முள்ளில் பூத்த மலரே – 4

அந்த வாரயிறுதி நாளில் குடியிருப்பு வளாகத்தினுள்ளே அமைந்திருந்த பூங்காவில் சிறுவர்களும் சிறுமியர்களும் அவர்களின் பெற்றோர்களுமாய்க் குடியிருப்பின் குடிமக்கள் பலர் உலாவி கொண்டிருந்தனர்.

சிறுவர் சிறுமியர் அங்குமிங்குமாய் ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்க, இளம் வயதினர் கூடை பந்து, இறகு பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அச்சமயம் காலார நடப்பதற்காக அங்கு வந்த அகிலன், அலைப்பேசியில் தனது நண்பனுடன் பேசிக் கொண்டே நடந்திட்டிருக்க, அச்சமயம் அங்கு வந்த ஆதினி அங்கிருந்த ஊஞ்சலை நோக்கி சென்றாள்.

இவனின் பார்வையும் அவள் பின்னேயே சென்றது.  அவள் ஊஞ்சலில் அமர்ந்து வெகு மகிழ்வாய் ரசிப்பாய் ஆடி  குதூகலித்திருக்க,  அகிலனின் கண்கள் அவனையும் மீறி அவளை மட்டுமே பார்த்திருந்தது.

அந்நேரம் அவனருகே வந்தான் அவன்.

“கேன் வீ ப்ளே ஷட்டுல்?” எனக் கேட்டான் அவன்.

சட்டென காதருகே கேட்ட இச்சத்தத்தில் தனது கவனத்தை இவன் பக்கமாய் திருப்பிய அகிலன், “ஓ ஷ்யர்” எனக் கூறி விளையாட ஆரம்பித்தான்.

இறகு பந்தை மட்டையால் தட்டியவன், “என் பேரு மதுரன்! இந்த அப்பார்ட்மெண்ட் வந்து ஒரு மாசம் ஆகுது.  உங்க பேரு என்ன?” பேசிக் கொண்டே விளையாட்டை ஆரம்பித்தான்.

அகிலன் தனது விபரங்களைக் கூறிக் கொண்டே விளையாடினாலும், அவனின் பார்வை அவ்வப்போது ஆதினி இருக்குமிடம் சென்று திரும்புவதைக் கவனித்த மதுரன், “அவங்க யாரு உங்க தங்கச்சியா?” எனக் கேட்டான்.

அதிர்ந்து பதறி விளையாட்டை நிறுத்தியவன், “நோ நோ” என்றான்.

அவனின் பதறிய பதிலில் சிரித்தவன், “சாரி எதுவும் தப்பா கேட்டுட்டேனா அகிலன்! ஏன் இவ்ளோ பதட்டப்படுறீங்க” என அவனருகில் சென்று மதுரன் கேட்க,

“அய்யோ அகி! நீயே வாலண்டியரா போய் வாங்கி கட்டிப்ப போலயேடா! சமாளிடா சமாளி” மனதிற்குள் எண்ணியவன்,

“இல்ல அவங்க என் கூட வேலை பார்க்கிறவங்க! நல்ல ஃப்ரண்ட், எனக்கு நல்லா தெரிஞ்சவங்க” வாய்க்கு வந்ததையெல்லாம் தட்டு தடுமாறி அவன் கூற, 

அவனின் தடுமாற்றத்தை கண்டு நகைத்தவன், “ஓ அப்ப அவங்களுக்கும் உங்களைத் தெரிஞ்சிருக்கும் தானே! அவங்களையே கேட்டுடுவோமா” எனக் கூறிய மதுரன்,

“ஆதுமா இங்க வா” என மதுரன் சத்தமாய் குரல் கொடுக்க,

“இதோ வந்துட்டேன் அண்ணா!” எனக் கூறி ஊஞ்சலில் இருந்து இறங்கி ஓடி வந்தாள் ஆதினி.

