முள்ளில் பூத்த மலரே – 7

ஆதினியின் அன்னை கோபமாய் தனது இல்லத்தினுள் நுழைய, அவருடனேயே ஆதினியும் அவளின் தந்தையும் வீட்டிற்குள்ளே சென்றனர்.

அவர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

தாயின் கோபத்தில், ஆதினி தனது தந்தையின் முகத்தைக் கவலையாய் பார்க்க, “நீ கவலைப்படாதே நான் பார்த்துக்கிறேன்” அவளுக்கு ஆறுதல் உரைத்து அந்த அறையினுள் சென்றார்.

“என்னடா பேபி! ஏன் கோச்சிக்கிட்டு வந்துட்ட?” மெத்தையில் அமர்ந்திருந்த தனது மனைவியிடம் கேட்டார் அவர்.

“உங்க மேல செம்ம கோபத்துல இருக்கேன்! என்கிட்ட பேசாதீங்க” என்றவர் கூறவும்,

“நான் என்ன செஞ்சேன்? நியாயமா நீ ஆதினி மேலயும் அகிலன் மேலயும் தானே கோபப்படனும்” கேள்வியாய் அவர் கேட்க,

“எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம் தான். உங்க பொண்ணு இப்படிச் செஞ்சிட்டு இருக்கா”

“அவ இப்ப என்ன செஞ்சா?”

“அபார்ட்மெண்ட்ல எல்லாரும் அவளை என்ன நினைப்பாங்க? அந்தப் பையன் பாடின உடனே முறைக்காம கூடச் சேர்ந்து பாடிட்டு இருக்கா? அவனும் இவளும் லவ் பண்றாங்கனு மத்தவங்க நினைக்க மாட்டாங்களா? அது நம்ம பொண்ணுக்கு தானே அசிங்கம்! உங்களைச் சொல்லனும்… அந்தப் பையனுக்கு நம்ம பொண்ணைப் பிடிச்சிருக்காப்ல தெரிஞ்சதுமே பேசி பழக விடாம தள்ளி வைக்கனும். அதை விட்டுட்டு இந்த மது பையன் அவனே அகிலனை வான்டட்டா வீட்டுக்கு கூப்டு வந்து பேசிட்டு இருக்கான். எனக்கு இது எதுவும் சரியாப்படலை. நம்ம பொண்ண பத்தி நாலு பேரு நாலு விதமா பேசுறதை என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது! அகிலன் கிட்ட இனி வீட்டுல உள்ளவங்க யாரும் பேச கூடாது! முக்கியமா ஆதினி பேசக் கூடாது! சொல்லி வைங்க அவ கிட்ட” கோபமாய் முடித்தார் அவர்.

“பேபிமா இங்க பாரு! அகிலனை பத்தி எல்லாம் விசாரிச்சாச்சு! அகிலன் நம்ம பொண்ணை லவ் பண்றான். ஆனா நம்ம பொண்ணுகிட்ட அவன் இன்னும் சொல்லலை. நம்ம பொண்ணு ஃபரண்ட்டா தான் அவன்கிட்ட பழகுறா…. அவன் அவகிட்ட லவ் சொன்ன பிறகு அவளுக்குப் பிடிச்சிதுனா மேல் கொண்டு பேசலாம். அகிலன் குணநலன்கள் எப்படி, அவன் குடும்பம் எப்படினு எல்லாமே விசாரிச்சிட்டேன். அவனாலயோ இல்ல அவன் குடும்பத்தினாலயோ நம்ம பொண்ணுக்கு எதுவும் சின்னப் பிரச்சனை வரும்னு தெரிஞ்சிருந்தாலும் கண்டிப்பா நான் நம்ம பொண்ணை அவன் கிட்ட பேச விட்டிருக்க மாட்டேன். ஆனா அவன் அப்படி இல்ல பேபிமா” ஆதினியை எந்தளவிற்குப் பாதுக்காப்பாய் கவனித்துக் கொண்டிருக்கிறாரெனக் கூறிக் கொண்டிருந்தார் அவளின் தந்தை.

“எது எப்படியோ! இனி ஆதினி அந்தப் பையன்கிட்ட பேச கூடாது! அவ்ளோ தான்” இது தான் தன் முடிவென்பது போல் கூறி அவ்விடத்தை விட்டு சென்று விட்டார் அவளின் தாய்.

