முள்ளில் பூத்த மலரே – 8

“உங்க பொண்ணை எனக்குக் கட்டி கொடுக்கிறீங்களா?” கேட்டுவிட்டு ஆதினியின் தந்தை முகம் காண பயந்து திரும்பிக் கொண்ட அகிலன்,

அவர் ஏதும் தன்னைத் தவறாய் எண்ணி விடுவாரோ என நினைத்து தன் காதலை விளக்க ஆரம்பித்தான்.

“ஆதினியை பார்த்ததும் காதல்லாம் இல்ல அங்கிள்! எனக்குப் பொண்ணு பார்த்துட்டு இருக்கிற சமயத்துல ஆதினியை பார்க்கவும், அவங்களோட அமைதி, பொறுமை, பயந்த சுபாவம், உங்கள் எல்லார் மேலையும் காட்டுற அன்பு இதெல்லாம் பார்த்த பிறகு, ஆதினி என் மனைவியா வந்தா நல்லா இருக்குமேனு ஆசை பட ஆரம்பிச்சி அது நானே அறியாம காதலாவும் மாறிடுச்சு. ஆனா நான் கட்டாயப் படுத்துல அங்கிள்! நீங்க வீட்டுல எல்லார்கிட்டயும் பேசிட்டு சொல்லுங்க” பயம் தணிந்து சற்றுத் திடம் வந்து அவர் பக்கம் இவன் திரும்ப,

வியப்பாய் அவனை நோக்கி கொண்டிருந்தார் அவர்.

நேரடியாய் பெண்ணிடம் தன் காதலை கூறாது பெண்ணின் தந்தையிடம் கூறும் அவனது மாண்பான செயல் வெகுவாய் ஈர்த்து அவன் மீதான நல் அபிப்ராயத்தை உண்டாக்கியது அவருக்கு.

அவரின் பார்வையைப் புரிய இயலாது, அவரருகே சென்று, “நான் எதுவும் உங்களை ஹர்ட் பண்ற மாதிரி சொல்லிருந்தா சாரி அங்கிள்” என அவன் கூற,

அது வரை அந்த மர இருக்கையில் அமர்ந்திருந்தவர் சட்டென எழுந்து விட்டார்.

“சாரி கேட்குற அளவுக்கெல்லாம் நீ எதுவும் செய்யலைப்பா” உடனே அந்த மன்னிப்பை மறுத்தவர்,

“நீ ஆதினியை லவ் பண்றனு எனக்கும் மதுக்கும் தெரியும்ப்பா! ஆனா இரண்டு பேருமே நீ இதைப் பத்தி ஆதினி கிட்ட தான் சொல்லுவனு எதிர்பார்த்துட்டு இருந்தோம். இப்படி என்கிட்ட பெர்மிஷன் கேட்பனு நினைக்கலை. உன்னைய நல்லா வளர்த்திருக்காங்க தம்பி” அவன் தலையில் கை வைத்துத் தடவி கூறியவர்,

“எங்க வீட்டுல என் மனைவியின் முடிவு தான் முக்கியம் தம்பி! அவ பேச்சை மீறி நாங்க எதுவும் செய்ய மாட்டோம். நான் வீட்டுல எல்லார்கிட்டயும் பேசிட்டு சொல்றேன்” என்றார்.

ஆனால் இதுவே அகிலனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. “என் ஸ்டேடஸ் என்ன? உனக்கு என் பொண்ணு கேட்குதோ?” என எதுவும் வில்லத்தனமாய்ப் பேசி மனதை காயப்படுத்தாமல், அவர் தன்மையாய் உரைத்ததே மகிழ்வை கொடுத்தது அகிலனுக்கு. ஆயினும் ஆதினியின் அன்னையை எண்ணி மனதினில் பயம் சூழ்ந்தது. அவர் அதிகம் சிரித்துப் பேசி பார்த்தில்லை அவன். அளவுடனே தான் அனைவரிடமும் பேசுவார். அதுவும் ஒட்டுதலில்லாத பேச்சாகவே இருக்கும். தம்மைப் பற்றிய மனவோட்டம் அவருக்கு என்னவாய் இருக்கும் என்கின்ற பயம் குழப்பம் அவனின் அடி வயிற்றில் புளியை கரைத்தது.

