முள்ளில் பூத்த மலரே – 6

வாரயிறுதி நாளை தனது பெற்றோர்களுடன் ஊரில் கழித்து விட்டு, வழமை போல் திங்கட்கிழமை காலை ஆறரை மணியளவில் வீட்டை வந்தடைந்தாள் பொன்மலர்.

மலர் வீட்டின் கதவை தட்டியதும், கதவை வந்து திறந்த ஆயாவிடம், “பிள்ளைங்க எப்படி இருக்காங்க ஆயா? இரண்டு நாளா எதுவும் சேட்டை செய்யலையே?” கேட்டுக் கொண்டே கையிலிருந்த பையை அங்கிருந்த மெத்தை மீது வைத்து விட்டு, படுக்கையறை சென்று பிள்ளைகளைப் பார்த்தவள், கண்ணம்மாவின் காயம் பார்த்து பதறிப் போனாள்.

“ஆயா” எனத் தன்னை மீறி கத்தியவள், பின் அவர்களின் தூக்கம் கலைந்துவிடுமெனத் தனது குரலை தாழ்த்தி, இவளின் சத்தத்தில் அசைந்த கண்ணம்மாவையும் கண்ணாவையும் மெதுவாய் தட்டிக் கொடுத்துக் கொண்டே, “பாப்பாக்கு என்னாச்சு ஆயா? இவ்ளோ பெரிய பேண்ட்டெய்டு போட்டுறுக்காங்க”  கவலையாய் அவளைப் பார்த்துக் கொண்டே கேட்க, நடந்ததைக் கூறினார் ஆயா.

இரண்டு வீடு தள்ளி இருக்கும் ஒரு ஆணை துணைக்கு அழைத்து மருத்துவமனைக்குச் சென்றதாய் தான் ஆயா கூறினார்.

“பாப்பாக்கு ரொம்ப வலிச்சிருக்குமே! என்னைய ரொம்பத் தேடிருப்பாளே! சும்மாவே அம்மா அம்மானு பின்னாடியே சுத்துமே என் செல்லம்” அவளின் வலியை எண்ணி இவள் மனதில் வலி கொண்டு அழுதிருந்தாள்.

யாருக்காகவும் எதற்காகவும் கலங்காத பொன்மலரின் கண்களில் ஒரு துளி நீர் வழிந்தாலும், அது அவளின் பிள்ளைகளுக்காய் மட்டுமாய்த் தான் இருக்கும். இரும்பு மனுஷியையும் உருக்கி கரைக்கும் விந்தை தாய்மைக்கு மட்டுமே உரியது.

இவர்களின் பேச்சுச் சத்தத்தில் விழித்த கண்ணம்மா, மலரை கண்ட  உற்சாகத்தில், “ம்மாஆஆஆ” என அழைத்து எழுந்து அவளின் கழுத்தினைக் கட்டிக் கொண்டாள்.

அவளை அணைத்து முதுகை ஆதூரமாய் மலர் தடவி இருக்க, வெளியிலிருந்து வந்த கண்ணம்மா என்ற அழைப்பில், யாரென்று பார்க்க ஆயா செல்ல, கண்ணம்மாவை தூக்கி கொண்டு சென்றாள் மலர்.

அங்கே மாணிக்கத்தைப் பார்க்கவும், “இந்தப் பஞ்சாயத்துகாரர் இங்க எதுக்கு வந்திருக்காரு?” என மலர் நினைக்க,

“இந்தச் சண்டி ராணி மிஸ் இங்க என்ன பண்றாங்க?” எண்ணிக் கொண்டே மலரையும் கண்ணம்மாவையும் மாறி மாறி மாணிக்கம் பார்த்திருக்க,

மாணிக்கத்தைக் கண்டதும், மலர் கையிலிருந்து இறங்கி, “மாணிக்கம்” என அழைத்துத் துள்ளி ஓடி அவனை நாடி கண்ணம்மா செல்ல, அவளைக் கைகளில் தூக்கியிருந்தான் மாணிக்கம்.

