யுகன்யா – 1

அத்தியாயம் – 1

யுகா டிடெக்டிவ் ஏஜென்சிஸ்.

“குட்மார்னிங் பாஸ்!” என்ற குரலில் தலையை நிமிர்த்திப் பார்த்தான் கவியுகன்.

“குட்மார்னிங் ஜனா!” என்றவன் மீண்டும் குனிந்து தான் பார்த்துக் கொண்டிருந்த பைலில் கவனத்தை வைத்தான்.

“இன்னைக்கு எனக்கு என்ன வேலை பாஸ்? சொன்னால் நான் அதைப் போய்ப் பார்ப்பேன்…” என்றாள் அவனிடம் வேலை பார்க்கும் ஜனார்த்தனி.

அந்தப் பைலை மூடி ஓரமாக வைத்தவன் “இன்னைக்கு உனக்கு வடபழனியில் ஒரு வேலை இருக்கு ஜனா. ஒரு கிளைன்ட் கால் செய்தார். அவர் கேஸ் விஷயம் என்னென்னா…” என்று ஆரம்பித்தவன் அதைப் பற்றி முழுவிவரமும் அவளுக்கு விவரித்தான்.

“ஓகே பாஸ்! அவ்வளவு தானே? நான் பார்த்துக்கிறேன். பை பாஸ்…” என்ற ஜனார்த்தனி அவனிடம் விடைபெற்று வடபழனிக்கு கிளம்பினாள்.

ஜனார்த்தனி சென்ற சிறிது நேரத்தில் புயல் போல் உள்ளே நுழைந்தாள் அவள்.

அவள் வந்ததை உணர்ந்தும், தன் ஐபேடில் ஏதோ குறிப்பு எழுதுவதில் கவனமாக இருந்தான் கவியுகன்.

“உங்க மனசில் நீங்க என்ன நினைச்சுட்டு இருக்கீங்க யுகா?” அவனின் அலட்சியத்தைக் கண்டு கோபமாகக் கேட்டாள்.

“என் மனதில் இப்போ கேஸ் பற்றித்தான் நினைத்து, அதைக் குறிப்பும் எடுத்துக் கொண்டு இருக்கேன்…” என்று அமைதியாகப் பதிலளித்தவன் இன்னும் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான் இல்லை.

“என்ன கிண்டலா?”

“இல்லையே உண்மையைத் தான் சொன்னேன்…” என்றவன் கண்களும், கையும் ஐபேடில் கவனமாக இருந்தன.

“ஏன் என் முகம் பார்த்துப் பேசமாட்டீங்களா?”

“எனக்கு வேலை இருக்கு அனன்யா…” என்றவன் குரலில் இருந்த அழுத்தமே ‘இடத்தைக் காலி செய்!’ என்ற அர்த்தத்தைப் பிரதிபலித்தது.

அது புரிந்தாலும் புரியாதவள் போல் அங்கேயே நின்று அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் அனன்யா.

“என்னை அனு என்று கூப்பிட்டால் போதாதா யுகா? ஏன் ஒவ்வொரு முறையும் நீட்டி முழங்கி அனன்யா என்று கூப்பிடுறீங்க?” என்று வேறு கேள்விக்குத் தாவியவளைப் பொறுமை இழந்து, ஐபேடில் இருந்து தலையை நிமிர்த்திப் பார்த்தான்.

“இப்போ உனக்கு என்ன பிரச்சினை? உன் பேர் அனன்யா தானே? என்னால் அந்தப் பெயர் சொல்லித்தான் கூப்பிட முடியும். உனக்கு நான் கொடுத்த வேலை என்னாச்சு? அதைப் போய் முடிக்காம இங்கே வந்து ஏன் வெட்டிக் கேள்வி கேட்டுக் கொண்டு இருக்க?” என்று கேட்டான்.

“நீங்க கொடுத்த வேலையைப் பற்றிக் கேட்கத்தான் வந்தேன்…” என்றாள்.

