முள்ளில் பூத்த மலரே – 9

“இல்ல நான் டிவோர்ஸ் தர மாட்டேன்” ஆங்காரமாய் கோபத்தில் ஒலித்த பொன்மலரின் குரலை கேட்டு அதிர்ந்து நின்றான் மாணிக்கவேல்.

இதற்கு மேல் ஒரு அடி உள்ளெடுத்து வைக்கவும் மனமற்று  அங்கிருந்த திண்டுலேயே அமர்ந்துவிட்டான்.

ரவி நல் தகப்பனாய் இல்லாது போயினும், நல் கணவனாய் இருப்பானென தான் எண்ணியிருந்தான் மாணிக்கம்.  அவன் பெரிதாய் மதிக்கும் மலர் மேடமின் வாழ்க்கை எல்லோரது வாழ்வையும் போல சிறு சிறு பிரச்சனைகளால் நிரம்பி இருக்கிறது.  அதை அவரே சரி செய்து விடுவார்.  அதற்குரிய துணிச்சல் தைரியம் புத்தி கூர்மை என அனைத்துமே அவருக்கு இருக்கிறதென எண்ணி தான் இத்தனை நாளாய் மலரின் வாழ்வை பற்றி பெரிதாய் கண்டுகொள்ளவில்லை அவன். 

ஆனால் இன்று கண்ணா கூறிய வார்த்தையில், இங்கு அவன் காதில் விழுந்த வார்த்தையில் பெரும் ஏமாற்றமும் அதிர்ச்சியும் மனதை தாக்க,  அப்படியே அமர்ந்து விட்டான்.

“அவர் தான் உன் கூட வாழ விருப்பமில்லைனு சொல்றாரேமா! விருப்பமில்லாதவரோட வாழ்ந்து என்ன சுகத்தை காண போற நீ! உனக்கு ஜீவனாம்சமும் கொடுக்கிறேனு சொல்றாரே! அதுக்கப்புறமும் எதுக்கு அடம்பிடிச்சிட்டு இருக்க”  அந்த பெரியவர் பேசிக் கொண்டே போக,

“யாருக்கு வேணும் இவரோட காசு! அஞ்சு வருஷமாய் என் பிள்ளைங்க இரண்டையும் என் காசுல தான் வளர்த்துட்டும் படிக்க வச்சிட்டும் இருக்கேன்” ரவியை இளக்காரமாய் ஒரு பார்வை பார்த்து கூறினாள்.

ரவி அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“அதே தான் நானும் சொல்றேன்மா! இப்படி அஞ்சு வருஷமா அவரை தள்ளி வச்சி அவர் காசையும் வாங்காம நீ வாழுறதுக்கு, மொத்தமா அவரை அறுத்து விட்டுடலாம்ல. அவராவது அவர் குடும்பத்தோட சந்தோஷமா வாழுவார்ல”  அவனுக்கு பரிந்துக் கொண்டு அவர் பேச,

“அவர் எனக்கு செஞ்சது பச்ச துரோகம். இதுக்கு நான் ஏன் இறங்கி போகனும். புருஷன் தப்பே செஞ்சாலும் எங்கிருந்தாலும் வாழ்கனு சொல்லிட்டு அமைதியா போற ஆளு நான் கிடையாது! புருஷன்னு இன்னும் கொஞ்சம் மரியாதை வச்சிருக்கனால தான் சந்தில நிறுத்தாம விட்டிருக்கேன்” கோபமாய் அவள் பேச,

ரவியின் கோபத்தை ஏற்றியது அவளின் பேச்சு.

“அப்படி என்னம்மா அவர் உனக்கு துரோகம் செஞ்சாரு? நீ அவரை அஞ்சு வருஷமா கண்டுக்காதனால தானே அவருக்குனு ஒரு குடும்பத்தை உருவாக்கிக்கிட்டாரு. உன் மேல தானேமா தப்பு” அவர் கூற,

“ஓ…  சார் இப்படி சொல்லி தான் உங்களை பஞ்சாயத்து பண்ண கூட்டிட்டு வந்தாரா?” நக்கலாய் கூறியவள்,

“வாழ்க்கைல என்னிக்காவது உண்மைய பேசுற ஐடியா இருக்கா?” அவனை பார்த்து கேட்டாள்.

