் தேற்றிக் கொண்ட உதயா, “இப்படி நிச்சயம் முடிவு செய்த நேரத்தில் எல்லாம் யாராவது வீட்டில் இறந்து போறாங்க. சகுனமே சரியில்லை. இனி புவன், உதயா கல்யாணத்தைக் கூடச் செய்து வைக்க யோசிக்கணும் என்று இதயா இறந்த மறுநாள் மேகலா அத்தை புலம்பினாங்க.

அதில் என் காதில் விழவும் என்னால் தாங்கவே முடியலை. அதுவும் இறந்து போனது என் கூடப் பிறந்தவள். அந்த நினைப்பு கூட இல்லாமல் எங்க குடும்ப ராசி தான் இதுக்குக் காரணம் என்று அத்தை சொன்னது என்ன வகையில் நியாயம்? நீங்களே சொல்லுங்க?” என்றாள்.

“இது சரியில்லையே? பெரும் இழப்பு உங்களுக்குத் தானே…” என்றாள் அனன்யா.

“அதே தான். மாமா இழப்பு அவங்க பக்கம் எப்படிப் பெரும் இழப்போ… அதே போல் தானே எங்களுக்கும் பெரும் இழப்பு. அதுவும் இதயா வாழ வேண்டிய வயசு. எவ்வளவு ஆசை, கனவுகளோட இருந்திருப்பாள்? ஆனால், எதுவும் நடக்காமல் அல்பாயிசில் போயிட்டாள். அந்த எண்ணம் கூட இல்லாமல் எங்க குடும்ப ராசி தான் இப்படி இழப்பு வர காரணம் என்று சொன்னதைக் கேட்ட பிறகும், நான் எப்படி அமைதியா இருக்க முடியும்?

அதுதான் புவன் அத்தான்கிட்ட நீங்க வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கோங்க. நமக்கு இனி நிச்சயமும் நடக்க வேண்டாம், கல்யாணமும் நடக்க வேண்டாம், எங்க குடும்ப ராசியினால் இன்னொரு இழப்பும் வேண்டாம் என்று சொல்லிட்டேன். அதில் அவருக்குக் கோபம்.

எங்க அம்மா ஏதோ அப்ப இருந்த துக்கத்தில் சொல்லியிருப்பாங்க. அதுக்காக நீ என்னை வேண்டாம் என்று சொல்லுவியான்னு கேட்டுக் கோபித்துக் கொண்டார். அவர் சொன்ன மாதிரி மேகலா அத்தை அன்னைக்குப் பிறகு அது மாதிரி எதுவும் திரும்ப ராசி என்று பேசலை. அவங்க துக்கத்தில் தான் ஏதோ புலம்பிட்டாங்க போல. அது புரியாம நான் வேற புவன் அத்தான்கிட்ட அப்படிச் சொல்லி வைக்க, அவர் முறுக்கிக் கொண்டார். நானும் அப்படிப் பேசியது தப்பு தான் என்று மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவர் சமாதானம் ஆகவே இல்லை…” என்றாள் வருத்தமாக.

“ஊடல்!” என்று சொல்லி சிரித்தாள் அனன்யா.

“ம்ம்… நானும் புவன் அத்தான்கிட்ட பேசி மன்னிப்பும் கேட்டுப் பார்த்துட்டேன். ஆனால், என்னால் அவர் கோபத்தை மலை இறக்கவே முடியலை. அதில் இருந்து என்கிட்ட கோபப்பட்டு சரியா பேசுவதும் இல்லை…” என்றாள் சோகமாக.

“உங்க இரண்டு பேர் ஊடல் வீட்டில் வேற யாருக்கும் தெரியாதா?” அனன்யா கேட்க,

“அத்தை பேசியது எனக்கும், புவன் அத்தானுக்கும் மட்டும் தான் தெரியும். நான் வேற யார்கிட்டயும் சொல்லலை. அதனால் புவன் அத்தான்கிட்ட நான் அப்படிப் பேசியதையும் யார்கிட்டயும் சொல்லிக்கலை. அவரும் அப்படித்தான்…” என்றாள்.

“ரவி கூட நீங்க பேசாமல் இருப்பதைக் கவனிக்கலையா?”

“அவருக்கு இதயா போன துக்கம். அவர் எதையுமே இப்ப எல்லாம் கவனிக்கிறது இல்லை. ஜடம் போல் தான் நடமாடிக்கிட்டு இருக்கார்…” என்றவள் வேதனை பெருமூச்சு விட்டு கொண்டாள்.

“பாவம் தான்! அவரோட ஆசை, கனவுகள் எல்லாம் இதயாவோட போயிருச்சு என்று நினைச்சுட்டு இருக்கார்…” என்றாள் அனன்யா.

