மெளன யுத்தத்தில் -3

மௌன யுத்தத்தில்-3

தஞ்சாவூரில் வாழ்வாங்கு வாழப்பெற்ற தொன்று தொட்ட ஜமீன் பரம்பரை தான் இனியாழனுடையது.

வாசஸ்பதி-தேசாட்சி இருவரின் செல்வங்கள் தான் செம்பவளன், நாட்டரசன், (இரு ஆண்கள்) சந்திரகாந்தம் (ஒரு பெண்). 

செம்பவளன்- கீதாராணி தம்பதிக்கு ஒற்றை ஆண் வாரிசாய் அந்த ஜமீனை கட்டிக்காக்க பிறந்த அரிமா தான் இனியாழன்.

நாட்டரசன்-ஜெயமாலாவிற்கு இரட்டை பெண் வாரிசுகள். சான்விகா, தாமரைக்கொடி.

இராஜவேலன்- சந்திரகாந்தம் இவர்களின் ஒற்றை மகள் தான் வான்மலர்.

வீட்டிலுள்ள அனைவருக்கும் இனியாழன் என்றால் கொள்ளைப்பிரியம். பின்னே சும்மாவா என்ன இந்த ஜமீனிற்கே அடுத்த வாரிசு அல்லவா அவன். குலத்தை தளர வைக்கப்போகும் தலவிருட்சம் அவனல்வா. 

இனியாழனுக்குத்தான் வான்மலர் என்று அவள் பிறந்த நாள் அன்றே தொப்புள்கொடி உறவின் மேல் அவளை பெற்றவர்கள், இனியாழனின் பெற்றோருக்கு வாக்குக் கொடுத்து விட்டார்கள். 

கொடுத்த வாக்கை மீறும் பழக்கம் இதுவரை அந்த பரம்பரையில் இருந்து வந்தது இல்லை இனியும் இருக்கப் போவதில்லை என்றுதான் அந்த குடும்பத்தாரும் எண்ணினார்கள். ஆனால் அதற்கு இந்த பொல்லாத விதி தடை இல்லாது இருக்க வேண்டுமே.   

“அத்தை, அத்தை போதும் அத்தை. எதுக்குத்தான் என் தலைய போட்டு எல்லாரும் இந்தபாடு படுத்துறீங்களோ? எனக்கு தலைதான் வலிக்குது”,

“அட செத்த நேரத்துக்கு சும்மா இருபுள்ள கண்டது கழிது வாங்கி தேய்ச்சு முடிய முடி போலவா வச்சுருக்க. தேங்காநார் போல முடிய வச்சுட்டு பேசாத நீனு. இன்னும் கொஞ்சநேரம்தான் பொறுத்துத்தேன் ஆவணும்”, கீதாராணி கூறிக்கொண்டே வான்மலரின் தோளை பிடித்து அழுத்த,

‘ஏதே தேங்காநாரா? பார்லர் போயி ஆயிரம், ரெண்டாயிரம்னு செலவு பண்ணி ஸ்ட்ரைட்ஹேர் பண்ணிட்டு வந்தா உங்க எல்லாருக்கும் அது தேங்காநார் போலவா தெரியுது. ஓ காட்’, மனதுள் நினைத்துக் கொண்டவள் அவர்களிடம் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

“அவ்ளோதான் மலரு இதோ இப்போ முடிஞ்சுடும் இந்த வேலை”, என்றவாறு ஜெயமாலா வந்து சாம்பிராணி புகையை அவள் தலைமுடிக்கு அருகில் காட்ட,

‘லொக்கு லொக்கென’, இருமிக் கொண்டே எழுந்து நின்றாள் வான்மலர். 

அவள் இருமிய நிலைக்கு கண்ணெல்லாம் அவளுக்கு பார்த்தி கட்டி நின்றுவிட, அவளருகில் வந்து நின்றான் இனியாழன். 