இமை கொட்டாமல் இதனைப் பார்த்து பெரும் அதிர்ச்சிக்குள்ளானவள், “உங்களுக்கு எப்படிப் பாப்பாவை தெரியும்?” என அவள் கேட்க,

அவளது மூளையோ, “ஓ இவர் பேரு மாணிக்கமா?” என அதையும் சேர்த்துக் குறித்துக் கொண்டது.

மாணிக்கம் தான் மருத்துவமனை செல்ல உதவி செய்தது என மலரிடம் கூறிய ஆயா, மாணிக்கத்திடம் மலரை அவர்களின் அம்மா என அறிமுகம் செய்து வைத்தார்.

“என்னது அம்மாவாஆஆஆஆ” வியப்பின் விளிம்பிற்கே சென்றவன்,

“உங்களுக்குக் கல்யாணமாகி குழந்தைங்களே இருக்கா?” ஆச்சரியத்தில் வாய் திறந்தே அவன் கேட்க,

அவனின் கேள்வியில் வாய்க்குள்ளேயே சிரித்தவள், “நான் பெத்து வளர்த்த என் சொந்த பசங்க ரெண்டு பேரும்” என்றாள்.

“தாடைல வலி இருக்கா பாப்பா?” கண்ணம்மாவின் கன்னம் தடவி அவன் கேட்க,

“இல்ல மாணிக்கம்” அவள் கூற,

“பாப்பா என்னது இது? பெரியவங்களைப் பேரு சொல்லி கூப்பிடுறது” அவள் கண்டிக்க,

“அட இருக்கட்டும் மேடம்! ஆயா என்னை அப்படிக் கூப்பிடுறது பார்த்து பிள்ளைகளும் அப்படிக் கூப்பிடுறாங்க” என்று சொன்னவன்,

“என்ன இருந்தாலும் குழந்தைகளைத் தனியா விட்டுட்டு நீங்க பாட்டுக்கு உங்க வேலை தான் முக்கியம்னு ஊருக்குப் போறதெல்லாம் சரி இல்லைங்க” மனதில் பட்டதை மாணிக்கம் கூற,

அவனின் கூற்றில் தீயாய் அவனை அவள் முறைத்திருந்த சமயம், அவளின் பார்வை அவனையும் தாண்டி, மாணிக்கத்தின் பின்னால் வீட்டினுள் நுழைந்தவனிடம் படிந்தது.

அவளின் பார்வை போகும் திசை நோக்கி திரும்பிய மாணிக்கம், வீட்டினுள் நுழைந்தவனையும் மலரையும் மாறி மாறி பார்க்க, “பாப்பாவோட அப்பா” என்றாள்.

உள்நுழைந்த கண்ணம்மாவின் தந்தை ரவியின் முகம் இறுக்கமாய் இருந்தது. 

இவன் யாரு என்பது போல் மாணிக்கத்தை அவன் பார்க்க, ஆயா நடந்ததைக் கூறினார்.

“ஓ தேங்க் யூ சார்” இறுக்கமான முகத்துடனேயே மாணிக்கத்திடம் உரைத்தவன், அங்கு நிற்கவும் பொறுமையற்று, “எனக்கு அவசரமா ஆபிஸ்க்கு கிளம்பனும்” எனக் கூறி மற்றொரு தனிப் படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனின் செயலை விசித்திரமாய்ப் பார்த்த மாணிக்கம், “கண்ணம்மா சாப்பிட்டு சமத்தா ரெஸ்ட் எடுக்கனும்! நான் வரேன்ங்க” என விடைபெற்று சென்று விட்டான்.

அதன் பின் ஒரு மணி நேரத்தில் ரவி கிளம்பி வெளியில் சென்று விட்டான்.

மலர் அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனும் குழந்தைகள் பற்றி ஒரு வார்த்தை நலன் விசாரிக்கவில்லை.  அவர்களிடமும் பேசவில்லை.

தனது வீட்டிற்குச் சென்ற மாணிக்கத்திற்கு ரவியின் மீது கோபம் கோபமாய் வந்தது. நிறையக் குழப்பமாகவும் இருந்தது.