“ஏன், அதில் எதுவும் டவுட் கேட்கணுமா? என்ன டவுட்? சீக்கிரம் கேளு. எனக்கு வேலை இருக்கு…” என்றவனை முறைத்தவள்,

“இது உங்களுக்கே ஓவரா தெரியலை? நீங்க எனக்குக் கொடுத்தது ரொம்பப் பெரிய கேஸ் பாருங்க. அதில் போய் டவுட் வர?” என்றாள் எரிச்சலுடன்.

“கண்டிப்பா நான் உனக்குக் கொடுத்தது பெரிய கேஸ் தான்…” என்றான்.

“விளையாடாதீங்க யுகா. கல்யாணத்துக்குப் பொண்ணைப் பத்தி விசாரிக்கிறதும், பையனை பத்தி விசாரிக்கிறதும் தான் பெரிய கேஸா? இதெல்லாம் ஒரு கேஸ் என்று சொல்லிக் கொண்டு இருக்கீங்க…” என்று எரிச்சல் பட்டாள்.

“பொண்ணு, மாப்பிள்ளை பற்றி விசாரிப்பது என்ன சாதாரணம் என்று நினைச்சியா அனன்யா? இதில் இரண்டு பேர் வாழ்க்கை அடங்கியிருக்கு. காலம் முழுவதும் ஒருத்தரை நம்பி பொண்ணை ஈஸியா கொடுக்க வேண்டும் என்றால் அதுக்கு அந்த மாப்பிள்ளை தகுதி உள்ளவனா இருப்பானா என்று பொண்ணு வீட்டில் விசாரிப்பது தேவையான ஒன்னு.

அதே போல் தான் பொண்ணைப் பற்றி மாப்பிள்ளை வீட்டில் விசாரிக்கச் சொல்வதும். வாழ்க்கை துணை என்பது சாகும் வரை கூட வரப்போகிற உறவு. கல்யாணத்துக்குப் பின் வாழ்க்கை துணை சரியில்லை என்று உட்கார்ந்து அழுவதை விட முன்கூட்டியே விசாரிப்பது மேல்.

இதை எல்லாம் விட முக்கியமா நாம ஒரு வேலை செய்தால் அதைச் சிறப்பா நினைக்க வேண்டும். ஆனா நீ ஏதோ கீழான வேலை பார்ப்பவள் போல் பிகேவ் பண்ற. இது சரியில்லை அனன்யா…” என்று கண்டித்தான் கவியுகன்.

“கீழாக யார் நினைச்சா? வேற வேலையும் கொடுக்கலாமே என்று தானே கேட்டேன்…” என்று சொன்னவளின் குரலில் முன்பை விட ஸ்ருதி இறங்கியிருந்தது.

“உனக்கு எப்ப என்ன வேலை கொடுக்கணும் என்று எனக்குத் தெரியும் அனன்யா…” என்றான் அழுத்தமாக.

“ம்ப்ச்… அந்த ஜனாவுக்கு இன்னைக்குக் கொடுத்த வேலையை எனக்குக் கொடுத்திருக்கலாம் தானே? என்னமோ எல்லாம் அவளால் மட்டும் தான் சரியா செய்ய முடியும் என்பது போல அவளுக்கே முக்கியமான கேஸ் கொடுக்குறீங்க. அதனால் அவள் என்னவோ பெரிய இவள் போலப் பிகேவ் பண்றாள்…” என்று சொல்லிக் கொண்டே வந்தவள்,

“சரியான திமிர் அவளுக்கு…” என்று மெல்லிய குரலில் முனங்கினாள்.

அது சரியாக அவன் காதிலும் விழுந்தன.

அவள் பேச பேச ஏற்கெனவே முறைத்துக் கொண்டிருந்த கவியுகன், அவள் முனங்கியதை கேட்டதும் உக்கிரமாக அவளைப் பார்த்தான்.