அவள் தன் கண்ணை  கசக்கிக் கொண்டு நிற்க, 

“அச்சோ மலரு என்ன ஆச்சு? எதுக்கு தங்கம் கண்ண கசக்கிட்டு நிக்குற?”,

“மா… மா… மாமா… மாமாஆஆஆ…”,

“அடியே அவன் உன் பக்கத்துலதான் இருக்கான். எதுக்கு இத்தனை மாமா போடுற?”, சந்திரகாந்தம் கூற,

தன் உதட்டை பிதுக்கிக் கொண்டே அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், “மாமா நான் அப்போவே வேண்டாம்னு சொன்னேன். இங்க இருந்த யாராவது என் பேச்சை  கேட்டாங்களா? இங்கபாரு தலைக்கு ஊத்துறேன்னு என் முடிய பஞ்சு பஞ்சா ஆக்கி, இந்த புகையெல்லாம் போட்டு ம்ம்ம்ம்ம்… கண்ணக் கரிக்குது மாமா”, வான்மலர் தன் கண்களை தேய்க்க,

“கொஞ்சமாச்சும் உங்களுக்கு அறிவு இருக்கா? புள்ளதான் வேண்டா வேண்டான்னு சொல்லிருக்கே அப்டியும் எதுக்கு புள்ள கண்ண இப்டி சிவக்க வச்சுருக்கீக?”,

கீதாராணி, ஜெயமாலா, சந்திரகாந்தம் மூவரையும் பார்த்து இனியாழன் கேட்க, 

“இந்தே… இதென்ன என் மவனுக்கு புதுப்பழக்கம் முற்றத்துல நின்னு வயசுல மூத்தவகள எதுத்து பேசுறது. அடேய் இனியா வந்த கொஞ்சநேரத்துலயே என்ற மருமவ சொக்குபொடி போட்டு உன்னை சொக்க வச்சுட்டாளோ?”, நாடியில் விரல்களை இடுக்கியவாறு கன்னத்தை கோணிக் கொண்டு கீதாராணி கேட்க, ஜெயமாலாவும், சந்திரகாந்தமும் அவரின் கேள்விக்கு சப்தமில்லாமல் சிரித்துக் கொண்டார்கள்.

கீதாராணி கேட்ட விதத்தில் இனியாழனுக்கு கோபம் பீறிட்டு வர, விசிலடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்த விபீஷ்னனை பார்த்தவன், அவனை ஒற்றை விரல் நீட்டி தன்பக்கம் அழைத்தான்.

“மச்சான்..”, என்றவாறு துள்ளி குதித்துக் கொண்டு அவனருகில் வந்து நின்றான் விபீஷ்னன்.

இனியாழனின் மீசையை இருபக்கமும் முறுக்கி விட்டுக் கொண்டே டான்ஸ் ஆடிக் கொண்டிருந்த விபீஷ்னன், “மச்சான் நீ சொன்ன வேலை எல்லாம் முடிச்சுட்டேன். இப்போ நாம சேர்ந்து சாப்டுவோமா? என்னை சாப்ட வைக்கத்தான மச்சான் பாசமா கூப்ட. மச்சான்… மச்சான்… மச்சாஆஆஆ…”, அடுத்த மச்சானுக்கு காதை பற்றிக்கொண்டு தரையில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு விழுந்து கிடந்தான் விபீஷ்னன்.

‘இன்னிக்கி கோட்டா இதோட ரெண்டு. அடேய் எதுக்குடா அடிச்ச?’, 

இன்னும் ரெண்டு அப்பு விட்ட இனியாழன் மலங்க மலங்க ஆந்தை போல் விழித்துக் கொண்டு கிடந்த விபீஷ்னனை சட்டைக்காலரை பற்றி இழுத்து, “ஆருகிட்ட எப்டி பேசணும்னு தெரிஞ்சு பேசணும். இப்டிலாம் பேசவே கூடாது. அப்புறம் எனக்கு கோவம் வருமா? இல்லையா? ஆங்க்…”,, இனியாழன் தன் சட்டையை தள்ளி காப்பை முறுக்க, அவன் கையை பற்றிக்கொண்டவன், 

“மச்சான் சோறு திண்ண வந்ததுதேன் குத்தம்னா இனி வீட்டு பக்கமே வராதடானு சொல்லி ஒரேயடியா அடிச்சு துரத்திடு. சும்மா சும்மா அடிச்சு என்னை கின்செல்ட் (இன்செல்ட்) பண்ணாத. அதுவும் இந்தமுறை எதுக்குடா அடிச்ச ஒண்ணுமே தெரியாம கன்னத்தை புடிச்சுக்கிட்டு நிக்குறேன்”,

