மெளன யுத்தத்தில்-2

மௌன யுத்தத்தில்-2

விபீஷ்னனை பார்த்து “மச்சான்…”, என்றழைத்தான் இனியாழன்.

அவன் இன்னும் தன் கன்னத்தை பற்றிக்கொண்டு முறைத்தவாக்கில் நிற்க,

“அடேய் என்னடா? எம்மேல கோவமா?”, என்றவாறு அவனருகில் வந்து நின்றான்.

“ம்ஹூம்… எல்லாரையும் பார்க்க வச்சு சப்புனா அறையுவ. போடா புடலங்கா பேசாத”,

“டேய் உன்ற மேலதான தப்பு. கொஞ்சம் இசங்கி, பிசங்கி ஏதாவது ஆகியிருந்தா என்ன ஆகியிருக்கும். அதான் கோவத்துல அடிச்சுப்புட்டேன். முகத்தை அப்டி வைக்காத இராசா பார்க்க முடியல”,

விபீஷ்னன் முகத்தை இன்னும் கோபத்திலேயே உர்ரென்று வைத்திருக்க,

“மச்சான் உன்ற கோவம் போக இன்னும் ரெண்டு அடி பொடதிய சேர்த்து வைக்கட்டா?”, மீசை முறுக்கி நாக்கை கன்னத்தில் சுழற்றிக் கொண்டே இனியாழன் கேட்க,

“அடேய் ஏன்டா? திருவிழாவுக்கு வந்துருக்குற அத்தனை ஜனம் முன்ன அசிங்கப்படுத்துனது பத்தாதுனு இப்போ இந்த…”, தூரிகாவை சுட்டிக் காட்டியவன், “இந்த அழகி முன்ன என்னை அசிங்கப்படுத்த பார்க்குறியா?”, விட்டால் விபீஷ்னன் அழுதே விடுவான் போல அந்த நிலையில் இருந்தான்.

“ஹாஹ்ஹா… சரிடா சரிடா நொம்ப அழுவாத அடிக்கலாம் மாட்டேன்”, இருவருமே தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, அவர்கள் அருகில் வந்தாள் வான்மலர்.

“என்ன விபி இன்னும் மாமா கிட்ட அடிவாங்குற உன்னோட பழக்கம் அப்போல இருந்து இப்போவர சரியாகல போல”,

“ஹீஹீஹீ… அப்டிலாம் இல்ல மலரு. மச்சான் சும்மா என்னை தொட்டு தொட்டு பேசுனான்”,

“ஹிஹி… ரொம்ப அசடு வழியாத? நீ கேவலமா சமாளிக்குறது உன்னோட மூஞ்சில தெரியுது”,

“அப்டியா தெரியுது. ரொம்ப குஷ்டம்டா சாமி”,

மூவருமே கலகலத்து நகைத்தார்கள்.

“அப்புறம் மச்சான் நீ இந்த பொட்டிகள அல்லாம் தூக்கிக்கிட்டு வீடு வந்து சேரு. நான் மலரையும், அந்த புள்ளையவும் மாட்டு வண்டியில கூட்டிக்கிட்டு வீட்டுக்கு போறேன்”,

‘ஏதே நான் பெட்டிய தூக்கிட்டு வரவா. சேது பட பைனல் சீன இப்போவே என்னை வச்சு பார்த்துடுவான் போல. இவனுக்கு பிரண்டா வாக்கப்பட்டு கடந்த இருபத்தியேழு வருடமா நான் படுற அவஸ்தை. ம்ஹூம்…’, மனதுள் நினைத்து ஒரு பெருமூச்சு விட்டவன் பெட்டிகளை தலையிலும், இடுப்பிலும், கக்கத்திலும் இடுக்கிக் கொண்டு நடக்க துவங்கினான்.

இரண்டு மாடுகள் பூட்டிய மாட்டு வண்டி கூடாரத்தோடு வெகு அழகாய் வீதி வாசலில் நின்றது.

“கருப்பா, செவலையா”, என்று மாடுகளை தடவிக் கொண்டு மலரை பார்த்தான் இனியாழன்.

