முள்ளில் பூத்த மலரே – 36 (Final)

முள்ளில் பூத்த மலரே இறுதி அத்தியாயம்

ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் பொன்னிலா குடும்பத்தினரின் குலதெய்வமான அவ்வூரில் அமைந்திருந்த முத்தாரம்மன் கோவிலில் மதுரன் பொன்னிலாவின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாய் நடைபெற்று கொண்டிருந்தது.

திருமணத்திற்கு முந்தைய நாளான அன்று தான் மதுரன் வெளிநாட்டிலிருந்து வருவதாய் உரைத்திருந்தான். 

திருமணத்திற்காக அவனது அலுவலகத்தில் ஒரு மாதம் விடுப்பு அறிவித்திருந்தான். 

விடுப்பு முடிந்து மீண்டுமாய் ஆறு மாதங்கள் வெளிநாட்டில் தான் அவனுக்கு வேலை என உரைத்திருந்தனர் அவனது அலுவலகத்தார். 

இவ்வாறு ஆறு மாதம் என கூறி வருடகணக்கில் விசா நீட்டிக்க செய்து பலர் அங்கேயே தொடர்ந்து பணி செய்திருந்ததை கண்டவனாகையால், திரும்பி செல்லும் போது நிலாவையும் உடன் அழைத்து செல்ல அவளுக்கான விசாவையும் தயார் செய்து வைத்திருந்தான்.

திருமணத்திற்கு முந்தைய நாளான அன்று அகிலன் மதுரனை அழைத்து வருவதற்காக,  அவனின் வருகையை எதிர் நோக்கி விமான நிலையத்தில் காத்திருந்தான்.

செக்கிங் அனைத்தையும் முடித்து, தன்னை ரிசீவ் செய்ய மொத்த குடும்பமுமே வந்திருக்கும் என்ற ஆவலுடன் சுற்றும் முற்றும் மதுரன் நோக்க,  அங்கே அகிலன் நின்றிருந்ததை பார்த்தவனுக்கு சற்று ஏமாற்றமாய் இருந்தது.

மதுரனை கண்ட அகிலன் மகிழ்ச்சியில் துள்ளியவாறே, “மச்சான் எப்படி இருக்க?” என கேட்டவாறே அவனது பையினை வாங்க கையை நீட்ட,

அவனிடம் பையினை தர மறுத்தவன், “எங்க வீட்டு மாப்பிள்ளை நீங்க… உங்ககிட்ட போய் இந்த வேலைலாம் நாங்க வாங்கலாமா மாப்பிள்ளை” என மாப்பிள்ளையில் அழுத்தம் கொடுத்து போலி பவ்யத்துடன் கடுகடுத்த குரலில் மதுரன் உரைக்க,
அகிலனின் முகம் சுருங்கி போனது.

அகிலனின் மீதிருந்த கோபத்தினால் அவனிடம் பேசாதிருந்தான் மதுரன்.

ஆதினி எவ்வளவோ எடுத்து கூறியும், இது தான் அகிலனுக்கு கொடுக்கும் தண்டனை எனக் கூறியே அவ்வாறு அவன் பேசாதிருக்க, மதுரனை சமாதானம் செய்யவே அகிலனை அனுப்பி வைத்திருந்தனர் மலரும் மாணிக்கமும்.

“ஏன்டா இப்படி பேசுற? நான் என்ன உன்கிட்ட உங்க வீட்டு மாப்பிள்ளை போலவா பழகுறேன்” கவலை தோய்ந்த குரலில் அகிலன் கேட்க,

“ஆமாப்பா அப்படி மாப்பிள்ளைனு நினைச்சதால தானே என் தங்கையை அடிக்கிற அளவுக்கு கை நீண்டுச்சு” அவனை பொசிக்கி விடும் பார்வையால் பார்த்து மதுரன் கேட்க,

“அடேய் ஒரு மனுஷன் ஒரு நேரம் தெரியாம தப்பு செஞ்சிட்டேன்! எத்தனை தடவைடா இதையே சொல்லிட்டு இருப்ப! இப்ப நீ என்னைய மன்னிக்க முடியுமா முடியாதா?”  சற்றே கடுப்புடன் கூடிய கோபத்துடன் அகிலன் கேட்க,

“ஓஹோ உங்க மாப்பிள்ள தோரணையை காமிக்கிறீங்களோ?” எகத்தாளமாய் அவனை ஒரு பார்வை பார்த்த மதுரன்,

“இப்ப மன்னிக்க முடியாதுனா என்ன செய்வீங்க மாப்பிள்ள சார்? என் தங்கச்சியை கொடுமை படுத்துவீங்களா? அதை பார்த்துட்டு அப்படியே என் கை பூ பறிச்சிட்டு இருக்கும் பாருங்க.  எங்க வீட்டு பொண்ண வச்சி வாழ தான் கட்டி கொடுத்தோம்.  அடிச்சி கொடுமை படுத்த இல்ல.  இனி ஒரு நேரம் இப்படி நடந்துச்சு வகுந்துடுவேன் சொல்லிட்டேன்” அகிலனை முறைத்தவாறே கோபமாய் மதுரன் உரைத்திருக்க,

“அட கடவுளே இந்த ஆதினி பொண்ணோட அமைதியை பார்த்து, அமைதியான குடும்பம்னு நினைச்சு இப்படி ரௌடி குடும்பத்துக்கிட்டே வந்து சிக்கிட்டேனே! இந்த ரௌடி கும்பல் கிட்டயிருந்து நீதான் என்னைய காப்பாத்தனும் ஆண்டவா” இரு கைகளையும் மேல் நோக்கி காண்பித்து கடவுளிடம் கூறுவது போல் அகிலன் உரைத்திருந்த நேரம், பேசிக் கொண்டே இருவரும் கார் நிறுத்துமிடத்தை அடைந்திருந்தனர்.