நிமிடங்களில் அவனின் மனவோட்டங்கள் இவ்வாறாய் ஓடி திரிய, “சரி அங்கிள்! நீங்க கேட்டு சொல்லுங்க!” என்றவன் கூறவும்,

“ஆமா இது உங்க வீட்டுல தெரியுமா?” எனக் கேட்டார்.

“அப்பாக்கு தெரியும் அங்கிள். அவர் தான் உங்ககிட்ட பேசனும்னு சொன்னாரு. உங்க முடிவு தெரிஞ்ச பிறகு என் குடும்பத்தை உங்ககிட்ட பேச வைக்கலாம்னு என்னோட எண்ணம்” அவன் கூற,

“சரி தம்பி நான் பேசிட்டு சொல்றேன்! ஆனா எதுவா இருந்தாலும் ஏத்துக்கிடனும். மனசு சங்கடப் படக்கூடாது” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.

அந்த மர இருக்கையில அமர்ந்து விட்டான் அகிலன். இவரிடம் தனது காதலை கூறியதில் ஒரு பக்கம் மனம் ஆசுவாசமானாலும் மறு பக்கம் என்ன முடிவு கூறுவார்களோ என்றெண்ணி கலக்கமடையவும் செய்தது.

மனதை திசை திருப்ப முயன்றவன், தனது தங்கை மீனாளுக்குக் கைபேசியில் அழைப்பு விடுத்தான்.

அழைப்பை ஏற்ற மறுநொடி, “என்னடா அழுக்கு பையா! இப்ப தான் என் நியாபகம் வந்துச்சா உனக்கு! கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சோமே ஒரு பொண்ண… அது அந்த வீட்டுக்கு போய் எப்படி இருக்கு என்ன செய்யுதுனு ஏதாவது அக்கறையோட விசாரிப்போம்னு தோணுச்சா உனக்கு? மாமனும் மச்சானும் மட்டும் அடிக்கடி பேசி கொஞ்சி குலாவிக்கிறது… நான் இல்லாம உனக்கு இந்த மாமன்லாம் கிடைச்சிருக்க மாட்டாங்க” அவள் சட சடவென அருவியில் விழுந்த மழைத்துளியாய் பேசிக் கொண்டே போக,

அவளின் பேச்சில் வாய்விட்டு சிரித்தவன், “நீ கொஞ்சம் கூட மாறல. அப்படியே தான் இருக்க நண்டு பொண்ணே” என்றவன் கூற,

“ஆமா ஆமா நான் ஒன்னும் மாறலை. நீ தான் மாறிட்ட… என்னைய மறந்துட்ட… கட்டி கொடுத்ததோட வேலை முடிஞ்சிடுச்சுனு நினைச்சிட்டியோ… நான் நேர்ல மட்டும் இருந்திருந்தா இந்நேரம் தலைகாணிலாம் உன் மேல பறந்திருக்கும்” கோபமாய் அவள் கூற,

“அடிப்பாவி ஒரு மாசமா தானே பேசலை… அதுக்கு இந்த அக்கப்போரா”

“ஆமா இப்டி தான் ஒரு மாசம் தானே தோணும்! அப்புறம் அப்படியே உன் கல்யாணம், வேலை, அண்ணி கூட வாழ்க்கை, உன் குழந்தைனு என்னைய நினைக்காமலேயே போய்டுவ” ஆற்றாமையில் ஆரம்பித்து அழுகையில் தோய்ந்தது அவளது குரல்.