“அதெல்லாம் புரியுற ஆளுக்கு புரியும். வா வந்து சாப்டு”,

“இல்ல மச்சான் நான் வெளிய…”,

“என்னாது…”, இனியாழன் தன் விழியை உருட்டிக் கொண்டு வர, 

“இல்ல மச்சான் இங்கேனேயே உக்காந்து சாப்டுறேன்னு சொன்னேன்”,

“அஃது வாடா”, என்றவாறு நடுவீட்டுக்குள் அழைத்து வந்தவன் அவனை அமர பணிக்க சொன்னதை செய்யுமாம் கிளிப்பிள்ளை போல் அவன் சொன்னதை எல்லாம் செய்தான் விபீஷ்னன்.

“மலருபுள்ள அப்போவே பசிக்குது சொன்னேல. போயி வேத்து துணி மாத்திட்டு வா”,

“இதோ மாமா நானும் ஓடிட்டேன்”, வான்மலர் விலக, இனியாழன் தூரியை அழைத்து வர மாடி நோக்கிச் சென்றான். 

“அண்ணி என்ன அண்ணி மலரு சும்மா கண்ணு எரியுதுனு சொல்லி ஒத்த சொருக்கு கண்ணீர் தான் விட்டா அதுக்கே மருமவபுள்ள நம்மள இப்டி கோவப்பட்டு பேசிட்டு போறாக”, சந்திரகாந்தம் கீதாராணியை பார்த்துக் கேட்க,

“இனியந்தா அவ மேல உசுரையே வச்சுருக்கானே அவ கண்ணுல தூசி விழுந்தாலே தாங்கமாட்டான். நாம அவளப்போட்டு பாடாப்படுத்தி அழ வச்சா அவே சும்மாவா இருப்பான்? இதோட நம்மள விட்டானேனு நினைச்சு நாம சந்தோஷம்தேன் படணும்”, ஜெயமாலா கூற, 

“கல்யாணத்துக்கு முன்னவே தாங்கு தாங்குனு தாங்குறான். கல்யாணம் ஆன பின்ன நம்மள கண்டுக்க கூட மாட்டான். மலரு, மலரு, மலருனு ஒளறிட்டு திரிய போறான்”, கீதாராணி சொல்ல,

மூவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

இனியாழன் தூரிகாவின் அறைவாசல் வெளியே நின்று கதவை தட்ட கையை உயர்த்த, உள்ளே கேட்ட மாயக்குரலில் தன்னிலை மறந்து மாயவலையில் அகப்பட்ட மானாய் அப்படியே கட்டுண்டு நின்றான். 

‘எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட 

என்னுள்ள வீணை ஒரு இராகம் தேட 

அன்புள்ள நெஞ்சைக் காணாதோ! 

ஆனந்த இராகம் பாடாதோ! 

கண்கள் ஏங்கும்… நெஞ்சின் தாபம் மேலும் ஏற்றும்

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே…’,

அவள் தன்னை மறந்து பாடிய பாடலில் ஜானகி அம்மாள் கூட மெய்மறந்து நின்றுதான் தீர வேண்டும் போல் ஸ்ருதி லயம் மாறாமல் அத்தனை நுணுக்கமாக, தெளிவான உச்சரிப்போடு பாடியிருந்தாள். 

பாடிக்கொண்டே வந்த தூரிகா கதவைத் திறக்க அதில் பிடிமானமின்றி நின்ற நாயகன் நழுவி விழுந்து அவள் மேல் இடித்தவாறு நின்றான். 

தூரிகா பாடுவதை நிறுத்திவிட்டு அவனை அன்னார்ந்து பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான் நின்ற நிலை மாறாமலே…

“சும்மா சொல்லக் கூடாது பிள்ள ரொம்ப அருமையா பாடுற. திணையி்ல தேன்மாவு கலந்து சாப்டுற மாதிரி இருந்தது உன் பாட்டு. உன்னோட குரலு குயிலு போல அவ்ளோ மென்மையா இருந்தது”, தூரிகாவின் நயனத்தை உற்று நோக்கியவாறே அவன் கூற, சட்டென்று இமை தாழ்த்திக் கொண்டவள் அவன் நெருக்கத்திலிருந்து பட்டென்று வெளியே வந்தாள். 