அகிலன் இவ்வாறு கையை உயர்த்தி கூறியதை அங்கு காரினருகே நின்றிருந்த ஆதினி கேட்டிருக்க, “என்ன அண்ணா நீ இன்னும் அவர்கிட்ட சமாதானமாகலையா? நேர்ல பார்க்கும் போது கண்டிப்பா பேசுறேன்… அது வரைக்கும் அவருக்கு இது பனிஷ்மெண்ட்டா இருக்கட்டும்னு சொன்னதால தான் நானும் எதுவும் கேட்டுகலை.  ஆனா இனியும் அவரை கலங்கடிச்சனா, அவரை நீ மன்னிக்கிற வரை நான் உன்கிட்ட பேச மாட்டேன் சொல்லிட்டேன்” கோபமாய் ஆதினி பேசிக் கொண்டே போக,

“என்னாஆஆஆ பேச்சு பேசுது இந்த பொண்ணு” ஆச்சரிய அதிர்ச்சியில் கண்களை விரித்து வாயை கை வைத்து மூடிக் கொண்டான்.

“ரொம்ப நாள் கழிச்சி அண்ணனை பார்க்கிறோமே ஓடி வந்து கட்டி பிடிச்சி பாசமலர் படத்தை ஓட்டும் இந்த பொண்ணுனு பார்த்தா, என் கணவன் மீது நீ எப்படி கோபமா இருக்கலாம்னு கண்ணகி கணக்கா சண்டைக்குல நிக்குது” நீட்டி முழக்கி ராகம் போட்டு மதுரன் கூறவும் அகிலன் வாய்விட்டு சிரித்திருந்தான்.

அகிலனின் சிரிப்பில், “என்னைய வச்சி காமெடி பண்றீங்களா இரண்டு பேரும்.  நானா வந்து சிக்கிட்டேனா?” என இருவரின் தலையிலும் குட்டு வைத்து கேட்டவள் ஆனந்தமாய் சிரித்திருந்தாள்.

“ஐ மிஸ்டு யூ சோ மச் அண்ணா” என அவனை அணைத்திருந்தாள்.

அண்ணனும் தங்கையும் தங்களது பாசத்தை பொழிந்து கொண்டிருக்க, “யம்மா உங்க பாசமழைல நிஜமாவே மழை வர போகுது! கிளம்புவோம் முதல்ல” எனக் கூறி காரினை அகிலன் இயக்க, மதுரன் முன்னிருக்கையில் அமர, பின்னமர்ந்து கொண்டாள் ஆதினி.

அங்கு நிலாவின் வீட்டை அடைந்ததும் அவளின் குடும்பத்தார் மதுரனை வெகு விமர்சையாய் வரவேற்றனர்.

மலரும் மாணிக்கமும் ஆதுரமாய் அவனை அணைத்து கொண்டனர்.

மதுரனின் விழிகள் நிலாவையே தேட,  அவனை ஓய்வெடுக்கவென அகிலனின் அறைக்கு அனுப்பி வைத்து விட்டனர்.

“டேய் மச்சான் கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணை கண்ணுல காட்ட மாட்டாங்களா இந்த ஊருல”  ஏக்கமாய் மதுரன் கேட்க,

வாய்விட்டு சிரித்த அகிலன், “உனக்கு நிலா தங்கச்சிய பார்க்கனும்னா சொல்லு ஏற்பாடு செஞ்சிடுவோம்” என மதுரனின் தோளில் கை போட்டு புருவத்தை உயர்த்தி அகிலன் கேட்க,

“ஹே முடியாமாடா” மதுரன் கேட்டிருந்த சமயம்,  அவ்வறையினுள் நுழைந்தாள் பொன்னிலா.

நிலாவை கண்ட ஆனந்தத்தில் மதுரன் அவளை விழியால் விழுங்கி கொண்டிருக்க, “அதானே பார்த்தேன்! நம்ம சிங்கத்தை கூண்டுக்குள்ள அடைச்சி வைக்க முடியுமா என்ன?”  அகிலன் நிலாவை கேலி செய்ய,

“அண்ணாஆஆஆ” என அகிலனின் கேள்வியில் சிணுங்கிய நிலா மதுரனை பாராது பார்த்திருக்க, அவர்களை தனித்து விட்டு அங்கிருந்து அகன்றான் அகிலன்.

மதுரனை நேர்விழி கொண்டு நோக்கியவளின் முகமோ கல்யாண பூரிப்பும், இவனை கண்டதால் வந்த மகிழ்வுமென மின்னி கொண்டிருக்க,
மனமோ அவனை ஆரதழுவி முத்தமிட்டு தன் இத்தனை தாள் பிரிவின் துயரை போக்க சொல்லி கூக்குரலிட,
அவளின் எண்ணங்களை படித்துக் கொண்டே ஆசையாய் அவள் முகத்தை பார்த்திருந்தான் மதுரன்.

தன்னை கட்டுபடுத்தி அமைதியாய் அவனருகே சென்று அமர்ந்தவள், அவனின் ரசனை விழிகளில் தன்னை தொலைத்தவள் அவளையும் மீறி, “ஜஸ்ட் ஒன் டே டு கோ” மனதில் தோன்றியதை வார்த்தையாய் உரைத்திருந்தாள்.

“எதுக்கு ஜஸ்ட் ஒன் டே டூ கோவாம்” கள்ள சிரிப்புடன் குறும்பு பார்வை மின்ன மதுரன் அவளை கேட்க,

அவனின் கேள்வியில் தான், தான் உரைத்ததையே உணர்ந்தவள், ஸ்ஸ் என நாக்கை துறுத்தி கண்ணை சுருக்கி நாணமாய் தலையில் அடித்து கொள்ள,  அவளின் இச்செய்கைகள் அனைத்தையுமே ரசித்து பார்த்திருந்தான் மதுரன்.