கண்ணம்மாவை கைகளில் தானே வைத்திருந்தான் மாணிக்கம்.  ரவி வந்ததும், கண்ணம்மா மாணிகத்தை இன்னும் நெருங்கி கட்டிக் கொண்டு முதுகில் அவனது சட்டையைக் கொத்தாய் பற்றி இருந்தாள். 

ரவியைப் பார்த்ததும் கண்ணம்மாவின் கண்களில் மிரட்சியைக் கண்டான் மாணிக்கம்.  பயந்து தான் அவள் அவ்வாறு தன்னிடம் ஒட்டிக் கொண்டாள் என நன்றாகவே புரிந்தது மாணிக்கத்திற்கு.

“ஆனா ஏன் பயப்படுறா? அந்தாளும் இந்தப் பொண்ணுக்கு என்னாச்சுனு கூடப் பார்க்கலை! என்ன அப்பன் இவென்லாம்” மனதிற்குள் பல கேள்விகள் எழ, வழமை போல் “நமக்கெதுக்கு மத்தவங்க வீட்டு கதை” என மனதில் எண்ணிக் கொண்டு தனது ஆட்டோ சவாரி வேலையைப் பார்க்க சென்று விட்டான் மாணிக்கம்.

அன்று மலர் விடுமுறை எடுத்துக் கொண்டு கண்ணம்மாவினுடேயே இருந்தாள். கண்ணம்மா கண்ணா இருவரையும் அன்றைக்குப் பள்ளிக்கு அனுப்பவில்லை. 

ஐந்து வயதான கண்ணம்மாவும், எட்டு வயதான கண்ணாவும் அவர்கள் வயதிற்கேற்ற வகுப்பில் பயின்று கொண்டிருந்தனர். ஆனால் தான் வேலை செய்யும் பள்ளியிலேயே அவர்களை அவள் படிக்க வைக்கவில்லை.

காலை தனது இரு சக்கர வாகனத்தில் பிள்ளைகளைப் பள்ளியில் இறக்கி விட்டு, தனது பள்ளிக்கு சென்றிடுவாள் மலர். மாலை வேளையில் ஆயா ஆட்டோவில் சென்று அவர்களை அழைத்து வந்து தேநீரும் திண்பண்டங்களும் செய்து வழங்குவார். அச்சமயம் மலரும் வந்து இவர்களுடன் இணைந்துக் கொள்வாள். பின் இவர்களுக்குப் பள்ளி பாடம் பயில்விப்பதில் அன்றைய நாள் நிறைவு பெறும்.

அந்த நாளிற்குப் பிறகு மாணிக்கம் அந்த வீட்டுக்கு செல்லவில்லை. என்ன தான் கண்ணம்மாவை பார்க்க வேண்டுமென அவன் மனம் துடித்தாலும், ரவியையும் மலரையும் பார்த்த பிறகு அவ்வீட்டிற்குச் செல்ல அவன் மனம் ஒப்பவில்லை.

மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில், இடையில் ஒரு நாள் மருத்துவரை பார்த்து வந்த பிறகு, அவளின் காயம் வெகுவாய் ஆறியிருந்தது. ஆயினும் தினமும் மாணிக்கத்தைப் பார்க்க வேண்டுமென்ற கண்ணம்மாவின் அழுகையும் பிடிவாதமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

நான்காம் நாள் மாலை வேளையில் சமையலறையில் ஆயாவின் உதவியுடன் சமையல் செய்திருந்த மலரின் புடவையைப் பிடித்து இழுத்திருந்தாள் கண்ணம்மா.