இது ஏதும் அறியாது அங்கு மதுரனோ, “இனி நாம ஃப்ரண்ட்ஸ்” நிகழ்ச்சியை வெகு விமர்சையாய் வெற்றிகரமாய் நிகழ்த்திய களிப்பில் கை குலுக்கி அகிலனிடம் கூறினான்.

அதன்பின் வீட்டிற்கு வந்த மதுரன், முகப்பறையில் சோகமாய் அமர்ந்திருந்த ஆதினியிடம் வந்து, “என்னாச்சு ஆது? எதுக்கு இப்படிச் சோகமா உட்தார்ந்திருக்க? ஆமா ஏன் எல்லாரும் பாதிலயே வந்துட்டீங்க?” கேள்விகளாய் கேட்க,

நடந்தவற்றைக் கூறிய ஆது, “அம்மா செம்ம கோபத்துல இருக்காங்களோனு பயமா இருக்குண்ணா” கவலையாய் அவள் கூற,

“அட என் குட்டி பாப்பா இதுக்குலாமா கவலைபட்டுகிட்டு இருப்ப! அதெல்லாம் நம்ம அப்பா பார்த்துப்பாங்க” அவன் கூறவும் சற்றாய் அவள் முகம் தெளிந்தது.

“அண்ணா! அண்ணா! நான் பாடினது எப்படி இருந்துச்சு?” ஆசையாய் ஆர்வமாய் அவள் கேட்க,

“இந்த ரணகளத்துலயும் உனக்குக் குதூகலம் கேட்குது” சிரிப்பாய் உரைத்து அவளைச் சீண்ட,

“நீதானே அப்பா பார்த்துப்பாங்கனு சொன்ன! சரி நீ சொல்லு என் வாய்ஸ் எப்படி இருந்துச்சு”

“உனக்கு அகிலனை பிடிச்சிருக்கா?” நேரடியாய் மதுரன் ஆதினியை கேட்க,

“கூடச் சேர்ந்து பாடுறதுல எதுக்குண்ணா அவரை எனக்குப் பிடிக்கனும்” விளங்கா பாவனையில் அவள் கேட்க,

அகிலனோட மனசு இன்னுமா இவளுக்குப் புரியலை என மனதினுள் எண்ணி குழம்பிய மதுரன், “சரி நம்மளே எதையும் சொல்லி லவ் வர வச்சிட கூடாது! அவளுக்கா எதுவும் புரிஞ்சி தெரிஞ்சி சொல்லும் போது பார்ததுக்கலாம்”
இவ்வாறாய் மனதினுள் மதுரன் பேசிக் கொண்டிருந்த சமயம், அறையிலிருந்து வெளி வந்தார் அவர்களின் அன்னை.

அவர் வந்ததும் இருவரும் கப் சிப் என்று வாயை மூடிக் கொண்டு நிற்க, “இன்னும் என்ன இங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க? நேரம் ஆகுதுல! போங்க போய் இரண்டு பேரும் படுங்க” எனக் கூறவும், இருவரும் அவரவர் அறைக்குள் நுழைந்தனர்.

மறுநாள் காலை தயங்கி தயங்கி ஆதினியின் தந்தை, அவளை இனி அகிலனிடம் பேச கூடாதென அவளின் அன்னை ஆணை இட்டதை உரைக்க,

“இதுல என்னப்பா இருக்கு? அகிலன் மேல எனக்கு எந்தத் தப்புமே இருக்க மாதிரி தெரியலையே!” சற்றாய் முகம் சுணங்கியவள்,

“சரி அம்மாக்கு பிடிக்கலைனா நான் பேசலை! ஆனா அவர் ஹர்ட் ஆவரோனு நினைச்சி தான் கஷ்டமா இருக்கு” கவலையாய் கூறி தந்தை தோளில் சாய்ந்து கொண்டாள்.

அடுத்த வந்த நாட்களில் அகிலன் அவளிடம் பேச வந்தாலும் விலகி போக ஆரம்பித்தாள் ஆதினி.

அன்று, தான் அவ்வாறு பாடியதால் தான் கோபித்துக் கொண்டு விலகி போகிறாளென எண்ணினான் அகிலன்.

ஒரு பக்கம் ஆதினி விலகி போக, மறுபக்கம் தினமும் மாலை வேளையில் இறகு பந்து விளையாட்டினை விளையாடியே மதுரனின் உற்ற தோழனாய் மாறியிருந்தான் அகிலன்.

