முள்ளில் பூத்த மலரே – 5

ஆதினியின் தந்தையிடம்  பேச அகிலன் முடிவு செய்த பிறகு, எவ்வாறு அவரிடம் பேசுவது என யோசிக்கும் போது தான், அவரிடம் பேசும் முன் பல விஷயங்கள் அவர்களை பற்றி தான் தெரிந்துக் கொள்ள வேண்டுமென உணர்ந்தான் அகிலன்.

ஆதினியின் குடும்பம் தற்போது இருப்பது சொந்த வீடு, இன்னொரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்களென கேள்விபட்டிருந்தான். மதுரனும் ஆதினியும் நன்றாகவே சம்பாதிக்கின்றனர். ஆதினியின் தந்தையும் மகிழுந்து வாங்கி விற்கும் தொழிலை செய்வதாய் அறிந்திருந்தான். ஆக எவ்வகையில் பார்த்தாலும் அவர்கள் உயர் நடுத்தர வர்க்கத்தினர் என்று நன்றாய் புரிந்தது அகிலனுக்கு.

அகிலனின் குடும்பத்தில் அவன் ஒருவனே சம்பாதித்து கொண்டிருக்கிறான். சிறு தொழில் செய்து கொண்டிருந்த அவனின் தந்தை உடல்நிலை காரணமாய் வேலையை விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. அவனின் தங்கை மீனாள் ஆடை வடிவமைப்பாளர் படிப்பு படித்து விட்டு ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீனாளும் அகிலனும் இணைந்து அவர்களின் கனவான சொந்த இல்லத்தை வடிவமைத்து கட்டிக் கொண்டிருந்தனர்.

அதற்குள் மீனாளின் திருமணமும் நிச்சயிக்கபட, அந்த வேலை அப்படியே நின்று விட்டது. மீனாளின் திருமண கடன்களை அடைத்து, தற்பொழுது தான் சிறுக சிறுக சேர்த்து அவ்வீட்டு வேலையை மீண்டுமாய் தொடங்கி இருக்கிறான் அகிலன்.

ஆக எவ்வகையில் பார்த்தாலும் அகிலனின் குடும்பம் ஆதினியின் குடும்பத்தை விட பொருளாதாரத்தில் குறைந்த குடும்பம்.

இதுவே பெரும் பயத்தை உருவாக்கியது அகிலனுக்கு. ‘என் பொண்ணை திருமணம் செய்ய உனக்கு என்ன தகுதி இருக்கு’ என்று  அவர் கேட்டு விட்டால் என்ன செய்வதென்ற பயம் வந்தது அவனுக்கு.

வீட்டு வேலையேனும் சற்று முடித்துவிட்டு இதை பற்றி ஆதினியின் தந்தையிடம் பேசலாமென எண்ணினான்.

இவ்வாறாய் இரு வாரங்கள் கடந்திருந்த நிலையில் ஒரு மாலை பொழுதில் வீட்டின் வரவேற்பறையில் மத்தியமாய் ஆதினியின் அன்னை, தந்தை மற்றும் மதுரன் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“ஆதுமா எவ்வளவு நேரமா டீ போடுவ?” வரவேற்பறையிலிருந்து குரல் கொடுத்தான் மதுரன்.

“இதோ வந்துட்டேண்ணா” என்றவள் கையில் ஒரு பெரிய தட்டுடன் வந்து நின்றாள்.  நால்வருக்குமாய் இஞ்சி டீயும் பக்கோடாவும் தயார் செய்திருந்தவள், அவர்களுக்கு பரிமாறிவிட்டு அவளும் உடன் அமர்ந்தாள்.

“சூப்பர்ரா இருக்குமா டீயும் பக்கோடாவும்” ருசித்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஆதினியின் தந்தை.

“ஆது, மேரேஜ்க்கு உனக்கு எந்த மாதிரி பையன் பார்க்கனும்? உனக்கு மனசுல எதுவும் ஆசை கனவு இருக்கா?” மதுரன் கேட்டதும், திருதிருவென விழித்தாள் ஆதினி.