அவளின் அண்ணா விளிப்பில் வியப்பின் விளிம்பிற்கே சென்ற அகிலன், “என்னாது அண்ணாவாஆஆஆ!  நல்ல வேளை அகி, எதுவும் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டு சொல்லாம விட்டே! உனக்கு இன்னிக்கு நல்ல நேரம் போல!  எப்படியோ தப்பிச்சிட்ட” மனதிற்குள்ளாகப் பேசிக் கொண்டு சாதாரணமான முகப் பாவனையுடன் நின்று கொண்டிருந்தான்.

அவர்களருகே ஆதினி வந்ததும், அவளின் தோளில் கை போட்டு அருகில நிற்க வைத்த மதுரன், “சாரை உனக்குத் தெரியுமா” என நமட்டு சிரிப்புடன் கேட்டான்.

“ஓ தெரியுமே” என்றவள், “அகிலனை உனக்குத் தெரியாதா? என் ஆபிஸ்ல தான் வர்க் பண்றாங்க!  அப்பா தினமும் இவர்கிட்ட பேசுவாங்களே! நீ பேசினதில்லையா?” என மதுரனிடம் கேட்டவள்,

“என்ன அகிலன்! சனிக்கிழமை உங்க ப்ராஜக்ட்லயும் லீவ் தானா?” எனக் கேட்டாள்.

“ஆமா ஆதினி” என்றவன் “சரி அப்புறம் பார்க்கலாம்”  எனக் கூறி விட்டு சென்று விட்டான்.

“என்னண்ணா வம்பு பண்ண அவர்கிட்ட? ஒரு மாதிரி டல்லா போறாரு” ஆதினி இடையில் கை வைத்து மதுரனை முறைத்து பார்த்து கேட்க,

ஹா ஹா ஹாவெனச் சிரித்தவன், “இனி மேல் தான் வம்பு பண்ணலாம்னு இருக்கேன்” என அகிலன் போகும் பாதையைப் பார்த்துக் கூறியவன் அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான்.

“எல்லார்கிட்டயும் வம்பு வளர்க்கிறதே ஒரு வேலையா வச்சிட்டு இரு” எனக் கூறிக் கொண்டே அவனுடன் ஆதினியும் நடந்து சென்றாள்.

அன்றிரவு பால்கனியில் தனது தந்தையுடன் அமர்ந்து பேசிய மதுரன், “அகிலனை பத்தி விசாரிச்சிட்டேன்ப்பா” என்றான்.

“அகிலன் ரொம்ப நல்ல பையன்ப்பா! நம்ம ஆதுவ விரும்புறாருனு தோணுது! 27 வயசானாலும் இதுவரை யாரையும் லவ் பண்ணதில்லை! குடும்பம் நல்ல நிலைமைக்கு வர்றதுக்கு,  தங்கச்சி மேரேஜ்க்குனு அதுலேயே அவரோட இத்தனை நாள் கவனமும் இருந்திருக்கு.  தங்கச்சிக்கு மேரேஜ் செஞ்சி வச்சி ஆறு மாசம் ஆகுது. இப்ப தான் அவரோட கல்யாணத்துக்கு வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க!”  அமைதியாய் கூறிக் கொண்டே வந்தவன்,

அவனின் தந்தையின் முகம் நோக்கி திரும்பியவன், “குடும்பம்லாம் நல்ல குடும்பம் தான் அப்பா… ஆனா அவங்க அப்பா அம்மா மேரேஜ்ல தான் சில காம்ப்ளிக்கேஷன்ஸ் இருந்திருக்கு! அது கொஞ்சம் யோசிக்கனும்” யோசனையாய் அவன் கூறவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளலானார் அவனின் தந்தை.

அதே இரவின் ஏகாந்தந்தில் மெத்தையில் படுத்திருந்த அகிலனுக்கு உறக்கம் அவனை எட்டாதிருந்தது.

