மெளன யுத்தத்தில்-4

மெளன யுத்தத்தில்-4 

தன்னறைக்கு வந்து மெத்தை மேல் விழுந்து முதுகு குலுங்க குலுங்க கதறியழுதாள் தூரிகா. 

உள்ளங்கை கொண்டு அடக்கி பார்த்தாலும் அடங்கவே மாட்டேன் என்று பிடிவாதம் செய்து கங்கை நீர் போல் பொங்கி பிரவாகம் எடுத்து வந்தது அவளின் உவர்நீர். 

தன் பேக்கை திறந்து நோட்டை எடுத்தவள் வெற்று பக்கத்தை புரட்டி தன் கண்ணீர் துளிகள் அதில் விழுந்து ஜீவசமாதியாக எழுத ஆரம்பித்தாள்.

‘காதலை தந்துவிட்டு அது இந்த உணர்வென்று புரியும் முன் உனை விட்டு எனை தள்ளி நிறுத்தியது யாரின் பிழை அன்பே? என் நேசம் உனக்கு என்றுமே புரியப் போவதில்லையா? நீ இன்றி நான் எப்படி அன்பே?’, 

இனியாழனை நினைத்து பக்கங்களை நிறைத்தவள் கண்ணீர் மட்டும் வற்றாத ஜீவநதியாக கன்னத்து படகில் பாய்ந்து கொண்டே இருக்க, தன் விதியை எண்ணி நொந்தவாறு கலங்கிப் போய் அமர்ந்திருந்தாள். 

இங்கு கீழே திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக கலை கட்டத் தொடங்கியது. 

வான்மலர் இப்பொழுது இருக்கும் நிலையில் இந்த திருமணத்திற்கு சம்மதிப்பாளா? என்று இனியாழனுக்கு உள்ளுக்குள் முகிழ்த்த சிறு தயக்கம் கூட வான்மலரின் சம்மதம் கலந்த வெட்கத்தில் காணாமலே போயிருந்தது.

அத்தி பூத்தாற் போன்று சிரிக்கும் அவன் அழகு வதனம் கூட இன்று ஏக புன்சிரிப்பு மிளிரும் வதனமாகக் கூட மாறிப் போயிருந்தது.

வான்மலரின் சரி என்ற வாசகத்தில் வீட்டிலுள்ள எல்லோருமே மகிழ்ந்திருக்க, பெரியோர்கள் நிறைந்த சபையில் சரியென்று தலையசைத்து வைத்த வான்மலர் மேல்மாடியில் அவளுக்குரிய அறையில் நகத்தை கடித்து தின்றுவிடும் நோக்கில் ஏக கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள்.

‘இன்னும் எத்தனை காலத்துக்கு அத்தை பொண்ணு, மாமா பையனத்தான் கட்டிக்கணும்னு இவங்களுக்குள்ளவே ஒரு ரூல் போட்டு பாலோ பண்ண போறாங்களோ தெரியல. நான் படிச்ச பொண்ணு என் டேஸ்ட் எப்டி இருக்கும் என்னனு கூட இங்க யாருக்கும் கேட்க தோணல. திஸ் இஸ் ரெடிகுலசேஷன். ச்சைய்…’, மெத்தையில் மல்லாக்காக விழுந்தவள் சுழலும் மின்விசிறியை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள்.

ஒருவேகத்தில் வீட்டை எதிர்த்து நிற்க தைரியம் இல்லாது இனியாழனுடன் நடக்க போகும் திருமணத்திற்கு சரியென்று சொல்லிவிட்டாள். இப்பொழுது இதை எப்படி சரி செய்ய என்று தெரியாமல் தலையை பிய்த்துக் கொண்டு கிடக்கிறாள்.

ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவள் தன் தோழி இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.

தன் கவலையில் ஆழ்ந்து நின்றிருந்த தூரிகா பால்கனியில் நின்று மலைமுகட்டின் இடுக்கு வழி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கும் சூரியனையே பார்த்திருந்தாள். 

“தூரி, தூரி மலர் வந்துருக்கேன் தூரி கதவத் திறயேன்”, வெளியே வான்மலர் குரல் கொடுக்க, தன் சிந்தனை கலைந்து வெளியே வருவதாய் இல்லை தூரிகா. 

கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த வான்மலர், தூரி அருகில் சென்று அவள் தோளில் கை வைக்க திடுக்கிட்டு விழித்தாள் தூரிகா.