“அதுக்குப் பெயர் திமிர் இல்லை… தன்னம்பிக்கை! ஜனாவோட தன்னம்பிக்கை உனக்குத் திமிரா தெரிந்தால் நீயெல்லம் என்கிட்ட வேலை பார்க்க தகுதியே இல்லை. இடத்தைக் காலி பண்ணு. இன்னொரு முறை நான் இங்கே உன்னைப் பார்க்கக் கூடாது…” என்று கடுமையாக எச்சரித்தான் கவியுகன்.

அவனின் கடுமையில் சட்டென்று அவளின் முகம் சுருங்கிப் போனது.

அதிலும் ஜனாவை பெரியதாகப் பேசி தன்னை விரட்டுவதைத் தாங்க முடியாதவள் முகத்தைச் சுருக்கிக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

ஜனார்த்தனி, கவியுகனிடம் அசிஸ்டென்ட் டிடெக்டிவ்வாகப் பணிபுரிபவள். அதிகப் புத்திக் கூர்மையுடன் தைரியமும் மிக்கவள்.

சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆட்பட்டு அதிலிருந்து மீண்டு வந்து இப்போது தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு, சிறந்த துப்பறிவாளினியாகத் திகழ்பவள்.

சமீபத்தில் ஒரு வழக்கு விஷயமாகச் சந்தித்த இன்ஸ்பெக்டர் ஜெகவீரனை காதலித்து மணம் முடித்திருந்தாள்.

அவளின் தைரியமும், துணிச்சலும் கவியுகனுக்குப் பிடித்த ஒன்று. அதனால் அதையே குறையாகச் சொன்ன அனன்யாவின் பேச்சுப் பிடிக்காமல் அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.

“உன்னைப் போ என்று சொன்னேன்…” அவள் நின்று கொண்டிருப்பது பிடிக்காமல் அதட்டினான்.

அனன்யாவின் முகத்தில் இருந்த சுணக்கம் மறைந்து அந்த இடத்தில் இப்போது கோபம் குடிக் கொள்ள ஆரம்பித்தது.

‘உஸ்… உஸ்…’ என்று பெருமூச்சு விட்டவள், “ஹலோ, மிஸ்டர் கவியுகன்…” என்று விரல் சொடுக்கி அழைத்தாள்.

“ஹலோ மிஸ் அனன்யா… இந்தப் பெயரை சொல்லி அதட்டிக் கூப்பிடுவது, விரல் சொடுக்கி கூப்பிடுவது எல்லாம் வேற எங்கயாவது வச்சுக்கோ. இங்கே கிவ் ரெஸ்பெக்ட், டேக் ரெஸ்பெக்ட் தான். மரியாதை கொடுக்கலை, உன்னை விடச் சீப்பா என்னாலும் பிகேவ் பண்ண முடியும். என் வேலையைக் கெடுக்காம இடத்தைக் காலி பண்ணு…” என்று அவள் பேசுவதற்கு முன் அதட்டி அடக்கினான் கவியுகன்.

அதில் கோபம் உச்சத்தில் ஏற, அதைக் காட்ட முடியாத கோபத்தில் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் அனன்யா.

அவளை அவன் சட்டையே செய்யவில்லை. தன் வேலையைத் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

“நீங்க எப்படியும் வீட்டுக்குத் தானே வந்து ஆகணும்? அப்போ வச்சுக்கிறேன்…” என்று பொருமிவிட்டு அவள் தான் இடத்தைக் காலி செய்ய வேண்டியதாகிற்று.

அவளின் பொருமல் காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல் தன் வேலையைத் தொடர்ந்தான் கவியுகன்.

இரவு எட்டு மணியளவில் கவியுகன் தன் வீட்டிற்குள் நுழைந்த போது வரவேற்பறையில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை கண்டு கொள்ளாமல் நேராகத் தன் அறைக்குச் சென்றவனை முறைத்துப் பார்த்தாள் அனன்யா.