“ஆமாம். மாமா இறந்த பிறகு அவங்க கல்யாணம் தள்ளிப் போகவும், அந்த இடைப்பட்ட காலத்தில் ரவி அத்தானும் ,இதயாவும் உயிருக்குயிரா விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க. தினமும் இரண்டு பேரும் மணிக்கணக்கா போனில் பேசிப்பாங்க. இதயா நைட் எல்லாம் தூங்காம அத்தான் கூட அவ்வளவு சந்தோஷமா பேசிட்டு இருப்பாள். ஆனால் அவள் இப்போ…” என்றவள் கண்ணில் இருந்து சரசரவெனக் கண்ணீர் இறங்கி வந்தது.

“ரிலாக்ஸ் உதயா…” என்று அவள் தோளை அணைவாகப் பிடித்து ஆறுதல் சொன்னாள் அனன்யா.

இருவரும் பேசிக் கொண்டே மலையடிவாரத்தில் இருந்த காட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.

காட்டுள் இருந்து ஆண்களின் பேச்சுக்குரல் கேட்க, “இங்கே நிற்க வேண்டாம். சல்லி பயலுகளா இருப்பாங்க…” என்று தன்னைத் தேற்றிக் கொண்டு, அனன்யாவையும் அழைத்துக் கொண்டு, மலைக்கு ஏறும் பாதைக்குச் சென்றாள்.

“இந்த மலையில் மேலே முருகன் கோவில் இருக்கு. இந்தக் கோவில் இதயாவுக்கு ரொம்பப் பிடிக்கும். செவ்வாய், வெள்ளி ஆனால் போதும் இதயா இங்கே வந்திடுவாள். ரவி அத்தானும், நாங்களும் சொந்தம் தான் என்றாலும், கல்யாணம் முடிவு ஆகியிருந்ததால் பொண்ணு, மாப்பிள்ளையும் வெளியே எங்கேயும் அவ்வளவு சுலபமா சந்திச்சு பேசிட முடியாது.

ஊர் பார்வை எல்லாம் அந்த ஜோடி மேல் தான் இருக்கும். அதனால் ரவி அத்தானும், இதயாவும் சந்தித்துக் கொள்ள இந்தக் கோவிலைத் தான் தேர்ந்தெடுத்துட்டாங்க. இந்தக் கோவிலுக்குக் கூட்டம் நிறைய வராது. ஊருக்குள்ளேயே இருக்குற ஒரு கோவிலுக்குத் தான் போவாங்க…சிலர் மட்டும் இந்தக் கோவிலுக்கு வர ஆசைப்பட்டு வருவாங்க.

அதனால் அத்தானுக்கும், இதயாவுக்கும் ரொம்பத் தொந்தரவு இல்லாம சந்தித்துக் கொள்ள இந்தக் கோவில் தான் வசதியா இருக்கு என்று இதயா சொல்வாள். அதோ அங்கே இருக்கு பாருங்க ஒரு மரம்…” என்று பாதி மலையில் இருந்த பாதைக்கு எதிர்பக்கமாக இருந்த ஒரு பெரிய மரத்தை காட்டினாள் உதயா.

“ஆமாம்…” அனன்யா பார்த்து விட்டு சொல்ல,

“அந்த மரத்துக்குக் கீழே தான் இரண்டு பேரும் உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க. சில நேரம் நானும் இதயா கூட வருவேன். அப்போ நான் கோவிலில் காத்துக்கிட்டு இருப்பேன். பேசி முடிச்சுட்டு இரண்டு பேரும் மேலே வந்து சாமி கும்பிட்டுட்டு, எங்க இரண்டு பேரையும் முன்னாடி போகச் சொல்லிட்டு, அத்தான் எங்களுக்குத் துணையா கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னாடி வருவார்…”

கண் முன் நடந்தது அனைத்தும் இப்போது கனவு போல் தெரிய, ஒவ்வொரு இடத்தையும் பார்த்து கண்கலங்கினாள் உதயா.

அவளுக்கு ஆறுதல் சொல்லும் வகையற்று அவளையே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

உதயாவின் ஒவ்வொரு துளி கண்ணீரும் இதயாவின் மீது அவள் வைத்திருந்த பாசத்தைச் சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தது.

அவளின் கண்ணீரும் உண்மை! அவளின் வருத்தமும் உண்மை! என்பதை அனன்யாவால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இதயாவின் இறப்பிற்கு இவள் சிறிதளவு கூடக் காரணமாக இருக்க மாட்டாள் என்று அனன்யாக்கு தோன்றியது.

ஆனாலும் நீண்ட நேரம் உறுத்திய கேள்வியைக் கேட்டாள் அனன்யா.