அவளின் கை பற்றி தனது கைக்குள் பொதிந்து கொண்டவன், “நானும் நாளை அந்த வேளைக்காக ஆசையாய் ஆர்வமா காத்திட்டு இருக்கேன்” என அவன் கூறவும்,

“போங்க” என கையை உறுவி கொண்டு அவள் சட்டென எழுந்து அங்கிருந்து செல்ல பார்க்க,

“ஹே நிலா பொண்ணு” என அழைத்து அவளது நடையை நிறுத்தியவன்,

அவளருகே சென்று மீண்டுமாய் கையை பற்றி, “நாளைக்கு உன் கழுத்துல தாலி கட்டுற வேளைக்காக வெய்ட்டிங்னு தான் நான் சொன்னேன்! நீ என்ன நினைச்சியாம்?” சீண்டும் பார்வையுடன் அவன் கேட்க,

“வர வர வாய் அதிகமா போச்சு.  எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி நாளைக்கு கவனிச்சிக்கிறேன்!” அவன் தோளில் இரண்டடி போட்டு அவள் கூற,

“ஆஹா… பொண்டாட்டியோட கவனிப்பை போய் புருஷன் வேண்டாம்னு சொல்வானா” என அதற்கும் கேலி செய்ய, 

“அய்யோ நீங்க ஒரு ஃபார்ம்ல இருக்கீங்கனு தெரியுது! ஆளை விடுங்க சாமி” என அங்கிருந்து ஓடியே விட்டாள் அவள்.  இவனது சத்தமான சிரிப்பு அவளை பின் தொடர்ந்தது.

அன்று மாலை தன் கணவருடன் அவ்வூரை வந்தடைந்தாள் மீனாள்.  ஆறு மாத கர்ப்பிணியாய் இருந்தாள் அவள். ஆதினி அவளை வரவேற்று உபசரித்து தன்னுடன் தங்க வைத்து கொண்டாள்.

ஆயாவின் பேரன் அர்ஜூனும் குடும்ப சகிதமாய் வந்திருந்தான்.

ஆதினி, மீனாள், சத்யா, தர்மன் என அனைவரும் ஒன்றாய் மாடியில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்த சமயம் மீனாளின் கணவர் பாலாஜி, அகிலன் மற்றும் மதுரன் அங்கு வந்து சேர்ந்தனர்.

மதுரன் ஊரிலிருந்து வந்து சேர்ந்ததும் உண்டு விட்டு உறக்கவாரம்பித்தவன் சற்று நேரத்திற்கு முன்பு தான் விழித்தான். அச்சமயம் பாலாஜியும் அகிலனும் அவ்வறையிலிருந்து பேசிக் கொண்டிருக்க, அவர்களின் குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்களென கேட்டு அவர்களை நலம் விசாரிக்கவென அவர்களுடன் சேர்ந்தே வந்துவிட்டான்.

மதுரனை கண்டதும், “வாங்க புது மாப்பிள்ளை”  என அழைத்து தன்னருகில் அமர்த்தி கொண்டார் தர்மன்.

“பிரயாணம்லாம் சௌகரியமா இருந்துச்சா தம்பி” என விசாரித்தார்.

“எல்லாம் நல்லபடியா இருந்துச்சு மாமா” என்றவன்,

“நீங்கலாம் எப்படி இருக்கீங்க? அத்தை இளச்சிட்டா மாதிரி தெரியறீங்களே? ஆது உங்களை ஒழுங்கா கவனிச்சிக்கிறது இல்லையா? உங்க சாப்பாட்டையும் சேர்த்து அவ தான் சாப்பிடுறாளோ? அதான் ஊதிக்கிட்டே போறாளா?” என சிரிப்பாய் அவன் கேட்க,

அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் பின்னே நின்றிருந்த ஆதினி அவன் மண்டையில் தட்டினாள்.

அவனின் கேள்வியில் சிரித்த சத்யாவின் முகத்தில் புது பொலிவை கண்டான் மதுரன்.

“உங்க முகமும் மின்னுதே அத்தை. உங்க மருமகளுக்கு டஃப் காம்படீஷன் கொடுக்கனும்னு எதுவும் யோகா எக்சசைஸ் செய்றீங்களா?” என மீண்டுமாய் அவன் கேட்க,

“ஏது உன் தங்கச்சி யோகா எக்சசைஸ்லாம் செய்றா? அதுக்கு டஃப் காம்பிடீஷன் கொடுக்க எங்கம்மா வேற செய்றாங்களா? ஏன்டா உன் தங்கச்சி சைஸ்ஸ பார்த்த பிறகும் உனக்கு இப்படி சந்தேகம் வரலாமா?” ஆதினியை பார்த்து கேலியாய் அகிலன் உரைக்க,

அவனை அனைவரின் முன்பும் அடிக்க முடியாது முறைத்தவள், “ரூம்க்கு வாங்க கவனிச்சிக்கிறேன்” பல்லை கடித்தவாறு அவனுக்கு மட்டும் புரியுமாறு வாயசைத்து அவள் கூற,

“கவனிச்சிக்கோ கவனிச்சிக்கோ நல்லா கவனிச்சிக்கோ அதுக்காக தானே நான் காத்துட்டு இருக்கேன்” அவளுக்கு மட்டும் புரியுமாறு அவன் கூற, தன் தலையிலேயே அடித்து கொண்டாள் அவள்.