“ஹேய்… ஹேய்… தூரி நாந்தான்டி தேவையில்லாம பயப்படாத?”,

தன் நெஞ்சுக்குழியில் கரம் வைத்து நீவிவிட்டுக் கொண்ட தூரி உள்ளே தன்னை நினைத்து ஒரு கசந்த முறுவல் சிந்திக் கொண்டாள்.

“நீ ரொம்ப லக்கி மலர் அதான் உனக்கு எல்லாமே பெஸ்ட்டா கிடைக்குது. உன்னோட ஊரு, ரிலேசன், இப்போ உன் மாமா கூட கல்யாணம்…”, மலர் அறியாமல் கண்ணீரை துடைத்தவள், 

“அட்வான்ஸ் ஹேப்பி மேரீட் லைப் டி”, என்று கூற,

“அடியே உன்னை அப்டியே கழுத்த நெறிச்சு கொன்னுடுவேன்டி”, தன் கைகளால் தூரிகாவின் கழுத்தை நெறிப்பது போல் பாவனை செய்தவள் பற்களை கடித்து கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.

“என்… என்… என்னாச்சு மலரு. எதுவும் பிராப்ளமா?”,

“ஆமாடி இந்த வீட்ல இருக்கிற எல்லாரும் தான் எனக்கு பெரிய பிராப்ளம்”,

“ஹேய் மலரு என்னடி ஆச்சு புரியுற மாதிரி சொல்லு”,

தூரிகாவின் கரத்தை இறுக பற்றிக் கொண்டவள், “தூரி இந்த கல்… கல்யாணத்துல எனக்கு சுத்தமா இன்ட்ரெஸ்ட் இல்ல”,

தோழி கூறிய செய்தி கேட்டு மத்தாப்பு கொளுத்தி போட்டது போல் தூரிகாவின் முகம் ஜொலிக்க ஆரம்பித்தது. தன் சந்தோஷத்தை உள்ளே மறைத்தவள் வெளியே, “ஹேய் என்னடி சொல்லுற விருப்பம் இல்லேனா கீழ எல்லாரும் இருக்கும் போது எதுக்கு ஓக்கேனு சொல்லிட்டு வந்த”,

“அது… அது…”, வான்மலர் திணற,

“உனக்கு இதுல விருப்பம் இல்லைனா எல்லார் கிட்டவும் விருப்பம் இல்லேனு பட்டுனு சொல்ல வேண்டிதான. ஓக்கே இல்லைனு சொல்றதுல உனக்கென்னடி பிரச்சினை வந்துரப் போகுது. இங்க இருக்குற எல்லாரும் அவ்ளோ தங்கமானவங்க. ஏன் என் பார்வையில உன் மாமா கூட ரொம்ப ஜென்யூனா தெரியுறாரு ”,

“ஆமாடி வந்த ஒரேநாள்ல இந்த வீட்டு ஆளுங்க தங்கம். என் மாமா ஜென்யூன்னு உனக்கு தெரியும். அட ஏன்டி நீ வேற?”,

“மனுசங்க மனசு, தரம், கேரக்டர் பத்தி தெரிஞ்சுக்க பலநாள் பழகி பார்க்கணும்னு அவசியம் இல்ல மலரு. முகத்தை நேருக்கு நேர் பார்க்குற அந்த செக்… அந்த ஒரு செகண்ட் போதும். காதலுக்கும்? வாழப் போற வாழ்க்கைக்கும்…”,

“அடியே போதும்டி. நீ அவங்க எல்லாருக்கும் மேல பேசுவ. எனக்கு ஓக்கேவா? இல்லையானு? என் விருப்பம் கேட்டுதான் இங்க எல்லாரும் எல்லாமும் பண்றாங்க, பண்ணப் போறாங்கன்னு நினைக்குறியா?. உனக்கு இங்க இருக்குற யாரப்பத்தியும் தெரியல தூரி அதான் நீ இப்டி வேதாந்தம் பேசுற“,

“என்னடி சொல்லுற? எனக்கு உன் பேச்சே சுத்தமா புரியல?”,

“ஷீ தூரி நான் நிறையா படிச்சவ. என்னால மாமாவ கல்யாணம் பண்ணிட்டு இந்த காடு, மேடு, கழனினு குண்டு சட்டியில குதிரை ஓட்ட முடியாது. என் ஆசை, கனவு எல்லாம் ரொம்ப பெருசு அத சாத்தியப்பட வைக்க மாமாவால கூட முடியாது”,