அவள் விலகல் அவனுக்கு எதையோ உணர்த்தி இருக்க வேண்டும்.

தன் தலைகோதிக் கொண்டவன் “மன்னிச்சுடு புள்ள ஏதோ ஞாபகத்துல பக்கத்துல வந்து நின்னுபுட்டேன். மன்னிச்சுடு. உன்னை சாப்ட கூப்டத்தான் வந்தேன். வா ஆத்தா சாப்ட போவோம்”,

‘ம்…’, என்று தலையசைத்த தூரிகா அவன் பின்னே நடந்து சென்றாள்.

இனியாழன், விபீஷ்னன், வான்மலர், தூரிகா நால்வரும் வரிசையாக அமர்ந்திருக்க, மணக்க மணக்க நெய் வாசனையோடு மண்பாண்டத்தில் தயாரான உணவை பரிமாற தயாரானார்கள் கீதாராணி, ஜெயமாலா, சந்திரகாந்தம் மூவரும்.

“ஆத்தா மலரு இன்னும் ரெண்டொரு நாள்ல திருவிழா இல்ல அதனால கரிக்கஞ்சி ஆக்கி போட முடியல. கொஞ்சம் பொறுத்துக்கோ அப்புறம் பெரிய விருந்தே போடுவோம்”, சூசகமாக வான்மலருக்கு எதையோ புரிய வைத்துவிடும் நோக்கில் கீதாராணி கூற, இனியாழன் முகம் நவமணி போல் பிரகாசிக்க சிரித்துக் கொண்டான். 

“மலரு உன் சிநேகிதிப்புள்ள பேரு என்னனு நீ சொல்லவே இல்லையே?”, சந்திரகாந்தம் கேட்க,

‘ஹப்பா இப்போவாது உங்களுக்கு என்னை பத்தி கேட்க தோணுச்சே. ரொம்ப சந்தோஷம்’, மனதுள் நினைத்த தூரிகா வெளியே தன் வாய் திறந்து, “நா…”, என்று ஆரம்பிக்கும் முன் அவளை பற்றிய முன்னுரை, முகவுரையை இனியாழனே கூற ஆரம்பித்திருந்தான்.

“புள்ள பேரு தூரிகா அத்தை. ஆரக்கண்டாலும் புள்ளைக்கு பயம். ஒத்தவார்த்தை கூட வாய தொறந்து பேசாது. அல்லாத்துக்கும் ம்… ம்ஹூம்’னு தான் தலையாட்டி பேசும். அப்புறம் புள்ள ஊமைனு அல்லாம் நினைச்சுப்புடாதிங்க புள்ள குரலு அம்புட்டு அம்சமா இருந்தது. அப்புறம் அந்த பாட்டு…”, தூரிகாவை பார்த்துக் கொண்டே இனியாழன் கூறிக் கொண்டிருக்க, அனைவரும் வினோதமான பார்வையில் இனியாழனை பார்த்துக் கொண்டிருந்தனர். 

அனைவரின் சிந்தனையையும் கலைக்கும் பொருட்டு குலுங்கி சிரித்த வான்மலர், “மாமா அவள பார்த்த ரெண்டே மணிநேரத்துல ரெண்டாயிரம் விஷயம் சேர்த்துட்ட போல சூப்பர் மாமா இப்டித்தான் இருக்கணும்”,

“அடியே! ஓ முன்னால அடுத்த பொண்ண மாப்ள தூக்கி வச்சு பேசுனா நீ சண்டைதாண்டி போடணும். இப்படி ஒசத்தி சிரிச்சு பேசக் கூடாது”, வான்மலர் காதுக்குள் கிசுகிசுத்தபடி சந்திரகாந்தம் கூற, 

“அம்மா போம்மா இன்னும் எந்த காலத்துல இருக்க நீனு? மாமா பையன், அத்தை பெண்ணு கிட்ட மட்டும்தான் பேசணும், வைக்கணும்னு எதுவும் சட்டமா என்ன?. தூரி பத்தி தெரிஞ்சுருக்கு அதனால மாமா சொல்லுது இதுல எங்க தப்பு இருக்கு. பேசாம இரும்மா”, தன் தாயை கடிந்து கொண்ட வான்மலர் உணவில் கவனம் செலுத்திவிட, 

இனியாழன் தூரியை பற்றி கூறியது முறையா என்ற ரீதியில் பார்த்துக் கொண்டே நின்றார்கள் பெரியவர்கள். 