“இவனை போய் நம்பி பஞ்சாயத்து பண்ண வந்திருக்கீங்களே! இவர் குள்ள நரிங்க.  அமைதியா பேசாம இருந்தே காய் நகர்த்துவார்! இவர் மூஞ்சை பார்த்து அப்பாவினு நினைச்சிட்டீங்களோ? அவர் பின்னாடி ஏதோ செய்ய போறார். அப்ப அவர் நல்லவர் வல்லவர்னு சொல்ல சாட்சி வேணும்னு உங்களை கூட்டிட்டு வந்திருக்கார். இவ்ளோ பேச்சு பேசுற என்னை யாரு நல்லவனு சொல்லுவா… அதுக்கேத்த மாதிரியே அவரை நான் தான் கொடுமை படுத்துறேனு ஊர் முழுக்க பரப்பி வச்சிருக்கார்”  அவள் ஆதங்கமாய் பேசிக் கொண்டே போக,

“நிறுத்துமா! நீ  பாட்டுக்கு குறை சொல்லிட்டே போற!  உன் தரப்புல என்ன நடந்துச்சுனு நீ சொல்லுமா” அந்த பெரியவர் அவளை கேட்க,

“என்ன நடந்துச்சுனு அவளை எதுக்கு கேட்டுக்கிட்டு இருக்கீங்க? நான் சொன்னது தான் உண்மை! அவ சொல்றதைலாம் கேட்காதீங்க? டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கி தரது தான் உங்க வேலை. அதுக்கு தானே காசு வாங்குனீங்க” ரவி அவரிடம் கூற,

ரவியின் வார்த்தைகள் அந்த பெரியவரின் தன்மானத்தை சீண்ட,

“அப்ப என் கிட்ட சொன்னதுலாம் பொய்யான கதை! இந்த பொண்ணு பஞ்சாயத்து கூட்டி உங்களை அசிங்கபடுத்துறக்கு முன்னாடி,  நீங்க நல்லவன்னு காமிக்க இப்படி பொய்யான கதை சொல்லி உங்களுக்குனு ஆளுங்களை சேர்த்துட்டு இருக்கீங்க! அப்படி தானே” வெகு கோபமாய் அவனை முறைத்துக் கொண்டே அவர் கேட்க,

இதற்கு மேல் பேசினால் தன் மீதான நல்ல அபிப்ராயம் அவருக்கு மாறிவிடும் என அமைதி காத்தான் ரவி.

“நீ சொல்லுமா!” மலரின் தரப்பு நியாயத்தை கேட்க ஆயத்தமானார் அவர்.

“இதுவரைக்கும் இந்தாளு பஞ்சாயத்து பேச கூட்டிட்டு வந்த யாரும் என் தரப்பு வாதத்தை கேட்டதே இல்லை. இந்தாளு சொன்னதை நம்பி என் மேல தான் தப்புனு முடிவு செஞ்சிட்டு பேசுவாங்க. இவர் இதுவரை காசு கொடுத்து பஞ்சாயத்து பண்ண கூட்டிட்டு வந்த ஆளுங்களிலேயே என் தரப்பு நியாயத்தை சொல்ல சொல்லி கேட்ட முதல் ஆளு நீங்க தான்”  என்றவள்,

“என்னைய கட்டிக்கிறதுக்கு முன்னாடியே இவருக்கு கல்யாணமாகி குழந்தை இருந்திருக்கு! அதை மறைச்சு கல்யாணம் செஞ்சிருக்காரு! என் பையனை விட இரண்டு வயசு மூத்த பையன் இவருக்கு இருக்கான்”  என்றவள் கூறவும் அதிர்ச்சிக்குள்ளானார் அந்த பெரியவர்.

என்ன நடக்குது மலரின் வாழ்க்கையில்? அதிர்ந்து அமர்ந்திருந்தான் மாணிக்கம்.

அப்பா அம்மா எப்படி இப்படி ஒரு ஆளை மலருக்கு கட்டி கொடுத்தாங்க.
மலரிடம் அன்று,  ஊருக்கு செல்லும் போது அவளின் பெற்றோரை காண்பதாய் கூறி முகவரி வாங்கியிருந்தவன், ஒரு வாரயிறுதி நாளில் அவர்களின் ஊருக்கு சென்று இரு நாட்கள் அவர்களுடன் தங்கி இருந்து விட்டு தான் வந்தான். 

மலரின் குடும்பத்தில் ஒருவனாய் மாறியிருந்தான் மாணிக்கம். அதனாலேயே அவனுக்கு அவளின் பெற்றோர் மீது ஆதங்கமும் கோபமும் வந்தது.