“அப்படி இல்லடா மீனு! நான் எந்தளவுக்கு உன்ன மிஸ் பண்ணேனு உனக்குத் தெரியாது மீனு! உனக்கு மேரேஜ் முடிஞ்சு மறுநாளே வீடே வெறிச்சோடி ஆகிட்டு. கையில டிவி ரிமோட் எடுத்தாலே உன்கிட்ட இந்த ரிமோட்டுக்காகத் தினமும் சண்டை போட்டது தான் நினைவு வரும். அதனாலேயே கொஞ்ச நாள் டிவி பார்க்காம இருந்தேன் தெரியுமா! நீ சமைச்சதை கிண்டல் கேலி பண்ணி உன்னை வம்பிழுத்து அடி வாங்கிட்டே சாப்பிடுறதுலாம் அடிக்கடி நினைச்சி பார்த்துப்பேன். ஆபிஸ்ல இருந்து ரிட்டன் வரும் போது எத்தனை நாள் உன்னைப் பிக்கப் பண்ற நியாபகத்துல உன் ஆபிஸ் ரூட்ல போய் அப்புறம் நினைவு வந்து ஊரை சுத்திட்டு வீடு போய்ச் சேர்ந்திருக்கேன் தெரியுமா! நீ இல்லாத உன்னுடைய ரூம், காலியா இருக்க உன்னோட துணி கப்போர்ட், என்கிட்ட அடம்பிடிச்சி நீ வாங்கின அந்த டெட்டி பொம்மைனு ஒவ்வொன்னையும் உன் நியாபகம் வரும் போது போய்ப் பார்த்துப்பேன்! இப்ப இந்த வீடு வந்த பிறகு தான்…. ” அவளின் நினைவால் அவன் செய்ததெல்லாம் கூறிக் கொண்டே வந்தவன், இந்த வீடு வந்த பிறகு எனக் கூறும் போது தான் ஒரு விஷயத்தை உணர்ந்தான். அதை உணர்ந்த நொடி குற்ற உணர்வு அவனை ஆட்கொண்டது.

சில மணித்துளிகளில் அவனின் மூளை அவன் இங்கு இந்த அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்த பிறகு நடந்த நிகழ்வுகளை மனக்கண்ணில் ஓட்ட, “ஆதினிய காதலிக்க ஆரம்பிச்ச பிறகு மத்தவங்களைக் கண்டுகாம இருந்துட்டேனோ? காதல் வந்தா நம்மள சுத்தி இருக்கிறவங்களை மறந்துடுவோமோ? ஆனா அவங்க நமக்காகக் காத்துக்கிட்டு நம்மள பத்தி யோசிட்டு தானே இருப்பாங்க. ஆனா நாம தான் அதெல்லாம் கவனிச்சிக்காம வேற உலகத்துல இருப்போம் போல! அம்மாவும் இதனால தான் முன்ன மாதிரி என்கிட்ட பேசுறது இல்லையோ” யோசித்த நொடியில், சற்று சுயநலமாய் இருந்து விட்டோமோ என்கின்ற கவலை அவனை ஆட்கொள்ள,

“சாரி மீனுமா” உணர்ந்து கூறியிருந்தான்.

“சரி விடு விடு இதுக்குலாம் எதுக்குச் சாரி கேட்டுக்கிட்டு! ஆனா சம்திங் இஸ் மிஸ்ஸிங் ஃப்ரம் யூ! இப்படிச் சாரி கேட்குற ஆளு இல்லையே நீ! இதுக்கும் என்னைய கிண்டல் தானே பண்ணுவ! இப்ப என்னாச்சு? எதுவும் மூட் அவுட்ல இருக்கியா? இல்ல டிஸ்டர்ப்டா இருக்கியா?” தங்கையாய் அக்கறை குரலில் அவள் வினவ,

அவள் தன்னை, தன் உணர்வை, தான் கூறாமலே கண்டுக்கொண்ட விதத்தில் பேருவகைப் பொங்கி வழிய, “இந்த வீட்டுக்கு வந்த பிறகு எனக்குக் கிடைச்ச புது ஃப்ரண்ட் கிட்ட உன்னை என்னோட பெஸ்ட் ப்ரண்ட்… இப்ப உன்னை ரொம்ப மிஸ் பண்றதா சொன்னேன்! யூ ப்ரூட் இட் டா! கண்டிப்பா நீ என் பெஸ்ட் ஃப்ரண்ட் தான்” கூறியவன் இந்த அப்பார்ட்மெண்ட் வந்த பிறகு நடந்தவைகளை, ஆதினியை பற்றி, அவளின் குடும்பத்தைப் பற்றி, தற்போது அவளின் தந்தையிடம் தனது காதலை கூறியதைப் பற்றி என அனைத்தையும் கூறி முடித்தான்.