“அத்தை… அத்தை…” என்று அழைத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்றவள், அங்கே சப்பாத்தியைக் கல்லில் போட்டு எடுத்துக் கொண்டிருந்த மாதுரியின் தோளை பிடித்துத் தொங்கிய படி,

“உங்க பிள்ளை வந்தாச்சு அத்தை. வாங்க, வந்து என்னன்னு கேளுங்க…” என்றாள்.

“கவி வந்துட்டானா? ட்ரெஸ் மாத்திட்டு இங்கே தான் வருவான். அப்போ கேட்கிறேன். வெயிட் பண்ணு…” என்றார்.

“நீங்க கேட்குற கேள்வியில் இன்னைக்கு உங்க பிள்ளை என்னிடம் மன்னிப்புக் கேட்டு என்னைத் திரும்ப வேலையில் சேர்த்துக்கணும் அத்தை. நீங்க அப்படிப் பேசணும். சரியா?” என்று செல்லமாக மிரட்டினாள்.

“சரிமா, சரி… கேட்கிறேன்…” என்று வேகமாகத் தலையை ஆட்டினார் மாதுரி.

“என் செல்ல அத்தை…” என்று அவரின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சினாள்.

“அம்மா, சாப்பாடு ரெடியா?” என்ற மகனின் குரலுக்கு,

“இதோ எடுத்துட்டு வர்றேன் கவி…” என்று பதில் குரல் கொடுத்த மாதுரி,

“அந்தக் கிரேவியை எடுத்துட்டு வா அனுமா…” என்றவர், தான் சப்பாத்தியை எடுத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்குச் சென்றார்.

அவர் சென்ற பின் கிரேவி இருந்த கிண்ணத்தைக் கையில் எடுத்தவள், ‘இதில் ஏதாவது கலந்து விட்டுடுவோமா? சாப்பிட்டுட்டு அந்த மண்டகனம் பிடிச்சவன் நல்லா அவதிப்படட்டும்’ என்று யோசித்தாள்.

‘இல்லை, வேண்டாம். அவன் எமகாதகன். அவனோட டிடெக்டிவ் மூளையை யூஸ் பண்ணி கண்டுபிடிச்சுடுவான். இப்போ நமக்கு வேலை தான் முக்கியம். முதலில் அது கிடைக்கட்டும். அப்புறம் அவனை ஒரு கை பார்த்துக்கலாம்’ என்று உடனே எண்ணத்தை மாற்றிக் கொண்டவள் கிரேவியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

மகனின் தட்டில் சப்பாத்தியை வைத்த மாதுரி, “அந்தக் கிரேவியைக் கொடும்மா அனு…” என்றவர் கிரேவியை வாங்கி மகனின் தட்டில் பரிமாறப் போனார்.

ஆனால் அவரைப் பரிமாற விடாமல் தடுத்த கவியுகன், எதிரே அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த அனன்யாவையும், அன்னையின் கையிலிருந்த கிரேவியையும் மாறி மாறி பார்த்தான்.

சில நொடிகளில் ஏதோ யோசித்தவன் போல இருந்தவன் பின், “இப்ப வைங்க மா…” என்றான்.

“என்னப்பா கவி? ஏன் என்னைப் பரிமாற விடாம நிறுத்தின?” என்று மாதுரி புரியாமல் கேட்டார்.

“ம்ம், எல்லாம் இந்த மேடத்தை நினைச்சு தான். வேலையை விட்டுத் தூக்கிட்டேன்னு கடுப்புல கிரேவில என்னத்தையாவது கலந்துருப்பாளோன்னு சின்னதா டவுட் வந்தது.

ஆனா மேடம் என்கிட்ட வேலையைத் திருப்பி வாங்கணும் என்ற எண்ணத்தில் ஒன்னும் கலக்கலைன்னு புரிந்தது. அதான் இப்போ கிரேவியை ஊத்த சொல்றேன்…” என்றவனைப் பார்த்து பேய் முழி முழித்தாள் அனன்யா.