முதலில் அவளின் தந்தையிடம் தனது காதலை கூற வேண்டுமென எண்ணியிருந்தவன், மதுரனிடம் இதைப் பற்றிப் பேசலாமோ என யோசித்துக் கொண்டிருந்தான்.

என்ன யோசித்து என்ன பயன்! அதற்குரிய தைரியம் தான் அவனுக்கு வந்தபாடில்லை.

இரு வாரங்கள் கடந்திருந்த நிலையில், சனிக்கிழமை காலை வேளையில், தனது மாடியின் படிக்கட்டில் ஆதினியின் தந்தை இறங்கி கொண்டிருக்க, அவரருகில் வந்து “ஹலோ அங்கிள்” என்றான் அகிலன்.

“ஹே அகிலன்! வணக்கம் ப்பா” என்றுரைத்தவர், “நீயும் அசோஷியேஷன் மீட்டிங்குக்குத் தான் வர்றியா?” எனக் கேட்டார்.

“என்ன மீட்டிங் அங்கிள்? யாரும் எதுவும் சொல்லலையே?” அவன் கேட்க,

“சொல்லலையா?” சற்று யோசித்தவர், “சரி இப்ப தெரிஞ்சிடுச்சுல! வா” என்றவர், “எதுவும் முக்கியமான வேலையா போறீயா என்ன?” எனக் கேட்க, “இல்ல இல்ல அங்கிள்” அவன் கூறவும், அந்த மீட்டிங்கிற்கு அவனைக் கையுடன் அழைத்துச் சென்றார்.

ஏற்கனவே அசோஷியேஷன் தலைவர், உப தலைவர், பொருளாளர் என அனைத்துக்குமாய்த் தேர்தல் வைத்து அவர்கள் பதவி ஏற்றுவிட்ட நிலையில் அங்கு நடக்கும் முதல் மீட்டிங் இது.

ஆதினியின் தந்தையும் அகிலனும் அருகருகே பின்னிருக்கையில் அமர்ந்திருந்தனர். மதுரனுக்கு வேறு வெளி வேலை இருந்ததால் இதற்கு அவனால் வர இயலவில்லை.

எவ்வகையில் இந்தக் குடியிருப்பு வளாகத்தினை மேம்படுத்தலாம் என ஒரு மணி நேரம் ஒருவர் சொற்பொழிவாற்றிய பிறகு பொருளாளர் பேசும் போது,

“வாடகைக்கு இருக்கிறவங்க இந்த மீட்டிங்க்கு வரனும்னு அவசியமில்லை. அதனால தான் நாங்க இன்வைட் செய்யலை! நீங்க கிளம்புறதா இருந்தா கிளம்பலாம்” என்பது போல் அவர் கூற,

அகிலனின் முகம் உடனே கறுத்து போயிற்று.

அகிலன் மட்டுமே அங்கிருந்தவர்களில் வாடகை வீட்டில் இருந்தான்.

எவ்வகையில் யோசித்தாலும் இது அகிலனை அவர்கள் அவமதித்ததாய் தோன்ற, சட்டென இருக்கையை விட்டு எழுந்த ஆதினியின் தந்தை,

“என்னையா நினைச்சிட்டு இருக்கீங்க?? அன்னிக்கு ஓடியாடி அந்த ஃபங்ஷனை நடத்த இவன் தேவை! ஆனா அப்பார்ட்மெண்ட்க்காக நீங்க செய்ற திட்ட முடிவுகள்ல இவன் பங்கெடுத்துக்கக் கூடாதோ? என்ன நியாயம் இது? மனுஷனை குணத்தைப் பார்த்து மதிக்கப் பழகுங்க… பணத்தைப் பார்த்து மதிக்காதீங்க! கௌவரம் மனுஷனோட நன் நடத்தை வச்சி வர்றது, பணத்தைப் பார்த்து வர்ற கௌரவம் நிலைச்சி நிக்காது! இனி நான் இந்த அசோஷியேஷன் மீட்டிங்க்கு வர மாட்டேன்! உங்களோட ரூல்ஸ்க்கு கட்டுபடவும் மாட்டேன்” கோபமாய் உரைத்து அகிலனின் கை பிடித்து அங்கிருந்து அவனை இழுத்து செல்ல,