“அடப்பாவி! இவ்ளோ நடந்திருக்கு…. சொல்லவேயில்ல! அவனவன் ஃபிகரை பார்த்தா ஃப்ரண்ட தான் கழட்டி விடுவான்! நீ தங்கச்சியவே கழட்டி விட்டிருக்கியாடா டாங்கி ஃபெல்லோ! இதைத் தான் சிம்பாலிக்கா உன் பெஸ்ட் ஃப்ரண்ட் நான்னு சொன்னியா! நான் தான் புரிஞ்சிக்காம ஓவரா பூரிச்சி போய்ட்டேனோ” கோபத்தில் புசு புசுவென மூச்சு வாங்க அவள் பேச,

“அய்யய்யோ இவ மலை ஏறினா இறக்கிறது கஷ்டமாச்சே” அவனின் மனம் கலவரம் கொள்ள,

“என் குட்டி தங்கச்சி, அண்ணாவ மன்னிச்சி விட்டுடுவாளாம்! அண்ணா பாவம்ல” கெஞ்சும் குரலில் அவன் கேட்க,

அங்கு அவளுக்குச் சிரிப்பு வந்த போதிலும், “அப்ப ஒரு டீல் வச்சிக்கலாம்! அதுக்கு ஒத்துக்கிட்டீனா தான் மன்னிப்பு” தெனாவெட்டாய் அவள் கூற,

“எல்லாம் என் நேரம்! சொல்லும்! சொல்லி தொலையும்” அசுவாரசியமாய் அவன் கூற,

“நான் கிராண்டா ஒரு டிரஸ் பார்த்து வச்சிருக்கேன் அண்ணா! என் புருஷன் கிட்ட கேட்டா வாங்கித் தர மாட்டேங்கிறாரு” அவள் கூறி முடிக்கும் முன்,

“ஏன்வாம்! ஏன் வாங்கித் தர மாட்டாராம்? என் தங்கச்சி கேட்டதை வாங்கித் தர மாட்டேனு சொன்னா என்ன புருஷன் அவரு!” அவன் பேசிக் கொண்டே போக,

“நீ வாங்கித் தரணும்! அது தான் டீல்” என்றவள் கூற,

“வாங்கிக் கொடுத்தா போச்சு! என்ன டிரஸ் எங்க பார்த்த” ஆர்வமாய் அவன் கேட்க,

“ஆன்லைன்ல பார்த்தேன் அண்ணா! ஐயாயிரம் ணா அந்த டிரஸ் ரேட்” அவள் கூறியதை கேட்ட நொடி, திக்கென அதிர்ந்தவன்,

“ஹலோ ஹலோ…. ஹலோ” கைபேசியை இப்படியும் அப்படியுமாய்த் தூரமாய் வைத்து பலவிதமாய் ஹலோ கூறியவன்,

“மீனுமா இங்க சிக்னல் இல்ல! அண்ணா அப்புறம் பேசுறேன்” எனக் கைபேசியை வைத்த பின்பே அவனின் மூச்சு சீராய் வந்தது.

“பயப்புள்ள எவ்ளோ டெக்னிக்கா என்னைய கோர்த்து விடப் பார்த்திருக்கு! தப்பிச்சோம்டா சாமி” ஷப்பா வெனப் பெருமூச்சு விட்டு அங்கிருந்து அகன்று சென்றான்.

அவன் சிக்னல் இல்லையெனக் கூறி ஃபோனை வைத்த நொடியில் இருந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்திருந்தாள் மீனாள்.

அப்பொழுது அங்கு வந்த அவளின் கணவன் சிவராமன், “என்ன மீனு தனியா சிரிச்சிக்கிட்டிருக்க?” எனக் கேட்க, நடந்தவற்றை அவள் கூற, இப்படியா ஒரு மனுஷனை கதற விடுவ நீ எனக் கூறி அவளுடன் இணைந்து அவனும் சிரித்திருந்தான்.

சிறிது நேரத்தில் மீண்டுமாய்த் தனது அண்ணனுக்கு அழைத்தவள், “நீ பண்ண அலப்பறைல அம்மா அப்பா பத்தி கேட்காமலேயே விட்டுட்டேன் பாரு.. அம்மா அப்பா எப்படி இருக்காங்க? இப்பவும் அடிக்கடி சண்டை போட்டுட்டு தான் இருக்காங்களா?” எனக் கேட்க,

“ஹ்ம்ம் நமக்கு அது பழகி போனது தானே! சண்டையும் சமாதானமுமா நல்லாவே இருக்காங்க” அமைதியாய் அவன் கூற,

அண்ணன் தங்கை இருவரும் மற்ற கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர்.