‘நல்லவேளைடி அனு. கலக்குற ஐடியாவை கைவிட்ட. இல்லைனா இந்த எமகாதகன் கண்டுபிடிச்சு உனக்கு இந்த ஜென்மத்தில் என்கிட்ட வேலையே இல்லைனு சொல்லியிருப்பான்…’ என்று மனதிற்குள் நிம்மதி பட்டுக்கொண்டாள்.

“ச்சே ச்சே, நம்ம அனு ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அப்படி எல்லாம் எதுவும் செய்ய மாட்டாள்…” என்று அனன்யாவிற்குப் பரிந்து கொண்டு வந்தார் மாதுரி.

“நீங்க தான்மா ரொம்ப அப்பாவியா இருக்கீங்க. அவள் மூஞ்சியை நல்லா பாருங்க. அவளுக்கு வேலை வேணும் என்ற ஒரே காரணத்துக்காகத் தான் நான் இன்னைக்குத் தப்பிச்சிருக்கேன்.

இல்லைனா இவள் என்னை டாய்லெட்டில் குடியிருக்க வச்சுறுப்பாள். சரியான எமகாதகி…” என்று பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னவன், அவளைக் கடுமையாக முறைத்தும் வைத்தான்.

‘அட ஆண்டவா! அவனை மனசுக்குள் திட்ட நான் பயன்படுத்திய பேர் வரை சரியா கேட்ச் பண்ணிட்டானே…’ என்று நினைத்தவள் அவனைப் பார்த்து நல்ல பிள்ளையாகப் பல்லை இளித்துக் காட்டினாள்.

அவளைக் கண்டுகொள்ளாமல் உணவை உண்ண ஆரம்பித்தான்.

“அப்பா ஆபிஸ் பார்ட்டி முடிந்து வர லேட் ஆகும்னு எனக்கு மெசேஜ் செய்தார்மா. உங்களுக்குக் கால் செய்தாரா?” என்று சாப்பிட்டுக் கொண்டே கேட்டான்.

“ஆமா கவி, நான் பேசிட்டேன்…” என்றார்.

“அப்ப நீங்களும் என் கூடவே உட்கார்ந்து சாப்பிடுங்கமா” என்றான்

“இல்லைபா. நானும் அனுவும் சேர்ந்து சாப்பிட்டுகிறோம்…” என்றார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அனன்யா, மாதுரியின் கையை ரகசியமாகச் சுரண்டி, ‘கேளுங்க அத்தை’ என்று ஜாடை காட்டினாள்.

‘இருமா கேட்குறேன்…’ என்று பதிலுக்கு ஜாடை காட்டிய மாதுரி மகன் சாப்பிட்டு முடிக்கக் காத்திருந்தார்.

உணவை உண்டு முடித்துக் கையைக் கழுவிவிட்டு வந்த கவியுகன், “அப்புறம் மா, காக்கா ஏன் இந்த நேரம் நம்ம வீட்டை சுத்தி வந்துட்டு இருக்கு?” என்று அனன்யாவை ஓரப் பார்வையாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

“காக்கா வா? என்னப்பா சொல்ற?” என்று மாதுரி புரியாமல் கேட்க, அனன்யாவோ அவன் தன்னைத்தான் காக்கா எனச் சொல்கிறான் என்று புரிந்து பல்லைக் கடித்துக்கொண்டு அவனைப் பார்த்தாள்.

“ஹலோ, யாரு காக்கா?” என்று அவனிடம் சண்டைக்குச் செல்ல தயாரானவள், கடைசி நேரத்தில் அத்துடன் நாக்கை மடித்துப் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

“நீ தான் காக்கா. என்னோட அம்மாவை காக்கா பிடிக்கத்தானே வந்த? நான் சரியாத்தானே சொல்லியிருக்கேன்?” என்று கேலியாகக் கேட்டான்.