“என்னடா பாப்பா? சாப்பிட ஏதாவது வேணுமா?” இடுப்பில் அவளைத் தூக்கி வைத்துக் கொண்டு, கடாயில் கிண்டிக் கொண்டே மலர் கேட்க,

“மாணிக்கம் வேணும். அவர்கிட்ட கூட்டிட்டு போம்மா” கண்ணம்மா அழ தொடங்க,

மலருக்கு வந்த கோபத்தில், இடையிலிருந்து அவளைக் கீழறக்கியவள் கோபமாய், “அந்தாளை எதுக்கு நீ பார்க்கனும்? ஒழுங்கா போய்ப் படி போ” முதுகில் லேசாய் அடி வைக்க,

ஆவென அலறி அழவாரம்பித்தாள் கண்ணம்மா.

“அய்யே இதுக்கு எதுக்குப் பாப்பாவை அடிக்கிற நீ! வர வர உனக்கு ரொம்பக் கோபம் வருது” மலரிடம் கடிந்து கொண்ட ஆயா, கண்ணம்மாவை தூக்கி கொண்டு படுக்கையறை வந்தமர, “பாப்பா ஏன் அழுகுறா?” வீட்டுப் பாடத்தை எழுதி கொண்டிருந்த கண்ணா கேட்டுக் கொண்டே தங்கையிடம் ஓடி வந்தான்.

அவளின் கண்களைத் துடைத்து, “அழ கூடாது.. அழ கூடாது! என் செல்லம்ல”  எனக் கண்ணம்மாவின் அழுகையைத் தேற்றும் கண்ணனை ரசனையாய் ஆயா பார்த்திருக்க, இவர்களறியாமல் மறைந்திருந்து இவனின் செயலை பார்த்த மலருக்கோ கண்ணீர் தளும்ப, கட்டுப்படுத்த முடியாமல் சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

கண்ணாவின் செயலில் கண்ணம்மாவின் அழுகை குறைந்திருந்தாலும், மாணிக்கத்தைப் பார்க்க வேண்டுமென்ற பிடிவாதம் குறையவில்லை.

மறுநாள் தான் கண்டிப்பாய் மாணிக்கத்திடம் அழைத்துச் செல்வதாய்க் கூறி அவளைச் சமாதானம் செய்தார் ஆயா.

அதன் பின் சமையலறை சென்றவரின் கண்கள் மலரை ஆதூரமாய் நோக்கியது. “எனக்குத் தெரியும். பிள்ளையை அடிச்சிட்டு இப்படித் தான் நீ அழுதுட்டு இருப்பனு தெரியும்” என்றவர்,

“எதுக்கு அடிக்கனும்? எதுக்கு இப்படி அழனும்” எனக் கேட்க,

“யாரோ ஒருத்தரை பார்க்கனும்னு இவ அடம் பிடிக்கிறது மட்டும் சரியா ஆயா?? அவர் யாரு என்னனு தெரியாம பிள்ளைங்களை எப்படிப் பழக விடுறது? என் பிள்ளைங்க யாருமில்லாமலேயே வளரட்டும்! அவங்களுக்கு நான் போதும்! வேற யாரும் வேண்டாம்” விரக்தியாய் அவள் கூற,

“மாணிக்கம் ரொம்ப நல்லவன்ம்மா உன்னை மாதிரியே” என்ற ஆயா அவனின் வாழ்க்கை கதையைக் கூற,

“இந்த முரட்டு ஆளுக்கு இவ்ளோ மென்மையான இதயமா” என்று தான் மலருக்கு தோன்றியது. அவன் மீது பரிதாபம் ஏற்பட்டது.

“ஏன் நல்லவங்களை ஆண்டவன் ரொம்பச் சோதிக்கிறான்” சுயபட்சாதாபமும் எழுந்தது அவளுக்கு.

காரணமான மாயம்! காரணமின்றி எதையும் நிகழ்த்த மாட்டான். காரணம் புரியும் போது நிகழ்வின் செயல் யாவும் விளங்கும். இக்காரணத்தின் செயலை எப்பொழுதோ தொடங்கியிருந்தான் ஆண்டவன்.

அந்த வாரயிறுதி நாளில் மாணிக்கத்தின் வீட்டிற்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டுமென மனதினுள் எண்ணிக் கொண்டாள் மலர்.