அதன்பின் இவர்களுக்காக வெளிநாட்டிலிருந்து வாங்கி வந்த பொருட்களை அவரவரிடத்தில் வழங்கிய மதுரன், ஆதினியை அணைத்து மார்பில் சாய்த்து தலையை தடவியவாறு “இந்த அண்ணனே உனக்கு கிடைச்ச பெரிய பரிசு தானே! உனக்கெதுக்கு இன்னொரு பரிசுனு உனக்கு எதுவும் வாங்கலமா இந்த அண்ணன்” பாசமலர் சிவாஜி ஸ்டைலில் அவன் ஏத்த இறங்கமாய் பேசி உரைக்க,

பட்டென்று அவன் மார்பிலிருந்து தலையை நிமிர்த்தியவள், அவன் கையினை கடித்து வைத்தாள். 

அவள் கடித்ததில் அலறியவன், “ராட்சஸி ராட்சஸி! இன்னும் இந்த பழக்கத்தை விடலையா நீ” என கத்தியவன்,

“என்ன மாப்பிள்ளை இப்படி தான் நீங்களும் கடி வாங்கிட்டு இருக்கீங்களா?” என மதுரன் அகிலனை நோக்கி கேட்கவும்,

அவள் தான் மை ஸ்வீட் ரசகுல்லா எனக் கூறி அகிலனின் கன்னத்தை இதழை என கடித்து வைப்பாளே, ஆக மதுரனின் அக்கேள்வியில் அகிலனின் பார்வை வெகு ரசனையாய் அவள் மீது படிய, அவள் முகம் நாணத்தில் சிவந்தது.

இவர்களின் இந்த மோன பார்வை பரிமாற்றத்திலேயே ஏதோ அந்தரங்கமாய் கேட்டு விட்டோமென மதுரனுக்கு புரிய அப்படியே கேள்வியை மாற்றி தர்மனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

சற்று நேரம் பணி நிமித்தமாய் பேசி முடித்ததும், “எங்க ஆது சின்ன பொண்ணு! இன்னும் நாங்க அவளை எங்க வீட்டு பாப்பானு தான் நினைச்சிட்டு இருக்கோம். அவ எதுவும் தப்பு தவறுமா செஞ்சா எடுத்து சொல்லுங்க.  புரிஞ்சிக்குவா! அவளை கஷ்டபடுத்தாம பார்த்துக்கோங்க எனக்கு அது போதும்” அண்ணனாய் சம்பந்தியிடம் உரைக்க வேண்டுமென எண்ணி மனதில் குறித்து வைத்திருந்ததை அவன் உரைத்திருக்க,

மறுநாள் தனது திருமணத்தை வைத்து கொண்டு முந்தைய நாள் கூட தங்கையின் நல்வாழ்வை எண்ணி புகுந்த விட்டினரிடம் பேசிக் கொண்டிருக்கும் தனது தமையனின் அன்பையும் பொறுப்பையும் எண்ணி கண்களில் பாசம் பொங்க அவனை பார்த்திருந்தாள் ஆதினி.

அன்றைய அந்த சண்டை நிகழ்வை பற்றி மீனு ஆதினியிடம் ஏதும் பேசவில்லை.  அகிலனிடம் புலம்பியதுடன் விட்டு விட்டாள்.  அகிலனே அதை பெரிதுபடுத்தாது இருக்கும் போது தான் ஏன் பிரச்சனை செய்ய வேண்டுமென எண்ணி அந்நிகழ்வை பற்றி அதன் பின் அவள் எவரிடமும் பேசியதில்லை.  தனது தாய் வருந்துமாறு மீண்டும் என்றேனும் ஆதினி நடந்து கொண்டால் பேசிக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டாள்.

ஆனால் மீனு ஆதினியின் உறவுநிலையில இந்நிகழ்வு சிறு விரிசலையும் ஏற்படுத்தி விட கூடாதென எண்ணிய அகிலன், மீனுவிடம் ஆதினியின் நிலையை எடுத்துரைத்திருந்தான். ஆக மீனுவிற்கு ஆதினியின் மீதிருந்த வருத்தம் கோபம் என அனைத்துமே முற்றிலுமாய் பறந்து சென்றிருந்தது.

“என்னது உன் தங்கச்சி சின்ன பொண்ணா? உன் தங்கச்சி எவ்ளோ பெரிய விஷயம் செஞ்சிருக்கா தெரியுமா?” தர்மன் மதுரனை பார்த்து கேட்க, சத்யா அமைதியாய் சிரிக்க, மீனுவும் அகிலனும் ஆதினியை பெருமையாய் பார்க்க,

“அப்படி என்ன செஞ்சா?” எனக் கேள்வியுடன் அவரை நோக்கினான்.

“எனக்கும் என் பொண்டாட்டிக்கும் இருந்த பல வருஷ சண்டையை உன் தங்கச்சி தான்ப்பா தீர்த்து வச்சா! அவளை போய் சின்ன பொண்ணுனு சொல்றியே” மென்மையாய் சிரித்து பெருமிதமாய் தன் மருமகளை நோக்கியவாறே தர்மன் கூற, ஆமென ஆமோதித்தாள் மீனாள்.

“அப்படி என்னடா செஞ்ச பாப்பா” என ஆச்சரியமாய் மதுரன் வினவ,

“நான் ஒன்னும் பண்ணல அண்ணா!  மாமா சும்மா என்னைய தூக்கி வச்சி பேசிட்டு இருக்காங்க.  இது எல்லாரோட ஐடியாவும் தான்”  என ஆதினி கூற,

“அது என்னனு நான் சொல்றேன் தம்பி! உங்க வாழ்க்கைக்கு இது ஒரு பாடமா இருக்கும்” என்ற தர்மன்,

“என் பொண்டாட்டி பணக்கார வீட்டுல பிறந்து வளர்ந்தவ! அவளை நான் காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டேன்.  அதுவும் எனக்காக அவளோட சொந்தம் பந்தம் ஊருனு எல்லாத்தையும் அவ விட்டுட்டு வந்தா! ஆனா இங்க சென்னை வந்த பிறகு ஒரு வீடு பார்த்து எனக்கு வேலை தேடினு வாழக்கைல பல கஷ்டங்களை சந்திச்சோம். 