“ஏன் கவி, அனுவை கேலி பண்ற? அவளை வேலையை விட்டு ஏன் நிறுத்தின? நம்ம அனு பா. அவளுக்கு அந்த வேலை எவ்வளவு பிடிக்கும் என்று உனக்கே தெரியும் தானே? அப்படி இருக்கும் போது ஏன்பா அவளை வேலைக்கு வர வேண்டாம் என்று சொன்ன?” என்று அவளுக்குப் பரிந்து கொண்டு நியாயம் கேட்டார் மாதுரி.

“அம்மா, பிடிச்ச வேலையைப் பிடிச்ச மாதிரி செய்யணும் மா. ஆனா உங்க அனு எனக்கு ஏன் இந்த வேலை கொடுத்த என்பது போல் செய்றாங்க. அதுமட்டுமில்லாம கூட வேலை பார்க்கிற பொண்ணு மேல பொறாமைபட்டு அவங்களைத் தப்பா பேசுறாங்க.

இந்த மாதிரி இருந்தால் நான் எப்படி வேலை கொடுக்க முடியும்? நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க…” என்று அன்னையின் பக்கமே பந்தை திருப்பினான்.

“என்னமா, அப்படியா? பொறாமை நல்லது இல்லையே மா?” என்று அனன்யாவிடம் கேட்டார் மாதுரி.

“அது வந்து அத்தை. அது பொறாமை இல்லை அத்தை. எனக்கும் அவங்களுக்குக் கொடுக்கிற மாதிரி வேலை கொடுக்க மாட்டிங்கிறாரே என்ற ஆதங்கத்தில் பேசிட்டேன். அதைப் போய் உங்க பிள்ளை பெரிசா எடுத்துக்கிட்டார்…” என்று குறைபட்டாள் அனன்யா.

“அதைத் தான் நான் பொறாமை என்று சொல்றேன். உன்னை வேலைக்கு வச்ச எனக்கு உனக்கு என்ன வேலை கொடுக்கணும் என்று தெரியாதா? எல்லா வேலையும் படிப்படியாகத் தான் கத்துக்கணும். எடுத்ததும் பெரிய கேஸா கொடுப்பாங்க என்று எதிர்பார்க்கக் கூடாது.

ஜனாவும் இப்ப நீ பார்த்த வேலையை எல்லாம் எந்தச் சுணக்கமும் காட்டாமல் கச்சிதமாகச் செய்து பழகிட்டுத்தான் இப்போ கொஞ்சம் பெரிய கேஸ் பார்க்க ஆரம்பிச்சுருக்காங்க. அவங்க போல நீயும் உன் வேலையை சரியா செய்திருக்கணும்…” என்றான் கண்டிப்புடன்.

அனன்யாவிற்குத் தான் செய்த தவறு புரிந்தது.

“ஸாரி. நான் அந்த மாதிரி பேசியிருக்கக் கூடாது யுகா. இனி அப்படிக் கம்பேர் பண்ணி பேச மாட்டேன். இந்த ஒருமுறை எஸ்க்யூஸ் பண்ணுங்க…” என்றாள்.

அவளைச் சில நொடிகள் அமைதியாகப் பார்த்தவன், “சரி, இந்த ஒரு தடவை என் வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன். நீ நாளையில் இருந்து வேலைக்கு வரலாம். இது நீ ஸாரி கேட்டதுக்காக மட்டுமில்லை. உனக்கு இந்த வேலை எவ்வளவு பிடிக்கும் என்று தெரிந்த காரணத்துக்காகவும் தான். நாளைக்கு வந்து சேர்…” என்றான் கவியுகன்.

“தேங்க்யூ யுகா… தேங்க்யூ சோ மச்…” என்று உற்சாகமாகக் கூவியவள், “தேங்க்யூ அத்தை…” என்று சந்தோஷ மிகுதியில் மாதுரியின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அவளை வினோதமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் கவியுகன்.