வழமையாய் மாலை வேளையில் கண்ணாவும் கண்ணம்மாவும் மாணிக்கத்தின் வீட்டிற்குச் செல்ல, அங்கு மாணிக்கம் தனது நண்பன் ஜீவாவின் மீதமர்ந்து அவனை அடித்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட கண்ணம்மா பயந்து நடுங்கி கண்ணாவின் பின் பதுங்கி கொண்டாள்.

ஆளரவம் கேட்டு திரும்பி பார்த்த மாணிக்கம், கண்ணம்மாவின் பயந்த முகத்தைக் கண்டதும், சட்டென எழுந்து கொள்ள, அதற்குள் கண்ணம்மாவை தன் முன் இழுத்து கைகளுக்குள் வைத்திருந்தான் கண்ணா.

“ஹே கண்ணம்மா! ஒன்னுமில்லைடா! அங்கிள் கூடச் சும்மா அடிச்சி விளையாண்டுட்டு இருந்தேன்டா” கண்ணம்மாவை கைகளில் தூங்கி கொண்டு ஜீவாவின் அருகினில் சென்றவன், “சொல்லுடா” என்பது போல் ஜீவாவை முறைத்து வாயசைத்துச் செய்கை காட்ட, “ஆஆஆ ஆமாமா ஆமாடா குட்டி” திக்கி திணறி வார்த்தையை உதிர்த்தவன், தன்னைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டு, “உங்க மாணிக்கமும் நானும் ஃப்ரண்டஸ்டா கண்ணம்மா! சும்மா விளையாடிட்டு இருந்தோம்” மாணிக்கம் கைகளில் இருந்த கண்ணம்மாவின் கன்னத்தைத் தடவி கொஞ்சி ஜீவா கூற, அதன் பிறகே அவளின் நடுக்கம் சற்றாய்க் குறைந்தது. அதை அவளைத் தூக்கி வைத்திருந்த தனது கரங்களிலும் உணர்ந்தான் மாணிக்கம்.

“சரிடா நான் கிளம்புறேன்” ஜீவா கிளம்ப எத்தனிக்க,

“சொன்னது நியாபகம் இருக்குல! இனி ஒரு நேரம் ஏதாவது தப்பு பண்ணனு தெரிஞ்சிது! சொல்ல மாட்டேன்… செய்வேன்” வாய் சிரித்துக் கொண்டே பேசினாலும், மாணிக்கத்தின் குரலில் அதட்டல் நன்றாகவே தெரிந்தது.

“ஹ்ம்ம் சரி மச்சான்! புரியுது” எனக் கூறி கிளம்பி விட்டான் ஜீவா.

ஜீவா மாணிக்கத்தின் உற்ற தோழன். பள்ளி பருவ காலத்தில் பழகிய நட்பு. அவன் பாதியிலேயே குடும்பச் சூழல் காரணமாய் வேலை செய்யச் சென்னை வந்து விட்டான். அதன் பிறகு ஜீவா ஊருக்கு பல வருடங்கள் கழித்துச் சென்ற போது தான் யாருமின்றித் தனிமையிலிருந்த மாணிக்கத்தைக் கண்டான். தன்னுடனேயே அவனையும் சென்னை அழைத்து வந்து ஆட்டோவும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

அவனுடன் சில நண்பர்களும் சேர்ந்து தான் அறையெடுத்து தங்கியிருந்தனர். ஜீவாவிற்குக் காதல் தோல்வியில் குடிப்பழக்கம் ஏற்பட, மாணிக்கம் எவ்வளவு எடுத்து கூறியும் அவன் கேளாது போக, ஒரு கட்டத்தில் அது பெரும் பிரச்சனையாகி இந்தத் தனி வீட்டிற்கு வந்துவிட்டான் மாணிக்கம்.

எத்தனை நண்பன் இருந்தாலும் மாணிக்கம் போல் தன் மீது உண்மையான அன்பை பொழிபவன் யாருமில்லையென மாணிக்கம் அவனை விட்டு வந்த பிறகே உணர்ந்தான் ஜீவா.