மேலும் தொடர்ந்த மலர், “அவர் காலேஜ் படிக்கும் போதே ஒரு பொண்ணை லவ் பண்ணி, சூழ்நிலை காரணமாக அவர் வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணிருக்காரு. அவங்க அப்பா எங்க அப்பாட்ட கொடுத்த வாக்குக்காக  என்னை கட்டிக்க சொல்லி இவர் கிட்ட கேட்க, இவர் முடியாதுனு மறுத்து அவரோட காதலை அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு.  காதலை சொன்னவரு கல்யாணம் செஞ்சிக்கிட்டதை சொல்லலை.  அந்த பெண்ணைக் கட்டிக்கிட்டா தன்னோட சொத்து உனக்கு கிடையாதுனு இவர் அப்பா சொல்லியிருக்காரு.  அதனால சொத்துக்காக என்னை கட்டிக்கிட்ட மனசாட்சி இல்லாத மனுஷன் இவரு! இவர் என்னிக்குமே என்கிட்டயோ என் பிள்ளைங்க கிட்டயோ அன்பா நடத்துகிட்டது இல்லை.  ஆனா அந்த குடும்பம் மேல உயிரா இருக்காரு!” 

“நான் என் இரண்டாவது பிரசவத்துக்கு ஊருக்கு போய்ட்டு குழந்தை பிறந்து ஆறு மாசம கழிச்சி திரும்ப வந்தன்னிக்கு இங்க இவரை ஒரு பையனோட பார்த்தேன். ஜாடைல இவரை மாதிரியே என் பையன் வயசுல இருந்த அந்த பையனை பார்த்து சந்தேகப்பட்டு நான் கலெக்ட் செஞ்ச விஷயங்கள் தான் இது. அன்னியோட இவர் கிட்ட பேசுறதை நிறுத்திட்டேன். அஞ்சு வருஷம் ஆகுது. இவர் கொடுக்கிற காசை வாங்க மாட்டேனு சொல்லிட்டேன்! இவரை என் வாழ்க்கையிலருந்து ஒதுக்கி வச்சிட்டேன்”

“அப்புறம் விவாகரத்து கொடுக்கிறதுல என்னம்மா பிரச்சனை உனக்கு?” அவர் கேட்க,

அவளின் கண்களிலிருந்து அப்பொழுது நீர் அரும்பி எட்டி பார்க்க,  அவசரமாய் துடைத்து கொண்டாள்.

“என் அப்பா!”

“எவ்ளோ ஆசை ஆசையா என்னை வளர்த்தார். என்னென்ன கனவுலாம் கண்டு என்னை கட்டிக் கொடுத்தாரு.  சொத்துக்காக என்னைய இவர் கட்டிக்கிட்டது தெரிஞ்சா அந்த மனுஷன் நான் இங்க வாழ்ந்துட்டு இருக்க அன்பில்லாத இயந்திரமான வாழ்க்கை தெரிஞ்சா செத்துடுவாரு! என் பொண்ணுக்கு இப்படி ஒரு வாழ்க்கை நானே அமைச்சு கொடுத்துட்டேனேனு குற்ற உணர்வுல செத்துடுவாரு”  அழுதுக் கொண்டே உரைத்தவள்,

“எங்க அப்பாக்காக மட்டும் தான்  இன்னும் புருஷன்ன்ற ஸ்தானத்துல இவனை நான் வச்சிருக்கேன். என்ன தான் சண்டை பிரச்சனைனு எங்களுக்குள்ள இருந்தாலும் நாங்க சேர்ந்து வாழுறதா தான் எங்கப்பா நினைச்சிட்டு இருக்காரு.  அந்த சந்தோஷத்தை கெடுக்க நான் விரும்பல! விவாகரத்து தர முடியாது” கண்களை துடைத்து கொண்டு தீர்க்கமாய் அவள் உரைக்க,

“நீ என்னப்பா சொல்ற!  உன் இஷ்டத்துக்கு வாழ தான் இந்தம்மா தடை எதுவும் சொல்லலையே! அப்புறம் எதுக்கு டைவர்ஸ் கேட்டுட்டு இவளை குடைஞ்சிட்டு இருக்க”  அந்த பெரியவர் ரவியை கேட்க,

“எத்தனை நாளைக்கு தான் என் குடும்பத்தை நான் மறைச்சு வச்சி வாழுறது? போன வருஷம் எங்கப்பா சாகறதுக்கு முன்னாடி  சொத்துலாம் எனக்கும் அண்ணனுக்கும் பிரிச்சி கொடுத்துட்டாரு. அதான் அவளே சொன்னாளே..  சொத்துக்காக தான் அவளை கட்டிக்கிட்டேனு…  அந்த சொத்து கைக்கு வந்துடுச்சு இனி இவ எதுக்கு எனக்கு? அதுவுமில்லாம  ஊரார் முன்னிலைல நான் காதலிச்ச பொண்ணை இரண்டாம் தாரமா கட்டிக்கிட போறேன். அதுக்கு எனக்கு இவ டிவோர்ஸ் தரணும்” எவர் முகத்தையும் காணாது எங்கோ வெறித்து நோக்கி கூறியிருந்தான் ரவி.