“ரவியும், இதயாவும் இவ்வளவு விரும்பியிருக்காங்க. அப்படி இருக்கும் போது இதயா ஏன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கணும் உதயா?” என்று கேட்டாள்.

அந்தக் கேள்வியில் உதயாவின் முகம் சட்டென்று மாறியது.

ஆனால் அனன்யா பார்த்து விடக் கூடாது என்று வேகமாகத் தன் முகப்பாவனையை மறைத்துக் கொண்டாள் உதயா.

ஆனால் அதற்கு முன் அனன்யா அவள் முக மாற்றத்தை கண்டு கொண்டாள்.

“ஏன் அப்படி உதயா?” என்று அவளைக் கவனிக்காதது போலவே கேட்டு வைத்தாள் அனன்யா.

“அது… அது…” என்று சற்று திணறியவள், “அது தான் எனக்கும் தெரியலை. அவள் இப்படிச் செய்து கொள்வாள் என்று நாங்க எதிர்பார்க்கவே இல்லை…” என்ற உதயாவின் குரல் உடைந்து போயிருந்தது..

“தற்கொலை செய்துக்கணும் என்றால் ஒரு ரீசன் வேணும் தானே உதயா? ரவியை அவளுக்குப் பிடிச்சிருந்திருக்கு. ஒருத்தரை ஒருத்தர் விரும்பவும் செய்திருக்காங்க. கல்யாண நாளை நினைத்து ஆவலாகக் காத்துக்கிட்டும் இருந்துருக்காங்க. அப்படி இருக்கும் போது எப்படி இதயா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க? என்னால் இதை நம்பவே முடியலை…” என்றாள் அனன்யா.

அவள் முகம் பார்க்காமல் எங்கோ பார்த்த உதயா, “எனக்கும்… எனக்கும் தான் நம்ப முடியலை. அவள் இப்படிச் செய்துக்குவாள் என்று நான் நினைக்கலையே. இப்படி அவள் மனசு உடைந்து போயிருவாள் என்று எனக்குத் தெரிந்திருந்தால் நா… நான்…” உணர்ச்சி வேகத்தில் ஏதோ பேசிக் கொண்டே வந்த உதயாவின் குரல் தேய்ந்து சட்டென்று நின்றும் போனது.

“நீ? என்ன உதயா. ஏதோ சொல்ல வந்த?” தனக்குள் எழுந்த பரபரப்பை காட்டிக் கொள்ளாமல் சாதாரணமாகக் கேட்டு வைத்தாள் அனன்யா.

“ஹான்…” என்று சட்டென்று தலையை உதறிக் கொண்ட உதயா, “ஒன்னுமில்லை. இதயா பத்தி பேச பேச எனக்குத் தொண்டை எல்லாம் அடைச்சுட்டு வருது. என் உடன் பிறப்பு இப்போ உயிரோட இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியலை…” என்று வேக வேகமாகச் சொல்லி பேச்சை மாற்றிய உதயா, “கோவிலுக்குப் போய்ட்டுச் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் அனன்யா. எனக்குத் தலை வலிக்கிற மாதிரி இருக்கு…” என்று அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திக் கொண்டாள்.

“சரி, வா கோவிலுக்குப் போவோம்…” என்ற அனன்யாவின் பார்வை உதயா அறியாத வகையில் அவள் மேல் யோசனையுடன் படிந்து மீண்டது.

உதயா ஏதோ சொல்ல வந்து நிறுத்தியது போல் இருக்க, என்ன சொல்ல வந்திருப்பாள் என்ற சிந்தனை அனன்யாவின் தலையைக் குடைய ஆரம்பித்தது.

அதுவரை உதயாவின் கலக்கத்தைப் பார்த்து, இதயா இறப்பிற்கு அவள் எந்த வகையிலும் காரணமாக இருக்க முடியாது என்ற அனன்யாவின் எண்ணம் அந்த நொடி தவிடுபொடியானது.

‘நவநீதன் மட்டும் இல்லாமல், இவளும் நம்ம சந்தேக லிஸ்டில் சேர்ந்து விடுவாள் போலயே’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டு உதயாவை சந்தேகக் கண்களுடன் பார்க்க ஆரம்பித்தாள் அனன்யா.

இன்று காலையில் மொட்டை மாடியில் கிடைத்த சிறிய துணியில் இருந்த N என்ற எழுத்தை பார்த்து நவநீதன் மீதும் சந்தேகம் வந்தாலும், அவர்களின் சந்தேக வரிசையில் இருக்கும் உதயாவையும், மதியரசனையும் கண்டு கொள்ளாமல் விட முடியாது என்ற எண்ணத்தில் தான் அனன்யாவை உதயாவிடம் பேசி பார்க்கும் படி அனுப்பி வைத்திருந்தான் கவியுகன்.