வாழ்வாதாரத்துக்கே போராடிட்டு இருக்கும் போது எங்கிருந்து இவளை பத்தி நான் யோசிக்க? மூனு நேரம் சாப்பாடு, இருக்க இடம், நிம்மதியான வாழ்க்கை இது தான் நான் நினைச்சி வச்சது.  ஆனா அவ வாழ்ந்த வாழ்க்கையே ராஜ வாழக்கை. ஆனா அந்த அளவுக்கு இல்லைனாலும் கொஞ்சமாச்சும் அவளுக்கேத்த மாதிரி எங்களோட வாழ்க்கை தரத்தை நாங்க உயரத்திக்கனும்னுலாம் நான் நினைச்சது இல்ல.  அது அவ மனசுல ஒரு வடுவாவே இருந்துட்டு போல. எப்பவும் நான் அவளை ஏமாத்திட்டதா சொல்லி சண்டை போடுவா! எனக்கு இந்த ஏமாதிட்டன்ற வார்த்தையை கேட்டாலே அப்படி கோபம் வரும்.  நானும் கூட கூட பேசுவேன். காலம் போக போக பிள்ளைங்க முன்னாடி சண்டை போடக் கூடாதுனு அவ சண்டை போடும் போது அமைதியா இருந்துப்பேன். பதிலே சொல்ல மாட்டேன்.  அது இன்னும் அவளை கடுப்பேத்திட்டு இருந்திருக்கு.  நான் என்ன நல்லது செஞ்சாலும் அவளுக்கு எப்பவும் சண்டை போடுறது தான் வேலைனு முடிவு பண்ணிக்கிட்டு அவ என்ன சொல்ல வர்றா எதனால இப்படி சண்டை போடுறானுலாம் நான் யோசிச்சதே இல்ல.  இப்படி தான் நம்ம நாட்டுல பல ஆம்பிளைங்க இருக்காங்க.  பொண்டாட்டி சண்டை போடுறானா எதுக்காக சண்டை போடுறா? அவளுக்கு என்ன பிரச்சனைனு யோசிக்காம அவளுக்கு இது தான் வேலைனு அலட்சியமா இருக்கிறது”

“என்னோட இந்த தவறை எடுத்து சொல்லி புரிய வச்சது ஆதினி தான்” கண்கள் பணிக்க ஆதினியை பார்த்தவர், “இந்த விஷயத்துல என் மகன் எனக்கு அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனா இருந்தான்” என்றார்.

“ஆதினி பணக்கார வீட்டு பொண்ணு.  அவளை கல்யாணம் செஞ்சிக்கனும்னு ஆசைப்படுறோம்னா அவளுக்கு ஏத்த மாதிரி நம்மளோட வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கனும்னு முடிவு செஞ்சி நிறைய மாற்றங்கள் எங்க வீட்டுல கொண்டு வந்தான்.  அதை தான் என் பொண்டாட்டி என்கிட்ட எதிரபார்த்திருக்கானு ஆதினி சொல்லி தான் தெரிஞ்சிது.  என் மனைவி மனதிலிருந்த ஆதங்கம் தான் அப்படி அவளை கோபமாய் அடிக்கடி என்கிட்ட சண்டை போட வச்சிருக்குனு ஆதினி சொன்னா. அந்த ஆதங்கம் உங்களுக்கு அவங்க மேல அன்பே இல்லைனு கூட புரிய வச்சிருக்கும். அவங்க பிள்ளைங்களுக்காக வாழுறோம்னு தான் வாழ்ந்திருப்பாங்கனு ஆதினி சொன்னா”

“என் மேலுள்ள தப்பு எனக்கு புரிஞ்சிது.  திருத்திக்கிற வயசை தாண்டி போயாச்சு.  ஆனா என் மனைவி மேல நான் வைத்திருக்கும் அன்பை புரிய வைக்கலாம் தானே! இரண்டு பேரும் மனசு விட்டு பேசலாம் தானேனு ஆதினி எடுத்து சொன்னா…  அதுக்கு பிறகு மனசு விட்டு பேசினோம்.  இத்தனை வருஷ வாழ்க்கைல எங்களை பத்தி நாங்களே தெரிஞ்சிக்காத பல விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டோம். நானும் என் மனைவியும் சேர்ந்து எங்க வீட்டுல உள்ள தோட்டத்துல காய்கறி கீரைனு போட்டு அதை சம்பாத்தியமாகிட்டோம். அது என் மனைவியோட ரொம்ப நாள் கனவா இருந்துருக்கு!”

“கணவன் மனைவி மனசு விட்டு பேசிக்கிறது அவங்களோட வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம்னு புரிஞ்சிது எனக்கு.  மனைவி சண்டை போடுறாங்கனா அந்த நேரம் அமைதியா இருந்துட்டு அதுக்கு பிறகு போய் சண்டைக்கான காரணத்தை தெரிஞ்சி, இனி அந்த சண்டை வராம இருக்கிறதுக்கான தீர்வையும் அப்பவே கண்டுபிடிச்சிடனும்”

“இப்ப காரணம் புரியுதா தம்பி என் மனைவியோட முக பொலிவுக்கும் உடல் மெலிவுக்கும்” என தர்மன் சிரித்துக் கொண்டே கேட்க,

மதுரன் மென்மையாய் சிரித்து தலை அசைத்திருந்தான்.

சத்யா தர்மன் கூறுவதை அமைதியாய் சிரித்துக் கொண்டே கேட்டிருந்தார்.

மதுரனுக்கு ஆதினி தான் இதை செய்தாளா என பெரும் ஆச்சரியம்.