அதன் பிறகு மாணிக்கத்தைத் தன்னுடன் அழைத்துச் செல்ல ஜீவா வந்த போது, இப்பிள்ளைகளை விட்டு இருக்க முடியாது எனக் கூறி மாணிக்கம், அவனை இவனுடன் தங்கி கொள்ளக் கூறினான். ஆனால் குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டு தான் அவனுடன் தங்க வேண்டுமெனவும் கூறினான்.

ஒரு வாரம் நன்றாய் போய்க் கொண்டிருந்த நிலையில், தன்னுடைய காதலியை வேறொருவரின் மனைவியாய்ப் பார்த்ததினால் குடித்து விட்டதாய் கூறி முந்தைய நாள் நள்ளிரவில் ஜீவா வந்து நிற்க, போதையில் அடித்தால் வலிக்காதென அச்சமயம் ஏதும் கூறாது உள்நுழைய அனுமதித்தவன், தற்சமயம் ஜீவா சுயநிலைக்கு வந்த பிறகு, அடி வெளுத்து வாங்கி விட்டான். இனி இந்த வீட்டில் அவனுக்கு இடமில்லையெனவும் கூறி விட்டான். ஆயினும் ஜீவாவின் குடி பழக்கத்தை நிறுத்த ஏதேனும் வழிவகைச் செய்ய வேண்டுமென அவன் மனம் நினைத்துக் கொண்டது.

“என் குட்டிம்மா ஸ்ட்ராங் கேர்ள் தானே! இதுக்கெல்லாம் போய்ப் பயப்படலாமா?” அவள் பயந்ததில் இவனின் மனம் ஏனோ நிலைக்கொள்ளாமல் தவித்தது.

“மாணிக்கம்! பாப்பா அப்படித் தான் டிவில சண்டைய பார்த்தாலும் பயப்படுவா” எனக் கூறிய கண்ணா,

“அப்பா அம்மாவை அடிக்கும் போதும் இப்படித் தான் பயந்து பாத்ரூம்குள்ள ஒழிச்சிக்கிட்டா” வெள்ளந்தியாய் கண்ணா கூறிக் கொண்டிருக்க, பகீரென அதிர்ந்தது மாணிக்கத்தின் மனது.

“என்னது மேடமை அடிப்பாரா அவரு! பொம்பளை பிள்ளையை அடிக்கிறவன் என்ன ஆம்பிளை?” மனதிற்குள் பொங்கிய கோபத்தைக் கட்டுபடுத்தியவன்,

“அப்பா ஏன் அம்மாவை அடிச்சாங்க?” மாணிக்கம் கேட்க,

பதில் உரைத்தாள் கண்ணம்மா, “அம்மா அப்பா கோபமா சண்டை போட்டாங்களா…. அம்மா கண்ணுல தண்ணியா வந்துச்சு! பாப்பாக்கும் அழுகையா வந்துச்சு…. அப்புறம் அப்பா அம்மா கன்னத்துல அடிச்சிச்சா.. நான் பயந்து பாத்ரூக்குள்ள போய்ட்டேன்… கொஞ்ச நேரம் கழிச்சி வெளிய வந்தப்போ அம்மா எனக்கும் அண்ணாக்கும் சோறு ஊட்டி தூங்க வச்சிடுச்சு… அப்பா எங்கயோ போய்ட்டாங்க” அந்த நாளை நினைத்து தற்போதும் நடுங்கியவாறே அவள் கூறி முடிக்க,

மாணிக்கத்தின் மனதில் பாரமேறிக் கொண்டது. எப்பொழுதும் போல் இதை மற்றவர் குடும்ப விஷயம் தனக்கெதற்கென ஒதுக்கி வைக்க முடியவில்லை அவனால். இது தன்னுடைய கண்ணாவையும் கண்ணம்மாவையும் பாதித்ததால் அவ்வாறு தோன்றுகிறதா இல்லை தான் நினைத்து வைத்திருந்த தைரியமான சண்டி ராணி மேடத்தின் வாழ்க்கை நேரதிராய் இருப்பதை எண்ணி அவனின் மனம் இவ்வாறு கலங்குகிறதா தெரியவில்லை அவனுக்கு.

“இது எப்ப நடந்துச்சு கண்ணா?”