மனம் முழுவதும் ஆதினியின் நினைவே சுழலடிக்க,  இத்தனை காலமாய் எந்தப் பெண்ணையும் பார்த்து வராத ஈர்ப்பு, ஆசை, இவளிடத்தில் மட்டும் வந்ததேனோவென எண்ணி வெகுவாய் மூளையைக் கசக்கி பிழிந்தெடுத்து, அவளின் நினைவை அவனை விட்டு பிரித்தெடுக்க வெகுவாய் அவன் முயன்றுக் கொண்டிருக்க,  அவனுள் அணுவாய் உரைத்திருந்தவள் அவன் மனதையும் அறுத்துக் கொண்டே வெளி செல்வது போல் அப்பிரிவு எண்ணமே அவனை வதைக்க, இவ்வெண்ணங்கள் அவனை மூச்சு முட்ட செய்ய, தன் மெத்தையினின்று எழுந்தவன் சுவாசத்திற்காய் அவனில்லத்திலிருந்த பால்கனியில் வந்து நின்றான்.

பால் நிலா வெள்ளி பந்தாய் உருண்டு திரண்டு கண் முன்னே காட்சி அளிக்க, அதை ரசிக்கும் எண்ணம் துளியுமில்லாது அவள் மீது தனக்கிருக்கும் உணரவியலா இத்தவிப்பின் பெயரென்ன எனத் தன்னைத் தானே வதைத்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் பின்னோக்கி வந்து அவனின் முதுகை தொட்ட அவனின் தந்தை, “என்னப்பா தூக்கம் வரலையா?” எனக் கேட்டார்.

“அப்பா நான் ரொம்பக் குழப்பத்துல இருக்கேன்! அதைத் தீர்த்து வைப்பீங்களா?” அவரின் கை பற்றிப் பரிதவிப்பாய் அவன் கேட்க,

என்னமோ ஏதோவெனப் பதறிய அவனின் தந்தை, “என்னப்பா என்னாச்சு? ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டார்.

“இல்லப்பா! அதெல்லாம் இல்லப்பா!” இதை எவ்வாறு கூறுவது எனத் தடுமாறியவன்,

அவரின் கை பற்றி அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தவன், “அப்பா நான் ஒரு பொண்ணை லவ் பண்றேனு நினைக்கிறேன்ப்பா! என் மனசு ஒரு நிலையில இல்லாம அவ நினைப்பாவே இருக்குப்பா!  எது எனக்கு அவகிட்ட பிடிச்சதுனு சத்தியமா எனக்குத் தெரியலைப்பா! ஆனா அவ எனக்குள்ள இருந்துட்டு என்னமோ செய்றா! மனசு ஒரு மாதிரி சந்தோஷமாவும் அதே நேரம் ரொம்ப பாரமாவும்… ஹ்ம்ம் எப்படி சொல்ல… ஒரு மாதிரி அவஸ்தையா இருக்குப்பா” குழப்பமான முகப் பாவனையுடன் அவன் பேசிக் கொண்டே போக,

“ஒரு பொண்ணைப் பிடிக்கிறது, காதலிக்கிறது, அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறது இது எதுவுமே தப்பில்லை! ஆனா அந்தப் பொண்ணுக்கிட்ட உன் காதலை சொல்றதை விட, நேரடியா அந்தப் பொண்ணோட அப்பா அம்மாகிட்ட பேசு! அது தான் நல்ல காதலுக்கு அழகு”

இத்தனை நேரமாய் தனக்கிருந்த பரிதவிப்பை நிமிடத்தில் அவர் சரி செய்ததாய் அவனுக்குத் தோன்ற, “அப்பாஆஆஆ வாவ் எவ்ளோ சிம்பிள்ளா  சொல்யூஷன் சொல்லிட்டீங்க! நாளைக்கே அந்தப் பொண்ணோட அப்பாகிட்ட போய்ப் பேசுறேன்”

அவன் கூறியதை கேட்டு, “என்கிட்ட சொல்லுடா நானே போய் பேசுறேன்! எங்க கல்யாணம் மாதிரி ஆகிட கூடாதுடா! நீ ஆசைப்பட்டுக் கேட்க போய் எங்க கல்யாணத்தைக் காரணம் காமிச்சு அவங்க வேண்டாம்னு சொல்லிட கூடாது! உன் தங்கச்சிக்கே இதனால தானே மாப்பிள்ளை கிடைக்காம இவ்ளோ நாள் தள்ளி போச்சு! நான் நேர்ல போனா என்ன நடந்துச்சுனு விளக்கி விலாவரியா சொல்லுவேன்”  மகன் மனம் வருந்துமாறு ஏதும் நிகழ்ந்திட கூடாதே என்ற பரிதவிப்பில் அவர் கூற, 

“அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்கப்பா நான் பார்த்துக்கிறேன்! அந்தப் பொண்ணோட அப்பா அம்மா ஓகே சொன்னதும் தான் உங்க கிட்ட சொல்வேன்! உங்க கிட்ட சொன்ன பிறகு தான் பொண்ணுகிட்டயே சொல்லுவேன்! நீங்க எதையும் நினைச்சி கவலைப்படாம போய்த் தூங்குங்க”  அவரை அனுப்பி வைத்தவன்,

ஆதினியின் தந்தையிடம் எப்போது எவ்வாறு இவ்விஷயத்தை உரைப்பதெனச் சிந்தித்துக் கொண்டே உறங்கி போனான்.


அன்றைய நாள் மாணிக்கத்தின் அம்மாவின் நினைவு நாளாகையால் ஆட்டோ ஓட்ட செல்லாது, அவரின் புகைப்படம் வைத்து கும்பிட தேவையான பொருட்களை எடுத்து வைத்தும், அவருக்குப் பிடித்தமானவற்றைச் சமைத்துக் கொண்டும் இருந்தான் மாணிக்கம்.

அச்சமயத்தில் தான் அவனின் வீட்டை சுத்தம் செய்யும் வேலையைப் பார்க்கும் ஆயா வந்து கதவை தட்டினார்.

அவன் கதவை திறந்ததும் தன்னுடன் வருமாறு அவர் இவனை அழைத்ததும், அடுப்பை அணைத்து விட்டு அவருடன் சென்றான்.

பதட்டமாய் அவனுடன் நடந்தவர், “அந்த வீட்டுல பாப்பாக்கு அடி பட்டுருச்சுப்பா!  ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போகனும்” என்றவர் கூறவும்,

“எந்த வீட்டுல? எந்தப் பாப்பா? எப்ப எப்படி அடி பட்டுச்சு?” என இவன் அடுக்கடுக்காய் கேள்விகள் கேட்க,

மாணிக்கத்தின் வீட்டினை தாண்டி ஆறாவது ஏழாவது வீடாய் அமைந்திருந்த அந்த அழகிய தனி வீட்டிற்கு இவனை அழைத்துச் சென்றார் அந்த ஆயா.

வீட்டினுள் நுழையவும் ஒரு சிறுமியின் அழுகுரலும், அவளைத் தேற்றும் ஒரு சிறுவனின் குரலும் மாணிக்கத்தின் செவியினைத் தீண்ட,  துரிதமாய் வீட்டினுள் நுழைந்தான்.

அந்தச் சிறுமியின் அழுகையில், “ஒன்னமில்லைடா கண்ணம்மா! டாக்டர் ஊசி போடுவாராம்! எல்லாம் சரியாடுமாம்” என அந்தச் சிறுமியை தூக்கி அந்த ஆயா சமாதானம் செய்ய,

அந்த ஆயாவின் கண்ணம்மா என்ற விளிப்பில் அதிர்ந்து நின்றான்.

அவனின் தாயின் பெயர் கண்ணம்மா! அவரின் நினைவு நாளான இன்று அந்தத் தாயின் பெயரில் இச்சிறுமியை அழைப்பதை கண்டதும் சற்றுப் பூரித்துப் போனது மனது.

அங்கு அந்தச் சிறுமியோ தாடையில் வெட்டுபட்டு ரத்தம் வர நின்றிருக்க,  அச்சிறுமியின் அண்ணனின் கண்களிலும் கண்ணீர் கரைப்புரண்டோடியது.

சட்டென நிகழவுலகத்திற்கு வந்த மாணிக்கம், அச்சிறுமியை கையிலேந்தி மருந்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில், அந்தச் சிறுமிக்கு வெட்டுபட்ட இடத்தில் மூன்று தையல்கள் போட்டு அவளை உறங்க வைத்திருந்தார் மருத்துவர்.