மாடுகளுக்கு அருகில் வந்து நின்ற மலர், “ரொம்ப புஷ்டியா வளந்துட்டானுங்க இல்ல மாமா. எல்லாமே உன் கவனிப்பு தான்”,

“சரி மலரு. வண்டியில ஏறு. சீக்கிரம் வீட்டுக்கு போகலாம். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அத்தை, மாமா, சித்தி சித்தப்பா, வாண்டுகனு அல்லாரும் உன்னைப் பார்த்தா நொம்ப சந்தோசப்படுவாக”,

“சரி மாமா”, என்றவாறு துள்ளிக் குதித்து வான்மலர் ஏற, அவளுக்கு பின்னே வந்து நின்ற தூரிகா, மாட்டுவண்டியின் அமைப்பை பார்த்து திகைத்துப் போய் நின்றாள்.

“ஹேய் தூரி என்ன பார்த்துட்டே நிக்குற ஏறு”, வான்மலர் சொல்ல,

கையை பிசைந்து கொண்டே நின்றாள் தூரிகா.

தூரிகாவின் குண்டுக் கருவிழிகள் அங்குமிங்கும் உருள, அவளின் பயத்தை சரியாய் புரிந்து கொண்ட வான்மலர் தன் கையை நீட்ட, அவள் அப்பொழுதும் ஏறாமல் மலங்க மலங்க விழித்தாள்.

“என்ன தாயி உள்ள ஏறாம வெளியவே நிக்கிறீங்க உள்ள போங்க”,

தன்னருகில் கேட்ட இனியாழன் குரலில், அவள் இன்னும் பயத்தோடு முகம் வெளிற நிற்க,

அவளின் பிறை முகத்தில் தெரியும் சிறுபிள்ளைத் தனமான பதட்டம் இனியாழனை அழகாய் புன்னகைக்க வைத்தது.

“என்ன மலரு ஓ தோழி பொண்ணு இப்புடி பயப்படுறாக”,

“அவ எப்பவும் அப்படித்தான் மாமா. தொட்டதுக்கெல்லாம் பயந்து பயந்து மூஞ்சி வெளிறிப் போயி நிப்பா. ப்ச்… என்ன செய்ய புள்ளை அப்டியே வளந்துட்டா”,

“பொண்ணுன்னா ஸ்திரமா நிக்கணும் தாயி இப்டியெல்லாம் பயப்படக் கூடாது. தப்பா நினைக்காம என்ற கைய புடிங்க“,

தன் உரமேறிப் போன வலக்கையை நீட்டியவன் அவள் கரத்தை நீட்டுவதற்காக பார்த்துக் கொண்டே நின்றான்.

“தூரி பசிக்குது சீக்கிரம் உள்ள வா வீட்டுக்கு போவோம்”,

தோழிக்கு பசி என்றதும் தன் தயக்கம் தெளிந்தவள் இனியாழன் கரத்தை இறுக பற்றிக்கொண்டு அவன் தோளை பிடித்தவாறு துள்ளி ஏற, தூரிகா இனியாழன் கைபற்றிய நேரம் பர்வதம்மன் கோவிலில் பூஜைக்கான அழைப்புமணி மூன்று முறை அடித்து ஓய்ந்தது.

முதல்முறை வாட்டசாட்டமான கிராமத்து இளங்காளையின் முரட்டு உள்ளங்கைகளை பற்றியதும், திமில் போல் இருக்கும் அவன் தோளை பிடிமானத்திற்காக அவள் அழுத்தி தொட்டதும் பெண்மைக்கான நாணல் மொழிகள் மெல்ல மொட்டவிழ்ந்து கொண்டது.

துள்ளி ஏறும் போது தென்பட்ட அவனின் முறுக்கு மீசையும் அவன் அழகின் பால் அவள் மனதை வசியம் செய்ய ஆரம்பித்தது.

இது சரியா? தவறா? என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது. காலத்துக்கும் இந்த பிடித்தத்திலேயே வாழ சொன்னாலும் அவள் சரியென்று ஒப்புக் கொள்வாள். அந்தளவுக்கு அவனின் கம்பீர அழகிலும், வீரத்திலும் மனத்தை அவன் வசம் சாயவிட்டு தவியாய் தவிக்கிறாள்.