“எப்படி உனக்குள்ள இப்படி ஒரு மெச்சூரிட்டி பாப்பா” என ஆச்சரியமாய் கேட்டு அவள் தலையை அவன் கோத, மென்னகை புரிந்தாள் அவள்.

இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால் அனைவரும் தத்தமது அறைக்கு உறங்க சென்றனர்.

மறுநாள் விடியற்காலை பொழுதில் அம்மனின் அருளாசியுடன் கெட்டி மேளம் முழங்க அனைவரின் மனம் நிறைந்த வாழ்த்துதலுடன் மங்கல நாணை நிலாவின் மணிக்கழுத்தில் கட்டியிருந்தான் மதுரன்.

பச்சை வண்ண பட்டுடுத்தி மணப்பெண்ணுக்குரிய நாணமும் பூரிப்பும் கன்னகதுப்புகளில் போட்டியிட அழகாய் வீற்றிருந்தாள் பொன்னிலா.

பட்டு வேஷ்டி சட்டையில் முகத்தில் கல்யாண களை மின்ன அமர்ந்திருந்தான் மதுரன்.

அவள் கழுத்தில் தாலியை கட்டி முடித்தவன், அவளின் தோள் வழி கைகளை சுற்றி சென்று நெற்றியில் குங்குமமிட்டவன், அவளருகில் கிடைத்த ஸ்பரிசத்தில் அவளின் காதினோரம், “லவ் யூ டி பொண்டாட்டி! என் வாழ்நாள் முழுமைக்கும் உன்னை என் உயிரா வச்சி பாதுக்காப்பேன்” என அவள் மட்டுமே கேட்கும் வண்ணம் மொழிந்திருந்தான்.

எத்தனை நாள் தனக்கு இப்படியொரு வாழ்வு கிட்டுமா என எண்ணி கலங்கியிருக்கிறாள் அவள். அத்தகைய வாழ்வு இன்று தனக்கு கிட்டியதை எண்ணி அவனின் அந்த காதல் மொழிதனில் கண்ணில் நீர் மின்ன நெகிழ்ந்திருந்தாள் நிலா.

திருமண சடங்குகள் நிறைவு பெற, மதுரன் நிலாவை மலரின் அன்னை தந்தையின் இல்லத்திற்கு அழைத்து சென்றனர்.

அன்று மாலை நிலாவின் வீட்டினர் சொந்த பந்தங்கள் புடைசூழ மலரின் இல்லத்தை வந்தடைய தடபுடலாய் விருந்து நடைபெற்றது.

அன்றைய அவர்களுக்கான இரவில் அவள் உள் நுழைந்த நொடி தாவி அணைத்திருந்தான் மதுரன்.

“ஊர்ல இருந்து வந்ததுலருந்து இந்த நொடிக்காக காத்திட்டு இருக்கேன் பொன்னும்மா” எனக் கூறி இறுக அணைத்திருந்தான் அவளை.

அவளும் ஆதுரமாய் தழுவி கொண்டாள் அவனை.

மெத்தையில் தன்னருகே அவளை அமர வைத்தவன், “வேற எந்த பொண்ணாவது எங்க குடும்பத்தோட இந்த அளவுக்கு ஒட்டுதலா நடந்திருப்பாங்களானு தெரியலைடா! ஆனா நீ நம்ம குடும்பமா யோசிச்சு எவ்ளோ செஞ்சிருக்க” கண்கள் பணிக்க உரைத்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

அவள் மென்னகை புரிய, “யாரோ ஒன் டே டூ கோனு இந்த நேரத்துக்காக ரொம்ப காத்துட்டு இருந்தாங்களே” என மதுரன் குறும்பாய் வினவ,

“ஹான் ஹலோ ஓவர் கற்பனை தான்! நான் காத்திட்டு இருந்தது இந்த தாலியை நீங்க என் கழுத்துல கட்டுறதுக்காக தான்” துடுக்காய் நிலா கூற,

அவன் போலி அதிர்ச்சியுடன், “அடிப்பாவி நானும் என்னமோ நினைச்சு என்னென்னமோ ப்ளான் செஞ்சேனே” வருத்தமாய் உரைக்க,

“அதென்ன என்னமோ நினைச்சு என்னென்னமோ ப்ளான்” சிரிப்பாய் அவள் கேட்க,

“என் பொண்டாட்டி கேட்டு சொல்லாம இருப்பேனா?” என குறும்பாய் கண் சிமிட்டி உரைத்தவன் காதலின் அடுத்த நிலையை அவளுக்கு எடுத்துரைக்க, இல்லறம் நல்லறமாய் இனிதாய் துவங்கியது அங்கே.

ஒரு மாதம் கழித்து பொன்னிலா மதுரனுடன் வெளிநாட்டிற்கு பயணிக்க வேண்டியிருந்ததால், அடுத்து அவர்கள் வெளிநாட்டு பயணம் முடித்து திரும்பி வரும் வரை நிலாவின் அலுவல் பணியை மலரும் மாணிக்கமும் மேற்பார்வை பார்ப்பதாய் முடிவு செய்யப்பட்டது.  நிலா அங்கிருந்து கணிணி மூலமாய் அலுவல் பணியை கவனித்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.

ஒரு வருடத்தில் அகிலனுக்கு அவன் எதிர்பார்த்த பதிவு உயர்வும் சம்பள உயர்வும் வழங்கபட,  ஆதினியும் அச்சமயம் கருவுற்றிருக்க,  மீதமுள்ள அவர்களின் வீட்டு கடனை அவன் அடைத்து கொள்வதாய் கூறி அவளை பணியிலிருந்து ஓய்வு எடுக்க உரைத்து விட்டான்.