அவளை இங்கே அனுப்பி வைத்து விட்டு கவியுகன் மதியரசனை பற்றி விசாரணையை மேற்கொள்ளச் சென்றிருந்தான்.

தாங்கள் இந்த ஊருக்கு வந்த காரணத்தைச் சொல்லியே மதியரசனை நெருங்க முடிவு செய்து, ரவீந்திரனை அழைத்துச் செல்லாமல், நிலம் வாங்கும் விஷயமாக விசாரிக்க வந்ததாக மதியரசனிடம் தற்செயலா விசாரிப்பது போல் சந்தித்தான் கவியுகன்.

அவன் மதியரசனை தேடி சென்ற போது அவன் தன் வயலில் இருந்தான்.

“பெரிய வீட்டுக்கு வந்திருக்கிறவக காத்து என்ன நம்ம வயலுக்குப் பக்கம் வீசுது?” என்று கவியுகனைப் பார்த்ததும் நக்கலாகக் கேட்டான் மதியரசன்.

தன் பின்னால் திரும்பி பார்த்து விட்டு மீண்டும் அவன் புறம் திரும்பிய கவியுகன், “என்னையா சொல்றீங்க?” என்று அறியாதவன் போல் கேட்டு வைத்தான்.

“உங்களைத்தான். நீங்க தானே பெரிய வீட்டுக்கு வந்திருக்கீங்க? நீங்க எங்க இங்கே? உங்க கூட்டாளி எப்படி உங்களை இந்தப் பக்கம் விட்டான்? ஒருவேளை என்கிட்ட இருக்குற நிலத்தையும் பிடிங்கிக்கச் சொல்லி அந்த ரவி உங்களைத் தூது விட்டானா?” என்று கடுமையாகக் கேட்டான் மதியரசன்.

“நீங்க ஏதோ தவறா நினைச்சுக்கிட்டீங்க. ரவி என்னை அனுப்பலை. நான் தான் இந்தப் பக்கம் விளைச்சல் எல்லாம் நல்லா இருக்கே என்று பார்க்க வந்தேன்…” என்று கவியுகன் நயமாகச் சொல்ல,

“பின்ன விளைச்சல் இல்லாம எப்படி இருக்கும்? எல்லாம் கெமிக்கல் கலக்காத இயற்கை உரம் போட்டுல விளைய வைக்கிறோம். விளைச்சல் அமோகமாத்தான் இருக்கும்…” என்று பெருமையாக மீசையை முறுக்கி விட்டுக் கொண்டான் மதியரசன்.

“நல்லதுங்க. நானும் இயற்கை விவசாயம் செய்யத்தான் ஆசைப்பட்டு இந்த ஊரில் நிலம் வாங்கலாம் என்று வந்திருக்கேன்…” கவியுகன் சொல்ல,

“இந்த ஊரில் விவசாயம் செய்யப் போறீங்களா?” மதியரசன் யோசனையுடன் கேட்க,

“ஆமாம்…” என்றான் கவியுகன்.

“ஏங்க உங்களுக்கு நிலம் வாங்க வேற ஊரா கிடைக்கலை? அதுவும் யார் வீட்டில் வந்து இருந்துகிட்டு இங்கே நிலம் வாங்க ஆசைப்பட்டீங்க? அந்த ரவி சரியான எமகாதகன். அவனுக்கு இந்த ஊரில் அவன் மட்டும் தான் பெரிய மனுஷன் என்று சொல்லிக்கிட்டு நிலபுலனோட வாழணும். மத்தவங்களை எல்லாம் இந்த ஊரில் சொந்தமா கால் ஊன விட மாட்டான் அவன்…” என்று ஆத்திரத்துடன் மதியரசன் பல்லை கடிக்க, அவனை ஆச்சரியமாகப் பார்த்த கவியுகன்,

“ரவியா? ரவி அப்படி எல்லாம் இல்லைங்க. அவனே எனக்கு நிலம் வாங்க ஹெல்ப் செய்றேன் என்று சொல்லியிருக்கான்…” என்றான்.

“அதெல்லாம் சும்மா வெளி வேஷம். செய்ற மாதிரி பாவ்லா தான் காட்டுவானே தவிர, முழு மனசோட செய்ய மாட்டான். அந்த அளவுக்கு அவன் உடம்பு எல்லாம் விஷம் தான் இருக்கு. அவனை லேசுப்பட்டவன் என்று நினைக்காதீங்க. அவன் கல்யாணம் பண்ணிக்க இருந்த பெண்ணையே கொன்னவன் அவன்…” என்று மதியரசன் சொல்ல, அவனை உள்ளுக்குள் ஏற்பட்ட அதிர்வுடன் பார்த்தான் கவியுகன்.