அவர்கள் பயிலும் பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவியருக்குப் பெற்றோர்கள் வந்திருந்து உணவு பரிமாறி உண்ண வைத்துப் போகலாம்.

அவ்வாறாய் பலருக்கு அவர்களின் அம்மாவும் சிலருக்கு அப்பாவும் தவறாமல் மதிய வேளையில் வரும் போது, கண்ணம்மா, கண்ணாவிற்கு எவரும் வர  மாட்டார்கள்.

அந்தப் பள்ளியில் உணவு உண்ணும் இடம்  விஸ்தாரமாய் மரம் செடிகளுக்கிடையே இயற்கையோட இயைந்த பூங்காவை போன்று இருக்கும். அதனருகே இருக்கும் இரும்பு கதவருகே வந்தால் உணவுண்ணும்  குழந்தைகளை வெளியிருந்துமே காணலாம். அங்கு எப்பொழுதும் உணவுண்ணும் வேளையில் முதன்மை காவலாளி இருப்பார். பெற்றோர்களே ஆயினும் அவர் அனுமதி இல்லாமல் எவரும் உள் நுழைய முடியாது. ஆக அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களையும், சில வீடுகளில் இப்பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ள வைத்திருக்கும் வேலையாளையும் இக்காவலாளி அறிவார்.

அன்றைய மதிய வேளையில் வழமை போல் தனது தங்கை வகுப்பறை நோக்கி சென்று அவளை உணவு உண்ண அழைத்து வந்தான் கண்ணா.

கண்ணம்மாவின் மடியில் துண்டு விரித்து விட்டு, அவளின் டிப்பன் ஃபாக்ஸை திறந்து ஸ்பூன் வைத்து அவளிடம் கொடுத்தான் கண்ணா. தனக்குமாய் எடுத்து உண்ண ஆரம்பித்தான்.

தூரமாய் யாரோ ஒருவரின் தந்தை தனது குழந்தைக்கு உணவு ஊட்டுவதை ஏக்கமாய்ப் பார்த்த கண்ணம்மா, மீதமிருந்த உணவை சாப்பிட அடம் பிடிக்க, அவளைக் கெஞ்சி கொஞ்சி ஊட்டி உண்ண வைத்திருந்தான் கண்ணா.

அப்பொழுது அங்கு வந்து நின்றான் மாணிக்கம். 

மாணிக்கத்தைக் கண்டதும், மடியிலிருந்த துணியையும் மறந்து விடுக்கென எழுந்து அவனிடம் ஓடிச் சென்றாள் கண்ணம்மா.

“குட்டிம்மா” எனக் கூறி அவளைக் கைகளில் தூக்கி இருந்தான் மாணிக்கம்.

“மாணிக்கம்” எனக் கூறி கண்ணாவும் மாணிக்கத்திடம் செல்ல,  அவனையும் கைகளில் தூக்கியவன், இருவரின் கன்னங்களிலும் முத்தம் பதித்திருந்தான்.

பின்பு அவர்களைத் தனது இரு பக்கமும் மடியினில் அமர வைத்து கொஞ்சி கொண்டும் பேசி கொண்டும் இருந்தவன், பின்பு அவர்களுக்கு உணவை ஊட்டி விட்டான்.

இதனை நிறைந்த மனதுடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆயா.

அன்றைய நாள் காலை மாணிக்கத்திடம் கண்ணம்மா அவனைக் கேட்டு அழுததைக் கூறியிருந்தார் அந்த ஆயா. ஆக ஆயாவையும் அழைந்து வந்து காவலாளியிடம் உத்தரவு பெற்றே உள்ளே வந்தான் மாணிக்கம்.