மதுரனும் நிலாவும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தனர். அனைவரும் ஒன்றாய் மாணிக்க மலர் பவன இல்லத்தில் தங்கியிருந்து அவரவர் பணியை செய்து ஒன்றாய் வாழ்ந்து வந்தனர்.

ஐந்து வருடங்கள் கழித்து…

ஆளுயர கண்ணாடியின் முன்னின்று மலர் தானுடுத்தியிருந்த பட்டு புடவையை சரி செய்து கொண்டிருக்க,  அவரின் கீழுமர்ந்து காலிலுள்ள மடிப்பை சரி செய்து கொண்டிருந்தார் மாணிக்கம்.

“போதும்பா சரியா தான் இருக்கு.  எழுந்திருங்க. நானே சரி பண்ணிக்கிறேனா கேட்காம…. உங்க வெள்ளை வேஷ்டி அழுக்காகிட போகுது! எழுந்திருங்க முதல்ல” மாணிக்கத்தின் கை பிடித்து எழுப்பி விட்டார் மலர்.

எழுந்து நின்ற மாணிக்கத்தின் பட்டு வேஷ்டி சட்டை நலுங்கியிருந்த பகுதியினை தனது கைகளால் தேய்த்து விட்டு சரி செய்தார் மலர்.

மலரை கண்ணாடி முன் நிற்க வைத்து, அவரின் பின்னின்று இடையை வளைத்த மாணிக்கம், தனது முகத்தினை அவரது முகத்தினருகே வைத்து கண்ணாடியில் பார்த்தார்.

அவர்களது திருமண நாளில் உடுத்தியிருந்த பட்டு அது. அன்று பருவ வயதிற்குரிய தேக தேஜஸ்சுடன் அழகிய ஜோடி பொருத்ததுடன் பலர் கண்பட நிகழ்ந்த அத்திருமணம் அவரின் நினைவிலாடியது.

இன்று வயது மூப்பின் காரணமாய் தோள் சுருங்கி நரை திரை எய்தி இந்த முகம் மாறியிருந்தாலும் இவர்களுக்குள்ளான காதலும் ஆத்மார்த்த அன்பும் அன்றை விட இன்று பன்மடங்காய் பல்கி பெருகியிருப்பதாய் உணர்ந்த அவரின் இதயம் நெகிழ்ந்துருக மலரின் கன்னத்தில் ஆத்மார்த்தமாய் ஓர் முத்தமிட்டார்.

“ரொம்ப அழகா இருக்க பேபிமா” ரசித்து அவர் கூற,

“சும்மா எனக்காக சொல்லாதீங்க! அதான் வயசாகி ஆளே வேற போல மாறிட்டேனே, இன்னுமா உங்க கண்ணுக்கு அழகா தெரியுறேன்” ஆச்சரியமாய் தான் கேட்டார் மலர்.

அவரின் கேள்விக்கு பதிலிறுக்கும் பொருட்டு, “நான் பார்க்க எப்படி இருக்கேன் பேபிமா?” மாணிக்கம் கேட்க,

“உங்களுக்கென்ன ராஜா மாதிரி கம்பீரமா இருக்கீங்க”  அவரின் பட்டு சட்டையை மார்பு பகுதியில் நீவிவிட்டவாரே முகத்தை நிமிர்த்தி மலர் கூற,

“எனக்கு மட்டும் வயசாகலையா என்ன?  நான் மட்டும் எப்படி உன் கண்ணுக்கு அழகா தெரியுறேனாம்” நிமிர்ந்து நோக்கியிருந்த மலரின் நெற்றியில் முட்டி அவர் கேட்க,

மென்மையாய் சிரித்த மலர், “எத்தனை வயசானாலும் மனசு முழுக்க நிறைஞ்சிருக்க நம்மளோட காதலுடன் கூடிய அந்த பார்வைக்கு எப்பவும் நாம அழகா தான் தெரிவோம்” மலர் கூற அவரும் சிரிப்பாய் ஆமோதித்தார்.

“அப்பா! நாங்க ரெடியாகிட்டோம். நீங்க எவ்ளோ நேரமா கிளம்புறீங்க?” 

முகப்பறையிலிருந்து மதுரன் அழைக்க, மலர் மாணிக்கம் வெளிவந்தனர்.

அவர்கள் வந்ததும் மதுரன் நிலாவின் இரட்டையர்களான மூன்று வயது நிரம்பிய இராஜமாணிக்கம் மற்றும் பொன்னரசி அவர்களிடம் தாவ,

“டேய் தாத்தா பாட்டி டிரெஸ் கசங்கிடும் எங்ககிட்ட வாங்க!  நாங்க தூக்கிக்கிறோம்” எனக் கூறி பட்டு வேஷ்டி சட்டை அணிந்த மதுரனும் பட்டு புடவை உடுத்தியிருந்த நிலாவும் தங்களது பிள்ளைகளை தூக்கி கொண்டனர்.

மகிழுந்தில் இவர்கள் பயணித்திருக்க,  “கண்ணம்மாவும் அகியும் அங்க வந்துடுவாங்களா?” எனக் கேட்டார் மாணிக்கம்.

ஆமென கூறிய மதுரன் அகிலனுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் கிளம்பியதை உறுதிபடுத்தி கொண்டவன் காரை இயக்கினான்.

அவர்களின் மகிழுந்து மாணிக்க மலர் முதியோர் இல்லம் என்ற பெயர் பலகையை தாங்கிய அந்த வளாகத்தினை வந்தடைந்தது.

அவர்கள் இறங்கி உள்ளே செல்ல முற்பட்ட சமயம் அகிலன் ஆதினி தங்களது குடும்பத்தாருடன் வந்தடைந்தனர்.