“ஏன் அங்கிள் இவ்ளோ கோபப்படுறீங்க?” அவருடன் நடந்து கொண்டே அகிலன் கேட்க,

“இன்னிக்குனு இல்லப்பா! கொஞ்ச நாளா இப்படித் தான் பண்ணிட்டு இருக்காங்க. புதுசா வீடு வாங்கியிருக்காங்க போல! என்னமோ அவங்க பரம்பரை பணக்காரங்க போல மத்தவங்களை மட்டம் தட்டுறது! வாட்ச்மேன்லாம் இவங்களோட அடிமை போல நடத்துறது! ஐநூறு ரூபாய் எக்ஸ்ட்ரா கொடுத்துட்டு பெரிய தான தர்ம்ம் செஞ்சிட்டா மாதிரி ஊரெல்லாம் சொல்லிட்டுத் திரியுறது! இவ்ளோ அல்ப வேலையும் செஞ்சிட்டு இருக்காங்க தம்பி! அதான் மொத்தமா திட்டிட்டு வந்துட்டேன்!”

“காசு பணம் வரும் போகும் அகிலன்! நம்மளை சுத்தி கிடைக்கிற அன்பான நாலு மனுஷங்க தான் முக்கியம் அகிலன்!”

அவரின் சொல்லில் அகிலனின் மனதிற்குள் பனி மழை சாரல் வீசியது. எதை எண்ணி அவரிடம் பெண் கேட்க பயந்திருந்தானோ, தான் அவ்வாறில்லை எனக் கூறி விட்டாரே! ஆக இவன் கேட்டாலும் அவர் கோபப்படாமல் அசிக்கப்படுத்தாமல் தன்மையாய் தான் பதிலுரைப்பாரெனத் தெளிவாய்ப் புரிந்தது அவனுக்கு.

புரிந்த நொடி, “அங்கிள் வாங்க பார்க்ல உட்கார்ந்து பேசலாம்” அங்கிருந்த மர மேடையில் அமர வைத்தவன்,

“அங்கிள் ரொம்ப நாளா உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்னு நினைச்சிட்டு இருக்கேன்” தயங்கி தயங்கி அவன் கூற,

“என்ன கேட்கனும் தயங்காம கேளு” அவனை அவர் உந்த,

“ஆதினிய லவ் பண்றேன்! எனக்குக் கல்யாணம் செஞ்சி கொடுப்பீங்களா அங்கிள்” விரைவாய் கூறி விட்டு அவர் முகம் காண பயந்து வேறொரு பக்கம் நோக்கி திரும்பி கொண்டான் அகிலன்.


“ஒரு விஷயத்தை விளக்கனும்னு வந்திருக்கேன்” என மலர் கூறியதும்,

பயம் மனதை கவ்வி கொண்டது மாணிக்கத்திற்கு.

தனது வாழ்வில் எவரிடத்திலும் எந்நிகழ்விலும் பயம் என்பதை உணர்ந்திராதவன், ஏனோ மலரிடத்தில் மட்டும் பயம் தயக்கம் என அனைத்தையும் உணர்ந்தான்.

மலரின் நற்பண்பும், ஒழுக்கமும், துணிவும், பிள்ளைகளை வளர்க்கும் பாங்கும் அவனுக்கு அவள் மீது வெகுவான மதிப்பையும் மரியாதையையும் உருவாக்கி இருந்தது. அதுவே அவளிடம் எதிர்த்து பேசும் தைரியத்தை அவனுக்கு அளிக்கவில்லை.

“என்ன விஷயம் வேணாலும் சொல்லுங்க மேடம்! ஆனா பிள்ளைங்க கிட்ட பேச கூடாதுனு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்! அவங்க என் ஃலைப்ல வந்த பிறகு நான் மனசாரச் சிரிச்சு சந்தோஷமா வாழுறேன். என் மேல அன்பை காட்டவும் ஜீவன்கள் இருக்குனு நிம்மதியா தூங்குறேன்” வேண்டுதலாய் கோரிக்கையாய் மலரிடத்தில் இதனை மாணிக்கம் உரைக்க,

தாய்மை பெருக்கோடு அவன் முகத்தை நோக்கியவள், “இல்லங்க ஸ்கூலுக்குப் போய் பிள்ளைங்களைப் பார்க்காதீங்கனு சொல்ல தான் வந்தேன்! ஆனா” சற்று அமைதியானவள்,

“ஸ்கூலுக்குப் போய் நீங்க தினமும் பார்த்தீங்கனா அவங்களும் உங்களை எதிர்ப்பார்த்து காத்துட்டு இருப்பாங்க. என்னிக்காவது நீங்க போக முடியாம ஆச்சுனா ஏமாந்து போய்டுவாங்க. அதனால தான் நான் லன்ச் டைம்ல ஸ்கூலுக்குப் போகாம அவங்களே சாப்பிட ப்ராக்டிஸ் பண்ணது. தங்கச்சியை நல்லா பார்த்துக்கனும்னு சொல்லி கொடுத்தது” என்றாள்.