“பேசாம நீ இந்தப் பிள்ளைகளைத் தத்து எடுத்துக்கோயேன்! பிள்ளைகளோட அருமை தெரியாதவருக்குலாம் எதுக்கு ஆண்டவன் பிள்ளை வரம் கொடுக்குறாரோ?” ஆற்றாமையில் ஆயா வாய்க்கு வந்ததைக் கூற, 

“ம்ப்ச் ஆயா பசங்க முன்னாடி என்ன பேச்சு இது” அவரைக் கண்டித்தவன்,

“ஆண்டவன் இந்தப் பொக்கிஷங்களை அவருக்காகக் கொடுக்கலை ஆயா.  மேடமுக்காகக் கொடுத்திருக்கான்.  அன்னிக்கு காலையிலே அவங்க கையில கண்ணம்மாவை பார்த்ததுமே, “என் கண்ணம்மா ரொம்ப அன்பான பண்பான பாதுக்காப்பான ஒருத்தங்க கிட்ட தான் இருக்கான்ற நிம்மதி தான் வந்துச்சு” இவளை என் அம்மாவா தான் பார்க்கிறேன் ஆயா” என்றவன்,

“கண்ணா, பாப்பாவை இப்படிலாம் பார்த்துக்கனும்னு உனக்கு யாருடா சொல்லிக் கொடுத்தது” ஆர்வமாய் அவனை மாணிக்கம் கேட்க,

“பாப்பா பிறந்ததும் செம்ம சாஃப்ட்டா குட்டியா அழகா இருந்துச்சு. எனக்குத் தூக்கி வச்சிக்கனும்னு ஆசையா இருக்கும். அப்ப என் கையில பாப்பாவை கொடுத்துட்டு அம்மா சொல்லும், எப்பவுமே நான் பாப்பாவை அன்பா பார்த்துக்கனும்னு. அப்புறம் ஸ்கூல் சேர்க்கும் போது, பாப்பா என் பொறுப்புனு அம்மா சொன்னிச்சு! நான் பாப்பா கை பிடிச்சி கூட்டி போகனும், சாப்பிடும் போது பாப்பா அடம் பிடிச்சா ஊட்டி விடனும்… அம்மா இப்படி நிறையச் சொல்லும். எனக்குப் பாப்பாவை ரொம்பப் பிடிக்குமே”  ஆசை ஆசையாய் கண்ணா கூற,

அவனை இழுத்தணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டிருந்தான்.  மேடமோட வளர்ப்புக்கு இது ஒன்னு போதும் சாட்சி ஆயா.  நல்ல பிள்ளைங்களை நல்லவங்களுக்குக் கொடுத்திருக்கான் ஆண்டவன்.

அத்துடன் அப்பிள்ளைகளிடம் விடை பெற்று கிளம்பி விட்டான் மாணிக்கம்.

அன்று மாலையே பிள்ளைகள் வீட்டிற்கு வந்ததும் மதியம் மாணிக்கத்தைப் பார்த்ததை உரைத்து விட்டனர்.  அதைக் கேட்டுக் கொண்டே ஆயாவை முறைத்த மலர், மாணிக்கத்திடம் சில விஷயங்கள் பேச வேண்டுமென மனதிற்குள் குறித்துக் கொண்டாள்.

அந்த வாரயிறுதியில் பிள்ளைகளுடன் மாணிக்கத்தின் வீட்டிற்குச் சென்று அவனிடம் நன்றி உரைத்தாள் மலர்.

மாணிக்கத்தைக் கண்டதும் பிள்ளைகள் இருவரின் உற்சாகமும் சந்தோஷமும், அவர்கள் முகத்திலிருக்கும் பூரிப்பும் என அனைத்தையும் பார்த்திருந்தாள் மலர்.

“இந்தத் தேங்க்ஸ் சொல்லவா இவ்ளோ தூரம் மூனு வீடு தள்ளி நடந்து வந்தீங்க” மலரை அவன் கிண்டல் செய்ய,

“இத்தனை நாளா வராம இருந்தேனேனு கிண்டல் பண்றீங்களா?” அவனை முறைத்த மலர்,

“உதவி செஞ்சவங்க வீட்டுக்கு போய் நன்றி சொல்றது தான்ங்க மரபு” கூறிய மலர்,

“ஒரு விஷயம் உங்களுக்கு விளக்கிட்டு போகலாம்னும் வந்தேன்” என்றாள்.

— தொடரும்