மாணிக்க மலர் டிரஸ்ட் மதுரனின் கனவு ப்ராஜக்ட்.  அகிலனும் இதற்கு உதவி புரிய இருவருமாய் இணைந்து இந்த டிரஸ்ட்டின் மூலம் பல ஏழை எளியவருக்கு உதவி புரிந்து வந்த நிலையில், அன்று ரவியை பார்த்ததை அகிலன் கூறிய பிறகு மாணிக்கத்தின் மனதில் உதித்தது தான் இந்த முதியோர் இல்லம் வைக்கும் எண்ணம்.

அவரின் எண்ணத்தை நடத்தி காட்டியிருந்தனர் இளையவர்கள்.
ஆதினி தன் பணியை ரத்து செய்த பிறகு, தனது மகனான ரகுராமனின் வளர்ப்பினுடன் இந்த முதியோர் இல்லத்தினை கவனித்து கொள்ளும் பொறுப்பினையும் ஏற்றாள்.

அனைவரும் உள் நுழைந்த நொடி அங்கிருந்த முப்பது முதியவர்கள் வெகுவாய் நட்புடன் வந்து தங்களின் வாழ்த்துதலை மாணிக்கம் மலரிடம் பகிர்ந்து கொண்டனர்.

அதன்பின்பு அங்கு கேக் வர வைக்கப்பட, இருபத்தந்தைவாவது திருமண நாள் வாழ்த்துகள் என பொறிக்கபட்டிருந்த அந்த கேக்கினை மாணிக்க மலர் வெட்டவென கொடுக்க, இருவரும் ஒன்றாய் இணைந்து வெட்ட அனைவரும் குதூகலமாய் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

அதன்பின் மாணிக்கம் மலர் நடுநாயகமாய் நிற்க, மாணிக்கத்தின் புறம் அகிலன் ஆதினி அவர்களது மகனை கையிலேந்தி நிற்க, மலரினருகில் மதுரன் நிலா அவர்களது பிள்ளைகளை கையிலேந்தி நிற்க அழகாய் ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்புகைப்படம் மாணிக்கத்திற்கு அவர்களது திருமண நாளன்று மாணிக்கம் மலர் இருவரும் ஆதினி மதுரனை கையிலேந்தி எடுத்த புகைப்படத்தை நினைவுறுத்தியது.

அதன்பின் அங்கிருந்த அனைத்து முதியவர்களுக்கும் இளையவர்கள் இணைந்து உணவு பரிமாற அனைவரும் மகிழ்வாய் உண்டனர்.

அன்றைய நாளின் மாலை வேளையில் இவர்கள் எப்பொழுதும் செல்லும் அந்த சிவன் கோவிலில் இவர்களுக்கான சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருக்க,  மாணிக்கம் மலர் குடும்ப சகிதமாய் கலந்து கொண்டனர்.

சிவன் பார்வதியின் முன்னே இவர்களை அமர வைத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து மாலையை மாணிக்கம் மலரிடம் கொடுக்க, இருவரும் மற்றவருக்கு அந்த மாலையை அணிவிக்க, சிவாச்சாரியார்கள் அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்.  இளையவர்கள் அனைவரும் மாணிக்கம் மலர் பாதத்தினை தொட்டு வணங்கினர்.

வெகு மனநிறைவாய் கழிந்தது அன்றைய நாள்.

இரவு அனைவருமாய் உணவகத்தில் உண்ணவென ஏற்பாடு செய்திருக்க,  அனைவருமாய் ஒரு மேஜையில் அமர்ந்து உணவு உண்டனர்.

அன்றைய இரவு மாணிக்க மலர் பவனத்திலேயே அகிலன் ஆதினி தங்கி கொள்ள,  பேரன் பேத்திகள் அனைவரும் மலர் மாணிக்கத்தின் அறையில் உறங்கியிருந்தனர்.

மாணிக்கம் மலரின் இடையில் பொன்னரசி படுத்திருக்க,  இவர்களின் இரு பக்கமும் ராஜமாணிக்கமும் ரகுராமனும் படுத்திருந்தனர்.

மாணிக்கம் நீட்டிய கையில் படுத்திருந்தார் மலர்.  அவர்களின் முதலிரவில் மதுரன் ஆதினியுடன் படுத்திருந்த நினைவுகள் ஊர்வலம் போக, அதன் பின்பான நிகழ்வுகள் அனைத்தும் படமாய் மனதிற்குள் விரிய,

“பேபிமா, முப்பது வயசுல இதுக்கு மேல எனக்கு வாழ்க்கையே இல்லைனு ஓய்ந்து போய் இருந்தவனுக்கு எப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்திருக்க நீ! பேர பிள்ளைங்களோட நிம்மதியான கௌரவமான ஒரு வாழ்க்கை, இதை நான் கனவுல கூட நினைச்சது இல்லடா பேபிமா! இப்ப எனக்கு ஊருக்குள்ள இருக்கும் கௌரவம் அந்தஸ்து எல்லாம் உன்னால வந்ததுதானே” மனம் நெகிழ மாணிக்கம் உரைக்க,

“உங்களோட தூய்மையான அன்புக்கும் காதலுக்கும் இறைவன் கொடுத்த வரம்பா இந்த வாழ்வு!” அவரின் மீது கையை அணைவாய் போட்டு கூறினார் மலர்.

மலரின் முகத்தினிருகே சென்று உச்சியில் மென்மையாய் முத்தமிட்டார் மாணிக்கம். கண்களில் காதல் பொங்க மாணிக்கத்தை பார்த்திருந்தவாறே படுத்திருந்தார் மலர்.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே..

காலம் கடந்த போதும் இளமையான காதலுடன் இனிமையான இல்வாழ்வில் இன்பமாய் திளைந்திருந்தனர் இத்தம்பதியினர்.

இவர்கள் போல் நாமும் அழியா காதலுடன் நல்லொழுக்கம் புகட்டி நற்சந்ததிகளை வளர்த்து நிறைவாய் வாழ்வோம்.

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்