இருபத்தைந்து வயதான போதிலும் இவளுக்கென்று தனிப்பட்ட ஆசைகளென இதுவரை இருந்ததில்லை. அவளின் ஆசைகள் கனவுகள் அனைத்தும் அந்த குடும்பத்திலுள்ள நால்வரை சுற்றி மட்டுமே சுழலும்.

இதை மற்றைய மூவரும் அறிந்திருந்த போதும், ஏன் அண்ணா இவ்வாறு கேட்கிறானென எண்ணியே அவ்வாறு விழித்தாள் ஆதினி.

“ஏன்ணா திடீர்னு இப்படி ஒரு கேள்வி? நான் ஏற்கனவே சொன்னது தான்!  உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா அது போதும் எனக்கு” என்றவள்,

“ஆனா ஒரு ஆசை இருக்கு! எந்த மாதிரி வாழ்க்கை வாழனும்னு ஒரு ஆசை இருக்குண்ணா”

“நம்ம அப்பா அம்மா போல ஆதர்ச தம்பதிகளாய் வாழனும்! அப்பா அம்மாவை அன்பா பாசமா காதலா பார்த்துக்கிறது மாதிரி என்னையும் அன்பா காதலா பாதுக்காப்பாய் பார்த்துக்கனும்! அப்பா அம்மாவோட காதலான வாழ்வு போல நம்மளோட வாழ்வும் அமையனும். நீ உன் பொண்டாட்டி, நான் என் புருஷன்…  அப்படியே நம்ம குழந்தைகள், அவங்களுக்குள்ள வர்ற பாசம்னு காலங்காலமா தொன்று தொட்டு தொடர்ந்து வரனும்” கண்களில் கனவுகள் மின்ன ஆசை ஆசையாய் ஆதினி கூறிக் கொண்டிருக்க, அவளின் தலையை ஆதூரமாய் வருடினான் மதுரன்.

அவளின் பேச்சை கேட்டு அவளின் தாய் மென்மையாய் சிரித்திருக்க, வாய்விட்டு சிரித்த அவளின் தந்தை, “என் செல்லம் இவ்ளோ பேசுற அளவுக்கு வளர்ந்துட்டாளானு தோணுது” அவள் கன்னத்தை கிள்ளி செல்லம் கொஞ்சினார் அவர்.

அச்சமயம் அவ்வீட்டின் அழைப்பொலியின் ஓசை கேட்க, மதுரன் சென்று கதவை திறந்தான்.

“வாங்க அகிலன்” மதுரன் அவனை உள் அழைக்க, அனைவருக்கும் வணக்கம் கூறி வந்தமர்ந்தான் அகிலன்.

“நீங்க என்னைய தேடி வீட்டிக்கு வந்ததா அப்பா சொன்னாங்க!” மதுரனிடம் அகிலன் கூற,

“ஆமா அகிலன்! ஒரு விஷயம் பேச வந்தேன்” என்ற மதுரன், “ஆதுமா அகிலனுக்கு டீ போட்டு எடுத்துட்டு வா” எனக் கூறி அவளை அனுப்பி விட்டு, அகிலனிடம் பக்கோடாவை கொடுத்து, “ஆது செஞ்ச பக்கோடா! நல்லா இருக்கும். சாப்பிட்டு பாருங்க” எனக் கொடுத்தான்.