கவலையாய் அவள் முகம் பார்த்தவன், “நீங்க சொல்றதும் சரி தான்! ஆனா வாரத்துல இரண்டு மூனு நாள் சாயங்கால நேரமா பிள்ளைகளை என் வீட்டுக்கு அனுப்புறீங்களா? அவங்க கிட்ட பேசாம அவங்களைப் பார்க்காம என்னால இருக்க முடியாதுங்க! என்னமோ இவங்க கூட எனக்கு ஜென்ம ஜென்மமாய்த் தொடர்பு இருக்குமோ? இவ்ளோ குறுகிய காலத்திலேயே எப்படி இந்தளவுக்கு அன்பு வச்சேனு எனக்கே ஆச்சரியம் தான்ங்க” அவன் கூற,

சிறிது நேரம் யோசித்தவள், “சரி சாயங்காலம் அவங்க ஹோம்வர்க்லாம் முடிச்சதும் உங்க வீட்டுக்கு அனுப்புறேன்” அரை மனதாகவே ஒப்புக் கொண்டாள்.

“அப்புறம் முக்கியமான விஷயம். நான் ஒன்னும் என் வேலைக்காகப் பிள்ளைகளைத் தனியா விட்டுட்டு ஊருக்கு போற அளவுக்கு மனசாட்சி இல்லாதவ இல்ல” மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு அவள் கூற,

ஹா ஹா ஹா வென வாய்விட்டு சிரித்தவன், “அப்புறம் ஏன் இப்படி விட்டுட்டு போறீங்க மேடம்?” அக்கறையாகவே வினவினான்.

“என்னோட அப்பா அம்மா தனியா அங்க இருக்காங்க! அவங்களுக்கு நான் ஒரே பொண்ணு! அவங்களைப் போய் பார்க்காம எப்படி இருக்காங்கனு தெரிஞ்சிக்காம என்னால நிம்மதியா இருக்க முடியாது! பிள்ளைங்களையும் கூட அழைச்சிட்டு போகனும்னு ஆசை தான்! ஆனா என்னால தனியா இரண்டு பேரையும் பஸ்ல மேனேஜ் பண்ண முடியலை! ஒரு தடவை கூட்டிட்டுப் போய்ப் பாப்பா வாந்தி எடுத்து, பையன் ஒரு இடத்துல பாத்ரூம் போறேனு இறங்க, அவனை நான் தேட இறங்கனு பஸ் கிளம்புற டைம்ல ஓடி வந்து ஏறினேன்! அதுக்கப்புறம் பசங்களைக் கூடக் கூட்டிட்டு போற எண்ணத்தையே கைவிட்டுட்டேன்”

“ஏன் உங்க ஹஸ்பண்ட் கூட வர மாட்டாங்களா?” அப்படி என்ன அவருக்கு வேலை எனக் கேட்க வந்து வாய்க்குள் அடக்கி கொண்டான்.

“இல்லங்க அவருக்கு வேலை இருக்கும். காலேஜ்ல லெக்சரரா வேலை செய்றாரு. சனிக்கிழமை கூடச் சில நேரம் இருக்கும். நான் எனக்கு ஸ்கூல் சனிக்கிழமை லீவ் இருக்க நேரமா பார்த்து போய்ட்டு வந்துடுவேன்” அவள் உரைக்க,

“அப்ப நான் ஒரு ஐடியா சொல்றேன்! இனி நீங்க ஊருக்கு போனா.. பசங்கள நான் பார்த்துக்கிறேன்” என்றவன் கூறவும்,

சரி எனக் கூறியவள், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விடைப்பெற்று சென்றாள்.