“என்னால தர முடியாது!” இது தான் முடிவு என்பது போல் கூறி தனதறைக்குள் புகுந்து கொண்டாள் மலர்.

அவளுக்கு அழ வேண்டும். மனதிலுள்ள துயரம் நெஞ்சடைப்பதாய் இருக்க,  அத்துயரமனைத்தையும் அழுகையில் கரைத்து மனதின் பாரத்தை இறக்க வேண்டும். அதற்காகவே அறைக்குள் நுழைந்துக் கொண்டாள். 

இது மலரின் வழக்கம். துக்கம் தொண்டை அடைக்கும் வேளையில் தனியே சென்று அழுது முடித்து விடுவாள். அதன் பின்பு இதை பற்றியெல்லாம் யோசித்து கவலை கொள்ளாமல் அடுத்து என்ன என்பதில் மட்டும் தான் அவளின் கவனம் இருக்கும்.

ரவியின் சுயரூபம் தெரிந்த அன்று அந்த துக்கத்திலிருந்து வெளி வர ஒரு மாதமாகியது. ஆனால் அவன் தன் வாழ்க்கைக்கு தேவையில்லை என்பதை முடிவு செய்த பின் அவனை மனதிலிருந்து தூக்கி எறிந்து விட்டாள்.  ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.  தனது பெற்றோருக்காக மட்டுமே மொத்தமாய் பிரிந்து தனித்து வாழாது ஊருக்குள் கணவருடன் வாழ்வதாய் காண்பித்து ஒரு பொய்யான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறாள்.

அந்த பெரியவரும் ரவியும் கிளம்பி சென்றிவிட்டனர்.

அவள் என் அப்பா என உடைந்த இடத்திலேயே மாணிக்கத்தின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.  எத்தகைய துன்பத்தை மனதினுள் வைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் இந்த பெண்.  அவனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.

எப்பொழுதும் அவள் முகத்தில் இருக்கும் தெளிவும் கனிவும் சிரிப்பும், என்றைக்குமே துன்பமான சூழலில் அவளுள் உள்ளதை காண்பிக்கவே இல்லையே!

பல எண்ணங்கள் மனதில் சுழன்றடிக்க மலரிடம் இதை பற்றி பேச வேண்டும் என்ற முடிவோடு அவனது வீட்டை வந்தடைந்தான்.

ஆயா மற்றும் பிள்ளைகள் இருவரும் உறங்கி கொண்டிருந்தனர். 

அழுது முடித்த மலருக்கு பிள்ளைகளின் நினைவு வர, அறையின் வெளியே வந்து அவர்களை தேட, யாருமற்று வீடே வெறிச்சோடி கிடந்தது.

ஆயாவிடம் சிறிது நேரம் கழித்து பிள்ளைகளை அழைத்து வர கூறியது நினைவுக்கு வர, மாணிக்கத்தின் வீட்டை நோக்கி சென்றாள்.

ஹாலில் மல்லாக்க படுத்து, விட்டத்தை வெறித்து நோக்கி படுத்திருந்தவனுக்கு, வாசலில் நிழலாடுவது தெரிய நிமிர்ந்து பார்க்க, மலர் அங்கு நின்றிருந்தாள்.