“என்னால தான் பாப்பாக்கு இப்படி ஆச்சு” எனக் குற்றயுணர்வில் அச்சிறுவன் தான் செய்ததைக் கூறி அழ,

“இல்லடா கண்ணா! விளையாடும் போது இதெல்லாம் சகஜம் டா” என அந்த ஆயா அவனைத் தேற்ற,

அந்தப் பிள்ளைகளுக்கு உணவு வாங்க சென்ற மாணிக்கம் அப்போது தான் வந்தடைந்தான்.

“கண்ணா! கண்ணம்மா ! நல்ல பேரு!” மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,

“இந்தப் பையன் என்ன செஞ்சான் ஆயா?” எனக் கேட்டான்.

“ஒன்னுமில்லைப்பா! இரண்டு பேரும் விளையாடும் போது, பாப்பாவை தூக்குறேனு சொல்லி மேஜை மேல நிக்க வச்சி காலை பிடிச்சி தூக்கினான்.  சின்னப் பையன்ல தூக்க முடியாம விட்டுட்டான்! அதான் இவனால தான் பாப்பாக்கு அடி பட்டுச்சுனு அழுகை” ஆயா நடந்தவற்றைக் கூற,

அச்சிறுவனைத் தூக்கியவன், “வாழ்க்கைல அடிபடுறதுலாம் சகஜம் கண்ணா! இப்ப எங்க தவறாச்சுனு நீ தெரிஞ்சிக்கிட்டல!  இனி நீ பாப்பாவை தூக்கும் போது கவனமா இருப்பல!  இப்படி அடிபட்டு கூட வாழ்க்கைல பாடம் கத்துக்கலாம். பாப்பாக்கு ஒன்னுமில்லடா! அவ தூங்கி எழுந்ததும் நீ முன்னாடி மாதிரி விளையாடலாம்” எனக் கூறி அச்சிறுவனுக்கு ஊட்டி விட்டு தனது மடியிலேயே உறங்க வைத்து விட்டான் மாணிக்கம்.

அவன் உறங்கியதை உறுதி செய்ததும், “யாரு பாட்டி இந்தப் பசங்க? இவங்களோட அப்பா அம்மா எங்க?” எனக் கேட்டான்.

“இந்தப் பசங்களோட அப்பாக்கு இந்தப் பிள்ளைங்க மேல குடும்பத்து மேலலாம் அக்கறையே கிடையாதுப்பா! அவர் பாட்டுக்கு வருவாரு போவாரு, வேலையே கெதினு இருப்பாரு! இந்தப் பசங்களோட அம்மாக்கு இந்தப் பசங்கனா உயிரு! அவங்க மாசத்துல ஒரு நாள் ஊருக்கு போவாங்க. அவங்க ஊருக்கு போற சமயத்துல நான் வீட்டுல தங்கி இந்தப் பசங்களைப் பார்த்துப்பேன். எனக்கு அந்த வீட்டுல தான் முழு நாள் வேலை.  விடிய காலைல போய்ட்டு 10 மணிக்கு வந்துட்டு அப்புறம் சாயங்காலம் போய்ட்டு நைட் வந்துடுவேன். இது தான் என்னோட வேலை நேரம். இந்தப் பசங்களோட அப்பா மேல எனக்கு ஒன்னும் பெரிய அபிப்ராயம் இல்ல தம்பி! ஆனா அவரை என்னிக்குமே இவங்க அம்மா விட்டு கொடுத்து பேசினதே கிடையாது. குடும்ப விஷயம் வெளிய தெரிய கூடாதுனு பார்த்து பார்த்து நடந்துக்கும். அவர் ஏதோ தப்பு செய்றாருனு மட்டும் என் மனசு சொல்லுது! இந்தப் பொண்ணு அதை வெளில சொல்லாம மறைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கு”  அந்தக் குடும்பத்தினைப் பற்றி ஆயா கூற,

“ஹ்ம்ம் சரி ஆயா! நமக்கெதுக்கு மத்தவங்க குடும்பத்து கதை எல்லாம்” மாணிக்கம் ஆயாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அச்சிறுமி முழித்து விட்டதாய் செவிலி வந்து கூறவும், மாணிக்கம் சென்று பார்த்தான்.