அதன்பின் வந்த நாட்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பிள்ளைகளை, மாணிக்கம் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள். அந்த நாளுக்காகப் பிள்ளைகள் இருவரும் ஆவலாய் காத்திருப்பதையும் கண்டிருந்தாள். பிள்ளைகள் தந்தை பாசத்திற்காக ஏங்குவது நன்றாய்ப் புரிந்தது மலருக்கு.

அவர்களை மாலை வேளையில் மாணிக்கம் வீட்டிற்கு அனுப்பி விட்டு, சில மணி நேரம் கழித்து அவளும் சென்று பார்ப்பாள்.

அவ்வாறு அவள் சென்று காணும் சமயங்களில், அப்பிள்ளைகளுக்காக ஏதேனும் சமைத்து ஊட்டிக் கொண்டிருப்பான் ஒரு நேரம்! அவர்களுக்குக் கேரம் விளையாட கற்று கொடுத்திருப்பான் ஒரு நேரம்! குதிரையாய் மாதிரி இரு பிள்ளைகளையும் முதுகில் தாங்கி விளையாடிக் கொண்டிருப்பான் ஒரு நேரம்! பிள்ளைகளோடு பிள்ளையாய் மாறி அவர்கள் வயதிற்கேற்றார் போல் அவர்களுடம் பேசி மகிழ்ந்து விளையாடி குதூகலித்திருப்பான்.

இதெல்லாம் பார்த்த பிறகு அவன் மீது அவளுக்கு வெகுவாய் நம்பிக்கை வந்திருந்தது. இவனால் பிள்ளைகளுக்கு எதுவும் பிரச்சனை வராதெனத் தெளிவாய் தெரிந்த பிறகே, அவனிடம் பிள்ளைகளை விட்டுட்டு ஊருக்கு சென்றாள். எனினும் ஆயாவை உடன் இருக்கப் பணித்தே சென்றாள்.

அவ்வாறு ஒரு வாரயிறுதி நாளில் ஊருக்கு சென்று வந்த பின்னர் பிள்ளைகளுடன் மாணிக்கத்தின் வீட்டிற்குச் சென்றாள்.

“என்ன மேடம்! அம்மா அப்பாலாம் பார்த்துட்டு வந்துட்டீங்களா? எப்படி இருக்காங்க எல்லாரும்?” மாணிக்கம் நலம் விசாரிக்க,

“எல்லாரும் நல்லா இருக்காங்க! அப்பா அம்மாகிட்ட உங்களைப் பத்தி சொன்னேன். எப்பவும் அம்மா பிள்ளைங்களுக்காக ஏதாவது செஞ்சி கொடுப்பாங்க! இந்தத் தடவை பணியாரம் செஞ்சாங்க. உங்களுக்கும் ஒரு பாக்ஸ்ல போட்டு கொடுத்தாங்க. இதைக் கொடுக்கத் தான் வந்தேன்” எனக் கூறி ஒரு சில்வர் டப்பாவை அவன் கையில் கொடுத்தாள்.

மிகுதியான மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது மாணிக்கத்தின் மனது. அவர்கள் வீட்டில் ஒருவராய் அவனை அங்கீகரித்ததாய் ஓர் உணர்வு தோன்றியது அவளின் தாயின் இச்செயலில். அதுவே மனநிறைவை தந்தது அவனுக்கு.

டப்பாவை திறந்து பணியாரத்தை எடுத்துப் பிள்ளைகளுக்குக் கொடுத்து விட்டு அவனும் எடுத்து உண்டவன், “செம்ம கைப்பக்குவம்ங்க அம்மாக்கு! அடுத்தத் தடவை போகும் போது ரொம்ப நல்லாருக்குனு சொன்னேன்னு சொல்லுங்க” என்றவன்,

“அம்மா அப்பா ஊர்ல என்ன செய்றாங்க? ஏன் தனியா விட்டிருக்கீங்க? இங்கயே அவங்களைக் கூட்டிட்டு வந்துடலாம்ல” எனக் கேட்டான்.