“மலர்! இப்போ உனக்கு கல்யாணம் பிரச்சினையா? இல்ல உன் மாமாவ கல்யாணம் பண்ணிக்குறது பிரச்சினையா?”, புருவ முடிச்சோடு தூரிகா கேட்க,

“அது… அது… இப்டிக் கேட்டா எப்டி டி? என் பாய்ண்ட்ல ரெண்டுமே பிரச்சினை தான்”,

“அப்போ உன் மாமா படிக்காதவரா? அவரு படிக்கலேன்ற காரணத்துக்காக தான் மேரேஜ் வேண்டான்னு சொல்லுறியா? அந்த ஒரு காரணம் தான் உனக்கு ரொம்ப பெருசா தெரியுது இல்ல”,

“ஹேய் லூசு மாமா படிக்காதவருன்னு உனக்கு யாரு சொன்னது மாமா அக்ரி படிச்சிருக்காரு. விவசாயத்துல புரட்சி பண்ற அளவுக்கு அக்ரில உச்சம் தொட்ட மனுஷன் அவரு. எனக்கு அதெல்லாம் பிரச்சினை இல்ல”,

“பின்ன என்னதாண்டி உன் பிரச்சினை?”,

கதவு தாழ்பாள் போட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்ட மலர் சுற்றி முற்றி விழிகளால் நோட்டம் விட்டுக் கொண்டே, தயக்கம் மேலிட்டு நின்றவாறு, “திலிப்… திலிப் தான் என் பிரச்சினை டி. நான் திலிப லவ் பண்றேன்”,

தன் விழிகள் இரண்டும் காதுவரை படர்ந்து போகுமளவு விரிந்து முழித்தாள் தூரிகா.

“என்ன… என்ன திலிபா? ஏய் என்னடி சொல்ற?”,

தூரியின் இதழில் விரல் வைத்து மூடியவள், “உஸ்… உஸ் கத்தாம பேசுடி”,

வான்மலரின் கரத்தை தன் இதழிலிருந்து பிரித்தவள், “நீ திலிப லவ் பண்றியா? நிஜமாவா சொல்லுற”, இரகசிய குரலில் வான்மலரின் காதருகில் கிசுகிசுத்தாள் தூரிகா.

“ம்… ஆமாடி. நிஜமா அவன லவ் பண்றேன். டாங்கி கால சுத்தி சுத்தி வந்தப்போ ஒண்ணும் புரியல. இப்போ விலகி நிக்கவும் காதல் வந்து கொல்லாம கொல்லுது”,

“காதல் கொல்லாம கொல்லுதா? இப்போ நீ என்னதான் முடிவு பண்ணி வச்சிருக்க மலர். இங்கேயும் மாட்டேன் சொல்ல மாட்டுற, அவனையும் லவ் பண்ற சொல்லுற. உன்னோட பதில்ல எனக்கு தலை வெடிக்குற மாதிரி இருக்கு”,

“தூரி இங்க என்னால நோ சொல்லவே முடியாது, பிகாஸ் என் பேமிலி அப்படி. அதுபோல அவனையும் என்னால விடவே முடியாது”,

“அப்போ… அப்போ… நீ”,

“எஸ் என்னோட முடிவு இங்க இருக்கிற யாருமே யோசிச்சு பார்க்க முடியாத அளவு இருக்கும். என் முடிவு என்னனா…”,

“மலரு, மலரு”, தூரியின் அறைக்கதவை தட்டியவாறு இனியாழன் குரல் கேட்க,

“இதோ வர்றேன் மாமா”, என்றவாறு வந்து கதவைத் திறந்தாள் வான்மலர்.

“என்ன மாமா?”, அவள் குரலில் முன்பிருந்த இணக்கம் காணாமல் போய் வெறுமை வந்திருந்தது. காதல் கைகூடப் போகும் மயக்கத்தில் முகிழ்த்திருந்தவன் செவிக்கு வான்மலரின் குரலில் இருந்த வெறுமை கலந்த வேறுபாடு புரியாமல் போயிருந்தது.