ஆதினி கைப்பக்குவம் அறிந்துக் கொள்ளவே ஆசையாய் எடுத்து உண்டவன், ‘வாவ் செம்ம டேஸ்ட்டா தான் சமைக்கிறா! ஹப்பாடா தப்பிச்சோம்! சாப்பாட்டுக்கு பிரச்சனை இருக்காது’ மனதிற்குள்ளாக எண்ணிக் கொண்டு சிரித்திருக்க,

அகிலன் என்றழைத்த மதுரன், “நம்ம அப்பார்ட்மெண்ட்ல நாளைக்கு ஒரு இன்ட்ரொடக்ஷன் பங்ஷன் வைக்கலாம்னு ப்ளான். எல்லா வீட்டுக்காரங்க கிட்டயும் நாளைக்கு பங்ஷன்ல கலந்துக்க சொல்லி இன்வைட் செஞ்சாச்சு. நம்ம இரண்டு பேரும் தான் ஹோஸ்ட் பண்றோம் ஓகேவா” என மதுரன் கேட்க,

“ஓ சூப்பர் செஞ்சிடலாம்” ஆர்வமாய் பதிலுரைத்தான் அகிலன்.

ஆதினி டீ கோப்பையினை அகிலனிடம் கொடுக்க, பெண் பார்க்கும் நேரம் அவள் தன் கையில் தரும் டீ கோப்பையாய் அவனின் மனம் பாவிக்க, ரசித்து ருசித்து டீ குடித்துக் கொண்டிருந்தான் அகிலன்.

அகிலனின் முக பாவனையில் கண்டு கொண்ட மதுரன், “அகிலன், நம்ம ஆதினிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டோம்! உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பையன் யாராவது இருந்தா சொல்லுங்களேன்” வேண்டுமென்றே கேட்க,

மதுரனின் இவ்வார்த்தையில், அருந்திய டீ புரைக்கேற இருமிக் கொண்டிருந்தான் அகிலன்.

‘அய்யய்யோ நம்ம வீடு கட்டுறதுக்குள்ளே இந்த பொண்ணுக்கு கல்யாணமே செஞ்சி வச்சிடுவாங்க போலயே’ அகிலனின் மைண்ட் வாய்ஸ் கதறிக் கொண்டிருக்க,

“என்ன அகிலன் ஒன்னும் சொல்ல மாட்டேங்கிறீங்க?” மீண்டுமாய் அவனை மதுரன் வம்பிழுக்க,

“அப்பா அவசரமா வர சொன்னாங்க! நான் அப்புறமா வந்து பேசுறேன்” எனக் கூறி அனைவரிடமும் விடைப்பெற்று சென்று விட்டான் அகிலன்.

இவர்கள் இருவரின் பேச்சிலும் பார்வையிலும் பாவனையிலும் ஆதினியின் தாய்க்கு அகிலனின் மனம் நன்றாய் புரிந்து போனது. 

ஆதினிக்கு ஐம்பது சதவீதம் இப்படி இருக்குமோவென்ற சந்தேகம் வந்திருந்தது. ஆயினும் வீட்டினர் யாரிடமும் அதை பற்றி அவள் கேட்கவில்லை. அதை பெரிதாய் அவள் கண்டுக் கொள்ளவுமில்லை. ஆனால் மறுநாள் அவளுக்கு அதை நூறு சதவீதம் உண்மையென ஊர்ஜிதம் செய்தான் அகிலன்.

அன்றைய இரவு அகிலனுக்கு மனதின் குழப்பத்தினால் உறங்கா இரவானது.

படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவன், ‘ஆதினிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களே! அவளை வேறொருத்தர் பொண்டாட்டியா பார்க்க முடியுமா என்னால’ நினைக்கும் போதே நெஞ்சு பாரமானது போல் உணர்ந்தவன், சட்டென எழுந்து அமர்ந்து விட்டான்.

“ம்ப்ச், இருப்பத்தேழு வயசுக்கு மேல இந்த காதல் வரலைனு யாரு அழுதா..  இப்ப இது ஒன் சைட் லவ் ஆச்சுனா லவ் ஃபெய்லியர்னால எப்படியும் ஒன் இயர்க்கு மேரேஜ் பத்தியே மனசு யோசிக்காதே! இவளை மறந்துட்டு வாழ முடியும் தான்! ஆனா அதுக்கு நாள் ஆகுமே! மனசு வலிச்சு பைத்தியமா கொஞ்ச நாள் சுத்த வைக்குமே! இதெல்லாம் தாண்டி வரனுமே” மனம் வலிக்க வலிக்க தான் இத்தனையும் யோசித்துக் கொண்டிருந்தான்.