கண்களின் மோதலில் கண்டதும் காதல் என்பது திரேதா யுக இராமன்-சீதைக்கு தான் பொருந்தி போகுமா என்ன? கலியுக இராமன்-சீதைக்கு கூட அந்த வழிமொழி சரியாய் பொருந்தும். சரியாகவும் பொருந்தியது.

இனியாழனிடம் வாய் திறந்து ஒருவார்த்தை கூட அவள் பேசவில்லை தான். ஆனால் தன் உள்ளம் அவனுக்கு மட்டுமே சொந்தம் என்று பட்டா எழுதிக் கொடுத்துவிட்டாள்.

தோழிக்கு தெரியாமல் மௌனமாய் அவனையே பார்த்தவள், பரந்து விரிந்த அவனின் முதுகு தோற்றத்தையும், பக்கவாட்டு தோற்றத்தில் தெரிந்த மூங்கிலின் வலுவில் இருந்த கைகளின் சதைகளில் நாராய் புடைத்து தெரிந்த நரம்பையும் கண்டாள்.

‘ப்பா… துரைக்கு கோவம் வந்து ஒரு அறை விட்டாக் கூட நாலு நாளைக்கு நான் எழும்ப மாட்டேன் போல. என்னா ஆம்ஷூ… ஐ லவ் யூ செல்லம். உம்மா’, தன் மனதிற்குள் பேசி அவள் சிரிக்க, இனியாழன் அவளை திரும்பிப் பார்த்து மீசையை முறுக்கினான்.

அவன் திரும்பி பார்த்த பார்வை தனக்கானது என்று அவள் தான் தவறாய் புரிந்து கொண்டாள் என்பது இங்கே சாலச்சிறந்த உண்மை.

‘ஐ நான் பேசுறது கேட்டுருச்சா என்ன? என்னையே பார்த்து மீசைய முறுக்குறாரு’, உள்ளுக்குள் குதுகலித்துக் கொண்டாள்.

கிராமத்து வீதிகளை தாண்டி ஒரு பெரிய அரண்மனை போன்ற தோற்றத்தில் இருந்த அந்த வீட்டின் முன் மாட்டுவண்டி நிற்க,

“வீடு வந்தாச்சு மலரு இறங்கு”, என்றான் இனியாழன்.

“மலராஆஆஆ…”, பாவாடை தாவணியில் நின்ற தாமரைக்கொடி துள்ளி குதித்துக் கொண்டு கத்திக் கொண்டே வாசல் தாண்டி ஓடிவந்தாள்.

அவள் கத்திய கத்தில் வீட்டிற்குள்ளே இருந்த அனைவரும் ஒருவர் பின் ஒருவராய் வரத் துவங்கினர்.

“என்ன மலரு வந்துட்டாளா?”, தன் மூக்குக்கண்ணாடியை சரிசெய்து கொண்டே வந்தார் எழுபது வயது பூர்த்தியான தேசாட்சி பாட்டி.

“அடடே நம்ம மருமக வந்துட்டாளாம்’ங்க”, என்றவாறு தன் கணவர் செம்பவளனோடு சேர்ந்து வந்தார் கீதாராணி.

“வானு வந்துட்டாளம்‘ங்க வாங்க வாங்க”, தன் கணவரின் கைபற்றி அழைத்தவாறு வந்தார் நாட்டரசனின் மனைவியான ஜெயமாலா.

“சந்திரா, சந்திரா இங்கபாரு பாப்பா ஊருல இருந்து வந்துட்டா. வீட்ல இருக்க எல்லாரும் அவள சுத்திதான் இருக்காங்க. வேலைக்காரங்க கிட்ட சொல்லி ஆர்த்தி கரைச்சு எடுத்துட்டு வரச்சொல்லு”, என்றவாறு தன் மனைவி சந்திரகாந்தத்தை நோக்கி குரல் கொடுத்துக் கொண்டே வந்தார் இராஜவேலன்.