“அப்பா அம்மா அடிக்கடி சண்டை போடுவாங்க! ஆனா அடிச்சது அன்னிக்கு ஒரு நாள் தான். அதுகப்புறம் அம்மா அப்பாகிட்ட பேசுறது இல்ல!”

இதற்கு மேல் கேட்டு பிள்ளைகளைக் கவலை கொள்ளச் செய்ய இவனுக்கு விருப்பமில்லை. ஆகையால் இவர்களின் மனநிலையை மாற்ற எண்ணி வெளியே கடைக்கு அழைத்துச் சென்றவன், அவர்களுக்குப் பிடித்தமான திண்பண்டங்கள், விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து அவனது வீட்டிற்கு வர, வெளியே ஆயா அமர்ந்திருந்தார்.

“என்ன ஆயா பிள்ளைங்களைத் தேடி வந்தியா? மேடம் பசங்களைக் கூட்டிட்டு வர சொன்னாங்களா?இன்னிக்கு ரொம்ப நேரம் ஆயிட்டுல பசங்க வீட்டுக்கு வந்து.. மேடம் தேடியிருப்பாங்கல” ஆயாவிடம் பேசிக் கொண்டே பூட்டிய கதவை திறந்தான்.

“இல்ல மாணிக்கம்! அந்த அம்மாவை பார்க்க யாரோ வந்திருக்காங்க! பிள்ளைகளைக் கொஞ்ச நேரம் கழிச்சி கூட்டிட்டு வர சொல்லி சொன்னாங்க. அவங்க புருஷனும் கூட ஒரு பெரிய மனுஷனும் வந்திருக்காரு”

கண்ணம்மா மாணிக்கத்தின் தோளிலேயே உறங்கிக் கொண்டிருக்க, அவளை அங்கிருந்த கட்டிலில் படுக்க வைக்கச் சென்றவன், ஆயா கூறியதை கேட்டதும் தனது தோளிலேயே மீண்டுமாய்ப் போட்டுக் கொண்டு, “வா ஆயா வீட்டுக்குப் போகலாம். எனக்கென்னமோ அங்க எதுவும் பிரச்சனை நடக்குமோனு தோணுது! மேடமுக்கு நாம ஹெல்ப் பண்ணனும்! வா ஆயா போகலாம்” அவனின் மனம் கண்ணா கூறியதை இன்றைய சூழலில் இணைத்து பார்த்து இன்றும் மேடமை அவர் அடித்து விடுவாரோ எனப் பயம் கொள்ள ஆயாவை கிளப்பினான்.

“வேண்டாம் தம்பி! பிரச்சனை ஆகும் போது நம்ம அங்க இருக்கக் கூடாது, பசங்களும் இருக்கக் கூடாதுனு தானே அந்தப் பொண்ணு என்னைய அனுப்பி வச்சிருக்கு” ஆயா கூற,

“நீங்க வர்றீங்களோ இல்லையோ! நான் போறேன்! பசங்க இங்கேயே இருக்கட்டும்! நான் போய்ப் பார்க்கிறேன்” ஆயாவிடம் கூறிவிட்டு பதிலுக்குக் கூடக் காத்திருக்காது வீட்டை நோக்கி நடந்தான்.

அவனின் மனமோ, வீட்டிற்குச் சென்று என்னவென்று கூறுவாய்? உன்னைக் காப்பாற்ற நான் வந்தேனெனக் கூறுவாயா? என இவனைக் கேள்வி கேட்க,

“நான் என்னமோ சொல்லி சமாளிச்சிக்கிறேன்! ஆனா இனி அவன் மேடம் மேல கை வைக்காத அளவுக்குச் செமத்தியா ஒன்னு கொடுத்துட்டு தான் வருவேன்” மனசாட்சியின் மண்டையில் தட்டி மூலையில் ஒதுக்கி வைத்தான்.

மலரின் வீட்டை அடைந்து, கதவை நெருங்கியதும், உள்ளே சென்று என்னவென்று சொல்லவென அவன் யோசித்திருந்த நேரத்தில், “டைவர்ஸ்லாம் தர முடியாது! நான் சைன் போட மாட்டேன்” கோபமாய்க் கத்தியிருந்த மலரின் குரல் மாணிக்கத்தின் செவியை அடைந்தது.

— தொடரும்