“நான் உன்னை உன்னோட அறையில தேடிட்டு நீ இங்கதான் இருப்பேனு நினைச்சு வந்தேன். என் கணிப்பு சரியா போச்சு மலரு”,

“ஆமா மாமா இங்கதான் இருக்கேன். தூரி கூட சும்மா பேசிட்டு இருந்தேன்”,

“மலரு நம்ம கல்யாணத்துக்கு பட்டுல இருந்து நகநட்டு வரை உனக்கு என்ன மாதிரி எல்லாம் வேணும்னு சொல்லு. அத்தனையவும் அள்ளிக் கொண்டு வந்து ஓ முன்னாடி போடுறேன்”,

‘நீ கூட என்னை புரிஞ்சுக்கலியே மாமா’, மனதோடு ஒரு சலிப்பு தோன்றினாலும் வெளியே, “நீ பார்த்து எனக்கு எது எடுத்துக் குடுத்தாலும் ஓக்கே தான் மாமா. நானா புதுசா என்ன எடுத்துக்க போறேன்”,

“மலருனா மலருதான். நீ நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ உனக்கு தேவையானது, கல்யாண வேலைனு அல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். அப்புறம் தூரிப் பொண்ணு நீதான் மலருக்கு துணைப்பொண்ணா பக்கத்துல நிக்கப் போற அதனால நீயும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ”, கண்சிமிட்டி கூறிவிட்டு இனியாழன் விலகிச் சென்றுவிட, அவன் பரந்த முதுகை பார்த்து அவனுக்காக பரிதாபப்பட மட்டுமே முடிந்தது தூரிகாவால். 

சட்டென்று கதவடைத்து மலரின் கைபற்றி உள்ளே இழுத்தவள், “மலரு நீ பண்றது ரொம்ப தப்புனு எனக்கு தோணுது. பார்த்தேல அவரு முகத்துல எவ்ளோ ஆசை இருக்குனு”,

‘அவரு ஆசைக்காக உனக்கு கிடைச்சுருக்குற சான்ஸ வேஸ்ட் பண்ண போறியா? இதுமூலமா உன் காதல எப்டி அவருக்கு புரிய வைக்கலாம், அவர்கூட எப்டி கைசேரலாம்னு யோசி’, தனக்குள் பேசிய தன் மனசாட்சியை உள்ளுக்குள் அதற்றிக் கொண்டவள் மலரையே பார்த்திருக்க,

“ஏ மாமா ஆசைக்காக என் ஆசைய எனக்குள்ள புதைச்சுக்க சொல்லுறியா தூரி?”,

“அதுக்காக ஆசைவச்ச அவர உயிரோடே கொல்லப் பார்க்குறியே இது தப்பில்ல”,

“ஷீ தூரி எனக்கு மாமாவ பிடிக்கும் அதுக்காக அவர கல்யாணம் எல்லாம் நோ சான்ஸ். சோ மீதிய அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ நீ ப்ரீயா விடு”, தூரியின் கன்னம் தடவிக் கூறியவள் வெளியே சென்றுவிட,

இனியாழன் மீது காதல் கொண்டிருந்தாலும் இப்பொழுது மலர் செய்து வைக்கப் போகும் காரியத்தை நினைத்து அவன் மேல் இரக்கம் மட்டுமே மேலிட்டு நின்றது தூரிகாவிற்கு.

‘மலரு அவரு தலைகுனியுற மாதிரி எதுவும் செஞ்சு வச்சுடுவாளோ எனக்கு பயமாவே இருக்கு. என்ன செய்ய?’, தீவிர சிந்தனைக்குள் ஆழ்ந்தாள் தூரிகா.

மலரின் முடிவால் இனியாழனோடு, தான் கொண்ட காதலுக்கு பங்கம் இல்லை என்று ஒருபுறம் சிந்தித்துக் கொண்டாலும், மறுபுறம் தோழியின் உண்மை கூற்று அறிந்தபின் உப்பிட்ட வீட்டிற்கு துரோகம் செய்வதா என்ற நிலையிலும் தவியாய் தவித்து நின்றாள் தூரிகா.

காதலா? தோழியா? பாசம்மிக்க குடும்பமா? துலாக்கோலில் நடுபுள்ளியில் நின்ற உணர்வு அவளுக்கு. 

வான்மலர் எடுக்கப்போகும் முடிவு இங்கு பலரின் வாழ்வையும், நிம்மதியையும் கேள்விக்குறிக்கி ஆளாக்கிவிடும் என்று அவளுக்கு முன்னமே தெரிந்திருந்தால் அவள் இந்த முடிவை யோசித்துக் கூட இருக்க மாட்டாள். 

காலமெனும் விதி செய்யும் சதி மிக மிக பொல்லாதது. மிக மிக அபத்தமானது.

ஒற்றுப்பிழையில் தொடங்கப் போகும் பந்தங்கள், முற்றுப்புள்ளியிலாவது பிழையில்லாது இருக்க வேண்டும்.

மெளனம் தொடரும்…