இவனைப் பார்த்தும் அச்சிறுமி கைகளை நீட்டி அழைத்து அவனைக் கட்டிக் கொண்டது.  வீட்டிலிருந்து அச்சிறுமியை தூக்கி வந்த நேரத்திலிருந்து தையல் போட்டு உறங்க வைக்கும் நேரம் வரை அவளுடனேயே நின்று பாசமாய்ப் பேசி அன்பாய் அரவணைத்திருந்த மாணிக்கத்தை அச்சிறுமிக்கு வெகுவாய்ப் பிடித்திருந்தது.

அவர்களின் வீட்டிற்கு அவ்விருவரையும் அழைத்துச் சென்று ஆயாவிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு வந்தான்.

அச்சிறுமியை வீட்டினில் விட்டு வந்த வேளையில் அச்சிறுமியின் கண்களில் இவனுக்கான ஏக்கத்தைக் கண்டான்.  இவன் செல்ல அவள் அனுமதிக்கவே இல்லை.  அவளுக்கு உணவினை ஊட்டி விட்டு உறங்க வைத்து விடைபெற்று வந்து விட்டான்.

அன்றிரவு அவனின் தாயின் நினைவு நாளுக்குச் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து முடித்து வணங்கி படுத்திருந்தான்.

அவன் மனம் முழுவதும் கண்ணம்மாவே வியாப்பித்திருந்தாள்.  தனக்காக யாருமில்லையென அவன் ஏங்கி பரிதவிக்கும் வேளையில் இவனின் அன்புக்காக ஏங்கி நிற்கும் கண்ணம்மாவை ஒதுக்கிட முடியவில்லை இவனால்.  காலை சென்று அச்சிறுமி எவ்வாறு இருக்கிறாளெனப் பார்த்துவிட்டே மறுவேலை என முடிவு செய்த பிறகே சற்றாய் உறக்கம் வந்தது அவனுக்கு.

மறுநாள் ஞாயிறன்று முழுநாளும் அச்சிறுமியுடன் தான் இருந்தான் மாணிக்கம்.  அவளை ஒரு முறை கண்டு விட்டு வரலாமென அவ்வில்லத்திற்குச் சென்றான்.  ஆனால் அவனைப் பார்த்ததும், அவனை எங்கும் செல்ல அனுமதிக்காது கூடவே இருக்க வேண்டுமெனக் கூறி அழுது ஆர்ப்பாட்டம் செய்திருந்தாள் கண்ணம்மா. 

மதிய வேளையில் அவளை உறங்க வைத்தவன், அவளை விட்டு நகர முற்பட, தூங்க வைத்து சென்றிடுவானோவென எண்ணி அவனின் சட்டை நுனியை கையில் பிடித்துக் கொண்டு உறங்கியிருந்தாள் அக்குழந்தை.

வரவேற்பறையில் மெத்தையில் சாய்வாய் அமர்ந்திருக்க,  அவனின் மடியில் ஒரு பக்கம் கண்ணம்மாவும், மறுபக்கம் கண்ணாவும் உறங்கி கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்த ஆயா அவனிடம் வந்து, “பார்க்கவே எவ்ளோ பாந்தமா இருக்கு தெரியுமா!  சீக்கிரம் நீயும் ஒரு கல்யாணம் செஞ்சிக்கலாம்ல!  ஏன் இவ்ளோ வயசு வரைக்கும் கல்யாணம் செஞ்சிக்காமலே இருந்துட்ட?”  எனக் கேட்டார்.