இந்த பிரச்சனை பற்றியே எண்ணி படுத்திருந்தவனுக்கு திடீரென்று இவளை இங்கே பார்க்கவும், அவளின் பிரச்சனை பற்றி தான் பேச வந்திருப்பதாய் எண்ணியவன், “என்ன என்னாச்சு மேடம்? எதுவும் பிரச்சனையா?” தட்டு தடுமாறி அவன் கேட்க,

இல்ல பிள்ளைங்களை கூட்டிட்டு போக வந்தேன் என அவள் கூறவும் தான், “ஸ்ஸ்ஸ் எனக்கு இவங்க பிரச்சனை தெரியும்னு இவங்களுக்கு தெரியாதுல” தலையில் தட்டிக் கொண்டவன்,

“உள்ள தான் துங்குறாங்க! நாளைக்கு காலைல நானே எழுப்பி கூட்டிட்டு வரேனே” அவன் கூற, 

அவளுக்கு சற்று தனிமையும் ஓய்வும் தேவையாய் இருந்ததால் சரி என ஒப்புக் கொண்டு செல்ல எத்தனித்தவள், சட்டென அவன் புறம் திரும்பி மாணிக்கம் என அழைத்திருக்க, அதே நேரம் மேடமென விளித்திருந்தான் இவனும்.

இதில் இருவருமே சட்டென சிரித்திருந்தனர்.

“சொல்லுங்க மேடம்” அவன் கேட்க,

“இல்ல நீங்க சொல்லுங்க!  ஏதோ சொல்ல வந்தீங்க?” மலர் கேட்க,

அவளது பிரச்சனை பற்றி தான் ஏதேனும் கூற வந்தாளோ என எண்ணியவன், “இல்ல நீங்க முதல்ல சொல்லுங்களேன்” என்றான்.

“இன்னிக்கு நீங்க… உங்க முகம் சரியில்லையே! எதுவும் கவலையா இருக்கீங்களா? எதையோ நினைச்சி கவலைபடுற மாதிரி தோணுச்சு! அதான் கேட்கலாம்னு கூப்பிட்டேன்! அதை சொல்ல தான் நீங்களும் என்னைய கூப்பிட்டதா நினைச்சேன்”  அவள் கேட்க,

அவள் வலி வேதனை தாண்டி தனது முகத்தை பார்த்து தன் வலியை உணர்ந்து இப்படி கேட்டு கொண்டிருக்கும் அவளை தாய்மையின் ஒட்டு மெத்த உருவாய் எண்ணி நெகிழ்ந்தான் மாணிக்கம்.

“எப்படி அவருக்கு உங்களுக்கு துரோகம் பண்ண தோணுச்சு” தன்னை மீறி அவளிடம் கேட்டே விட்டிருந்தான்.

அவனின் கேள்வி முதலில் புரியாது பார்த்தவள், பின் புரிந்த நொடி, எப்படி இவனுக்கு தெரிந்தது என கேள்வியாய் நோக்கினாள்.

“இங்க பேச வேண்டாம் மேடம். வாங்க மாடிக்கு போகலாம்” மொட்டை மாடிக்கு அவளை அழைத்து சென்றவன்,

“சாரி மேடம் ஒட்டு கேட்கனும்னு நினைச்சிட்டு கேட்கலை. வேற எதுக்கோ தான் வீட்டுக்கு வந்தேன். ஆனா நீங்க அந்த பெரியவர்கிட்ட பேசினதுலாம் காதுல விழுந்துடுச்சு. அதை கேட்டுட்டு அப்படியே வந்துட்டேன். அப்பா எப்படி இப்படி ஒருத்தருக்கு உங்களை கட்டி கொடுத்தாங்க”

அவளிருக்கும் மனநிலையில் மாணிக்கத்திடம் கோபித்து கொள்ளவோ சண்டை போடவோ மனமில்லை. அவனிடம் அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ள தான் மனம் உந்தியது.

ரவியை திருமணம் செய்தது முதல் இன்று வரை நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் அவள் கூற,

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன், “நான் ஒன்னு சொன்னா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே? அவருக்கு விவாகரத்து கொடுத்துடுங்க. இப்படி மனுஷன் கூட நீங்க எதுக்கு வாழனும்? அப்பாகிட்ட நான் பேசுறேன். அவங்க மனசு நோகாத அளவுக்கு நான் எடுத்து சொல்றேன்” அவன் பேசிக் கொண்டே போக,

“இப்ப தான் ஒரு ஹார்ட் அட்டாக்ல இருந்து உயிர் பிழைச்சி வந்திருக்காரு! திரும்பவும் அவர்கிட்ட இதெல்லாம் சொல்லி அவர் உயிரோட விளையாட எனக்கு தைரியம் இல்லை”  தூர வானத்தை வெறித்து நோக்கி கூறிக் கொண்டிருந்தாள் மலர்.

“எனக்கு சத்தியம் பண்ணுங்க! அப்பாகிட்ட இதை பத்தி என்னிக்கும் பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க”  அவனிடம் சத்தியம் வாங்கி கொண்டாள்.

— தொடரும்