நால்வரும் சாப்பாட்டை முடித்துவிட்டு எழுந்து நிற்க, வாசஸ்பதி தாத்தா ஊரிலுள்ள நான்கு பெரிய தலைக்கட்டுக்களோடு வீட்டிற்குள் நுழைந்தார்.

“ஐ தாத்தா… தாத்தா”, என்றவாறு ஓடிவந்து அவரின் கைப்பற்றிக் கொண்டு நின்றாள் வான்மலர்.

“மலரு குட்டி எப்போடா வந்த? பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்ததா?”,

“ம்… எல்லாமே சௌகரியமாத்தான் இருந்தது தாத்தா. நீங்க எப்டி இருக்கீக? இவங்க எல்லாம் எதுக்கு மொத்தமா வந்துருக்காங்க திருவிழா பத்தி எதுவும் பேசவா?”,

“நான் நல்லா இருக்கேன் தாயி. இவங்க எல்லாம் வந்தது திருவிழா பத்தி பேச மட்டும் இல்ல நம்ம வீட்டுல நடக்க போற கல்யாணம் பத்தி பேச”,

“கல்யாணமா? எனக்கு தெரியாம நம்ம வீட்ல யாருக்கு தாத்தா கல்யாணம். ஒருவேளை உங்களுக்கும், பாட்டிக்கும் திருப்பி ஒருக்கா கல்யாணமா?”,

அவள் கேட்ட விதத்தில் அங்கிருந்த எல்லோருமே சிரித்து வைக்க, 

“அடிக்கழுத… உனக்கு வாய் நீளத்த பாரு. எங்களுக்கு எதுக்குடி கல்யாணம் உனக்கும், ஓ மாமனுக்கும் தான் கல்யாணம் அதுபத்தி பேசதான் ஊருல முக்கியமான ஆளுங்க எல்லாம் வந்துருக்காங்க”, தேசாட்சி பாட்டி சொல்ல,

தான் நின்ற இடத்திலிருந்து பூமி நழுவி போவதை போல் உணர்ந்தாள் தூரிகா. அவளுக்கு இந்த விடயம் புதிது அல்லவே. இனியாழன் மீது காதல் கொண்ட மனது கத்தியை வைத்து கீறியது போல் வலித்தது. சொட்டு நீராய் இமை ஓரத்தில் விழுமி நின்ற கண்ணீரை யாருக்கும் தெரியாமல் உள்ளே இழுத்து மறைத்தாள். சுவாசம் சீரற்ற நிலையில் இயங்க தன் தோழி இதற்கு என்ன மறுமொழி கூறுவாள் என்று அவளையே பார்த்திருந்தாள் தூரிகா.

“எங்களுக்கா… எனக்கும், மாமாவுக்குமா கல்யாணம். எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா பாட்டி. உம்மா”, என்றவாறு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்திய வான்மலர், இனியாழனை வெட்கம் கமழ பார்த்துக் கொண்டே புள்ளிமானாய் மேல்மாடி நோக்கி ஓடினாள்.

‘காதல் செடியை என்னுள் நட செய்துவிட்டு அதன் ஈரம் காயும்முன், என்னிலிருந்து அந்த செடியை வேரோடு பிடுங்கிக் கொண்டதன் மாயமென்ன ஆருயிரே! வலி தாங்குமோ எந்தன் இதயம்’, மனதுள் எண்ணியவள் விம்மி வந்த கண்ணீரை அடக்க இயலாமல் தான் தங்கியிருந்த அறை நோக்கி ஓடிச் சென்றாள் தூரிகா.

மெளனம் தொடரும்…