“உன் கிட்ட சொல்றதுல என்ன ஆயா? எங்கம்மா தான் உலகம்னு வாழ்ந்துட்டு இருந்தேன் ஆயா! அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. ஊருல மளிகை கடை வச்சி வேலை பார்த்துட்டு இருந்தேன். இப்ப முப்பது வயசு ஆகுது எனக்கு!  எனக்கு 25 வயசு இருக்கும் போது அம்மா கல்யாணம் செஞ்சி வச்சாங்க. அவளை எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. ராணி மாதிரி தான் நான் பார்த்துக்கிட்டேன். ரொம்ப அமைதியா எதுவுமே பேசாம தான் இருப்பா! ஆனா அவ வேற யாரையோ காதலிச்சிருந்திருக்கா, எங்க கல்யாணம் ஆனப்ப அந்தப் பையன் வெளியூர்ல சிக்கிக்கிட்டு வர முடியாம இருந்தான் போல,  நாலு மாசம் கழிச்சி வந்து பார்த்தப்போ இவளுக்குக் கல்யாணமானது தெரிஞ்சி வந்தான்! அவளுக்கு அவனைத் தான் பிடிச்சிருந்தது ஆயா! எனக்கு மனசு கஷ்டமா தான் இருந்துச்சு. கட்டின பொண்டாட்டிக்கு நம்மளை பிடிக்கலைனா கஷ்டமா இருக்காதா என்ன? கோபமாலாம் வந்துச்சு.  பிடிக்காம இத்தனை நாளா என் கூட வாழ்ந்திருக்காளேன்ற கோபம்! பிடிக்காத பொண்டாட்டி கூட வாழுறதுக்குப் பதிலா தனியா வாழ்ந்துடலாம்னு முடிவு பண்ணேன்! அத்தோட அவளைத் தலை முழுகிட்டு அவ விரும்பின பையனுக்கே கட்டி வச்சிட்டேன் ஆயா! அம்மா என்னை நினைச்சே கவலைல செத்துப்போச்சு. அதுக்கு மேல அங்க இருக்கப் பிடிக்காம சென்னை வந்துட்டேன்! என் நண்பன் மூலமா ஆட்டோ வாடகை எடுத்து ஓட்ட ஆரம்பிச்சு இப்ப சொந்த ஆட்டோ வச்சிருக்கேன்! இந்தப் பிள்ளைங்க பாசம் எனக்கு அம்மாவை நியாபகப்படுத்துது ஆயா! வாழ்க்கையைத் தொலைச்சிட்டேனோனு தோணுது! யாருக்காக எதுக்காக வாழுறேனு தெரியாத ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஆயா” மனம் கலங்க கண்கள் கலங்கி தன் கதையை உரைத்திருந்தான் மாணிக்கம்.

அந்த ஆயாவின் கண்களும் கலங்கி இருந்தது. 

“உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்பப்பா” முந்தனையால் தனது கண்களைத் துடைத்துக் கொண்டு அவனது தலையில் கை வைத்து ஆசி கூறி அடுக்களை வேலை பார்க்க சென்றுவிட்டார்.

வெகு நாட்கள் கழித்துக் கிளர்ந்தெழுந்த பழைய நினைவுகளில் தன்  மீதே கழிவிரக்கம் வந்தது மாணிக்கத்திற்கு.  மனம் வெகு பாரமானதாய் உணர்ந்தான்.

இரு பக்கமுமிருந்த குழந்தைகளின் தலையை வருடிக் கொண்டே தன் தலை எழுத்து என்னவோவென எண்ணி விரக்தியாய்ச் சிரித்திருந்தான்.

அன்றிரவு தனது வீட்டிற்குச் சென்ற மாணிக்கம், மறுநாள் தனது பள்ளி சவாரிக்கு செல்வதற்கான திட்டமிடலை துவங்கினான்.

மறுநாள் சீக்கிரமே மாணிக்கத்திற்கு விழிப்பு வர, மனம் கண்ணம்மாவின் நினைவிலேயே சுழல,  அவளைக் காணவென விடியற்காலையே அவ்வில்லத்திற்கு அவன் செல்ல, அங்குக் கண்ணம்மாவின் காயத்தைப் பார்த்து பதறி கண்களில நீர் வர, அவளைக் கட்டி அணைத்திருந்தாள் அவளின் அன்னை பொன்மலர்.

— தொடரும்