என்ன தான் நாம் ஆசைப்பட்டாலும், ஆசைப்பட்டது கிடைக்காமல் போகும் பட்சத்தில் தனது வாழ்வின் நிலை என்னவாகுமென்ற வருங்காலத்திற்கான சிந்தனையும் திட்டமிடலும் தான், வாழ்வில் எத்தகைய தோல்வியை சந்தித்த பின்னும், பெரும் ஏமாற்றத்தை சந்தித்த பின்னும், வாழ்வில் தொடர்ந்து பயணிக்க பேருதவியாய் இருக்கும்.

“ஏன் அகிலா நெகடிவ்வாவே யோசிக்கிற”  அவனின் மூளை இடித்துரைக்க,

“ஆமா ஏன் முயற்சியே செய்யாம நெகடிவ்வா யோசிச்சிட்டு இருக்கோம்! கொஞ்சம் ப்ரிபேர் பண்ணிட்டு போய் அவங்க அப்பாகிட்ட முதல்ல பேசுவோம். என்ன தான் நடக்குதுனு பார்த்துடலாம்” மனதிற்குள் எண்ணிக் கொண்டு தன்னை தானே தேற்றி கொண்டான்.

மறுநாள் பரபரப்பாய் விடிந்தது அந்த காலை. அக்குடியிருப்பு வளாகத்தில் விழா ஏற்பாடு செய்திருந்தமையால், அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர் தன்னார்வ இளயோர்கள்.

விழாவின் நிகழ்ச்சி தொகுப்பினை மதுரனே வைத்திருந்தான். யார் யார் என்ன செய்ய பேகிறார்கள் என அவனே அறிந்து வைத்திருந்தான். அகிலனும் மதுரனும் எவ்வாறு இந்நிகழ்வினை சலிப்பில்லாமல் கொண்டு செல்வது என திட்டமிட்டு ஒத்திகை பார்த்திருந்தனர்.

வளாகத்தினுள்ளே இருந்த பூங்காவில் சிறிதாய் மேடை அமைத்து நாற்காலிகள், ஒலி ஒளி அமைத்து என மாலை வேளையில் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருந்தினர்.

நிகழ்ச்சி துவங்கிய பிறகு அவ்வளாகத்தினுள் தங்கியிருந்த குடியிருப்போர் அனைவரும் ஒவ்வொருவராய் நிகழ்ச்சி திடலுக்கு வர ஆரம்பித்தனர்.

வான் நீல வண்ண காக்ரா சோலி ஆடையில் தேவதையாய் வந்தாள் ஆதினி. அவளை கண்ட நொடி கண்ணிமைக்காது அவளையே கண்டிருந்தான் அகிலன்.  அவனின் நிலை அறியாது, நேராய் அவனிடமே வந்த ஆதினி, “அகிலன், அண்ணா எங்க?” எனக் கேட்க,

திக்பிரம்மையிலிருந்து விடுபட்டவன் போல் தலையை உலுக்கியவன், “அந்த ரூம்குள்ள சவுண்ட் அட்ஜெஸ்மெண்ட் பண்ணிட்டு இருக்காங்க” என்றான்.

மியூசிக் ப்ளேயர் செட்டை குனிந்து நோண்டி கொண்டிருந்த மதுரன் அருகே சென்றவள், “அண்ணா இங்க பாரு” என அவனின் முதுகில் தட்டினாள்.

“இரு ஆதுமா! வரேன்” அவனின் முழு கவனமும் அந்த ப்ளேயர் செட்டிலேயே இருக்க, “டேய் அண்ணா! இப்ப திரும்புறியா இல்லையா” அவனின் சட்டையை பிடித்து இழுக்க ஆரம்பித்தாள்.