“கண்ணு, செல்லம், வெல்லம்”, என்று வான்மலரை அனைவரும் சூழ்ந்து நின்று கொஞ்சிக் கொள்ள, இனியாழன் ஒரு சிறுபுன்னகையோடு கையை கட்டிக்கொண்டு அனைத்தையும் பார்த்தவாறு நின்றான்.

வான்மலரை நோக்கி அவன் பார்வை வட்டம் இருந்தாலும் ஒருநொடி தூரிகாவை பார்த்தவன், “நொம்ப நாள் கழிச்சி வந்திருக்கா ஆத்தா. அதான் அன்பு மழை அதிகமா இருக்கு. மலர ஆசை தீர கொஞ்சிட்டு உன்னை பார்ப்பாங்க. மிரண்டு பார்க்காத”, இனியாழன் கூற அவள் ம்’என்று தலையசைத்தாள்.

“இத்தனை நாள் கழிச்சி இப்போதான் ஊருக்கே வர தோணுச்சா? எதுக்கு இத்தனை நாள் வராம இருந்த?”, கீதாராணி கேட்க,

“அய்யே என்ன மலர் இது எலும்பும், தோலுமா? நீ படிச்ச இடத்துல உனக்கு கறிகஞ்சி ஆக்கி போட்டாய்ங்களா? இல்லையா?”, ஜெயமாலா கேட்க,

“மாப்ள புள்ளைய அரை உசுரா ஆக்கி அனுப்பிருக்காய்ங்க. அந்த நொலேஜ் மேனேஜகண்ட (காலேஜ் மேனேஜ்மெண்ட்) சும்மாவே விடக் கூடாது”, சந்திரகாந்தம் கூற,

“அத்தைகளா, ம்மா… போதும் போதும். யாரையும் எதுவும் செய்ய வேணாம். வாங்க உள்ள போவோம்”,

அனைவரின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிவிட்டு இன்னும் அது, இதென்று பேசிக் கொண்டிருந்தவர்களை வீட்டிற்குள் அழைத்து செல்ல,

“அடி இருடி மலரு. ஆர்த்தி வரவும் எடுத்துட்டு உள்ள போவியாம். ஏய் இன்னுமாடி உள்ள ஆரத்தி கரைக்கிற?”, பாட்டி தன் குரல் உயர்த்தி கத்த,

“இதோ ஆர்த்தி”, என்றவாறு ஒரு வேலைக்கார பெண்மணி வந்து ஆர்த்தி தட்டை குடுத்துவிட்டு சென்றாள்.

“இனியாழா, மலரு கூட சேர்ந்து நில்லு”,

“ஆச்சி நானு”, அவன் சிறிதே தயங்க,

“அட வா மாமா”, அவன் கைபிடித்து இழுத்தாள் வான்மலர்.

இருவருக்கும் சேர்த்து ஆரத்தி சுற்றி நெற்றி திலகமிட்டு உள்ளே அனுப்ப, “தூரிமா நீயும் வா உள்ள போவோம்”, என்றவாறு தன் குடும்ப ஆட்களுக்கு அவளை அறிமுகப்படுத்தியவாறு வீட்டிற்குள் கூட்டிக் கொண்டு சென்றாள் வான்மலர்.

இனியாழனுக்கும், வான்மலருக்கும் ஒருங்கே ஆரத்தி சுற்ற தூரிகாவின் பிறைமுகம் அந்திமத்து தாமரையாய் சுருங்கிப் போனது.

“அம்மா பயங்கரமா பசிக்குதுமா”, சாப்பாட்டு மேஜை அருகே வான்மலர் செல்ல,

“மருமவளே முதல்ல குளியல் அதுக்கப்புறம் உனக்கு பிடிச்ச மாதிரி சாப்பாடு. வாடா, வா”, என்று அவளின் கைபற்றி கிணற்றடிக்கு கூட்டிக் கொண்டு சென்றார்கள் அந்தவீட்டு நங்கைகள்.

மலங்க மலங்க விழித்துக் கொண்டு அடுத்து என்ன செய்வதென தெரியாமல் நின்றாள் தூரிகா.