“அப்பா பிறந்து வளர்ந்ததுலாம் அங்க தான்ங்க. பரம்பரை சொந்த வீடு இருக்கு. அவங்களுக்கு அந்த ஊரை விட்டு வர்ற மனசில்லை. விவசாயம் தான் செஞ்சிட்டு இருந்தாங்க! இப்ப குத்தகைக்கு விட்டிருக்காங்க”

“அப்பா ஒரு பெர்ஃபக்ட் ஜென்டில்மேன்ங்க! மகன், அப்பா, கணவன்னு அவங்க வாழ்க்கைல எல்லா ரோலையும் எந்தக் குறையும் இல்லாம செஞ்சாங்க. அவங்க தான் எனக்கு ரோல் மாடல்! எனக்கு முன்னாடி ஒரு அண்ணன் எனக்கு மூனு வயசு இருக்கும் போது இறந்துட்டானாம். அதுல அம்மாக்குக் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி ஆகிட்டாங்க. அவங்க பேசவே மாட்டாங்க, சமைக்க மாட்டங்க, அவங்க பாட்டுக்கு இருப்பாங்க! அவங்களுக்கும் மருத்துவம் பார்த்துட்டு என்னையும் வளர்த்தாங்க எங்க அப்பா! எனக்கு அஞ்சு வயசாகும் போதே அம்மா சரியாகிட்டாங்க. ஆனா அந்த இரண்டு வருஷத்துல அப்பாவை இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என் பாட்டி(அப்பாவை பெத்தவங்க) சொன்னாங்களாம்! நான் இப்படி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தா அவ என்னைய விட்டுட்டு போய்ருப்பாளா? இவளுக்கு மருத்துவம் பார்த்து சரி செஞ்சு பார்த்துக்கிறது தான் கணவனா என்னோட கடமைனு அப்பா சொன்னாங்களாம்!”

“எவ்ளோ பெரிய மனுஷன்! இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா?” கண்களில் ஆச்சரியத்தைத் தேக்கி அவன் கேட்க,

“இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இன்னும் இருக்கு” என்றவள்,

“எங்க கிராமத்துலேயே நான் தான் முதல் பெண் பட்டதாரி! அதுவும் வெளியூர் வந்து படிச்ச முதல் பெண் நான் தான்! அப்பா ரொம்ப முற்போக்குவாதி! பெண்கள் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருக்கனும்னு நினைப்பாங்க! அடக்கி வைக்கனும்னு நினைக்க மாட்டாங்க! அதனாலயே எனக்கு விருப்பமானதுலாம் செய்ய எந்தத் தடையும் அப்பா போட்டதேயில்லை! அம்மாவும் அப்பா என்ன சொன்னாலும் சரியா தான் இருக்கும்னு ஏத்துப்பாங்க”

“கண்டிப்பா உங்க அப்பாவை நான் நேர்ல பார்க்கனுங்க! உங்க தைரியம் தன்னம்பிக்கை எங்கிருந்து எப்படி வந்துச்சுனு இப்ப புரியுதுங்க! உங்க அப்பா வளர்ப்புல வந்திருக்கு எல்லாமே”

“நீங்க ஊருக்கு போகும் போது சொல்லுங்க! அட்ரெஸ் தரேன் நேர்ல போய்ப் பாருங்க” என்றாள்.

“அப்பா மட்டும் இல்லங்க, எனக்குக் கிடைச்ச மாமனாரும் ரொம்பத் தங்கமானவர். அப்பாவோட நெருங்கிய ஸ்நேகிதர் அவர். அவரோட மகனும் பட்டதாரின்றதால படிச்ச பெண்ணைத் தான் கட்டிப்பேன்னு அவர் மகன் சொல்லிட்டாராம்! நல்லதா போச்சுனு என் மாமனார் என் அப்பா கிட்ட வந்து என்னைப் பொண்ணு கேட்டாங்க! அப்படி நடந்தது தான் என் கல்யாணம்! என் கணவருக்கு ஒரு அண்ணன் இருக்காங்க! என் மாமியார் என் கணவர் சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க! அவங்க அண்ணன் தான் அவரை வளர்த்தது! என் கணவர் குடும்பத்துல எல்லாருமே ரொம்ப நல்லவங்க! அவரைத் தவிர” இதுவரை சத்தமாய்க் கூறியவள், அவரைத் தவிர என்பதை மனதிற்குள் கூறிக் கொண்டாள்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, இரு மாதங்கள் கழிந்திருந்த வேளையில், ஒரு நாள் மாலை நேரம் பிள்ளைகள் இருவரும் மாணிக்கத்தின் இல்லத்திற்குள் நுழைந்த நேரம், அவன் யாரோ ஒருவரை அடித்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த கண்ணம்மா, பயந்து நடுங்கி கண்ணாவின் பின்னே ஒளிந்துக் கொண்டாள்.

— தொடரும்