“முடியாது போடி!” அவளுக்கு டி போடுவது பிடிக்காது எனத் தெரிந்துக் கொண்டே அவன் வேண்டுமென்றே அவளை வம்பிழுக்க,

“என்னது டியாஆஆஆ” உக்கிரமானவள், அவன் முகமருகில் சென்று கன்னத்தை கடித்து வைக்க, ஆஆஆ வென அலறினான் மதுரன்.

இவளின் செயலை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்த அகிலன், அவள் கடித்ததும் வாய் விட்டு சிரிக்க,  அகிலனின் சிரிப்பு சத்ததில் சுற்றி பார்த்தவள், “அய்யோ யாருமில்லைனு நினைச்சில இவன் கிட்ட விளையாண்டுகிட்டு இருந்தேன்” என அகிலனை பார்த்து அசடு வழிந்தாள்.

மதுரன் அகிலனை பார்த்து சிரித்துவிட்டு, “எதுக்கு ராட்சசி கூப்பிட்ட”  ஆதுவின் கன்னத்தை கிள்ளி அவன் கேட்க,

“போ சொல்ல மாட்டேன்” என முகத்தை திருப்பி கொள்ள, 

“ஹே ஆதுமா! நைஸ் டிரஸ்டா… இதுல ரொம்ப அழகா இருக்க நீ! இதை காமிக்க தானே கூப்பிட்ட”  அவளின்  உடையை மேலும் கீழுமாய் பார்த்து மதுரன் கேட்க,

பளீரென முகத்தில் புன்னகையை சிந்தியவள், “ஆமாண்ணா! நல்லாயிருக்காண்ணா” தனது பாவாடையை இரு பக்கமுமாய் பிடித்து இப்படி அப்படி என ஆட்டி அவள் கேட்க,

“ரொம்ப அழகா இருக்குடா! என் குட்டி பாப்பாவுக்கு எந்த டிரஸ் போட்டாலும் அழகா தான் இருக்கும்!” அவளின் கன்னம் தடவி கொஞ்சியவன், “போ போய் உட்கார்! நாங்க ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ண போறோம்” என அவளை அனுப்பி வைத்தான்.

“தங்கச்சி மேல ரொம்ப பாசமோ?” அகிலன் மதுரன் அருகே வந்து கேட்க,

ஹா ஹா ஹா என வாய்விட்டு சிரித்த மதுரன், “எந்த அண்ணனுக்கு தான் தங்கச்சி மேல பாசம் இருக்காது! எனக்கு இவ கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்! சின்ன வயசுலேயே இவ என் பொறுப்பு, நான் தான் இவளை பாதுக்காப்பா பாத்துக்கனும்னு சொன்னதால,  ஸ்கூல்க்கு கை பிடிச்சி கூட்டிட்டு போன நாளுலருந்து என் கண்ணுக்குள்ளயே வச்சிருக்கேன்” அவன் உணர்வாய் கூற,

“எனக்கு என் தங்கச்சி ஞாபகம் வருது மது! அவ எனக்கு ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட் மாதிரி.  எல்லாமே அவகிட்ட தான் ஷேர் செஞ்சிப்பேன். அவ மேரேஜ் ஆகி போகும் போது தான் உண்மையான பிரிவின் வலியை அனுபவிச்சேன்” அகிலன் தன் தங்கையின் நினைவில் பாசமாய் பேச,

“தங்கையோட கல்யாணத்துல அவளோட பிரிவை எண்ணி அழாத அண்ணன்கள் ரொம்பவே கம்மி அகி” சிரித்துக் கொண்டே உரைத்தவன், “சரி வாங்க அகி, நம்ம வேலையை ஆரம்பிப்போம்” அவர்களின் தொகுப்பாளர் பணியை தொடர்ந்தனர்.

கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பிக்கப்பட்ட அந்நிகழ்வில், சிறுவர்கள் கூடி சில பாட்டுகளுக்கு ஆடவாரம்பித்தனர். சிறுவ சிறுமியர்கள் பாடினர்.  பெரியோர்களும் தங்களிடமிருந்த திறமைகளை ஆடலும் பாடலுமாய் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.  இடை இடையே ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வந்து தங்களது குடும்பத்தினை அறிமுகம் செய்துக் கொண்டனர். இவ்வாறாய் சென்று கொண்டிருந்த நிகழ்ச்சியில்,

அடுத்ததாய் பாட வருபவர் ஆதினி என மதுரன் அறிவித்ததும், “ஹை ஆதினி பாட போறாளா” ஆச்சரியமும் ஆர்வமும் ஒரு சேர போட்டி போட ஆவலாய் ஆதினியை பார்த்திருந்தான் அகிலன்.

மேடை ஏறி கையில் மைக்கை வாங்கிய ஆதினி தனது தந்தையையும் அண்ணனையுமே தான் பார்த்தாள், இருவரும் கை உயர்த்தி வாழ்த்து தெரிவிக்க பாட ஆரம்பித்தாள்.

உன்ன விட…. இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை  ஒன்னும் இல்லை

உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை

இனிமையாய் அவளின் குரல் காற்றில் கலந்து அகிலனின் செவியை தீண்டியிருக்க,  சுற்றத்தினர் அனைவரும் மங்கலாய் அவனது கண்ணிலிருந்து மறைந்து, அவளும் அவனும் மட்டுமே அங்கே இருப்பதாய் தோன்ற அவளை மட்டுமே பார்த்திருந்தான் அகிலன்.

உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

இந்த வரியை அவள் பாடி முடித்த நொடி,

நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய

அகிலன் அவனையும் மீறி மைக்கில் இவ்வரிகளை பாடியிருந்தான்.

அகிலனின் குரலில் அனைவரும் அவனை திரும்பி பார்க்க,  இவள் அவனை பார்த்து மென்மையாய் சிரித்து, 

காத்தா அலைஞ்சாலும்
கடலாக நீ இருந்தாலும்

எனப் பாடி, அடுத்த வரியை பாடும் படி கண்ணசைத்தாள்.

ஆகாசமா ஆன போதிலும்
என்ன உரு எடுத்த போதிலும்
சேர்ந்தே தான் பொறக்கணும்
இருக்கணும் கலக்கணும்

அவன் பாடி முடிக்க,

அடுத்த வரியை தன்னுடன் இணைந்து பாடுமாறு ஆதினி கை அசைக்க,

இருவருமாய் சேர்ந்து,

உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது
ஒன்னும் இல்லை  ஒன்னும் இல்லை
உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிகிட
யாருமில்லை யாருமில்லை

என்னை விட … அவள் பாட,
உன்னை விட … அவன் முடித்திருந்தான்.

அனைவரின் கை தட்டும் ஒலியில் குடியிருப்பே அதிர்ந்தது.

“என்னடா நடக்குது இங்க? சோலோ சாங்க பாடிட்டு இருந்தவளை டூயட் சாங்கா மாத்தி பாட வச்சிருக்கீங்க” என அகிலனை பார்த்து மதுரன் முறைத்து கொண்டிருக்க,

“அய்யய்யோ எப்படி மதுவை சமாளிக்கிறது” அகிலனின் மனதில் கிலி உண்டானது.

ஆதினியின் தாயாருக்கு இந்நிகழ்வில் பெருங் கோபம் வந்தது.  அவ்விடத்தை விட்டு அகன்று செல்ல,  அவரின் பின்னேயே அவளின் தந்தையும் சென்றார்.

அகிலன் தன்னை விரும்புவது ஆதினிக்கு சந்தேகத்திற்கு இடமின்றி நூறு சதவீதம் நிரூபனமானது. ஆனால் தாயின் கோபத்தை போக்குவது தான் தற்போது முக்கியமென எண்ணியவள், என்ன சொல்லி சமாளிப்பதென அறியாது குழம்பிக் கொண்டே அவளின் தாய் தந்தையர் பின்னேயே வீட்டை நோக்கி சென்றார்.

இது ஏதும் அறியாது மதுரன் அகிலனுடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தான்.

— தொடரும்.