“உங்க மகனுக்குக் கொஞ்சம் வீராப்பு அதிகம் தான் அத்தை…” என்று கேலியாகச் சொல்ல,

“உன்னை வேலைக்கு வரச் சொல்லவும் இப்ப அவனையே கேலி செய்றீயா? இரு, இதை அவன்கிட்ட சொல்றேன்…” என்று மிரட்டினார் மாதுரி.

“ஐயோ அத்தை! அப்படி எதுவும் செய்துடாதீங்க. உங்க மகனுக்கு இருக்குற வீராப்புக்குச் செகண்ட் சான்ஸ் எல்லாம் தரமாட்டேன்னு சொல்லிவிடப் போறார்…” என்றாள் பயந்தவள் போல்.

“வாலு, அப்போ அவனைக் கேலி செய்யாம இரு. சரி வா சாப்பிடுவோம்…” என்று அழைத்தார்.

“இல்லை அத்தை. அம்மா சாப்பிட வீட்டுக்கு வரச் சொன்னாங்க. நான் அங்கே போய்ச் சாப்பிடுறேன்…” என்றாள்.

“அப்படியா? இரு, நான் போன் போட்டு சொல்றேன்…” என்ற மாதுரி, உடனே அவளின் அன்னைக்கு அழைத்தார்.

“வாசலில் நின்னு பேசினாலே அம்மாகிட்ட பேசலாம். இதுக்கு ஒரு போனா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

“அதுக்காக வாசலில் நின்னு கத்தவா முடியும்?” என்ற மாதுரி அவளின் அன்னையிடம் பேச ஆரம்பித்தார்.

கவியுகனின் பக்கத்து வீடு தான் அனன்யாவின் வீடு. சிறுவயதில் இருந்து நட்பாகப் பழகியவர்கள் என்பதால் அனன்யா, கவியுகனின் பெற்றோரை அத்தை, மாமா என்று அழைத்துப் பழகியிருந்தாள்.

பெண் பிள்ளை இல்லாத வீட்டில் அனன்யாவின் வருகை மனதிற்கு இதத்தைக் கொடுக்க, அவளைச் செல்லம் கொஞ்சுவது மாதுரியின் வாடிக்கையானது.

கவியுகன் அவர்களிடம் நட்பு முறையில் பேசுவானே தவிர அதிக ஒட்டுதல் வைத்துக் கொள்ள மாட்டான்.

அதுவும் அனன்யா தன் அன்னையிடம் செல்லம் கொஞ்சுவதால் அவளைச் சற்று முறைத்துக் கொண்டு தான் திரிவான்.

வளர்ந்த பிறகு பக்குவம் வந்துவிட்டாலும், அவனிடம் எப்போதும் ஒரு ஒதுக்கம் இருக்கும்.

அவன் தான் ஒதுங்கிப் போவானே தவிர, அனன்யா வாய்ப்பு கிடைத்தால் அவனிடம் நன்றாக வாயாடுவாள்.

அதிலும் அவன் பார்க்கும் துப்பறிவாளன் வேலை அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று.

தானும் துப்பறிவாளனியாக ஆகவேண்டும் என்ற எண்ணமே அனன்யாவிற்கு அவனின் மூலம் தான் வந்தது என்றால் அது மிகையல்ல.

துப்பறிவாளனியாக ஆகவேண்டும் என்று ஆர்வம் இருந்த அதே நேரத்தில் அவசரப்புத்தியும், துடுக்குத்தனமும் நிறைந்தவள்.

அவளின் அவசரமே காலையில் அவன் ‘வேலையை விட்டு சென்று விடு!’ என்று சொல்லும் அளவு கொண்டு வந்து விட்டிருந்தது.

மாதுரியின் அன்பு உத்தரவில் இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வேலையை மீண்டும் பெற்றுவிட்ட மகிழ்ச்சியுடன் தன் இல்லத்திற்குக் கிளம்பினாள் அனன்யா.