“என்ன தாயி உன்னை விட்டுட்டு மலர மட்டும் கூட்டிக்கிட்டு போயிட்டாகளா? வீட்டுக்கு வந்த விருந்தாடி புள்ளையவும் சரியா கவனிக்கணும்னு தெரியுதா பாரு? நீ வா தாயி உன்ன நான் கூட்டீட்டு போறேன்”,

அவளை கூட்டிக் கொண்டு மேல்மாடி நோக்கி முன்னே நடந்தவன் ஒரு அறையை திறந்து காட்டி, “இதுல தாங்கிக்கோ ஆத்தா. ஏதாவது வேணும்னா ஒரு குரல் குடு மலராவது, நானாவது வந்து பார்த்துப்போம்”,

ம்ம்ம்… என்று அவள் தலையசைக்க,

ஈரடி நகர்ந்து நடந்து சென்றவன் அப்படியே திரும்பி ஒரு கூர்பார்வை அவளை பார்த்துக் கொண்டே அடிமீது அடி வைத்து அவளை நெருங்கி வந்தான்.

அவன் முகத்தில் தெரிந்த கடினமும், வேகநடையும், நெற்றியில் வேர்வை முத்துக்கள் பூக்க நின்றவள், தொண்டைக்குழி மேலே ஏறி இறங்க தன் சுடிதாரின் மேல் டாப்பை இறுக பற்றிக்கொண்டு தன்னை நிலைப்படுத்த முயன்றாள்.

ம்… என்ன முயன்றும் உள்ளுக்குள் முகிழ்த்த பயம் அவளை பிறழ வைக்க, அரங்கன் தோள் சேரும் பூமாலையாய் அவன் கரத்திலேயே சரிந்து விழுந்திருந்தாள்.

அவள் முகத்துக்கும், அவன் முகத்துக்கும் சிறு இடைவெளியே இருக்க அதை பார்த்துக் கொண்டே நின்றவன், அவள் முகத்தை கூர்ந்து நோக்கிக் கொண்டே, கண்ணோடு கண் பேசிக் கொண்டே,

“வாய திறந்து ஒருவார்த்தை கூட பேசவே மாட்டேன்னு சென்னையில இருந்து வரும்போதே சத்தியம் பண்ணிட்டு வந்துட்டியா தாயி?”,

“ஆங்… து… து…”,

“ம்… பேசு தாயி”,

அவன் கண்ணை உற்று நோக்கியவள், ‘நீங்க என்னை தாயினு கூப்டாம பேர் சொல்லி கூப்பிட்டா நீங்களே போதும் போதும்னு சொல்ற அளவு நான் பேசிக்கிட்டே இருப்பேன். எங்க தூரினு என்னை பேர் சொல்லி கூப்டுங்க பார்ப்போம்’, அவள் மனதுள் பேச, அவளின் முன் சொடக்கிட்டு அவள் சிந்தனை கலைத்தவன்,

“என்ன ஆத்தா பகல்லையே கெனவா? இங்க வந்து சேர்ந்த உடனே அப்டி என்ன கெனா? போங்க குளிச்சுட்டு கீழ சாப்ட வாங்க”, அவன் நகர்ந்துவிட,

‘ச்சீ… அவரு என்பக்கத்துல கூட வரலியா? நான்தான் ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டேன் போல. தூரி கண்ட்ரோல் யுவர் செல்ப்’, பிடதியில் ஒரு தட்டு தட்டிக் கொண்டவள் பால்கனி வழியாய் வெளியே எட்டிப்பார்க்க, அதில் தெரிந்த இயற்கை அழகில் இலயித்துப் போனாள்.

கண்ணுக்கு தெரிந்த இயற்கை அழகில் மட்டுமா அவள் இலயித்தாள்??? இல்லவே இல்லை கார்முகில் வண்ணனைப் பற்றிய எண்ணவோட்டத்திலும் கூட தன்னை மறந்து நின்றாள்.

தன் உள்ளம் தொலைந்து நின்றாள்.

மெளனம் தொடரும்…